பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1

ஏழு சுவரங்களில் சம்பூர்ண ராகம். ஆறு சுவரங்களில் சாடவ ராகம். ஐந்து சுவரங்களில் ஔடவ ராகம். நான்கு சுவரங்களில் வக்ர ராகம். அரகோண சுவரங்களில் தலையான ராகம் சம்பூர்ண ராகம். அதுவே அப்போதும் எப்போதும் ஓர் அழகிய அற்புதமான பரமேஸ்வரா ராகம். 


பரமேஸ்வரா என்பது ஒரு ராகம். மலேசிய வரலாற்றில் மறைக்க முடியாத ஓர் அபூர்வ ராகம். ஒரு காலத்தில் அது ஒரு தெய்வீக ராகம். இருந்தாலும் இப்போதைக்கு வேதனையின் விளிம்பில் விசும்பிக் கொண்டு இருக்கும் ஒரு விசும்பல் ராகம்.

சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்துப் பள்ளிப் பாட நூல்களில் இருந்து கனவுகளாய்க் கரைந்து கசிந்து போகின்ற காம்போதி ராகம்.

எந்த ஒரு மனிதனும் காணாமல் போகலாம். அவனைத் தேடிக் கண்டிப்பிடிக்கலாம். உருக்குலைந்து போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்த்து விடலாம். ஆனால் பெயரே காணாமல் போனால் எப்படிங்க. அதுதான் இங்கே நடக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. எழுதுவதற்கு வெட்கமாகவும் இருக்கிறது.

கடல் தாண்டிய கரையில் அத்திம் மேடு என்பது ஒரு பௌர்ணமிக் கோளாறு என்றால் அதுவே இங்கே ஒரு பட்டப் பகல் கொள்ளை. ஆக பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு இருண்ட இருட்டில் எருமை மாடு எப்படிங்க தெரியப் போகிறது.

கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எத்தனை நாளைக்குத் தான் படம் காட்டிக் கொண்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

சில வரலாற்றுக் கத்துக் குட்டிகள் அப்படித் தான் படம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. திரை கிழிய படம் காட்டிவிட்டுப் போகட்டும். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் என்றைக்கும் உண்மை மறையக் கூடாது. அந்த உண்மை மறைக்கப் படவும் கூடாது. அவை தான் மனத்தை நெருடும் ஆதங்க ஆர்ப்பரிப்புகள்.

உண்மையை மறைத்து எவ்வளவு காலத்திற்குத் தான் பேர் போட முடியும். சொல்லுங்கள். உலக மக்களிடம் எத்தனை காலத்திற்குத் தான் பில்டப் செய்ய முடியும். சொல்லுங்கள்.

உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெத்த அப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவனின் பெயரைப் போட்டால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? பரமேஸ்வரா எனும் பெயர் இந்த மண்ணில் நிலைக்க வேண்டும்.

பரமேஸ்வரா எனும் ஒரு மகா புருசர் தான் மலாக்காவைத் தோற்றுவித்தார் எனும் சத்தியமான உண்மை நிலைக்க வேண்டும். இப்போது வாழும் நாம் மரித்துப் போனாலும் நம்முடைய வாரிசுகள் அந்த உண்மையைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அந்த வரலாற்று உண்மை நிலைத்து நீடிக்க அவர்கள் போராட வேண்டும். (தொடரும்)