16 ஜூலை 2021

மலர்ந்தும் மலராத மலர் குமுதா இராமன்

தமிழ் மலர் - 15.07.2021
 
இறைவன் இருக்கின்றானா
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்


கவிஞர் கண்ணதாசனின் அழகிய அற்புதமான வரிகள். அந்த வரிகளைப் படிக்கும் போதும் சரி; அந்தப் பாடலைக் கேட்கும் போதும் சரி; மனதிற்குள் ஒரு கேள்விக்குறி வந்து போகிறது.

நல்லது செய்பவர்களும் சரி; நல்லது நினைப்பவர்களும் சரி; சின்ன வயதில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதே சமயத்தில் கெட்டது செய்பவர்களும் சரி; கெட்டது நினைப்பவர்களும் சரி; நூறு வயதிலும் பாய்ச்சல் காட்டிக் கொண்டு இருக்கிறார்களே எனும் கேள்விக்குறி தான்.   


நதியில் விளையாடி கொடியில் தலை சீவி, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ஒரு மலேசியத் தமிழ்ப் பெண். சின்ன வயதிலேயே போய்ச் சேர்ந்து விட்டார். அவர்தான் குமுதா இராமன்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக நடந்த இளம் தென்றலாய்க் கலைந்தும் கலையாமல் போய்ச் சேர்ந்து விட்டார். வாழ வேண்டிய வயது. இந்தச் சமயத்தில் இறைவன் இருக்கின்றானா எனும் கண்ணதாசன் பாட்டும் நினைவிற்கு வந்து போகிறது. ஒரு செருகல்.

ஒரு நாட்டில் ஒரு தலைவர் இருந்தார். எந்த நாடு என்று கேட்க வேண்டாம். மஞ்சள் காக்காய்கள் மஞ்சள் கட்டி பறந்த நாடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தத் தலைவருக்குத் தலைக்கு மேல் ஏறி நிற்கும் வயது.

இருந்தாலும் அவரின் மஞ்சளாட்டம் கரகாட்டம் இன்றும்கூட ஓய்வதாக இல்லை. நான் இல்லாமல் நாடு இல்லை எனும் அவரின் அலைகளும் ஓய்வதாக இல்லை. அந்த மனிதருக்குத் தள்ளாத வயதிலும் பதவி ஆசைகள் விடுவதாகவும் இல்லை. விடுங்கள். நம்முடைய தமிழ்ப்பெண் குமுதா இராமன் கதைக்கு வருவோம்.

குமுதா இராமன், பாஸ் கட்சியின் ஆதரவாளர் தான். இருந்தாலும் அவர் ஒரு தமிழ்ப்பெண். பாஸ் கட்சியின் அரசியல் கொள்கைப் பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தமிழ்ப்பெண் என்று தாராளமாகச் சொல்லலாம்.

பாஸ் கட்சியின் சார்பில் மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட முதல் முஸ்லிம் அல்லாதவர் எனும் சிறப்பும் இவரிடம் உண்டு.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்; 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்’ இரு தேர்தல்களில் ஜொகூர் திராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜொகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அப்போதைய கிளந்தான் மந்திரி பெசார் நிக் அசீஸ் அவர்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று திராம் தொகுதியில் தேர்தலில் நின்று போட்டியிட்டார். அப்போது நிக் அசீஸ் கூறியதை நினைவு படுத்துகிறேன்.

’குமுதா ராமன் ஒர் இந்துவாக இருந்தாலும் பாஸ் கட்சி அவரைத் தன் கட்சியின் செல்லப் பிள்ளையாகப் பார்க்கிறது’ என்று கூறி இருக்கிறார்.

2008-ஆம் ஆண்டு தேர்தல் அவரின் முதல் தேர்தல். பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிட்டார். அம்னோ வேட்பாளர் மாவ்லிசான் பூஜாங்கிடம் 8,178 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஸ் ஆதரவாளர் மன்ற மகளிர் பிரிவுத் தலைவி எனும் தகுதியில் திராம் தொகுதியில் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் குமுதாவுக்கு 2,605 வாக்குகள்; பாரிசான் நேசனல், ம.சீ.ச.வைச் சேர்ந்த தான் செர் புக் (Tan Cher Puk) என்பவருக்கு 16,777 வாக்குகள்; பக்காத்தான் ஹரப்பான், ஜ.செ.க.வைச் சேர்ந்த லியோவ் சாய் துங் (Liow Cai Tung) என்பவருக்கு 32,342 வாக்குகள்.

