மலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மே 2017

மலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம்


ஈப்போ இருதயப் பராமரிப்பு பூங்காவனத்தின் இனிய சேவைகள்
National Stroke Association of Malaysia
ஊனும் உயிரும் உனக்கு அல்ல. அந்த ஊனில் உயிராய் வாழும் அந்த இருதயமும் உனக்கு அல்ல. அந்த இருதயத்தில் வாழும் இதயமும் உனக்கு அல்ல. அப்பா அம்மா வைத்த பெயர் மட்டுமே உனக்குச் சொந்தம்.


அதே சமயத்தில் உங்களுக்கு வரும் உடல் துன்பங்களும் உங்களுக்குச் சொந்தம் அல்ல. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அந்த வகையில் வந்த நோய்களுக்குத் தீர்வு காண முடியும். அந்தத் தீர்வுகளில் இயற்கையின் சீதனங்களையும் காண முடியும்.

சொந்தத்தின் பரம்பரை நோய்க் குணங்கள் தலைமுறை தலைமுறைகளாக இறங்கி வரும் போது அங்கே ஊனும் அடங்கும். உயிரும் அடங்கும். அதற்கு முன் நீங்களும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். கேளுங்கள்.

நம் உடலில் மிக மிக முக்கியமான ஓர் உறுப்பு இருதயம். தசைகளாலும் நாளங்களாலும் பின்னிப் பிணைக்கப் பட்ட ஓர் உறுப்பு. இருதயத்தில் நான்கு அறைகள் (chambers) உள்ளன.


நம் உடலின் இரத்த ஓட்டம் அந்த நான்கு அறைகள் வழியாகச் சென்று நுரையீரலுக்குள் அடைக்கலம் ஆகின்றன. அங்கே கரியமிலக் காற்று அகற்றப்பட்டு உயிர்க் காற்று சேர்க்கப் படுகிறது. அதன் பின்னர் இரத்தம் உடல் முழுமைக்கும் செல்கின்றது.

உடலின் அனைத்துச் செல்களுக்கும் உயிர்க் காற்று வழங்கப்பட்டு கரியமிலக் காற்று அகற்றப் படுகிறது. சரி. நெஞ்சுவலி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

நெஞ்சில் வலி வந்தால் அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் நெஞ்சு கொஞ்சம் லேசாக வலித்தாலே போதும். அது மாரடைப்பாக இருக்குமோ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

சாதாரண தசை வலியில் இருந்து இதய நோய் வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது. பொதுவாகவே நெஞ்சு வலிக்கு இதய நோய் என்பது ஒரு காரணமாக இருக்காது. வேறு காரணங்களும் இருக்கின்றன.

நெஞ்சு வலிக்கு இரு காரணங்கள் மிக மிக முக்கியமானவை. முதலாவது ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. இதற்கு மார்பு நெரிப்பு என்று பெயர்.


மற்றொன்று மாரடைப்பு. இந்த இரண்டையும் சர்வ சாதாரணமாக அலட்சியப் படுத்தி விடக் கூடாது. அப்படி அலட்சியப் படுத்தினால் கடைசியில் அது நம் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.

ஆஞ்சைனா அல்லது மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலி என்பது இருதயத் தசையில் உருவாகி நெஞ்சின் மேல்பரப்பில் உணரப் படும் ஒரு வலியாகும்.

இதயத் திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் (Arteries) கொழுப்புப் படிந்து போவது இயல்பு. அந்தக் கொழுப்புகள் தமனிகளின் விட்டத்தைக் குறுகச் செய்கின்றன. அதாவது இறுக்கம் அடையச் செய்கின்றன அதனால் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

முதுமை காரணமாகவும் தமனிக் குழாய்கள் தடித்துப் போவதும் உண்டு. அப்படித் தடித்துப் போனாலும் வலி ஏற்படும். சரி.

சமயங்களில் அழுத்தமான மாரடைப்பு ஏற்பட்டு மரணம் வருவது உண்டு. மரணம் வராமல் பக்கவாதம் வருவதும் உண்டு. இதை ஸ்ட்ரோக் (stroke) என்பார்கள்.
(சான்று: VINAY KUMAR, ABUL K. ABBAS (2010). Robbins and Cotran Pathologic Basis of Disease. Saunders, an imprint of Elsevier Inc)

மாரடைப்பு வந்து அதனால் பக்கவாதம் வந்து அதைப் பராமரிக்கும் வேலை இருக்கிறதே அது ஒரு பெரிய வேலை.


மாரடைப்புக்குப் பின் பெரும்பாலானோர் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார்கள். மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையோடு மாரடைப்புக்கான சிகிச்சை முற்றுப் பெற்றது என்று நினைப்பது தவறு. இது சிகிச்சையின் தொடக்கமே.

ஒரு முறை மாரடைப்பு வந்துவிட்டால் அப்புறம் வாழ்நாள் முழுமைக்கும் ஒரு தொடர் சிகிச்சை அவசியம். அந்தத் தொடர் சிகிச்சையின் மூலம் ஓர் இயல்பான வாழ்க்கை நிலையும் கிடைக்கும். அதே சமயத்தில் மறுபடியும் ஒரு மாரடைப்பு வராமல் தவிர்க்கவும் முடியும்.

