மலாக்கா வரலாற்றில் சருகு மானுக்கும் நாய்க்கும் நடந்த மோதல் கதை. அனைவருக்கும் தெரிந்த கதை. அந்தச் சம்பவம் நடக்கும் போது பரமேஸ்வரா ஒரு மரத்தின் மீது சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். இதுவும் தெரிந்த கதை.
ஆனால் பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரத்திற்குப் பதிலாக வேறொரு மரத்திற்கு மலாக்கா மரம் எனும் பட்டப் பெயர் கிடைத்து இருக்கிறது. இது பலருக்கும் தெரியாத கதை.
Phyllanthus Pectinatus
தன்னுடன் வந்தவர்களிடம் ‘இந்த மரத்தின் பெயர் என்ன’ என்று பரமேஸ்வரா கேட்டு இருக்கிறார். மலாக்கா என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த மரத்திற்கு மலாக்கா மரம் என்று பெயர் வைக்கப்பட்டு விட்டது. எல்லாம் சரி. பரமேஸ்வரா மரத்தைப் பார்த்ததும் சரி. மலாக்காவிற்கு மலாக்கா என்று பெயர் வைத்ததும் சரி. ஆனால் இப்போது மலாக்கா மரம் என்று சொல்கிறார்களே; அது உண்மையிலேயே மலாக்கா மரம் தானா. இல்லவே இல்லீங்க. அதைப் பற்றித் தான் சற்று விளக்கமாகத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
மலாக்கா மரத்தின் அசல் சொல் அமலாக்கா. அல்லது அமலங்கா (Amalaki). உண்மையிலேயே அதுதான் அசல் நெல்லி மரம். அமலாக்கா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.
Phyllanthus Emblica
ஆனால் Phyllanthus Pectinatus எனும் பெயரைத் தவறாகப் புரிந்து கொண்டு; தவறாக எடுத்துக் கொண்டு Phyllanthus Emblica என்று இப்போது அழைக்கிறார்கள்.
Malacca Tree
ஆங்கிலத்தில் Phyllanthus என்றால் நெல்லி. இந்த நெல்லிகளில் பல வகை உள்ளன.
1. அருநெல்லி - phyllanthus acidus
2. கீழாநெல்லி - phyllanthus niruri
3. கருநெல்லி - phyllanthus reticulatus
4. நெல்லி - phyllanthus emblica
5. கீழா நெல்லி - phyllanthus praternus (2)
6. கீழ்க்காய் நெல்லி - phyllanthus niruri
7. அருநெல்லி - phyllanthus distichus
8. அரநெல்லி - phyllanthus acidus
9. மேலாநெல்லி - phyllanthus maderaspatensis
இந்தப் பட்டியல் நீளும். இருப்பினும் மலாக்கா வரலாற்றில் சர்ச்சைக்கு உரிய நெல்லிகள் இரு வகை.
Phyllanthus Pectinatus
இரண்டாவது: Phyllanthus Emblica. இதற்கு கருநெல்லி என்று பெயர். Phyllanthus reticulatus என்று மற்றொரு பெயரும் உண்டு. இது அசல் மலாக்கா மரம் அல்ல.
Amalaki - Amla literally means "sour"; it is the Hindi word for a fruit tree (Emblica officinalis or Phyllanthus emblica) that grows throughout India, Malaysia, Indonesia and bears sour-tasting gooseberry-like fruits. Amla is also known by the Sanskrit name "Amalaki." (1)
பரமேஸ்வராவின் வரலாற்றைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். பரமேஸ்வராவின் வரலாறு சிங்கப்பூரில் தொடங்குகிறது.
சிங்கப்பூரின் முதல் ராஜா நீல உத்தமன். இவர் 1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.
இரண்டாவதாக வந்தவர் ஸ்ரீ விக்கிரம வீரா. இவர் 1347-ஆம் ஆண்டில் இருந்து 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
மூன்றாவதாக வந்தவர் ஸ்ரீ ராணா விக்கிரமா. இவர் 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
நான்காவதாக வந்தவர் ஸ்ரீ மகாராஜா. இவர் 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
ஐந்தாவதாக வந்தவர் பரமேஸ்வரா. இவர் 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். பரமேஸ்வரா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்தாவது ராஜா. கடைசி ராஜா. இவர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்று அழைக்கப் பட்டார்.
பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிங்கப்பூரில் இருந்து பரமேஸ்வரா வெளியேறினார்.
ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா எனும் பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளை அழைத்துக் கொண்டு சிங்கப்பூரின் செலாத்தார் (Seletar) பகுதிக்குச் சென்றார். அந்த இடம் சிங்கப்பூரின் வட பகுதியில் உள்ளது.
அதன் பின்னர் செலாத்தார் வழியாக பரமேஸ்வரா மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். பல நாட்கள் கால்நடையாகப் பயணம். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.
இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். (4. The Indianized States of South-East)
நன்கு ஆராய்ந்து பார்த்தார். அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசை அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.
அப்படி போகும் போது செனிங் ஊஜோங் (Sening Ujong) எனும் இடத்தை அடைந்தார். இப்போது அந்த இடம் சுங்கை ஊஜோங் (Sungai Ujong) என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு தான் இப்போது மலாக்கா ஆறு (Bertam River - former name of the Malacca River) என்று அழைக்கப் படுகின்றது.
உதவிக்கு சுமத்திரா தீவில் இருந்து பூகிஸ் மக்கள் பலரையும் அழைத்துக் கொண்டார். தன்னுடைய பெயரை ஸ்ரீ ரத்னா ஆதிவிக்ரம ராஜா (Sri Ratna Adivikrama di-Raja - Seri Rama Adikerma Raja) என்று மாற்றிக் கொண்டார்.
பரமேஸ்வரா தேர்ந்து எடுத்த அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம். இதைப் பற்றி மேலும் ஒரு கதை வருகிறது.
அந்த வகையில் மலாக்கா உருவான கதை ஒரு விசித்திரமான கதை. ஒரு வித்தியாசமான கதை. ஆனால் ஓர் அதிசயமான கதை. கத்திச் சண்டை இல்லாமல் சண்டை சச்சரவு இல்லாமல் உருவான கதை.
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒரு நகரம் தோன்றுவதிலும் சரி; ஒரு நாடு தோற்றுவிக்கப் பட்டதிலும் சரி; பல்லாயிரம் உயிர்கள் பலியான வரலாற்றுச் சோகங்கள் தேங்கி நிற்பதைக் காண முடியும். சரி. மலாக்கா மரத்தின் கதைக்கு வருவோம்.
சுவீடன் நாட்டு தாவரவியலாளர் கார்லஸ் லீனஸ் (Carolus Linnaeus). இவர் 1753-ஆம் ஆண்டு; Phyllanthus Pectinatus எனும் அமலக்காய்க்கு Emblica என்று பெயர் வைத்தார். அது கருநெல்லியின் பெயராகும்.
1890-ஆம் ஆண்டில் ஜோசப் டால்டன் ஹூக்கர் (Joseph Dalton Hooker) என்பவர் அமலங்காய்களை பேராக், மலாக்கா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பார்த்து இருக்கிறார். குறிப்புகள் எழுதி வைத்து இருக்கிறார்.
கருநெல்லி பழத்தின் விதைகள் கூர்மையான முக்கோண அமைப்பு கொண்டவை. ஆனால் நெல்லி பழத்தின் விதைகள் வட்ட வடிவமானவை. இவற்றின் மலர் அமைப்புகளிலும் மரப்பட்டை தோற்றங்களிலும் வேறுபாடுகள் உள்ளன.
கருநெல்லி மரங்கள் இந்தியா, பர்மா, தாய்லாந்து, இந்தோ-சீனா மற்றும் தென் சீனா முழுவதும் இயற்கையாகக் காணப்படும் தாவர இனம்.
கருநெல்லி மரங்கள் மலாய் தீபகற்பத்தில் நடப்பட்ட தோட்ட மரங்களாக வளர்கின்றன. காடுகளில் வளர்வது இல்லை.
சுருக்கமாகச் சொல்லலாம். நெல்லி மரங்கள் மலாயா தீபகற்பத்தின் உண்மையான வன மரங்களாகும். குறிப்பாக மலாக்கா மாநிலத்தின் காடுகளில் அதிகமாகக் காணப் படுன்றன. மலாக்கா ஆயர் குரோ வனப்பூங்காவில் இந்த மரங்களை நிறையவே பார்க்கலாம்.
