கொரோனா வைரஸ் கோவிட் 19 - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ் கோவிட் 19 - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 பிப்ரவரி 2020

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 1

தமிழ் மலர் - 16.02.2020

உலகத்தை ஆட்டிப் படைக்கும் உயிர்க்கொல்லி. மனிதத்தை மடக்கிப் போடும் ஆட்கொல்லி. நாடுகளை நடுங்க வைக்கும் தொற்றுக் கொல்லி. உங்களையும் என்னையும் உலுக்கிப் போடும் நுண்மக் கொல்லி. அதுவே கொரோனா வைரஸ் என்கிற நுண்ணுயிர்க் கொல்லி.



கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 என்பது மிக மிக நுண்ணியமான வைரஸ் கிருமி. தமிழில் வைரஸ் கிருமியைத் தீநுண்மி என்று அழைக்கலாம். அதையே நச்சுயிரி அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றுதான்.

ஒரே வார்த்தையில் சொன்னால் கொரோனா வைரஸ் ஓர் ஆட்கொல்லி தொற்று நோய்க் கிருமி. இதுவரையில் நோய்த் தடுப்பு மருந்துகள்; தடுப்பு ஊசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 



உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தடுப்பு மருந்துகள் உருவாக்குவதற்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அவசர இலக்கு.

இதுவரையிலும் பாதிக்கப் பட்டவர்கள் 64,474; இறப்புகள் 1,384. அதிகமாகப் பாதிக்கப் பட்டது சீனா. இரண்டாவதாக ஹாங்காங். மூன்றாவதாக சிங்கப்பூர். நம் மலேசியாவில் 19 பேருக்குப் பாதிப்பு.

அந்த பத்தொன்பது பேரில் ஆறு பேர்தான் மலேசியப் பிரஜைகள். இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார்கள். மலேசியாவில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 



இந்த நோய்க்கு மருந்து இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தற்காப்பு முயற்சியில் தான் நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அசட்டையாக இருந்துவிடக் கூடாது.

முதலில் அதற்கு கொரோனா வுஹான் வைரஸ் என்று பெயர் வைத்தார்கள். ஆனால் அது ஓர் இடத்தையும் ஒரு நாட்டையும் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தது.

அதனால் பற்பல பாதிப்புகள் அல்லது இனச் சமூக ஒதுக்கல்கள் ஏற்படலாம். ஆக அண்மையில் COronaVIrus Disease 2019 என்று பெயர் மாற்றம் செய்தார்கள். சுருக்கமாக COVID-19 Virus. யாரையும் பாதிக்காத பெயர். கோவிட்-19 என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.



''கொரோனா'', ''வைரஸ்'' மற்றும் ''நோய்'' ஆகிய வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புதிய பெயருடன் இணைந்து உள்ள 19 என்ற எண்; இந்த வைரஸ் பரவத் தொடங்கிய 2019 என்ற ஆண்டைக் குறிப்பதாகும்.

இந்த வைரஸ் கிருமி மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவுகின்ற கிருமி. சத்தம் யுத்தம் இல்லாமல் பத்து நாட்களுக்கு மனித உடலில் பதுங்கி இருக்கும். ஒன்னும் தெரியாத பாப்பா என்று சொல்வார்களே. அந்த மாதிரி தான். மெதுவாகத் தான் தன் சேட்டையைத் தொடங்கும்.

மிக எளிதாகப் பரவும் கொரோனா வைரஸ் சீனாவைப் புரட்டிப் போட்டு வருகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்கூட இந்த நோய்த் தொற்றில் இருந்து தப்ப முடியவில்லை.

மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்தபடியே பணியாற்றுகிறார்கள். நோய்த் தொற்றும் மரணமும் ஒருபுறம் என்றால் அது தொடர்பான அச்சம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது. 



இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீனா எடுத்த முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.

வழக்கமாக புதுவித வைரஸ் நோய் பரவினால் அதை உடனடியாகக் குணப்படுத்த முடியாது. அதை மேலும் பரவ விடாமல் தடுக்க மட்டுமே முடியும்.


கொரோனா நோய்க்கு மருந்துகள் என்பது இன்னும் முறையாக கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. எனவே புதிய நபர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுத்தால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்தக் கிருமிகள் மனித உடலில் நுழைந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் தான் தம் வேலைகளைத் தொடங்குகின்றன. அதுவரையில் அமைதியாக இருக்கும்.



கொரோனா வைரஸ்கள் முதலில் சுவாசப் பாதையைத் தாக்குவதால் எளிதில் மனிதனிர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. மூச்சு விடும் போது கிருமிகள் வெளியாகின்றன. தும்மும் போது கிருமிகள் வெளியாகின்றன. ஆக முகத்திரைகள் போடுவதால் கிருமிகள் பரவுதைக் கட்டுப் படுத்தலாம்.

கொரோனா வைரஸ்கள் மிக மிக நுண்ணியமானவை. அதனால் அவற்றின் பரவுதலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. என்னதான் நாம் முகத்திரை அணிந்து இருந்தாலும் கிருமிகள் பரவுதல் நடக்கும்.

கொரனா வைரஸ் தாக்கிய நபருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, வறட்டு இருமல் ஆகியவை ஏற்படும். இதனைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்படும். 

அடுத்தக் கட்டமாக கடுமையான உடல் வலி ஏற்படும். அடுத்து நிமோனியா வரும். அடுத்து கல்லீரல் என்கிற கிட்னி செயல் இழக்கும். இறுதியில் மரணம். இது தான் கொரோனா வைரஸ் கிருமியின் செயல்பாடுகள். 



