18 ஜூலை 2021

வியட்நாம் சம்பா பேரரசர் பத்திரவர்மன்

தமிழ் மலர் - 17.07.2021

இந்த உலகில் இந்தியர் அல்லாத இந்து மக்கள், இரண்டே இடங்களில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியக் கலாசாரப் பின்னணியில் 1,600 ஆண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றி வருகின்றார்கள். இந்து மதத்தை ஏன் பின்பற்றி வருகிறோம் என்று அவர்களுக்கே தெரியாமல் இந்து மத வழிபாடுகளையும் பின்பற்றி வருகிறார்கள். (Two surviving non-Indic indigenous Hindu peoples in the world)
 
Balamon Cham Hindus
 
இந்தோனேசியா பாலி தீவில் ஒரு பிரிவினர். பாலினிய இந்துக்கள் (Balinese Hinduism).

அடுத்த பிரிவினர் வியட்நாம் நின் துன் மாநிலத்தில் (Ninh Thuan Province) பலமான் சாம் (Balamon Cham) எனும் பூர்வீக இந்து மக்கள். இவர்களைச் சாம் இந்துக்கள் (Balamon Cham Hindus) என்று அழைக்கிறார்கள். இவர்களின் பெண்கள், நெற்றியில் பொட்டு வைக்கும் பாரம்பரிய பழக்கம் இன்றும் சில இடங்களில் உள்ளன.

சம்பா அல்லது சியோம்பா அரசு (Champa or Tsiompa) என்பது முன்பு காலத்தில் வியட்நாமில் இருந்த பேரரசு. ஆனாலும் சின்னச் சின்ன அரசுகளின் ஒரு கூட்டு அரசாகும். சம்பா அரசு பாண்டியர்கள் அமைத்த முதல் மூத்த அரசு. அதுவே பின்னாட்களில் பல்லவர்களின் பெரிய பேரரசாக மாறியது.

மறுபடியும் சொல்கிறேன். சம்பா அரசு என்பது பாண்டியர்கள், வியட்நாமில் அமைத்த முதல் அரசு. அதுதான் சம்பா பேரரசு (Kingdom of Champa: கி.பி. 192 – கி.பி. 1832). சம்பா என்றால் சமஸ்கிருத மொழியில் சண்பகம் (campaka) என்று பொருள். முதன்முதலாக அசல் சம்பாவைத் தோற்றுவித்தவர் ஸ்ரீ மாறன் (Sri Mara was the founder of the kingdom of Champa). வியட்நாமிய பெயர் கூ லியன் (Khu Lien). தமிழகப் பதிவுகள் திருமாறன் பாண்டியன் என்று சொல்கின்றன.

கி.பி. 100-ஆம் ஆண்டுகளில், சம்பா நிலப் பகுதிகளைச் சீனாவின் ஹான் வம்சாவழியினர் (Han Dynasty) ஆளுமை அதிகாரம் செய்து வந்தனர். சம்பா மக்களுக்கு வரி வட்டி நெருக்கடிகள். அதனால் ஒரு கட்டத்தில் சீனாவை எதிர்த்து ஸ்ரீ மாறன் போர் செய்தார். வெற்றி பெற்று சம்பாவைக் கைப்பற்றினார். ஸ்ரீ மாறன் தான் சம்பா பேரரசைத் தோற்றுவித்த முதல் பாண்டிய மன்னர்.

அதன் பின்னர் சம்பா அரசு உடைந்து போனது. உடைந்து போன அரசை ஒரு கூட்டு அரசாகத் தோற்றுவித்தவர் பத்திரவர்மன் (Bhadravarman). இவருடைய வீயட்நாமிய பெயர் பாம் ஹோ டாட் (Pham Ho Dat). பட்டப் பெயர் தர்மமகாராஜா பத்திரவர்மன் (Dharmamaharaja Sri Bhadravarman I).

இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 349 - கி.பி. 361. இவர்தான் சிம்மபுரம் (Simhapura - Lion City) எனும் நகரத்தை உருவாக்கியவர். இப்போது இந்த நகரம் திரா கியூ (Tra Kieu) என்று அழைக்கப் படுகிறது.

பத்திரவர்மன் தன் கடைசி காலத்தில் இந்தியாவிற்குச் சென்று கங்கை நதிக் கரையில் வாழ்ந்ததாகவும் வியட்நாமிய வரலாறு சொல்கிறது.


சம்பா அரசிற்கு முன்பு காலத்தில் செண்பகா என்று பெயர் இருந்து இருக்கலாம். செண்பகம் எனும் சொல் சம்பா என்று மாற்றம் கண்டு இருக்கலாம். வரலாற்று ஆசிரியர்கள் கீழ்க்காணும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.

சம்பா எனும் பெயர் சம்பகா எனும் சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. செண்பகா என்பது செண்பக மலரைக் குறிக்கிறது. மணம் வீசும் மலர்களால் அறியப்படும் ஒரு பூக்கும் தாவரம். பூவின் பெயரைச் சொல்லும் போதே நெஞ்சத்தில் நறுமணத்தை நிறைக்கும் தன்மை இந்த மலருக்கு உண்டு.

