கறுப்பு தாஜ்மகால் - 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்பு தாஜ்மகால் - 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 9

தமிழ் மலர் - 17.06.2019

ஷா ஜகானின் பிள்ளைகளைப் பற்றிய தகவல். இவர்களில் ஆக மூத்தப் பெண் பார்கீஸ். சின்ன வயதிலேயே இறந்து விட்டார்.

1. பார்கீஸ்
2. ஜகனாரா
3. தாரா ஷுகோ
4. ஷா ஷூஜா
5. ரோஷனாரா
6. ஔரங்கசிப்
7. மூராட்
8. கௌகாரா



ஷா ஜகான் தன்னுடைய நான்கு மகன்களுக்கும் மொகலாயப் பேரரசின் நான்கு பகுதிகளில் நான்கு ஆளுநர் பதவிகளைக் கொடுத்து வைத்து இருந்தார். நான்கு பேரும் சிற்றரசர்கள். 



பஞ்சாப் மாநிலத்திற்கு மூத்த மகன் தாரா ஷுகோ; வங்காளம் ஒரிசா மாநிலங்களுக்கு இரண்டாவது மகன் ஷா ஷூஜா; தக்காண பூமிக்கு மூன்றாவது மகன் ஔரங்கசிப்; குஜராத் மாநிலத்திற்கு நான்காவது மகன் மூராட்.

ஒரு கட்டத்தில் ஷா ஜகான் இறந்து விட்டார் எனும் செய்தி நாடு முழுமைக்கும் பரவியது. உண்மையிலேயே அது ஒரு வதந்தி. ஷா ஜகானின் மூத்த மகன் தாரா ஷூகோ தனக்குச் சாதகமாகக் கிளப்பிவிட்ட வதந்தி.

அந்தச் சமயத்தில் ஷா ஜகானின் மூன்றாவது மகன் ஷா ஷூஜா வங்காளத்தில் கவர்னராக இருந்தார். ஷா ஜகான் இறந்து விட்ட செய்தியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வங்காளத்தின் முழு அரசராக அறிவித்துக் கொண்டார்.  



அதோடு வங்காளத்தின் அரசராகவும் முடி சூட்டிக் கொண்டார். அவருடைய பெயரிலேயே புதிய நாணயங்களை வெளியிட்டார். புதிய அரச அறிவிப்புகளையும் செய்தார். ஆக்ராவை விரைவில் கைப்பற்றி மொகலாயத்தின் மாமன்னராகப் போவதாகவும் அறிவிப்புச் செய்தார். 

இருந்தாலும் சில நாட்களில் டில்லியில் இருந்து ஷா ஜகானின் படைகள் வங்காளத்திற்கு இறங்கி வந்தன. ஷா ஜகானின் படைகளுக்குத் தாரா ஷுகோவின் மகன் சுலைமான் ஷுகோவும், ராஜா ஜெய் சிங்கும் தலைமை தாங்கினார்கள்.

1658-ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்த எதிர்த் தாக்குதலில் ஷா ஷூஜாவின் கொட்டம் அடக்கப் பட்டது. ஷா ஷூஜா பீகாருக்குத் தப்பிச் சென்றார். அவரை ஷா ஜகானின் படை விரட்டிச் சென்றது.



ஷா ஜகானின் ஆறாவது மகன் முராட் பட்ச் (வயது 33). இவர் ஒளரங்கசீப்பின் தம்பி. இவரும் சும்மா இல்லை. இவர் பங்கிற்கு இவரும் தன்னைக் குஜராத்தின் அரசராக அறிவித்துக் கொண்டார். யாரையும் கேட்காமல் முடி சூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரில் அவசரம் அவசரமாக நாணயங்களையும் வெளியிட்டார்.

