மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 ஆகஸ்ட் 2016

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில்

*பசுபதி சிதம்பரம் என்ன சொல்ல வருகிறார்*

ஒரு தகப்பன். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தப் பிள்ளையை ஊட்டி ஊட்டி வளர்க்கிறார். சாப்பிட்ட மிச்சம் மீதைக் கீழே கொட்டுவதற்குத் தங்கத் தட்டுகள். வாரிப் போட வெள்ளிக் கரண்டிகள். இரண்டாவது பிள்ளை தன் சொந்த உழைப்பினால் உழைத்து உழைத்து உயர்ந்து போய்… இப்போது செல்வச் செழிப்பில் சீமானாய் வாழ்கின்றது. 


மூன்றாவது பிள்ளையைத் தகப்பனார் கண்டு கொண்டதே இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்து விட்டார். அந்தப் பிள்ளை தீய வழிகளில் செல்கிறது. தீய நோக்கத்தில் செயல் படுகின்றது. இப்போது துயர வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிப் போய் திரும்பிப் பார்க்கின்றது. சொல்லில் மாளா துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது.

அந்தக் கடைசிப் பிள்ளையை அரவணைத்துச் சென்று இருந்தால்… அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா. தீய வழிகளில் போய் இருக்காது இல்லையா. அந்த வகையில் அந்தக் கடைசிப் பிள்ளை தான் இப்போதைக்கு நான் சொல்ல வரும் மலேசிய தமிழன் எனும் மலேசியத் தமிழர்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

அந்த மலேசியத் தமிழர்களில் சிலர் தான் இப்போதைக்குக் குண்டர் கும்பல் எனும் கலாசாரத்தில் அடிபட்டு மிதிபட்டு அவதிப் பட்டு அல்லல் படுகின்றனர்.

இந்தக் குண்டர் கும்பல்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான்கள் இல்லீங்க. காலம் காலமாக இவர்களை வைத்துத் தான் சில அரசியல் தலைகளும் பல சமூகத் தலைவர்களும் கோலோச்சிக் கோலம் போட்டனர். அந்தக் கோலத்திற்கு உள்ளே ஒரு செடியை நட்டு... அதற்குத் தண்ணீர் ஊற்றி உரம் போட்டுச் செம்மையாகச் செழிக்கவும் வைத்து விட்டனர்.


சட்டத்தைக் கட்டிக் காக்க வேண்டிய சிலரும் இவர்களை வைத்துத் தான் அப்போதைக்கு சொகுசு வாழ்க்கை. இப்போதைக்கு மவுசு வாழ்க்கை. மன்னிக்கவும். ஒரு சிலரைத் தான் சொல்கிறேன். இது மறுக்க முடியாதா உண்மை. எந்தக் கோர்ட்டிற்குப் போனாலும் ஜெயிக்கப் போகும் உண்மை. அது ஒரு சத்தியமான வார்த்தை!

மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம்... இப்போதைக்கு மலேசியத் தமிழ் ஊடகங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு சர்ச்சை. ஒரு சொல்லாடல் கொந்தளிப்பு.

குண்டர் கும்பல் கலாசாரம் தமிழ்ப் பள்ளிகளில் வளர்க்கப் படுவதாக நாடறிந்த தமிழ் ஆர்வலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் கூறியதாக ஊடகச் செய்திகள். அப்படிச் சொல்லவே இல்லை என்பது பசுபதியின் மறுப்புக் கூற்றுகள். அவருக்கு எதிராகத் தமிழ் அமைப்புகள். அரசு சாரா இயக்கங்கள். அவற்றின் கண்டனக் கிண்டல்கள். இதில் கிள்ளான் போலீஸ் நிலையத்தில் புகார் மழைகள். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

இது எந்த அளவிற்கு உண்மை. இதில் தலையிட்டு எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது நம்முடைய நோக்கம் அல்ல. இருந்தாலும் பசுபதி சிதம்பரம் என்னதான் சொல்ல வருகிறார்... என்னதான் சொன்னார் என்பதைப் பற்றித் தான் பார்க்கிறோம். சரிங்களா.

தமிழ்ப் பள்ளிகளைப் பற்றி பசுபதி சிதம்பரம் தவறாகச் சொல்லி விட்டார். பலரும் கொதிக்கின்றார்கள். கொப்பளிக்கின்றார்கள். அங்கே என்னதான் நடந்தது என்பதை அறிந்து தெரிந்து கொள்ளாமலேயே அவரவர் இஷ்டத்திற்கு அஷ்ட கோணத்தில் வசைமாரி பொழிகின்றனர். 


