28 ஜூன் 2020

மொரீஷியஸ் வீரப்பெண்மணி அஞ்சலை குப்பன்

மொரீஷியஸ் (Mauritius) ஒரு சின்ன நாடு. ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் ஒரு தீவு. மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது. 


மொரீஷியஸ் நாட்டில் 68 விழுக்காடு இந்திய வம்சாவழியினர்; 27 விழுக்காடு ஆப்பிரிக்க வம்சாவழியினர்; 3 விழுக்காடு சீன வம்சாவழியினர்; 2 விழுக்காடு பிரிட்டீஷ் வம்சாவழியினர்.

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். இந்தத் தீவில் தான் ஒரு தமிழ்ப் பெண்மணி சாதனை படைத்து இருக்கிறார். அவர்தான் அஞ்சலை குப்பன்.

நவீன மொரீஷியஸின் வரலாற்றில் ஒரு முக்கிய மாந்தராகக் கருதப் படுகிறார். மொரீஷிய மக்களின் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளார். 


அஞ்சலை குப்பன் - 1940-ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் காலனித்துவ கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர். மொரீஷியஸ் சர்க்கரைத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகப் போராடியவர். அந்த நாட்டுத் தொழிலாளர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடியவர்.

பெண்களின் விடுதலைக்கான போராட்டக் களத்திலும் இறங்கியவர். சீனித் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி உரிமைப் போராட்டங்களை முன்வைத்தவர்.

அஞ்சலை குப்பன் அல்லது அஞ்சலை திவாகரன்; 1911 பிப்ரவரி 17-ஆம் தேதி மொரீஷியஸ் தீவில் பிறந்தவர். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

1943 செப்டம்பர் 13-ஆம் தேதி பெல்லி வியூ ஹாரேல் (Belle Vue Harel) எனும் சீனி தோட்டத்தில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது. அதில் அஞ்சலையும் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் பெரிதாகவே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.


அந்தக் கலவரத்தில் நால்வர் உயிர் இழந்தார்கள். அஞ்சலை குப்பனைத் தவிர்த்து மேலும் மூவர். கிருஷ்ணசாமி முனுசாமி (Kistnasamy Mooneesamy); முனுசாமி முனியன் (Moonsamy Moonien; மருதை பானப்பன் (Marday Panapen). இந்த நிகழ்ச்சியைப் பெல்லி வியூ ஹாரேல் படுகொலை (Belle Vue Harel massacre) என்று வர்ணிக்கிறார்கள்.

அஞ்சலை இறக்கும் போது அவருக்கு வயது 32. நிறைமாத கர்ப்பிணி. முதல் பிரசவத்திற்கு முன்னரே பலியானார்.

அஞ்சலை குப்பனுக்காக மொரீஷியஸ் தலைநகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) அபரவாசி (Aapravasi Ghat) வளாகத்தில் சிலை வைத்து இருக்கிறார்கள்.

1968-ஆம் ஆண்டு மொரீஷியஸ் சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர், 1995-ஆம் ஆண்டில் அவருக்குச் சிலை வைக்கப் பட்டது. அப்போதைய மொரீஷியஸ் பிரதமர் சர் அனரூட் ஜுக்நாத் (Sir Anerood Jugnauth) திறப்பு விழா செய்தார். 


தவிர அவருடைய பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் அஞ்சலை விளையாட்டரங்கம் (Anjalay Stadium, Belle Vue, Mauritius).

2000 டிசம்பர் 13-ஆம் தேதி அவருக்காக அஞ்சலை தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள்.

இந்தத் தீவின் மொத்த நீளம் 65 கி.மீ. அகலம் 45 கி.மீ. அவ்வளவு தான். தீவின் மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ. 2016 ஜூலை மாதக் கணக்குபடி மொரீஷியஸ் தீவின் மக்கள் தொகை 1,262,132.

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் உயர்க் கல்விமான்களாகவும் கிராமத் தலைவர்களாகவும் சேவை செய்து இருக்கிறார்கள். அஞ்சலை குப்பனைப் பற்றிய முழுக்கட்டுரை விரைவில் தமிழ் மலர் நாளிதழில் வெளிவரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.06.2020



27 ஜூன் 2020

மஜபாகித் மகாராணியார் சுகிதா

தமிழ் மலர் - 27.06.2020

இந்தோனேசியாவை ஆட்சி செய்த பேரரசுகளில் ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு எனும் இருப் பேரரசுகளும் மிகவும் புகழ்ப் பெற்றவை. இவற்றுள் மஜபாகித் பேரரசு 1293–ஆம் ஆண்டில் இருந்து 1517-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது.



மஜபாகித் பேரரசை 13 அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் இருவர் பெண்கள்.

1. மகாராணியார் திரிபுவனா விஜயதுங்காதேவி (Tribhuwana Wijayatunggadewi) - ஆட்சிக்காலம் (1328 – 1350)

2. மகாராணியார் சுகிதா (Suhita எனும் Soheeta) - ஆட்சிக்காலம் (1429 – 1447)

மகாராணியார் சுகிதா என்பவர் மஜபாகித் அரசர்களில் ஆறாவதாக வருகிறார். இவர் மஜபாகித் அரசர் விக்ரமவரதனா (Wikramawardhana) என்பவரின் மகளாவார். விக்ரமவரதனா என்பவர் மஜபாகித் அரசர்களில் ஐந்தாவது அரசர்.



மகாராணியார் சுகிதாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் இந்தோனேசியாவை ஆட்சி செய்த மற்ற பெண்கள் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். அவர்கள் அனைவருமே மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய மாபெரும் பெண்ணரசிகள். மகா பேரரசியார்கள்.

பேரரசியார் என்பது வேறு. மகா பேரரசியார் என்பது வேறு. ஒரு பெண்ணின் கணவர் பேரரசராக இருந்தால் அவரின் துணைவியாரைப் பேரரசியார் என்று அழைக்கலாம்.

அதே பெண்மணி கணவர் துணை இல்லாமல் தன்னிச்சையாக ஒரு நாட்டை ஆட்சி செய்தார் என்றால் அவரை மகா பேரரசியார் என்று அழைக்க வேண்டும்.



இந்தோனேசியாவில் இந்து மதத்தைப் பின்னணியாகக் கொண்ட மகா பேரரசியார்களின் பட்டியல் வருகிறது. கவனியுங்கள்.

1. மகாராணியார் சீமா சத்தியா (Queen Shima Satya); கலிங்கப் பேரரசு (கி.பி. 674)

2. இசையானா துங்கா விஜயா (Isyana Tunggawijaya); மேடாங் பேரரசு (கி.பி. 947)

3. ஆர்ஜெயா ஜெயகீர்த்தனா (Arjaya jayaketana); பாலி பேரரசு (கி.பி. 1200)

4. திரிபுவன விஜயதுங்கா தேவி (Tribhuwana Wijayatunggadewi); மஜபாகித் பேரரசு (கி.பி. 1328 - 1350)

5. சுகித்தா (Suhita); மஜபாகித் பேரரசு (கி.பி. 1429 - 1447)

6. மகாராணி ரத்னா காஞ்சனா (Queen Kalinyamat); கல்யாணமதா சிற்றரசு (கி.பி. 1549) 



இந்தக் கட்டத்தில் இந்தோனேசியாவில் ஆச்சே பேரரசை மறந்துவிடக் கூடாது. சுமத்திரா தீவில் ஆச்சே பேரரசு என்பது நீண்ட ஒரு வரலாற்றைக் கொண்ட பேரரசு.

