ருத்ர மாதேவி - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ருத்ர மாதேவி - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூலை 2019

ருத்ர மாதேவி - 1

உலக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். எல்லா விசயங்களிலும் ஆண்களே பிரதானமாகப் பிரகாசிப்பார்கள். பிதாமகன்களாக ஜொலிப்பார்கள். பெண்களின் வலிமைகளும் சரி; சிறப்புகளும் சரி; இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கும். பெண்களின் திறமைகள் ஓரங்கட்டப்பட்டு இருக்கும். 



அவை ஆணாதிக்கத்தின் எதார்த்தமான வெளிப்பாடுகள். காலா காலமாக உரம் போட்டு வளர்த்த பெண் அடிமைத் தனத்தின் பிரதிபலிப்புகள்.

இப்படியும் சொல்லலாம். பெண்களை அடக்கியே வைத்து இருக்க வேண்டும் என்கிற ஆண்மைத்துவ அதிகாரப் பாவனையாகவும் இருக்கலாம்.




இந்தப் பக்கம் இந்திய வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மணி மணியான பெண்கள். அனைவரும் முத்து முத்தான ஜீவன்கள். அவர்களில் சிலர் அசாத்தியமான துணிச்சல் பெற்று வைரம் பாய்ந்த நவரத்தினக் கொலுசுகள். மன்னிக்கவும். வீரக் கொலுசுகள்.

ராணி மங்கம்மாள் (மதுரை)

ராணி சம்யுக்தா (உத்தரப் பிரதேசம்)

ராணி பத்மாவதி (சித்தோர்கார்)

வேலு நாச்சியார் (சிவகங்கை)

கித்தூர் ராணி சென்னம்மா (கர்நாடகம்)

மகாராணி காயத்திரி தேவி (ஜெய்ப்பூர்)

ஜான்சி ராணி (உத்தரப் பிரதேசம்)

துர்க்காவதி (வட இந்தியா)

மகாராணி ஜிஜாபாய் (மராட்டியம்)

உன்னியார்ச்சா (மலபார், கேரளா)

பெல்லாவதி மல்லம்மா (ஆந்திர பிரதேசம்)

ராஸ்யா சுல்தானா (மைசூர்)

அப்பாக்கா ராணி (மங்களூர்)

தாரா பாய் (மராட்டியம்)

சரோஜினி நாயுடு (ஆந்திர பிரதேசம்)

சிபில் கார்த்திகேசு (மலேசியா)

ஜானகி ஆதி நாகப்பன் (மலேசியா)

ராசம்மா பூபாலன் (மலேசியா)



தமிழ் மலர் - 20.07.2019

இவர்கள் அனைவரும் பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்த புண்ணியத் திலகங்கள். இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியினரைத் தான் சேர்த்து இருக்கிறேன். வெளிநாட்டு வீர மங்கைகளுக்கு நீண்ட ஒரு பட்டியல் உள்ளது.

இந்த இந்திய வம்சாவளியினர் பட்டியலில் ஒருவரின் பெயரைப் பலரும் மறந்து விடுகிறார்கள். அவர் தான் ராணி ருத்ரம்மாதேவி.

பலரும் கேள்விப்படாத பெயராக இருக்கலாம். கறுப்பு தாஜ் மகால் கட்டுரைத் தொடரைத் தயாரிக்கும் போது ராணி ருத்ரம்மாதேவிவியின் வரலாற்றைப் படித்தேன். மெய்சிலிர்த்துப் போனேன். 




800 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு வீரப் பெண்மணி இந்திய மண்ணில் போர் வாள் ஏந்திப் போராடி இருக்கிறாரே; போர் முனையில் உயிர் கொடுத்துச் சரிந்தும் போய் இருக்கிறாரே. வியந்து போனேன். அவரின் வரலாறு உண்மையிலேயே என் நெஞ்சத்தைக் கனக்கச் செய்தது.

அவருடைய பெயர் இலைமறைக் காயாக மறைந்து நிற்கிறதே என்று கலங்கியும் போனேன். அவரைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ள வேண்டும். உலகப் பெண்களுக்கு அவரின் வரலாறு ஓர் உந்து சக்தியாக அமைய வேண்டும்.