ஆங்கிலப் பெயர் (champaca); தமிழ்ப் பெயர் செண்பகம். இரண்டுமே ஜம்பகா என்ற வடமொழிச் சொல்லில் இருந்து உருவானவை தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. 


மக்னோலியா குடும்பத்தைச் சார்ந்த இதன் பழைய அறிவியல் பெயர் Michelia champaca. புதிய பெயர் Magnolia champaca. செம்பகம் என்ற பெயரில் ஒரு குயில் இனம் உள்ளது. பிலிப்பைன்ஸ்; தமிழீழம்; ஆகியவற்றின் தேசியப் பறவை செண்பகம் ஆகும். சரி.

சம்பா அரசைத் தோற்றுவித்த பத்திரவர்மனுக்கு முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

அவர்களில் முதலாவதாக ஆட்சி செய்தவர் திருமாறன் பாண்டியன் என்று வியட்நாமிய வோ - கான் கல்வெட்டு (Vo Canh inscription) சொல்கிறது. (The oldest Sanksrit inscription discovered in Vietnam mentions the name of Sri Maran. The inscription is known as the Vo-Canh inscription.) ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.


தென்கிழக்கு ஆசியாவில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான சமஸ்கிருதக் கல்வெட்டு. வோ-கான் கல்வெட்டு ஆகும்.

1885-ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் நா திராங் (Nha Trang) நகரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள வோ - கான் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கல்வெட்டில் இப்படி ஒரு வாசகம் வருகிறது. ”ஆபரணம் ... ஸ்ரீ மாறனின் பேரன் மகளின் குடும்பத்தின் மகிழ்ச்சி... இதன் மூலம் உறுதி செய்யப் படுகிறது.” 


இந்தோனேசியாவின் மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; சிங்காசாரி; மத்தாரம் போன்று சம்பா பேரரசும் அந்தக் காலக் கட்டத்தில் பெரிய ஓர் அரசு.

இந்தியாவும் சீனாவும் இதனிடம் பிரச்சினை பண்ணாமல் சற்றே ஒதுங்கி இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

இன்றைய மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் கி.பி 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரையில் சம்பா பேரரசின் அதிகாரம். படர்ந்து விரிந்து ஆளுமை செய்து இருக்கிறது. 


1. சம்பா பேரரசு: முதலாவது தலைநகரம் சிம்மபூரம் (Simhapura - 4th century to the 8th century CE)

2. சம்பா பேரரசு: இரண்டாவது தலைநகரம் இந்திரபுரம் (Indrapura கி.பி 875 – கி.பி 978)

3. சம்பா பேரரசு: மூன்றாவது தலைநகரம் அமராவதி விஜயா (Amaravat Vijaya கி.பி 978 – கி.பி 1485)

4. சம்பா பேரரசு: (கௌதாரம் சிற்றரசு - Kauthara Polity) நான்காவது தலைநகரம் கௌதாரம் (Kauthara கி.பி 757 - கி.பி 1653)

5. சம்பா பேரரசு: (பாண்டுரங்கா சிற்றரசு - Panduranga Polity) ஐந்தாவது தலைநகரம் பாண்டுரங்கா (Panduranga கி.பி 757 - கி.பி 1832)


1832-ஆம் ஆண்டு சம்பா பேரரசு இப்போதைய வியட்நாமிய அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டது. சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன்.

சம்பா அல்லது சியோம்பா அரசு கி.பி 1832-ஆம் ஆண்டில் வியட்நாமிய பேரரசர் மின் மங் என்பவரால் இணைக்கப்பட்ட வியட்நாமிய தெற்குப் பகுதி ஆகும்.

வியட்நாமுடன் இணைக்கப் படுவதற்கு முன்பு சம்பா அரசு தனியாக இயங்கி வந்தது., கி.பி. 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 1832-ஆம் ஆண்டு வரை, மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் பரவி இருந்தது. சின்னச் சின்ன சாம் அரசுகளின் தொகுப்பு தான் சம்பா அரசு ஆகும்.


இந்தச் சம்பா அரசை, சமஸ்கிருத மொழியில் நகாரா சாம்பா என்றும் கெமர் மொழியில் சாமிக் என்றும் அழைத்தார்கள். வியட்நாமில் சில இடங்களில் இன்னும் அப்படித்தான் அழைக்கப் படுகிறது.

கம்போடிய கல்வெட்டுகளில், சாம் பா என்றும்; வியட்நாமிய மொழியில் சியாம் தான் (Chiêm Thanh) என்றும்; சீனப் பதிவுகளில் 'ஜாஞ்சாங்' என்றும்; குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்போதைய நவீன வியட்நாம் மக்களும்; கம்போடியாவின் சாம் மக்களும் இந்த முன்னாள் சம்பா அரசின் எச்சங்கள் ஆவார்கள். அவர்கள் சாமிக் மொழியைப்ப் பேசுகிறார்கள். சரி. இந்து மதம் எப்படி இங்கே வேர் ஊன்றியது. அதையும் பார்ப்போம்.