முன்பு காலத்தில் ஆச்சே பேரரசு (Acheh) சின்ன அரசு தான். சிற்றரசாக இருந்து பேரரசாக மாறிய ஓர் அரசு.

இந்த ஆச்சேயில் தான் பெரிய பெரிய வரலாறுகள் எல்லாம் புதைந்து கிடக்கின்றன. இந்தோனேசியா வரலாற்றில் ஆச்சே வரலாறு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு முதன்மை வகிக்கிறது.

பாசாய் (Pasai) நாட்டை ரதி நரசியா (Ratu Nahrasyiyah) எனும் மகாராணியார் 28 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார். 1400-ஆம் ஆண்டில் இருந்து 1428-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார். இவரைப் பற்றி பின்னர் தெரிந்து கொள்வோம்.



இந்தோனேசியாவை ஆட்சி செய்த இஸ்லாமிய மகாராணியார்கள் பட்டியல் வருகிறது. அதையும் கவனியுங்கள்.

1. நூர் இலா (Sultanah Ratu Nur Ilah); (கி.பி. 1346 - 1383))

2. ரதி நரசியா (Nahrasiyah Rawangsa Khadiyu); (கி.பி. 1405 - 1428)

3. இனயாட் ஜக்கியாதுடின் ஷா (Inayat Zakiatuddin Syah); (கி.பி. 1678 - 1688)

4. நூருல் ஆலாம் நகியாதுடின் ஷா (Nurul Alam Naqiatuddin Syah); (கி.பி. 1675 - 1678)

5. தாஜ் உல் ஆலாம் (Taj ul-Alam); (கி.பி. 1641 - 1675) 

6. ஜைனுதீன் கமலதா ஷா; Zainatuddin Kamalat Syah (கி.பி. 1688 - 1699) 



இவர்களை ஒவ்வொருவராகப் பின்னர் அறிமுகம் செய்கிறேன். சரி.

மகாராணியார் சுகிதாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் மகாராணியார் திரிபுவனா விஜயதுங்காதேவி (Tribhuwana Wijayatunggadewi) என்பவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இருவருமே மஜபாகித் பேரரசின் மகாராணியார்கள்.

மகாராணியார் திரிபுவனா விஜயதுங்காதேவிக்குப் பின்னர் 100 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் மகாராணியார் சுகிதா. மீண்டும் ஒரு நினைவூட்டல்.

1. மகாராணியார் திரிபுவனா விஜயதுங்காதேவியின் ஆட்சிக்காலம் (1328 – 1350)

2. மகாராணியார் சுகிதா (Suhita எனும் Soheeta) - ஆட்சிக்காலம் (1429 – 1447)



மஜபாகித் பேரரசிற்கு 300 கி.மீ. தொலைவில் சிங்கசாரி பேரரசு (Singhasari Kingdom) இருந்தது. அந்தப் பேரரசின் கடைசி மன்னர் ஸ்ரீ கீர்த்தநகரா (1268-1292). இவருடைய மகளின் பெயர் ஸ்ரீ காயத்ரி ராஜபத்தினி (Sri Gayatri Rajapatni). இவரைத் தான் ராடன் விஜயா மணந்தார்.

இவர்களுக்குத் திரிபுவனா துங்காதேவி (Tribuana Tunggadewi) எனும் மகள் பிறந்தார். இந்தத் திரிபுவனா துங்காதேவி தான் மஜபாகித் பேரரசின் மூன்றாவது ஆட்சியாளர் (1326-1350). இவரின் மற்றொரு பெயர் திரிபுவனா துங்காதேவி ஜெயவிஷ்ணு வரதனி (Tribhuwannottunggadewi Jayawishnuwardhani). இன்னொரு பெயரும் உள்ளது. தியா கீதர்ஜா (Dyah Gitarja).

மஜபாகித் பேரரசை மாபெரும் பேரரரசாக மாற்றி அமைத்தவர் மகாராணியார் திரிபுவனா துங்காதேவி. மஜபாகித் பேரரசை இவர் தனி ஒருவராக ஆட்சி செய்ததால் தான் இவரை மகாராணியார் என்று அழைக்கிறோம்.

Raden Wijaya, the first king (1293-1309) of Majapahit, was married to Sri Gayatri Rajapatni, a daughter of Sri Kertanegara, the last king (1268-1292) of Singhasari Kingdom, and had a daughter, Tribuana Tunggadewi, the third ruler (1326-1350) of Majapahit.



இவர் மஜபாகித்தை பேரரசைச் சேர்ந்த இளவரசர் கீர்த்தவரதனா (Kertawardana) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திரிபுவனா துங்காதேவி - கீர்த்தவரதனா தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் ஈஸ்வரி (Iswari). இந்த ஈஸ்வரி மற்றோர் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசரின் பெயர் சிங்கவரதனா (Singawardana).

ஈஸ்வரி - சிங்கவரதனா தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் சரவர்தானி (Sarawardani). இவர் ராணாமங்களா (Ranamenggala) எனும் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் பரமேஸ்வரா. இந்தப் பரமேஸ்வராதான் மலாக்காவைத் தோற்றுவித்த கதாநாயகர்.

அதாவது மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா (great-grandson of Empress Tribhuwana Wijaya Tunggadewi)



பரமேஸ்வராவின் கொள்ளுத் தாத்தா தான் நீல உத்தமன். சிங்கப்பூரை உருவாக்கியவர். சிங்கப்பூருக்குச் சிங்கம் ஊர் என்று பெயர் வைத்தவர். சரி.

மகாராணியார் சுகிதாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1404-ஆம் ஆண்டில் இருந்து 1406-ஆம் ஆண்டு வரை மஜபாகித்தில் ஓர் உள்நாட்டுப் போர் நடந்தது. அதன் பெயர் பாரிகிரேக் போர் (Paregreg war). 

மஜபாகித்தை ஆட்சி செய்து கொண்டு இருந்த மாமன்னர் விக்ரமவரதனா அவர்களுக்கும் பெரு வீரபூமி (Bhre Wirabhumi) என்பவருக்கும் இடையே நடந்த போர். அதில் பெரு வீரபூமி காலமானார்.

காலமான பெருவீரபூமிக்கு ஒரு மகள் இருந்தார். அவருடைய பெயர் பெரு தாகா (Bhre Daha). இவரை மாமன்னர் விக்ரமவரதனா திருமணம் செய்து கொண்டார்.



இவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருந்தார். அவருடைய பெயர் குஷ்மாவர்த்தினி (Kusumawardhani). அதனால் மாமன்னர் விக்ரமவரதனாவுக்கு பெரு தாகா ஒரு வைப்பாட்டி எனும் தகுதியைப் பெற்றார்.

இந்தக் கட்டத்தில் சுகிதா வருகிறார். நன்றாகக் கவனியுங்கள்.

விக்ரமவரதனா - பெரு தாகா தம்பதியினருக்குப் பிறந்தவர் தான் மகாராணியார் சுகிதா. இவரின் அசல் பெயர் பிரபு ஸ்ரீ சுகிதா (Prabu Stri Suhita). இவருடைய தாயாரின் பெயர் சுரவர்த்தனி (Surawardhani). இவர் தன் கணவர் பெரு ஹியாங் பரமேஸ்வரா (Bhra Hyang Parameswara) என்பவருடன் இணைந்து ஆட்சி செய்தார்.

(Surawardhani alias Bhre Kahuripan, adik Wikramawardana. Ayahnya bernama Raden Sumirat yang menjadi Bhre Pandansalas, bergelar Ranamanggala.)

மலாக்கா பரமேஸ்வரா (Malacca Parameswara) என்பவர் வேறு. இந்த பெரு ஹியாங் பரமேஸ்வரா என்பவர் வேறு. அந்தக் காலத்து அரசுகளில் பரமேஸ்வரா எனும் பெயர் பலருக்கும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் குழப்பம் வேண்டாமே.



சுகிதாவின் கணவர் பெரு ஹியாங் பரமேஸ்வராவின் மற்றொரு பெயர் ரத்னபங்கஜா.

மகாராணியார் ஸ்ரீ சுகிதாவின் ஆட்சியை மறுமலர்ச்சியான ஆட்சி என்று வர்ணிக்கிறார்கள். நுசாந்தாரா வட்டார நிலப் பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களைக் கொண்டு வந்தார்.

பல்வேறு வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினார். புகழ்பெற்ற லாவு (Lawu) எரிமலையின் சரிவுகளில் கோயில்களையும் கட்டி இருக்கிறார். இவர் ஆட்சி ஏற்ற போது மஜபாகித் பேரரசில் பெரும் குழப்பங்கள்.

மஜபாகித் அரசிற்கு அருகாமையில் இருந்த பிலம்பாங்கான் அரசு (Blambangan) பெரும் தொல்லைகளைக் கொடுத்து வந்தது. அந்த அரசுடன் போர் செய்து வெற்றியும் பெற்றார். அத்துடன் உள்நாட்டில் அடிக்கடி ஏற்பட்டு வந்த குழப்பங்களையும் சமாளித்து ஆட்சி செய்தார்.



ஜாவாவில் ஒரு புராணக் கதை உள்ளது. அதன் பெயர் தாமார்வூலான் (Damarwulan). இப்போதுகூட வாயாங் கூலிட் எனும் பொம்மலாட்டக் கதையாக படைக்கப் படுகிறது. அந்தப் பொம்மலாட்டக் கதையில் பிரபு கென்யா (Prabu Kenya) எனும் கதாபாத்திரம் வருகிறது. அந்தக் கதாபாத்திரம் தான் மகாராணியார் சுகிதா.

மகாராணியார் சுகிதா மஜபாகித் பேரரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக என்ன செய்தார் தெரியுங்களா?

தன் தகப்பனாரைக் கொன்ற ராடன் காஜா (Raden Gajah) என்பவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டது தான் அவர் செய்த முதல் வேலை. ராடன் காஜாவின் மற்றொரு பெயர் பர நரபதி (Bhra Narapati).

கிழக்கு ஜாவாவில் தூலுங்காங் மாவட்டம் (Jebuk, Kalangbret) ஜெபுக் எனும் இடத்தில் ஒரு கற்சிலையை 2010-ஆம் ஆண்டில் கண்டு எடுத்தார்கள். அந்தக் கற்சிலை மகாரணியார் சுகிதாவைச் சித்தரிக்கும் கற்சிலையாகும்.

காதுகளில் பதக்கங்கள்; கழுத்து அட்டிகை; கை வளையல்கள்; கால் கொலுசுகள்; பல்வேறு இடுப்பு அட்டிகை ஆபரணங்களை அணிந்து இருக்கும் கற்சிலை. பாரம்பரிய அரச உடை அணியப்பட்டு இருந்தன. அவருடைய வலது கரத்தில் தாமரை மொட்டு.



இந்தச் சிலை இப்போது இந்தோனேசியா தேசிய அரும் காட்சியகத்தில் (National Museum of Indon) பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் அருங்காட்சியகத்தில் மஜபாகித் பற்றிய வரலாற்றுச் சுவடுகள் உள்ளன. அதில் சுகிதாவின் பெயர் சுகிந்தா (Su-king-ta) என்று சொல்லப்பட்டு உள்ளது.

1437-ஆம் ஆண்டு சுகிதாவின் கணவர் ரத்னபங்கஜா காலமானார். கணவர் இறந்து பத்து வருடங்கள் கழித்து 1447-ஆம் ஆண்டு சுகிதாவும் காலமானார். இவர்களுக்கு ஜாவா சிங்கஜெயா (Singhajaya) எனும் இடத்தில் சமாதிகள் எழுப்பப்பட்டு உள்ளன.

சுகிதாவுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவரின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகன் தியா கர்த்தவிஜயன் (Dyah Krtawijaya) என்பவரை மஜபாகித் அரசராக நியமித்துவிட்டு இறந்து போனார்.

மகாரணியார் சுகிதா அவர்கள் மஜபாகித்தை ஆட்சி செய்யும் போது மலாக்காவில் பர்மேஸ்வராவின் மகன் மெகாட் இஸ்கந்தார் ஷா (Megat Iskandar Shah) ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

இப்போதைய காலத்தில் தான் பெண்கள் பிரதமர்களாகவும் மகாராணிகளாகவும் ஆட்சி புரிகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. 600 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்கள் ஆட்சி பீடங்களில் அழகு செய்து இருக்கிறார்கள். போற்றுதலுக்கு உரிய செய்தி. பெருமைக்கு உரிய செய்தி.

சான்றுகள்:

1. Cœdès, George (1968). Vella, Walter F. (ed.). The Indianized States of Southeast Asia. Translated by Brown Cowing, Sue. Honolulu: University of Hawaii Press. p. 241.

2. Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.

3. Jan Fontein, R. Soekmono, and Satyawati Suleiman. Ancient Indonesian Art of the Central and Eastern Javanese Periods, New York: Asia Society Inc., 1971, p. 146-147.

4. https://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate

26 ஜூன் 2020

கொலம்பஸ் செய்த கொடுமைகள்

தமிழ் மலர் - 16.06.2020

அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்? ஒரு பாலர்ப் பள்ளி மாணவரைக் கேட்டுப் பாருங்கள். கொலம்பஸ் என்று பதில் வரும். அப்படிப்பட ஒரு மனிதரை மாவீரர் கொலம்பஸ் என்று புகழாரம் செய்தார்கள். மனிதர்களில் மாணிக்கம் என்றும் பரிவாரம் கட்டினார்கள். இமயத்தின் சிகரத்தில் ஏற்றி வைத்துச் சிலர் உச்சம் பார்த்தார்கள். இன்னும் சிலர் அமெரிக்காவைத் தேடி வந்த இமயவர்மன் என்றும்கூட பாலாபிஷேகம் செய்தார்கள்.