அவரைப் பற்றி 2015-ஆம் ஆண்டில் ஒரு திரைப்படம் தயாரித்து இருக்கிறார்கள். ருத்திரம்மா தேவியின் வரலாறு திரைப் படமாக வரப் போகின்றது என்று தெரிய வந்ததும் தான்; யார் இந்த ருத்ரம்மா தேவி என்று பலரும் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். 




அதுவரை அந்தப் பெயர் அட்ரஸ் இல்லாமல் அமேசான் காட்டில் அமைதி கொண்டு நிர்மலமாய் இருந்து இருக்கிறது.

அரிய பெரிய தியாகச் செம்மல்களைப் பற்றியும்; இந்திய விடுதலைச் சீலர்களைப் பற்றியும் வெளியே சொன்ன பிறகுதான் பலரும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள்.

இப்படிப் பட்டவர்களின் தியாகச் செயல்கள் இந்திய வரலாற்றில் நிறையவே உள்ளன. ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவது இல்லை. வேதனையான விசயம்.

ருத்திரம்மாதேவி (Rani Rudrama Devi) என்பவர் கி.பி. 1259-ஆம் ஆண்டு முதல் 1295-ஆம் ஆண்டு வரை தக்காண பீடபூமியில் (Deccan Plataeu) வாரங்கல் நிலப் பகுதியை ஆட்சி செய்த காக்கத்திய அரசியார். அழகிய வீரப் பெண்மணி. துணிச்சல் மிக்க பொன்மணி.




தென்னிந்திய வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. பண்டைய வரலாறு.

2. இடைக்கால வரலாறு.

3. நவீன வரலாறு.

இதில் இடைக்கால வரலாற்றில் ஜொலித்தவர் தான் இந்த ருத்திரம்மா தேவி.

காக்கத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் (Kakatiya dynasty). காக்கத்திய நாட்டை ஆட்சி செய்த மன்னர்களுள் மிக மிக முக்கியமானவர். ஒரே சமயத்தில் மூன்று படையெடுப்புகளை எதிர்கொண்ட அசாத்தியமான வீரப் பெண்மணி. தெலுங்கானாவில் இவருக்காகப் பல கோயில்களைக் கட்டி கும்பிடுகிறார்கள்.

முன்பு காலத்தில் வாரங்கல் என்பது ஆந்திர பிரதேசத்தில் பெரிய ஒரு நிலப்பகுதி. அதன் தலைநகரம் ஓருகல்லு. காக்கத்திய நாட்டு மக்களைக் காக்கத்தியர்கள் என்று அழைத்தார்கள். 




இப்போதைய தெலுங்கானாவில் வாரங்கல் என்பது ஒரு மாவட்டம். அந்த மாவட்டத்தின் தலைநகரமும் வாரங்கல் தான். இந்த நகரம் இப்போது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்து உள்ளது.

காக்கத்தியர்கள் தெலுங்கு அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி 1083-ஆம் ஆண்டு முதல் 1323-ஆம் ஆண்டு வரை காக்கத்திய நாட்டை ஆட்சி செய்தவர்கள். அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காக்கத்தியர்கள் தெலுங்கானாவை ஆட்சி செய்தவர்கள்.

இன்றைய ஆந்திரப் பிரதேசம் என்று அழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் காக்கத்தியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களின் தலைநகரம் ஓருகல்லு.

இப்போது அந்த ஓருகல்லு நகரம் வாரங்கல் என்று அழைக்கப் படுகிறது. வாரங்கல் என்பது இப்போதைக்கு புகழ்பெற்ற ஒரு வரலாற்றுத் தடம். அதையும் நாம் மறந்து விடக் கூடாது.



இந்த வாரங்கல்லுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. வாரங்கல்லை உருவாக்கியவர்கள் காக்கத்தியர்கள். அந்த வகையில் பார்த்தால் காக்கத்திய சாம்ராஜ்யத்தையும் காக்கத்திய அரச வம்சாவளியையும் உருவாக்கியவர் பெத்தா ராஜா (Beta Raja I). சாம்ராஜ்யம் என்பது வடச் சொல். இருந்தாலும் பயன்படுத்துவதில் தப்பு இல்லையே.

அப்பாவை பப்பி என்றும் அம்மாவை மம்மி என்று அழைக்கின்றவர்கள் இருக்கும் வரையில் பேரரசு என்பதை சாம்ராஜ்யம் என்று அழைப்பதில் தப்பு இல்லை என்பது என் கருத்து.

