மஸ்லீ மாலிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஸ்லீ மாலிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜனவரி 2020

மஸ்லீ மாலிக் வந்தார் வென்றார் சென்றார்

தமிழ் மலர் - 07.01.2020

பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான். வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான். இந்தத் தத்துவ வரிகளுக்கு இப்போதைக்கு மிகப் பொருத்தமான மனிதர் மஸ்லீ மாலிக். முன்னாள் மலேசிய கல்வியமைச்சர். மிகச் சின்ன வயதில் மிகப் பெரிய பொறுப்பை வகித்தவர். வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.



சுனாமி பேரலைகள் சொல்லாமல் கொள்ளாமல் வரும். ஆனால் கொல்லாமல் கொள்ளாமல் விட்டுப் போவது இல்லை என்று சொல்வார்கள். பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்டு விட்டு பல்லாயிரம் சுவடுகளை விட்டுச் செல்லும்.

அதே போலத் தான் மஸ்லீ மாலிக் என்பவர் வந்தார். பற்பல தாக்கங்களை விட்டுச் சென்று விட்டார். தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர். அன்பானவர் இனிமையானவர். நகைச்சுவை மிக்கவர். நல்ல சில திட்டங்களைக் கொண்டு வந்தவர்.

ஆசிரியர்களின் எழுத்துப் பணிச் சுமைகளைச் சற்றே குறைத்தவர். ஆசிரியர்கள் வட்டாரத்தில் நல்ல பெயர் எடுத்தவர். இருந்தாலும் கறுப்புக் காலணி அமைச்சர் என்று பட்டப் பெயருடன் விலகிச் செல்வது தான் வருத்தமான செய்தி. அவரைப் பற்றித் தான் இன்றைக்கும் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். அந்த வகையில் மஸ்லீ மாலிக் என்பவரையும் அவருடைய அதிரடித் திட்டங்களையும் மலேசியர்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.

மஸ்லீ மாலிக் சொந்தமாகவே பதவி விலகிச் சென்றாரா? இல்லை பதவி விலகச் சொல்லி வற்புறுத்தப் பட்டாரா? அதைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை ஆராய்கின்றது.

மலேசிய அமைச்சரவையில் நிதியமைச்சு; கல்வியமைச்சு; உள்துறை அமைச்சு; வெளியுறவு அமைச்சு; தற்காப்பு அமைச்சு  போன்றவை மிக மிக முக்கியமான அமைச்சுகள். பொதுவாகவே கல்வியமைச்சராக இருந்தவர்களுக்கு பிரதமராகவும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கும்.

துன் ரசாக், துன் உசேன் ஓன், துன் மகாதீர், துன் அப்துல்லா படாவி, டத்தோ நஜீப் போன்றவர்கள் கல்வியமைச்சராக இருந்தவர்கள். பின்னர் பிரதமர் ஆனவர்கள். அதற்கு முன் மலேசியாவில் யார் யார் கல்வியமைச்சர்களாக இருந்தார்கள். அதையும் பார்ப்போம்.

1. துன் அப்துல் ரசாக் - Abdul Razak Hussein (1952 - 1957)

2. டான் ஸ்ரீ முகமட் கிர் ஜொஹாரி - Mohamed Khir Johari (1957 - 1960)

3. அப்துல் ரஹ்மான் தாலிப் - Abdul Rahman Talib (1960 - 1962)

4. அப்துல் அமீட் கான் - Abdul Hamid Khan (1962 - 1964)

5. அப்துல் ரஹ்மான் தாலிப் - Abdul Rahman Talib (1964 - 1965)

6. டான் ஸ்ரீ முகமட் கிர் ஜொஹாரி - Mohamed Khir Johari (1965 - 1969)

7. டான் ஸ்ரீ ரஹ்மான் யாக்கோப் - Abdul Rahman Ya'kub (1969 - 1970)

8. துன் உசேன் ஓன் - Hussein Onn (1970 - 1973)

9. டான் ஸ்ரீ முகமட் யாகோப் - Mohamed Yaacob (1973 - 1974)