குமுதா ராமன், மலேசியாவின் மகளிர், குடும்ப, சமூக நலத் துறை துணை அமைச்சர் சித்தி சைலா யூசோப் அவர்களின் சிறப்பு அதிகாரி. அதே வேளையில் பாஸ் கட்சி ஆதரவாளர் பிரிவின் மகளிர் அணி தலைவி. (Pegawai Khas at Kementerian Pembangunan Wanita,Keluarga Dan Masyarakat, Putrajaya and Ketua Wanita Dhpp Pusat dan Ketua Dhpp Negeri Johor at Parti Islam Semalaysia (PAS).

பாஸ் கட்சியைப் பிரதிநிதித்தாலும் அனைத்து மலேசிய மக்களின் ஒற்றுமை குறித்து நல்ல நல்ல சேவைகளைச் செய்து வந்தார்.

அவர் தம் சேவையின் போது இனம் பார்க்கவில்லை. மதம் பார்க்கவில்லை. பெண்களின் கிளிக் கூட்டத்தில் ஒரு பைங்கிளியாய் பறந்து திரிந்தவர்.

பத்து மலாய்க்காரப் பெண்கள் அமர்ந்து இருக்கும் கூட்டத்தில் இவர் மட்டும் தனித்து நின்றார். பச்சை நிற கெபாயா உடைகளில் தனித்து நின்றார். பத்து பெண்கள் பேசும் கூட்டத்தில் இவருடைய பேச்சு மட்டும் தனித்து நின்றது.

காரணம் குமுதா இராமனின் பேச்சுத் தன்மை. மலாய் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தன் கருத்துகளை முன் வைப்பதில் சிறந்து விளங்கினார்.

இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புத்ராஜெயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு வாரங்கள் போராட்டம். இரு தினங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்.

குமுதா இராமன், 1979 மே 19-ஆம் தேதி பிறந்தவர். வயது 42. திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போது கோவிட் 19 கதவைத் தட்டி இருக்கிறது.

இந்தக் கோவிட் 19 வந்ததும் போதும். உலகமே கிடுகிடுத்துப் போய் நிற்கிறது. உலகம் முழுமைக்கும் 4,065,804 உயிரிழப்புகள். மலேசியாவில் 6,260 உயிரிழப்புகள். அந்த இழப்புகளில் ஒருவர் குமுதா இராமன்.

மலேசியாவின் தென் கோடி மாநிலம் ஜொகூர். அந்த மாநிலத்தின் தலைநகர் ஜொகூர் பாரு. அங்கு ஒரு புறநகர்ப் பகுதி ஜொகூர் ஜெயா. அங்கு வளர்ந்தவர்.  ஜொகூர் ஜெயா (Sekolah Menengah Taman Johor Jaya 1) உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம். சுல்தான் இப்ராகிம் பெண்கள் பள்ளியில் (Sultan Ibrahim Girls School) ஆறாம் படிவம்.

அதன் பின்னர் இங்கிலாந்திற்குச் சென்றார். நியூகாசல் எனும் இடத்தில் இருக்கும் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் மலேசியாவுக்குத் திரும்பி ஒரு வங்கியில் சட்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.

இந்தக் கட்டத்தில் தான் பொதுச் சேவையில் அவர் ஈடுபட்டார். அப்படியே அரசியலில் காலடி எடுத்து வைத்தார். சில சமூகப் பொது அமைப்புகளிலும் தொடர்ந்து சேவைகள் செய்து வந்தார்.

பாஸ் கட்சி அண்மையில் தனது ஆதரவாளர் மன்றத்தை கட்சியின் ஒரு பிரிவாக தரம் உயர்த்தியது. பாஸ் சின்னத்தில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்வதே அதன் நோக்கமாகும். ஜோகூர் தொகுதியில் பாஸ் கட்சி, இஸ்லாம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்துவதில் முனைப்பு காட்டி வருவது

திராம் சட்டமன்றத் தொகுதியில், பாஸ் கட்சி வேட்பாளர் குமுதா ராமன், கடந்த 2008, 2013 இரண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும் முயற்சிகளைக் கைவிடவில்லை. தொடர்ந்து போராட்டம்.

