இந்தோனேசியா உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் நான்காவது இடம். 26 கோடி மக்கள். அந்த
நாட்டைச் சுற்றிலும் 13,466 தீவுகள். அது ஓர் அழகிய அதிசயமான பூமி.
இந்தோனேசியா எனும் சொல்லில் பற்பல பழைமைகள்
பற்பல புதுமைகள். அவற்றில் பற்பல மர்மங்கள். அந்தச் சொல்லுக்குள் நீண்ட நெடிய ஒரு
வரலாறு. அந்த வரலாற்றில் 1000 ஆண்டுகள் இந்தியர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்ததும்
ஒரு வரலாறு. மலைக்கவும் வேண்டாம். திகைக்கவும் வேண்டாம். உருப்படியான ஓர் உண்மையை
மறைக்கவும் வேண்டாம்.
இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும்
சிற்றரசுகளும் ஆட்சி செய்து உள்ளன. முதலில் ஒரு பட்டியல் வருகிறது. பாருங்கள்.
அந்தப் பேரரசுகளைத் தோற்றுவித்தவர்கள்; எந்த ஆண்டில் எங்கே தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்:
2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605
3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669
4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600
5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600
6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377
7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025
8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482
9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579
10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006
11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908
12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045
13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221
14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347
15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–
16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500
இந்தப் பேரரசுகள் எல்லாம் காலத்தால் கதைகள்
சொல்லும் பேரரசுகள். இவற்றுள் மிக வலிமை வாய்ந்ததாக மஜபாகித் பேரரசு கருதப்
படுகிறது. அந்தப் பேரரசின் கீழ், ஒரு கட்டத்தில் அதாவது கி.பி. 1350 லிருந்து 1389
வரையில் 98 சிற்றரசுகள் இயங்கி
இருக்கின்றன.
சுமத்திரா, நியூகினி, சிங்கப்பூர், மலாயா,
புருணை, தென் தாய்லாந்து, சூலு தீவுக் கூட்டங்கள், பிலிப்பைஸ், கிழக்கு தீமோர்
நாடுகள் என ஒட்டு மொத்த தென்கிழக்காசியாவே மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில்
இருந்தன.
(சான்று: http://www.indonesianhistory.info/map/majapahit.html - Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History).
(சான்று: http://www.indonesianhistory.info/map/majapahit.html - Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History).
இந்தியப் பேரரசுகள் இந்தோனேசியாவை ஆயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. இந்தப் பேரரசுகளைத் தவிர மேலும் பற்பல
சிற்றரசுகளும் இந்தோனேசியாவை ஆட்சி செய்து உள்ளன. இன்னும் ஒரு விசயம்.
பாலித் தீவில் முதன்முதலில் ஒரு சிற்றரசை உருவாக்கியது ஓர் இந்திய மன்னர். அவருடைய பெயர்
ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesarivarma). பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல். அந்தச்
சிற்றரசு கி.பி.914ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. அங்கே சைவமும் புத்தமும் ஒரே
சமயத்தில் பின்பற்றப் பட்டன.
சஞ்சாயா பேரரசை ஆட்சி செய்த ஸ்ரீ இசயானா
விக்ரமதாமதுங்கா (Sri Isyana Vikramadhammatunggadeva) எனும் அரசரின் ஆட்சி
காலத்தில் பெராப்பி எரிமலை வெடித்தது. சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இவருக்குப்
பின்னர் அவருடைய மகள் இசானாதுங்க விஜயா (Isanatungavijaya) ஆட்சிக்கு வந்தார்.
பெராப்பி எரிமலை வெடிப்பினால் சஞ்சாயா
பேரரசு தன் நிர்வாகத் தலைநரைக் கிழக்கு
ஜாவாவிற்கு மாற்றியது. அந்த மாற்றத்தில் சஞ்சாயா எனும் மற்றொரு சிற்றரசும்
உருவாக்கப்பட்டது. ஓர் இடைச் செருகல். சஞ்சாயா எனும் பெயரில் இரு அரசுகள் இருந்து
இருக்கின்றன. அவற்றில் ஒன்று சஞ்சாயா சிற்றரசு. மற்றொன்று சஞ்சாயா பேரரசு.
