09 பிப்ரவரி 2015

உலக மக்கள் தொகை

தினக்குரல் மலேசியா 08.02.2015 

அம்மணி சுப்பிரமணியம்  ammanee@ymail.com

கே: உலகத்தின் மக்கள் தொகை 7 பில்லியனைத் தாண்டிவிட்டது. உங்கள் இணையம் என்ன சொல்கிறது?
 
ப: 1960-இல் உலக மக்கள் தொகை 3.5 பில்லியனாக இருந்தது.  ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகி விட்டது. இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை 7,290,464,631. ஒரு விநாடிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. சரி. இந்த ஏழு பில்லியன் பேருக்கு சாப்பாடு போட வேண்டுமே. இப்போதே பல ஏழை நாடுகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கலங்கி நிற்கின்றன. உங்களுக்கு ஓர் அதிசயமான நிரலியைத் தருகிறேன்.


நம்முடைய மனித இனம்  தோன்றிய காலத்தில் இருந்து நீங்கள் எத்தனையாவது மனிதராகப் பிறந்து இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஓர் இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இதை லண்டன் பி.பி.சி. வானொலி நிலையம் உருவாக்கி இருக்கிறது.

அதில் உங்களுடைய பிறந்த தேதியைக் கொடுத்தால் போதும். நீங்கள் இந்த உலகில் எத்தனையாவது மனிதராகப் பிறந்து இருக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுகிறது. அது மட்டும் இல்லை. உலகில் இதுவரை வாழ்ந்த மனிதர்களில்  நீங்கள் எத்தனையாவது மனிதராக வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் சொல்லி விடுகிறது.


மலேசியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 65 குழந்தைகள் பிறக்கின்றன. 15 பேர் இறக்கின்றனர். இரு கள்ளக் குடியேறிகள் மலேசியாவிற்குள் நுழைகின்றனர் என்றும் சொல்கிறது. மக்கள் தொகை 25.01.2015-இல் 28,401,017. அவர்களில் 100க்கு 75 பேர் பெண்கள். 71 பேர் ஆண்கள். ஆக, மலேசியாவில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நல்ல ஓர் அருமையான நிரலி.

அதன் முகவரி: http://www.bbc.co.uk/news/world-15391515.

என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். இப்போது இந்த உலகில் வாழும் மனிதர்களில் நான் 2,478,881,987 ஆவதாகப் பிறந்தவன் என்று சொல்கிறது. இதுவரை பூமியில் வாழ்ந்தவர்களில் நான் 75,484,479,557 ஆகப் பிறந்த மனிதன் என்றும் சொல்கிறது. என்ன செய்வது. நம்ப வேண்டித்தான் இருக்கி
து. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
 

இணையம் மூலமாக இலவச மென்பொருட்கள்


தினக்குரல் மலேசியா 08.02.2015 

பிரீத்தி சந்தானம்  preetisanthnam@ymail.com

கே: இணையம் மூலமாக இலவச மென்பொருட்களை அதாவது நிரலிகளை நாம் இலவசமாகப் பதிவிறக்கம் (Download) செய்கிறோம். அப்படி பதிவிறக்கம் செய்யும் போது அந்த நிரலிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்று தெரியவில்லை. அவை பாதுகாப்பானவையா என்று எப்படி தெரிந்து கொள்வது? 

 

ப: நல்ல கேள்வி. இணையம் என்பது மனித வாழ்க்கையில் ஓர் இனிமையான தோழனாகி விட்டது. படங்கள், பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்கிறோம். பயன்படுத்துகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். 

உண்மையைச் சொன்னால், இணையம் என்பது ஓர் இனிமையான பொற் குவியல். அண்மைய காலங்களில், Smart Phone என்கிற திறன்பேசி வந்துவிட்டது. இளைய சமுதாயத்தினரைக் கட்டிப் போட்டு அவர்களை அவர்களுக்கு உள்ளேயே தனிமைப் படுத்தியும் வருகிறது.

இலவசமாகக் கிடைக்கும் பொருட்களினால், கணினியும் திறன்பேசியும் பாதிப்பு அடையக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.  அதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே இணையத்தில் இருந்து நாம் பதிவிறக்கம் Download செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒரு சில நல்ல வழிமுறைகளைச் சொல்கிறேன். கவனத்தில் கொள்ளுங்கள்.

1. இலவசம் என்று தெரிந்ததும், எல்லாவற்றையும் பதிவிறக்கம் செய்து, கணினிக்குள் பதிப்பு செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசையை முதலில் தவிர்த்து விடுங்கள். பதிவிறக்கம் செய்யப் போகும் நிரலிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே பதிவிறக்கம் செய்யுங்கள். கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். Install என்பதைத் தமிழில் உள்ளீடுதல் அல்லது நிறுவுதல் என்று சொல்லலாம்.

2. பதிவிறக்கம் செய்யப் படும் நிரலி அல்லது நிரலிகளால் ஒருமுறை மட்டும் தான் பயன் அடைய முடியும் என்ற ஒரு நிலை இருந்தால், தயவு செய்து அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்யவே வேண்டாம்.

