11 ஆகஸ்ட் 2022

இந்தோனேசியா மகாராணியார் சீமா கலை அழகுப் போட்டி

ரத்து சீமா புத்ரி இந்தோனேசியா (Ratu Sima Putri Indonesia) எனும் கலை அழகுப் போட்டியை, இந்தோனேசியாவில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறார்கள்.

(Solo International Performing Art (SIPA) போட்டியில் ரத்து சீமா புத்ரி இந்தோனேசியா, ஓர் அங்கமாகும். அடுத்த போட்டி 08.09.2022-இல் நடைபெற உள்ளது. கொரோனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.


ஆங்கிலத்தில் The Legend, History of World Culture di Studio Seven Touch என்று அழைக்கிறார்கள். ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் கலிங்கத்து ராணியார் சீமாவைப் பற்றிய நாடக அரங்கேற்றங்கள் முதல் பரிசுகளைப் பெற்றுள்ளன.

கலிங்கா எனும் பெயரில் பல்வேறான அழகுப் போட்டிகளையும் நடத்துகிறார்கள்.


மிஸ் கலிங்கா (Miss Kalingga);

வீரா கலிங்கா (Wira Kalingga);

ரதி கலிங்கா (Ratu Kalingga);

ஜோம் கலிங்கா (Jom Kalingga);

ராணி சீமா இந்தோனேசியா (Ratu Sima Putri Indonesia)

என்று பல அழகுப் போட்டிகளை நடத்துகிறார்கள். அந்தப் பட்டியலில் ஆண்களுக்கும் கலிங்கா ஆணழகன் கட்டழகுப் போட்டியும் உள்ளது.


இந்தோனேசியா, ஜாவா தீவு மக்கள் கலிங்கா எனும் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தங்களின் பிள்ளைகளுக்குக் கலிங்கா என்று பெயர் வைப்பதிலும் பெருமை கொள்கிறார்கள். கலிங்கா என்பது தங்களின் பூர்வீகத்து அடையாளம் என்று சொல்கிறார்கள்.

பள்ளிப் பாட நூல்களில் கலிங்கா; மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; தருமநகரம்; சைலேந்திரம்; சிங்காசாரி என அனைத்துப் பேரரசுகளின் வரலாறுகள் பாடமாகப் போதிக்கப் படுகின்றன.

இந்தோனேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தோனேசியா இந்திய வரலாற்றுக்கு என்று தனி ஆய்வுத் துறைகளை உருவாக்கி முனைவர் பட்டங்களை வழங்கி வருகிறார்கள். இருட்டடிப்புகள் இல்லை.


1400 ஆண்டுகளுக்கு முன்னால் மகாராணியார் சீமா ஜாவாவில் பிறந்து வளர்ந்தவர். கி.பி. 674-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 695-ஆம் ஆண்டு வரை கலிங்கா பேரரசின் மகாராணியார்.

கலிங்கா பேரரசு இந்தோனேசியா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்ட பேரரசு. சீமா மகாராணியின் ஆட்சி ஒரு பொற் காலம் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

ஆகக் கடைசியாக, இந்தப் போட்டி, 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தோனேசிய மக்களின் வரலாற்று உணர்வுகள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவை. வாழ்த்துவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.08.2022

சான்றுகள்:

1. https://m.solopos.com/sipa-2013-finalis-putri-indonesia-jadi-maskot-418731

2. https://blog.tiket.com/en/sipa-solo-international-performing-arts/

3. https://authentic-indonesia.com/blog/solo-international-performing-arts-2019/

4. https://sipafestival.com/



 

10 ஆகஸ்ட் 2022

சங்லூன் ஜித்ரா போர்

மலாயாவில் நடந்த போர்கள்

_ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்_

1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)

2. சங்லூன் ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)

3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)

4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)

5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)

6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)

7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)

8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)


1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 1942-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் மலாயா சிங்கப்பூர் நாடுகளை ஜப்பான்காரர்கள் கபளீகரம் செய்து விட்டார்கள்.