10. துன் மகாதீர் முகமட் - Mahathir Mohamad (1974 - 1978)

11. துன் மூசா ஈத்தாம் - Musa Hitam (1978 - 1981)

12. டான் ஸ்ரீ சுலைமான் டாவூட் - Sulaiman Daud (1981 - 1984)

13. துன் அப்துல்லா படாவி - Abdullah Ahmad Badawi (1984 - 1986)

14. டான் ஸ்ரீ அன்வார் இப்ராகிம் - Anwar Ibrahim (1986 - 1991)

15. டான் ஸ்ரீ சுலைமான் டாவூட் - Sulaiman Daud (1991 - 1995)

16. டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் - Najib Razak (1995 - 1999)

17. டான் ஸ்ரீ மூசா முகமட் - Musa Mohamad (1999 - 2004)

18. டத்தோ ஸ்ரீ ஹிசாமுடின் உசேன் - Hishammuddin Hussein (2004 - 2009)

19. டான் ஸ்ரீ சாபி சாலே (உயர்க்கல்வி அமைச்சர்) - Shafie Salleh (2004 - 2005)

20. டத்தோ ஸ்ரீ முஸ்தபா முகமட் (உயர்க்கல்வி அமைச்சர்) - Mustapa Mohamed (2006 - 2008)

21. டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் (உயர்க்கல்வி அமைச்சர்) - Mohamed Khaled Nordin (2008 -2013)

22. டான் ஸ்ரீ முகாயிதீன் யாசின் (கல்வி அமைச்சர்) - Muhyiddin Yassin (2009 - 2015)

23. டத்தோ இட்ரிஸ் ஜுசோ (கல்வி அமைச்சர் 2) - Idris Jusoh (2003 - 2015)

24. டத்தோ ஸ்ரீ மாட்சிர் காலிட் - Mahdzir Khalid (2015 2018)

25. டத்தோ இட்ரிஸ் ஜுசோ (உயர்க்கல்வி அமைச்சர்) - Idris Jusoh (2015 - 2018)

26. மஸ்லீ மாலிக் - Maszlee Malik (2019 - 2020)

மேற்காணும் பட்டியலில் ஒரே ஒருவருக்கு மட்டும் எந்த விருதும் இல்லை. பட்டம் விருது எதுவும் இல்லாமல் வந்தார். அதே போல போகும் போதும் பட்டம் விருதுகள் எதுவும் இல்லாமல் வெளியேறி விட்டார். அவர் தான் மஸ்லீ மாலிக்.

பிரதமர் கேட்டுக் கொண்டதால் தான் கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதாக மஸ்லீ மாலிக் கூறுகிறார். அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் தான் அவரைப் பதவி விலகும்படி பிரதமர் உத்தரவு இட்டார் என மலேசியன் இன்சைட் எனும் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

2019 டிசம்பர் 27-ஆம் தேதி பிரதமர் இலாகாவில் இருந்து ஒரு கடிதம் மஸ்லீ மாலிக்கிற்கு அனுப்பப் பட்டது. அப்போது அவர் அமெரிக்காவில் தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டு இருந்து இருக்கிறார்.

பள்ளிகளுக்கான இலவச இணையச் சேவை; தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி மொழியைக் கற்பித்தல்; பள்ளி மாணவர்களுக்கான இலவசக் காலை உணவு போன்ற விசயங்களில் அமைச்சரவையின் முடிவுகளை மஸ்லீ முறையாகச் செயல்படுத்தத் தவறி விட்டார் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதியில் “அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்வதற்குப் பொருத்தமான நேரம்” என மகாதீர் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 02.01.2020 மஸ்லீ மாலிக் தன் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார். அவர் 20 மாத காலம் அமைச்சுப் பொறுப்பில் இருந்தார். சில பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து இருந்தார். இருந்தாலும் எதிர்மறையான ஊடக விமர்சனங்களால் பலிகடா ஆக்கப் பட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஜாவி வனப்பெழுத்து பிரச்சினையும் டோங் சோங் பிரச்சினையும் மலேசியாவில் உச்சக் கட்டத்தில் போய்க் கொண்டு இருக்கின்றன. அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டியவர் அவர். ஓர் அமைச்சர்.

