நெல்சன் மண்டேலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்சன் மண்டேலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 டிசம்பர் 2013

கோபுரங்கள் சாய்வதில்லை


நெல்சன் மண்டேலா




எம்.ஜி.ஆர். அசைவற்றுக் கிடக்கின்றார். பேச்சு மூச்சு இல்லை. அங்கே பாலமுரளி கிருஷ்ணாவின் மதுர கானங்கள் சன்னமாய் ஒலிக்கின்றன. அதைக் கேட்டு ஒரு சில மணித் துளிகளுக்கு எம்.ஜி.ஆரின் உடல் லேசாய் அசைகின்றது. அவரின் கடைசியான சுவாசக் காற்றும், மௌனத்தின் ராகங்களாய் நெஞ்சுக்குள் சலனமாகின்றன. எம்.ஜி.ஆர். என்கிற சரித்திரம் சாய்ந்தும் போகிறது. 

அதே போல நெல்சன் மண்டேலாவும் படுத்தப் படுக்கையாய்க் கிடக்கின்றார். ஆப்பிரிக்க மண்ணின் வைதீக வாசகங்கள் இசைக்கப் படுகின்றன. மண்டேலாவின் மெய்யுடல் கொஞ்சமாய்ச் சிலிர்க்கின்றது. ஒரு சகாப்தம் சாயப் போகின்றது. எல்லாரும் பேசிக் கொள்கின்றார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும்.

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்; அவர் மாண்டுவிட்டால் அதை பாடி வைப்பேன் எனும் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன. கதிரவனுக்கு அஸ்தமனம் இல்லை. அதைப் போலத்தான் நெல்சன் மண்டேலா போன்ற மானுட இலக்கணங்களுக்கும் மறைவு என்பதும் இல்லை. 

சொர்க்கத்தில் நிற வெறி என்கிற சட்டாம்பிள்ளை தலை கால் தெரியாமல் ஆட்டம் போடுகிறதாம். அதனால் அதற்குத் தனியாக ஒரு பாடம் நடத்தச் சொல்லி மாண்டேலாவுக்கு தந்தி வந்து இருக்கிறது.  போவதற்கு அவரும் தயாராகிக் கொண்டு இருக்கிறார். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பயணத்திற்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்று சொல்கிறார்கள். 

அத்தி பூத்தால் போல மலரும் மனித மலர்கள்          

வயதான மனிதர். மனித ஆசாபாசங்களை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் முகர்ந்து பார்த்தவர். மண் வாசனைகளுடன் மனித நாற்றத்தையும் சுமந்து போக வேண்டும். கொஞ்சம் மெதுவாகத்தான் போவார். மனம் சொல்கின்றது. அப்படியே மெதுவாகவே போகட்டுமே. 

அத்தி பூத்தால் போல மலரும் ஒரு சில மனித மலர்கள் உதிரும் போது நம் மனசும் கனமாய்ப் போகின்றது. அந்த மலர்களின் ஆன்மாக்களை வழியனுப்ப வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் போது ஆத்மபலமும் குறைந்து போகின்றது. ஒரு சரித்திரம் பேசும் சகாப்தத்தின் கண்ணீர்க் கதை வருகிறது. படியுங்கள். மரியாதை செய்யுங்கள்.   

உலக வரலாற்றில் சுதந்திரப் போராட்டம் என்பது இரண்டு வகை. மனித உரிமைகளுக்காகவும், மனித இனத்தின் சமத்துவத்திற்காகவும் போராடுவது ஒரு வகை. நாடு விட்டு நாடு வந்த அந்நியர்களின் இரும்புப் பிடியில் இருந்து விடுபடுவதற்காகப் போராடுவது இன்னொரு வகை. 

இந்த இரண்டு வகையான சுதந்திரத்திற்காகத் தங்கள் உடலையும் உயிரையும் துச்சமாகக் கருதிப் போராடியவர்கள் ஏராளம் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை மட்டும் இருபதாம் நூற்றாண்டின் வரலாறு காலாகாலத்திற்கும் நினைவில் வைத்து இருக்கும். எப்போதுமே பொன் எழுத்துகளால் பொறித்தும் வைத்து இருக்கும். 

ஒருவர் இந்திய மண் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழி வகுத்துத் தந்த காந்தி மகான். அடுத்தவர் அமெரிக்காவில் நிறவெறி ஒழிய தன் உடலையே பணயம் வைத்து உயிரையே பரிசாகத் தந்த மார்ட்டின் லூதர் கிங். அந்த இருவருக்குமே வாழ்நாள் சாதனை என்று சொல்லித் துப்பாக்கிக் குண்டுகளை மட்டுமே பரிசுகளாகக் கொடுத்து இருக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில் விடிவெள்ளி

மூன்றாவதாக வருபவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். எந்த நேரத்திலும் விடைபெற்றுச் செல்லலாம். அவரை வாழும் காந்தி என்று அழைக்கிறோம். இந்த நவீன இருபதாம் நூற்றாண்டில் இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென் ஆப்பிரிக்காவில் விடிவெள்ளியாய்த் தோன்றியவர். அவர்தான் நெல்சன் மண்டேலா.