மலாயாவுக்கு ஜப்பான்காரர்கள் வரும் போது சைக்கிள், மோட்டார் சைக்கிள், மெர்சிடிஸ், ஹோண்டா, தொயோத்தா கார்களை எல்லாம் எடுத்து வரவில்லை. முதுகில் சும்மா ஒரு பெரிய பையை மாட்டிக் கொண்டு ஐலசா பாடிக் கொண்டுதான் வந்தார்கள்.

கையில் ஆளாளுக்கு ஒரு துப்பாக்கி. கூடவே உதவிக்கு ஜீப் வண்டிகள். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள். அம்புட்டுத்தான்.


69 நாட்கள். அதாவது 9 வாரங்கள். அதாவது 2 மாதங்கள் 2 வாரங்கள். இந்த 69 நாட்கள் கால இடைவெளியில் 2 நாடுகளைப் பிடிக்க முடியுமா. அதுவும் சைக்கிள் சவாரி செய்து பிடிக்க முடியுமா. சொல்லுங்கள். முடியும் என்று சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். சாதனை என்று சொல்ல முடியாது. சாமர்த்தியம் என்று சொல்லலாம்.

தீபகற்ப மலேசியாவில் இரண்டு இடங்களில் தரை இறங்கினார்கள். கோத்தா பாரு ஓர் இடம். அலோர் ஸ்டார் மற்றோர் இடம். முதலில் நடடா ராஜா கதைதான். பல மைல்கள் நடந்தே வந்து இருக்கிறார்கள். போகும் வழியில் யாராவது சைக்கிள் ஓட்டிச் சென்றால் அம்புட்டுத்தான்.

அவனை அங்கேயே மடக்கி அப்படியே அவனுடைய சைக்கிளைப் பிடுங்கிக் கொள்வது. இல்லை என்றால் போகிற வழியில் யார் வீட்டிலாவது அழையா விருந்தாளியாக நுழைய வேண்டியது. நல்ல ஒரு சைக்கிளாகப் பார்த்து உருட்டிக் கொண்டு போவது. பழைய சைக்கிளாக இருந்தால் சொந்தக்காரனுக்கு இரண்டு மூன்று உதைகள். ஜப்பான்காரனுக்கு அப்போது தெரிந்த நன்றி விசுவாசம்.

வெறும் காலங்களில் நடந்து வந்து, பின்னர் கண்ணில் பட்ட இளிச்சவாயர்களின் சைக்கிள்களில் பயணம் செய்து, இரண்டு நாடுகளை 69 நாட்களில் கைப்பற்றி இருக்கிறார்கள். இது மலாயாவில் ஜப்பான்காரன் காலத்தில் நடந்த ஜப்பான்காரன் சாதனை.


ஆக சைக்கிள் சவாரி செய்தே இரண்டு நாடுகளைப் பிடித்து இருக்கிறார்கள் என்றால் சும்மாவா? கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிய வேண்டிய சாதனை. இன்னும் யாரும் செய்யவில்லை. முடிந்தால் செய்து பார்க்கலாம். ஜப்பான்காரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அந்த மாதிரி ஜப்பான்காரகள் மலாயாவுக்குள் வரும் போது, தொடக்கத்தில் அதிகமான எதிர்ப்புகள் இல்லை. ஐலசா பாடிக் கொண்டே மலாயா எல்லையைக் கடந்து வந்து விட்டார்கள். கெடா மாநிலத்தில் இருக்கும் சங்லூன் ஜித்ரா நகரங்களில் தான் முதல் எதிர்ப்பு. பிரிட்டிஷ் கூட்டுப் படையினர் கொடுத்த எதிர்ப்பு.

இந்த இடத்தில் தான் ஜப்பானியருக்கும் பிரிட்டிஷாருக்கும் முதல் போர் நடந்தது. 1941 டிசம்பர் மாதம் 11-ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு சங்லூன் ஜித்ரா போர் நடந்தது. மலாயா போர்களில் முதல் போர்.