இருப்பினும் கால ஓட்டத்தில் Amalaka என்பது Emblica என மாற்றம் கண்டது. அந்த வகையில் கருநெல்லி மரத்தைத் தான் மலாக்கா மரம் என்று இப்போது சொல்கிறார்கள். அதே அந்தக் கருநெல்லி மரங்களை மலாக்கா முழுமைக்கும் இப்போது நட்டு வைத்து அழகு பாக்கிறார்கள்.
ஆக நெல்லி மரத்திற்குப் பதிலாகக் கருநெல்லி மரத்தை மலாக்கா மரமாக மாற்றிப் போட்டு வரலாற்றையும் மாற்றி விட்டார்கள். என்ன செய்வது?
மலாக்காவுக்கு இப்போது தேவையானது என்ன தெரியுங்களா. மலாக்கா பூந்தோட்டங்களை அழகு படுத்தும் தோட்டக்காரர்கள் அல்ல. அதன் தாவரவியல் பூங்காக்களை நல்ல முறையில் நிர்வகிக்க நல்ல அறிவார்ந்த தாவரவியலாளர்கள் தான்.
மலாக்காவின் அடையாளச் சின்னமாக இருவகையான மரங்கள் இருக்கின்றன. இதை மலாக்கா மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரமேஸ்வரா பார்த்த மரம் தவறாக அடையாளம் காணப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.
உண்மையாகப் பார்த்தால் நெல்லி மரம் தான் மலாக்கா மரம். கருநெல்லி மரம் என்பது மலாக்கா மரம் அல்ல. ஆக பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரம் நெல்லி மரம். கருநெல்லி மரம் அல்ல.
இதுவும் ஒரு வரலாற்றுச் சிதைவு தான். மறுபடியும் சொல்கிறேன். பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரத்தின் பெயர் Phyllanthus Pectinatus எனும் நெல்லி மரம். அந்த மரத்திற்குப் பதிலாக Phyllanthus Emblica எனும் கருநெல்லி மரத்தின் பெயரைச் சூட்டி வரலாற்றைத் திரித்து விட்டார்கள். வேதனையாக இருக்கிறது.
இதைப் பற்றி மலாக்கா மாநிலச் சுற்றுப் பயணக் கழகத்திற்கும்; மலாக்கா சுற்றுச்சுழல் பராமரிப்புக் கழகத்திற்கும் மூன்று முறை கடிதங்கள் அனுப்பி இருக்கிறேன். ஆண்டுகள் கடந்து விட்டன.
மலாக்காவில் முதலமைச்சர்கள் வருகிறார்கள். போகிறார்கள். மலாக்கா புலாவ் பெசார் தீவில் புதைந்து கிடக்கும் புதையலைத் தேடுவதில் மட்டும் கோடிக் கோடியாய்ச் செலவழித்துச் சாதனையும் செய்கிறார்கள்.
ஆனாலும் மலாக்காவின் அசல் மலாக்கா மரத்தைக் கண்டுபிடிக்கத் தவறி விட்டார்களே. மலாக்கா மரத்தின் உண்மைத் தனம் இன்று வரையிலும் மாறவே இல்லை.
அந்த வகையில் மலாக்கா வரலாற்றுக்கும் ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே கொரோனா வந்து விட்டது போலும். இப்போது மூச்சுவிட முடியாமல் திணறிப் போய் மூர்ச்சையாகும் நிலையில் முடங்கிப் போய்க் கிடக்கிறது போலும்.
பாவம் மலாக்கா மரம். அதற்குச் சோதனை மேல் சோதனைகள் இல்லை. வேதனை மேல் வேதனைகள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.06.2020
சான்றுகள்:1. https://www.banyanbotanicals.com/…/livi…/herbs/amalaki-amla/
2. https://www.worldheritage.com.my/blog/2011/11/09/what-tree-did-parameswara-see-while-resting-besides-the-river/
3. https://www.thestar.com.my/business/business-news/2011/11/05/what-tree-did-parameswara-really-see-in-malacca
4. https://www.nparks.gov.sg/florafaunaweb/flora/3/0/3062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக