29 November 2019

குவாந்தான் ஜெராம் கொள்கலன் தமிழ்ப்பள்ளி

அத்தாப்புக் குடிசையில் ஒரு தமிழ்ப்பள்ளி; ஆயாக் கொட்டகையில் ஒரு தமிழ்ப்பள்ளி; இரும்புக் கிடங்கில் ஒரு தமிழ்ப்பள்ளி; ஈச்சம் ஓலைக் குடிசையில் ஒரு தமிழ்ப்பள்ளி. 


இந்த மாதிரியான நிலையில் மலேசியாவில் நிறையவே தமிழ்ப்பள்ளிகள். அந்த வகையில் அந்தக் காலத்துக் காலனித்துவச் சீமைத் துரைகளுக்கு முதல் மரியாதை செய்வோம்.

மலேசியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகி விட்டன. நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது. இருந்தாலும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும் சுதந்திரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க...

எப்படியாவது தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தலை நிமிர்ந்து வீரவசனம் பேசிக் கொண்டுதான் வருகிறார்கள். ஊட்டி ஊட்டி வளர்க்கப் பட்டவர்களுக்கு உதறல் எடுத்துக் காய்ச்சல் வரும் அளவுக்கு தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகள் தொடர்கின்றன. ஒரு பக்கம் தமிழ்ப் பிள்ளைகளின் புதுப் புது அறிவியல் கண்டுப்பிடிப்புகள். புதுப் புதுச் சாதனைகள். இன்னொரு பக்கம் தீராத விளையாட்டுப் பிள்ளையின் கறுப்பு வெள்ளை சப்பாத்து ஆராய்ச்சிகள். பாவம் அந்தக் கல்விமான்.

சாதனைகள் செய்து வரும் தமிழ்ப்பள்ளிச் செல்லங்களுக்கும்; தமிழாசிரியர்ச் செல்வங்களுக்கும் அன்பு வாழ்த்துகள்.

ஓர் அதிர்ச்சியான தகவல். ஓர் இரும்புக் கொள்கலனில் ஒரு தமிழ்ப்பள்ளி 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இது எத்தனைப் பேருக்குத் தெரியும். மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் இதுவும் ஒரு பெரிய சாதனை. பகாங் மாநிலத்தின் தலைநகரம் குவாந்தான். அந்த நகரில் இருந்து ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தொலைவில் ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் பெயர் ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி (SJKT Ladang Jeram).

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொள்கலன் எனும்  ‘கொண்டெய்னர்’க்குள் (Container) இயங்கி வருகிறது. இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். அது மலேசியத் தமிழர்களின் தலையெழுத்து. தொடர்ந்து படியுங்கள்.

இந்த மாதிரி  ‘கொண்டெய்னர்’களைப் பெரும்பாலும் கட்டடங்கள் கட்டும் கட்டுமானப் பகுதிகளில் பார்த்து இருக்கலாம். தற்காலிக அலுவலகங்களாகச் செயல்படும். வேலை முடிந்ததும் கழற்றி எடுத்துக் கொண்டு போய் கசாப்புக் கடைகளில் கடாசி விட்டுப் போய் விடுவார்கள்.

ஆனால் இந்த மாதிரி ஒரு ‘கொண்டெய்னர்’ கொள்கலனில் ஒரு தமிழ்ப்பள்ளி கடந்த 22 ஆண்டுகள் இயங்கி வந்து இருக்கிறது என்றால் அதிர்ச்சியான விசயம் தானே. அதுவே மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கரிசல் காட்டுச் சுவடு தானே.19521-ஆம் ஆண்டில் இந்த ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. Jeram Estate Sdn Bhd என்கிற நிறுவனம் கட்டிக் கொடுத்தது.  தகரக் கூரைகள் வேய்ந்த சாதாரணப் பலகைப் பள்ளி. அவ்வளவுதான்.

வாழையடி வாழையாக வந்த மலேசியத் தமிழ்க் கல்வியின் பழைய ஒரு பரிமாணங்களில் ஒன்று. பெரிசாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ள எதுவும் இல்லை.

(The original wooden structure of the school, built by Jeram Estate Sdn Bhd in 1952, was torn down when the estate was sold to Pasdec for a residential project in the mid 1990s.)

1997-ஆம் ஆண்டு. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தப் பள்ளிக் கட்டடம் பழுது அடைந்து போனது. சீர் செய்ய முடியாத நிலை. புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்கிற நிலை. அதனால் கொள்கலனுக்குள் தற்காலிகமான வகுப்புகள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல.கொள்கலனில் முதலாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரை வகுப்பு அறைகள். ஒவ்வொரு கொள்கலனிலும் ஒரு வகுப்பு. மூன்று கொள்கலன்களின் நீளம் 40 மீட்டர். அகலம் 30 மீட்டர்.

1990-களில் ஜெரம் தோட்டம் பாஸ்டெக் (Pasdec) எனும் வீடமைப்பு  நிறுவனத்திடம் விற்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த பள்ளிக்கூடம் உடைக்கப்பட்டது. அதில் இருந்து மாணவர்கள் கொள்கலன் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

அந்த நிறுவனம் பயன்படுத்திய கொள்கலன் அலுவலகத்தில் 4-ஆம் வகுப்பில் இருந்து 6-ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு அறைகள். மொத்தம் 49 மாணவர்கள்.  12 ஆசிரியர்கள். இதுதான் உண்மை.

1998-ஆம் ஆண்டில் இருந்து பல தடவைகள் புதிய பள்ளி கட்ட வேண்டும் என்பதற்காக பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் நடயாய் நடந்து அவர்களின் முட்டிக் கால்கள் தேய்ந்து போனதுதான் மிச்சம். பள்ளி வாரியத்தின் தலைவர் டத்தோ நடேசன்; பெற்றோர் ஆசிரியர்ச் சங்கத் தலைவர் கே. ஜனார்த்தனம். இவர்களின் தலைமையில் கட்டிட முயற்சிகள் நல்ல முறையில் நடந்து வருகின்றன. இவர்களும் இவர்களின் குழுவினரும் விடாமல் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.வாழ்த்துகள்.

ம.இ.கா.வும் தன் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. தங்களால் இயன்றதைச் செய்து இருக்கிறார்கள்.

புதிய கட்டடம் கட்டுவதற்கான பனிப்போர் நடந்து கொண்டு இருந்த போது கல்வித் துணையமைச்சராகக் கமலநாதன் இருந்தார் என்பதை நினைவில் கொள்வோம். அவரும் முடிந்த வரையில் காய்களை நகர்த்தி இருக்கிறார். எப்படித் தான் நகர்த்தினாலும் மேலிடத்தில் நிறையவே இழுபறிகள். பழைய குருடி கதவைத் திறடி கதைதான். இழுபறி நிலை தொடர்ந்தது.

மண்ணின் மைந்தத்தின் தலையாய மேலிடங்கள் கண்டு கொள்வதில் பிணக்கங்களில் சுணக்கங்கள். சக்களத்தி வீட்டுப் பிள்ளை சாக்கடையில் விழுந்தால் என்ன. சடக்கு ரோட்டில் புரண்டால் என்ன.

கொள்கலன் பள்ளியில் வேலிப் பாதுகாப்பு மட்டும் இல்லை. மற்றபடி மின்சாரம், நீர், இணைய வசதிகள் உள்ளன. பாதுகாப்பு காவலர்கள் இருவர் உள்ளனர்.

புதிய பள்ளிக்கூடத்தைக் கட்டுவதற்கு ’தெண்டர்’ (Tender) எடுத்த குத்தகையாளருக்கும் பிரச்சினை. அவருக்கும் ஒரு சட்டச் சிக்கல். சமயங்களில் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார். பள்ளிக்கூடம் கட்ட முடியாத இழுச்சான் பறிச்சான் நிலை.

இப்போது இயங்கிவரும் கொள்கலன் பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் புதிய கட்டடத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. 2003-ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. மொத்தச் செலவுத் தொகை 14.8 மில்லியன் ரிங்கிட். இடத்தின் நில உரிமையிலும் பிரச்சினை.

2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதமே கட்டி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். நில உரிமை இழுபறிகள் தொடர்ந்தன. பின்னர் 2018-இல் முடிய வேண்டியது. அப்படி இப்படி என்று கட்டிடப் பணிகள் இன்னும் தொடர்கின்றன. இதை எழுதும் போது புதிய தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
29.11.2019

26 November 2019

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம்

தமிழ்ப் பள்ளிகள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று அடையாளம். ஆகவே தமிழ்ப் பள்ளிகளில் கல்வியைத் தொடங்குவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே தமிழ் உணர்வோடு தமிழர்ப் பண்பினை விதைக்க முடியும். 


மலேசியத் தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். மலேசியத் தமிழ் பள்ளிகளின் உரிமைகளை காப்பாற்றினால் தான் மலேசியாவில் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். மலேசியத் தமிழரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளைக் காப்பாற்ற முடியும்.

தமிழ்க் கல்வியைக் காப்போம். தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம். தமிழர் என்கிற அடையாளத்தைக் காப்போம். தமிழராகத் தலைநிமிர்ந்து நடப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
26.11.2019


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Parimala Muniyandy: இனிய காலை வணக்கம்.தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழுக்காக குரல் கொடுப்பது அவசியமாகும்.


Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள்... கண்டிப்பாகக் குரல் கொடுக்க வேண்டும்... அது நம் கடமை...


Guna Shan:
கண்டிப்பாக காக்க வேண்டும் நண்பரே..இங்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டால் இது சாத்தியமாகும்

Muthukrishnan Ipoh:தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் முயற்சி செய்தார்கள்... செய்கிறார்கள்...


Vanaja Ponnan: குரல் கொடுத்தால் மட்டும் போதாது.வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும்


Muthukrishnan Ipoh:தமிழ் மாணவர்களைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனும் வற்புறுத்தல் தொடர வேண்டும்...


Sri Kaali Karuppar Ubaasagar: தமிழ் மொழி செம்மொழி மட்டுமல்ல..அது தன் மானம் காக்கும் மொழி


Muthukrishnan Ipoh: உண்மைங்க... தமிழர்களின் தன்மானம் காக்கும் மொழி


Inbavally Renganathan: முதலில் நம்மவர்கள் யாரும் நம் பிள்ளைகளை மற்ற இன பள்ளிகளில் சேர்ப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.


குனோங் தகான் அனுபவங்கள் - 2

தமிழ் மலர் - 26.11.2019

குனோங் தகான் மலைக்குப் போக வேண்டும் என்றால் முதலில் ஜெராண்டுட் நகருக்குச் செல்ல வேண்டும். அங்கு இருந்து 16 கி.மீ. தொலைவில் கோலா தெம்பிலிங் படகுத் துறை. இந்த இடத்தில் இருந்து தான் கோலா தகான் மலை அடிவாரத்திற்குப் படகுகள் செல்கின்றன. மூன்று மணி நேரப் பயணம். ஒரு வழி படகுப் பயணத்திற்குக் கட்டணம் 55 ரிங்கிட். சாலை வழியாகவும் செல்லலாம். 68 கி.மீ.

குனோங் தகான் மலைக்கு அடிவாரத்தில் கோலா தகான் எனும் ஒரு சிறு நகரம். ஒரு காலத்தில் மீன்பிடி கிராமம். இப்போது வணிகத் தளமாக மாறி, அப்படியே பணம் பார்க்கும் வணிகத் தளமாகவும் மாறி விட்டது. வேதனை.

இங்கு தாமான் நெகாரா வனவிலங்கு காட்டுத் துறை அலுவலகம் உள்ளது. (Taman Negara Pahang, Kuala Tahan). குனோங் தகான் மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லும் பொருட்களை எல்லாம் ஒரு பட்டியல் போட வேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னல் அந்தப் பட்டியலைத் தாமான் நெகாரா வனவிலங்கு காட்டுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். உங்களுடைய முதுகுச்சுமைப் பையில் (haversack) உள்ள எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்து அவர்களிடம் காட்ட வேண்டும். அனுமதி இல்லாமல்  எந்த ஒரு பொருளையும் மேலே மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல முடியாது.

ஒரு தீப்பெட்டி என்றாலும் அதற்கும் கணக்கு காட்ட வேண்டும். கத்தி, கோடாரி எதையும் கொண்டு போக முடியாது. ஆனாலும் ஒரு பத்து பேர் குழுவிற்கு இரண்டு பாராங் கத்திகளை அனுமதிப்பார்கள்.

ஆனால் அனுமதியின் பேரில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம். நாங்கள் போகும் போது ஒருவரிடம் ஒரு துப்பாக்கியும் 48 ரவைகளும் இருந்தன. உயிருக்கு ஆபத்து வரும் போது மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இன்னும் இருக்கிறது.

அதற்கும் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். தவிர மலைக்கு எடுத்துச் செல்லும் எல்லாவற்றுக்குமே கணக்கு காட்ட வேண்டும். கைக்குட்டையில் இருந்து உள்ளாடைகள் வரை எல்லாமே அந்தக் கணக்கில் வருகின்றன.பிலாஸ்டிக் பைகளை எடுத்துச் சென்றால் எத்தனைப் பைகள் என்பதையும் எழுதி வைத்துக் கொள்வார்கள். திரும்பி இறங்கி வரும் போது காலியான அந்தப் பிலாஸ்டிக் பைகளை அவர்களிடம் காட்ட வேண்டும். ஒரு பை குறைந்தது என்றாலும் அபராதம் கட்ட வேண்டி வரும்.

குனோங் தகான் மலைப் பகுதியில் பிலாஸ்டிக் பொருட்களைப் பார்ப்பது அரிது. அப்படி கண்டிசனாக இருந்தும் மேலே சில இடங்களில் குப்பைகளைப் பார்க்கலாம். ரொம்பவும் இல்லை. ஒன்று இரண்டு பிலாஸ்டிக் பைகள். சமயங்களில் ஒரு சில பிலாஸ்டிக் பாட்டில்கள்.