கிழக்கு ஜாவாவிற்கு மாறிய சஞ்சாயா பேரரசு
அப்படியே தன் அதிகார வலிமையை பாலித் தீவிலும் களம் இறக்கியது. அந்த வகையில் தான்
பாலித் தீவில் முதன்முதலாக ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவானது. இந்து சமயம்
நிலைத்துப் போனது. அதனால் இப்போது பாலித் தீவில் வாழ்பவர்களில் 83 புள்ளி 5
விழுக்காட்டினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகும். இதுதாங்க வரலாறு. இதுதாங்க
வரலாற்று உண்மை.
இந்தத் தகவல்கள் எல்லாம் எப்படி கிடைத்தன என்று
கேட்கலாம். நல்ல கேள்வி. இந்தோனேசியாவில் ஜாகர்த்தா, மேடான், சுராபாயா, பாண்டுங்,
செமாராங் எனும் நகரங்களில் பழஞ்சுவடிக் காப்பகங்கள் உள்ளன. அங்கே இந்த வரலாற்று
உண்மைகளை அச்சு அசலாக எழுதி வைத்து இருக்கிறார்கள்.
அகழாய்வு செய்யப்பட்ட கல்வெட்டுகள், பழஞ்சுவடிகள், மண்சுவடுகள் போன்றவற்றைப் பத்திரப்படுத்திக் காட்சிப் படுத்துகிறார்கள். அங்கே வரலாற்றை வரலாற்றுப் பூர்வமாகப் பார்க்கிறார்கள். அதனால் வரலாறு படைக்கிறார்கள்.
அகழாய்வு செய்யப்பட்ட கல்வெட்டுகள், பழஞ்சுவடிகள், மண்சுவடுகள் போன்றவற்றைப் பத்திரப்படுத்திக் காட்சிப் படுத்துகிறார்கள். அங்கே வரலாற்றை வரலாற்றுப் பூர்வமாகப் பார்க்கிறார்கள். அதனால் வரலாறு படைக்கிறார்கள்.
பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னால் எங்கள் பாட்டனும் பாட்டியும் பட்டம் விட்டார்கள் என்று எழுதும் காமா
சோமாக்கள் அங்கே இல்லை. சட்டைகளைக் கழற்றி மட்டைகளைக் கட்டி அழகு பார்க்கும்
வரலாற்று வித்தைகளும் அங்கே இல்லை. அந்த வகையில் வரலாறுகளைச் சிதைத்து வடிவேலு
கணக்கில் யாரையும் சிரிக்க வைப்பதும் இல்லை. சரி. விசயத்திற்கு வருவோம்.
இந்தோனேசியா. இதன் மூலச் சொல் சிந்து நதி
(Indus River). அடுத்து ‘இண்டஸ்’ (Indus)
‘நேசஸ்’ (nèsos). இந்த இரு சொற்களில் இருந்து இந்தோனேசியா (Indonesia)
எனும் சொல் உருவானது. இண்டஸ் - நேசஸ் எனும் இரண்டு சொற்களுமே கிரேக்கச் சொற்களாகும்.
இந்தோ நேசஸ் (Indo nèsos) எனும் கூட்டுச் சொற்கள் மருவி இந்தோனேசியா (Indonesia)
என்று மாற்றம் கண்டன. இண்டஸ் என்றால் சிந்து. நேசஸ் என்றால் தீவு.
இந்த இண்டஸ் எனும் சொல்லில் இருந்து தான்
இந்தியா எனும் சொல்லே உருவானது. அந்த வகையில் இந்தியா எனும் சொல் ஒரு கிரேக்கச்
சொல் ஆகும். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். சரி.