முன்பு காலத்தில் சம்பா அரசிற்கும் கம்போடியாவிற்கும் இடையில் அடிக்கடி போர்கள். இருந்தாலும், இரு நாடுகளும் வர்த்தகத்தில் சுமுகமாய் ஈடுபட்டு வந்தன. அதனால் கலாசார தாக்கங்கள் இரு திசைகளில் இருந்தும் சுமுகமாய் நகர்ந்தன. இரு நாடுகளின் அரச குடும்பங்களும் அடிக்கடி திருமண உறவுகளைப் பரிமாறிக் கொண்டன.

ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு போன்றவை அந்தக் காலத்தில் சக்தி வாய்ந்த கடல் பேரரசுகள். அவற்றுடன் சம்பா அரசும் நெருக்கமான வர்த்தக, கலாசார உறவுகளைக் கொண்டு இருந்தது.

கி.பி 4-ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான பூனான் (Funan) அரசு; சம்பா அரசின் மீது தாக்குதல் நடத்தி சம்பாவைக் கைப்பற்றியது. அதன் பின்னர் இந்து மதம், குறிப்பாக சைவம், அரசு மதமாக மாறியது. 

Courtesy of Fine Art America

கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல், வியட்நாம் பகுதியில் அரபு கடல் வர்த்தகம் அதிகரித்தது. அதன் காரணமாக இஸ்லாமிய கலாசார மதத் தாக்கங்கள் கொண்டு வரப் பட்டன. அந்த வகையில் இஸ்லாம் அங்கே பரவியது.

பல நூற்றாண்டுகளாகச் சம்பா பேரரசின் கலை, கலாசாரங்களில் இந்தியச் சாரங்கள் பரிணாமம் பெற்று உள்ளன. சம்பா இந்துக்கள் சிவனை வழிபடும் சைவ சமயத்தைப் பின்பற்றி வந்தார்கள்.

சம்பா அரசின் துறைமுக நகரம் காதிகரம். அங்கு இருந்த சம்பா நிலங்களில் பல இந்துக் கோயில்கள்; பல சிவப்புச் செங்கல் கோயில்கள் கட்டப்பட்டன.

முன்பு காலத்தில் வியட்நாமில், மை சான் (My Son) எனும் நகரம் முக்கிய இந்து மத மையமாக விளங்கி உள்ளது. அங்கே நிறைய இந்துக் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. 

Ganesh Tempele Po Nagar Nha Trang

அதற்கு அருகாமையில் ஹோய் ஆன் (Hoi An) எனும் ஒரு துறைமுக நகரம். இப்போது இந்த இரு இடங்களுமே உலகப் பாரம்பரியத் தளங்களாக (UNESCO World Heritage Sites) அறிவிக்கப்பட்டு உள்ளன.

மீகோங் ஆறு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் கோங் எனும் கடைச் சொல் கங்கை நதியைக் குறிக்கின்றது. அது தெரியுமா உங்களுக்கு? நான் சொல்லவில்லை. வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

10-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் பரவியது. அதன் பின்னர் பிரெஞ்சுக்காரர்களின் கிறிஸ்துவ மதம் வந்தது. இருந்தாலும் அங்கு வாழ்ந்த பலர் தங்களின் பழைய இந்து நம்பிக்கைகள், இந்து சடங்குகள், இந்து பண்டிகைகளைக் கைவிடவில்லை. இன்னும் தக்க வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

வியட்நாம் நாட்டில் இருக்கும் இந்து மதம்; இந்தியா, மலேசியாவில் இருக்கும் இந்து மதத்தில் இருந்து சற்றே மாறுபட்டு உள்ளது. இருப்பினும் சில அடிப்படை வழிபாடுகள் அழிபடாமல் உள்ளன. 


கற்சிலைகளை வணங்குகிறார்கள். கல்லில் செய்யப்பட்ட லிங்க வடிவங்களை வழிபடுகிறார்கள். பெரும்பாலும் சிவ பக்தர்கள். இங்குள்ள கோயில்களும் சிவாலயங்களாகவே உள்ளன.

வியட்நாம் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உள்ளூர் சமுதாயமான 'சம்' பரம்பரையின் ஆட்சி நடைபெற்றது. ’சம்’ சமுதாயத்தில் இந்து மக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.

ஆனால் பிறகு அவர்களில் பலர் பெளத்தம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறி விட்டனர். இன்று இந்து சமூகம் இங்கே ஒரு சிறுபான்மைச் சமூகமாகக் குறுகி விட்டது.

சம்பா நிலப் பகுதியில் இப்போது நான்கு கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் இரண்டு கோயில்களில் மட்டும் இந்துமத வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்து மதம் முற்றிலுமாக அழிந்துவிடும் நிலையில் உள்ளது. 


வியட்நாமில் இப்போது 60,000 பூர்வீக இந்துக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் திருமணம்; காதணி விழா; திருவிழாக்கள் எல்லாம் இந்து மதம் சார்ந்தவையாக உள்ளன.

சம்பா சமூகம் இன்னும் நிலைத்து இருக்கிறது. ஆனால் அதற்கும் முந்தைய இந்து மதம் இங்கே அழிவின் விளிம்பில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் வியட்நாம் நாடு, இந்து மதத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தது. அந்த வகையில் இன்றும் சில பாரம்பரியங்கள் அங்கே பராமரிக்கப் படுகின்றன. எச்சம் மிச்சங்களைக் காண முடிகிறது.

