10 மே 2016

பரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே

மலாக்கா நாட்டு பலேமிசுலா

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் புரிந்த காலத்தில் அவரைப் பலமேசுலா என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச் சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… என்றுதான் அழைக்கிறார்கள். நமக்கும் வாய் தவறி வந்துவிடுகிறது. சரி விடுங்கள். அவரைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்தார்கள்.
(சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 - 1489)

இந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள் பலமோஸ் லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறுவதைக் கவனியுங்கள். அங்கே தான் சரித்திரம் அழகாக வீணை வாசிக்கிறது.

சரி. மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.  மலாக்கா நாட்டின் அரசர் பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள் சொல்கின்றன. ஆக, மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா.

அவர் இறக்கும் போது பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். சுல்கார்னாயின் என்பவர் வந்தார். எப்படி பரமேஸ்வராவின் பெயரைத் தங்கள் வசதிக்கு மாற்றிக் கொண்டார்கள். போதுங்களா. எங்கே வருகிறேன்… புரிந்து கொள்ளுங்கள். 

இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. மகா அலெக்ஸாந்தரின் பெயர் தான் சுல்கார்னாயின். இவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் எப்படி லங்காவி தீவிற்கு வந்து அங்குள்ள ஒரு சுதேசிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். சரி.

பரமேஸ்வராவைப் பற்றிய சரியான சான்றுகள் நம்மிடம் உள்ளன. முறையான ஆவணங்களும் உள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகம் உதவிகள் செய்யத் தயாராகவும் இருக்கிறது. அப்புறம் என்னங்க பயம்.

பரமேஸ்வரா சமய மாற்றம் செய்து கொண்டாரா இல்லையா என்பது இப்போதைக்கு நம்முடைய வாதம் அல்ல. இருந்தாலும் அவர் இறக்கும் போது அவருடைய பெயர் என்ன என்பதே இப்போதைக்கு நம்முடைய வாதம். அதைப் பற்றித்தான் சில மலேசிய வரலாற்றுக் கத்துக்குட்டிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. மல்லுக்கு நின்றாலும் பரவாயில்லை. மீசையில் மண் ஒட்டிக் கொண்டதா என்றும் ஆதங்கப்படுகின்றன். அதுதான் வேதனையாக இருக்கிறது.

பரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்தப் பெயரிலும் அவர் அழைக்கப் படவில்லை. அதைச் சீன வரலாற்றுக் குறிப்புகள் உறுதி படுத்துகின்றன. வலுவான ஆதாரங்களும் உள்ளன. இப்போது தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி படுத்தப்பட முடியவில்லை. அதைப் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகிறேன்.

சீனாவின் மிங் பேரரசுடன் சுமுகமான உறவுகள் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே ஆரம்பித்தன. பரமேஸ்வரா இரு முறைகள் சீனாவிற்குச் சென்று யோங்லே எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார். 

பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கடல் பகுதித் தலைவர்களும் வந்து இருக்கின்றனர். ஒருவர் செங் ஹோ. இன்னொருவர் இங் சிங். இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்கா வந்துள்ளனர். 

ஆக, சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்காப் பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே விளங்கி உள்ளது.

அதனால் தான் சியாம் நாடும் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணத்தினால் மலாக்காவின் கடல் வழி வாணிகம் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கி இருக்கிறது.

1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்றார். யோங்லே மன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டினார். 

பரமேஸ்வரா சீனாவிற்கு வந்து அடைந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு நல்கப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்பு ஏடுகள் மிங் பேரரசின் வரலாற்றுக் குறிப்புகளில் காணப் பெறலாம். 

சீன மொழியில் எழுதப் பட்டிருப்பதின் மொழியாக்கம்:

அரசராகிய நீங்கள் (பரமேஸ்வராவைக் குறிப்பிடுகிறது) பல பத்தாயிரம் மைல்கள் விரிந்து கிடக்கும் மாக்கடலைத் தாண்டி நம்பிக்கையுடன் கவலை இல்லாமல் வந்திருக்கிறீர்கள். அந்த விசுவாசத்திற்கும் நேர்மை குணத்திற்கும் நல்லாவிகளின் பாதுகாப்புகளைப் பெறுவீர்களாக. நான் (யோங்லே மன்னரைக் குறிப்பிடுகிறது) உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தாங்கள் இங்கே தங்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். இருப்பினும் உங்களுடைய மக்கள் உங்களுக்காகப் பேராவலுடன் காத்துள்ளனர். ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே பொருத்தமாக அமையும். வானிலை குளிராகி வருகிறது. தெற்கை நோக்கிக் கடல் பயணம் செய்வதற்கு காற்று சரியாகவும் இருக்கின்றது.