இருந்தாலும் சிலர் திருட்டுத் தனமாகப் பொருட்களை எடுத்தும் செல்வார்கள். அந்த மாதிரி தவறுகளைக் கண்டுபிடித்தார்கள் என்றால் அவ்வளவுதான். கறுப்புப் பட்டியல் தயார். அப்புறம் பல வருடங்களுக்கு அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க முடியாது. தாமான் நெகாரா காட்டுத் துறை அதிகாரிகள் மலை ஏறுபவர்களுக்கு அவர்களே வழிகாட்டிகளை நியமிப்பிப்பார்கள். அந்த வழிகாட்டிகளுக்கு மலை ஏறுபவர்கள் தான் ஊதியம் வழங்க வேண்டும். பொதுவாக ஒரு வழிகாட்டிக்கு 1200 ரிங்கிட்டில் இருந்து 1500 ரிங்கிட் வரை ஊதியம். அதாவது 10 நாட்கள் சம்பளம்.

எல்லாம் முடிந்த பிறகு மலை ஏறுவதற்கான ஓர் அனுமதிக் கடிதம் வழங்குவார்கள்.

தாமான் நெகாராவில் இருந்து 13 கி.மீ. தொலைவில் முதல் நிறுத்தம். அந்த இடத்தின் பெயர் மெலாந்தாய் (Melantai). அங்கே தான் முதல் நாள் இரவு தங்க வேண்டும். அந்த இடத்தை அடைவதற்கு முன்னால் ஐந்தாறு குன்றுகளை ஏறி இறங்க வேண்டும்.

மெலாந்தாய் நிறுத்தத்தை அடையும் போது லேசாக இருட்டிவிடும். நீங்கள் எவ்வளவு தான் வேகமாக நடந்தாலும், அடர்ந்த காட்டுப் பாதையில், ஒரு நாளைக்கு 15 கி.மீ. தூரத்திற்கு மேல் நடக்க முடியாது. பல ஆண்டுகள் காடு மேடுகளில் அலைந்து திரிந்த எங்களால்கூட 15 கிலோ மீட்டருக்கும் மேல் பேர் போட முடியாது. அதுவும் தாழ்வான பகுதிகளில் தான் 15 கி.மீ. தூரம். மற்றபடி மலை உச்சிக்குப் போகப் போக ஒரு நாளைக்கு 10 கி.மீட்டருக்கும் மேல் தாண்ட முடியாது. பத்து மணி நேரத்தில் பத்து கிலோ மீட்டர் நடந்தாலே பெரிய விசயம். அடர்ந்த காட்டில் பெரிய சாதனை.

இன்னும் ஒரு விசயம். மலையில் ஏறும் போது கால் வலிக்காது. இறக்கத்தில் இறங்கும் போது தான் கால் வலிக்கும். அதுவும் ஐந்தாவது ஆறாவது நாட்களில் சொல்லவே வேண்டாம். உயிர் போகிற மாதிரி வலிக்கும்.

இறக்கத்தில் கால் முட்டிகள் தொடர்ந்தால் போல இடித்துக் கொள்வதால் அந்த வலி ஏற்படும். ஐந்து நிமிடம் வேகமாக இறங்கினால் ஒரு நிமிடம் நிற்க வேண்டும்.

தொடர்ந்து நிற்காமல் இறங்கலாம். முடியாது என்று சொல்லவில்லை. ஆனால் கால் வீணாகிப் போய்விடும். அப்புறம் ஹெலிகாப்டருக்குப் போன் போட்டு வர்ச் சொல்ல வேண்டி இருக்கும்.ஆபத்து அவசர நேரத்தில், உயிருக்கு ஆபத்தான நேரத்தில் வனவிலாகா அதிகாரிகளுக்குப் போன் செய்யலாம். மீட்புப் பணிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். நிலைமை மிக மோசமாக இருந்தால் ஹெலிகாப்டரை அனுப்பி வைப்பார்கள்.

மெலாந்தாய் நிறுத்தத்தில் ஓர் ஆறு. அதன் பெயர் மெலாந்தாய் ஆறு. இந்த ஆற்று ஓரத்தில் தான் பெரும்பாலும் கூடாரம் போடுவார்கள். இந்த இடத்தில் தான் காட்டு யானைகளின் சாணங்களை அதிகமாகப் பார்க்கலாம். புதிய சாணமாக இருந்தால் துணிந்து கூடாரம் போடலாம்.

ஒன்பது நாட்கள் பயணத்தில் எங்கு எங்கு நீர் வசதி இருக்கிறதோ அங்கே கூடாரம் போடுவது வழக்கம். அங்கேயே சமைத்துக் கொள்வது. மறுநாளுக்கான மதிய உணவையும் விடியல் காலையில் சமைத்துக் கொள்வார்கள்.

கூடாரம் போடும் இடத்தில் மர வேர்கள், செடி கொடிகள் இல்லாமல் இருப்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இராத்திரி முழுவதும் அந்த வேர்கள் உடலை உறுத்திக் கொண்டே இருக்கும். கிடைக்கிற கொஞ்ச நேரத் தூக்கத்தையும் கெடுத்து விடும்.கட்டில், மெத்தை, தலையணை சகலமும் சொப்பனக் கனவுகளான பிறகு சற்று உருப்படியான தூக்கம் தேவை.

அன்றிரவு மழை வருமா என்று அதையும் யூகித்து அறிந்து கொள்ள வேண்டும். மழை வருவது உறுதியானால், கூடாரத்தைச் சுற்றிலும் மழைநீர் வழிந்தோட சின்ன வடிகால்களை வெட்ட வேண்டும்.

நாங்கள் போன போது அந்த இரவு ஓர் அசம்பாவிதம். கூடாரத்திற்கு அப்பால் ஓர் அரை கி.மீ. தொலைவில் ஒரு குன்று. அந்தக் குன்றில் இருந்து பயங்கரமான பிளிறல் சத்தம். மறுபடியும் சத்தம். இந்த முறை அந்தச் சத்தம் எங்களை நோக்கி வருவது போல இருந்தது.

பொதுவாகக் காட்டு யானைகள் வந்தால் ஒரு கூட்டமாக வரும். அவற்றுக்கு மனித வாடை அரை கி.மீ. தொலைவிலேயே தெரிந்துவிடும். ஆகவே எதற்கும் தயார் நிலையில் மரத்தில் ஏறி கயிறுகளைக் கட்டிவிட வேண்டிய நிலை.

ஓர் ஆள் கட்டி அணைக்கும் அளவிற்கு பெரிய மரம். தேக்கு மரத்தைச் சேர்ந்த மரம். சாதாரணமாக அந்த மரத்தை யானைகள் முட்டி மோதித் தள்ளிவிட முடியாது. ஏறுவதற்கும் சற்று சிரமம்தான். வேறு என்ன செய்ய முடியும். உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் இதை எல்லாம் பார்க்க முடியுமா. மல்லுக்கட்டிக் கயிற்றைப் பிடித்து மேலே ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் மரத்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்தார்கள். எங்கள் அதிர்ஷ்டம். யானைகள் நாங்கள் இருந்த இடத்திற்கு வரவில்லை.