மலாயா போர்களைப் பற்றி முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நேற்று சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் ஒரு மீள் பார்வை.


அரைத்த மாவையே அரைப்பதாகச் சொல்ல வேண்டாம். இப்போதுதான் விற்காத மாவை கடைகளில் இருந்து எடுத்துக் கொண்டு போய், மெசினில் போட்டுக் காய வைத்து, புதிய பிலாஸ்டிக் பைகளில் போட்டுக் கட்டி, அதே கடையில் போட்டு விற்கிறார்களே... அதற்கு நான் எவ்வளவோ பரவாயில்லை.

அப்புறம்... நேற்றைக்குச் சாப்பிட்டது இன்றைக்கு மறந்து போகிறது. இன்றைக்குச் சாப்பிட்டது நாளைக்கு மறந்து போகிறது. அப்புறம் என்னங்க. பக்கத்தில் இருக்கிற பெண்டாட்டி பிள்ளைகளையே மறந்துவிடும் அலங்கோலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆக அடிக்கடி நினைவு படுத்தினால் தான், இப்போதைய வாட்ஸ் அப் காலத்தில் புருசனுக்குப் பெண்டாட்டி நினைவு வரும். பெண்டாட்டிக்குப் பிள்ளைகள் நினைவு வரும். பிள்ளைகளுக்கு டிக் டாக் ஞாபகம் வரும். என்ன செய்வது. சீனாக்காரன் போட்ட ஊகான் கோலங்கள். சரி. விடுங்கள். நம்ப ஜப்பான்காரன் கதைக்கு வருவோம்.

ஜப்பான்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போர்களை மலாயா போர்கள் (Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள்.

இட்லர் இடி அமின் வேகத்தில் இறங்கி வந்த ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்த மலாயா பிரிட்டிஷ் இராணுவம் எவ்வளவோ போராடிப் பார்த்தது. முடியவில்லை.

மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; இந்திய இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா இராணுவத்தினர்; நியூசிலாந்து இராணுவத்தினர் என்று பல ஆயிரம் பேர் இருந்தனர்.

இருந்தாலும் ஜப்பானியர்களின் மின்னல் வேகப் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை. ஜிவு ஜிவு என புற்றீசல் மாதிரி இறங்கி வந்து கொண்டு இருந்தார்கள். சங்லூன் ஜித்ராவில் முதல் ’செக்’ வைக்கப்பட்டது. இங்குதான் முதல் போர் நடந்தது.

சங்லூன் ஜித்ரா பகுதியில் மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தின் பாதுகாப்பு முழுமையாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜப்பானியர்கள் இறங்கி வரும் பாதைகளில் முள்வேலிகள் அமைக்கப்பட்டன. சரி.

சில இடங்களில் கண்ணி வெடிகள் வைக்கப் பட்டன. சரி. அவற்றை எல்லாம் தூசு தட்டி தோளில் போட்டுக் கொண்டு ஜப்பானியர்கள் இறங்கி வந்து கொண்டே இருந்தார்கள்.

அப்போது பெர்லிஸ் கெடா பகுதிகளில் பயங்கரமான மழை. ஆழம் இல்லாத அகழிக் குழிகளில் வெள்ளம். தொடர்பு சாதனங்கள் நீரில் மூழ்கிப் போயின. வெளித் தொடர்புகள் அறுந்து போயின. அவையே ஜப்பானியர்களுக்கு சாதகமாகிப் போயின.

இந்த ஜித்ரா போரில் தான் முதன்முறையாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்திய இராணுவம் களம் இறக்கப்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்த இந்திய இராணுவப் படையினர் ஜித்ராவிற்குக் கொண்டு வரப் பட்டார்கள்.