முன்னால் இருப்பவருக்குப் பின்னால் இருப்பவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக முன்னால் இருப்பவர் எதையாவது சொல்லித் தொலைப்பார். மன்னிக்கவும் சொல்லி வைப்பார். அதைக் கேட்டு அதற்கும் முன்னால் இருப்பவர் மேலும் இரண்டு வார்த்தைகளுக்கு ஜிகினா பூசி வைப்பார். அதுவே காலும் கையும் முளைக்காத காளானாகி கதை பேச ஆரம்பிக்கும். அந்தக் காளான் பூஞ்சைக் காளானா இல்லை பூஞ்சிக் காளானா என்பது முன்னால் இருப்பவருக்கே தெரியாது. வருத்தமாக இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் கதாநாயகன் ஹிட்லர். அவரின் பிரசார அமைச்சராக இருந்தவர் கோயபெல்ஸ். இவர் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. ஒரு பொய்யைப் பல முறை சொல்லிப் பாருங்கள். நாளடைவில் அதுவே ஓர் உண்மையாக மாறிப் போகும். கோயாபெல்ஸின் வார்த்தை எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பசுபதி அவர்களின் விவகாரத்திலும் கண்கூடாகக் காண முடிகின்றது.

அண்மையில் கீத்தா (KITA) - யூ.கே.எம். (UKM) மூலமாக டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூரியா ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்து இருந்தார். கபாலி திரைப்படத்தின் தாக்கங்கள் எனும் மையப் பொருளில் கருத்தரங்கு. அந்தக் கருத்தரங்கில் நம் இந்தியர்கள் சார்ந்த குற்றச் செயல்கள் 70 விழுக்காடு உயர்ந்து இருப்பதாகப் புக்கிட் அமான் வெளியிட்ட அறிக்கையை பசுபதி சிதம்பரம் சுட்டிக் காட்டினார். 


இந்தக் குற்றச் செயல்களைக் களைய வேண்டிய கடப்பாடு இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்தது. புதிய தலைமுறையின் வளர்ச்சி ஆணி வேரில் இருந்தே சரி செய்யப்பட வேண்டும். சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் குண்டர் கும்பல் பிரச்சினை ஆரம்பப் பள்ளிகளில் இருந்தே களையப்பட வேண்டும் என்று தான் பசுபதி சிதம்பரம் வலியுறுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரிந்த உண்மை. சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறார்கள். பசுபதியின் பேச்சை ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர் ஒலிப்பதிவு செய்தும் வைத்து இருக்கிறார். அந்த ஒலிப்பதிவைக் கேட்கும் போது... குண்டர்கள் தமிழ்ப் பள்ளிகளில் தான் உருவாக்கப் படுகிறார்கள் என்று பசுபதி சிதம்பரம் சொல்லவில்லை என்பது தெரிய வருகிறது.

பல்லாண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டு வரும் அவர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார் என்பதே பலரின் கருத்து. அதுவே நம்முடைய நம்பிக்கையும் கூட.

குண்டர் கும்பல் பிரச்சினை நாளுக்கு நாள் சமுதாயத்தைச் சீர்குலைத்து வருகிறது. அனைவரும் அறிவோம். அந்தச் சீர்கேடு தமிழ்ப் பள்ளிகளிலும் தலையெடுக்கக் கூடாது. அந்தப் பிரச்சினை பூதாகரமாகப் புனர்ஜென்மம் எடுப்பதற்கு முன்னதாகக் களையப்பட வேண்டும் என்பதே அவருடைய வலியுறுத்தலாக இருந்தது.

தமிழ்ப் பள்ளிகளில் மட்டும் அல்ல. தேசியப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் குடும்பச் சூழலும் வறுமையும் ஒரு வகையான காரணங்கள். குண்டர் கும்பலில் எளிதாகச் சிக்கிக் கொள்வதற்கு அவை வாய்ப்பாக அமையலாம் என்று அந்தக் கலந்துரையாடலில் உறுதிபடுத்தப் பட்டது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருபவர்களை (பி40) கட்டமைப்பில் பார்க்கின்றோம். ஆக குடும்பத்தின் வறுமைச் சூழலினால் அவர்கள் குண்டர் கும்பலில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த நிலை மாற வேண்டாமா?

ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப் பள்ளிகளில் முடித்த மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் சீரமைக்கப்பட வேண்டும். இவை சமுதாயத்தின் பொறுப்புகள் தானே. ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப் பள்ளிகளில் முடித்த இந்திய மாணவர்களில் 20 விழுக்காட்டினர் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பது இல்லையே. இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு. சொல்லுங்கள்.

ஆரம்பப் பள்ளியில் சேரும் ஒரு மாணவனை இறுதி வரை கொண்டு செல்ல வேண்டியது சமுதாயத்தின் தாத்பரியம் தானே. ஆக சமுதாய நோக்கத்துடன் சொல்லப்பட்ட ஒரு கருத்தில் ஒரு சொல்லாடல் எடுத்துக்காட்டை மட்டுமே எடுத்துக் கொண்டு... அதைச் செய்தியாக வெளியிட்டது நடக்கக் கூடாத ஒன்று.