இந்தோனேசியா எனும் சொல்லை 1850இல் ஜேம்ஸ்
ரிச்சர்ட்சன் லோகான் (James Richardson Logan) எனும் பிரித்தானிய கல்வியாளர் தான்
முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னர் டச்சுக்காரர்கள்
பயன்படுத்தினார்கள். இருப்பினும் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.
பொதுவாக இந்தோனேசியா எனும் சொல்
பயன்படுத்தப்படவில்லை. கிழக்கு இந்தியத் தீவுகள் என்றே பயன்படுத்தி
இருக்கிறார்கள். டச்சுக்காரர்களுக்குப் பின்னர் வந்த பிரித்தானியர்களும் கிழக்கு
இந்தியத் தீவுகள் என்றே அழைத்தனர்.
இந்த இந்தோனேசியாவைப் பற்பல அரசுகள் ஆட்சி
செய்துள்ளன. அவற்றுள் வரலாற்றில் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அரசு ஒன்று
இருந்தது என்றால் அதுதான் ஸ்ரீ விஜய அரசு. இந்தோனேசியாவை 500 ஆண்டுகளுக்கும் மேலாக
ஆட்சி செய்த மாபெரும் ஓர் அரசு. இந்த அரசைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்
போகிறோம்.
ஸ்ரீ விஜய என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ஸ்ரீ
என்றால் நற்பேறு, மகிழ்ச்சி. விஜய என்றால் வெற்றி அல்லது மிகச்சிறந்த என்று
பொருள். ஸ்ரீ விஜய பேரரசு இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை மையம் கொண்ட ஒரு பேரரசு.
அந்தப் பேரரசு 8ஆம் - 12ஆம் நூற்றாண்டுகளில்
புத்த மதத்திற்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்கியது. 7ஆம் நூற்றாண்டில்
ஆயிரக்கணக்கான இந்திய வணிகர்கள் சுமத்திராவிற்கு வந்தனர். வணிகம் பெருகியது. இந்து
மதமும் புத்த மதமும் செழித்தோங்கியது.
10ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய பேரரசின்
வழித்தோன்றல்களாகச் சைலேந்திரா, மத்தாராம் அரசுகள் உருவாகின. சைலேந்திரா அரசு
போராபுடோர் (Borobudur) புத்த ஆலயங்களைக் கட்டி அழகு பார்த்தது. மத்தாராம் (Mataram) அரசு பிராம்பனான்
(Prambanan) திருமூர்த்தி கோயிலைக் கட்டி அழகு பார்த்தது.
உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா. உலகத்திலேயே
மிக அழகான இந்துக் கோயில் எது தெரியுமா. அதுதான் பிராம்பனான் திருமூர்த்தி கோயில்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒன்றிணைத்து திருமூர்த்திகள் என்கிறோம்.
இந்தக் கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக
யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்தக் கோயிலின் 30 சதுர கி.மீ.
அளவிற்கு உள்ள நிலப்பகுதியை இந்தோனேசியக் காப்பகமாக இந்தோனேசிய அரசாங்கம்
அறிவித்துள்ளது.
இந்தக் கோயிலை காலின் மெக்கன்சி (Colin
Mackenzie) எனும் ஆங்கிலேயர் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அது தவறு. அதைக்
கண்டுபிடித்தது ஒரு பிரெஞ்சுக்காரர்.
13ஆம் நூற்றாண்டில் மஜாபாகித் அரசு உருவானது.
காஜா மாடா (Gajah Mada) எனும் அரசரின் கீழ் உச்சத்தைத் தொட்டது.
ஸ்ரீ விஜய பேரரசின் வணிகத்துறை சீனா, இந்தியா,
வங்காளம், மத்திய கிழக்கு நாடுகள் வரை பெருகி இருந்தது. சீனாவின் தாங்
வம்சாவளியில் இருந்து சோங் வம்சாவளி வரை நீடித்தது. 13ஆம் நூற்றாண்டில் அந்தப்
பேரரசு உலக வரலாற்றில் இருந்து மறைந்து போனது. சிங்காசாரி, மஜாபாகித் அரசுகளின்
விரிவாக்கத்தினால் அந்த மறைவு ஏற்பட்டு இருக்கலாம்.