ஆனால் அவர் அமெரிக்காவில் விடுமுறையைக் கொண்டாடி இருக்கிறார். இங்கே அந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கண்டுவிட்டுப் போய் இருக்கலாம். சரி.

அவர் சொல்கிறார். பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மீது தமக்கு எந்த வகையிலும் மன வருத்தம் இல்லை. பொறுப்பில் இருந்த காலத்தில் அஞ்சியதும் இல்லை. பதவி துறந்ததால் செத்துப் போகவும் இல்லை.

நான் ஓர் அரசியல்வாதி அல்லன். கல்வியமைச்சர் பதவிக்காக நான் யாரிடமும் பிரச்சாரம் செய்தது கிடையாது. பிரதமர் மகாதீரை ஒரு தகப்பன் நிலையில் வைத்துப் பார்த்தேன் என்று மஸ்லீ மாலிக் கூறி இருப்பதையும் நினைவு படுத்துகிறேன்.

கடந்த 20 மாதங்களில் மஸ்லீ மாலிக் பற்பல இடக்கு முடக்கான பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டார். அனைத்தும் கல்வித்துறை தொடர்பானவை.

2018-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது கல்வியமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு பிரதமர் மகாதீர் முன் வந்தார். அவருடைய பெயர் தான் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொது மக்களிடம் இருந்து அதிருப்திகள்.

பிரதமராக இருப்பவர் வேறு எந்த அமைச்சர் பதவியையும் வகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பக்காத்தான் கட்சியின் தேர்தல் கொள்கை அறிவிப்பில் சொல்லப்பட்டு இருந்தது. அதன் பின்னர் கல்வியமைச்சர் பொறுப்பு மஸ்லீ மாலிக்கிடம் வழங்கப் பட்டது.

மஸ்லீ மாலிக் 1974 டிசம்பர் 19-ஆம் தேதி ஜொகூர் பாருவில் பிறந்தவர். இவருடைய் தாயார் சீனச் சமூகத்தின் ஹக்கா (Hakka Chinese) வம்சாவளியைச் சேர்ந்தவர். மஸ்லீ மாலிக், ஜொகூர் அபு பாக்கார் கல்லூரியில் படித்தார். ஜோர்டான் அல் பாயாட் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டவியல் துறையில் மாஸ்டர் பட்டம் பெற்றார். (Islamic Jurisprudence from University of Al-Bayt, Jordan)

இங்கிலாந்தில் உள்ள டர்காம் பல்கலைக்கழகத்தில் (Durham University) முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (International Islamic University Malaysia) விரிவுரையாளராகப் பணி புரிந்தார்.

இவர் ஒரு பன்மொழிக் கலைஞர். மலாய், அரபு, ஆங்கில மொழிகள் அவரின் பிரதான மொழிகள். தவிர பிரெஞ்சு, ஜெர்மன், மாண்டரின் மொழிகளில் நன்றாகப் பேசக் கூடியவர்.

2018 மார்ச் மாதம் பெர்சத்து (BERSATU) கட்சியில் இணைந்தார். இந்தக் கட்சி பக்காத்தான் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாகும்.

2018 பொதுத் தேர்தலில் சுங்கை ரெங்கம் தொகுதியில் நின்றார். அந்தத் தொகுதி ஏற்கனவே லியாங் தெக் மெங் (Liang Teck Meng) எனும் கெராக்கான் கட்சிக்காரரின் கோட்டையாகும். 2018 தேர்தல் சுனாமியில் பல கோட்டைகள் சரிந்தன. அதில் சுங்கை ரெங்கம் (Simpang Renggam) கெராக்கான் கட்சியின் கோட்டையும் ஒன்றாகும்.

அதன் பின்னர் மஸ்லீ மாலிக் மலேசியாவில் கல்வியமைச்சர் ஆனார். அவர் பதவிக்கு வரும் போது அவருக்கு வயது 42. பெரிய பொறுப்பு சின்ன வயது.