ஆப்பிரிக்காவின் மண்ணின் மைந்தர்கள் என்று அங்கே வாழும் கறுப்பு இனத்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஓர் ஒப்பற்றத் தலைவர். ஓர் ஆண்டு அல்ல இரண்டு ஆண்டுகள் அல்ல. 27 ஆண்டுகள் தன் கொள்கைகளுக்காகச் சிறைவாசம் அனுபவித்தவர். உலகம் போற்றும் ஓர் உன்னத மனிதர். ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதையும்!

1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் டிரான்கே என்ற பகுதியில் குலு எனும் கிராமத்தில் பிறந்தார். அங்கு சோசா பழங்குடி என்கிற ஓர் இனம் இருந்தது. அந்த இனத்தின் தலைவருக்கு நான்கு மனைவிமார்கள். அவருக்கு 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் தான் இந்த மண்டேலா. இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. 

குடும்பத்தில் முதன் முதலாகப் பள்ளிக்குச் சென்றவர். காலையில் பள்ளிக்கூடம். மாலையில் ஆடு மாடுகளை மேய்ப்பது. ஆற்றுக்குப் போய் தண்ணீர் எடுத்து வருவது. பயிர்ப் பச்சைகளுக்குத் தாகம் தீர்ப்பது. பறித்த காய்கறிகளை அக்கம் பக்கத்தில் விற்பது. விலை குறைவாகக் கேட்பவர்களிடம் சண்டைக்கு நிற்பது. வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் ரோத்தான் பூசை வாங்குவது. 

தம்பி தங்கைகளுக்காக ஏச்சு பேச்சுகளை வாங்கிக் கட்டிக் கொள்வது. ஆட்டுக்குட்டி காணாமல் போனால், அதைத் தேடிக் கொண்டு காடு மேடு எல்லாம் அலைவது. கிடைக்கும் வரை எத்தனை நாள் ஆனாலும் காட்டிலேயே படுத்துத் தூங்குவது. ஒரு சாதாரண கிராமத்துப் பையன் எப்படி சுற்றித் திரிவானோ அந்த மாதிரிதான் நெல்சன் மண்டேலாவின் ஆரம்ப வாழ்க்கையும் பயணித்துப் போய் இருக்கின்றது.

சிறுபான்மை வெள்ளை இனத்தவர்                   

பொதுவாக அவரை நெல்சன் மண்டேலா என்றே அழைப்பார்கள். இவரின் பெயருக்கு முன்னால் வரும் "நெல்சன்"  என்பது, இவர் படித்த முதல் பள்ளியின் ஆசிரியரால் வைக்கப்பட்டது. சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அவரை எல்லாரும் தெரிந்து வைத்து இருந்தனர். ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்த கள்ளிக்காடாக விளங்கியது. 

சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைகளாக வாழ்வதையும், அவர்கள் கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து நொந்து போனார். சிறுபான்மை வெள்ளை இனத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்கிற உணர்வு, அப்போது சின்ன வயதிலேயே ஆழமாய்ப் பதிந்தும் போனது. 

போர்ட் ஹேர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதற்காக அவர் அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா மனம் தளரவில்லை. கல்வியைக் கைவிடவும் இல்லை. 

வேறு ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத் துறையில் பட்டம் பெற்றார். கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்டவர் மண்டேலா. லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜொகானஸ்பர்க் சென்று பகுதி நேரமாகச் சட்டக் கல்வி படித்தார். அங்கே ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

17-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என ஓர் ஐரோப்பிய பட்டாளமே தென் ஆப்பிரிக்காவிற்குப் படை எடுத்தது. தென் ஆப்பிரிக்க மண் அவர்களைச் சந்தோஷமாக வரவேற்றது. கறுப்பின மக்களுடன் அவர்கள் குசலம் விசாரித்தனர். நன்றாகக் கைகுலுக்கிக் கொண்டனர். வந்தவர்களின் எண்ணிக்கையும் பெருகியது. அதிகாரத்தைக் கைப்பற்றி கறுப்பு இனத்தவர்களைக் கொத்தடிமைகளாக நடத்த முயற்சிகளும் செய்தனர்.