3. எந்த ஓர் இலவச நிரலியையும் அதனுடைய தயாரிப்பு இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் தங்களின் நிரலியைப் பற்றி அவர்களே தரம் உயர்த்திப் பேசுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.

4. இலவச நிரலிகளைத் தரம் பிரித்து அவற்றை முறையாக  தொகுத்து வழங்கும் தளங்களான cnet, brothersoft, majorgeek, softpedia, filehippo, tucows, pcworld போன்ற நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

5. நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்தாலும், அதைப் பயன்படுத்துபவர்கள் என்ன மாதிரி கணிப்பு செய்து இருக்கிறார்கள். என்ன மாதிரியாக விமர்சனங்கள் செய்து இருக்கிறார்கள் என்பதையும் கண்டறியுங்கள்.

6. cnet, tucows, pcworld  போன்ற பிரபல தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, தகுதி மதிப்பீடு (Product Ranking) 1 அல்லது 2 க்குள் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பீடு 3 ஆக இருந்தால் பரவாயில்லை. ஆனால், 4 அல்லது 5 க்குப் போனால் அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

7. ஒரு தளத்தில் இருந்து ஒரு நிரலியைப் பதிவிறக்கம் செய்யும் போது கடந்த காலங்களில் எத்தனை பேர் அதனைப் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். அதிகமானோர் பதிவிறக்கம் செய்து இருந்தால் அந்த மென்பொருள் அப்போதைய சமயத்தில் நன்றாக இருக்கிறது என்று பொருள்.  ஆக, அந்த நிரலியை தயக்கம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம். 

எடுத்துக் காட்டாக Avira Free Antivirus 2015 எனும் இலவச நச்சுநிரல் தடுப்பி. இந்தக் கேள்விக்கு 28.01.2015 ஆம் தேதி இரவு 11.20 க்கு பதில் அளிக்கிறேன். அது வரை 365,536,424 பேர் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். அதாவது 36 கோடி 55 இலட்சம் பேர். ஆக, அந்த நிரலியை நம்பிக்கையோடு பதிவிறக்கம் செய்யலாம்.

8. அடுத்து, கணினியில் ஒரு வேலையைச் செய்வதற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட நிரலிகளைக் கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். எடுத்துக் காட்டாக Video Players, PC Cleaners, Photo Editors, Downloaders. இவற்றில் ஒவ்வொன்றிலும் உங்களுக்குப் பிடித்த ஒரே ஒரு நிரலியை மட்டும் கணினியில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத மற்ற நிரலிகளை அப்புறப் படுத்தி விடுங்கள்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் கணினி உங்கள் பேச்சைக் கேட்கும். இல்லை என்றால் மன்னியுங்கள்... அம்மியும் மிதிக்காது. அருந்ததியையும் பார்க்காது. புரியும் என்று நினைக்கிறேன்.

கின்னஸ் சாதனை

சின்னத்தம்பி மதிவாணன், லாவான் கூடா, கோப்பேங்

கே: சார், இது கணினி இணையம் சம்பந்தமான கேள்வி. கண்டிப்பாகப் பதில் அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். மறுக்காமல் பத்திரிகையில் போடுங்கள். அண்மைய காலங்களில் எனக்கு ஒரு விநோதமான் ஆசை வந்து இருக்கிறது. நான் நீண்ட நாட்களுக்கு 120 வயது வரை வாழ ஆசைப் படுகிறேன். கின்னஸ் புத்தகத்தில் ஒரு சாதனை செய்ய விரும்புகிறேன். தயவு செய்து இணையத்தில் நல்ல ஒரு மருந்தைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். உங்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.
கின்னஸ் சாதனை2

ப: கேட்க நல்லாதான் இருக்கிறது. உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் கேட்டு இருக்கும் இந்தக் கேள்வியை எந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதாம். யார் யாருக்கு என்ன என்ன மாதிரியான ஆசைகள் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் வருகின்றன. பார்த்தீர்களா!

உங்கள் விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் கேட்கிற மாதிரி ஒரு மருந்து உண்மையிலேயே இருந்தால், முதலில் நான் சும்மா இருப்பேனா ஐயா. சொல்லுங்கள். 

கின்னஸ் சாதனை

இருந்தாலும், உங்கள் ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை. இணையம் வழியாகத் தேடிப் பார்த்தேன். கடைசியாக ஒரு தகவல் கிடைத்தது. நீங்கள் கேட்கிற மருந்தை வட துருவத்தில் ஒரு பெண் பெங்குயின் வைத்து இருக்கிறதாம். அதன் பெயர் ‘ஊத்தாண்டே’. 

King Penguins

அங்கே போய் கேட்டுப் பாருங்கள். இன்னும் ஒரு சேதி. வட துருவத்தில் 33 கோடி பெங்குயின்கள் இருக்கின்றன. இடம் தெரியாத இடத்தில் பெயர் தெரியாத பெண் பெங்குயினைத் தேடிப் போறீங்க. பத்திரம். எதுக்கும் வீட்டுல சொல்லிட்டுப் போங்க! 

(இனிமேல் எல்லாருக்கும் பயன்படும் நல்ல கேள்வியாகக் கேளுங்கள். சரியா.)