24 ஜூன் 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1

[பாகம்: 1]

(இது ஒரு தொடர் கட்டுரை. மலேசியா தினக்குரல் நாளிதழில் 14.06.2015 தொடங்கி 19.06.2015 வரை ஆறு நாட்களுக்கு எழுதப்பட்டது. அதை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)
- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்



செத்தும் கொடுத்தார் சீதக்காதி. ஆனால், செத்துக் கொண்டு இருக்கும் போதும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். மரணத்தின் விளிம்பில் நின்ற போதும் மனிதநேயத்தை மறுக்கவில்லை.  மரணத்தை அணைத்துக் கொண்ட போதும் தமிழ் ஈழ மக்களை மறக்கவில்லை. அவர்களின் விடுதலைக்காக, கடைசி வரை நின்று போராடியவர். தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்று அசை போட்டு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். அவர் தான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கடைசி மூச்சு நிற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, தான் சம்பாதித்த தன் சொந்தப் பணத்தில் பல கோடி ரூபாய் தரத் தயாராக இருந்தார். பிரபாகரனை வரச் சொல்லி ஆளையும் அனுப்பி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆரால் அதிகமாகப் பேச முடியவில்லை. மூச்சுத் திணறல். மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மயக்கமான நிலை. இருந்தாலும் கடைசி நிமிடம் வரை ஈழத் தமிழர்களை அவர் மறக்கவில்லை. 



பிரபாகரன் போர் முனையில் இருந்தார். அதனால் அவர் வரமுடியவில்லை. அவர் சார்பில் தளபதிகளில் ஒருவரை அனுப்பி இருக்கிறார்கள். வழக்கமாக எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவித் தொகைப் பெற்றுச் செல்பவர், அந்தச் சமயத்தில் இல்லை. அவரும் போர்முனையில் இருந்தார். அதனால் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் இல்லாத வேறோர் ஆளை அனுப்பி இருக்கிறார்கள்.

மனிதநேய மாந்தராக மறைந்து போனார்

அவரிடம் பணம் கொடுக்க எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. கொடுக்கப் போவது பெரிய தொகை. எப்போதும் வாங்கிச் செல்வாரே, அவரையே அனுப்பி வையுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருக்கிறார். கடைசியில், அந்தப் பழைய ஆளைத் தேடிப் பிடித்து சென்னைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவர் வந்து சேர்வதற்குள் காலதேவன் எம்.ஜி.ஆரைக் கொண்டு சென்று விட்டான்.

இருந்தாலும் அவருடைய உதவியாளர் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்து இருக்கிறது. மொத்தம் 21 கோடி ரூபாய். அந்தக் காலத்துப் பணம் எவ்வளவாக இருக்கும். அதைக் கணக்குப் போட்டுப் பாருங்கள். இந்தப் பணத்தைக் கொண்டுதான் 18 முதியோர் காப்பகங்கள், நான்கு மருத்துவமனைகளைக் கட்டி இருக்கிறார்கள். மேலும் இரண்டு கப்பல்களையும் வாங்கினார்கள் என்பது ஒரு கூடுதலான தகவல். இந்த விஷயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். இது மட்டும் இல்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.




எம்.ஜி.ஆர். ஒரு சாமான்யராகப் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். ஒரு கலைஞராக வளர்ந்தார். ஒரு நடிகராக உயர்ந்தார். உண்மைதான். இருந்தாலும், ஒரு நடிகர் என்பதைத் தாண்டிய நிலையில், ஒரு மனிதநேய மாந்தராக மறைந்து போனார் என்பது தான் பெரிய விஷயம்.

அரசியலை விட்டு விடுங்கள். ஆயிரத்தில் ஒருவன். சினிமாவையும் விட்டு விடுங்கள். இரண்டையும் சேர்க்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு அவர் செய்த நல்லவற்றை மட்டும் மனிதத் தன்மையோடு பார்ப்போம். ஈழத் தமிழ் மக்கள் மீது வற்றாத வாஞ்சை காட்டிய பொன்மனச் செம்மலாக வாழ்ந்தாரே. அதைப் பார்ப்போம்.