இது தான் மிகச் சரியான நேரம். பயணத்தின் போது நீங்கள் நன்றாகச் சாப்பிட்டு உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவே நான் உங்கள் மீது காட்டும் அக்கறைக்கு பிரதிபலனாக அமையும்.

மன்னனாகிய உங்களுக்குத் தங்கத்திலும் கரும்பச்சை மணிக் கல்லால் ஆன அரைக்கச்சை, சடங்குகளுக்கான அதிகாரச் சின்னம், சேணம் பூட்டிய இரண்டு குதிரைகள், 100 லியாங் தங்கம், 500 லியாங் வெள்ளி, 400,000 குவான் காகிதப் பணம், 2,600 செப்புக் காசுகள், 300 பட்டுச் சேலைகள், 1000 மென் பட்டுத் துணிகள்......

மிங் அரசருக்கு மலாக்கா வழங்கிய அன்பளிப்புகள்: மாணிக்கக் கற்கள், முத்து, கழுகின் அலகுகள், நாரையின் அலகுகள், தங்க நாரையின் அலகுகள், வெள்ளைத் துணிகள், மேற்கத்திய நூலிழைகள், காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைத் தந்தங்கள், கறுப்புக் கரடி, கருங்குரங்கு, வான்கோழி, கிளிகள், வாசனைப் பொருட்கள், தங்க வெள்ளிக் குச்சிகள்... என அந்த வரலாற்றுக் குறிப்பில் உள்ளன.

யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ

பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். 

தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுரு, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஓரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சியாம், கெடா, பகாங், பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள் போன்ற நாடுகள்.

16-ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று சொன்னார். தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர். ஓர் எழுத்தாளரும் ஆகும்.

பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா (மேகாட் இஸ்கந்தர் ஷா) மலாக்காவை 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.

ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம்

இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டு இருக்கலாம் என்று கல்வியாளர்கள் நம்புகின்றனர்.

அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார். ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் மலாக்காவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது.

ராஜா இப்ராகிம் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா எனும் பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு குறைகூறல்.

சமயச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. அதனால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446இல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர் ராஜா காசிம் பதவிக்கு வந்தார்.

ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின் பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் மலாக்கா இந்தியர்களுக்கும் அதிகாரம் இல்லாமல் போயிற்று.

மலாக்காவைத் தோற்றுவித்தவர் யார்???

மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

போதுமான சான்றுகளுடன் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன். போதுமான சான்றுகளுடன் கட்டுரையை முடிக்கின்றேன். மலாக்காவைப் பரமேஸ்வரா கண்டுபிடிக்கவில்லை என்பது தவறான கூற்று. மலாக்கா என்றால் பரமேஸ்வரா. 

ஆக, ஒரு  வரலாற்றுச் சிதைவை நியாயப் படுத்த முன்வருபவர்கள் எந்தக் கல்வி மேடையிலும் நம்மை வரலாற்று வாதத்திற்கு அழைக்கலாம். சான்றுகளை முன் வைக்கத் தயாராக இருக்கிறோம்.

09 மே 2016

பரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா

தெமாசிக் (Temasek) என்பது சிங்கப்பூரின் பழைய பெயர். காலப்போக்கில் துமாசிக் என்று பெயர் மாற்றம் கண்டது. 1280-ஆம் ஆண்டுகளில் தெமாகி என்பவர் துமாசிக்கை ஆட்சி செய்து வந்தார். அந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் பலேம்பாங் எனும் ஒரு சிற்றரசு இருந்தது. இந்தச் சிற்றரசு ஸ்ரீ விஜய பேரரசின் வழித்தோன்றல் ஆகும்.