ஆனால் அவருடைய மறுபக்கத்தைக் கொஞ்சம் திருப்பிப் போட்டுப் பாருங்கள். மூச்சு அடைத்துப் போகும். பேச்சு நின்று போகும். ஊனும் உடலும் மரத்துப் போகும். ஒட்டி இருக்கிற உயிரும்கூட விரைத்துப் போகும். அந்த அளவிற்கு அவரைப் பற்றிய அலி பாபா கதைகள் உள்ளன.

அவற்றைச் சுமந்து போவது கொலம்பஸ் எனும் தனிமனிதரின் பெயர் மட்டுமே. என்ன செய்வது. மனித நீரோட்டத்தில் இப்போது மூழ்கடிக்கப் படுகிறார். இதை எழுத வேதனையாக இருக்கிறது.

நிஜ வாழ்க்கையில் அவர் மனுக்குலத்தின் மனதில் நிலைத்து நிற்கும் தகுதியை இழந்து விட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.



உலகப் புகழ் வாய்ந்த ஒரு வரலாற்று நாயகனைச் சிறுமைப் படுத்தி எழுதுவதற்கு மனசு வேதனைப் படுகிறது. எழுதும் என்னை நம்புவதும் நம்பாததும் ஒரு புறம் இருக்கட்டும்.

ஆனாலும் நான் சொல்லப் போகும் சில உண்மைகள் சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. ஆக எல்லாருக்கும் தெரிய வைப்பதே நல்லது.

கோகினூர் வைரத்திற்கும் கோலார் தங்கத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும். அதே போல கொலம்பஸின் உண்மையான அகத்திற்கும் புறத்திற்கும் இடையே நிலவும் வேறுபாடுகளும் தெரிய வேண்டும்.



கொலம்பஸ் பற்றி ஒரே வார்த்தையில் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். பணம் புகழ் செல்வாக்கிற்காகப் பல ஆயிரம் சாமான்ய மனிதர்களை வெட்டிச் சாய்த்தவர்.

அண்மைய காலங்களில் அமெரிக்காவில் அவருடைய சிலைகள் சேதப் படுத்தப் படுகின்றன. ஏன்?

நிஜ வாழ்க்கையில், கொலம்பஸ் என்பவர் ஒரு நல்ல மனிதர் அல்ல. அதனால் தான் வெறுப்பு அடைந்து போன அமெரிக்க மக்கள் கொலம்பஸின் சிலைகளை அடித்து நொறுக்கி வருகிறார்கள். கொலம்பஸ் தினம் கொண்டாடுவதைத் தடை செய்யச் சொல்லி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். 



பல ஆயிரம் பூர்வீகப் பெண்களை நாசம் செய்தவர். அரவாக் எனும் சுதேசி இனத்தை அடியோடு அழித்து ஒழித்தவர். இப்படி நான் சொல்லவில்லை. இப்போது அமெரிக்க மக்கள் போர்க் கொடி தூக்கி வ்ருகின்றனர்.

கொலம்பஸ் என்கிற ஒரு மனிதரா கொடுமைகள் செய்தார் என்று நம்மை எல்லாம் அதிர்ச்சி அடையச் செய்கிறது.

கொலம்பஸின் படத்தைப் பாருங்கள். பால் வடியும் முகம் என்று சொல்வார்களே அதே முகம். அந்தப் பால்முகத்தின் மறுபக்கத்தைத் திருப்பிப் போடுகிறேன். படியுங்கள். படித்த பின்னர், செத்துப் போன அந்த ஆயிரக் கணக்கான வெள்ளந்தி மக்களுக்காகக் கொஞ்ச நேரம் மௌன அஞ்சலி செலுத்துங்கள். கதைக்கு வருகிறேன்.



யார் இந்த கொலம்பஸ் (Christopher Columbus)? இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரில் 1451-இல் பிறந்தவர். இவர் ஒரு கடல் பயணி. ஒரு வணிகர். 1492-இல் அட்லாண்டிக் மாக்கடலைக் கடந்து கரிபியன் தீவுகளுக்கு வந்த முதல் மனிதர். முதல் ஐரோப்பியர் என்று சொல்கிறார்கள். இதுவும் தவறு தான்.

ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆக அந்த நாடுகளை வெளியுலகத்திற்கு விளம்பரம் செய்த பெருமையை மட்டும் இவருக்குக் கொடுக்கலாம்.

14,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னரே சீனர்கள், ஜப்பானியர்கள், ஆசிய நாட்டவர் பெர்ரிங் (Bering) நீரிணை வழியாக அமெரிக்காவில் நுழைந்து கொடி கட்டி விட்டனர். அவர்களின் கலப்பு தான் இப்போதைய அமெரிக்கச் சிவப்பு இந்தியர்கள் (Red Indians). 



1002-இல் வைக்கிங் (Vikings) இனத்தைச் சேர்ந்த லெய்ப் எரிக்சன் (Leif Erikson) என்பவர் கனடாவில் தடம் பதித்தார். 1424-இல் அர்மாண்டோ கோர்ட்டசா (Armando Cortesao) எனும் போர்த்துகீசியர் அமெரிக்காவின் வரைபடத்தை வரைந்து காட்டினார்.

அதன் பின்னர் அமெரிகோ வெஸ்புசி (Amerigo Vespucci) எனும் இத்தாலியர், தென் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இவருடைய அமெரிகோ எனும் பெயரால் தான் அமெரிக்காவிற்கு அமெரிக்கா எனும் பெயரே கிடைத்தது. இவர்களுக்குப் பின்னால் 1492-இல் போனவர் தான் நம்முடைய கதாநாயகன் கொலம்பஸ்.

இந்தியாவைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று கொலம்பஸ் தயிர் சாதம் கட்டிக் கொண்டு போனார். ஆனால் அவர் இந்தியாவைக் கண்டுபிடிக்கவில்லை. மேற்கு இந்தியத் தீவுக் கூட்டத்தில் உள்ள பஹாமாஸ் (Bahamas) தீவில் தரை தட்டினார். அதன் பின்னர் அடுக்கடுக்காக பல அமெரிக்க நிலப் பகுதிகளில் கால் பதித்தார். அவற்றை எல்லாம் ஸ்பெயின் நாட்டின் சொத்துகளாகப் பிரகடனம் செய்தார். 



இந்த மனிதர் அப்படியே இந்தியாவிற்கு வந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இந்தக் காலக் கட்டத்தில் பாமினி பேரரசு இந்தியாவை ஆட்சி செய்து வந்தது. மலாக்காவைப் பரமேஸ்வரனின் சந்ததியினர் ஆட்சி செய்து வந்தனர். 1497-இல் தான் வாஸ்கோட காமா இந்தியாவிற்கு வந்தார்.