மேஜர் ஜெனரல் டேவிட் முரே லியோன் (Major General David Murray-Lyon) என்பவர் 11-ஆவது இரண்டு இந்தியப் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தியப் படைகள் தான் முன் வரிசையில் நின்றன.

வலது புறத்தில் 15-ஆவது இந்தியக் காலாட்படை; பிரிட்டிஷ் லீசெஸ்டர்சைர் ரெஜிமென்ட் (Leicestershire Regiment); பஞ்சாப் ரெஜிமென்ட்; ஜாட் ரெஜிமென்ட் (Jat Regiment).

இடது புறத்தில் 6-ஆவது இந்திய காலாட்படை படை. மூன்று கூர்க்கா பட்டாளங்கள். 28-ஆவது இந்திய காலாட்படை தற்காப்புக்காக நின்றது.

இந்தியப் பிரிட்டிஷ் படையினர் முன் வரிசையில் 14 மைல் (23 கி.மீ) வரை அகன்று நீண்டு நின்றனர்.

அவர்கள் இருந்த இடத்தில் இரு சாலைகள். ஓர் இரயில் பாதை.  இருபுறமும் காடுகள் சூழ்ந்த மலைகள். வெள்ளம் பாய்ந்த நெல் வயல்கள். ரப்பர்  தோட்டங்கள். இவர்களைத் தாண்டித்தான் ஜப்பான்காரர்கள் அலோர் ஸ்டார் நகரத்திற்குள் வர முடியும்.


1941 டிசம்பர் 8-ஆம் தேதி தாய்லாந்தின் சிங்கோரா; பட்டாணி நகரங்களில் ஜப்பானியர்கள் தரை இறங்கி விட்டார்கள். அடுத்து அவர்களின் இலக்கு வடமேற்கு மலாயா.

ஜப்பானியர்கள் அலோர் ஸ்டாருக்கு நேராக வராமல் சங்லூன் (Changlun) நகரில் இருந்து அசூன் (Asun); ஜித்ரா (Jitra) நகரங்கள் வழியாக வந்தனர்.

சங்லூன் நகரம், கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில், தாய்லாந்து நாட்டிற்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தாய்லாந்து மொழியில் இருந்து சங்லூன் எனும் பெயர் உருவாகி இருக்கலாம்.


சங் (Chang) என்றால் யானை. லூன் (Lun) என்றால் விழுந்தது அல்லது வீழ்ச்சி. முன்பு காலத்தில் இந்தப் பகுதியில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன. அவை இந்த இடத்திற்கு வந்ததும் சேறும் சகதியுமான சதுப்பு நிலங்களில் தடுமாறி விழுவது வழக்கம்.

அதனால் அந்த இடத்திற்கு யானைகள் விழுந்து செல்லும் இடம் என்று பெயர் வந்து இருக்கலாம்.

சங்லூன் பகுதியில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் படை வீரர்கள் குறைவாக இருந்ததால் தோற்கடிக்கப் பட்டார்கள். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வந்து இந்திய வீரர்களை ஜப்பானியர்கள் தாக்கி இருக்கிறார்கள். எதிர்பாராத தாக்குதல். அதனால் பல உயிரிழப்புகள்.

ஜப்பானியர்கள் கவச வாகனங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கூர்கா; பஞ்சாப் படை வீரர்களிடம் கவச வாகனங்கள் எதுவும் இல்லை. காட்டுக்குள் ஓடி மறையவும் முடியவில்லை. அந்த வகையில் ஜப்பானியர்களை வலுவாக எதிர்க்க முடியாமல் போய் விட்டது.

சங்லூன் - ஜித்ரா போர் 15 மணி நேரம் நடந்த ஒரு கசப்பான போர். ஜப்பானியர்களின் 5-ஆவது பிரிவு முதலில் சங் லூன் நகரைக் கைப்பற்றியது. பின்னர் ஜித்ரா நகரைக் கைப்பற்றியது.


