தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜூலை 2016

தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2

தினத்தந்தி (மலேசியா) – 19.03.2016

பெங்களூரைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள கர்நாடகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரம் அற்புதம். மிகவும் புத்திசாலித் தனமாகக் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள். 


உண்மையிலேயே பெங்களூரு நகரம் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். திருப்பதியும் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். அது தெரியுமா உங்களுக்கு...

ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. அப்போது தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகள் கட்டி இருக்கிற கோவணத்தையும் வேட்டியையும் அவிழ்த்துக் கொடு என்று கேட்டு இருந்தால்... வெட்கம் சூடு சொரணை இல்லாமல் கழற்றிக் கொடுத்தாலும் கொடுத்து இருப்பார்கள். அப்பேர்ப்பட்ட தர்மகர்த்தாக்கள்.

அந்த அரசியல்வாதிகள் எல்லோரும் மேலே இருந்த மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தானே. பந்த பாசம் கொஞ்சமாவது இருக்கத் தானே செய்யும். தப்பாக நினைக்க வேண்டாம். வாழ்ந்த வீட்டிற்காக வாழப் போகிற வீட்டை இடித்து உடைத்துப் பார்க்கலாமா. இது தான் என்னுடைய ஒன் மில்லியன் டாலர் கேள்வி.


1956-இல், இந்தியாவின் மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப் பட்டன. ஒரு மாநிலத்துடன் வேறொரு மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு இருக்க வேண்டும். அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும். அதுதான் நடுவண் அரசு முதலில் சொன்ன விதி முறை.

சரி. தமிழகத்துக்குச் சொந்தமான பெங்களூரு எப்படி கன்னடத்திற்குத் தாரை வார்க்கப் பட்டது. என்னென்ன ஏமாற்று வேலைகள் நடந்தன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

பெங்களூரு (Bangaloore) பிரச்சினை ஓசூரில் ஆரம்பிக்கிறது. ஓசூர் என்பது இப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. வடக்கே தமிழக - கன்னட எல்லையில், பெங்களூருக்கு மிக அருகில் இருக்கிறது. இந்த ஓசூரில் 1950-களில் தெலுங்கு பேசுவோர் 45 சதவிகிதம் இருந்தனர். அடுத்து, கன்னடம் பேசுவோர் 40 சதவிகிதம் இருந்தனர். தமிழ்மொழி பேசுபவர்கள் 10 சதவிகிதம் மட்டுமே இருந்தனர். எஞ்சியவர்கள் வடநாட்டுக்காரர்கள். சரிங்களா. நன்றாகக் கவனியுங்கள்.

ஓசூர் வேண்டாம் பெங்களூரு வேண்டும்

ஓசூரில் தெலுங்கு பேசும் மக்களே அதிகமாக இருந்தனர். அந்தத் தெலுங்கு பேசும் மக்கள் பல நூறு ஆண்டுகளாக ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லாமல் இருந்தனர். மறுபடியும் சொல்கிறேன். பல நூறு ஆண்டுகள். இருந்தாலும் மொழி வாரியாக நிலப் பகுதிகள் பிரிக்கப்படும் போது ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி ஆந்திரா கையெடுத்துக் கும்பிட்டது.




இதில் ஒரு சூசகமான ரகசியம் என்ன தெரியுமா. ஓசூர் என்பது ஒரு வறண்ட பூமி. நிறைய பொட்டல் காடுகள். மொழுக்கையான குன்றுகள். வழுக்கலான மலைகள். மொட்டையான தாவரங்கள். இயற்கையான முறையில் பச்சைகள் வளர்வது ரொம்பவும் கடினம். மாட்டுச் சந்தையில் பொறுக்கி எடுத்த புண்ணாக்கு மாதிரி.

அதனால் அங்கே விவசாயமும் குறைவு. விளைச்சலும் குறைவு. இதுதான் வெளியே சொல்லப்படாத காரணம். வெளியே சொல்லப்படாத ரகசியம். ஓசூர் ரகசியம். அதுதான் உண்மையிலும் உண்மை. ஒரு சின்னச் செருகல். இந்த ஓசூருக்கு மூன்று முறை போய் இருக்கிறேன். கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்குப் போகிற வழியில் இருக்கிறது.

