பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7

மகா அலெக்ஸாந்தர் தெரியும் தானே. ஜுலியஸ் சீசர் காலத்திற்கு முன்னதாகவே ரோமாபுரியை ஆட்சி செய்த மாபெரும் மன்னர். அவரின் மற்றொரு அழைப்புப் பெயர் தான் சுல்கார்னாயின். இவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்.

உலக வரலாற்றில் நான்கே நான்கு பேருக்குத் தான் ’தி கிரேட்’ எனும் மகா விருதை வழங்கி இருக்கிறார்கள். அந்த நால்வரின் பெயரையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. மகா அலெக்ஸாந்தர் (Alexander the Great)

2. மகா அசோகர் (Ashoka the Great)

3. மகா சார்ல்ஸ் (Charlemagne the Great)

4. மகா ஜெங்கிஸ் கான் (Genghis the Great)

சரி. என்னுடைய கேள்வி இதுதான். மகா அலெக்ஸாந்தர் என்பவர் எப்போது எப்படி லங்காவி தீவிற்கு வந்தார். அங்குள்ள ஒரு சுதேசிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

பரமேஸ்வராவைப் பற்றிய சரியான சான்றுகள் நம்மிடம் உள்ளன. முறையான ஆவணங்களும் உள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தின் ஆவணங்களும் உதவிக்கு உள்ளன. அப்புறம் என்னங்க பயம். (Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: Asia Research Institute, National University of Singapore)

பரமேஸ்வரா சமய மாற்றம் செய்து கொண்டாரா இல்லையா என்பது இப்போதைக்கு நம்முடைய வாதம் அல்ல. ஆனாலும் அவர் மதம் மாற்றம் செய்யவில்லை என்பதற்கும் நம்மிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அடுத்து பரமேஸ்வரா இறக்கும் போது அவருடைய பெயர் என்ன என்பதே இப்போதைக்கு நம்முடைய வாதம்.

அதைப் பற்றித்தான் சில உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். மல்லுக்கு நின்றாலும் பரவாயில்லீங்க. மீசையில் மண் ஒட்டிக் கொண்டதா இல்லையா என்று தடவியும் பார்த்துக் கொள்கின்றார்களே. அதைப் பார்க்கும் போது தான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. விடுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். பரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்தப் பெயரிலும் அவர் அழைக்கப் படவில்லை. அதைச் சீன வரலாற்றுக் குறிப்புகள் உறுதி படுத்துகின்றன. அதற்கு வலுவான சான்றுகளும் உள்ளன. அப்படி சான்றுகள் இருப்பதை நீங்களும் இப்போது தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.
http://www.epress.nus.edu.sg/msl/

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் (Tanjung Tuan) எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் (Bukit Larangan, Fort Canning, Singapore) அடிவாரத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இதுவும் இன்னும் உறுதி படுத்தப்பட முடியவில்லை. அதைப் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகிறார்கள்.
15ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே சீனாவின் மிங் பேரரசு – பரமேஸ்வரா உறவுகள் ஆரம்பித்து விட்டன. பரமேஸ்வரா இரு முறைகள் சீனாவிற்குச் சென்று இருக்கிறார். யோங்லே எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார்.

பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கப்பல் படைத் தலைவர்களும் கூடவே வந்து இருக்கின்றனர். ஒருவர் செங் ஹோ (Admiral Cheng Ho). இன்னொருவர் இங் சிங் (Admiral Ying Ching). இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்காவிற்கு வந்து போய் இருக்கிறார்கள்.

ஆக, சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்காப் பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே இருந்து இருக்கிறது.
அதனால் தான் சயாம் நாடும், சுமத்திராவின் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை.

இந்தக் காரணங்களினால் தான் மலாக்காவின் கடல் வழி வாணிகமும் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கி இருக்கிறது.

1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்று இருக்கிறார். யோங் லே மன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார். (தொடரும்)