அந்தச் சிற்றரசில் அரசர் பதவிக்குப் போட்டிகள் ஏற்பட்டன. தவிர புதிதாக உருவான மஜாபாகிட் பேரரசின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத ஓர் இளவரசர் இருந்தார். அவருடைய பெயர்  நீல உத்தமன். அதனால் அவர் பலேம்பாங்கில் இருந்து வெளியேறினார்.

சுமத்திராவிற்கு வடக்கே இருந்த பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சி உருவாக்கப் பட்டது. அதற்கு நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். அந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார்.

சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன்

பிந்தாங் தீவிற்கு வந்த நீல உத்தமன் காலப் போக்கில் துமாசிக்கைக் கைப்பற்றினார். இது 1299-ஆம் ஆண்டு நடந்தது.

நீல உத்தமன், சிங்கப்பூரை 1347 ஆம் ஆண்டு வரை 48 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார். சீனாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார். அதை மறந்துவிட வேண்டாம். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான்.


சிங்கப்பூர் எனும் பெயர் சிங்கப்பூரா எனும் மலாய் சொல்லில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப் படுகிறது.

மலாய் வரலாற்றின் படி ஒரு கடும் புயலின் போது நீல உத்தமன் இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு விலங்கைப் பார்த்தார். அந்த விலங்கைச் சிங்கம் என்று நினைத்துக் கொண்டு சிங்கத்தின் ஊர் என்று அழைத்ததாக வரலாறு. அதுவே சிங்கப்பூர் என்று மருவியது. இவருக்கு முன்பு துமாசிக்கை ஆட்சி செய்த தெமாகியின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சி நடந்து இருக்கலாம்.




நீல உத்தமன் பார்த்தது சிங்கமாக இருக்க முடியாது. ஏன் என்றால் உலகின் இரண்டே இரண்டு இடங்களில் தான் சிங்கம் இருக்கிறது. ஒன்று ஆப்பிரிக்க நாடுகள். மற்றொன்று இந்தியா. ஆக சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

நீல உத்தமனின் உடல் சிங்கப்பூரின் புக்கிட் லாராங் (Fort Canning Hill) எனும் குன்றின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டது. அவருடைய மனைவியும் அங்கே தான் புதைக்கப் பட்டார். வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய சமாதிகளை இன்று வரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேதனையான செய்தி.

ஸ்ரீ விக்ரம வீராவின் மனைவி நீலா பாஞ்சாலை

அதன் பின்னர் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பு அவருடைய மகன் ஸ்ரீ விக்ரம வீரா (Seri Wikrama Wira) என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. இவர் 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவருடைய மனைவியின் பெயர் நீலா பாஞ்சாலை. இவருடைய காலத்தில் தான் ஒரு பெரிய சயாமியத் தாக்குதல் நடந்தது.


சயாமியர்கள் 70 கப்பல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இருந்தாலும் சிங்கப்பூரை அசைக்க முடியவில்லை. மூன்று மாதம் வரை தாக்குப் பிடித்தது. அதற்குள் சீனாவில் இருந்து ஒரு கடற்படையே களம் இறங்கி விட்டது. சயாமியர்களின் முற்றுகை தோல்வியில் முடிந்தது. ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ரானா விக்கிரமா என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.


இவருக்குப் பின்னர் வந்தவர் தான் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. அதாவது மலாக்காவின் கதாநாயகன் பரமேஸ்வரா. இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன். 1389 ஆண்டில் இருந்து 1398 வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார். 1375ஆம் ஆண்டில் இருந்து 1389 வரை என்ன நடந்தது எனும் விவரங்கள் நமக்கு சரியாகக் கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் ஆய்வுகள் செய்து கொண்டு வருகிறார்கள்.

பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. மறுபடியும் சொல்கிறேன். இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன்.


ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார்.


நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போகும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு தான் இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.


அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம். ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் பரமேஸ்வரா ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மலாக்கா வரலாற்றுக்கு புதிய வடிவம் கொடுத்தது. அவருடன் இருந்த நாய்களில் ஒன்றை ஒரு சருகுமான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.

மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு

சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா அதிசயித்துப் போனார். அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஒரு அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதன்படி மலாக்கா எனும் பேரரசு அதே இடத்தில் உருவானது. இப்படித் தான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயரும் வந்தது.


