மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
(அதிகாரம்: படைமாட்சி குறள் எண்: 766)
இராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய திருக்குறள்.
*மு வரதராசன் உரை* வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.
*மணக்குடவர் உரை* மறமும், மானமும், நல்லவழிச் சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம்.
நல்லவழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.
*பரிமேலழகர் உரை* மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது.
*சி இலக்குவனார் உரை* வீரமும், மானமும், மாட்சிமைப்பட்ட நடைப்போக்கும், தெளிவும் என்று சொல்லப்பட்ட நான்கே படைக்குக் காவல் ஆகும். (படை அழியாமல் காக்கக் கூடியன.)
*பதவுரை* மறம் - வீரம்; மானம் - தாழ்வின்மை; மாண்ட - மாட்சிமைப்பட்ட; வழி - நன்னெறி; செலவு - செல்லுதல்; தேற்றம் - தெளியப்படுதல், தெளிவு, நம்பிக்கை; என - என்பது பற்றி; நான்கே - நான்குதாம்; ஏமம் - அரண்; படைக்கு - படைக்கு.
*நிறையுரை* வீரம் மானம் சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர் நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவலாகும்.