சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 மே 2020

சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை

தமிழ் மலர் - 09.05.2020

1935-ஆம் ஆண்டில் சுங்கை பூலோ தொழு நோய் மருத்துவமனை ஓர் அவசரமான முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலைமை. அதுவே ஓர் அதிர்ச்சியான முடிவாகவும் அமைந்து போனது. மருத்துவமனை நோயாளிகள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய பணத்தாள்களை அச்சிட்டு வெளியீடு செய்யும் முடிவு.



ஒரு மருத்துவமனைக்கு மட்டும் ஏன் தனியாகப் பணத்தாள்கள் அச்சிடப்பட வேண்டும்? அதுவும் ஒரு வேதனையான செய்தி. இருப்பினும் அதில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. என்ன தெரியுங்களா. அந்த பணத்தாள்களில் தமிழ் மொழியும் இடம்பெற்று இருந்தது. தவிர ஆங்கிலம்; சீனம்; அரபு மொழிகளும் இடம்பெற்று இருந்தன. அதிசயமான செய்தி தானே.

அந்தக் காலத்தில் தொழு நோயாளிகளைப் பற்றி பொது மக்களிடம் நிலவி வந்த ஒரு தவறான கருத்து தான் மூல காரணம். ஏற்கனவே நோயாளிகள் அரசாங்கம் வெளியிட்ட பணத்தாள்களைப் பயன்படுத்தி வந்தார்கள். அந்தப்  பணத்தாள்கள் மூலமாகத் தொழுநோய் வைரஸ் கிருமிகள் பரவி வருவதாக வதந்திகள் கிளம்பின. 



சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா கிருமிகள் பணத்தாள்கள் மூலமாக பரவலாம் என்று சீன அரசாங்கம் பல கோடி பணத்தாள்களை மீட்டுக் கொள்ளவில்லையா. அதே போல தான் சுங்கை பூலோவைச் சுற்றி இருந்த இடங்களிலும் ஒரு பதற்றமான நிலைமை.

மைக்கோ பாக்டீரியம் லெப்ரோ மாடோசிஸ் (Mycobacterium lepromatosis) எனும் ஒரு வகை கிருமியால் தொழு நோய் வருகிறது. பொதுவாகவே இந்த நோய் காற்றின் மூலமகத் தான் பரவுகிறது.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் மனிதர்களின் உடலில் ஒன்றும் தெரியாத மௌனியாக இருக்கும். அப்படியே இனப் பெருக்கம் செய்து கொள்ளும். அதன் பின்னர் தான் அதன் சேட்டைகள் மெது மெதுவாகத் வெளியே தெரிய வரும். 



இந்த நோய் தோலையும் நரம்புகளையும் தான் முதலில் பாதிக்கிறது. அதனால் மூக்கு சப்பையாகிப் போகும். கண் இமைகளை மூட முடியாத நிலை ஏற்படும். காது மடல் தடித்து விடும். கை கால்விரல்கள் மடங்கிப் போகும். விரல்கள் குன்றிப் போகும். பாதங்கள் துவண்டு விடும். பாதங்களில் உணர்ச்சி இல்லாமல் குழிப்புண்கள் ஏற்படும்.

வெளியே வெளிச்சத்தில் வரும் போது, அந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள் சொரூபிகள் அல்லது அரூப உருவங்கள் கொண்டவர்களாகத் தென்படுவார்கள்.

இந்த நோய்க்கு குஷ்டநோய், பெருவியாதி, மேகநீர், மேக வியாதி என்று பெயர்கள் உள்ளன. ஆங்கிலத்தில் லெப்ரசி (Leprosy); ஹேன்சன் நோய் (Hansen's disease) என்று அழைக்கப் படுகிறது. நோயாளி தும்பும் போதும்; இரும்பும் போதும் கோடிக் கணக்கான தொழுநோய்க் கிருமிகள் காற்றில் மூலமாகப் பரவுகின்றன. 



தோல் நோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றால் ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விடலாம். சில ஊனங்களைப் பிசியோதெரபி (physiotherapy) எனும் உடலியல் மருத்துவம் மூலமாகக் குணப் படுத்தலாம். மேலும் தீவிரமாகி விட்ட சில ஊனங்களை அறுவை சிகிச்சை மூலமாகக் குணப் படுத்தலாம். சரி.

சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை நோயாளிகள் சில சமயங்களில் அருகில் இருக்கும் சுங்கை பூலோ நகரத்திற்குப் பேருந்து மூலமாகச் செல்வது உண்டு. தவிர குவாங்; குண்டாங்; கெப்போங் போன்ற இடங்களுக்கும் செல்வதும் உண்டு. மருத்துவமனைக்கு என தனியாக ஒரு பேருந்து இருந்தது.

