வனஜா விண்வெளி வீராங்கனை - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வனஜா விண்வெளி வீராங்கனை - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஆகஸ்ட் 2019

வனஜா விண்வெளி வீராங்கனை - 2

விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வு செய்யப் படும் ஒருவரின் மனவலிமை, உடல் வலிமை என அனைத்து வலிமைகளும் தரம் பிரித்துப் பார்க்கப் படும். அவரால் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருக்க முடியுமா. காற்று அழுத்தம் இல்லாத சூழ்நிலையில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று பலவிதமான சோதனைகளையும் செய்து பார்ப்பார்கள். 


விண்வெளியில் மிதக்கும் போது ஒருவரின் உடல்வாகு பொருத்தமாக அமையுமா; உடல் திறன் சரியாக அமையுமா எனும் பற்பல தேர்வுகளிலும் வனஜா தேர்வு பெற்றார். இங்கே இன்னும் ஒரு முக்கியமான விசயம்.

பெண்களுக்கு இயற்கையிலேயே சிற்சில உபாதைகள் இருக்கும். தெரிந்த விசயம். அப்படிப்பட்ட அந்தச் சங்கடங்களையும் கடந்து வர வேண்டும். அதைப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்தால் போல அடுக்கடுக்கான பயிற்சிகள். முதலில் மெது பயிற்சிகள். கடைசியில் கடினமான பயிற்சிகளில் போய் நிற்கும். அந்தப் பயிற்சிகள் அனைத்துமே உடல் சோர்வைக் கொடுக்கும் பயிற்சிகள். மன உளைச்சலைத் கொடுக்கும் பயிற்சிகள். இடையில் தூக்கத்திற்கு இடையூறு செய்யும் பயிற்சிகளும் அடுக்கடுக்காய் இருக்கும். 



உடல் அசதியில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது விடியல் காலை மூன்று, நான்கு மணிக்கு வந்து எழுப்புவார்கள். ஒரு மணி நேரத்திற்கு மெது ஓட்டப் பயிற்சிகள். அப்புறம் அதன் பிறகு குளிர் நீரில் நீச்சல் பயிற்சிகள். ரஷ்யா ஒரு குளிர்ப் பிரதேசம். அங்கே குளிர் எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம்.

இத்தனைச் சோதனைகள் நடக்கும் போது ஒரு மருத்துவர் குழு அருகிலேயே இருக்கும். ஒருவரால் தாக்குப் பிடிக்க முடியுமா முடியாதா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள். ஏமாற்று வேலைகள் எதுவும் அங்கே நடக்க வாய்ப்பே இல்லை. இடுப்பு வலிக்குது; நெஞ்சு வலிக்குது என்று எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது. நோ சான்ஸ்.

1997-ஆம் ஆண்டு மிஸ்டர் நைஸ் கை (Mr. Nice Guy) எனும் ஒரு சீனத் திரைப்படம். அதில் ஜேக்கி சான் கதாநாயகனாக நடித்து இருப்பார். அந்தப் படத்தில் வருவது போல ஏமாற்று டிமிக்கி வேலைகள் எதையும் செய்ய வாய்ப்புகள் இல்லை.



மலைக்காட்டு இருட்டில் பல மணி நேரம் தனிமையில் இருக்க வேண்டும். அடித்துப் போட்ட தனிமையில் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதையும் சோதித்துப் பார்ப்பார்கள்.

பயங்கரமான காட்டில் தனிமையாக இருக்கும் போது உயிரே போகும் பயம் ஏற்படும். தெரியும் தானே. இருந்தாலும் இவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் பயிற்சியாளர்களுக்குத் தெரியாமல் அவர்களைச் சுற்றிலும் கமாண்டோக்கள் மறைந்தவாறு இருப்பார்கள். பயிற்சியாளர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் உடனே உதவிக்கு வந்து விடுவார்கள்.

வனஜா ஒரு பெண் என்பதால் அவருக்குத் தனிச் சலுகை என்பது எல்லாம் இல்லை. ஓர் ஆண் என்ன பயிற்சிகள் செய்கிறாரோ அவற்றையே வனஜாவும் செய்ய வேண்டும். பொதுவாகவே விண்வெளி பயிற்சிகளிலும் சரி; சோதனைகளிலும் சரி; ஆண் பெண் பாகுபாடு இருக்காது. பாகுபாடு பார்க்க மாட்டார்கள். செய் அல்லது செத்து மடி என்பார்களே. அந்த மாதிரி தான்.