புது இடங்கள், புது மனிதர்கள், புது வாழ்க்கை முறைகள். புதுப் பூர்வீகங்கள். வெளுத்ததை எல்லாம் பால் என்று நினைத்த பூர்வீக வெள்ளந்திகள்; அமெரிக்கா கரிபியன் தீவுகளில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களைப் பிள்ளைப் பூச்சிகள் என்று சொன்னால் சரியாக இருக்கும். 



கபடு சூது தெரியாத சமாதானப் பிரியர்கள். அரவாக் (Arawak) என்று அழைக்கிறார்கள். அந்த அரவாக்ஸ் பூர்வீக மக்களில் பல ஆயிரம் பேரைக் கொலம்பஸ் அடிமைகளாக்கினார்.

அரவாக்ஸ் மக்கள் கொலம்பஸை எதிர்த்துப் போராட்டம் செய்தார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்த்தவர்களை கொலம்பஸ் அடியோடு சாய்த்துச் சமாதி கட்டினார். அவர்கள் அடைகாத்து வைத்து இருந்த தங்கம், முத்துப் பவளங்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்தார்.

இவை எல்லாம் முடிந்த பிறகு தான், தன்னோடு வந்த நூற்றுக் கணக்கான வேலையாட்களுக்குப் பரிசுகள் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார். யாருடைய மனைவி, யாருடைய மகள் என்று ஒரு கணக்கு வழக்கு இல்லை. ஒரு கிராமத்திற்குள் போக வேண்டியது. ஆண்களை எல்லாம் இழுத்து வந்து ஒரு கூடாரத்திற்குள் கட்டிப் போடுவது. 



பெண்களைச் சுற்றி வளைத்து வரிசையாக நிற்க வைப்பது. எந்த வேலைக்காரனுக்கு எந்தப் பெண் வேண்டுமோ அவளை ‘இந்தா எடுத்துக்கோ’ என்று தூக்கிப் போடுவது. அப்படித் தான் கொலம்பஸின் அன்பளிப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து இருக்கின்றன.

இப்படித் தான் கொலம்பஸ் பல ஆயிரம் அரவாக்ஸ் இனத்துப் பெண்களைக் கத்தி முனையில் சின்னா பின்னமாக்கினார். பல ஆயிரம் கன்னிப் பெண்களைத் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்களாக மாற்றிப் போட்டார்.

பணம் புகழ் செல்வாக்கிற்காகப் பல ஆயிரம் சாமான்ய மனிதர்களை வெட்டிச் சாய்த்தவர் தான் இந்தக் கொலம்பஸ். அந்தச் சமாதிகளில் கன்னிப் பெண்களைக் கட்டி வைத்து  காமக் களியாட்டம் போட்டவர். சின்னஞ் சிறு சிறுசுகளைக் கிழித்துப் போட்டு தாண்டவம் ஆடியவர். இப்படி எழுதுவதற்காக என்னை மன்னிக்கவும்.



பல ஆயிரம் சின்னச் சின்னச் சிறுமிகளைச் சுருட்டிப் போட்டு சுண்டெலிகளாக  மாற்றினார். தப்பி ஓடிய பெண்கள், வணங்காமல் இணங்காமல் போன பெண்கள், குற்றுயிரும் குலை உயிருமாய்க் கிடந்த மிச்சம் மீதிப் பெண்களை என்ன செய்தார் தெரியுமா?

தன்னுடன் கொண்ட வந்த நாய்களுக்கு தீனியாகப் போட்டார். அந்தப் பெண்களின் ஓலமும் ஒப்பாரியும் அடங்கிப் போகும் வரை நாய்கள் கடித்துக் குதறின.

அண்மையில் கிடைக்கப் பெற்ற வரலாற்றுச் சான்றுகள் இந்த உண்மைகளைச் சொல்கின்றன. உண்மையான கொலம்பஸின் வரலாற்றைத் தெரிந்து கொண்டவர்கள் இப்போது கொலம்பஸ் எனும் பெயரைக் கேட்டதும் முகம் சுழிக்கிறார்கள். இப்படிப் பட்ட ஒரு மனிதனா  என்று அதிர்ச்சி அடைகின்றனர். 

 

உண்மையிலேயே இப்போது அமெரிக்காவில் கொலம்பஸ் எனும் சொல் ஒரு தவறான சொல் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போய் விட்டது.

அங்கே கொலம்பஸ் தினம் கொண்டாடப் படுவதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கொலம்பஸின் கொடுமைகளுக்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அமெரிக்கர்கள் காலம் தாழ்ந்து இப்போது ஆதங்கப் படுகின்றனர்.

போதுமான சான்றுகள் உள்ளன. கொலம்பஸ் தானே கைப்பட எழுதி வைத்த தினக் குறிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டு இருக்கின்றன.  



கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான ’பார்த்தலோமே லாஸ் காஸாஸ்’ (Bartolome De Las Casas) என்பவர் கொலம்பஸ் செய்த கொடுமைகளைப் பார்த்து மனம் நொந்து போய் எழுதிய குறிப்புகளும் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் அமெரிக்கப் பூர்வீக மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டு உள்ளன.

1492 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-இல் கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்தார். அப்போது அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த மக்கள் சமாதான விரும்பிகள் என்று அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தன்னுடைய  தினக்குறிப்பில் இப்படி எழுதி இருக்கிறார்.

"அரவாக்ஸ் மக்கள் தம்மிடம் இருப்பதை எல்லாம் எல்லோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறார்கள்."



"அரவாக்ஸ் மக்களிடம் எந்தவித ஆயுதங்களும் இல்லை. அவர்களுடைய சமூகத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை. கைதிகள் என்று யாரும் இல்லை அங்கே சிறைகள் இல்லை.

எங்களுடைய கப்பலான சாந்தா மரியா கரை தட்டிய போது கப்பலில் இருந்தவர்களையும் கப்பலில் இருந்த பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தார்கள். கப்பலில் இருந்த எந்த ஒரு பொருளையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை..."

இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யும் பரந்த மனப்பான்மை கொண்ட நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைமாறு என்ன தெரியுமா? 



அந்த மக்களை அப்படியே அடிமைகளாக்கினார். அங்கு இருந்த தங்கச் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கினார். மகிழ்ச்சியாக வாழ்ந்த அரவாக்ஸ் மக்கள் மனம் ஒடிந்து போனார்கள்.

அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள். அரவாக்ஸ் பெண்களைக் கொலம்பஸின் வேலையாட்கள் பாலியல் அடிமைகளாக ஆட்டிப் படைத்தார்கள்.

கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் வேலையாட்கள் 9 , 10 வயது சிறுமிகளைத் தேடிச் சென்றார்கள்..."



அரவாக்ஸ் மக்களை அடிமைகளாக்கிய பிறகு அவர்கள் இறக்கும் வரையில் வேலை வேலை என்று அவர்களுடைய இரத்தம் பிழிந்து வேலை வாங்கப் பட்டது. ஓர் அடிமை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் எடுத்துக் கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் அதற்குத் தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள்.

அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரவாக்ஸ் தொழிலாளிகளின் மூக்கு, காதுகள் அறுக்கப் பட்டன. அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடியவர்கள் பிடிபட்டால் உயிரோடு கொளுத்தப் பட்டனர்.

கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களைக் கொண்டு வந்தார். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார். வேட்டையாடும் நாய்கள் அடிமைகளைக் கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாகப் பிய்த்து விடும். அது மட்டும் இல்லை.


கொலம்பஸின் வேலைக்காரர்கள் தங்களுடைய நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டித் தீனி போட்டார்கள்! என்னே கொடுமை.

ஒரே நாளில் கொலம்பஸ் ஆட்கள் 3000 பேரின் தலைகளை வெட்டி வீசி இருக்கிறார்கள். 3000 பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு உள்ளனர். வரலாற்று ஆய்வாளர்கள் இப்படி எழுதி உள்ளனர்.

“In 1492, the population on the island of Hispaniola probably numbered above 3 million. Within 20 years of Spanish arrival, it was reduced to only 60,000. Within 50 years, not a single original native inhabitant could be found.”



1492- இல முப்பது இலட்சம் அரவாக் மக்கள் இருந்தனர். ஸ்பெனியர்கள் வந்த 20 ஆண்டுகளில் அந்தத் தொகை 60,000 ஆகக் குறைந்தது. 50 ஆண்டுகளில் ஒரே ஓர் அரவாக் மனிதர் கூட இல்லை. 

மீண்டும் சொல்கிறேன். ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால்  இருந்து வந்த கொலம்பஸையும் அவனுடைய ஆட்களையும், அரவாக்ஸ் மக்கள் இனிய முகத்துடன் வரவேற்றார்கள். முகம் சுழிக்காமல் விருந்தோம்பல் செய்தார்கள். இருந்ததை எல்லாம் கொடுத்தார்கள். அப்பேர்ப் பட்ட அந்த வெள்ளந்தி மக்களுக்கு கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் என்ன என்று பார்த்தீர்களா.

அரவாக்ஸ் மக்கள் வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய வரலாற்றுப் புதினங்கள். மலரும் பூமியில் மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய மக்கள் மலர்ந்தும் மலராத பாவி மலராகப் போய் விட்டனர். அவர்கள் காலத்தால் செப்பனிட முடியாத சொப்பனச் சீமான்கள். மறக்க முடியாத கல்வெட்டுகள். 



இலங்கையில் ஓர் இனம் அழிவதற்கு காரணமாக இருந்தது மகிந்தா என்கின்ற மனிதம் கெட்டு போன பேய். அதே போல அமெரிக்க கரிபியன் மண்ணில் அரவாக்ஸ் என்கிற இனம் அழிவதற்கு காரணமாக இருந்தது கொலம்பஸ் எனும் ஒரு நன்றி கெட்ட பேய். ஆக அந்த வெள்ளந்தி மக்களுக்காக ஒரு மௌன அஞ்சலி செய்வோம். அதில் சில மௌன ராகங்கள் இழையட்டும்!

4tamilmedia எனும் இணையத் தளத்தில் ஹாயித்தி நாட்டு மக்களை எப்படி விலங்கிட்டு அடிமைகள் ஆக்கினார்கள்; இளம் பெண்களை நூற்றுக் கணக்கில் பிடித்துக் கொண்டு போய் ஐரோப்பாவில் விற்று காசு பார்த்தார்கள் எனும் விவரங்கள் உள்ளன. போய்ப் பாருங்கள். கொலம்பஸ் என்பவரின் உண்மையான முகத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
16.06.2020

சான்றுகள்:

1. http://www.4tamilmedia.com/special/republish/1392-2011-10-13-07-16-01)

2. http://kathmanduk2.wordpress.com/2007/10/09/in-1492-columbus-sailed-the-ocean-blue/)
 
3.http://www.associatedcontent.com/article/2277079/who_discovered_america_not_christopher.html?cat=37)
 
4. http://www.blackstudies.ucsb.edu/antillians/arawaks.html
 
5.http://www.associatedcontent.com/article/234894/christopher_columbus_hero_or_villain.html?cat=37)
 
6. http://thanksalotobama.com/thanksobblog/?p=1445
 
7.http://www.associatedcontent.com/article/234894/christopher_columbus_hero_or_villain.html?cat=37
 
8.http://www.associatedcontent.com/article/31981/leif_erikson_the_real_european_discoverer.html?cat=37)


25 ஜூன் 2020

மலாக்கா மரம்

தமிழ் மலர் - 25.06.2020

மலாக்கா வரலாற்றில் சருகு மானுக்கும் நாய்க்கும் நடந்த மோதல் கதை. அனைவருக்கும் தெரிந்த கதை. அந்தச் சம்பவம் நடக்கும் போது பரமேஸ்வரா ஒரு மரத்தின் மீது சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். இதுவும் தெரிந்த கதை.

ஆனால் பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரத்திற்குப் பதிலாக வேறொரு மரத்திற்கு மலாக்கா மரம் எனும் பட்டப் பெயர் கிடைத்து இருக்கிறது. இது பலருக்கும் தெரியாத கதை.



Phyllanthus Pectinatus

தன்னுடன் வந்தவர்களிடம் ‘இந்த மரத்தின் பெயர் என்ன’ என்று பரமேஸ்வரா கேட்டு இருக்கிறார். மலாக்கா என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த மரத்திற்கு மலாக்கா மரம் என்று பெயர் வைக்கப்பட்டு விட்டது.

எல்லாம் சரி. பரமேஸ்வரா மரத்தைப் பார்த்ததும் சரி. மலாக்காவிற்கு மலாக்கா என்று பெயர் வைத்ததும் சரி. ஆனால் இப்போது மலாக்கா மரம் என்று சொல்கிறார்களே; அது உண்மையிலேயே மலாக்கா மரம் தானா. இல்லவே இல்லீங்க. அதைப் பற்றித் தான் சற்று விளக்கமாகத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மலாக்கா மரத்தின் அசல் சொல் அமலாக்கா. அல்லது அமலங்கா (Amalaki). உண்மையிலேயே அதுதான் அசல் நெல்லி மரம். அமலாக்கா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.



Phyllanthus Emblica

அதன் அறிவியல் பெயர் Phyllanthus Pectinatus. இந்த மரம் தான் மலாக்காவின் பூர்வீக மரம். மலாக்காவின் அடையாள மரம். ஏற்கனவே அந்த அடையாளத்தை உலகமே ஏற்றுக் கொண்டு விட்டது.

ஆனால் Phyllanthus Pectinatus எனும் பெயரைத் தவறாகப் புரிந்து கொண்டு; தவறாக எடுத்துக் கொண்டு Phyllanthus Emblica என்று இப்போது அழைக்கிறார்கள்.



Malacca Tree

ஆங்கிலத்தில் Phyllanthus என்றால் நெல்லி. இந்த நெல்லிகளில் பல வகை உள்ளன.