சில பாரம்பரியங்கள் இன்று வரை தொடர்ந்தாலும், சில பல மாறுதல்களையும் காண முடிகிறது. அதே சமயத்தில் பல பண்பாடுகள் கால வெள்ளத்தில் தொலைந்து விட்டன. 


’பண்டைய காலத்தில், இந்தோசீனாவின் சம்பா அரசு; இந்து மதத்தின் கோட்டையாகத் திகழ்ந்தது. சம்பாவின் புராதன கோயில்களே அதற்கான சாட்சியங்களாக அமைகின்றன. வேறு சில கோயில்கள் இடிபாடுகளாகவும் எஞ்சி நிற்கின்றன.

ஆனாலும் அந்தச் சம்பா அரசு அண்மைய காலத்து வரலாற்றில் இருந்து சன்னம் சன்னமாய் மறைந்து வருகிறது. வேதனை.
    
ஒருகாலத்தில் தென்கிழக்கு ஆசியாவையே பல்லவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பாண்டியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். தமிழர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கீழ் கைகட்டி வாய் பொத்தி பேர் போட்ட ’ஐலசா ஐலசா’ மீன்பிடி இனங்கள் எல்லாம்; இன்றைய காலத்தில் பக்காவாக தெனாவெட்டு பேசிக் கொண்டு திரிகின்றன. செல்பி எடுத்து பிரேக் டான்ஸ் ஆடுகின்றன. காலத்தின் கோலம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.07.2021

சான்றுகள்:

1. Thurgood, Graham (1999). From Ancient Cham to Modern Dialects.

2. Ralph Bernard Smith (1979). Early South East Asia: essays in archaeology, history, and historical geography. Oxford University Press. p. 447.

3. Chatterji, B. (1939). JAYAVARMAN VII (1181-1201 A.D.) (The last of the great monarchs of Cambodia). Proceedings of the Indian History Congress. - www.jstor.org/stable/44252387

4. Hindus of Vietnam - Hindu Human Rights Online News Magazine". www.hinduhumanrights.info.

5. India's interaction with Southeast Asia, Volume 1, Part 3 By Govind Chandra Pande, Project of History of Indian Science, Philosophy, and Culture, Centre for Studies in Civilizations (Delhi, India).

6. https://en.wikipedia.org/wiki/Võ Cạnh inscription

 

16 ஜூலை 2021

மலர்ந்தும் மலராத மலர் குமுதா இராமன்

தமிழ் மலர் - 15.07.2021
 
இறைவன் இருக்கின்றானா
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்


கவிஞர் கண்ணதாசனின் அழகிய அற்புதமான வரிகள். அந்த வரிகளைப் படிக்கும் போதும் சரி; அந்தப் பாடலைக் கேட்கும் போதும் சரி; மனதிற்குள் ஒரு கேள்விக்குறி வந்து போகிறது.

நல்லது செய்பவர்களும் சரி; நல்லது நினைப்பவர்களும் சரி; சின்ன வயதில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதே சமயத்தில் கெட்டது செய்பவர்களும் சரி; கெட்டது நினைப்பவர்களும் சரி; நூறு வயதிலும் பாய்ச்சல் காட்டிக் கொண்டு இருக்கிறார்களே எனும் கேள்விக்குறி தான்.   


நதியில் விளையாடி கொடியில் தலை சீவி, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ஒரு மலேசியத் தமிழ்ப் பெண். சின்ன வயதிலேயே போய்ச் சேர்ந்து விட்டார். அவர்தான் குமுதா இராமன்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக நடந்த இளம் தென்றலாய்க் கலைந்தும் கலையாமல் போய்ச் சேர்ந்து விட்டார். வாழ வேண்டிய வயது. இந்தச் சமயத்தில் இறைவன் இருக்கின்றானா எனும் கண்ணதாசன் பாட்டும் நினைவிற்கு வந்து போகிறது. ஒரு செருகல்.

ஒரு நாட்டில் ஒரு தலைவர் இருந்தார். எந்த நாடு என்று கேட்க வேண்டாம். மஞ்சள் காக்காய்கள் மஞ்சள் கட்டி பறந்த நாடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தத் தலைவருக்குத் தலைக்கு மேல் ஏறி நிற்கும் வயது.

இருந்தாலும் அவரின் மஞ்சளாட்டம் கரகாட்டம் இன்றும்கூட ஓய்வதாக இல்லை. நான் இல்லாமல் நாடு இல்லை எனும் அவரின் அலைகளும் ஓய்வதாக இல்லை. அந்த மனிதருக்குத் தள்ளாத வயதிலும் பதவி ஆசைகள் விடுவதாகவும் இல்லை. விடுங்கள். நம்முடைய தமிழ்ப்பெண் குமுதா இராமன் கதைக்கு வருவோம்.

குமுதா இராமன், பாஸ் கட்சியின் ஆதரவாளர் தான். இருந்தாலும் அவர் ஒரு தமிழ்ப்பெண். பாஸ் கட்சியின் அரசியல் கொள்கைப் பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தமிழ்ப்பெண் என்று தாராளமாகச் சொல்லலாம்.