விண்கலம் பயணமாகும் இறுதி நாள் வரை வனஜா அங்கேயே இருந்து இருக்கிறார். யூரி ககாரின் விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் பாய்ச்சப் பட்டது.

இருப்பினும் வனஜாவின் உடல்நலம் காரணம் காட்டப்பட்டு அவர் தேர்வு பெறாமல் போனார். விண்வெளி மையம் எடுத்த முடிவு. அதில் நாம் கருத்து சொல்ல முடியாது.

பயிற்சிக் காலத்தில் வனஜா நன்றாகவும் சிறப்பாகவும் விளங்கினார் என்று சர்டிபிகேட் கிடைத்து இருக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்கள். அவை இரகசிய ஆவணங்கள். பொதுவில் விவரங்களை வெளியிட முடியாது.

(Dr Sheikh Muszaphar Shukor was the chosen one, with Dr Faiz Khaleed as the back-up in case Dr Sheikh cannot make it at the last moment.)

ஆகக் கடைசியாக ஷேயிக் முஸ்தாபா சுக்கோர் எனும் மருத்துவர் தேர்வு பெற்றார். எட்டு நாட்களுக்கு விண்வெளியில் தங்கி இருந்தார். 402 கி.மீ. உயரத்தில் பூமியை 20 முறை சுற்றிச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்து இருக்கிறார். 



இவரும் விண்வெளிக்குப் போய் வந்து விட்டார். பின்னர் அனைத்துலக கருத்தரங்குகளில் சொற்பொழிவுகள் நடத்தினார். தவறான முறையில் பணம் சம்பாதித்தார் என இவர் மீது புகார்கள் வந்தன. பேசியதற்கு ஊதியம் கொடுத்தார்கள் என்று டாக்டர் முஸ்தாபா சொல்கிறார். அது வேறு கதை. இப்போது வணிக மையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

வனஜாவும் சும்மா இல்லை. இவரும் பல உள்ளூர் வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொள்கிறார். மலேசிய விண்வெளி துறையில் ஒரு முன்னோடியாகவும் விளங்கி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சபா மாநிலத்தின் கோத்தா கினபாலுவில் ஒரு நிகழ்ச்சி. 110 கி.மீ. காட்டுக்குள் இருக்குள் இருக்கும் லாவாஸ் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு சொற்பொழிவு. குழுமி இருந்த ஆயிரம் மாணவிகளும் அவர் பேச்சைக் கேட்டது குறைவு. அவரைப் பற்றியே கேள்விகள் கேட்டதுதான் அதிகம்.

விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண்மணி எனும் பெருமை இவருக்கு கிடைத்து இருக்கிறது என்பது ஒரு பெரிய விசயம். 



பத்துப் பதினோராயிரம் பேரில் இந்தப் பெண் முதலாவதாக வந்து இருக்கிறாரே. அதுவரை மகிழ்ச்சி அடைவோம். மலேசியா வாழ் இளைஞர்களுக்கு இவர் ஓர் உந்து சக்தியாக விளங்கி வருகிறார். பாராட்டுவோம்.

இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் கொஞ்சம் பார்ப்போம். இவர் சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் கிள்ளான் நகரில் 1971 மார்ச் 2-ஆம் தேதி பிறந்தவர். வானத்தில் மிளிரும் விண்மீன்களைப் பார்த்துக் கொண்டே இருப்பாராம்.

பத்து வயதில் இருந்தே விண்மீன் தேடல்கள் ஆரம்பித்து விட்டன. அந்த விண்மீன்கள்தான் இவருக்கு வானவியல் துறையில் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தி இருக்கின்றன.

விண்மீன்களைப் பற்றி நிறைய நூல்களைப் படித்தார். அவருக்கு உதவியாக அவருடைய தந்தை சிவ சுப்பிரமணியம் வானவியல் நூல்களை வாங்கிக் கொடுத்து இருக்கிறார். படிக்கச் சொல்லி உற்சாகப் படுத்தி இருக்கிறார். 



தந்தையின் வேலை மாற்றம். அதன் காரணமாக கெடா, கூலிம் நகருக்குச் சென்றார். அங்கே சுல்தான் பாட்லிஷா இடைநிலைப் பள்ளியில் படித்தார். எஸ்.பி.எம். தேர்வில் ஒன்பது ‘ஏ’ க்கள் பெற்று சாதனையும் செய்தார். அறிவியல் பாடங்கள் அனைத்திலும் முதல் நிலைத் தகுதி.