குண்டாங் பகுதியில் இருந்த பொதுமக்கள் சில தடவை அந்தப் பேருந்தின் மீது கற்களை வீசி இருக்கிறார்கள். தொழுநோய் நோயாளிகளைக் கண்டபடி திட்டிப் பேசி இருக்கிறார்கள். அவர்கள் மீது இருந்த வெறுப்பினால் அந்தத் தாக்குதல்களும் கண்டனங்களும் நடந்து உள்ளன. 1930-ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள். ஒரு செருகல்.



80 ஆண்டுகளுக்கு முன்னர் வாட்ஸ் அப்; டுவிட்டர்; பேஸ்புக்; போன்ற சமூக ஊடகங்கள் எதுவும் இல்லை. தெரியும் தானே. தொலைப்பேசிகள்; வானொலிப் பெட்டிகள்கூட பொதுப் பயன்பாட்டிற்கு வராத காலக் கட்டம்.

அப்படிப்பட்ட காலக் கட்டத்தில்கூட காதும் காதும் வைத்த மாதிரி வதந்திகள் கசிவது வழக்கம் போலும். மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் எவரும் வதந்தியைக் கிளப்பவில்லை. வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் கில்லாடிகள் சிலர் கட்டிய கதை தான். அப்போதே வேலை வெட்டி இல்லாமல் சில வெள்ளை வேட்டிகள் இருந்து இருக்கலாம் போலும். ஒன் மினிட் பிளீஸ்.

இப்போது மட்டும் என்னவாம். பொது நடமாட்டக் கட்டுப்பாடு வந்ததும் போதும் தாங்க முடியவில்லை. எல்லாம் தெரிந்த நல்லையர்கள் மாதிரி பேஸ்புக்கில் அலை அலையாக நேரலைக் காணொலிகள். அப்புறம் இவர்கள் என்னவோ கொரோனா கிருமிக்குப் பெயர் வைத்த மாதிரி எகதாள யூடியூப் காணொலிகள். 



அதில் ஜிங்கு ஜிக்கான் கும்மாளங்கள். அப்படியே என்னையும் பாருங்க... என் அழகையும் பாருங்க... என்று அடம் பிடிக்கும் டிக் டாக் கிளிப்புகள்; தூங்க முடியவில்லை சாமி.

கொரோனா கதவைத் தட்டுகிறது மாதிரி இருக்கிறது. நிறுத்திக் கொள்வோம். முக்கியமான விசயத்தை விட்டுவிட்டு எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறோம். சுங்கை பூலோவிற்கு வருவோம்.

1935-ஆம் ஆண்டில் சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனைக்கு என்று வெள்ளை கருப்பு நிறத்தில் 5 காசு பணத்தாள்களை வெளியிட்டார்கள். முதல் முறையாக 5 காசு பணத்தாள்கள் மட்டுமே வெளியாகின. 



அந்தக் காலத்தில் ஐந்து காசு என்பது பெரிய காசு. ஒரு கட்டி சயாம் அரிசி வாங்கி விடலாம். ரொம்ப வேண்டாம். 1960-களில் ஒரு கட்டி கெம்போங் மீன் 5 காசிற்கு விற்றார்கள். இப்போது கிடைக்குமா. பத்து கிராம் பத்து வெள்ளி என்று விற்கிறார்கள். தலைகால் தெரியாமல் விலையை ஏற்றி விட்டு அழகு பார்க்கிறார்கள். சரி.

அந்தப் பணத்தாள்கள் அனைத்தும் கூட்டாட்சி மலாய் மாநிலங்களின் கணக்கெடுப்புத் துறையினால் (Survey Department, Federated Malay States) அச்சிடப் பட்டன.

அந்தப் பணத்தாளின் ஒரு புறத்தில் பிப்ரவரி 4, 1935 என தேதியும்; ஆங்கிலம், சீனம், தமிழ் மொழிகளில் பணத்தாளின் மதிப்பும் அச்சிடப்பட்டு இருந்தது. அந்தப் பணத்தாளின் நீளம் 115 மில்லி மீட்டர். அகலம் 83 மில்லி மீட்டர்.



அதன் பின்னர் மறு ஆண்டு 1936-ஆம் ஆண்டில் மீண்டும் 5 காசு தாள்கள் வெளியிடப் பட்டன. தவிர அதே ஆண்டில் 10 காசு; 1 டாலர் தாள்களையும் வெளியிட்டார்கள்.

1 டாலர் நோட்டுகளில் ஒரு மீன் கொத்திப் பறவை ஒரு பாறையில் அமர்ந்து இருப்பது போல படம் இருந்தது. பின்புறம் நீர் எருமை வண்டி சித்தரிக்கப்பட்டு இருந்தது.