பாஸ் கட்சியின் சார்பில் மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட முதல் முஸ்லிம் அல்லாதவர் எனும் சிறப்பும் இவரிடம் உண்டு.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்; 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்’ இரு தேர்தல்களில் ஜொகூர் திராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜொகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அப்போதைய கிளந்தான் மந்திரி பெசார் நிக் அசீஸ் அவர்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று திராம் தொகுதியில் தேர்தலில் நின்று போட்டியிட்டார். அப்போது நிக் அசீஸ் கூறியதை நினைவு படுத்துகிறேன்.

’குமுதா ராமன் ஒர் இந்துவாக இருந்தாலும் பாஸ் கட்சி அவரைத் தன் கட்சியின் செல்லப் பிள்ளையாகப் பார்க்கிறது’ என்று கூறி இருக்கிறார்.

2008-ஆம் ஆண்டு தேர்தல் அவரின் முதல் தேர்தல். பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிட்டார். அம்னோ வேட்பாளர் மாவ்லிசான் பூஜாங்கிடம் 8,178 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஸ் ஆதரவாளர் மன்ற மகளிர் பிரிவுத் தலைவி எனும் தகுதியில் திராம் தொகுதியில் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் குமுதாவுக்கு 2,605 வாக்குகள்; பாரிசான் நேசனல், ம.சீ.ச.வைச் சேர்ந்த தான் செர் புக் (Tan Cher Puk) என்பவருக்கு 16,777 வாக்குகள்; பக்காத்தான் ஹரப்பான், ஜ.செ.க.வைச் சேர்ந்த லியோவ் சாய் துங் (Liow Cai Tung) என்பவருக்கு 32,342 வாக்குகள்.

குமுதா ராமன், மலேசியாவின் மகளிர், குடும்ப, சமூக நலத் துறை துணை அமைச்சர் சித்தி சைலா யூசோப் அவர்களின் சிறப்பு அதிகாரி. அதே வேளையில் பாஸ் கட்சி ஆதரவாளர் பிரிவின் மகளிர் அணி தலைவி. (Pegawai Khas at Kementerian Pembangunan Wanita,Keluarga Dan Masyarakat, Putrajaya and Ketua Wanita Dhpp Pusat dan Ketua Dhpp Negeri Johor at Parti Islam Semalaysia (PAS).

பாஸ் கட்சியைப் பிரதிநிதித்தாலும் அனைத்து மலேசிய மக்களின் ஒற்றுமை குறித்து நல்ல நல்ல சேவைகளைச் செய்து வந்தார்.

அவர் தம் சேவையின் போது இனம் பார்க்கவில்லை. மதம் பார்க்கவில்லை. பெண்களின் கிளிக் கூட்டத்தில் ஒரு பைங்கிளியாய் பறந்து திரிந்தவர்.

பத்து மலாய்க்காரப் பெண்கள் அமர்ந்து இருக்கும் கூட்டத்தில் இவர் மட்டும் தனித்து நின்றார். பச்சை நிற கெபாயா உடைகளில் தனித்து நின்றார். பத்து பெண்கள் பேசும் கூட்டத்தில் இவருடைய பேச்சு மட்டும் தனித்து நின்றது.

காரணம் குமுதா இராமனின் பேச்சுத் தன்மை. மலாய் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தன் கருத்துகளை முன் வைப்பதில் சிறந்து விளங்கினார்.

இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புத்ராஜெயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு வாரங்கள் போராட்டம். இரு தினங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்.

குமுதா இராமன், 1979 மே 19-ஆம் தேதி பிறந்தவர். வயது 42. திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போது கோவிட் 19 கதவைத் தட்டி இருக்கிறது.

இந்தக் கோவிட் 19 வந்ததும் போதும். உலகமே கிடுகிடுத்துப் போய் நிற்கிறது. உலகம் முழுமைக்கும் 4,065,804 உயிரிழப்புகள். மலேசியாவில் 6,260 உயிரிழப்புகள். அந்த இழப்புகளில் ஒருவர் குமுதா இராமன்.

மலேசியாவின் தென் கோடி மாநிலம் ஜொகூர். அந்த மாநிலத்தின் தலைநகர் ஜொகூர் பாரு. அங்கு ஒரு புறநகர்ப் பகுதி ஜொகூர் ஜெயா. அங்கு வளர்ந்தவர்.  ஜொகூர் ஜெயா (Sekolah Menengah Taman Johor Jaya 1) உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம். சுல்தான் இப்ராகிம் பெண்கள் பள்ளியில் (Sultan Ibrahim Girls School) ஆறாம் படிவம்.

அதன் பின்னர் இங்கிலாந்திற்குச் சென்றார். நியூகாசல் எனும் இடத்தில் இருக்கும் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் மலேசியாவுக்குத் திரும்பி ஒரு வங்கியில் சட்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.

இந்தக் கட்டத்தில் தான் பொதுச் சேவையில் அவர் ஈடுபட்டார். அப்படியே அரசியலில் காலடி எடுத்து வைத்தார். சில சமூகப் பொது அமைப்புகளிலும் தொடர்ந்து சேவைகள் செய்து வந்தார்.