ஒரு பெரிய கற்பாறைக்கு அடியில் கூடாரம் போட்டு இருந்தோம். கற்பாறை என்றால் சாதாரண கற்பாறை அல்ல. ஐந்து மாடி உயரத்திற்கும் மேல் உயரமான கற்பாறை.

யானைகள் அந்தக் கற்பாறையின் மேலே இருந்து கீழே இறங்க முடியாமல் பாதையை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்குச் சென்று விட்டன. கீழே இறங்கி வந்து இருந்தால் நல்லா தான் இருக்கும். துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எல்லோரும் மரத்தில் ஏற வேண்டி வந்து இருக்கும். 


கொர்பு மலையில் - 2004


தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது. முதல் நாளே நல்ல சகுனம் இல்லை. அன்று இரவு யாருக்கும் சரியாகத் தூக்கம் வரவில்லை. மலை ஏறும் போது இந்த மாதிரியான சம்பவங்கள் நிறையவே நடக்கும். எல்லாவற்றையும் சமாளித்துப் பேர் போட வேண்டி இருக்கும்.

மலை ஏறுபவர்கள் சில சமயங்களில் தங்களின் கூடுதலான உணவுப் பொருட்களைப் பிலாஸ்டிக் பையில் கட்டி மரக் கிளைகளில் தொங்கவிட்டுப் போவார்கள்.

அதில் குறிப்பு எழுதி வைத்து இருப்பார்கள். பொருட்களை விட்டுச் செல்லும் குழுவின் பெயர், தேதி; மறுபடியும் திரும்பி வந்து மீட்டுக் கொள்ளும் நாள் போன்ற விவரங்கள் இருக்கும்.

அதனால் மற்ற மலையேறிகள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டார்கள். முடிந்தால் தங்கள் பொருட்களையும் கூடுதலாக வைத்து விட்டுப் போவார்கள். இது காடுகளில் மனிதர்களின் எழுதப் படாத நியதி.

போகும் பாதையில் காட்டு டுரியான் மரங்களைப் பார்க்கலாம். பழங்கள் கீழே கொட்டிக் கிடக்கும். அபூர்வமாக மரத்தின் அடி வரையிலும் காய்த்து இருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாம். ஒரு முறை பார்த்து இருக்கிறேன். படம் பிடிக்க முடியவில்லை. காமிரா மழையில் நனைந்து விட்டது.

காட்டு டுரியான் பழங்கள், சீத்தா பழங்களைப் போல குண்டு குண்டாக இருக்கும். இவற்றுக்குப் போதை தரும் தன்மை உண்டு. இரண்டு மூன்று சுளைகளைச் சாப்பிட்டால் விஸ்கி, பிராண்டி குடித்தது மாதிரி, போதை தலைக்கு ஏறி விடும்.

யானைகள் அப்படி அல்ல. எல்லாச் சுளைகளையும் அப்படியே ஒரேடியாக உறிஞ்சிச் சப்பிக் கொட்டைகளைத் துப்பி விடுமாம். ஓராங் அஸ்லி வழிகாட்டி சொல்லி இருக்கிறார்.சமயங்களில் கொட்டையோடு விழுங்கி விடுமாம். யானைகள் எங்கே எல்லாம் சாணம் போடுகின்றனவோ அங்கே எல்லாம் இந்தக் கொட்டைகள் முளைத்து பெரிய மரங்களாகி விடுகின்றன. அதனால் காடுகளில் நிறைய இடங்களில் காட்டு டுரியான் மரங்களைப் பார்க்க முடிகின்றது.

அடுத்து வருவது கோலா பூத்தே எனும் இரண்டாவது நிறுத்தம். இங்கே தான் தெமிலியான் (temelian), லம்பாம் (lampam) மீன்களை அதிகமாகப் பார்க்க முடியும்.

மலை உச்சியில் இருந்து கிளந்தான் பாதையில் இறங்கி வரும் போது ரேலாவ் எனும் ஓர் இடம் இருக்கிறது. அங்கே கெலா (kelah) எனும் தங்க நிறத்திலான மீன்களைப் பார்க்கலாம்.

ஓர் ஆச்சரியமான விசயம். மெலாந்தாய் ஆற்றில் கால்களை வைத்தால் தெமிலியான் மீன்கள் வேகமாக நீந்தி வந்து சின்னதாய்க் கடித்து விட்டுப் போகும். உடல் கூசும். அவை ராஜ தந்திரமான, சாணக்கியமான மீன்கள். எப்படி என்பதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

25 November 2019

குனோங் தகான் அனுபவங்கள் - 1

தமிழ் மலர் - 25.11.2019

இயற்கை அன்னையின் அருட்கொடையில் மலேசியா ஓர் அழகிய அவதாரம். அங்கே இறைந்து கிடக்கும் அலை அலையான மழைக் காடுகள். ஆனந்தமாய்ச் சஞ்சரிக்கும் மலைக் காட்டுப் பனி மேகங்கள்.

பச்சைப் பசும் வெளியில் பெயர்ந்து போகும் அடைமழைத் தூரல்கள். அந்தப் போர்வையில் அவதானித்துச் சிலிர்க்கும் உச்சி மலைச் சிகரங்கள். அவை அனைத்திலும் உச்சம் பார்க்கும் ஓர் இமயம். அதுதான் குனோங் தகான்.

தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலை. 7,175 அடி உயரம். தகான் மலை என்று தமிழில் செல்லமாய் அழைக்கிறோம். இந்த மலையில் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பல மலைகளை ஏறிய அனுபவம். அதைப் பற்றித் தான் இன்றைய பகிர்வு. இது சுயபுராணம் அல்ல. கல்விசார் தகவல். பலருக்கும் பயன் உள்ளதாய் இருக்கும்.

தீபகற்ப மலேசியாவில் ஆயிரம் ஆயிரம் மலைகள் காவியங்கள் படைக்கின்றன. அவற்றில் ஆக உயர்ந்த மலை தான் இந்தக் குனோங் தகான். பெயரைக் கேட்டதுமே கொஞ்சம் பயமும் வருகிறது. கொஞ்சம் பக்தியும் வருகிறது.

மலேசியர்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்ற இந்த மலை, ஏறுபவர்களுக்குப் பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் கொடுக்கும்.  இமயமலையில் ஏறிச் சாதனை செய்த மோகனதாஸ்; மகேந்திரன் இருவரும் முதலில் இந்த மலையில் ஏறித் தான் அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றார்கள். அதன் பின்னர் பேராக் தஞ்சோங் ரம்புத்தான் பகுதியில் இருக்கும் கொர்பு மலையில் தீவிரப் பயிற்சிகள் எடுத்தார்கள்.

குனோங் தகான் மலையின் உச்சியை அடைவதற்கு வேறு ஐந்து பெரிய பெரிய மலைகளில் ஏறி இறங்க வேண்டும். அது மட்டும் அல்ல. இருபது முப்பது குட்டி குட்டி மலைகளையும் ஏறி இறங்க வேண்டி வரும். கணக்குத் தெரியவில்லை.

