மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மே 2020

மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை

மலேசிய இந்தியர்களைப் பற்றி மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆய்வுகள் செய்து உள்ளனர். வரலாற்று ஆய்வு நூல்களை எழுதி உள்ளனர். அந்த ஆய்வுகளுக்கு எல்லாம் மகுடம் வகிக்கும் நூலாக இந்த நூல் மதிப்பு பெறுகிறது. 


இந்த நூல் மலேசியர்களுக்குக் கிடைத்த மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமாகக் கருதலாம். அத்துடன் மலேசிய இந்தியர்களுக்குக் கிடைத்த அரிய ஆய்வு நூலாகவும் கருதலாம்.

மலேசிய இந்தியச் சமூகத்தினரின் துயரங்களையும்; துன்பங்களையும்; சோதனைகளையும்; சாதனைகளையும்; வேதனைகளையும்; வறுமைப் போராட்டங்களையும் இந்த நூல் உச்சி முதல் உள்ளங்கால் வரை அலசி ஆராய்ந்து பார்க்கின்றது.

1800-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மலாயாவுக்குக் குடிபெயர்ந்த இந்தியர்களின் சமூகம்; பொருளாதாரம்; கல்வி; அரசியல் துறைகளின் பிரச்சினைகளை அடுக்கடுக்காய் இந்த நூல் முன் நிறுத்துகின்றது. ஆண்டுகளின் கால வரிசையில் அட்டவணைகள் போட்டுக் காட்டுகின்றது. ஏறக்குறைய 200 ஆண்டு கால ஆவணங்களைச் சான்றுகளாகப் பகிர்கின்றது. 


இந்த நூல் 10 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

1. மலேசியாவில் இந்தியர்கள்: பொதுவான தகவல்கள்

2. மலாய்த் தீவுகளுக்கு இந்தியர்கள் வருகை

3. தொடக்கக் காலத்தில் இடம் பெயர்ந்த இந்தியர்களும் அவர்களின் போராட்டங்களும் (1786 - 1940)

4. மலாயா இந்தியர்களின் எழுச்சி (1947 - 1957)

5. மலாயா சுதந்திரத்திற்குப் பின்னர் மலாயாவில் இந்தியர்களின் நிலை (1957 - 1970)

6. புதிய பொருளாதாக் கொள்கையும் மலேசிய இந்தியர்களும் (1970 - 1990)

7. புதிய வளர்ச்சிக் கொள்கையும் மலேசிய இந்தியர்களும் (1990 - 2000)

8. நகர்ப்புற இந்தியர்களின் புதைகுழி

9. தேசியத் தொலை நோக்குத் திட்டமும் மலேசிய இந்தியர்களும் (2000 - 2010)

10. இங்கிருந்து எங்கே? 2010 - 2020


மலேசியாவில் தலைசிறந்த இந்திய ஆய்வாளர்களில் ஒருவரான ஜானகிராமன் மாணிக்கம் இந்த நூலை எழுதி உள்ளார். 17 ஆண்டு கால ஆய்வுகள். அதன் பின்னணியில் இந்த நூல் உருவானது.

இதன் முதற் பதிப்பு 2006-ஆம் ஆண்டு; இரண்டாம் பதிப்பு 2007-ஆம் ஆண்டில் தமிழில் வெளியானது. பின்னர் கூடுதலான தகவல்கள் சேர்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு (The Malaysian Indian Dilemma: The Struggles and Agony of the Malaysian Community in Malaysia) வெளியானது.

2011 ஆம் ஆண்டில் இந்த ஆங்கிலப் பதிப்பு மொழி பெயர்க்கப்பட்டு மூன்றாவது தமிழ்ப் பதிப்பு வெளியானது. இந்தப் பதிப்பு மலேசிய மனித வளர்ச்சி ஆய்வு மையத்தின் சார்பில் வெளியானது.

இரு முக்கிய நோக்கங்களை முன்வைத்து நூலாசிரியர் ஜானகிராமன் மாணிக்கம் இந்த நூலை எழுதி இருக்கிறார். 


முதலாவது: மலேசியாவின் அரசியல்; சமூகப் பொருளாதாரம்; உளவியல் போன்ற அமைப்புகளில் தேக்க நிலையில் இருக்கும் மலேசிய இந்தியச் சமூகத்தின் உணர்வுகளைத் தட்டி எழுப்புவது.

இரண்டாவது: மலேசிய இந்தியர் சமூகத்தின் இன்றைய நிலையைச் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் எடுத்துச் சொல்வது.