அதன் பின்னர் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு ஸ்ரீ
விஜய பேரரசைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. அந்தப் பேரரசைப் பற்றி உலக
வரலாறு சுத்தமாக மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் இந்தோனேசியாவில்
வாழ்ந்த இந்தோனேசியர்களுக்கே தெரியாமல் தான் இருந்தது.
1918ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès)
எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி வெளியுலகத்திற்குச்
சொன்னார். அப்படி ஒரு மாபெரும் அரசு இந்தோனேசியாவில் இருந்ததாகச் சொல்லும் போது
உலகமே வியந்து போனது. முதலில் அதிர்ச்சி அடைந்தது சுமத்திரா மக்கள் தான். ஏன்
என்றால் அவர்கள் அங்கேதானே இருக்கிறார்கள்.
1984ஆம் ஆண்டு விமானங்கள் மூலமாக பலேம்பாங்
பகுதியைப் படம் பிடித்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய கால்வாய்கள், அகழிகள்,
குளங்கள், செயற்கைத் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தவிர கை வேலைப் பாட்டுப்
பொருட்கள், புத்தச் சிலைகள், உருண்மணிக் காப்புகள், மண்பாண்டங்கள், சீனாவின்
பீங்கான் சாமான்களும் கிடைத்தன.
ஸ்ரீ விஜய நகரம் இருந்ததற்கான சான்றுகள்
கிடைத்தன. நிறைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. இப்போது அதே அந்த
இடத்தில் ஸ்ரீ விஜய தொல்லியல் பூங்காவை (Sriwijaya Kingdom Archaeological Park)
உருவாக்கி அழகு பார்க்கிறார்கள்.
தென் சுமாத்திராவின் பலேம்பாங் நகரில் மூசி
எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் ஸ்ரீ விஜய பேரரசு மையம் கொண்டு
இருந்தது எனும் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டது. அந்த முடிச்சை அவிழ்த்தவர் ஒரு
பிரெஞ்சுக்காரர். அவருடைய பெயர் பியரி ஈவஸ் மாங்குயின் (Pierre-Yves Manguin).
2013ஆம் ஆண்டு இந்தோனேசியப் பலகல்கலைக்கழகம்
தீவிர ஆய்வுப் பணியில் இறங்கியது. அதன் பயனாக பாத்தாங் ஹாரி ஆற்றுப் பகுதியில்
ஜாம்பி எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசு இயங்கி வந்ததாக உறுதிபடுத்தப்பட்டது.
மண்ணுக்குள் புதைந்து கிடந்த பல இந்திய
மர்மங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் தான் அதிகமாக வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தி
இருக்கின்றனர்.
அங்கோர் வாட்டில் ஓர் அதிசயம் இருப்பதாகச்
சொன்னவர் ஒரு பிரெஞ்சுக்காரர். இந்தோனேசியா பெரம்பானான் திருமூர்த்தி கோயிலைக்
கண்டுபிடித்து அறிமுகம் செய்ததும் ஒரு பிரெஞ்சுக்காரர். போராபுடோர் புத்த
ஆலயங்களைப் பற்றிச் சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர். ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி
சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர் தான். இன்னும் இருக்கிறது. ஆக ஒரு வகையில்
பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்தியர்கள் உலகம் நன்றி சொல்ல வேண்டும் என்பது என்
கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இன்னும் ஒரு விசயம்.
இந்தோனேசியா முழுமையும் இந்தியர்கள் 1000 ஆண்டுகளுக்கு
ஆட்சி செய்து இருக்கிறார்கள். பெரும்பாலான இந்தோனேசியர்களின் உடலிலும் இந்திய
இரத்தம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதை எந்தக் கொம்பனாலும் மறுக்க முடியாது. ஆக,
அங்கிருந்து பக்கத்து நாட்டிற்கு குடியேறியவர்களுக்கு என்ன இரத்தம் ஓடலாம் என்பதை
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.