குட்டி மலைகள் என்றால் குட்டிக் குன்றுகள் என்று நினைத்துவிட வேண்டாம். அவை எல்லாம்  2000 - 3000 அடிகளுக்கும் மேல் உயரமானவை. நிறைய அனுபவங்கள். உயிர் போய் உயிர் வந்த அனுபவங்கள் எல்லாம் உள்ளன. முடிந்த வரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

தகான் மலையை, குனோங் தகான் மலை என்றுதான் பலரும் அழைக்கிறார்கள். ஆக நாமும் அப்படியே அழைப்போமே.

குனோங் தகான் மலையின் அடிவாரத்தில் பாடாங் என்கிற ஓர் இடம். பாலைவனம் போன்று பச்சைப் பசேல் என்று பாசிகள் நிறைந்த ஓர் அழகிய அற்புதமான இடம் இருக்கிறது. காஷ்மீர் தோற்றது போங்கள்.

விதம் விதமான பச்சைத் தாவரங்கள். விநோதமான பூக்கள். முன்பின் பார்த்து இருக்க முடியாத தாவரங்கள். பச்சைப் பாசிகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நிறைந்து வழியும்.

வெள்ளைப் பனி அப்படியே உரசிக் கொண்டு போகும். மேகத்தைக் கையில் பிடிக்கலாம். நான் பிடித்துப் பார்த்து இருக்கிறேன். சும்மா சொல்லவில்லை. உண்மை. ஈரப் பசையாக இருக்கும்.

இந்த இடத்தில் ஒரு விமானத்தின் சிதைந்த பாகங்களைப் பார்க்கலாம். இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ஒரு சின்ன விமானம். மலை உச்சிக்குப் போகிறவர்கள் இந்த இடத்தைக் கடந்து தான் போக வேண்டும்.

குனோங் தகான் மலை பகாங், திரங்கானு, கிளந்தான் மூன்று மாநிலங்களின் எல்லையில் நடுநாயக மைந்தனாகத் துறவறம் பூண்டு நிற்கிறது. இந்த மலையில் ஏறி இறங்க குறைந்தது ஒன்பது நாட்கள் பிடிக்கும்.

அதே சமயத்தில் 110 கி.மீ. தூரம் ஏறி இறங்க வேண்டும். மறுபடியும் சொல்கிறேன். 110 கிலோ மீட்டர்கள்.

போகப் போக உயரம் உயர்ந்து கூடிக் கொண்டே போகும். சும்மா சொல்லக் கூடாது. மூச்சு வாங்கும். தொண்டை அடைக்கும். தலை கிறுகிறுக்கும். சமயங்களில் உடல் நடுங்க ஆரம்பிக்கும். குளிரினால் அல்ல. உடல் பலம் குறையக் குறைய உடல் நடுங்கத் தொடங்கி விடும். என் அனுபவங்கள்.

மலை ஏறுவது என்பது துணிச்சல் கலந்த பொழுது போக்கு. ஆனால் உயரமான மலைகளில் ஏறுவது என்றால் ரொம்பவும் துணிச்சல் வேண்டும்.

மலை ஏறுவதற்கு உடல் வலிமையும் தேவை. மனவலிமையும் தேவை. உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். இதய நோய், நீரிழிவு நோய், மற்றும் சற்றுக் கடுமையான நோய் உள்ளவர்கள் இந்த மாதிரியான விசப் பரீட்சையைத் தவிர்ப்பது நல்லது.

அப்படிப் பட்டவர்கள் ஆகக் கீழே அடிவாரத்தில் சுற்றி வரலாம். மேலே ஏறுவதை மட்டும் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும். ஒரு நேரம் போல இருக்காது.

மலை ஏறுபவர்களுக்கு ஒரு சின்ன அறிவுரை. ஆபத்து அவசர நேரத்தில் உயிரே போகும் நிலை ஏற்பட்டாலும்கூட மன வலிமையை மட்டும் இழந்துவிடக் கூடாது. இழக்கவே கூடாது.

உங்கள் முன்னால் ஒரு புலி வந்தால்கூட பயப்படக் கூடாது. சாகப் போகிறோம் என்று தெரிந்த பின்னர் ஓடி ஒளியலாமா. சொல்லுங்கள். அந்த மாதிரியான நிலை ஏற்படலாம். ஆனால் தைரியம் இருக்க வேண்டும்.

என்னுடைய காட்டு அனுபவத்தில் இரண்டு முறை புலிகளை நேருக்கு நேர் காட்டில் சந்தித்து இருக்கிறேன். தனியாக அல்ல. நண்பர்கள் கூட்டமாக இருக்கும் போது தான். தனியாக இருந்து இருந்தால் அம்புட்டுத்தான். அந்தப் புலிகளுக்குத் அன்றைக்குத் திருப்பதி லட்டு கிடைத்த மாதிரி.

யானைகள் இரு தடவைகள். கரடிகளை மூன்று முறை பார்த்து இருக்கிறேன். காட்டுப் பன்றிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பல தடவைகள். மூன்று முறை இராட்சச மலைப் பாம்புகளைக் கடந்து போய் இருக்கிறோம். இந்த அனுபவங்கலைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம். ஒரு செருகல்.

மலைகள் ஏறுவதற்கு முதன்முதலில் குனோங் லேடாங் மலையில் தான் பயிற்சிகள் எடுத்தேன்.

மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டத்தில் இருந்து குனோங் லேடாங் மலை 45 கி.மீ. தொலைவு. நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் இதே இந்த காடிங் தோட்டத்தில் தான்.

அதன் பின்னர் ஜாசின் தமிழ்ப்பள்ளியில் பணி. சாரணர் இயக்கத்தின் ஆசிரியர். பள்ளி விடுமுறை வந்தால் மாணவர்களை அழைத்துக் கொண்டு குனோங் லேடாங் மலைக்குப் போய் விடுவேன்.

அதன் பின்னர் தொடர்ந்து தொடர்ச்சியாகப் பல மலைகள் ஏறிய அனுபவம்.

தித்திவாங்சா மலைத்தொடரில் பிரிஞ்சாங் மலை (பகாங்), குனோங் தகான் மலை, திரிங்காப் மலை (பகாங், கேமரன் மலை), தம்பின் மலை (நெ.செ.), ஜெமிந்தா மலை (ஜொகூர்), சிகாமட் மலை (ஜொகூர்), யோங் பெலார் மலை (பேராக் - கிளந்தான்), காயோங் மலை (Gayong - பேராக்), யோங் யாப் மலை (பேராக் - கிளந்தான்), கெடோங் மலை (Gedung - பகாங்), ராஜா மலை (பேராக் - பகாங்), தாங்கா 15 அடுக்கு மலை (Tangga 15 - பகாங்). கெடாவில் குனோங் ஜெராய் மலை.