பாஸ் கட்சி அண்மையில் தனது ஆதரவாளர் மன்றத்தை கட்சியின் ஒரு பிரிவாக தரம் உயர்த்தியது. பாஸ் சின்னத்தில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்வதே அதன் நோக்கமாகும். ஜோகூர் தொகுதியில் பாஸ் கட்சி, இஸ்லாம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்துவதில் முனைப்பு காட்டி வருவது

திராம் சட்டமன்றத் தொகுதியில், பாஸ் கட்சி வேட்பாளர் குமுதா ராமன், கடந்த 2008, 2013 இரண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும் முயற்சிகளைக் கைவிடவில்லை. தொடர்ந்து போராட்டம்.

2013 பொதுத்தேர்தலில் நகர்புறங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பெல்டா பகுதிகள் தான் கைகொடுக்கவில்லை. அப்போது குமுதா ராமன் சொன்னவை:

“மலேசியா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. மலேசியாவில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்; சபா சரவாக் பூர்வக் குடியினர் வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவில் பல மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றி வாழும் பல இன மக்கள் தங்கள் மனதில் "நாங்கள் மலேசியர்கள்" என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்தால் ஓர் ஐக்கிய மலேசியாவை உருவாக்கலாம்.

வேறுபட்ட கலை கலாசாரங்களையும்; வாழ்க்கை முறையையும் பின்பற்றினாலும் பல்லின மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.

ஒற்றுமை, தேசியவாதம் மற்றும் நாட்டின் மீது பற்று போன்ற சிறந்த குணங்கள் முந்தைய தேசிய தலைவர்களால் மக்களின் மனதில் பதியப்பட்டு விட்டன. துங்கு அப்துல் ரகுமான், துன் தன் செங் லோக்; துன் சம்பந்தன் போன்ற தலைவர்களின் கூட்டு முயற்சியினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது.

நான் மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவேன். நான் மட்டும் அல்ல. அனைத்து அரசியல் தலைவர்களும் செய்ய வேண்டும். இனம் மதம் பார்க்காமல் செயல்பட வேண்டும்.

“முன்னாள் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா. இவர் ஒரு சிறும்பான்மை இனத்தவராக இருந்தாலும், தன் நாட்டிற்காக நல்ல முறையில் செயலாற்றினார். உலகமே போற்றும் மனிதராக இன்றும் வாழ்கின்றார்.

“எனவே பொதுமக்கள், ஒரு தொகுயில் தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளர்களின் செயல் திறனை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வேட்பாளர்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதை உணர்ந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

உதவிகளும் சரி; வசதிகளும் சரி; எல்லா மலேசிய மக்களுக்கும், சரி சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மலேசியரும் தன் இனம், தன் மதம் என்ற போக்கை விடுத்து பிற இனத்தவருக்கு உதவ முன் வர வேண்டும் என்று குமுதா சொல்லி இருக்கிறார். அவர் எங்கே நிற்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாஸ் சமயக் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலும்; அந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று போட்டிப் போட்டு இருந்தாலும்; அவர் மதங்களைத் தாண்டிப் போய் நின்றார். ஒரே மலேசியா எனும் கொள்கையில் திடமாய் தீர்க்கமாய்ப் பயணித்து இருக்கின்றார். வாழ்த்துகிறேன் மகளே குமுதா.

தோல்விகளே வெற்றியின் அறிகுறிகள் என பல தோல்விகளைச் சந்தித்தவர் குமுதா ராமன். அந்தத் தோல்விகளை வெற்றிப் படிகளாக மாற்றும் கட்டத்தில் இறைவன் அழைத்துக் கொண்டார்.

நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு. ஆனால் குமுதாவின் நினைவுகளுக்கு ஒருபோதும் ஓய்வுகள் இல்லை. அந்த வகையில் ஒவ்வோர் இதயமும் மற்றோர் இதயத்தை நினைத்து நேசித்து கொண்டுதான் இருக்கும் அவரைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும். மலேசிய மண்ணில் மறைந்தும் மறையாத ஓர் அழகிய தமிழ்ப்பெண் குமுதா ராமன். இறைவன் அடிகளில் அவர் அமைதி கொள்வாராக!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.07.2021

பின்னூட்டங்கள்

Sathya Raman: வணக்கம் சார். இது தாமதமான பதிவு. கண்ணதாசனின் பாடல் வரிகளை ஒரு தலைப்பாக கொடுத்து ஏதோ சாதனை பெண்ணின் சரித்திரம் பற்றி எழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

குமுதா ராமனுக்கான கட்டுரை என்று புரிந்தது. மிக இளவயதில் இறைவனடி சேர்வது பெரிய இழப்பே. சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

கடைசி வரை அவர் எப்படி காலனுக்கு பலியானர் என்று குறிப்பிடவில்லையே?

பாஸ் கட்சியில் ஒரு நல்லவர் இருந்தார் என்றால் அது காலஞ்சென்ற நிக் அஸிஸ் அவர்கள்தான். இன்றைய பாஸ் கட்சியை நினைக்கையில் பற்றிக் கொண்டு வருகிறது. கொள்கையே இல்லாத சந்தர்ப்பவாதிகள்.

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman தொடர்ந்து பின்னூட்டங்கள் வழங்கி வரும் அன்பர்களில் ஒருவர்... வாழ்த்துகள் சகோதரி.