மலேசிய விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்ய ஆசைப்பட்டு கடிதம் எழுதிப் போட்டார். நேர்முகத் தேர்வுக்கும் சென்றார். ஆனால் பதில் கடிதம் இன்னும் இதுவரையில் வரவில்லை. தப்பு. வந்து சேரவில்லை.

பாவம் அவர். காத்துக் காத்து கண்களும் பூத்துவிட்டன. வனஜாவுக்கும் திருமணமாகி விட்டது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் ஆகிவிட்டார். இன்னும் பதில் கிடைக்கவில்லையாம். என்ன செய்வது.

ஒருக்கால் பாட்டி ஆன பிறகு அவருடைய பேரன் பேத்திகளிடம் பதில் கடிதம் வந்து கிடைக்கலாம். சொல்ல முடியாது. எதற்கும் இன்னும் ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு வனஜா காத்து இருந்தால் நல்லது. கண்டிப்பாகப் பதில் வரும்.

பொறுத்து இருங்கள் வனஜா! பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் ‘சைன்’ வைக்க வேண்டும் இல்லையா. அதனால்தான் இவ்வளவு ‘லேட்’.



அண்மையில் படித்த ஒரு நகைச்சுவையான செய்தி. பத்து வயது பிள்ளைகளுக்கு என்று ஓர் ஓவியப் போட்டியை நடத்தினார்கள். அதில் 70 வயது பாட்டிக்கு முதல் பரிசு. என்னடா அநியாயம் என்று விசாரித்துப் பார்த்தால் கதை வேறு மாதிரியாகப் போகிறது.

பாட்டி அறுபது வருடங்களுக்கு முன்னால் அனுப்பி வைத்த ஓர் ஓவியம், அறுபது வருடங்களுக்கு பிறகு வந்து கிடைத்து இருக்கிறது. வேறுவழி இல்லாமல்  ஏற்பாட்டாளர்கள் பாட்டிக்கு முதல் பரிசைக் கொடுத்து சாதனை செய்து இருக்கிறார்களாம். இது எப்படி இருக்கு என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. எதற்கும் டி.எச்.ராகாவைக் கேட்டுப் பார்க்கிறேன்.

மலாயா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் படிக்கும் போதுகூட வனஜாவின் எண்ணங்களும் சரி; சிந்தனைகளும் சரி; விமானங்களைப் பற்றியே வலம் வந்தன. எதிர்காலத்தில் தான் ஒரு விமானியாக ஆக வேண்டும் என்று வனஜா ஆசைப் பட்டார்.

இந்தக் கட்டத்தில்தான் விண்வெளித் திட்டத்தில் மலேசியாவும் கால் பதித்தது. விண் ஆய்வுத் துறையில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மலேசியாவும் பின்பற்றி வருகிறது.

வனஜாவின் தந்தை சிவசுப்பிரமணியம் என்ன சொல்கிறார். அதையும் கேளுங்கள். என்னுடைய மகள் விண்வெளிக்குப் போகவில்லை. பரவாயில்லை. ஆனால் விண்வெளிக்குச் செல்வதற்கான எல்லா பயிற்சிகளையும் பெற்று இருக்கிறார். அதுவே பெரிய சாதனை. பெரிய விசயம். தங்களுக்கு மட்டும் அல்ல. மலேசியப் பெண்கள் அனைவருக்குமே பெருமை என்கிறார். இப்போது கூலிம் நகரில் இருக்கிறார்.

சுவீடன் நாட்டில் இருக்கும் சால்மர் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர் வனஜா. தயாரிப்புத் தொழில் துறையில் 18 ஆண்டுகால அனுபவங்கள் உள்ளன. ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த பொறியியலாளராகப் பணிபுரிந்தவர்.

இவர் மியாசாட் வான்கோள் நிலையத்தில் பொறியியலாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். மியாசாட் வான்கோள் நிலையம் மலேசியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானதாகும்.

வனஜா என்பவர் மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த ஓர் அறிவுக் கலசம். பூபாளம் இசைக்கும் ஒரு பூமகளாய்த் திகழ்கின்றார். வாழ்த்துகிறோம்!

(முற்றும்)

சான்றுகள்:

1. https://www.youtube.com/watch?v=DsuSTtYdmRc - An Interview with the Malaysian Toughest Woman, Ms Vanajah - Part 1

2. https://tamizharmedia.com/2019/03/27/video-vanajah-subramaniam-who-almost-became-malaysias-first-astronaut/

3. http://drsmshukor.tripod.com/biblio/index.blog?topic_id=1096305