பிரேசர் மலை (சிலாங்கூர்), மெக்சுவல் மலை (பேராக்), கொர்பு மலை (பேராக்),  உலு காலி மலை (சிலாங்கூர்),  பெலுமுட் மலை (ஜொகூர்), புரோகா மலை (சிலாங்கூர்), லம்பாக் மலை (ஜொகூர்). இவை அனைத்தும் 5000 - 10,000 அடி உயரம். இன்னும் சில மலைகள் மேலே உள்ள பட்டியலில் இல்லை. பெயர்கள் மறதி.

2006-ஆம் ஆண்டில் குனோங் தகான் மலையில் முதன் முதலாக கால் வைத்த போது பெரும் சிலிர்ப்புகள். பயமாக இருந்தது. ஏற முடியுமா என்கிற பயம் தான்.

இவற்றில் மிகவும் சிரமப் பட்டது இரு மலைகள். முதலாவது குனோங் தகான் மலை; இரண்டாவது குனோங் ஜெராய் மலை. அவற்றுள் குனோங் தகான் மலையில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தான் ‘தேன் சிந்துதே வானம்’ எனும் நாவலை எழுதினேன். குனோங் லேடாங் மலையில் 8 முறை ஏறிய அனுபவம்.

குனோங் தகான் மலை, தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலை. 7,175 அடி உயரம். ஏறுவதற்கு 5 நாட்கள். இறங்குவதற்கு 4 நாட்கள். ஆக மொத்தம் 9 நாட்கள் பிடிக்கும். மிக மிக வேதனையான அனுபவங்கள்.

குனோங் தகான் மலைக்கு பகாங், கோலா தகான் வழியாக ஏறினோம். திரும்பவும் அதே பாதையில் இறங்க முடியவில்லை. நிலச்சரிவு என்று எங்களுக்கு அலைபேசி வழியாகச் செய்தி வந்தது.

அதனால் கிளந்தான் குவா மூசாங் காட்டு வழியாக இறங்க வேண்டிய நிலை. ரொம்பவும் சிரமப் பட்டுப் போனோம்.

கால் முட்டிகள் நகர்ந்து உயிர் போகிற வலி. ரொம்பவும் இடுப்பு வலி. உடம்பு பூராவும் வலிக்கும். பற்றாக் குறைக்கு முதுகுப் பையில் 15 - 20 கிலோ சுமை. உடம்பு பூராவும் சிராய்ப்புக் காயங்கள்.

இதில் அட்டைகளின் தொல்லைகள். கறுப்பு சிகப்பு மஞ்சள் பச்சை என கலர் கலரான அட்டைகள். இரத்தம் குடித்து ஆள்காட்டி விரல் அளவுக்கு தடித்துப் போய் இருக்கும்.

அவற்றைப் பிடுங்க முடியாது. பிடுங்கினால் இரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும். உப்பு போட்டு அகற்றலாம். அல்லது சிறுநீர். மற்ற எதற்கும் அவை அசையா. சுனைப்புக் கத்தியால் வழித்து எடுக்கலாம்.

ஆனால் அட்டைகளின் பற்கள் நம்முடைய தோலில் அறுபட்டு விடும். பின்னர் சில நாட்களில் அந்த இடத்தில் சலம் வைத்து விடும். ஆகவே அவற்றிற்கு ராஜ மரியாதை கொடுத்து அகற்ற வேண்டும்.

ஏறும் போது நின்று அட்டைகளை அகற்ற முடியாது. ஏன் என்றால் பொழுது சாய்வதற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட வேண்டும். அதனால் கடித்தால் கடிக்கட்டும் என்று கண்டு கொள்ள மாட்டோம்.

அப்படியே இரத்தத்தை உறிஞ்ச விட்டு மலையில் ஏறிக் கொண்டே இருப்போம். அப்புறம் அந்த அட்டைகள் போதுமான இரத்தம் குடித்து முடிந்ததும் அவையே தானாக கீழே விழுந்து விடும். இது எல்லாம் காட்டு அனுபவங்களில் சர்வ சாதாரணம்.

நடுவழியில் முகாம் போட்டால் சமயங்களில் காட்டு யானைகள் மிதித்துக் கொன்று விடலாம். ஆகவே இரவு நேரத்தில் பாதுகாப்பான இடத்தில் கூடாரம் போட வேண்டும். யானைகள் புதிதாகச் சாணம் போட்டு இருந்தால் அந்த இடத்தில் கூடாரம் அமைக்கலாம். இப்படி நிறைய அனுபவப் பூர்வமான விசயங்கள்.

எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் எச்சரிக்கையாக வைக்க வேண்டும். ஒரு சின்ன தவறு. அவ்வளவுதான். அதல பாதாளத்தில் உடல் நொறுங்கிப் போகும். சமயங்களில் யானைகள் ஏறிச் சென்ற பாதையிலேயே நாங்களும் ஏறிச் செல்வோம்.

தொலைவில் காட்டு யானைகள் பிளிறும் சத்தம் கேட்கும். இதில் புலிகளின் பயம் வேறு. எந்த நேரத்திலும் தாக்கலாம். அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

மலை அடிவாரத்தில் மலைப்பாம்புகள், காட்டுப் பன்றிகளின் தொல்லைகள். மிகவும் கவனமாகக் கூடாரங்களை அமைக்க வேண்டும். சமயங்களில் காட்டு வெள்ளம். ஆற்றைக் கடக்க முடியாது. வெள்ளம் வடியும் வரையில் காத்து இருக்க வேண்டும்.

குனோங் தகான் மலை ஏறும் போது குறைந்த பட்சம் முப்பது முறைகளாவது ஆற்றைக் கடக்க வேண்டும். பெரும்பாலும் கழுத்து அளவு நீர்.

உச்சியில் நீர் கிடைப்பது சிரமம். மழை பெய்தால் அந்த நீரைப் பிடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை என்றால் மலை உச்சியின் பஞ்சு பாசிகளைப் பிழிந்து நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தவிர சமயங்களில் தொடர்ச்சியாக அடை மழை. முழுக்க முழுக்க நனைந்து கொண்டே ஏற வேண்டும். நின்று ஓய்வு எடுக்க எல்லாம் முடியாது. இதில் பயங்கரமான கடும் காட்டுக் குளிர்.

மலேசியாவில் பல உயரமான மலைகளை ஏறிய அனுபவம் நிறையவே உள்ளது. இப்போது முடியவில்லை. வயதாகி விட்டது என்று சொல்ல முடியாது. உடல் வலிமை இடம் கொடுக்க வில்லை. மனவலிமை இருந்தாலும் மலை ஏறுவதற்கு உடல் வலிமை முக்கியம். நாளைய கட்டுரையில் காட்டு யானைகளின் கதை வருகிறது.