விருந்தோம்பல் பேசி வந்தவர்கள்தான் வெள்ளையர்கள். அப்படி வந்தவர்கள் கடைசியில் விருந்து வைத்தவர்களின் நாட்டையும் நிலத்தையும் பிடித்துக் கொண்டனர். தென் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் எண்பது விழுக்காட்டினராக இருந்த கறுப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலம் எவ்வுளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். மலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநில அளவு.

கறுப்பர்களைப் பிரித்து வைத்து நாடகம் 

வெள்ளையர்களுக்கு என்று தனித் தனிப் பள்ளிக்கூடங்கள், தனித் தனி நூலகங்கள், தனித் தனி மருத்துவமனைகள், தனித் தனிப் பூங்காக்கள், தனித் தனிக் கட்டடங்கள். ஆக, அவர்களுக்கு என்று எல்லாவற்றையுமே தனித் தனியாக வைத்துக் கொண்டார்கள். 

வெள்ளையர்கள் இருக்கும் இடத்தில் கறுப்பர்களுக்கு இடம் கிடையாது. அங்கே தலை வைத்துப் பார்க்கவும் கூடாது. ஆனால், அடிமைகள் போல எடுபிடி வேலைகள் செய்யலாம். அதை எல்லாம் தாண்டிய ஒரு விசயம். 

வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கறுப்பு இனத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்படிப் பட்ட கொடுமைகளை எதிர்த்து எண்பது விழுக்காட்டுக் கறுப்பர்கள் போராடியிருக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். முடியும். ஆனால், வெள்ளையர்கள் புத்திசாலிகள். மொழிகளின் பெயரால் கறுப்பர்களைப் பிரித்து வைத்து நாடகம் ஆடினர். 

ஆட்சியும் அதிகாரமும் வெள்ளையர்களிடம் மொத்தமாக மாறிப் போயின. 1939-ஆம் ஆண்டில் தனது 21-ஆவது வயதில் மண்டேலா கறுப்பின இளைஞர்களை ஒன்றாகச் சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்கினார். 

”கறுப்பின மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். அவர்களின் வாக்களிக்கும் உரிமைகள் மறுக்கப் படுகின்றன. அவர்களுடைய நாட்டிலேயே அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது. கறுப்பின மக்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆவதும் தடை செய்யப் படுகிறது. 

சொந்த மண்ணிலேயே சொந்த பந்தங்கள் வேர் அறுக்கப்படுகின்றன. அவை கறுப்பின மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. அவற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என கறுப்பின மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றியும் கண்டார்.

1948-ஆம் ஆண்டு கறுப்பின மக்களுக்கு எதிராக வஞ்சகமான நடவடிக்கைகள் தலைவிரித்தாடின. மண்டேலாவின் உற்றத் தோழன் ஒலிவர் ரம்போ. இருவரும் அப்போது இருந்தே பல்கலைக்கழக நண்பர்கள். இருவரும் இணைந்து ஒரு சட்ட நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதன் வழி கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவிகளையும் செய்தார்கள்.

இனவாதமும் ஒடுக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதைக் கண்ட மண்டேலா சீற்றம் அடைந்தார்.வேறு வழி இல்லாமல் அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சி உருவானது. 

அதன் தலைமைப் பொறுப்பை மண்டேலா ஏற்றார். இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவர் தலைவராக இருந்தபோது, இனவாதக் கொள்கைகளுக்கு எதிரான அறப் போராட்டங்கள் துளிர்விட்டன. 

அறப்போர் மூலமாகப் போராட்டம்          

மண்டேலாவின் வன்முறையற்ற போராட்டங்கள் வளர்ச்சி அடைவதைக் கண்ட வெள்ளையர்கள் பயந்து போனார்கள். இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்றும் நினைத்தனர்.  1956-ஆம் ஆண்டு, அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று மண்டேலாவை அரசாங்கம் கைது செய்தது. இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் மண்டேலா மேலும் தீவிரமாகச் செயல்பட்டார். 

அதன் காரணமாக 1960-களில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1960-இல் ஆப்பிரிக்கர்களுக்கு சிறப்புக் கடவுச் சீட்டுகள் வழங்கப் படுவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்ப்வைல் எனும் நகரில் நடத்தினார். அந்தச் சம்பவத்தில் ஊர்வலத்தினர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். அதில் 69 பேர் கொல்லப்பட்டனர். 

1956-ஆம் ஆண்டு டிசம்பர் 5-இல் தேசத் துரோகக் குற்றச் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப் பட்டனர். நீண்ட நெடிய சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அனைவரும் குற்றச் சாட்டில் இருந்து விடுவிக்கப் பட்டனர்.