காக்கத்திய அரச வம்சாவளியை உருவாக்கிய பெத்தா ராஜாவுக்குப் பின்னர் நிறைய தெலுங்கு காக்கத்திய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

புரோலா ராஜா, இரண்டாம் பெத்தா ராஜா; இரண்டாம் புரோலா ராஜா, ருத்திரதேவா, மகா தேவா, கண்பதி தேவா, பிரதாபாருத்தரா. இந்த வரிசையில் வந்தவர் தான் ருத்திரம்மாதேவி.




காகத்தியர்கள் தொடக்கத்தில் சமண மதத்தைப் பின்பற்றினார்கள். காலப் போக்கில் இந்து மதத்தின் ஓர் அங்கமான சைவ சமயத்திற்கு மாறினார்கள்.

காக்கத்தியர்கள் வம்சத்தில் முக்கியமானவர் ராணி ருத்திரம்மாதேவி. இவருக்குப் பின்னர் 30 ஆண்டுகள் வரை தான் காக்கத்திய ஆட்சி நீடித்தது. கி.பி.1323-ஆம் ஆண்டிற்குப் பின்னர் காக்கத்திய அரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய் விட்டது.

1326-ஆம் ஆண்டு முதல் முசுனூரி நாயக்கர்கள் வாரங்கல் பகுதியை (காக்கத்திய அரசு) ஆட்சி செய்தார்கள். பின்னர் பாமினி சுல்தான்கள் 1347 ஆண்டு முதல் 1527 வரை ஆட்சி செய்தார்கள். பாமினி சுல்தான்களுக்குப் பின்னர் கோல்கொண்டா சுல்தான்கள் ஆட்சி செய்தார்கள்.

1687-ஆம் ஆண்டில் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வாரங்கல்லைக் கைப்பற்றினார். மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வாரங்கல் பகுதி 1724-ஆம் ஆண்டில் ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் வந்தது. இப்போது இந்த வரலாற்றுப் புகழ் வாரங்கல் நிலப்பகுதி தெலுங்கானா மாநிலத்தில் ஒரு மாவட்டமாக உள்ளது. சரி.




மொகலாய மன்னர்களின் படையெடுப்பு காலம் வரை பல தெலுங்கு அரச வம்சங்கள் தென் இந்தியாவில் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் காகத்திய வம்சாவளி.

காக்கத்திய மன்னர்களில் ஒருவர் கணபதி தேவர் (Ganapatideva). இந்தக் கணபதி தேவரின் மகள்தான் ருத்ரம்மா தேவி.

கணபதி தேவருக்கு ஆண் வாரிசு இல்லை. இவருக்குப் பிறந்தவர்கள் இருவருமே பெண்கள். மூத்தவர் ருத்ரம்மா தேவி. இளையவர் கணபாமா தேவி (Ganapamadevi).

அதனால் தன் மூத்த மகளுக்கு ருத்ரதேவா என்று ஆண் பெயரைச் சூட்டி அழகு பார்த்தார். வாரங்கல்லுக்கு வாரிசாகவும் நியமித்தார்.

இருந்தாலும் ஒரு பெண் பிள்ளையை வாரிசாக அறிவித்ததைப் பலரும் விரும்பவில்லை. உறவினரும் விரும்பவில்லை. ஊராரும் விரும்பவில்லை. 



தமிழ் மலர் - 20.07.2019

ஆணாதிக்கம் ஆணிவேராய் ஆழம் பார்த்த காலத்தில் ஒரு பெண் அரசராக இருப்பதை ஆண்கள் விரும்பவில்லை. அதனால் தான் அந்தக் காலத்தில் பெண்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்காமல் மட்டம் தட்டி முட்டாள் பிண்டங்களைப் போல வளர்த்து இருக்கிறார்கள்.

மிஞ்சிப் போய் விடுவார்களோ என்கிற பயம் தான். வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். விருப்பப்படும் போது ஆணின் ஆசையைத் தணிக்கும் ஒரு ஜடப் பொருளாகவும் இருக்க வேண்டும். அதுதான் இலக்கு.

பெண்கள் ஆண்களைக் கட்டி ஆளக் கூடாது என்கிற விசயத்தில் ரொம்பவும் கண்டிப்பாக இருந்தார்கள். ஆக கணபதி தேவர் தன் மகளை ஒரு நாட்டின் வாரிசாக நியமித்ததை ஆண்கள் எதிர்த்ததில் அப்போதைக்கு ஒரு நியாயம் இருந்து இருக்கிறது. இப்போதைக்குப் பார்த்தால் அது ஒரு மண்ணாங்கட்டி நியாயம். தப்பு இல்லை.

என் மகள் ஒரு பெண்ணாக இருப்பதால் தானே அவளை எதிர்க்கிறீர்கள். சரி. நான் அவளை ஓர் ஆணாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லி ருத்ரம்மா தேவி எனும் பெயரை ருத்ர மகாராஜா என்று மாற்றி இருக்கிறார். ஏற்கனவே ருதரதேவா என்று மாற்றினார். அதையும் பலர் எதிர்த்தனர். அதனால் ருத்ர மகாராஜா என்று மாற்றினார்.

அதோடு அவர் விடவில்லை. ஆண்கள் அணியும் ஆடை அணிகலன்களத் தன் மகளுக்கு அணிவித்தார். வாள் வீச்சு, குதிரையேற்றம், அம்பு எய்தல், சிலம்பாட்டம் போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்தார். ஓர் ஆணைப் போலவே வளர்த்தார்.

ருத்ரதேவி கொஞ்ச காலம் ருத்ர மகாராஜா எனும் ஆண் பெயரில் தன் தந்தையுடன் கூட்டாட்சி செய்து வந்தார்.

காக்கத்திய அரசிற்குப் பக்கத்தில் கிழக்குச் சாளுக்கியம் என்பது மற்றொரு மன்னராட்சி. நைதவோலு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். அப்போதைக்கு இளவரசர் வீரபத்திரன் என்பவர் பதவியில் இருந்தார். அவரை ருத்ரம்மா தேவி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். ருத்ரம்மா தேவியின் கணவர் சின்ன வயதிலேயே இறந்து போனார். அந்த இறப்பு ருத்ரம்மாவைப் பெரிதும் பாதித்தது.

தன் தந்தையாருடன் கூட்டாட்சி செய்யும் போது ருத்ரம்மா தேவிக்கு பல பிரச்சினைகள். அந்தச் சமயத்தில் கீழே தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி. ஒரு கட்டத்தில் சதவர்மன் சுந்தரபாண்டியன் என்பவர் காகத்தியா மீது படை எடுத்தார். பெரிய ஒரு போர் நடந்தது.

ருத்ரம்மா தேவிக்கு அப்போது வயது 13. படைத் தளபதிகளின் துணையுடன் தன் படைகளை வழிநடத்திச் சென்று வெற்றி பெற்று இருக்கிறார். வயதைக் கவனியுங்கள்.

ஓடி ஆடி கண்ணாமூச்சி விளையாட வேண்டிய வயது. அந்த வயதில் ஆயிரக் கணக்கான போர் வீரர்களை வழி நடத்தி ஒரு பாண்டிய மன்னரையே தோற்கடித்து இருக்கிறார் என்றால் சாதாரண விசயமா. படைத் தளபதிகளின் வியூகம் இல்லாமல் ருத்ரம்மா தேவி ஜெயித்து இருக்க முடியாது... நிச்சயமாக.

(தொடரும்)



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Ya... I saw this story in today Tamil Malar... at night I will read...
 
Sheila Mohan பெண்ணியத்திற்கு பெருமை...மிக்க நன்றிங்க சார்...
Muthukrishnan Ipoh இவரைப் போல நிறைய பெண்கள் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் வலம் வருகிறார்கள்...

Neela Vanam இந்த வரிசையில் காமுகர்களை வேட்டையாடிய நவீன காலத்து பெண்மணி பூலான் தேவியைச் சேர்த்துக் கொள்வீர்களா...

Muthukrishnan Ipoh பூலான் தேவி... அவர் ஒரு சகாப்தம்...
 
Sri Kaali Karuppar Ubaasagar ஹா... என்ன ஆராய்ச்சி அண்ணா... அருமை வாழ்த்துக்கள்
 
Krishnan ATawar super
 
Supramanian English  You are right... both of you