இந்தக் காலக் கட்டத்தில் நிறைய சீன வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அவர்களின் வாணிக ஈடுபாடுகளும் அதிகரித்தன. பெருமிதம் அடைந்த பரமேஸ்வரா, மலாக்காவில் புக்கிட் சீனா எனும் ஒரு குன்றுப் பகுதியைச் சீனர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

குறுகிய காலத்தில் மலாக்கா வளர்ச்சி

கடல் கடந்து வணிகர்கள் மலாக்காவில் வியாபாரம் செய்ய வந்தனர். வாணிகம் அனைத்தும் பண்ட மாற்று வியாபாரமாக இருந்தது. வணிகப் பெருக்கத்தினால் மலாக்கா குறுகிய காலத்திலேயே மிகுந்த வளம் அடைந்தது. இந்த வளர்ச்சி சயாமியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்தச் சமயத்தில் வட சுமத்திராவில் பாசாய் எனும் ஒரு சிற்றரசு இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்தச் சிற்றரசு.

சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசியைத் தான் பரமேஸ்வரா 1409-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்ததாகச் சொல்லப் படுகிறது. தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல். சரி. இந்தக் கட்டத்தில் மலாக்கா சுல்தான்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலங்களையும் தெரிந்து கொள்வோமே.

மலாக்கா சுல்தான்களின் ஆட்சி காலம்
  • பரமேஸ்வரா  1400–1414
  • ஸ்ரீ ராம விக்ரமா இஸ்கந்தார் ஷா 1414–1424
  • சுல்தான் முகமது ஷா 1424–1444
  • சுல்தான் அபு ஷாகித் 1444–1446
  • சுல்தான் முஷபர் ஷா 1446–1459
  • சுல்தான் மன்சூர் ஷா 1459–1477
  • சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477–1488
  • சுல்தான் முகமது ஷா 1488–1528

பரமேஸ்வராவின் சமய மாற்றம் இந்த நாள் வரையில் ஒரு தெளிவற்ற நிலையில் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமா 1414-இல் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரை பரமேஸ்வரா என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார். (சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781, accessed December 06, 2015.) பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில், அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா, சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அதையும் உறுதி படுத்துகிறேன்.

பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமா

சீனாவின் அப்போதைய மிங் பேரரசரராக இருந்தவர் யோங்லே (Yongle). 1402ஆம் ஆண்டில் இருந்து 1424 வரை பேரரசரராக இருந்தார்.

இவர் தான் பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமாவை மலாக்காவின் இரண்டாவது ஆளுநராக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். ஸ்ரீ ராம விக்ரமாவை அரசராக ஏற்றுக் கொண்டும் உள்ளார். (Imperially commanded that Mu-gan Sa-yugan-di er Sha (மேகாட் இஸ்கந்தார் ஷா) should inherit his father's title as king).

மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேஸ்வரா. இவர் பரமேஸ்வர ராஜா என்றும் மலாக்காவில் அழைக்கப் பட்டு இருக்கிறார். அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமாவை சுல்தான் மேகாட் இஸ்கந்தர் ஷா என்றும் அழைத்து இருக்கிறார்கள். பரமேஸ்வராவின் மகன் மலாக்காவை 1414 லிருந்து 1424 வரை ஆட்சி செய்தவர்.

பரமேஸ்வராவைப் பற்றிய அரிய தகவல்கள்

சீன வரலாற்றில் மிங் வம்சாவளியைப் பற்றி (1368 லிருந்து 1644 வரை) மிங் சிலூ (Ming Shilu) எனும் நூல் எழுதப்பட்டு உள்ளது. (Veritable Records of the Ming dynasty) அதில் 325-ஆம் அத்தியாயத்தில் சில வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவை சீனாவின் யோங்லே பேரரசரைப் பரமேஸ்வரா சந்தித்தார் எனும் காலக் குறிப்புகள் ஆகும்.