இருந்தாலும் இந்த முராட்டிற்கு எப்போதுமே ஒளரங்கசீப்பின் ஆதரவு இருந்தது. ஒளரங்கசீப்பின் பேச்சை மட்டும் முராட் பட்ச் தட்டுவதே இல்லை. இருந்தாலும் நயவஞ்சகச் சூழ்ச்சியில் சிக்கித் தன் உயிரை அழித்துக் கொண்டார். அது வேறு கதை. சரி.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். குஜராத்தை ஆட்சி செய்த முராட்டும் தக்காணத்தை ஆட்சி செய்த ஔரங்கசிப்பும் இணைந்து தாரா ஷுக்கோவை எதிர்க்க ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஆக இவர்களின் இரு படைகளும் இணைந்துதான் ஷா ஜகானின் படைகளை எதிர்த்தன. வெற்றி பெற்றால் மொகலாய இந்தியாவில் பாதி இந்தியாவை முராட்டிற்குக் கொடுப்பதாக ஔரங்கசிப் வாக்கு கொடுத்து இருந்தார். 




ஒளரங்கசீப் தக்காணத்தில் இருந்து தன் படைகளோடு ஆக்ராவை நோக்கிப் புறப்பட்டார். ஒளரங்கசீப்பின் தம்பி முராட்டும் தன் படைகளை ஒளரங்கசீப்பின் படைகளுடன் இணைத்துக் கொண்டார். வரும் வழியில் மொகலாயர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களின் ஆதரவுகளையும் திரட்டிக் கொண்டார்கள்.

ஷா ஜகானின் படைகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவு ஷா ஷூஜாவை எதிர்த்து வங்காளத்திற்குச் சென்றன. இன்னொரு பிரிவு ஔரங்கசிப்பின் படைகளை எதிர்த்துச் சென்றன. ஆனால் ஔரங்கசிப்பின் படைகள் பலம் வாய்ந்தவை. எதிர்க்க முடியவில்லை.

தர்மாத் எனும் இடத்தில் பயங்கரமான போர். இதற்கு சமுகார் போர் என்று பெயர். ஷா ஜகானின் படை தோற்றுப் போனது. அதற்குக் காரணம் ஷா ஜகானின் பாதி படைகள் வங்காளத்திற்குப் போய் விட்டன. 



அடுத்தக் கட்டம்தான் ஷா ஜகானின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று ஷா ஜகான் கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார். தன் பிள்ளைகளுக்குள் சண்டை வரும். ஆனால் இப்படி மோசமான சண்டை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஷா ஜகானையும் தாராவையும் ஒரு வழி பண்ணி விடுவதே ஒளரங்கசீப்பின் எண்ணம், திட்டம், இலக்கு எல்லாமே. ஒளரங்கசீப்பின் படைகள் ஆக்ராவை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கின்றன.

இந்த நேரத்தில், மூத்த மகன் தாராவைப் பேரரசராகப் பிரகடனம் செய்யப் போவதாக ஷா ஜகான் அறிவித்து விட்டார். அப்போது தாராவுக்கு வயது 43. இது ஒளரங்கசீப்பிற்குப் பெரும் கோபத்தை உண்டு பண்ணியது.

தாரா ஒரு நல்ல மனிதர். ஆனால் நல்ல ஓர் அரசியல் நிர்வாகி அல்ல. சதா மது மாது மயக்கத்திலேயே காலத்தைக் கழித்து வந்தவர். அவரிடம் மொகலாய சாம்ராஜ்யத்தைக் கொடுத்தால் நாசமாகி விடும். அப்படித்தான் ஒளரங்கசீப் நினைத்தார். 



தாரா என்பவர் ஒளரங்கசீப்பிற்கு மூத்த அண்ணன் தான். இருந்தாலும் நல்ல ஓர் ஆளுநராக இருக்கவில்லையே. அங்கே தான் இடித்தது.

இன்னும் ஒரு விசயம். அந்தக் காலத்தில் மொகலாய மன்னர்களில் பலர் மதுப் பழக்கம் கொண்டவர்கள். மது மாது என்று மயக்கத்திலேயே இருந்தவர்கள். நான் சொல்லவில்லை. எழுதி வைத்த ஆவணங்கள் சொல்கின்றன. அதனால் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஒளரங்கசீப் மட்டும் அந்தப் பழக்கங்களுக்கு அப்பால் பட்டவர். சுத்த சமயவாதி. மதுப் பழக்கத்தை அடியோடு வெறுத்தவர். தன்னுடைய அந்தர்புரத்தில் மது அருந்தியவர்களைச் சிரச் சேதமும் செய்து இருக்கிறார். இஸ்லாம் சமயத்தவர்கள் மது அருந்தினால் அவர்களுக்குக் கசையடி கொடுக்கும்படி சட்டம் போட்டு வைத்து இருந்தார்.