தமிழ் ஈழ மக்களுக்கு சிவாஜியின் படம் என்றால் உயிர்

பிறப்பால் அவர் தமிழர் அல்ல. இருந்தாலும், தமிழராய்ப் பிறக்காமலேயே அவர் ஒரு தமிழராக வாழ்ந்து காட்டினாரே; தமிழர்களின் சரித்திரத்தில் சாதனை படைத்துக் காட்டி இருக்கிறாரே; வேறு என்னய்யா வேண்டும். அது தானே மிகப் பெரிய விஷயம். இன்றைக்கு அவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் செய்த நல்ல காரியங்கள் தானே முன் வந்து நிற்கின்றன. அந்த நல்ல செய்கைகள் தானே அவரை முன் நிறுத்தி அடையாளப் படுத்துகின்றன. 




எம்.ஜி.ஆரை ஒரு மலையாளி என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். ஒரு தமிழன் செய்யாததை எம்.ஜி.ஆர். செய்து காட்டி இருக்கிறாரே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். என்னய்யா தமிழன், என்னய்யா மலையாளி, எல்லாருமே ஒரே தாய்மடி உறவுகள் தான். ஒரே இரத்தத்தில் ஊறிய மட்டைகள் தான். சில ஆளவந்தான்களும் சில சோளவந்தான்களும் செய்த குசும்புகள் குறும்புகள். அதனால் வந்த குளறுபடிகள். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, எல்லாரும் சேர்ந்து பிரபாகரனைக் கழற்றி விட்டார்களே. அதுதான் இப்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர் நடித்த ஒரு படத்தின் ஊதியத்தை அப்படியே தமிழ் ஈழ மக்களுக்கு கொடுத்து இருக்கிறார். தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் உதவிகள் செய்யச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். தமிழ் ஈழ மக்களுக்கு சிவாஜியின் படம் என்றால் உயிர். அவர் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் யாழ்ப்பாணத்தில் ஒரே தியேட்டரில் ஒரு வருடம் ஓடி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 




அடுத்து ஒரு சின்னக் கேள்வி. தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர்களில் எத்தனைப் பேர், எம்.ஜி.ஆரைப் போல ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்கள். சொல்லுங்கள். விரல்விட்டு எண்ணி விடலாம். ஆரம்பத்தில் கலைஞர் உதவி செய்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதிலே சொந்த நலன்கள் கொஞ்சமாய் மறைந்து நின்றன. சான்றுகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆரைப் போல நிறைவு நலன்கள் இல்லை.

கலைஞரின் பார்வை மற்ற தலைவர்களின் பக்கம் திரும்பியது

ஒரு சில கட்டங்களில் எம்.ஜி.ஆர். ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்து இருக்கிறார். தன்னைச் சீண்டிய சினிமாக்காரர்களையும், அரசியல் சித்துகளையும் தீண்டிப் பார்த்தார். இது எல்லாம் அரசியலிலும் சினிமாவிலும் சகஜமுங்க என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். ஆனால், நாம் இங்கே எம்.ஜி.ஆரின் மனித நேயத்தைத் தான் பார்க்கின்றோம்.



எம்.ஜி.ஆருக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் பிரபாகரனைத் தன் மகனாக நினைத்தார். பழகினார். எம்.ஜி.ஆர். என்பவர் பிரபாகரனை ஒரு முதலமைச்சராக நின்று பார்க்கவில்லை. தகப்பன் ஸ்தானத்தில் நின்று ஒரு மகனாகத் தான் பார்த்துப் பழகி இருக்கிறார். ஆக, பிரபாகரனுக்குப் பண உதவிகள் செய்தார் என்றால், அதைத் தனிப்பட்ட வகையில் ஒரு மகனுக்கு ஒரு தகப்பன் செய்யும் உதவியாகவே நினைத்துப் பார்க்க வேண்டும்.

கலைஞரின் பார்வை உமா மகேஸ்வரன், சபாரத்தினம் போன்ற மற்ற மற்றப் போட்டித் தலைவர்களின் பக்கம் திரும்பியது. பிரபாகரன் சென்னைக்கு வரும் போது எல்லாம் எம்.ஜி.ஆரைச் சந்திப்பார். ஆனால், கலைஞரைச் சந்திப்பது இல்லை. ஒரே ஒரு முறைதான் சந்தித்துப் பேசி இருக்கிறார். அதனால், கலைஞருக்குப் பிரபாகரன் மீது வருத்தம். இரண்டு பேருக்கும் இடையே லேசான விரிசல். கலைஞரிடம் நல்ல நோக்கம் இருந்து இருக்கிறது.