(தொடரும்)

24 November 2019

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - சோதனைகளில் சாதனைகள்

தமிழ் மலர் - 24.11.2019

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளை மூடி விடுங்கள் என்று ஒரு பக்கத்தில் மேடை முழக்கம். மூடி விட முடியுமா என்று மறு பக்கத்தில் வீர முழக்கம். அந்தப் பக்கம் சோதனைகள். இந்தப் பக்கம் சாதனைகள். அந்தப் பக்கம் இனவாதம். இந்தப் பக்கம் மொழி வாதம்.  ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை இறைவன் திறந்து விடுவார் என்பது பொன்மொழி. இனம் சமயம் மொழி தாண்டிய முது மொழி. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரையில் அந்த மொழி மிகவும் சரியாகவே அமைந்து போகின்றது.

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக இறைவன் இன்னொரு கதவைத் திறந்து விட்டு இருக்கலாம் என்று சிலர் சொல்லலாம். அதுவே உண்மை என்று மற்றவர்களும் சொல்லலாம்.

இருந்தாலும் முதலில் வருவது மாணவர்களின் விடா முயற்சி. அதில் அவர்களின் கடும் உழைப்பு. சவாலே சமாளி என்று ஒவ்வொரு சவாலையும் கனவில் சந்தித்து நனவில் சாதிக்கின்ற திறன்படுகள். சத்தியமாகச் சொல்கிறேன். சாதித்து விட்டார்கள். சந்தோஷப் படுவோம்.அதற்கு அடுத்து வருவது ஆசிரியப் பெருமக்களின் அர்ப்பணிப்பு ஈடுபாடுகள். அதில் அவர்களின் கடமை உணர்வுகள். அதையும் தாண்டிய நிலையில் அவர்களின் சமுதாயப் பற்று கலந்த இனப் பற்று.

அதற்கு மேலும், அவர்களின் மொழிப் பற்று. ஆக இப்படி அத்தனைப் பற்றுகளும் தமிழாசிரியர்களின் கற்பித்தல் வாழ்வியலில் கலந்து பயணித்து இருக்கின்றன. அதனால் தான் மாணவர்கள் அப்படி ஒரு சாதனையைப் படைத்து இருக்கிறார்கள். தமிழ் மாணவர்கள் தஞ்சைப் பெரிய கோயில் என்றால் அதைக் கட்டியவர்கள் தமிழ் ஆசிரியர்கள் எனும் இராஜ ராஜ சோழனின் வாரிசுகள்.


சுவர் இல்லாமல் சீனப் பெருஞ்சுவர் பெயர் பெற்று இருக்க முடியாது. உளி இல்லாமல் தாஜ்மகால் உலகப் புகழ் பெற்று இருக்க முடியாது.

இப்போது உள்ள தமிழாசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளைப் புகழாரம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். காலத்தின் கடப்பாடு. இப்போது புகழாமல் வேறு எப்போது புகழ்வதாம். சொல்லுங்கள்.

வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தால் போதும் என்பது அந்தக் காலம். அது மாறிப் போய் விட்டது. இப்போது உள்ள தமிழாசிரியர்கள் ஊதியச் சன்மானத்தைப் பெரிதாகப் பார்க்காமல் ஊழியச் சன்மார்க்கத்தைத் தான் பெரிதாகப் பார்க்கிறார்கள். அது இந்தக் காலத்து தமிழாசிரியர்களின் இன மனப்பாங்கு.

இன்னும் ஒரு விசயம். அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர்களிடம் இனப் பற்றும் மொழிப் பற்றும் மேலோங்கி நிற்கிறது. இதை மலேசிய இந்தியச் சமுதாயம் நன்றாகவே உணர்ந்து வருகிறது. ஒரு செருகல்.
ஈப்போ தமிழார்வலர் பி.கே.குமார் அவர்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறேன். இவர் மலேசியாவில் பிரபலமான தமிழார்வலர். சமூக ஆர்வலர். கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகளுடன் தொடர்பில் இருப்பவர். தொய்வு இல்லாமால் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருபவர். நாடளாவிய நிலையில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசி வருகின்றவர்.

அவர் சொல்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம், சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் மாறி இருக்கிறது. மாறி விட்டது.

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்; மிகத் திறமையான தலைமைத்துவம் மிக்க தலைமையாசிரியர்கள்; தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள்; சமூக ஆர்வலர்கள்; அரசு சார்பற்ற இயக்கங்கள்; முன்னாள் மாணவர் சங்கங்கள்; தமிழ்ப்பள்ளி வாரிய அமைப்புகள்; இந்தத் தமிழ் நெஞ்சங்களின் வற்றாத ஆதரவுக் கரங்கள் தமிழ்ப்பள்ளிகளை நோக்கி திசை திரும்பி உள்ளன.தமிழ் ஊடகங்களும் அசராமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், தங்களால் இயன்ற பணிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ரோபாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டது அல்ல. அது போல இந்தச் சாதனைகளும் ஒரே நாளில் நடைபெற்றவை அல்ல.

தமிழ்ப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களின் காய்களை நகர்த்தி வந்தன. இப்போது ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி உள்ளன. இந்தச் சாதனையைப் படைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

இந்தச் சாதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வேண்டும். அதிகரிக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

தமிழ்ப் பள்ளிகளைப் பொறுத்த வரையில் யு.பி.எஸ்.ஆர். தேர்வில் ஓரிரு வெற்றிகளைப் பெறுவது முக்கியம் அல்ல. சதவிகித வெற்றியே முக்கியம். அதுவே மலேசியத் தமிழ் நெஞ்சங்கள் வேண்டி விரும்பும் உண்மையான எதிர்பார்ப்பு. அந்த வகையில் இந்த 2019-ஆம் ஆண்டின் வெற்றி மகத்தான வெற்றி. போற்றப்பட வேண்டிய வெற்றி. பாராட்டப்பட வேண்டிய ஒரு வெற்றி.

இந்த வெற்றியின் மூலமாகத் தமிழ்க் கல்விக்கு மேலும் உரம் சேர்க்கப்பட வேண்டும். இடைநிலைப் பள்ளிகளில் அனைத்துத் தமிழ் மாணவர்களும் தமிழ்ப் பாடத்தைக் கற்க வேண்டும். இந்தக் கற்றலைப் பள்ளி நேரத்திலேயே ஆவணப் படுத்த வேண்டும்.

தமிழ் மாணவர்கள் படிவம் ஒன்றில் இருந்து தொடர்ந்து தமிழ் கற்க வேண்டும். அப்படியே எஸ்.பி.எம்., பல்கலைக்கழகம் வரையில் தமிழ்ப் பாடங்களைப் பயில வேண்டும். தேர்வு பெற வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.பி.கே.குமார் அவர்களுக்கு நன்றி. மலேசியத் தமிழர்களை வணிக விரும்பிகளாக உருமாற்றம் காண வேண்டும் என்று கனவு காணும் பி.கே.குமாரின் கனவுகள் நனவாக வேண்டும்.

பொதுவாகவே மலேசியத் தமிழாசிரியர்களிடம் இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு புதிய கலாசாரம் தோன்றி வருகிறது.