கொரோனோ வைரஸ் கொள்ளை நோயாகப் பரவி வரும் சீனாவின் வுஹான் மாநிலத்தில் இந்த நோய்க்கு ஒரே நாளில் 150 பேர் வரை பலியாகி உள்ளனர். இதுவரை சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஆக உயர்ந்து உள்ளது.

மிக எளிதாகப் பரவும் கொரோனா வைரஸ் சீனாவைப் புரட்டிப் போட்டு வருகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்கூட இந்த நோய்த் தொற்றில் இருந்து தப்பக்க முடியவில்லை.

மருத்துவப் பணியாளர்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்த படியே பணியாற்றுகின்றனர். நோய்த் தொற்றுவதும் அதனால் மரணம் ஏற்படுவதும் ஒருபுறம் என்றால் அது தொடர்பான அச்சம் மறுபுறம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது.

இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீனா எடுத்து வரும் முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது. உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.


கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகச் சிங்கப்பூரில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அந்த வைரஸ் பரவாமல் தடுக்க அங்கே தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எந்தெந்த இடங்களுக்குச் சென்றார்கள்; எந்தக் கடைகளில் பொருள்கள் வாங்கினார்கள்; அவர்களின் அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் யார் யார் என்கிற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள்.

இந்த விசயத்தில் சீனா சுகாதார அமைச்சு தீவிர கண்காணிப்பு நிலையில் உள்ளது. அத்துடன் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூரை எடுத்துக் கொண்டால், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கத் தொடங்கி விட்டார்கள். வேதனையான செய்தி.



கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப் படுத்துவதில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை (12.02.2020) சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது.

அதை தொடர்ந்து அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கு இருந்து வெளியேற்றப் பட்டனர்.

ஓர் ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப் பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை. இந்த நிலையில் தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது.

ஏனெனில் சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று.

அங்கு 80 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.



கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் சிங்கப்பூரில் இந்த்த தொற்று எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் சொல்லப் படுகின்றன.

சீனாவுடன் சிங்கப்பூருக்கு இருக்கும் வர்த்தக உறவுகள் ஒரு காரணம். கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் சுமார் முப்பது இலட்சம் சீன மக்கள் சிங்கப்பூருக்கு வந்து போய் இருக்கிறார்கள். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை நாம் ஓரளவிற்குப் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக உலக நாடுகளை இணைக்கும் முக்கிய மையமாகச் சாங்கி விமான நிலையம் இயங்கி வருகிறது.

இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு 80 விநாடிகளுக்கும், ஒரு விமானம் புறப்படுகிறது; ஒரு விமானம் தரை இறங்குகிறது. ஒன்றரை நிமிடத்திற்குள் ஒரு விமானம்.

அந்த அளவுக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மிகவும் பரபரப்பான இடம். வெளிநாட்டு மக்களின் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதி.



இது மட்டும் அல்லாமல் தொழில் ரீதியான சந்திப்புகளுக்கும், கூட்டங்களுக்கும் சிங்கப்பூரைப் பலரும் தேர்ந்து எடுக்கிறார்கள். உலக நாடுகளைச் சேர்ந்த பலர் அடிக்கடி சிங்கப்பூருக்கு வருவதும் போவதும் வழக்கமானது.

அந்த வகையில் அப்படி நடைபெற்ற கூட்டம் ஒன்றில்தான், கொரோனா பரவுவதற்கு காரணமாக இருந்து இருக்கலாம் என்பது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி. சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் முதலிடம் வகிப்பது சிங்கப்பூர்.

கடந்த ஜனவரி மாதத்தில், சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்ட ஒரு மாநாடு நடைபெற்றது.

சீனாவைச் சேர்ந்த சிலரும் இதில் கலந்து கொண்டார்கள். இதில் 41 வயதான மலேசியரும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டம் நடைபெற்று முடிந்து ஒரு வாரம் கழித்து, அந்த மலேசியருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

அடுத்து அந்த நபர் மூலம் அவருடைய தாய் மற்றும் சகோதரிக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.



அதே கூட்டத்தில் கலந்து கொண்ட தென்கொரியாவைச் சேர்ந்த இருவருக்கும் சில நாட்களுக்குப் பின்னர் கொரோனா இருப்பது கண்டு அறியப் பட்டது.

மேலும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்று சிங்கப்பூரியர்கள்; பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது அடுத்து அடுத்து கண்டு அறியப் பட்டது.

ஆனாலும் பாருங்கள் இவர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்ற பின்னர் தான் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது.

கொரோனா வைரஸின் அறிகுறிகள் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு பின்னரே தெரியவரும். அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீனர்களுக்குத் தாங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியாமல் இருந்து இருக்கலாம்.

அதனால் தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் வெகு எளிதாகப் பரவி உள்ளது.



விமான நிலையங்களில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணிகள் தங்கள் கைகளைக் கழுவிவிட்டுச் சென்றாலே போதும். தொற்று நோய்கள் பரவுவதை ஓரளவிற்குக் குறைக்க முடியும்.

விமான நிலையங்களில் பயணிகள், தங்கள் கைகளைக் கழுவிச் செல்லும் வழக்கத்தில் பெரிய அளவில் மாற்றம் வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்.

இந்த நோய்க்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. மருத்துவ விஞ்ஞானிகள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குள் பல்லாயிரம் உயிரிழப்புகள் ஏற்படலாம் எனும் அச்சமும் நிலவுகிறது.

பாதிக்கப் பட்டவர்கள் நலம் பெற வேண்டிக் கொள்வோம். பிரார்த்தனைகள் செய்வோம்.

(தொடரும்)