பொதுவாகக் கட்டுரையைத் தயாரித்த பின்னர் இரண்டு முறை படித்து விட்டுத்தான் அனுப்புவேன். நேரமாகி விட்டால் சமயங்களில் படிக்காமல் அவசரம் அவசரமாக அனுப்புவதும் உண்டு. நாளைய பத்திரிகையில் வர வேண்டுமே! (சிரிக்க வேண்டாம்)

ஆங்கிலத் தகவல்களைத் தமிழுக்கு கொண்டு வந்து தொகுக்கும் போது சில கருத்துகள் நம்மை அறியாமல் விடப் படுவதும் உண்டு.

எல்லாம் சரி என்று உறுதி படுத்திய பின்னர் தான் மின்னஞ்சலுக்குச் செல்லும்.

சமயங்களில் ஆசிரியர் குழுவினரும் நம் மீது உள்ள நம்பிக்கையில் எழுதிய கட்டுரையை அப்படியே போட்டு விடுவார்கள். என்ன ஏது என்று கேட்கவும் மாட்டார்கள். அச்சில் ஒரு சில எழுத்துப் பிழைகள் வருவதையும் கவனிக்கலாம். மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் போன் போட்டு அனுமதி கேட்பார்கள். நல்ல பழக்கம்.

தவறுகள் நடந்து இருந்தால் மறுநாள் பத்திரிகையில் படித்த பின்னர் தெரிந்து கொள்வேன். அந்த மாதிரி விடுபட்ட போவதில் நீங்கள் கேட்டதும் ஒன்றுதான். அவர் கோவிட் நோயினால் உயிர் துறந்தார். நன்றிங்க சகோதரி. தொடர்ந்து பயணிப்போம். வாழ்த்துகள்

Elan Ada: பாஸ் அரசியல் கட்சி நாட்டை நாசமாக்கி விடும் ஆட்சிக்கு வந்தால். "சேரிடம் அறிந்து சேர்" எனும் தெளிவு வேண்டும்.

Arjunan Arjunankannaya: நாட்டின் குழப்பத்திற்கு காரணம் பாஸ் கட்சியின் அரசியலும் அம்னோவின் அரசியலும்.

Selva Mani: கர்ணன் நல்லவன்" தான், இருந்தாலும் அவன் சேர்ந்த இடம்தான் சரியில்லை!

கதிர்காமநாதன் சே: இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அளித்த பங்களிப்பு என்ன?

MP Tarah: மலர்ந்தும் மலராத குமுதா இராமனின் கட்டுரையை படித்தேன் கண்கள் குளமாகியது, வேதனையிலும் வேதனையானது. இது போன்று இனி வேறு யாருக்குமே வரவேண்டாம்.

Poovamal Nantheni Devi: நல்ல பதிவு. குமுதா ராமனுக்கு ஆழ்ந்த இரங்கல்.







 

14 ஜூலை 2021

பினாங்கு தமிழர்களின் 1845-ஆம் ஆண்டு ஓவியம்

டாக்டர் எட்வர்ட் ஹோட்ஜஸ் கிரி (Dr Edward Hodges Cree) என்பவர் ஒரு பிரிட்டிஷ் மருத்துவர். ஓர் ஓவியர். 1840-ஆம் ஆண்டுகளில் பினாங்கு தீவில் சில ஆண்டுகள் வாழ்ந்தவர். அப்போது பினங்குத் தீவின் சாலைகளப் படங்களாக வரைந்து உள்ளார்.
அவற்றில் ஒரு சாலையில் தமிழர்கள் முண்டாசு வேட்டியுடன் பயணிப்பதையும் ஓவியமாகத் தீட்டி உள்ளார். அந்தப் படம் 1845-ஆம் ஆண்டு வரையப் பட்டது.

இதில் இருந்து ஓர் உண்மை தெரிய வருகிறது. 1840-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தமிழர்கள் பினாங்கு தீவில் வாழ்ந்து இருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் இருந்து வாழ்ந்தும் வருகிறார்கள்.


அவர்களின் போதாத காலம். எழுத்துப் படிப்பறிவு குறைவாக இருந்து இருக்கலாம். அதன் காரணமாக அவர்கள் கண்டு கொள்ளப் படாமல் இருந்து இருக்கலாம். அதனால் அவர்களின் உரிமைகள் இழக்கப் படலாமா? ஒரு முக்கியமான விசயம்.

இக்கரையில் பிரதமர் என்று பேர் போட்ட ஒருவரின் மூதாதையர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அவரே ஒப்புக் கொண்டு இருக்கிறார். 1900-ஆம் ஆண்டுகளில் குடியேறியவர்கள் என்றும் ஒப்புக் கொள்கிறார்.

அப்படி இருக்கும் போது அவருக்கு முன்னால் பினாங்குத் தீவில் குடியேறிய தமிழர்களைத் தரம் தாழ்த்திச் சொல்வதில் என்னங்க நியாயம் இருக்கிறது.

இப்படிப்பட்ட அரிய படங்களை வெளிக் கொணர்வதின் மூலம் மலாயா தமிழர்களின் வரலாறு உறுதிபடுத்தப் படுகிறது. ஒரு பக்கம் மிதிக்கப் படும் போது இன்னொரு பக்கம் முளைத்து வருகிறது. அவ்வளவுதான்.