இந்தப் போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 386 வீரர்கள் பலியானார்கள். பெரும்பாலும் கூர்கா; பஞ்சாப் படை வீரர்கள். ஜப்பானிய இழப்புகளின் விவரங்கள் தெரியவில்லை.

இதே நேரத்தில், ஜப்பானியக் கடற்படையின் விமானங்கள் பினாங்கு மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தின. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு ஜப்பானியர்களால் அனுதினமும் குண்டுகள் வீசப்பட்டன. 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள்.

இதில் இருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் பல இடங்களில் இருந்து ஜப்பானியர்கள் ‘சாகடி’ தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள். ஆக நல்லவே ’பிளேன்’ போட்டுச் செய்து இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியக் கூட்டுப் படையினர் ஜப்பானியர்களின் வியூகமான இராணுவத் தந்திரங்களைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. போர் வரும். சமாளித்து விடலாம் என்றுதான் கணக்குப் போட்டு இருந்தார்கள். வெள்ளைக்காரன் போட்ட கணக்கு வேறு. ஜப்பான்காரன் போட்ட கணக்கு வேறு.

’எங்களைக் கேட்டுத்தான் சூரியன் வரும் போகும்’ என்று வீரவசனம் பேசியவர்கள் வெள்ளைக்காரர்கள். ஆனால் சங்லூன் ஜித்ரா போரில் சூரியன் மறைந்து போய் மழை பெய்ததால் அவர்களின் வீர வசனமும் நனைந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஜப்பானியர்கள் மலாயாவின் இரு புறங்களில் ஒரே சமயத்தில் தரை இறங்கினார்கள் என்று  சொல்லி இருக்கிறேன்.

முதலாவது: கிளாந்தான் கோத்தா பாரு கடற்கரை.

இரண்டாவது தாய்லாந்து - மலாயா சங்லூன் எல்லைப் பகுதி. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி நடந்தவை.

அடுத்த கட்டுரையில் கம்பார் போர் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன. இந்தப் போரில் நூற்றுக் கணக்கான இந்தியப் படை வீரர்களும்; மலாயாக் கூட்டுப் படை வீரர்களும் இறந்து போனார்கள். அவர்களுக்காகக் கம்பார் நகரில் ஒரு நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(10.08.2022)


மேற்கோள்கள்:

1. Falk, Stanley L. (1975). Seventy days to Singapore: The Malayan Campaign, 1941–1942. London: Hale. ISBN 978-0-7091-4928-6.

2. Shores, Christopher F; Cull, Brian; Izawa, Yasuho. Bloody Shambles, The First Comprehensive Account of the Air Operations over South-East Asia December 1941 – April 1942 Volume One: Drift to War to the Fall of Singapore. London: Grub Street Press. (1992)

3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.

4. Gurcharn Singh Sandhu, The Indian cavalry: history of the Indian Armoured Corps, Volume 2, Vision Books, 1978 ISBN 978-81-7094-004-3


 

01 ஜூலை 2022

சீதாபதி நடேசன் மலேசியக் கல்வியாளர்

நாடறிந்த கல்வியாளர். நடமாடும் கல்விக் களஞ்சியம். சமூகச் சேவையாளர். நேதாஜியின் இந்திய இராணுவத்தில் விடுதலைப் போராட்டவாதி. தோக்கோ குரு விருது பெற்ற கல்வியாளர். இவரின் சேவை மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு அளப்பரியது.


12.12.1926-ஆம் நாள் புக்கிட் ரோத்தானில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பின் தம்முடைய 17-ஆவது வயதில் சுபாஷ் சந்திர போஸ் நேதாஜி தொடங்கிய தேசிய இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்.

தாய்லாந்து வழியாக மியன்மார் சென்றார். போர் முனையில் இரு ஆண்டுகள். பின்னர் 1946-ஆம் ஆண்டு, மணிப்பூர் வழியாக இந்தியா சென்றார்.