தமிழ் ஈழ் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்து இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே தொங்கி நின்ற அரசியல் பிணக்குகள் தான் விரிசலுக்கு மூலகாரணம். அதனால் பிரபாகரன் ஒரு சொக்கட்டான் காயாக மாறிப் போனது தான் மிச்சம்.

யாழ்ப்பாண போராளிக் குழுக்களுக்குள் போட்டிப் பூசல்கள்

ஆக, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த கலைஞர் கழகத் தோழர்களிடம் நன்கொடைகளைத் திரட்டினார். திரட்டிய தொகையை அப்படியே கொண்டு போய், உமா மகேஸ்வரன், சபாரத்தினம், பாலக்குமார் போன்ற போட்டித் தலைவர்களிடம் கொடுத்து இருக்கிறார். எவ்வளவு தொகை என்று தெரியவில்லை. ஆனாலும், 60 இலட்சம் ரூபாய் என்று நம்பகரமான வட்டாரங்கள் சொல்கின்றன. இந்தக் கட்டத்தில் எம்.ஜி.ஆர். இரண்டு கோடி ரூபாயைப் பிரபாகரனுக்கு கொடுத்து இருக்கிறார்.



சரி. அடுத்து தமிழகத்தின் மற்ற மற்றத் தலைவர்கள் ஈழ விடுதலைக்கு தொடர்ந்து உதவிகள் செய்தார்களா. இல்லை என்றுதான் பதில் வருகிறது. ஏன் என்றால், போட்டிக் குழுத் தலைவர்களும் அவர்களைத் தேடி வரவில்லை. இவர்களும் ஆள் அனுப்பிப் பார்க்கவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. விடுதலை குழுக்களுக்கு இடையே பிளவுத் தன்மை தோன்றுவதற்கு, தமிழகத் தலைவர்களின் போட்டி மனப்பான்மையே ஒரு காரணமாக இருந்தது. அதை யாரும் மறுக்க முடியாது. தமிழர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம்.

ஆக, யாழ்ப்பாண போராளிக் குழுக்களுக்குள் போட்டிப் பூசல்கள் வளர்ந்து போனதற்கு தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான் மூல காரணமாக இருந்தார்கள். இது என் கருத்து. அதை யாராலும் மறுக்க முடியாது என்று என்னால் சொல்லவும் முடியாது. எம்.ஜி.ஆருக்கு யார் நண்பனோ அவன் எனக்கு எதிரி. கலைஞருக்கு யார் நண்பனோ அவன் உனக்கு எதிரி.

இப்படித் தான் போட்டியும் பொறாமைகளும் பரத நாட்டியம் ஆடி இருக்கின்றன. ஆக யாழ்ப்பாணத்து அரசியலில் தமிழ்நாட்டு அரசியலும் நுழைந்து கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறது. அதனால் பாதிக்கப் பட்டது ஒட்டு மொத்த ஈழத்துத் தமிழர்கள். சந்தோஷப் பட்டது தமிழகத்தின் சில தானைத் தலைவர்கள். இப்போது வருந்தி என்ன பயன். வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டு போய் விட்டது.

யாழ்ப்பாணத்து வரலாற்றை மாற்றி எழுதி இருக்கலாம்

தமிழகத்துச் சகோதரர்கள் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்வார்கள் என்கிற ஏக்கத்தில், தமிழக மண்ணைப் பார்த்தவாறே பல்லாயிரம் ஜீவன்கள் யாழ்ப்பாணத்தில் உயிரை விட்டு இருக்கின்றன. அப்போது எம்.ஜி.ஆர். மேலே இருந்தார். கீழே இறங்கி வர முடியாது. கலைஞர் கீழே இருந்தார். ஆனால் அவர் இறங்கி வரவே இல்லை. பிடித்த முயலுக்கு மூனே முக்கால கால் என்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வது. துயிலரங்கில் ஓர் உண்ணாவிரதம். இது உலகம் அறிந்த விஷயம். என் மீது வழக்குப் போடலாம். ஆனால் எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்க முடியாது. 




