கெலிங் எனும் சொல் நல்ல ஒரு சொல். நாணயமான சொல். நன்மதிப்புமிகு சொல். வரலாறுகள் பேசும் வணக்கத்திற்கு உரிய சொல்.
ஆனாலும் வெள்ளைச் சாயத்தில் கறுப்புச் சாயம் அடிக்கப் பட்டதால், கெலிங் எனும் சொல் கறுப்புச் சாயத்தில் கொச்சைப் படுத்தப்பட்டு விட்டது. காலம் செய்த கோலத்தில் களங்கம் ஏற்பட்டு விட்டது. கறையைத் துடைக்க வேண்டியது நம் பொறுப்பு.
ஆனாலும் வெள்ளைச் சாயத்தில் கறுப்புச் சாயம் அடிக்கப் பட்டதால், கெலிங் எனும் சொல் கறுப்புச் சாயத்தில் கொச்சைப் படுத்தப்பட்டு விட்டது. காலம் செய்த கோலத்தில் களங்கம் ஏற்பட்டு விட்டது. கறையைத் துடைக்க வேண்டியது நம் பொறுப்பு.
மிக மிகப் பழங்காலத்தில் இந்தியா முழுவதும் ஐம்பத்தாறு நாடுகள் இருந்ததாக வரலாற்றுப் புராணங்கள் சொல்கின்றன. அங்கம், வங்கம், கலிங்கம், அவந்தி, அயோத்தியா, கோசலம், காந்தாரம், காம்போஜம், பாஞ்சாலம் என்று நீண்ட ஒரு பட்டியல். அதில் கலிங்கம் எனும் சொல் வருகிறது. கவனியுங்கள்.
இப்போதைய இந்திய மாநிலமான 'ஒடிசா'வின் (Odisha) சரித்திரக் காலப் பெயரும் கலிங்கம் தான்.
மகாநதிக்கும் (Mahanadi) கோதாவரி நதிக்கும் (Godavari) இடைப்பட்ட நிலப்பரப்பைக் கலிங்கம் என்று அழைத்து இருக்கிறார்கள்.
கிருஷ்ணா வைதாரணி நதிகள் பாயும் நிலப் பகுதிகளையும் கலிங்கா நாடு என்று அழைத்து இருக்கிறார்கள்.
இப்போது இந்தியாவில் இருக்கும் சடீஸ்கார் (Chhattisgarh) மாநிலத்தின் ஒரு பகுதியும் கலிங்கம் தான். இந்தியாவில் நர்மாதா நதி பாயும் அமரகாந்தகம் (Amarakantaka) மலைக்காடுகள் வரை கலிங்க நாடு பரவி இருந்து இருக்கிறது.
கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவஞானி மெகாஸ்டீனஸ் (Megasthenes) இண்டிகா எனும் நூலை எழுதி இருக்கிறார். அதில் கலிங்க நாட்டில் வாழ்ந்த மக்களை கலிங்கா (Calingae) என்று எழுதி இருக்கிறார்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவில் மகாமேகவாகன (Mahameghavahana) வம்சாவழியினர் ஆளுமை. மௌரியப் பேரரசு அவர்களின் ஆட்சியின் கீழ் வந்ததும் கலிங்கம் எனும் சொல் பரவலாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த வம்சாவழியில் வந்தவர் காரவேலன் எனும் பேரரசர். அவர் தன்னைக் கலிங்கத்தின் உச்சத் தலைவன் கலிங்க காரவேலன் என்று தம்மைப் பெருமைப் படுத்திக் கொண்டார்.
நான்காம் நூற்றாண்டில் கலிங்க நாடு குப்தர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இந்தக் குப்தர்களுக்குப் பின்னர் மேலும் சில பல சிறிய வம்சங்கள் கலிங்க நாட்டை ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
அவர்களின் பெயர்களுக்கு முன்னால் கலிங்கபதி எனும் அடைமொழி வந்து இருக்கிறது. அவர்களில் வசிஷ்டர்கள் (Vasishthas), மாதராஸ்கள் (Matharas), பித்ரபக்தர்கள் (Pitrbhaktas) போன்ற வம்சங்களும் அடங்கும். அவர்களும் கலிங்கபதி எனும் அடைமொழியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
7-ஆம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவை ஆட்சி செய்த சைலோத்பவ மன்னர் மாதவராஜா (Shailodbhava Madhavaraja); கிழக்குக் கங்கையை ஆட்சி செய்த இந்திரவர்மன் போன்ற மன்னாதி மன்னர்கள் தங்களுக்குச் ’சகல கலிங்கதிபதி’ (Sakala-Kalingadhipati) எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்கள். பெருமை கொண்டார்கள்.