1948-ஆம் ஆண்டு மீண்டும் மலாயாவிற்கு வந்தார். ஆசிரியர்த் துறையில் பயிற்சி பெற்றார். அவர் படித்த புக்கிட் ரோத்தான் பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார்.

1951-ஆம் ஆண்டு சகுந்தலா அம்மையாரை மணம் புரிந்து கொண்டார். பதவி உயர்வு கிடைத்தது.

சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி; பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி; காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி; ஆகிய பள்ளிகளில் பணியாற்றிய பின்னர் 1981-ஆம் ஆண்டு பதவி ஓய்வு பெற்றார்.

சிலாங்கூர் சுல்தானிடம் இருந்து பி.ஜே.கே. விருது; பேரரசரிடம் இருந்து பி.பி.என். விருது.

பணி ஓய்வுக்குப் பிறகும் கோலா சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள பாலர் பள்ளிகளில் கண்காணிப்பாளராகவும் சேவை செய்தார்.

ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். எஸ்.ஆர்.டி. 5 எனும் எங்களுடைய ஆசிரியர்ப் பயிற்சியில் தமிழ் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ் இலக்கணக் கடல் என்று நாங்கள் பெருமைப் படுகிறோம். அன்னாரின் ஆத்மா உயர் பெற்று நிலை பெற இறைஞ்சுகின்றோம்.

இவர் பனிக்கும் பூக்களில் மணக்கும் வாழ்வியல் களஞ்சியம்!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.07.2021




 

29 ஜூன் 2022

நீல உத்தமன்

ஸ்ரீ மகாராஜா உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா


நீல உத்தமன் அல்லது சாங் நீல உத்தமன் (Sang Nila Utama) என்பவர் ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசர். இவர் 1299-இல் சிங்கப்பூர் சிற்றரசைத் தோற்றுவித்தார். இவரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா என்றும் உயர் அரச மொழியில் அழைத்தார்கள்.

திரிபுவனா என்றால் மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களின் கோமகன் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா உயர் விருதின் பொருள் ஆகும்.

இவர் சீனா நாட்டுடன் நல்ல வலுவான உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார். இவரைச் சிங்கப்பூரின் ஆளுநர் என்று 1366-இல் சீனா அங்கீகாரம் செய்தது. இவர் 1372-இல் காலமானார். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் *பராக்கிரம வீரா* சிங்கப்பூர் அரசப் பதவியை ஏற்றுக் கொண்டார்.

நீல உத்தமனுக்கு ஆண் வாரிசுகள் மூவர் இருந்தனர். அந்த மூவரும் ஒருவருக்கு அடுத்து ஒருவராகச் சிங்கப்பூரை ஆட்சி செய்தனர்.

-ஸ்ரீ பராக்கிரம வீரா ராஜா (1372–1386)

-ஸ்ரீ ராணா வீரா கர்மா (1386–1399)

-ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399–1401)

1399-ஆம் ஆண்டு நீல உத்தமனின் கொள்ளுப் பேரனாகிய *பரமேசுவரா* அரச பதவி ஏற்றார். இருந்தாலும் அவருடைய ஆட்சி நீடிக்கவில்லை.

1401-இல் மஜாபாகித் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. பரமேஸ்வரா ஒருவரை நம்பி முதல் அமைச்சர் பதவியைக் கொடுத்தார். அந்த முதல் அமைச்சர் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்.

அந்த முதல் அமைச்சர் பரமேஸ்வராவுக்கு எதிராகவும் மஜாபாகித் அரசுக்கு உடந்தையாகவும் போனார். சிங்கப்பூரில் ஓர் ஆட்சி கவிழ்ப்பே நடந்தது. அதில் பரமேஸ்வராவின் படைக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் பரமேஸ்வரா அங்கு இருந்து தப்பிச் சென்றார். மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மலாயாவின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார்.