அந்த மனுஷன் நினைத்து இருந்தால்… மறுபடியும் சொல்கிறேன். அந்த மனுஷன் நினைத்து இருந்தால் யாழ்ப்பாணத்து வரலாற்றை மாற்றி எழுதி இருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. பரவாயில்லை. என்ன செய்வது. அவரால் முடியவில்லை. அவருக்கு அந்த மாதிரியான கிடுக்குப்பிடி. ஒன்று மட்டும் உண்மை. பல்லாயிரம் உயிர்களின் சப்தநாடிகள் இன்னும் ஈனக் குரல்களை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்தப் பாவம் யாரையும் சும்மா விடாது. துரோகம் செய்தவர்களையும் அவர்களின் வாரிசுகளையும் அழித்துவிடும். ஓர் உயிர் இல்லை. இரண்டு உயிர் இல்லை. ஒரு லட்சம் உயிர்கள். அத்தனையும் மனித உயிர்கள். ஆக, உலக இரத்தங்கள் ஒன்று சேர்ந்து அழுகின்றன.

1970-களின் இறுதிக் காலத்திலும், 1980-களின் தொடக்கக் காலத்திலும், ஈழ விடுதலைக்காகப் பலப் போராட்டக் குழுக்கள் யாழ்ப்பாணத்தில் தோன்றின. அவை விடுதலை உணர்வுகளின் தாக்கங்கள். ஏறக்குறைய 30 குழுக்கள். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு போராட்டக் குழு. எல்லாமே ஈழத்துத் தமிழர்களின் நலன்களின் அக்கறை காட்டியவை. இல்லை என்று சொல்லவில்லை.

காந்திய அகிம்சா முறையில் போராடிப் பார்த்தார்கள்

ஆனால், அவர்களிடம் ஒன்று மட்டும் இல்லை. அதுதான் ஒற்றுமை. ஆளாளுக்குப் பதவிகள் வேண்டும் என்கிற ஆசைகள், திமிர் பிடித்த இறுமாப்புகள். அதனால், புற்றீசல்கள் மாதிரி உட்பூசல்கள்.  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், நம்பிக்கை போன்றவை எல்லாம் அடிபட்டுப் போய் கிடந்தன.

இந்தக் கட்டத்தில், யாழ்ப்பாணப் போராட்டக் குழுக்களை ஒன்றிணைத்து ஒரு பெரிய சக்தியாக உருவாக்க வேண்டும் என்பதே பிரபாகரனின் இலட்சியமாக இருந்தது. ஆரம்பத்தில் காந்திய அகிம்சா முறையில் போராடிப் பார்த்தார்கள் சரிபட்டு வரவில்லை. சிங்களச் செறுக்குகள் சிரித்துக் கொண்டே கழுத்தை அறுத்தன. இலங்கைத் தமிழர்களின் தந்தை என்று போற்றப்படும் தந்தை செல்வா அவர்களும் மனம் உடைந்து போனதற்கு சிங்களர்களின் அடக்கு முறைதான் காரணம்.

சிங்களர் அடுக்கடுக்காய்ச் செய்த கொலைகள். பெண்மை நாசங்கள். தமிழர் உடைமைச் சேதங்கள் போன்றவை தந்தை செல்வாவிடம் இருந்து பிரபாகரன் பிரிந்து போனதற்கு மூல காரணங்களாக அமைந்தன. அமைதியாகப் போனால் ஒன்றும் நடக்காது. காந்தியீய முறை சரிபட்டு வராது என்று தோன்றியது. வேறுவழி இல்லாமல் தான் பிரபாகரன் ஆயுதங்களைத் தூக்கினார்.

இந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இந்தக் குழுக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் பண உதவி செய்தனர். அதிலே சுகம் கொண்ட போராளிக்குழுத் தலைவர்கள் சிலர், தலைமைப் பதவிக்குச் சவாலாக இருந்தவர்களை ராத்திரியோடு ராத்திரியாக மூட்டைக் கட்டி மேலோகத்திற்கு அனுப்பி வைத்தனர். ராத்திரிக் களையெடுப்புகள் என்று சொல்வார்கள்.

சிங்களர்களை எதிர்ப்பதே தமிழர்களின் நோக்கமாக இருந்தது

அவை 1981, 1982, 1983 ஆம் ஆண்டுகளில் நடந்த பதவி மோகக் கொலைகள். ’நீ தாழ்ந்த சாதி நான் மேல்சாதி’ என்கிற சாதிப் பிரச்சினையும் வந்து தொலைத்தது. அதற்குத் தூபம் போட்டது தமிழகத்துத் தலைவர்கள் தான். பெயர்கள் வேண்டாம். சணடைக்கு வருவார்கள். உடம்பு தாங்காது. ஆக, நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

போராட்டக் குழுக்களுக்கு இடையே நடந்த களையெடுப்புகளில் எல்லாக் குழுத் தலைவர்களுமே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். பிரபாகரனும் சம்பந்தப்பட்டு இருக்கிறார். இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. ஆனால், பிரபாகரனை மட்டும் தனித்துப் பார்க்க வேண்டாம் என்பதே என் கருத்து.

