பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிங்கப்பூரில் இருந்து பரமேஸ்வரா வெளியேறினார்.

மறுபடியும் சொல்கிறேன். பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. இவர் தான் நீல உத்தமனின் கொள்ளுப் பேரனின் மகன்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் (Muar) எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (Biawak Busuk - அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் (Kota Buruk) எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. 


இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். (சான்று: The Indianized States of South-East Asia: https://books.google.com.my/books?id=iDyJBFTdiwoC&redir_esc=y)

நன்கு ஆராய்ந்து பார்த்தார். அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போகும் போது செனிங் ஊஜோங் (Sungai Ujong) எனும் இடத்தை அடைந்தார். இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. 

அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு தான் இப்போது மலாக்கா ஆறு Bertam River - former name of the Malacca River) என்று அழைக்கப் படுகின்றது.


அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம். ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் பரமேஸ்வரா ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மலாக்கா வரலாற்றுக்கு புதிய வடிவம் கொடுத்தது. அவருடன் இருந்த நாய்களில் ஒன்றை ஒரு சருகுமான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.

சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா அதிசயித்துப் போனார். அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஓர் அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. 

அதன்படி மலாக்கா எனும் ஊர் உருவானது. அந்த ஊரே இப்போதைய மலேசிய வரலாற்றில் மலாக்கா பேரரசு என்று பீடு நடை போடுகிறது. அப்படித் தான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயரும் வந்தது.

இன்னும் ஒரு வரலாற்றுப் பதிவும் உள்ளது. சருகு மானுக்கும் நாய்க்கும் நடந்த மோதலின் போது பரமேஸ்வரா ஒரு மரத்தின் மீது சாய்ந்து இருந்தார். 

அந்த மரத்தின் பெயர் மலாக்கா மரம். (மலாய்: Pokok Melaka. ஆங்கிலம்: Phyllanthus emblica). அந்த மரத்தின் பெயரையே பரமேஸ்வரா தான் உருவாக்கிய புதிய இடத்திற்கும் வைத்ததாகச் சொல்லப் படுகிறது. 
 
(சான்று: http://archive.aramcoworld.com/issue/200104/beyond.the.monsoon.htm -  Beyond the Monsoon, Written by Douglas Bullis)


இந்தக் காலக் கட்டத்தில் நிறைய சீன வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அவர்களின் வாணிக ஈடுபாடுகளும் அதிகரித்தன. பெருமிதம் அடைந்தார் பரமேஸ்வரா. அந்த வகையில் மலாக்காவில் புக்கிட் சீனா எனும் ஒரு குன்றுப் பகுதியைச் சீனர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

கடல் கடந்து மலாக்காவில் வியாபாரம் செய்ய வணிகர்கள் வந்தனர். வாணிகம் அனைத்தும் பண்ட மாற்று வியாபாரமாக இருந்தது. வணிகப் பெருக்கத்தினால் மலாக்கா குறுகிய காலத்திலேயே மிகுந்த வளம் அடைந்தது. இந்த வளர்ச்சி சயாமியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்தச் சமயத்தில் வட சுமத்திராவில் சமுத்திரா பாசாய் (Samudra Pasai) எனும் ஒரு சிற்றரசு வளர்ச்சி பெற்று இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்த ஒரு சிற்றரசு. சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவானது. அசல் பெயர் சுமத்திரபூமி (Sumatrabhumi).

மார்க்கோ போலோ எழுதிய The Travels of Marco Polo எனும் நூலில் (Harmondsworth, Middlesex; New York: Penguin Books, Penguin Classics, 1958) சுமத்திராவை Samara என்றும் Samarcha என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சமுத்திரா பாசாய் சிற்றரசின் இளவரசியைத் தான் பரமேஸ்வரா 1409-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசியின் பெயர் மாலிக் உல் சாலே (Malik ul Salih). 


திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்ததாகச் சொல்லப் படுகிறது. தன் பெயரை இஸ்கந்தார் ஷா (styled himself) என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. 

‎ஷா என்பது பாரசீகத்தில் பல்லவர்கள் பயன்படுத்திய அரசச் சொல். பாரசீக எனும் ஈரானிய அரசர்களின் பெயர்களுக்குப் பின்னால் Pahlawa எனும் சொல் வருவதைக் கவனித்து இருக்கலாம். இந்தச் சொல் பல்லவர் எனும் சொல்லில் இருந்து உருவானதாகும்.

ஆகவே பரமேஸ்வரா என்பவர் பல்லவர் அரச பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்பதை நினைவு கூறுகிறேன். இதைப் பற்றி இன்னும் ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன். 

அந்த வகையில் பரமேஸ்வரா மதம் மாறவில்லை. உலகக் கலைக் களஞ்சியங்கள் உறுதி கூறுகின்றன. (சான்று:  http://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate)

In 1409, Parameswara married Malik ul Salih, a princess of Pasai, adopted the Persian title Shah, and styled himself as Sultan Iskandar Shah although he remained a Hindu to his death. Although he did not convert to Islam, his marriage to the Muslim princess encouraged a number of his subjects to embrace Islam.

ஒன்று மட்டும் உண்மை. பரமேஸ்வரா தன் பெயரை ஷா என்று மாற்றிக் கொண்டார். உண்மை. ஆனால் வேறு மதத்திற்கு மதம் மாறவில்லை என்பது தான் உண்மை. அதற்கான சான்றுகளும்டன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)