பரமேஸ்வரா மதம் மாறினாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா மதம் மாறினாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 மே 2016

பரமேஸ்வரா மதம் மாறினாரா


பரமேஸ்வரா எனும் பெயர் அண்மைய காலங்களில் வரலாற்றில் இருந்து காணாமல் போய் வருகிறது. அந்த வரலாற்று நாயகர் பாட நூல்களில் இருந்தும் காணாமல் போய் வருகிறார். ஒரு மனிதர் காணாமல் போகலாம். தேடிக் கண்டிப்பிடித்து விடலாம். உருக்குலைந்து போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்த்து விடலாம். ஆனால் பெயரே காணாமல் போனால் எப்படிங்க…

அங்கே அத்திம் மேடு என்பது ஒரு பகல் கொள்ளை என்றால் இங்கே அதுவே ஒரு பௌர்ணமிக் கொள்ளை. பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு  இருண்ட இருட்டில் எருமை மாடு எப்படிங்க தெரியும். விடுங்கள். கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எத்தனை நாளைக்குத்தான் படம் காட்டிக் கொண்டு இருக்க முடியும்.


சில வரலாற்றுக் கத்துக் குட்டிகள் அப்படித் தான் படம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. திரை கிழிய படம் காட்டிவிட்டுப் போகட்டும். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் என்றைக்கும் உண்மை மறையக் கூடாது மறைக்கப்படவும் கூடாது.

உண்மையை மறைத்து எவ்வளவு காலத்திற்குத் தான் பேர் போட முடியும். சொல்லுங்கள். உலக மக்களிடம் எத்தனை காலத்திற்குத் தான் பில்டப் செய்ய முடியும். சொல்லுங்கள். உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெத்த அப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவனின் பெயரைப் போட்டால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? ஆக சத்தியம் ஜெயிக்க வேண்டும். அதுவே நம்முடைய ஆதங்கம். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

உள்நாட்டு வரலாறுகளில் சர்ச்சை

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இந்தச் சர்ச்சை ஒரு மெகா சீரியலாக இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு தீர்வு காண இந்த வரலாற்று ஆவணம் சரியாக அமையும் என்றும் நம்புகிறேன்.



பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட ஒரு தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

மலாக்கா வரலாற்றைப் பற்றி இதுவரையிலும் மூன்று பதிவுகள் மட்டுமே சான்றுகளாகக் கிடைத்து உள்ளன. 

முதலாவது பதிவு கோர்டின்கோ டி எரேடியா (Gordinho D'Eredia) எனும் போர்த்துகீசிய மாலுமியின் பதிவு. 1600 ஆம் ஆண்டு வாக்கில் பதியப் பட்டது. அதில் பரமேஸ்வரா எனும் பெயர் பெர்மிச்சுரி (Permisuri) என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அடுத்தப் பதிவு செஜாரா மெலாயு (Sejarah Melayu - Malay Annals). மலாக்கா பேரரசு உச்சத்தில் இருந்த போது மலாக்காவில் என்ன நடந்தது என்பதை அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளில் காண முடிகிறது. இருப்பினும் அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளை 1612 ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகம் மறுதொகுப்புச் செய்தது.

செஜாரா மெலாயு மறுதொகுப்பு

மலாக்கா எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது; மலாக்காவை ஆட்சி செய்தவர்களின் வரலாறு; மலாக்கா எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது போன்ற விவரங்கள் அந்தப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

ஆனால் பரமேஸ்வரா எனும் பெயர் செஜாரா மெலாயுவின் எந்த ஓர் இடத்திலும் இடம் பெறவில்லை. ஆகவே, செஜாரா மெலாயு மறுதொகுப்புச் செய்யப்பட்டதால் வலுவான சான்றுகள் தேக்க நிலையை அடைகின்றன. 

ஒருக்கால் ஒரு தரப்பிற்குச் சாதகமான திருத்தங்களாகவும் அமையலாம். அதனால் செஜாரா மெலாயுவின் பதிவுகளுக்கு முழு உத்தரவாதம் வழங்க முடியாது. சீன, போர்த்துகீசிய, டச்சுக்காரர்களின் ஆவணங்களை நடுநிலையான பதிவுகளாக ஏற்றுக் கொள்ளலாம்.

அடுத்தப் பதிவு சுமா ஓரியண்டல் (Suma Oriental) எனும் பதிவு. 1513 ஆம் ஆண்டு பதியப் பட்டது. இதை எழுதியவர் தோம் பைரஸ் (Tom Pires). இவர் ஒரு போர்த்துக்கீசியர். மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய பின்னர் எழுதப்பட்டது. பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய வரலாற்றை இந்தப் பதிவு எடுத்துரைக்கின்றது.


பரமேஸ்வரா என்பவர் ஸ்ரீ விஜயா பேரரசின் இளவரசர்; சிங்கப்பூரின் கடைசியான அரசர்; மலாயா தீபகற்பத்தின் மேற்கு கரை வழியாகப் பயணித்து மலாக்காவைத் தோற்றுவித்தார் என அந்தப் பதிவு சொல்கின்றது. மலாக்காவை செக்குயிம் டார்க்சா (Xaquem Darxa) என்றும் மொடவார்க்சா (Modafarxa) என்றும் தோம் பைரஸ் பதிவு செய்துள்ளார்.