1. அருநெல்லி - phyllanthus acidus

2. கீழாநெல்லி - phyllanthus niruri

3. கருநெல்லி - phyllanthus reticulatus

4. நெல்லி - phyllanthus emblica

5. கீழா நெல்லி - phyllanthus praternus (2)

6. கீழ்க்காய் நெல்லி - phyllanthus niruri

7. அருநெல்லி - phyllanthus distichus

8. அரநெல்லி - phyllanthus acidus

9. மேலாநெல்லி - phyllanthus maderaspatensis

இந்தப் பட்டியல் நீளும். இருப்பினும் மலாக்கா வரலாற்றில் சர்ச்சைக்கு உரிய நெல்லிகள் இரு வகை. 



Phyllanthus Pectinatus

முதலாவது: Phyllanthus Pectinatus. இதற்கு அமலங்கா (Amla) என்று பெயர். சாதாரண நெல்லி. இதுதான் அசல் மலாக்கா மரம்.

இரண்டாவது: Phyllanthus Emblica. இதற்கு கருநெல்லி என்று பெயர். Phyllanthus reticulatus என்று மற்றொரு பெயரும் உண்டு. இது அசல் மலாக்கா மரம் அல்ல.

Amalaki - Amla literally means "sour"; it is the Hindi word for a fruit tree (Emblica officinalis or Phyllanthus emblica) that grows throughout India, Malaysia, Indonesia and bears sour-tasting gooseberry-like fruits. Amla is also known by the Sanskrit name "Amalaki." (1)

 

பரமேஸ்வராவின் வரலாற்றைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். பரமேஸ்வராவின் வரலாறு சிங்கப்பூரில் தொடங்குகிறது.

சிங்கப்பூரின் முதல் ராஜா நீல உத்தமன். இவர் 1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

இரண்டாவதாக வந்தவர் ஸ்ரீ விக்கிரம வீரா. இவர் 1347-ஆம் ஆண்டில் இருந்து 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

மூன்றாவதாக வந்தவர் ஸ்ரீ ராணா விக்கிரமா. இவர் 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

நான்காவதாக வந்தவர் ஸ்ரீ மகாராஜா. இவர் 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

ஐந்தாவதாக வந்தவர் பரமேஸ்வரா. இவர் 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். பரமேஸ்வரா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்தாவது ராஜா. கடைசி ராஜா. இவர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்று அழைக்கப் பட்டார்.   

பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிங்கப்பூரில் இருந்து பரமேஸ்வரா வெளியேறினார். 





பரமேஸ்வரா தன்னுடன் தன் குடும்பத்தாருடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டார். தன் முக்கியமான அமைச்சர்களையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். பரமேஸ்வராவுடன் ஏறக்குறைய 1000 பேர் வந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வு ஆவணங்கள் சொல்கின்றன.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா எனும் பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளை அழைத்துக் கொண்டு சிங்கப்பூரின் செலாத்தார் (Seletar) பகுதிக்குச் சென்றார். அந்த இடம் சிங்கப்பூரின் வட பகுதியில் உள்ளது.

அதன் பின்னர் செலாத்தார் வழியாக பரமேஸ்வரா மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். பல நாட்கள் கால்நடையாகப் பயணம். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.




மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (Biawak Busuk - அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் (Kota Buruk - மோசமான நகரம்) எனும் மற்றோர் இடமும் இருக்கிறது.

இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். (4. The Indianized States of South-East)

நன்கு ஆராய்ந்து பார்த்தார். அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசை அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.




அப்படி போகும் போது செனிங் ஊஜோங் (Sening Ujong) எனும் இடத்தை அடைந்தார். இப்போது அந்த இடம் சுங்கை ஊஜோங் (Sungai Ujong) என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு தான் இப்போது மலாக்கா ஆறு (Bertam River - former name of the Malacca River) என்று அழைக்கப் படுகின்றது.

உதவிக்கு சுமத்திரா தீவில் இருந்து பூகிஸ் மக்கள் பலரையும் அழைத்துக் கொண்டார். தன்னுடைய பெயரை ஸ்ரீ ரத்னா ஆதிவிக்ரம ராஜா (Sri Ratna Adivikrama di-Raja - Seri Rama Adikerma Raja) என்று மாற்றிக் கொண்டார்.

பரமேஸ்வரா தேர்ந்து எடுத்த அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம். இதைப் பற்றி மேலும் ஒரு கதை வருகிறது. 





அந்த வகையில் மலாக்கா உருவான கதை ஒரு விசித்திரமான கதை. ஒரு வித்தியாசமான கதை. ஆனால் ஓர் அதிசயமான கதை. கத்திச் சண்டை இல்லாமல் சண்டை சச்சரவு இல்லாமல் உருவான கதை.

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒரு நகரம் தோன்றுவதிலும் சரி; ஒரு நாடு தோற்றுவிக்கப் பட்டதிலும் சரி; பல்லாயிரம் உயிர்கள் பலியான வரலாற்றுச் சோகங்கள் தேங்கி நிற்பதைக் காண முடியும். சரி. மலாக்கா மரத்தின் கதைக்கு வருவோம்.

சுவீடன் நாட்டு தாவரவியலாளர் கார்லஸ் லீனஸ் (Carolus Linnaeus). இவர் 1753-ஆம் ஆண்டு; Phyllanthus Pectinatus எனும் அமலக்காய்க்கு Emblica என்று பெயர் வைத்தார். அது கருநெல்லியின் பெயராகும்.

1890-ஆம் ஆண்டில் ஜோசப் டால்டன் ஹூக்கர் (Joseph Dalton Hooker) என்பவர் அமலங்காய்களை பேராக், மலாக்கா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பார்த்து இருக்கிறார். குறிப்புகள் எழுதி வைத்து இருக்கிறார்.




கருநெல்லி மரங்கள் (Phyllanthus emblica) தடிப்பான இலைகளைக் கொண்டவை. மரங்களின் அடிப்பகுதியில் காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். ஆனால் நெல்லி மரங்கள் (Phyllanthus Pectinatus) மெல்லிய கூர்மையான இலைகளைக் கொண்டவை. மேலே கிளைகளிலேயே காய்க்கும்.

கருநெல்லி பழத்தின் விதைகள் கூர்மையான முக்கோண அமைப்பு கொண்டவை. ஆனால் நெல்லி பழத்தின் விதைகள் வட்ட வடிவமானவை. இவற்றின் மலர் அமைப்புகளிலும் மரப்பட்டை தோற்றங்களிலும் வேறுபாடுகள் உள்ளன.

கருநெல்லி மரங்கள் இந்தியா, பர்மா, தாய்லாந்து, இந்தோ-சீனா மற்றும் தென் சீனா முழுவதும் இயற்கையாகக் காணப்படும் தாவர இனம்.

கருநெல்லி மரங்கள் மலாய் தீபகற்பத்தில் நடப்பட்ட தோட்ட மரங்களாக வளர்கின்றன. காடுகளில் வளர்வது இல்லை.

சுருக்கமாகச் சொல்லலாம். நெல்லி மரங்கள் மலாயா தீபகற்பத்தின் உண்மையான வன மரங்களாகும். குறிப்பாக மலாக்கா மாநிலத்தின் காடுகளில் அதிகமாகக் காணப் படுன்றன. மலாக்கா ஆயர் குரோ வனப்பூங்காவில் இந்த மரங்களை நிறையவே பார்க்கலாம்.




இருப்பினும் கால ஓட்டத்தில் Amalaka என்பது Emblica என மாற்றம் கண்டது. அந்த வகையில் கருநெல்லி மரத்தைத் தான் மலாக்கா மரம் என்று இப்போது சொல்கிறார்கள். அதே அந்தக் கருநெல்லி மரங்களை மலாக்கா முழுமைக்கும் இப்போது நட்டு வைத்து அழகு பாக்கிறார்கள்.

ஆக நெல்லி மரத்திற்குப் பதிலாகக் கருநெல்லி மரத்தை மலாக்கா மரமாக மாற்றிப் போட்டு வரலாற்றையும் மாற்றி விட்டார்கள். என்ன செய்வது?

மலாக்காவுக்கு இப்போது தேவையானது என்ன தெரியுங்களா. மலாக்கா பூந்தோட்டங்களை அழகு படுத்தும் தோட்டக்காரர்கள் அல்ல. அதன் தாவரவியல் பூங்காக்களை நல்ல முறையில் நிர்வகிக்க நல்ல அறிவார்ந்த தாவரவியலாளர்கள் தான். 




மலாக்காவின் அடையாளச் சின்னமாக இருவகையான மரங்கள் இருக்கின்றன. இதை மலாக்கா மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரமேஸ்வரா பார்த்த மரம் தவறாக அடையாளம் காணப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.

உண்மையாகப் பார்த்தால் நெல்லி மரம் தான் மலாக்கா மரம். கருநெல்லி மரம் என்பது மலாக்கா மரம் அல்ல. ஆக பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரம் நெல்லி மரம். கருநெல்லி மரம் அல்ல.

இதுவும் ஒரு வரலாற்றுச் சிதைவு தான். மறுபடியும் சொல்கிறேன்.  பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரத்தின் பெயர் Phyllanthus Pectinatus எனும் நெல்லி மரம். அந்த மரத்திற்குப் பதிலாக Phyllanthus Emblica எனும் கருநெல்லி மரத்தின் பெயரைச் சூட்டி வரலாற்றைத் திரித்து விட்டார்கள். வேதனையாக இருக்கிறது.

இதைப் பற்றி மலாக்கா மாநிலச் சுற்றுப் பயணக் கழகத்திற்கும்; மலாக்கா சுற்றுச்சுழல் பராமரிப்புக் கழகத்திற்கும் மூன்று முறை கடிதங்கள் அனுப்பி இருக்கிறேன். ஆண்டுகள் கடந்து விட்டன.

மலாக்காவில் முதலமைச்சர்கள் வருகிறார்கள். போகிறார்கள். மலாக்கா புலாவ் பெசார் தீவில் புதைந்து கிடக்கும் புதையலைத் தேடுவதில் மட்டும் கோடிக் கோடியாய்ச் செலவழித்துச் சாதனையும் செய்கிறார்கள்.

ஆனாலும் மலாக்காவின் அசல் மலாக்கா மரத்தைக் கண்டுபிடிக்கத் தவறி விட்டார்களே. மலாக்கா மரத்தின் உண்மைத் தனம் இன்று வரையிலும் மாறவே இல்லை.

அந்த வகையில் மலாக்கா வரலாற்றுக்கும் ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே  கொரோனா வந்து விட்டது போலும். இப்போது மூச்சுவிட முடியாமல் திணறிப் போய் மூர்ச்சையாகும் நிலையில் முடங்கிப் போய்க் கிடக்கிறது போலும்.

பாவம் மலாக்கா மரம். அதற்குச் சோதனை மேல் சோதனைகள் இல்லை. வேதனை மேல் வேதனைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.06.2020

சான்றுகள்:
1. https://www.banyanbotanicals.com/…/livi…/herbs/amalaki-amla/

2. https://www.worldheritage.com.my/blog/2011/11/09/what-tree-did-parameswara-see-while-resting-besides-the-river/

3. https://www.thestar.com.my/business/business-news/2011/11/05/what-tree-did-parameswara-really-see-in-malacca

4. https://www.nparks.gov.sg/florafaunaweb/flora/3/0/3062







24 ஜூன் 2020

சுவெட்லானா துளசி - கதக் நாட்டிய மணி

இந்திய நாட்டியக் கலையில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றில் பரதநாட்டியம், கதகளி, மோகினி ஆட்டம், குச்சிப்பூடி, ஒடிசி, கதக், சத்ரியா, மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. 

சுவெட்லானா துளசி

இந்தி மொழிச் சொல்லான கதாகார் என்னும் சொல்லில் இருந்து கதக் எனும் பெயர் தோன்றியது.

அந்த வகையில் வட இந்தியாவின் முக்கிய நாட்டியம் கதக் (Kathak) ஆகும். இதில் சுவெட்லானா துளசி (Svetlana Trilokovna Tulasi) எனும் ரஷ்யப் பெண்மணி புகழ் பெற்று விளங்குகிறார். ரஷ்யா மாஸ்கோவில் பிறந்தவர். வயது 28.

தகப்பனார் பெயர் திரிலோக மூர்த்தி. இந்தியா, ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர். தாயார் ரஷ்யாவைச் சேர்ந்தவர். ரஷ்யாவுக்குப் போன திரிலோக மூர்த்தி காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 


10 வயதில் இருந்தே சுவெட்லானா கதக் நாட்டியம் கற்று வருகிறார். 2005-ஆம் ஆண்டில் சுவெட்லானாவுக்கு 13 வயதாக இருந்த போது, அவரின் தந்தையார் இதய நோய் காரணமாக காலமானார்.

Ukraine’s Got Talent TV show எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாகப் புகழ் பெற்றார்.

2013 ஆம் ஆண்டில் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பாலிவுட் பாடலுக்கு இவர் ஒரு கதக் நாட்டியம் ஆடினார். அதுவே சுவெட்லானாவின் வாழ்க்கையில் முதல் பெரிய திருப்புமுனை,

தகப்பனார் திரிலோக மூர்த்தி - தாயார்
இப்போது அவர் ஒரு தொழில்முறை கதக் நடனக் கலைஞர். அவர் பாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்திய கதக் நடனத்தின் மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவராத் திகழ்கின்றார்.

சுவெட்லானா துளசியும்; மற்றொரு கதக் நாட்டியக் கலைஞர் குமார் சர்மா (Kumar Sharma) என்பவரும் டைட்டானிக் பாடலுக்கான அபிநயம். இப்போது சுவெட்லானா துளசி, ரஷயாவில் கதக் பள்ளி நடத்தி வருகிறார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.06.2020