பரமேஸ்வராவை ’பலேமிசுலா’ (Bai-li-mi-su-la) என்றும் அழைத்து இருக்கிறார்கள். பொதுவாக சீனர்களுக்கு ‘ர’ கர எழுத்தில் பிறழ்வு ஏற்படும். அதனால் பரமேஸ்வரா என்பதைப் பலேமிசுலா என்று அழைத்து இருக்கிறார்கள்.

பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றது 3-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1405. இரண்டாவது முறையாக 1411 ஆகஸ்டு 4-ஆம் தேதி மறுபடியும் போய் இருக்கிறார். (சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1490/91)
ஆக, பரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா என்றே அழைக்கப் பட்டு இருக்கிறார். (சான்று: http://www.epress.nus.edu.sg/msl/entry/1781?hl=Malacca) பரமேஸ்வராவை ’பலேமிசுலா’ என்று அழைத்து இருக்கிறார்கள்.

மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இருந்து மீட்கப்பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். 

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தின் சான்றுகளுடன் இந்தக் கட்டுரையைத் தயாரித்தேன். ஏன் என்றால் உள்நாட்டு வரலாற்றுப் பாடநூல் ஆசிரியர்கள் கட்டுரையாளரின் மீது வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதனால் ரொம்பவும் கவனமாக பத்திரமாகக் கையாள வேண்டி வந்தது. சரி.

பரமேஸ்வராவைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. ஏன் அழைக்கவில்லை. அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

பரமேஸ்வரா மதம் மாறினாரா


பரமேஸ்வரா எனும் பெயர் அண்மைய காலங்களில் வரலாற்றில் இருந்து காணாமல் போய் வருகிறது. அந்த வரலாற்று நாயகர் பாட நூல்களில் இருந்தும் காணாமல் போய் வருகிறார். ஒரு மனிதர் காணாமல் போகலாம். தேடிக் கண்டிப்பிடித்து விடலாம். உருக்குலைந்து போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்த்து விடலாம். ஆனால் பெயரே காணாமல் போனால் எப்படிங்க…

அங்கே அத்திம் மேடு என்பது ஒரு பகல் கொள்ளை என்றால் இங்கே அதுவே ஒரு பௌர்ணமிக் கொள்ளை. பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு  இருண்ட இருட்டில் எருமை மாடு எப்படிங்க தெரியும். விடுங்கள். கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எத்தனை நாளைக்குத்தான் படம் காட்டிக் கொண்டு இருக்க முடியும்.


சில வரலாற்றுக் கத்துக் குட்டிகள் அப்படித் தான் படம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. திரை கிழிய படம் காட்டிவிட்டுப் போகட்டும். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் என்றைக்கும் உண்மை மறையக் கூடாது மறைக்கப்படவும் கூடாது.

உண்மையை மறைத்து எவ்வளவு காலத்திற்குத் தான் பேர் போட முடியும். சொல்லுங்கள். உலக மக்களிடம் எத்தனை காலத்திற்குத் தான் பில்டப் செய்ய முடியும். சொல்லுங்கள். உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெத்த அப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவனின் பெயரைப் போட்டால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? ஆக சத்தியம் ஜெயிக்க வேண்டும். அதுவே நம்முடைய ஆதங்கம். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

உள்நாட்டு வரலாறுகளில் சர்ச்சை

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இந்தச் சர்ச்சை ஒரு மெகா சீரியலாக இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு தீர்வு காண இந்த வரலாற்று ஆவணம் சரியாக அமையும் என்றும் நம்புகிறேன்.



பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட ஒரு தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

மலாக்கா வரலாற்றைப் பற்றி இதுவரையிலும் மூன்று பதிவுகள் மட்டுமே சான்றுகளாகக் கிடைத்து உள்ளன. 

முதலாவது பதிவு கோர்டின்கோ டி எரேடியா (Gordinho D'Eredia) எனும் போர்த்துகீசிய மாலுமியின் பதிவு. 1600 ஆம் ஆண்டு வாக்கில் பதியப் பட்டது. அதில் பரமேஸ்வரா எனும் பெயர் பெர்மிச்சுரி (Permisuri) என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அடுத்தப் பதிவு செஜாரா மெலாயு (Sejarah Melayu - Malay Annals). மலாக்கா பேரரசு உச்சத்தில் இருந்த போது மலாக்காவில் என்ன நடந்தது என்பதை அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளில் காண முடிகிறது. இருப்பினும் அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளை 1612 ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகம் மறுதொகுப்புச் செய்தது.