5 காசு தாள்களில் சுங்கை பூலோ குடியிருப்பில் மட்டுமே செல்லுபடியாகும் (SUNGEI BULOH SETTLEMENT VALID FOR GOODS WORTH WITHIN THE SUNGEI BULOH SETTLEMENT ONLY) எனும் ஆங்கில அறிவிப்பு. தவிர ‘குஷ்ட வாகட சாலை எல்லைக்குள் ஐந்து காசு பெறுமான சாமான்களுக்கு இச்சீட்டு பெறும்’ எனும் தமிழ் வாசகம். 



முன்பு எல்லாம் பணத்தாள்களில் தமிழ் வந்தது இல்லை. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர் மாநிலத்தின் குக்கூப் (Kukup) பகுதியில் ஒரு தோட்டம் இருந்தது. அதன் பெயர் கான்ஸ்டான்டினோபிள் தோட்டம் (Constantinople Estate).

அந்தத் தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு என பண அட்டைகள் அச்சிடப் பட்டன. 25 சென், 50 சென், 1 டாலர், 2 டாலர் என பண அட்டைகள். அந்தப் பண அட்டைகளில் இருபத்தைந்து சென்று; அன்பது சென்று; ஒரு றிங்கி; இரண்டு றிங்கி என குறிக்கப்பட்டு இருந்தன.

1870 - 1890-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் ஓரியண்டல் வங்கி; சிங்கப்பூர் ஆசியாட்டிக் வங்கி; சிங்கப்பூர் மெர்க்கண்டைல் வங்கி; போன்றவை தமிழில் பணத்தாள்களை வெளியிட்டு உள்ளன.



இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மொரீஷியஸ் நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் எழுத்துகள் இடம் பெற்று உள்ளன. நினைவில் கொள்வோம்.

பணத்தாள்களில் தமிழ் வருகிறது என்றால் அப்போதைக்கு அது பெரிய விசயம் அல்ல. இப்போதைக்கு அது ஒரு வரலாறு. இருக்கிற வரலாற்றை எல்லாம் அடித்துத் துவைத்து மிதிக்கிறார்கள். தாய்மொழியை உயிராகப் பார்க்கும் காலத்தில் அவை எல்லாம் வரலாறு தான். 

அன்றைய காலத்தில் மலையூர் மக்கள் தமிழ் மொழிக்கு மதிப்பு கொடுத்தார்கள். மரியாதை செய்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லையே. இனவாதப் பூனைகள் கண்களை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டு விட்டதாகக் கற்பனை செய்து கொள்கின்றன. பாவம்... படித்தும் படிப்பு வாசனை இல்லாத பாமரச் சித்திரங்கள். விடுங்கள். 



1938-ஆம் ஆண்டில் சுங்கை பூலோ மருத்துவமனையின் பணத்தாள்களின் வெளியீடு நிறுத்தப் பட்டது. 1938-ஆம் ஆண்டில் டாக்டர் கோர்டன் (Dr. Gordon Alexander Ryrie) என்பவர் சுங்கை பூலோ தொழு நோய் மருத்துவமனையின் இயக்குநராக இருந்தார்.

பணத்தாள்களின் மூலமாகத் தொழு நோய்க் கிருமிகள் பரவுவது இல்லை என்று அவர் உறுதி படுத்தினார்.

அதன் பிறகு மருத்துவமனை வளாகத்திலேயே ஒரு பெரிய தீப்பந்தம் (bonfire) போட்டு புழக்கத்தில் இருந்த மருத்துவமனை பணத்தாள்களை எல்லாம் எரித்து விட்டார்கள். 100-இல் 95 விழுக்காடு தாள்கள் எரிக்கப்பட்டு விட்டன. அதனால் அந்தப் பணத்தாள்களை இப்போது பார்ப்பது அரிதிலும் அரிது.



இருப்பினும் எங்கோ ஒரு சில பணத்தாள்கள் இருக்கலாம். அந்தப் பணத் தாள்களுக்கு இப்போது விலை சொல்ல முடியாத அளவிற்கு மதிப்பு உயர்ந்து போய் உள்ளது. ஒரு பணநோட்டு இப்போது 50 ஆயிரம் ரிங்கிட் வரை ஏலம் போகிறது. அண்மையில் சிங்கப்பூரில் ஏலம் எடுத்து இருக்கிறார்கள்.

சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனையைப் பற்றி தெரிந்து கொள்வோமே.

1930-ஆம் ஆண்டுகளில் சுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை, உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்கியது. உலகிலேயே இரண்டாவது பெரிய தொழுநோய் ஆய்வு மையமாகவும் புகழ் பெற்று விளங்கியது.

நம்பிக்கையின் பள்ளத்தாக்கு (Leprosy Valley Of Hope) எனும் நம்பிக்கையான புனைப்பெயரும் சூட்டப் பட்டது. ஒரு காலக் கட்டத்தில் அந்த மருத்துவமனையில் 2400 பேர் வாழ்ந்து இருக்கிறார்கள்.