மலேசியப் பள்ளிகளில் கறுப்புக் காலணிகளை அமல்படுத்தும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. அதற்குப் பதிலாக வேறு சில முக்கியமான, அத்தியாவசியமான கல்வித் திட்டங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் “கறுப்புக் காலணி அமைச்சர்” (black shoes minster) எனும் சிலேடை பெயரைப் பெற்றுக் கொண்டது தான் மிச்சம்.

மெட்ரிகுலேசன் விசயத்திலும் அவர் பிடிவாதம் காட்டினார். பூமிபுத்ரா மாணவர்களுக்கு 90% என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

மலேசியா பாரு (புதிய மலேசியா) அமலாக்கத்தில் மெட்ரிகுலேசன் ஒதுக்கீடு முறை தேவை இல்லை. பூமிபுத்ராக்களுக்கு மாண்டரின் தெரியாத காரணத்தினால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.

இனம் சார்ந்த கொள்கைகளில் இருந்து பக்காத்தான் கூட்டணி விலகி இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையில் தான் மக்கள் அந்தக் கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள். ஆனால் மஸ்லீ மாலிக்கின் இனவாதச் செய்திகள் பொதுமக்களின் பார்வையில் சந்தேகத்தை எழுப்பின. அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று இணையம் வழியாக நெருக்குதல்களும் கொடுக்கப் பட்டன.

அடுத்து ஜாவி வனப்பெழுத்து. இது மஸ்லீயின் மற்றும் ஒரு சர்ச்சைக்குரிய முயற்சி. மலாய் மொழி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீன, தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு ஜாவி கையெழுத்தைக் கற்பிக்கலாம் எனும் புதிய திட்டம்.

ஆறிப் போன பழைய திட்டம் தான். சிறுபான்மை இனங்களிடம் வரவேற்பு பெறாதத் திட்டம். மகாதீர் முன்னர் பிரதமராக இருந்த போது இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்த முடியாமல் போனது. பலருக்கும் தெரியும்.

அடுத்து பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் (UniMAP) கேள்வித் தாள் சர்ச்சை. 2019 டிசம்பர் 19-ஆம் தேதி ஸக்கீர் நாயக் ஓர் உலக மேதை என்று கேள்வி தயாரித்து பிரச்சினைக்கு உள்ளானது. அப்புறம் இந்தியர்கள் கறுப்புத் தோல்காரர்கள் எனும் மற்றொரு கேள்வி. இந்த விசயங்களில் இருந்து கல்வியமைச்சு தெரிந்தும் தெரியாதது போல கை கழுவிக் கொண்ட விசயம் பெரும் கொந்தளைப்பை ஏற்படுத்தி விட்டது.

மலேசியப் பள்ளிகளில் இலவச இணையச் சேவை என்று பெஸ்தாரி நெட் நிறுவனத்தில் கைவைத்தது. இப்படியே நிறையவே சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டார். இவர் செய்த நல்ல காரியங்களைவிட சர்ர்ச்சைக்குரிய விசயங்கள் தான் அதிகம்.

அதனால் இந்திய சீன வம்சாவளியினரின் அதிருப்திகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார். அடுத்து யார் கல்வியமைச்சராக வருவார். இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. மன்னிக்கவும். பில்லியன் டாலர் கேள்வி.

இப்போது எல்லாம் மில்லியன் என்பதற்கு மவுசு இல்லாமல் போய் விட்டது. ரோசாப்பூ ரோசம்மாவின் பேச்சு வழக்கில் நாமும் பயணிக்க வேண்டிய பில்லியன் டிரில்லியன் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான். உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான். மஸ்லீக்குப் பின்னர் கல்வியமைச்சராக யார் வந்தாலும் மலேசியக் கல்விக் கொள்கைகளில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. மலேசிய இந்தியர்கள் காலா காலத்திற்கும் போராட வேண்டியது மலேசிய வரலாற்றில் எழுதப் படாத சாசனம். அவர்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டியது அவர்களின் எழுதப்பட்ட தலையெழுத்து.