அந்த வகையில் மேல் இருந்து கீழும்; கீழ் இருந்து மேலுமாக வரலாற்று நிகழ்ச்சிகளும் சான்றுகளும் அழகழகாய்த் தொகுக்கப் படுகின்றன. வரலாற்றுச் சான்றுகள் ஒவ்வொன்றாக முன்வைக்கப்பட்டு இறுதியில் உறுதியாக அறுதியிடப் படுகின்றன. இவரின் அணுகு முறையை மனமுவந்து பாராட்டாமல் இருக்க முடியாது. சபாஷ்!


மலேசிய இந்தியர்களின் வரலாறு தொடர்புடைய 250 அரிய படங்கள்; 11 வரைபடங்கள்; புள்ளிவிவரங்கள் அடங்கிய 100 அட்டவணைகள் இந்த நூலில் அடங்கி உள்ளன. அத்துடன் பல்வேறு மூலங்களில் இருந்து எடுக்கப்பட்ட 44 பெட்டிச் செய்திகளும் நூலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இந்த நூலுக்கு இணையான ஒரு நூல் மலேசியாவிலும் சரி; அனைத்துலக அளவிலும் சரி; இதுவரையிலும் வெளியிடப்படவில்லை என்பதே பொதுவான கருத்து. வேறு எங்கும் காணக் கிடைக்காத கலங்கரை விளக்கமாக அந்த நூலுக்குத் தகுதி வார்க்கின்றேன். அதுவே நிதர்சனமான உண்மையாகவும் உச்சம் பார்க்கின்றேன்.

ஜானகிராமன் மாணிக்கம் அவர்களின் ஆய்வு முறை ஓர் அறிவியல் அடிப்படையில் பயணிக்கின்றது. இவர் கூறும் வாதங்கள் அளவை நூல் முறையிலும் பயணிக்கின்றது. இவரின் இந்த நூல் மலேசிய இந்தியர்களைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று நம்பலாம்.


ஜானகிராமன் மாணிக்கம் என்னுடைய நண்பர். 1970-ஆண்டுகளில் இருந்து தோழமை. இவர் ஒரு சமூகச் செயல்பாட்டாளர்; சிந்தனைச் சுதந்திரம் கொண்ட சார்பற்ற எழுத்தாளர்.

சிலாங்கூர், பத்தாங் பெர்ஜூந்தைப் பகுதியில் உள்ள ஜாவா சிலாங்கூர் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தாய் தந்தையர் தோட்டத் தொழிலாளர்கள்.

மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்தவர். அத்துடன் அந்தப் பிரச்சினைகளை அவரே அனுபவித்து உணர்ந்தவர். அதன் பின்னணியில் அவரே ஒரு சமூகச் சிந்தனை கொண்ட எழுத்தாளராக உருவாக்கம் பெற்றார்.


இந்த ஆய்வு நூலுக்காக இவருக்குச் சின்னப்பபாரதி அறக்கட்டளையின் சிறப்பு விருது 2013-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.




1970களில், சிலங்கூர் பத்தாங் பெர்ஜூந்தை பாத்திமா சமூக மேம்பாட்டு மையத்தில், ஆய்வுத் துறையில் தேர்ச்சி பெற்றார். மலேசியாவில் தோட்டப்புறங்கள், குடிசைப் பகுதிகள், மற்றும் சமூகப்பணிகள் தேவைப்படும் இடங்களில் 35 ஆண்டுகள் சேவை செய்து உள்ளார்.

1984-ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற ஊரக மேம்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கு பெற்று தம் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து உள்ளார்.

மலேசிய இந்தியர்களின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தவர். ஓர் ஆய்வாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறவர். அடக்கம் அமைதி; ஆர்ப்பாட்டம் இல்லாத சாமானியத் தோற்றம். மலேசியா கண்டெடுத்த ஓர் அரிய ஆய்வியல் அறிஞர். மலேசிய இந்தியர்கள் பெற்ற ஓர் அரிய பொக்கிஷம்.




ஜானகிராமன் மாணிக்கம் ஒரு சிறந்த ஆய்வுத் தூரிகை. மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆய்வுத் துறையில் ஒரு கொடுமுடி. அந்தப் பயணப் பாவனையில் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் தடம் பதிக்கின்றார்.

பின் குறிப்பு: இந்த நூல் 2009-ஆம் ஆண்டு மாணிக்கவாசக விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும் 17 ஆண்டுகால உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சஙகத் தலைவர் ராஜேந்திரனின் மனைவி எழுதிய ‘மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலுக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ’மாணிக்கவாசக புத்தகப் பரிசளிப்பில் ஊழல்’ என்று ஊடகங்களில் பலவகையான விமர்சனங்கள் எழுந்தன.