அந்த ஓவியம் வரையப்ப்ட்ட காலக் கட்டத்தில் புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்படவில்லை. 1885-ஆம் ஆண்டுதான் புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னர் காட்சிகள் எல்லாம் ஓவியங்களாகத் தீட்டப் பட்டன. 

டாக்டர் எட்வர்ட் ஹோட்ஜஸ் கிரி, 1814 ஜனவரி 14-ஆம் தேதி இங்கிலாந்து, டெவன்போர்ட் எனும் இடத்தில் பிறந்தவர். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். 1837-ஆம் ஆண்டில் பட்டம் பெற்று கடற்படையில் இணைந்தவர்.


1841-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார். 1845-ஆம் ஆண்டு பினாங்குத் தமிழர்களின் படங்களை வரைந்தார். அவர் வரைந்த படத்தில் ஐந்து தமிழர்களைக் காண முடிகிறது. இது மலாயா தமிழர்களைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவு.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.07.2021

படத்தைப் பற்றிய விவரங்கள்:
 

1. Edward H. Cree's watercolor painting: a street in Penang, 1845 (Source: Penang Views 1770-1860)
2. Edward H. Cree  (Oct 10 1841 – 1901)
3. Contributor: The Picture Art Collection
4. Authority control : Q26202506 VIAF:70271977 RKD:19031 1163 Tching Hie - Image ID: MNXKJT

நூல் வடிவ மேற்கோள்:

1. Penang views 1770-1860; Lim, Chong Keat, Datuk; Visual Arts; History in art--Malaysia--Pinang Island (Pinang); Penang Museum by Summer Times Pub., 1986

சான்றுகள்:

1.Source: https://www.researchgate.net/figure/Edward-H-Crees-watercolor-painting-a-street-in-Penang-1845-Source-Penang-Views_fig9_330224821

2.  Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society
Vol. 71, No. 2 (275) (1998), pp. 123

3. https://collections.rmg.co.uk/archive/objects/485369.html

4.https://eresources.nlb.gov.sg/printheritage/detail/a4aed4de-eda0-4236-908c-9f188c22e52a.aspx

பின்னூட்டங்கள்

Sathya Raman: நாங்களே இந்த நாட்டை கண்டு பிடித்தோம். எங்களுக்கே எல்லா சுகங்களும் என்று சொந்தம் கொண்டாடும் சோம்பேறிகளுக்கு சிம்ம சொம்ணாங்களாக இந்தப் பதிவில் பொதிந்த ஓவியங்கள். வீழ்ந்தாலும், தாழ்ந்தாலும் விருட்சமாகவே வாழும் எம் இனம். நன்றிங்க சார்.

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman: நம் வரலாற்றை எப்படியாவது இல்லாமல் செய்து விட வேண்டும். அதற்காக என்ன என்னவோ செய்து கொண்டு வருகிறார்கள். ஒரு பக்கம் கதவை அடைத்தால் இன்னொரு பக்கம் திறந்து விடுகிறோம். அவர்கள் ஒரு படி ஏறி ஏதாவது சொல்லி மறைக்கும் போது நம்மில் சிலர் அதற்கும் மேலே ஒரு படி ஏறி காத்து நிற்கிறோம்.

பேஸ்புக் ஆங்கில வரலாற்றுக் குழுக்கள் உள்ளன. உள்நாடு வரலாற்றுச் சித்தர்கள் செம்மையாக மாட்டிக் கொண்டு வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.

Maha Lingam: நன்றி வாழ்த்துகள். அற்புதமான சரித்திர நிகழ்வை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்... இளையோர்களுக்கு மிக மிக அவசியமானது.... நன்றி. நன்றி...
வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்...

Muthukrishnan Ipoh >>>> Maha Lingam: கருத்துகளுக்கு மிக நன்றிங்க. தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை.

Sharma Muthusamy

Supremaniam Nagamuthu: உங்கள் கட்டுரைகள் தான் தமிழர் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கருதுகிறேன். ஐயா மிகவும் நன்றி

Muthukrishnan Ipoh >>>> Supremaniam Nagamuthu: அதற்காகத்தான் நாம் இயன்ற வரையில் போராடிக் கொண்டு இருக்கிறோம்.

Francis Silvan: Great research brother....

Muthukrishnan Ipoh >>>> Francis Silvan மகிழ்ச்சி ஐயா

Raghawan Krishnan: Wow. Hari ini dalam Sejarah Ku. Malaysian Indian. congrats Dear MK.

Muthukrishnan Ipoh >>>> Raghawan Krishnan: நன்றிங்க ஆசிரியர் இராகவன் அவர்களே. தங்களின் ஆறுதலான ஊக்கமுறுச் சொற்கள் மென்மேலும் உற்சாகத்தை வழங்குகின்றன.

Rajan Ramasamy: Migavum Arumai Ayya

Muthukrishnan Ipoh >>>> Rajan Ramasamy மிக்க நன்றிங்க.

Bobby Sinthuja: ஐயா, உங்கள் கட்டுரைகள் அனைத்தும் வரலாற்று விடயங்களை சிறப்பாக கூறுகின்றது...

Palaniappan Kuppusamy