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தவர். அவருக்குப் பரமேஸ்வரா மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் துமாசிக்கில் அரியணை ஏறினார். துமாசிக் என்பது சிங்கப்பூரின் பழைய பெயர்.

* 1401 - துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1401 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 – சுமத்திராவின் ஒரு பகுதியாக இருந்த பாசாய் சிற்றரசின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார்.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 – பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.


அது பரமேஸ்வரனின் வாழ்க்கைச் சுருக்கம். சரி. வரலாற்றிற்கு வருவோம். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாவாவை ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஆண்டு வந்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதே சமயத்தில் மலாய்த் தீவுக் கூட்டங்களில் (Malay Archipelago) இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

ஸ்ரீ விஜயா பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்டார அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடம் இருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் மங்கத் தொடங்கியது.

சிங்கசாரி அரசு மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல்

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது.  அடுத்து ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாய் மேலும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி அரசு வலிமை வாய்ந்த ஒரு பெரிய அரசாங்கமாகவும் உருமாற்றம் கண்டது.

சிங்கசாரி அரசு என்பது மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது.


ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனையைப் புதிதாகத் தோன்றிய சிங்கசாரி அரசு பல முறை தாக்கிச் சேதங்களை ஏறபடுத்தியது. அதனால் ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தையும் அரண்மனையையும் பலேம்பாங்கில் இருந்து ஜாம்பிக்கு மாற்றியது. ஜாம்பி எனும் இடத்தின் பழைய பெயர் மலாயு.

புதிய தலைநகரம் உருவாக்கப் பட்டாலும் பலேம்பாங் முக்கியமான அரச நகரமாகவே விளங்கி வந்தது. 14-ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது.

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர் பிந்தாங் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தாங் தீவு சிங்கப்பூருக்கு அருகில் இருக்கிறது. அத்துடன் ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த பல ஆயிரம் மக்களும் பிந்தாங் தீவில் தஞ்சம் அடைந்தனர்.


அடுத்தக் கட்டமாக ஸ்ரீ விஜயா அரசு, பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்கு நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக்.

தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்து இருந்தது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1324-இல் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார்.

சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன்

அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் கவலைப் படவில்லை. சிங்கப்பூர் எனும் ஓர் ஊரை உருவாக்கினார். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான்.

சிங்கப்பூர் ஓர் ஊர் தான். சின்ன ஒரு மீன்பிடி கிராமம். அப்போது அது ஒரு நகரம் அல்ல. மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.


1366-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். அது சயாம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலாகும்.

நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வ ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல, அவருக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரையும் சீனத் தூதர் வழங்கினார்.

சிங்கப்பூரின் புதிய நிர்வாகத்திற்குச் சீனாவின் பக்கபலம் இருப்பதைப் பார்த்த சயாம் கலக்கம் அடைந்தது. அதனால் நீல உத்தமன் மீது தாக்குதல் நடத்த சயாம் அச்சப் பட்டது.

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவியை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.

ஸ்ரீ ராணா வீரா கர்மா சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் பதவிக்கு வந்தார். இவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் தான் மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேஸ்வரா. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதல்கள்

இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது. மறுபடியும் ஒரு நினைவுறுத்தல். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக்.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தி இருக்கிறது. அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாகத் தான் சிங்கப்பூர் அரசின் மீது மஜாபாகித்தின் திடீர் தாக்குதல்களும் அமைந்தன.

எல்லாமே சண்டைகள் சச்சரவுகள். அவன் அடித்தால் இவன் திருப்பி அடிப்பது. இவன் அடித்தான் அவன் அடிப்பது. அப்புறம் கத்திக் குத்து, சமுராய் சண்டை. அந்த அழகுச் சண்டைகள் இன்னும் தொடர்கின்றன. இப்போது நடக்கும் குண்டர் கும்பல் சண்டைகளைத் தான் சொல்கிறேன்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். சொல்லி இருக்கிறேன். இவர் மஜாபாகித்தின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். உள்ளூர் வரலாற்று நூல்களில் சயாம் நாடுதான் சிங்கப்பூரைத் தாக்கியதாகச் சொல்லப் படுகிறது. உண்மை அதுவல்ல.

உண்மையில் மஜாபாகித் அரசின் பெயரை மறைத்து விட்டார்கள். தெரியாமல் செய்தார்களா... தெரிந்தே செய்தார்களா. தெரியவில்லை. அது ஆண்டவனுக்குத் தான் தெரியும். அது மட்டும் இல்லை.

அது மட்டும் இல்லை. முன்பு துமாசிக்கை ஆட்சி செய்த தெமாகியைப் பரமேஸ்வரா கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சிலர் சொல்வார்கள். சில வரலாற்று நூல்களும் அப்படித் தான் சொல்கின்றன. அது ரொம்பவும் தப்பு. தெமாகியைக் கொன்றது நீல உத்தமன். பரமேஸ்வரா அல்ல. இந்த உண்மையை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். பாவம் ஒரு பக்கம்.பழி ஒரு பக்கம். மேலும் பல உண்மைகள் அடுத்த கட்டுரையில் அவிழ்க்கப்படும். (தொடரும்)