2013 பொதுத்தேர்தலில் நகர்புறங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பெல்டா பகுதிகள் தான் கைகொடுக்கவில்லை. அப்போது குமுதா ராமன் சொன்னவை:

“மலேசியா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. மலேசியாவில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்; சபா சரவாக் பூர்வக் குடியினர் வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவில் பல மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றி வாழும் பல இன மக்கள் தங்கள் மனதில் "நாங்கள் மலேசியர்கள்" என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்தால் ஓர் ஐக்கிய மலேசியாவை உருவாக்கலாம்.

வேறுபட்ட கலை கலாசாரங்களையும்; வாழ்க்கை முறையையும் பின்பற்றினாலும் பல்லின மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.

ஒற்றுமை, தேசியவாதம் மற்றும் நாட்டின் மீது பற்று போன்ற சிறந்த குணங்கள் முந்தைய தேசிய தலைவர்களால் மக்களின் மனதில் பதியப்பட்டு விட்டன. துங்கு அப்துல் ரகுமான், துன் தன் செங் லோக்; துன் சம்பந்தன் போன்ற தலைவர்களின் கூட்டு முயற்சியினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது.

நான் மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவேன். நான் மட்டும் அல்ல. அனைத்து அரசியல் தலைவர்களும் செய்ய வேண்டும். இனம் மதம் பார்க்காமல் செயல்பட வேண்டும்.

“முன்னாள் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா. இவர் ஒரு சிறும்பான்மை இனத்தவராக இருந்தாலும், தன் நாட்டிற்காக நல்ல முறையில் செயலாற்றினார். உலகமே போற்றும் மனிதராக இன்றும் வாழ்கின்றார்.

“எனவே பொதுமக்கள், ஒரு தொகுயில் தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளர்களின் செயல் திறனை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வேட்பாளர்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதை உணர்ந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

உதவிகளும் சரி; வசதிகளும் சரி; எல்லா மலேசிய மக்களுக்கும், சரி சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மலேசியரும் தன் இனம், தன் மதம் என்ற போக்கை விடுத்து பிற இனத்தவருக்கு உதவ முன் வர வேண்டும் என்று குமுதா சொல்லி இருக்கிறார். அவர் எங்கே நிற்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாஸ் சமயக் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலும்; அந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று போட்டிப் போட்டு இருந்தாலும்; அவர் மதங்களைத் தாண்டிப் போய் நின்றார். ஒரே மலேசியா எனும் கொள்கையில் திடமாய் தீர்க்கமாய்ப் பயணித்து இருக்கின்றார். வாழ்த்துகிறேன் மகளே குமுதா.

தோல்விகளே வெற்றியின் அறிகுறிகள் என பல தோல்விகளைச் சந்தித்தவர் குமுதா ராமன். அந்தத் தோல்விகளை வெற்றிப் படிகளாக மாற்றும் கட்டத்தில் இறைவன் அழைத்துக் கொண்டார்.

நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு. ஆனால் குமுதாவின் நினைவுகளுக்கு ஒருபோதும் ஓய்வுகள் இல்லை. அந்த வகையில் ஒவ்வோர் இதயமும் மற்றோர் இதயத்தை நினைத்து நேசித்து கொண்டுதான் இருக்கும் அவரைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும். மலேசிய மண்ணில் மறைந்தும் மறையாத ஓர் அழகிய தமிழ்ப்பெண் குமுதா ராமன். இறைவன் அடிகளில் அவர் அமைதி கொள்வாராக!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.07.2021

பின்னூட்டங்கள்

Sathya Raman: வணக்கம் சார். இது தாமதமான பதிவு. கண்ணதாசனின் பாடல் வரிகளை ஒரு தலைப்பாக கொடுத்து ஏதோ சாதனை பெண்ணின் சரித்திரம் பற்றி எழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

குமுதா ராமனுக்கான கட்டுரை என்று புரிந்தது. மிக இளவயதில் இறைவனடி சேர்வது பெரிய இழப்பே. சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

கடைசி வரை அவர் எப்படி காலனுக்கு பலியானர் என்று குறிப்பிடவில்லையே?