ஷா ஜகான் ஆட்சி செய்யும் போது அவருடைய நான்கு மகன்களுக்கும் கவர்னர் பொறுப்பு வழங்கி இருந்தார். அவருடைய நான்கு மகன்களில் அவருக்கு மிகவும் பிடித்த மகன் மூத்தவர் தாரா ஷுகோ. இவருக்கு மட்டும் தனிச் சலுகைகள். தாரா எடுக்கும் முடிவுகளுக்குத் தலையாட்டி பொம்மையாக ஷா ஜகான் இருந்தார். அதனால் மற்ற மூன்று மகன்களுக்கும் எப்போதுமே தாராவின் மீது கோபம். ஒரு வகையான பொறாமை.



ஒரு மொகலாய அரசர் இறந்து விட்டால் அவருக்குப் பின் யார் அரசப் பதவிக்கு வருவது என்பது மொகலாயத்தில் வரையறுக்கப் படாத சாசனம். அதனால் தான் அரசரின் மகன்களுக்குள் மோதல்கள். காழ்ப்புக் கசப்புணர்வுகள். தந்தையாரைப் பதவியில் இருந்து வீழ்த்துவது; சகோதரர்களுக்கு இடையே ஆயுதப் போர்; ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வது போன்ற அவலங்கள் நடைபெற்று உள்ளன. சரி.

ஆக்ராவை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்த ஒளரங்கசீப் படைகளை மகாராஜா ஜஸ்வந்த் சிங் மீண்டும் எதிர்த்து நின்றார். ஜஸ்வந்த் சிங் என்பவர் ராஜஸ்தானின் ஜோத்பூர் சிற்றரசின் மன்னராக இருந்தவர். அந்தக் காலக் கட்டத்தில் ஜோத்பூர் சிற்றரசு மொகலாயர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.   

ஜோத்பூர் நகரம் இப்போது ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். ஜோத்பூரைச் சுற்றி பல அரண்மனைகள், பல கோட்டைகள், பல இந்துக் கோயில்கள் இன்னும் இருக்கின்றன. தார் பாலைவனத்தில் வித்தியாசமான இயற்கைக் காட்சி அமைப்புகளைக் கொண்ட நகரம். 



ராஜஸ்தான் என்று சொன்னதுமே, அதன் கவின் கொஞ்சும் அரண்மனைகளும், சிறப்பு மிக்க ஒட்டகச் சவாரிகளும், காதல் கலந்த வீரக் காவியங்களும், வசீகரிக்கும் பாரம்பரியமும், நெஞ்சை விட்டு அகலாத கலாசாரமும் நம் மனங்களில் சத்தம் போடாமல் சாதகம் பேசி விட்டுச் செல்லும்.

ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் போன்றவை இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள். ஜோத்பூர் நகரத்தில் வெப்பம் அதிகம். அதன் காரணமாக அந்த நகரத்திற்குச் சூரிய நகரம் என்று ஓர் அடைமொழி.

ஜோத்பூரில் உஜ்ஜினி என்கிற ஓர் இடம். அதற்கு அருகே தர்மத்பூர். அங்கே ஜஸ்வந்த் சிங் - ஒளரங்கசீப் போர் தொடங்கியது. பல நாட்கள் நீடித்தது. முடிவில் ஒளரங்கசீப் வென்றார். மகாராஜா ஜஸ்வந்த் சிங்கிற்குத் தோல்வி.

ஒளரங்கசீப்பின் படைகள் முன்னேறிக் கொண்டு இருந்தன. சம்பல் பள்ளத் தாக்குகளில் பயணம் செய்து கொண்டு இருந்த போது ஒளரங்கசீப்பின் அக்கா ஜஹானாராவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ஜஹானாரா இப்படி எழுதி இருந்தார்.