இதனை அடுத்து அறப்போர் மூலமாகப் போராடி உரிமைகளைப் பெற முடியாது என்பதை மண்டேலா உணர்ந்து கொண்டார். அடுத்து ஆயுத வழிமுறையை நாடினார். அதுதான் உச்சக்கட்டம். அவரைக் கைது செய்ய வெள்ளையர்கள் முடிவு செய்தனர். சரியான நேரம் பார்த்து காத்து நின்றனர்.

1961-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா பொறுப்பேற்றார். அந்த ஆயுதப் படையை உருவாக்கியதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. வெளிநாடுகளிடம் இருந்து பண, இராணுவ உதவிகளைப் பெறும் வாய்ப்பும் கிடைத்தது. கொரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்.

1961 டிசம்பர் 16-ஆம் நாள் முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப் பட்டது. அரசாங்கம் உஷாரானது. வெள்ளையர்கள் குரல்வளையைப் பிடிக்கப் போகின்றனர் என்று தெரிந்ததும் மண்டேலா தலைமறைவானார். அவரைப் பிடிக்க கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவர் மனித உரிமைகளை மீறி போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அதனையே காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தித் தள்ளியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தது. 
 
1962 ஆகஸ்ட் 5-ஆம் நாள் மாறு வேடம் அணிந்த காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட மண்டேலாவும் முக்கியத் தலைவர்களும் கைது செய்யபட்டனர். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார்கள்; அமைதியைக் கெடுத்தார்கள்; கலகத்தை உருவாக்கினார்கள் என்று அவர்கள் மீதான குற்றம் சாட்டப்பட்டது. 

அந்த வழக்கை ரிவோனியா செயல்பாடு (Process Rivonia) என்று அழைக்கிறார்கள். மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-ஆம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம்தான் 27 ஆண்டுகளாக நீடித்தன.

உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் யாரும் இருந்து இருக்க முடியாது என்று தாராளமாய்ச் சொல்லலாம். பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துப் போட்டு அரசாங்கம் கொடுமை செய்து உள்ளது. மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 

1988-ஆம் ஆண்டு அவருக்கு கடுமையான காச நோய் ஏற்பட்டது. மரணத்தின் வாசல்படிக்கே சென்றார். அதனால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள். ஆனால் தென் ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சி மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தது. மண்டேலாவின் மனைவி வின்னி மடிகி லேனா தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென் ஆப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். தென் ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக வில்லியம் கிளார்க் பதவிக்கு வந்தார். 

அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலையை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து நின்றதது. 1990 பிப்ரவரி 11-இல் விடுதலை செய்யப்பட்டார். மண்டேலா விடுதலை பெற்ற போது அவருக்கு வயது 71. இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் நேரடியாகத் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

நேரு சமாதான விருது           
             
மண்டேலாவை வரவேற்க இந்தியாவின் சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் ஒரு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான் தொண்டர்களும் அவரை மகிழ்ச்சி ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலா பாதுகாப்பாகக் கேப்டவுன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் விடுதலை உலக தலைவர்களின் வரவேற்பைப் பெற்றது. விடுதலைக்குப் பின்னர் மண்டேலா கூறியதாவது:-

இனவெறி ஆட்சியை தனிமைப் படுத்த அனைத்துலகச் சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் அந்தப் பேச்சு வார்த்தைக்குத் சரியான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக மரபில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்’ என்றார்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, அவர் சிறையில் இருக்கும் போதே இந்திய அரசு அவருக்கு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவரின் சார்பில் வின்னி புதுடில்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 

1990-இல் இந்தியாவின் ஆக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1993-இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி அனைத்துலக விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18-ஆம் தேதியை அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக ஐக்கிய நாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இவர் 1998-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனதும் அவர் செய்த முதல் காரியம்; தென் ஆப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகள் கற்றுக் கொடுக்கப் படுவதாகும். 

தன் ஆப்பிரிக்காவில் தமிழ் மொழி கற்றுத்தரப் படுகிறது என்றால் அதற்கு மூல காரணமாக இருப்பவர் சாட்சாத் மண்டேலாதான். 1999-இல் பதவியை விட்டு விலகினார். இவர் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ஆம் தேதி, பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது. அன்னாரின் வயதையும் கவனிக்க வேண்டும். 94 வயதாகிறது. வாழ்க்கையில் பெரும்பகுதியைச் சிறையில் கழித்துவிட்டார். 

ஒரு விடிவெள்ளியாய்த் தோன்றியவர். ஒரு காந்தியாய் வாழ்ந்தவர். மானுடத்தின் இலக்கணமாய் அந்திமப் புன்னகையைச் சிந்தியவர். ஆனால். அது ஓர் அஸ்தமனப் புன்னகையாக மாறிவிட்டார். எழுதிச் செல்லும் விதியின் கரங்கள் சரியாகவே எழுதிவிட்டன.