பெர்த்தாம் நதிக்கரை ஓரத்தில் ஒரு சருகு மான் நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. அதன் பின்னர் பரமேஸ்வரா 1402-இல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.

(ஆக்கம்: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.06.2022

சான்றுகள்:

1. Commonwealth Yearbook 2006|page=348|author=Commonwealth Secretariat|isbn=978-0-9549629-4-4|year= 2004

2. Pusat Rujukan Persuratan Melayu: Dewan Bahasa dan Pustaka

3. Cite web|url=http://www.royalark.net/Malaysia/malacca2.htm|title=Ruling House of Malacca-Johor|publisher=Christopher Buyers|date=October 2008

4. The History of Singapore -books.google.com/books?id=AHF59oExO80C - publisher  = ABC-CLIO;  isbn = 978-0-313-37743-3


28 ஜூன் 2022

சேது ரக்தமரிதிகா

மலையக மண்ணில் இந்திய மண்வாசனைகள்

மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் தானா மேரா எனும் நகரம்; தானா மேரா எனும்  மாவட்டம்; கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த இடத்திற்கு சேது ரக்தமரிதிகா அல்லது சேது இரக்த மரதிகா அல்லது சீது ரக்தமரிதிகா (ChiTu Raktamaritika) எனும் ஓர் இந்தியச் சிற்றரசு பெயர் வைத்து இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.[1]


சேது ரக்தமரிதிகா எனும் அரசு பண்டைய காலத்தில் மலாயா, கிளாந்தான்; தாய்லாந்து தென் பகுதிகள்; ஆகியவற்றை ஆட்சி செய்த சிற்றரசு ஆகும். இந்து, பௌத்த மதங்கள் சார்ந்த அரசு. கி.மு. 100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி செய்த அரசு.[2]

தெற்கு தாய்லாந்தின் சொங்கலா (Songkhla) மற்றும் பட்டாணி (Pattani) மாநிலங்களில் சில பகுதிகளை உள்ளடக்கிய அரசு. சிங்கோரா (Singgora) எனும் சொல்தான் சொங்கலா என்று மாறிப் போனது.[3]


சேது ரக்தமரிதிகா சிற்றரசு முன்னர் காலத்தில் சீனா, சாம்பா, பூனான், ஜாவா, சுமத்திரா, மியன்மார், தென்னிந்தியா போன்ற நாடுகளுடன் வணிகம் செய்த அரசு.

சேது ரக்தமரிதிகா சிற்றரசிற்குச் சிவந்த மண் சிற்றரசு (Red Earth Kingdom) என்று மற்றொரு பெயரும் உள்ளது. அதனால் அந்தச் சிற்றரசை மலாய் மொழியில் தானா மேரா (Tanah Merah) என்று அழைத்தார்கள்.[4]

கிளாந்தான் தானா மேரா மாவட்டத்திற்கு சேது ரக்தமரிதிகா சிற்றரசில் இருந்து தான் பெயர் வைக்கப்பட்டது. கி.மு. 100 தொடங்கி கி.பி. 700 வரையில், இலங்காசுகம்; கடாரம் போன்ற ஆளுமைகளுக்கு மிக முக்கியமான வர்த்தக மையமாக சேது ரக்தமரிதிகா சிற்றரசு விளங்கி உள்ளது.


1834-ஆம் ஆண்டில், கெடாவில் ஒரு கல்வெட்டைக் கண்டு எடுத்தார்கள். அதன் பெயர் *புத்த குப்தா கல் வெட்டு* (Buddhagupta Stone found in Kedah). நான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு.[7]

இந்தக் கல்வெட்டில் சேது ரக்தமரிதிகாவைப் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. *சிவப்பு பூமி நிலம்* எனும் வாசகம் வருகிறது. இந்த வாசகம் கிளாந்தான் தானா மேரா எனும் இடத்தைச் சுட்டிக் காட்டுவதாகும்.