8-ஆம் 10-ஆம் நூற்றாண்டுகளில் மத்திய இந்தியாவை பகுமா காரா வம்சம் (Bhauma-Kara dynasty) ஆட்சி செய்து வந்தது. அந்த வம்சத்தினர் தங்கள் நாட்டை தோசலா கலிங்கா என்று அழைத்து இருக்கிறார்கள்.
அடுத்து வந்த சோமா கேசரி (Somavamshi) வம்ச மன்னர்கள் தங்களைக் கலிங்க கோசலா உத்கலா அதிபதிகள் என்று அழைத்து இருக்கிறார்கள்.
மேலைச் சாலுக்கிய மன்னர்கள் திரிகலிங்கம் (Trikalinga) எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மகாபாரதத்தில் கலிங்கர்கள் என்பவர்கள் ஒரு பெரிய வம்சாவழியினர் என்றும் சொல்லப் படுகிறது.
அதே சமயத்தில் கலிங்கப் பறவை எனும் பெயரில் ஒரு பறவை உள்ளது. கலிங்க ஆடை எனும் பெயரில் ஓர் ஆடையும் உள்ளது.
கலிங்கம் எனும் சொல்லில் இருந்து தான் கெலிங் எனும் சொல் உருவானது. அந்தச் சொல்லை ஆரம்ப காலங்களில் மலாயாவில் நையாண்டிச் சொல்லாக (derogatory and pejorative connotations) நாசுக்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
திரும்பத் திரும்ப அதே சொல்லை அடிக்கடி பயன்படுத்தும் போது சற்றே நெருடல் ஏற்பட்டு அதுவே இழிவுபடுத்தும் சொல்லாக மாறிவிட்டது.
எனக்கும் ஏற்பட்டும் இருக்கிறது. கோபப் படாமல் சிரித்துக் கொண்டே போய் விடுவேன். ஒருநாள் மலாய்க்கார நண்பர் கேட்டார். விளக்கம் சொன்னேன். அவரும் ஏற்றுக் கொண்டார். அதில் இருந்து கெலிங் எனும் சொல் தவிர்க்கப் பட்டது.
கெலிங் எனும் சொல்லைத் தமிழர்களை இழிவு படுத்தும் ஒரு சொல்லாகப் பார்க்கிறோம். கெலிங் என்று சொன்னதும் நமக்கும் கோபம் வருகிறது.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கெலிங் எனும் சொல் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டச் சொல்லாகத் தெரிய வருகிறது.
இந்தோனேசியா நூசந்தாரா, ஆச்சே, ஜாவா, சுலாவசி, போர்னியோ, சம்பா, பூனான், கெமர் போன்ற பழங்கால நகரங்களில் கெலிங் எனும் சொல் பரவலாகப் பயன்பாட்டில் இருந்து உள்ளது.
கெலிங் எனும் சொல் எப்படி உருவானது. அந்தச் சொல்லின் பின்னணி என்ன? வரலாற்று ஏடுகளில் கெலிங் எனும் சொல் எப்படி வந்தது? கடந்த நூறாண்டுகளில் தமிழர்களை ஏன் கெலிங் என்று அழைக்கப் பட்டார்கள்?
இதைப் பற்றி ஒரு முழு ஆய்வு செய்யப்பட வேண்டும். நானும் ஒரு வரலாற்று நூலைத் தயாரித்து வருகிறேன்.
கெலிங் எனும் சொல் நல்ல ஒரு சொல் என்பதை அந்த ஆய்வின் மூலம்; அந்த நூலின் மூலம் உலகத்திற்குத் தெரியப் படுத்துவோம். அதுவே நம் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனமாக அமையட்டும். நன்றி.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.04.2020