உண்மையிலேயே இந்த மருத்துவமனையின் வரலாறு கோலாலம்பூர் ஸ்தாபாக் புறந்கர்ப் பகுதியில் தொடங்குகிறது.

1920- ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர் ஸ்தாபாக்கில் தொழு நோயாளிகளுக்கு ஒரு புகலிடம் இருந்தது. சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட தொழுநோய் நோயாளிகள் பலர் அங்கு இருந்தனர்.

அங்கே அவர்களின் வாழ்க்கை ஒரு நரகத்தைப் போல அமைந்து போய் விட்டது. சின்ன இடம். அதிகமான நோயாளிகள். அதனால் அங்குள்ள நோயாளிகள் பலர் தப்பித்து ஓடி விட்டார்கள். தப்பி ஓட முடியாதவர்களும் இருந்தார்கள்.

நோயாளிகளுக்கு வலியைக் குறைக்க ஒரு வலி நிவாரணி வழங்கப்பட்டது. என்ன நிவாரணி தெரியுங்களா. அபின் என்கிற போதைப் பொருள். அதைப் பயன்படுத்த அரசாங்கமே அனுமதி அளித்தது.

1922-ஆம் ஆண்டில் டாக்டர் டிரவர்ஸ் (Dr. E. A.O. Travers) என்பவர் ஒரு புண்ணிய மனிதராக வந்து சேர்ந்தார். ஸ்தாபாக் தொழுநோய் புகலிடத்தில் தொழுநோயாளிகள் படும் வேதனைகளைக் கண்டார். மனம் இறங்கினார். இவர் ஓர் அரசாங்க உயர் அதிகாரி.

மனிதாபிமான அடிப்படையில் சுங்கை பூலோவில் தொழுநோய் மருத்துவமனை கட்டப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். 1930-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக திறக்கப் பட்டது.

அந்தக் காலத்தில் தொழுநோய் நோயாளிகள் பொது மக்களிடம் இருந்து கட்டாயமாகப் பிரித்து வைக்கப் பட்டனர். அது அரசாங்கத்தின் கொள்கையாகவும் இருந்தது.

பல பத்தாண்டுகளுக்கு முன்னர் தொழுநோய் என்பது பொதுவான ஒரு சுகாதார நெருக்கடியாகக் கருதப் பட்டது. அப்போதைய மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம், 1926 தொழுநோயாளர் சட்டம் எனும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் மூலமாகக் கட்டாயப் பிரித்தல் எனும் கொள்கை நடைமுறைக்கு வந்தது.

அந்தக் காலத்தில் சுங்கை பூலோ என்பது ஒரு பரந்த காட்டுப் பிரதேசம். கரடி புலிகள் எல்லாம் ஓடி ஆடி பேரன் பேத்திகள் எடுத்த இடம். சமயங்களில் யானைகளும் அல்லி தர்பார் அடாவடித் தனங்கள் செய்து இருக்கின்றனவாம்.

அந்த இடம் அப்போது பொதுமக்களின் பொதுவான நாகரிகத் தொடர்புகளில் இருந்து வெகு தொலைவில் வெகு தனிமையில் அமைந்து இருந்தது. அதற்குப் பெயர் தான் நம்பிக்கையின் பள்ளத்தாக்கு.

மலாயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த தொழுநோயாளிகள் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். சிகிச்சை அளிக்கப் பட்டார்கள்.

அங்குள்ள நோயாளிகளில் பலர் தனிமையிலேயே வாழ்ந்து தனிமையிலேயே மறைந்தும் போனார்கள். அவர்களைச் சொந்த பந்தங்கள் வந்து பார்ப்பது குறைவு. அந்த நோய் அவர்களுக்கும் ஒட்டிக் கொள்ளும் எனும் அச்சம் தான்.

கணவனைப் பிரிந்த மனைவிமார்கள்; குழந்தைகளைப் பிரிந்த தாய்மார்கள்; குடும்பத்தைப் பிரிந்த உறவுகள் என 2400 பேர் வாழ்ந்த இடம் சுங்கை பூலோ தொழுநோயாளிகள் மருத்துவமனை. நம்பிக்கையின் நட்சத்திரமாய் நம்பிக்கையான ஒரு பண்ணைப் பள்ளத்தாக்கு. அந்த அப்பாவி மக்களின் வாழ்வியல் கூறுகளை வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.




சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Banknotes_of_the_Sungei_Buloh_Settlement

2.https://steemit.com/numismatic/@hooiyewlim/the-rare-sungei-buloh-leprosarium-settlement-banknote

3.https://www.edgeprop.my/content/houses-former-leper-settlement-sungai-buloh-be-demolished

4. http://thewayhome.my/History.html