தாயலாந்து நாட்டில், சொங்கலா மாவட்டத்தில் சொங்கலா (Songkhla) எனும் நகரம் உள்ளது. அந்த நகருக்கு அருகாமையில் சொங்கலா ஏரி உள்ளது இந்த ஏரிக்கு மிக அருகில் பேங் கியோ (Bang Kaeo); சாதிங் பிரா (Sathing Phra) எனும் பழங்காலத்து நகரங்களின் மையம் உள்ளது.[5]

இந்த நகரங்களில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சிவாலயங்களின் இடிபாடுகளைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.


ஜே.எல். மியோன் (J.L. Meons) என்பவர் பிரபலமான வரலாற்று ஆசிரியர். அவர் அவ்வாறு சொல்கிறார்: இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஸ்ரீ விஜயப் பேரரசு என்பது இந்த கிளாந்தான் சிற்றரசில் இருந்து தோன்றி இருக்கலாம் என்று சொல்கிறார். அதையே அறிஞர் நீலகண்ட சாஸ்திரி அவர்களும் வலியுறுத்துகிறார்.[6]

7-ஆம் நூற்றாண்டில் சீனாவை சூய் வம்சாவழியினர் (Sui Dynasty) ஆட்சி செய்தனர். அவர்களும் தங்கள் காலத்தில் என்னென்ன நடந்தன என்பதைப் பற்றி எழுதி வைத்து இருக்கிறார்கள்.

அவர்களின் காலக் குறிப்புகளில் இருந்து: கிளாந்தானில் சேது ரக்தமரிதிகா எனும் ஒரு சிற்றரசு இருந்தது. அந்த அரசு நன்கு வளர்ச்சி அடைந்த அரசாக விளங்கியது என்று சூய் வம்சாவழி காலச் சுவடுகளில் (Chinese Sui Dynasty Annals) எழுதப்பட்டு உள்ளன.[7]

இந்தச் சிற்றரசுதான் பின்னர் காலத்தில் ஸ்ரீ விஜய பேரரசாக உருமாற்றம் பெற்று இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

சேது ரக்தமரிதிகா எனும் பெயர் பின்னர் ஸ்ரீ விஜயா மாலா (Sri Wijaya Mala) என்று மாற்றப்பட்டு இருக்கலாம். ஸ்ரீ விஜயா மாலா உருவான ஆண்டு கி.மு. 667. அதன் தலைநகரத்தை வலாய் (Valai) என்று அழைத்து இருக்கிறார்கள்.[8]

(ஆய்வு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:

1. Museums, History and Culture in Malaysia|year=2014|publisher=NUS Press|isbn=99-716-9819-6|pages=61-62

2. Dougald J. W. O'Reilly; Early Civilizations of Southeast Asia|year=2007|publisher=Rowman Altamira|isbn=0-7591-0279-1

3. The Emporium of the World: Maritime Quanzhou, 1000-1400|publisher=Brill|date=2001| pages=309–393| chapter=Behind the Shadows: Archaeological Data on Two-Way Sea Trade Between Quanzhou and Satingpra, South Thailand, 10th-14th century| series=Volume 49 of ''Sinica Leidensia''|isbn=90-04-11773-3

4. The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 Bc-1300 Ad) |author= Michel Jacq-Hergoualc'h |translator= Victoria Hobson |editor= BRILL |pages= 411–416 |year= 2002 |isbn=90-04-11973-6

5. Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society|year=2007|publisher=Malaysian Branch of the Royal Asiatic Society|isbn=967-9948-38-2

6. The Indianized States of Southeast Asia|year= 1968|publisher= University of Hawaii Press|isbn= 978-0-8248-0368-1

7. J.L. Moens; Srivijaya Java en Kataha|year=1937|publisher=TBG

8. Keturunan raja-raja Kelantan dan peristiwa-peristiwa bersejarah|year=1981|publisher=Perbadanan Muzium Negeri Kelantan|oclc=19245376