'நம்முடைய தந்தை ஷா ஜகான் குணம் அடைந்து விட்டார். மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார். இந்த நிலையில் நீ ஆக்ராவை நோக்கிப் படைகளுடன் வருவது என்பது நல்லது அல்ல. அது ஒரு துரோகச் செயல். தாராவை எதிர்ப்பதும் சரியன்று. ஆகவே நீ தக்காணத்துக்கு மீண்டும் திரும்பிப் போவதே சிறப்பு. அதுவே நீ அப்பாவுக்குக் செய்யும் மரியாதை எனும் கடிதம்.

கடிதத்தைப் படித்த ஒளரங்கசீப் பதில் கடிதம் எழுதி அனுப்பினார். 'தாராவின் செயல்கள் வரம்பு மீறி விட்டன. என் நிர்வாக அதிகாரத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது. அதைவிட என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றேன்.

அண்ணன் தாரா ஆக்ராவில் இருப்பது நல்லது அல்ல. அவரைப் பஞ்சாப்பிற்கு மாற்றி விடுங்கள். நோய்வாய்ப் பட்டு இருக்கும் என்னுடைய தந்தையை ஒரு மகனாகப் பார்க்க வருகிறேன். அவ்வளவுதான். என் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்காகத் தான் ஆக்ராவிற்கு நான் வருகிறேன் என்கிற பதில் கடிதம்.



ஒளரங்கசீப்பின் இந்தக் கடிதம் ஷா ஜகானைக் கொஞ்சம் தடுமாறச் செய்தது. அதற்கு ஷா ஜகான் பதில் அனுப்பினார். 'ஆக்ராவுக்கு வரும் ஒளரங்கசீப்பைச் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறேன்’.

கடிதத்துடன் 'ஆலம்கீர்' என்று பொறிக்கப் பட்ட அழகிய வாள் ஒன்றையும் ஒளரங்கசீப்பிற்குப் பரிசாக உடன் அனுப்பி வைத்தார். ஆலம்கீர் என்றால் உலகை வென்றவர்.

ஷா ஜகானை வீழ்த்துவதற்கு என்ன என்னவோ நடந்து இருக்கிறது. அவரும் எவ்வளவோ சமாளித்து இருக்கிறார். பாருங்கள். கடைசியில் ஒளரங்கசீப்பிடம் மட்டும் சமாளிக்க முடியாமல் போனதுதான் விதி எழுதி வைத்த சதி.

மீண்டும் சொல்கிறேன். சாமுகர் எனும் சமவெளிப் பகுதியில் ஒளரங்கசீப்பின் படைகளுக்கும் அவரின் அண்ணன் தாராவின் படைகளுக்கும் கடுமையான மோதல்கள். சில மாதங்கள் வரை அந்த மோதல்கள் நீடித்தன. ஒளரங்கசீப்பின் படைகள் திடமாய் வன்மையாய் இருந்தன. ஒளரங்கசீப்பின் படைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத தாரா தப்பி ஓடினார். ஒளரங்கசீப் தன் படையுடன் முன்னேறினார். ஆக்ராவைக் கைப்பற்றினார்.



தாரா தோல்வி அடைந்து தலைமறைவாகிப் போய் விட்டார் என்கிற செய்தி ஷா ஜகானை மிகவும் வேதனை அடையச் செய்தது. இருந்தாலும் தாரா எப்படியாவது படைகளைத் திரட்டிக் கொண்டு வருவான். மீண்டும் ஆக்ராவைக் கைப்பற்றுவான் என்று ஷா ஜகான் பெரிதும் எதிர்பார்த்தார். அந்த நனவும் கனவாகிப் போனது.

இந்தக் கட்டத்தில் ஷா ஜகானுக்கு வேறு மாதிரியாக சிந்தனைகள் ஓடின. தன்னுடைய இன்னொரு மகன் முராட்டுக்கு  ஒரு கடிதம் எழுதினார். அதில் 'நீ உன் படை பலத்தால் ஆக்ராவைக் கைப்பற்று. எப்படியாவது ஒளரங்கசீப்பை அழித்துவிடு. ஆட்சிப் பொறுப்பை நீயே எடுத்துக் கொள்' எனும் கடிதம்.