அந்த மாதிரியான தொடர் சிகிச்சைகளுக்கும் பக்கவாதப் பராமரிப்புகளுக்கும் பல புனர் அமைப்புகள் உள்ளன. மலேசியாவைப் பொருத்த வரையில் மலேசிய பக்கவாத பராமரிப்பு சங்கம் (National Stroke Association of Malaysia) தலையாய பங்கு வகிக்கிறது.


இந்தச் சங்கம் 1996ஆம் ஆண்டு ஜெனட் இயோ (Janet Yeo) என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது. தற்சமயம் ஒன்பது கிளை அமைப்புகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

ஈப்போ நிலையத்தில் கதிரவன் (Kathiravan) என்பவரும் திருமதி அசியான் (Ms. Azian) என்பவரும் இயன்முறை மருத்துவர்கள் (physiotherapist).

நிர்வாகப் பொறுப்புகளைத் திருமதி ஜெனிபர் (Mdm Jennifer) கவனித்துக் கொள்கிறார். ஈப்போ ஜாலான் பாசீர் பூத்தேயில் இந்த நிலையம் இயங்கி வருகிறது.

மாரடைப்பின் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு இந்த நிலையம் பற்பல வகைகளில் உதவிகள் செய்து வருகிறது. அண்மையில் நாசாம் ஸ்ட்ரோக் விளையாட்டுகளை (Nasam Stroke Games) மிகச் சிறப்பாகச் செய்து காட்டியது. இவர்களின் தன்னலமற்றச் சேவைகளை மனதாரப் பாராட்டுவோம்.

இந்த ஈப்போ பக்கவாத பராமரிப்புக் கழகத்தில் நரேந்திரன் என்பவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவருக்குத் துணையாக அவரின் மனவி திருமதி. சுதா அரிய பெரிய சேவைகளைச் செய்து வருகிறார்கள்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவது இயற்கை. பெரும்பாலோர் இதில் இருந்து மூன்று மாதங்களில் விடுபட்டு விடுவார்கள். அதன் பின்னர் இயல்பான வாழ்க்கை நிலைக்கு திரும்புவார்கள். மனச்சோர்வில் இருந்து விடுபட ஒவ்வொரு நாளும் சீரான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.


இவர்கள் எப்போதும் மனதைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு அந்தச் சோர்வில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கலாம். ஒரு சிலருக்குத் தாங்கள் அத்தகைய மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்பதைத் தெரிந்த கொள்வதே கடினமாக இருக்கும்.

இவர்களை இந்தப் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்து வர வேண்டும். ஒரு சீரான வாழ்க்கை நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதுவே மருத்துவ உதவியாளர் கதிரவனின் அன்பான வேண்டுகோள்.

சரியான ஆலோசனைகளைப் பெற வேண்டும். சரியான மருந்துகளைப் பெற வேண்டும். அந்த வகையில் 90 விழுக்காட்டினர் குணம் அடைகின்றனர். ஒன்று மட்டும் உண்மை. முறையாகப் பராமரிப்புச் சிகிச்சை பெறாதவர்களின் இருதயம் வெகுவாகப் பாதிக்கப் படலாம் என்பது ஆராய்ச்சிகளின் முடிவு.

தற்போது மாரடைப்பு பக்கவாதப் பராமரிப்புச் சிகிச்சை தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து உள்ளது. இது அசைக்க முடியாத  ஓர் உண்மை. எந்த அளவிற்குப் பை-பாஸ் சிகிச்சை அதாவது மாற்று வழி இணைப்பு அறுவை (bypass surgery) தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்து உள்ளதோ அந்த அளவிற்கு மருந்து மாத்திரை சிகிச்சைகளும் வளர்ந்து உள்ளன.

இருதய இரத்த நாளங்களில் ஏற்படும் அனைத்து அடைப்புகளுக்கும் பை-பாஸ் அறுவை சிகிச்சை தேவை என்பது மிகத் தவறான கருத்து. தற்போது உள்ள மருந்து மாத்திரைகளால் இரத்த நாளங்களில் அடைப்பு கூடாமல் பார்த்து கொள்ள முடியும்.

அத்துடன் இரத்த நாளங்களில் அடைப்பை குறைக்கும் அளவுக்கு  மருந்து மாத்திரைகள் வந்து உள்ளன.

அது மட்டும் அல்ல. இரத்த நாளங்களில் அடைப்பே வராமல் இருக்கவும் மருந்துகள் வந்து விட்டன. இருந்தாலும் பக்கவாதப் பராமரிப்புச் சிகிச்சை நிலையங்களுக்குச் சென்று நல்ல ஆரோக்கியமான புனர் வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்.

மலேசிய பக்கவாத பராமரிப்பு சங்கத்தின் ஈப்போ கிளையின் முகவரி: 9 – Lorong Pinji, Off Jallan Pasir Puteh, 31500 Ipoh, Perak. கைப்பேசி எண்கள்: 05 3211089; 05 3224759. மின்னஞ்சல்: nasamperak@nasam.org. இணையத்தளம்: www.nasam.org.