மொரீஷியஸ் (Mauritius) ஒரு சின்ன நாடு. ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் ஒரு தீவு. மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது.
மொரீஷியஸ் நாட்டில் 68 விழுக்காடு இந்திய வம்சாவழியினர்; 27 விழுக்காடு ஆப்பிரிக்க வம்சாவழியினர்; 3 விழுக்காடு சீன வம்சாவழியினர்; 2 விழுக்காடு பிரிட்டீஷ் வம்சாவழியினர்.
தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். இந்தத் தீவில் தான் ஒரு தமிழ்ப் பெண்மணி சாதனை படைத்து இருக்கிறார். அவர்தான் அஞ்சலை குப்பன்.
நவீன மொரீஷியஸின் வரலாற்றில் ஒரு முக்கிய மாந்தராகக் கருதப் படுகிறார். மொரீஷிய மக்களின் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளார்.
அஞ்சலை குப்பன் - 1940-ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் காலனித்துவ கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர். மொரீஷியஸ் சர்க்கரைத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகப் போராடியவர். அந்த நாட்டுத் தொழிலாளர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடியவர்.
பெண்களின் விடுதலைக்கான போராட்டக் களத்திலும் இறங்கியவர். சீனித் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி உரிமைப் போராட்டங்களை முன்வைத்தவர்.
அஞ்சலை குப்பன் அல்லது அஞ்சலை திவாகரன்; 1911 பிப்ரவரி 17-ஆம் தேதி மொரீஷியஸ் தீவில் பிறந்தவர். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
1943 செப்டம்பர் 13-ஆம் தேதி பெல்லி வியூ ஹாரேல் (Belle Vue Harel) எனும் சீனி தோட்டத்தில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது. அதில் அஞ்சலையும் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் பெரிதாகவே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
அந்தக் கலவரத்தில் நால்வர் உயிர் இழந்தார்கள். அஞ்சலை குப்பனைத் தவிர்த்து மேலும் மூவர். கிருஷ்ணசாமி முனுசாமி (Kistnasamy Mooneesamy); முனுசாமி முனியன் (Moonsamy Moonien; மருதை பானப்பன் (Marday Panapen). இந்த நிகழ்ச்சியைப் பெல்லி வியூ ஹாரேல் படுகொலை (Belle Vue Harel massacre) என்று வர்ணிக்கிறார்கள்.
அஞ்சலை இறக்கும் போது அவருக்கு வயது 32. நிறைமாத கர்ப்பிணி. முதல் பிரசவத்திற்கு முன்னரே பலியானார்.
அஞ்சலை குப்பனுக்காக மொரீஷியஸ் தலைநகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) அபரவாசி (Aapravasi Ghat) வளாகத்தில் சிலை வைத்து இருக்கிறார்கள்.
1968-ஆம் ஆண்டு மொரீஷியஸ் சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர், 1995-ஆம் ஆண்டில் அவருக்குச் சிலை வைக்கப் பட்டது. அப்போதைய மொரீஷியஸ் பிரதமர் சர் அனரூட் ஜுக்நாத் (Sir Anerood Jugnauth) திறப்பு விழா செய்தார்.
தவிர அவருடைய பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் அஞ்சலை விளையாட்டரங்கம் (Anjalay Stadium, Belle Vue, Mauritius).
2000 டிசம்பர் 13-ஆம் தேதி அவருக்காக அஞ்சலை தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள்.
இந்தத் தீவின் மொத்த நீளம் 65 கி.மீ. அகலம் 45 கி.மீ. அவ்வளவு தான். தீவின் மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ. 2016 ஜூலை மாதக் கணக்குபடி மொரீஷியஸ் தீவின் மக்கள் தொகை 1,262,132.
தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் உயர்க் கல்விமான்களாகவும் கிராமத் தலைவர்களாகவும் சேவை செய்து இருக்கிறார்கள். அஞ்சலை குப்பனைப் பற்றிய முழுக்கட்டுரை விரைவில் தமிழ் மலர் நாளிதழில் வெளிவரும்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.06.2020