தமிழ்ப் பள்ளிப் பிள்ளைகளைத் தங்கள் பிள்ளைகளாக நினைத்து அந்தப் பிள்ளைகளை அரவணைத்து, ஆதரித்து அன்பு காட்டிக் கண்டித்துப் போதிக்கின்ற ஒரு புதுக் கலாசாரம்... புதுப் பொலிவு பெறுகிறது. இதைப் பெற்றோர்களும் அறிவார்கள். பிள்ளைகளும் அறிவார்கள். தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றிகள். சிரம் தாழ்த்துகிறோம்.

தமிழ் மாணவர்கள்; தமிழ் ஆசிரியர்கள். இந்த இரு சாராரின் தலையாயப் பங்குகள் தான், யு.பி.எஸ்.ஆர். தகுதியில் முதலிடம் வகிக்க உதவி செய்து உள்ளன.

தமிழாசிரியர்களை இப்படி உச்சி முகர்ந்ததற்காகச் சிலர் பொறாமைப் படலாம். அந்தப் பாவனையில் வேறு மாதிரி எதையாவது சொல்லி வசை பாடிவிட்டுப் போகலாம். கவலை இல்லை. உண்மையைத் தான் எழுதி இருக்கிறேன். அடுத்து வருபவை பெற்றோர்களின் உற்சாகத் தூண்டுதல்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் விழிப்புணர்வுப் பார்வைகள். பொது மக்களின் ஆதரவுக் கரங்கள். ஆக இத்தனையும் சேர்ந்து தான் இந்த ஆண்டு மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்படிப்பட்ட ஒரு சாதனையைச் செய்வதற்கு வழிவகுத்து உள்ளன.

கதவைத் திற காற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் கதவைத் திறக்க வேண்டாம். காற்றைத் தேடி நாங்கள் போகிறோம் என்று நம் தமிழ் மாணவர்கள் சாதனை படைத்து இருக்கிறார்கள். உண்மையிலேயே நெஞ்சம் கனக்கிறது.

ஒரே வார்த்தையில் சொன்னால் 2019-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவுகள் ஓர் உச்சக் கட்டத்தைத் தொட்டு இருக்கின்றன. அண்மைய காலங்களில் இதுதான் ஆக உச்சம். 78.51 விழுக்காட்டு தேர்ச்சிப் பதிவு. மலாய்ப் பள்ளிகள் 69.77 விழுக்காடு. சீனப் பள்ளிகள் 66.16 விழுக்காடு.

அதாவது தேசிய (மலாய்) பள்ளிகள், மற்றும் சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் அதிகமான அளவில் சிறப்புத் தேர்ச்சி. இந்தத் தேர்ச்சி முடிவு தமிழ்ப் பள்ளிகளுக்குப் பெருமை. மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை. உலகத் தமிழர்களுக்கும் பெருமை.ஆக இந்தத் தேர்ச்சி நிலை என்பது தமிழ்ப் பள்ளி மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற நம்பிக்கை உணர்வை மலேசிய மக்களிடையே தோற்றுவித்து உள்ளது.

இன்னொரு பக்கம் பாருங்கள். இந்த நாட்டில் தமிழ்ப் பள்ளிகளே இல்லாமல் செய்வதற்கு என்ன என்னவோ திருகுதாளங்கள். என்ன என்னவோ தில்லாலங்கடிங்கள். என்ன என்னவோ தெருக்கூத்துகள். என்ன என்னவோ செப்படி வித்தைகள்.

என்ன என்று விளக்கம் கேட்கலாம். சுயநலத்து ஜால்ராக்களின் இனவாத மேள தாள வாத்தியங்கள் என்றுதான் பதில் வரும். அண்மைய காலத்து அமேசான் களிமந்தான் காட்டுப் புகைச்சல்களுக்குச் சரியான போட்டி. ஓர் எடுத்துக்காட்டு.

பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம். அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

அதன் பின்னர் பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) கட்சியின் தலைவர் இப்ராகிம் அலியின் கூக்குரல்.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற மேடை முழக்கம்.

 


இடை இடையே இப்படிப்பட்ட ஒடிசி கதகளி நடனங்கள். எப்படியாவது ஆடிவிட்டுப் போங்கள். நாங்கள் பாட்டிற்கு நாங்கள் படித்து நாங்கள் சாதனை செய்கிறோம் என்று நம் மாணவர்களும் களம் இறங்கி விட்டார்கள். சாதனையும் படைத்து வருகிறார்கள்.

மேலும் ஒரு குண்டக்க மண்டக்க செய்தி. யு.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதிய தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மொழிப் பள்ளிகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவு. அதனால் தான் விகிதாசாரம் கூடி நிற்கிறது. இதில் என்ன பெரிய பிரேக் டான்ஸ் என்று ஓர் எதிர்வினைச் செய்தி.

வயிற்றில் சுமந்த வலி அம்மாவுக்குத் தெரியும். தோளில் சுமந்த வலி அப்பாவுக்குத் தெரியும். பக்கத்து வீட்டு பாப்பாத்திக்குத் தெரியுமா. அல்லது பசார் மலாம் பக்கிரிக்குத் தெரியுமா. மீசையில் மண் ஒட்டினாலும் குற்றம். ஒட்டா விட்டாலும் குற்றம். அப்படிச் சொல்கிறவர்களிடம் நாம் மாற்றுக் கருத்துகள் சொல்ல முடியாது. அவர்களைத் தூக்கிப் போட்டுவிட்டு நாம் பாட்டிற்குப் போய்க் கொண்டே இருப்போம்.இருந்தாலும் மலேசியத் தமிழர்களாகிய நாம் இந்த விநாடி வரையில் சலிக்காமல் சளைக்காமல் நம் தமிழ் மொழி உரிமைகளுகாகத் தொடர்ந்து போராடுகிறோம். போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு முறையான அங்கீகாரம் உள்ளது. அந்த அங்கீகார உரிமையை நாளிதழ்கள் வழியாகவும்; ஊடகங்கள் வழியாகவும் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம். உலக அரங்கில் அந்த உரிமைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

மலேசிய வாழ் அனைத்து இந்திய மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்போதைக்கு உங்களின் பங்கு ஒன்றே ஒன்று தான். படிப்பது மட்டுமே. அதை மட்டும் சரியாகச் செய்யுங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ... எப்பேர்ப்பட்ட துன்பங்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். உதவி செய்ய பலர் இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.

மலேசியாவின் மூன்று தலையாய இனங்கள். அவற்றில் அரசியல் செல்வாக்கு ஒரு புறம்; பொருளாதாரச் செல்வாக்கு இன்னொரு புறம்.

அந்த வகையில் எதிர்காலத்தில் நாம் பற்பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போது கல்வியின் வலிமையைக் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மலேசிய இந்தியர்களுக்கு அரசியல் வலிமையும் இல்லை. பொருளாதார வலிமையும் இல்லை. ஒரே ஒரு வலிமை தான் இருக்கிறது. அதுதான் கல்வி எனும் வலிமை. அதுவே மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்கால வலிமைக் கேடயம்.

அன்புச் செல்லங்களே… சாதனைகள் படைத்த என் இனிய தமிழ்ச் செல்வங்களே சபாஷ். மீண்டும் ஒரு சபாஷ்!

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
24.11.2019