2006ஆம் ஆண்டு. ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்திராலயா இராகவேந்திரா ஆலயத்திற்குப் போய் இருந்தேன். திரும்பி இரவு பத்து மணிக்கு ஓசூர் இரயில் நிலையத்தில் இறங்கினேன். அப்போது ஒரு பெரிய ஆச்சரியம். நம்புவீர்களோ இல்லையோ ஓசூரில் பனி கொட்டியது. இரவு நேரத்தில் ஓசூர் மிகவும் குளிராக இருக்கும் என்று பின்னர் கேள்வி பட்டேன். அப்புறம் இரவோடு இரவாக ஒரு டாக்சி பிடித்து விடியல் காலையில் கிருஷ்ணகிரி வந்து சேர்ந்தேன். சரி. நம்ப கதைக்கு வருவோம்.

ஆந்திராவோடு நிலத் தொடர்பு இல்லை என்பதால் ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா மறுத்து விட்டது. சொல்லி இருக்கிறேன். அடுத்து எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அப்படிப் பார்த்தால் கன்னடர்கள் வருகிறார்கள். 40 விழுக்காட்டு மக்கள் கன்னடர்கள். ஆக அடுத்த நிலையில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால் அதைக் கர்நாடகா மாநிலத்துடன் தானே இணைத்து இருக்க வேண்டும். அதுதானே நியாயமும்கூட. 




கர்நாடகாவும் வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்தது. தமிழகத்திற்கு மனமுவந்து கொடுக்கிறோம் என்று சொல்லி ஓசூரை விட்டுக் கொடுத்தது. ஆனால் கன்னடம் அங்கேதான் தன் சாணக்கியச் சதுரங்கக் காய்களை நல்லபடியாக நகர்த்தி இருக்கிறது. அப்போது பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தது. மறுபடியும் சொல்கிறேன். பெங்களூரு தமிழகத்திற்குச் சொந்தம். தொடர்ந்து படியுங்கள்.

பெங்களூரு கர்நாடகாவிற்குப் போன கதை

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பெங்களூரு விவகாரம் தலைதூக்கியது. அதாவது பெங்களூருவை யாருக்கு கொடுப்பது என்கிற விவகாரம். அப்போது தான் கன்னடம் தன் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது.

கன்னடம் என்ன சொன்னது தெரியுமா. நாங்கள் ஓசூரைப் கொடுத்து விட்டோம். ஓசூரில் கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெருந் தன்மையுடன் ஓசூரைத் தமிழகத்துக்குக் கொடுத்து இருக்கிறோம். அந்த மாதிரி… அதே மாதிரி பெங்களூருவில் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் பெங்களூருவைத் தமிழகம் எங்களுக்குத் தர வேண்டும் என்றது. நல்ல ஒரு கொடுக்குப் பிடி.




மறுபடியும் சொல்கிறேன். பெங்களூரில் கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்களே அதிகம். கன்னட மக்கள் அதிகம் உள்ள ஓசூரை நாங்கள் கொடுக்கும் போது தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூரை ஏன் எங்களுக்குக் கொடுக்கக் கூடாது. பிடி எங்கே விழுந்தது பார்த்தீர்களா.

உண்மையிலேயே சொன்னால் பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது. வேறுவழி இல்லாமல் பெங்களூருவைத் தமிழகம் கன்னடத்திற்குத் தானம் செய்தது. பெண்பிள்ளையைக் கட்டியவனோடு அனுப்பி வைக்கும் போகும் போது அப்பா அம்மா அழுவது இல்லையா. அந்த மாதிரிதான் தமிழர்கள் அழுது கொண்டே பெங்களூருவை வழி அனுப்பி வைத்தார்கள். இப்படித்தான் பெங்களூரும் சீரும் சிறப்புமாய்த் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்குத் தாரை வார்க்கப் பட்டது.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன

தமிழகம் அதற்குச் சொந்தமான பல நிலப் பகுதிகளை இழந்ததற்கு முக்கியக் காரணம் வேறு யாரும் இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் தான். அவர்களிடம் மண் சார்ந்த உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் போனதுதான் வேதனையிலும் வேதனை.