பாஸ் கட்சியில் ஒரு நல்லவர் இருந்தார் என்றால் அது காலஞ்சென்ற நிக் அஸிஸ் அவர்கள்தான். இன்றைய பாஸ் கட்சியை நினைக்கையில் பற்றிக் கொண்டு வருகிறது. கொள்கையே இல்லாத சந்தர்ப்பவாதிகள்.

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman தொடர்ந்து பின்னூட்டங்கள் வழங்கி வரும் அன்பர்களில் ஒருவர்... வாழ்த்துகள் சகோதரி.

பொதுவாகக் கட்டுரையைத் தயாரித்த பின்னர் இரண்டு முறை படித்து விட்டுத்தான் அனுப்புவேன். நேரமாகி விட்டால் சமயங்களில் படிக்காமல் அவசரம் அவசரமாக அனுப்புவதும் உண்டு. நாளைய பத்திரிகையில் வர வேண்டுமே! (சிரிக்க வேண்டாம்)

ஆங்கிலத் தகவல்களைத் தமிழுக்கு கொண்டு வந்து தொகுக்கும் போது சில கருத்துகள் நம்மை அறியாமல் விடப் படுவதும் உண்டு.

எல்லாம் சரி என்று உறுதி படுத்திய பின்னர் தான் மின்னஞ்சலுக்குச் செல்லும்.

சமயங்களில் ஆசிரியர் குழுவினரும் நம் மீது உள்ள நம்பிக்கையில் எழுதிய கட்டுரையை அப்படியே போட்டு விடுவார்கள். என்ன ஏது என்று கேட்கவும் மாட்டார்கள். அச்சில் ஒரு சில எழுத்துப் பிழைகள் வருவதையும் கவனிக்கலாம். மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் போன் போட்டு அனுமதி கேட்பார்கள். நல்ல பழக்கம்.

தவறுகள் நடந்து இருந்தால் மறுநாள் பத்திரிகையில் படித்த பின்னர் தெரிந்து கொள்வேன். அந்த மாதிரி விடுபட்ட போவதில் நீங்கள் கேட்டதும் ஒன்றுதான். அவர் கோவிட் நோயினால் உயிர் துறந்தார். நன்றிங்க சகோதரி. தொடர்ந்து பயணிப்போம். வாழ்த்துகள்

Elan Ada: பாஸ் அரசியல் கட்சி நாட்டை நாசமாக்கி விடும் ஆட்சிக்கு வந்தால். "சேரிடம் அறிந்து சேர்" எனும் தெளிவு வேண்டும்.

Arjunan Arjunankannaya: நாட்டின் குழப்பத்திற்கு காரணம் பாஸ் கட்சியின் அரசியலும் அம்னோவின் அரசியலும்.

Selva Mani: கர்ணன் நல்லவன்" தான், இருந்தாலும் அவன் சேர்ந்த இடம்தான் சரியில்லை!

கதிர்காமநாதன் சே: இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அளித்த பங்களிப்பு என்ன?

MP Tarah: மலர்ந்தும் மலராத குமுதா இராமனின் கட்டுரையை படித்தேன் கண்கள் குளமாகியது, வேதனையிலும் வேதனையானது. இது போன்று இனி வேறு யாருக்குமே வரவேண்டாம்.

Poovamal Nantheni Devi: நல்ல பதிவு. குமுதா ராமனுக்கு ஆழ்ந்த இரங்கல்.







 

3 கருத்துகள்:

  1. அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினரின் நண்பர் என்ற முறையில், எனக்கு நன்கு அறிமுகமானவர் சகோதரி குமுதா.

    நல்ல பண்பாளர். எப்போதும் சிரித்த முகம்.

    அவர் மறைவு மிகவும் அதிர்ச்சியும் வேதனையை தந்தது. அவர் ஆத்ம சாந்தி பெற பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்! நல்ல பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. சி. பாலமுருகன் ஜோதிடர் கோயமுத்தூர் தமிழ்நாடு இந்தியா . +917708756510 நன்றி

    பதிலளிநீக்கு