இந்தக் கடிதம் முராட்டிடம் சென்று சேர்ந்தது. இருந்தாலும் அந்தக் கடிதத்தைத் தொலைத்து விட்டார். எப்படியோ தெரியவில்லை. ஒற்றர்கள் மூலமாக அந்தக் கடிதம் ஒளரங்கசீப்பின் கைகளில் சிக்கிக் கொண்டது. அந்தக் காலத்தில் ஒற்றர்களை வைத்தே அரசர்கள் பேர் போட்டு இருக்கிறார்கள். கடிதத்தைப் படித்துப் பார்த்த ஒளரங்கசீப்பின் மண்டையில் மணி அடித்து விட்டது.

ஷா ஜகான் இனிமேல் யாருக்கும் கடிதங்கள் எழுதக் கூடாது என்று உத்தரவு போட்டார். இந்தக் கட்டத்தில் ஒளரங்கசீப் ஆக்ராவைக் கைப்பற்றி விட்டார். நினைவு படுத்துகிறேன். 



அடுத்து ஒளரங்கசீப் இன்னும் ஒரு தடாலடி கட்டளை போட்டார். அரச குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கும் நகைகள் எதையும் வைத்து இருக்கக் கிடையாது. அவை எல்லாமே அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள். பொது மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பொதுச் சொத்துக்கள். பொது மக்களின் சொத்துகள்.

ஆகவே ஷா ஜகான் தன்னுடைய நகை நட்டுகள் எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒரு கட்டளை. ஔரங்கசிப்பின் கட்டளை. யாரும் எதிர்பார்க்காத பயங்கரமான அடி.

ஷா ஜகான் தான் வைத்து இருந்த நகைகளை எல்லாவற்றையும் பெட்டி பெட்டியாக அரசு கஜானாவிடம் ஒப்படைத்தார். தாரா தன் கண்ணாடி மாளிகையில் வைத்து இருந்த நகைகளும் கஜனாவிற்குப் போய்ச் சேர்ந்தன.

மொகலாயப் பரம்பரைச் சொத்து மயிலாசனம் என்கிற சிம்மாசனம் விலை மதிப்பற்ற நவமணிச் சொத்து. அதுவும் ஒளரங்கசீப்பின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இந்தக் கட்டத்தில் முராட் கொல்லப் படுகிறார். எப்படி?

ஒளரங்கசீப்பின் தம்பி முராட். ஆக்ரா படையெடுப்பில் ஒளரங்கசீப்பிற்குப் பக்க பலமாக இருந்து கைகொடுத்தவர் இதே இந்த முராட். இருந்தாலும் ஒளரங்கசீப் மொகலாயப் பேரரசர் ஆவதற்கு முராட் ஒரு தடைக் கல்லாக இருக்கலாம் என்று ஒளரங்கசீப்பிற்கு கொஞ்ச காலமாகச் சந்தேகம். அந்தச் சந்தேகத்தின் பேரில் முராட்டை ஒளரங்கசீப் கொன்று விட்டார் எனும் ஒரு செய்தியும் உண்டு. ஆனால் முராட் கொல்லப் பட்டதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. 



ஆக்ராவைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் முராட் அளவுக்கு மீறி குடித்தார். தொடர்ந்தால் போல மது மயக்கத்தில் இருந்தார். மது அருந்துவது சமயத்திற்கு எதிரானச் செயல். அதனால் ஒளரங்கசீப் அவருக்கு மரண தண்டனை வழங்கினார் என்றும் ஒரு தகவல் உண்டு.

உண்மையில் முராட் அதிகமாக மது அருந்துபவர் தான். உல்லாசப் பிரியர் தான். அவருடைய குஜராத் நிர்வாகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். உண்மைதான். இருந்தாலும் மொகலாய வரலாறு இதையும் தாண்டி வேறு மாதிரியாகப் பயணித்து இருக்கிறது.

அந்த வரலாறு தான் ஒளரங்கசீப்பின் தம்பி முராட்டின் தலையெழுத்தையே மாற்றியது. கொலைக்குப் பரிசு கொலை. முராட் கொலை செய்யப் படுகிறார். அதற்கு ஔரங்கசிப் உடந்தையாக இருந்தாரா. நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)