இப்போது அழுது புலம்பி என்ன பயன். கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக இருந்து இருந்தால் இப்போது தலைவிரித்தாடும் காவிரிப் பிரச்சினையும் வந்து இருக்காது. முல்லைப் பெரியாறு பிரச்சினையும் வந்து இருக்காது. சொல்லும் போது மனசிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

அதன் பின்னர் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப் பட்டன. அவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப் பட்டன. இதனால் தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்களும் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டன.




தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப் பட்டது. ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டன என்பது வருத்தமான செய்தி. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் செய்தனர். ஆர்ப்பாடங்களில் இறங்கினர்.

அதன் விளைவாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப் பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திராவில் ஓர் அங்கமாகவே இருந்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்

ஆந்திராவில் இப்போது தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே கல்வி வாய்ப்புகள். வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இருந்தாலும் இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள். அடுத்து இன்னும் ஒரு வேதனையான செய்தி. ஆந்திர சட்டச் சபைக்குத் தமிழர்கள் போட்டியிட முடியாது. அதே போல நடுவண் மக்களவைக்கும் போட்டியிட முடியாது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்பு வரை இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாகத் தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போது தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டதால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். இது ஓர் இந்திய வரலாற்றுத் தகவல். 




அதை இங்கே மலேசியாவில் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. ஏன் என்றால் இங்கே தமிழர், தெலுங்கர், மலையாளிகள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். அந்தக் குடும்பத்தின் கூரைகளைப் பிய்த்துப் பார்ப்பது என்பது ரொம்பவும் தவறுங்க.

தமிழக நிலப்பகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள ம.பொ.சி, மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் அரும்பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். பற்பலப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் அந்த முயற்சியினால் தான் சென்னை, திருத்தணி, செங்கோட்டை, கன்னியாகுமரி போன்ற பகுதிகள் மீட்கப்பட்டன. இல்லை என்றால் அவையும் அப்படியே பறந்து போய் இருக்கும். கதையும் வேறு மாதிரியாகத் தெரித்துப் போய் இருக்கும்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள். அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு ஏறக்குறைய 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவை மட்டும் இன்றைக்கு இருந்து இருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக மாறி இருக்கும். மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாகவும் மாறி இருக்கும்.

தமிழகம் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை இழந்தது. அதற்கு காரணமாக இருந்தவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தான். நான் இந்தக் கட்சி, நீ அந்தக் கட்சி என்று பேதம் பார்க்காமல் கைகோர்த்து அந்த இழப்புகளுக்குத் துணை போனார்கள். இது தமிழக வரலாறு சொல்லும் கக்கல் கழிசலான உண்மைகள்.

விடுதலைப் போராட்ட தியாகி சங்கர்ராவ் தேவ்

ஒரு சின்ன மீள்பார்வை. இந்தியா சுதந்திரம் பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று மூலைக்கு மூலை ஆர்ப்பாட்டக் குரல்கள். அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. சுதந்திரப் போராட்டவாதிகள் தான்.

என்ன யோசிக்கிறீர்கள். அதுதான் உண்மையுங்கூட. குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் தான் முழுமூச்சாகக் களம் இறங்கினார்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்குத் தனியாக மராட்டிய மாநிலம் வேண்டும் என்று போராட்டம் தொடங்கியது. ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி சங்கர்ராவ் தேவ் தலைமை தாங்கினார். அடுத்து குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பு வந்தது. அதன் மூலம் அதன் தலைவர் இந்துலால் யக்னிக் போராட்டங்களைத் தொடங்கினார்.

அதன் பிறகு எல்லாவற்றையும்விட பெரிய அளவில் தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அப்படி ஒரு போராட்டம் மட்டும் தலைகாட்டவே இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வுகள் தான் முக்கியக் காரணங்கள்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது சென்னை ராஜதானி எனும் பெயரில் சென்னைப் பெருநிலம் பெருமையாக விளங்கியது. அந்தக் கட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும் சென்னை நிர்வாகத்தின் கீழ் தான் இருந்தன. அதனால் சென்னை மாநிலமும் சென்னையைச் சார்ந்த தமிழ் மண்ணும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பேதம் பார்க்கவில்லை.

தமிழகத்திற்குச் சேர வேண்டிய திருவனந்தபுரம் எப்படி கேரளாவுக்குப் போய்ச் சேர்ந்தது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். (தொடரும்)