என்ன தான் அசிங்கமான களையெடுப்புகள் நடந்து இருந்தாலும், சிங்களர்களை எதிர்ப்பதே தமிழர்களின் நோக்கமாக இருந்து இருக்கிறது. அப்படி நினைத்து வாழ்ந்தவர் தான் பிரபாகரன். மற்றத் தமிழ்க் குழுக்களை அடித்துப் பிடித்து இழுத்து ஒன்றாகச் சேர்த்து வைத்தாரே அதுதான் பெரிதாகப் படுகிறது. இந்த விஷயத்தில் பிரபாகரன் என்கிற ஒரு தனி மனிதரை மட்டும் தனிப் பிரித்துக் காட்டுவது நல்லது அல்ல.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. புளொட் (PLOT) எனும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த உமா மகேஸ்வரனும், விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனும் சென்னை பாண்டி பஜாரில் துப்பாக்கிச் சண்டைப் போட்டுக் கொண்டார்கள். அதற்கு யார் காரணம். தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான் காரணம்.  அதை இங்கே விரிவாகவும் எழுத முடியாது. எழுதவும் நான் விரும்பவில்லை. இருந்தாலும் கட்டுரையைத் தொடர்ந்து படித்தால், அந்தத் தலைவர் யாரென்று உங்களுக்கும் தெரிய வரும்.

சிங்களர்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கலம் இறங்கின

1980-களில், சிங்களரின் கொலைவெறி நாடகங்களைத் தாங்க முடியாமல், பல ஆயிரம் கல்லூரி மாணவர்கள், தங்கள் படிப்பைப் பாதிலேயே நிறுத்திவிட்டு தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளில் சேர்ந்தனர். எல்.டி.டி.இ. என்கிற தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE); புளொட் என்கிற தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOT); டெலோ என்கிற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO); இ.பி.ஆர்.எல்.எவ். என்கிற ஈழ மக்கள் புரட்சிகர விடுதல் முன்னணி (EPRLF); ஈரோஸ் என்கிற ஈழவர் ஜனநாயக விடுதலை அமைப்பு (EROS) போன்றவை தனித்துவம் வாய்ந்து விளங்கின. அவை முக்கியமான குழுக்கள் ஆகும்.

1980-1982 ஆம் ஆண்டுகளில், சிங்களர்களுக்கு எதிராக வட்டாரத் தமிழீழ விடுதலைப் புலிகள் கலம் இறங்கின. கொரில்லாத் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. இந்தக் காலக் கட்டத்தில் தான் சகோதரப் படுகொலைகளும் நடந்தன. ஒரு கைதியின் டைரி நூலில், எழுத்தாளர் கே. கீதைப்பிரியா அதைப் பற்றி விளக்கமாக விரிவாக எழுதி இருக்கிறார். ஓர் அருமையான ஆய்வுப் புதினம். அந்த நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள், அநீதியின் அநியாயங்கள் மிக மிகத் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கின்றன.

நாளைய கட்டுரையில் இந்திரா காந்தி என்ன உதவிகள் செய்தார். இந்திய உளவுத் துறையின் ஊடுருவல்கள் எப்படி இருந்தன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவை எல்லாம் ரகசியங்கள் இல்லை. உலகம் பூராவும் தெரிந்து விட்டது. அதனால், பயம் இல்லாமல் எழுதலாம். படிக்கலாம். நாளைய கட்டுரையைப் படிக்கத் தவற வேண்டாம். (தொடரும்)

3 கருத்துகள்:

  1. அந்தத் தமிழகத் தலைவர் யாரென்பது ஊரறிந்த ரகசியம். தர்மம் நின்று கொல்லுமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். நீங்கள் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. அந்தத் தமிழகத் தலைவர் யாரென்பது ஊரறிந்த ரகசியம். தர்மம் நின்று கொல்லுமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். நீங்கள் தொடருங்கள்

    பதிலளிநீக்கு