செஜாரா மெலாயு மறுதொகுப்பு

மலாக்கா எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது; மலாக்காவை ஆட்சி செய்தவர்களின் வரலாறு; மலாக்கா எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது போன்ற விவரங்கள் அந்தப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

ஆனால் பரமேஸ்வரா எனும் பெயர் செஜாரா மெலாயுவின் எந்த ஓர் இடத்திலும் இடம் பெறவில்லை. ஆகவே, செஜாரா மெலாயு மறுதொகுப்புச் செய்யப்பட்டதால் வலுவான சான்றுகள் தேக்க நிலையை அடைகின்றன. 

ஒருக்கால் ஒரு தரப்பிற்குச் சாதகமான திருத்தங்களாகவும் அமையலாம். அதனால் செஜாரா மெலாயுவின் பதிவுகளுக்கு முழு உத்தரவாதம் வழங்க முடியாது. சீன, போர்த்துகீசிய, டச்சுக்காரர்களின் ஆவணங்களை நடுநிலையான பதிவுகளாக ஏற்றுக் கொள்ளலாம்.

அடுத்தப் பதிவு சுமா ஓரியண்டல் (Suma Oriental) எனும் பதிவு. 1513 ஆம் ஆண்டு பதியப் பட்டது. இதை எழுதியவர் தோம் பைரஸ் (Tom Pires). இவர் ஒரு போர்த்துக்கீசியர். மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய பின்னர் எழுதப்பட்டது. பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய வரலாற்றை இந்தப் பதிவு எடுத்துரைக்கின்றது.


பரமேஸ்வரா என்பவர் ஸ்ரீ விஜயா பேரரசின் இளவரசர்; சிங்கப்பூரின் கடைசியான அரசர்; மலாயா தீபகற்பத்தின் மேற்கு கரை வழியாகப் பயணித்து மலாக்காவைத் தோற்றுவித்தார் என அந்தப் பதிவு சொல்கின்றது. மலாக்காவை செக்குயிம் டார்க்சா (Xaquem Darxa) என்றும் மொடவார்க்சா (Modafarxa) என்றும் தோம் பைரஸ் பதிவு செய்துள்ளார்.

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தவர். அவருக்குப் பரமேஸ்வரா மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் துமாசிக்கில் அரியணை ஏறினார். துமாசிக் என்பது சிங்கப்பூரின் பழைய பெயர்.

* 1401 - துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1401 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 – சுமத்திராவின் ஒரு பகுதியாக இருந்த பாசாய் சிற்றரசின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார்.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 – பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.


அது பரமேஸ்வரனின் வாழ்க்கைச் சுருக்கம். சரி. வரலாற்றிற்கு வருவோம். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாவாவை ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஆண்டு வந்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதே சமயத்தில் மலாய்த் தீவுக் கூட்டங்களில் (Malay Archipelago) இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

ஸ்ரீ விஜயா பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்டார அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடம் இருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் மங்கத் தொடங்கியது.

சிங்கசாரி அரசு மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல்

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது.  அடுத்து ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாய் மேலும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி அரசு வலிமை வாய்ந்த ஒரு பெரிய அரசாங்கமாகவும் உருமாற்றம் கண்டது.

சிங்கசாரி அரசு என்பது மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது.


ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனையைப் புதிதாகத் தோன்றிய சிங்கசாரி அரசு பல முறை தாக்கிச் சேதங்களை ஏறபடுத்தியது. அதனால் ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தையும் அரண்மனையையும் பலேம்பாங்கில் இருந்து ஜாம்பிக்கு மாற்றியது. ஜாம்பி எனும் இடத்தின் பழைய பெயர் மலாயு.

புதிய தலைநகரம் உருவாக்கப் பட்டாலும் பலேம்பாங் முக்கியமான அரச நகரமாகவே விளங்கி வந்தது. 14-ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது.

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர் பிந்தாங் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தாங் தீவு சிங்கப்பூருக்கு அருகில் இருக்கிறது. அத்துடன் ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த பல ஆயிரம் மக்களும் பிந்தாங் தீவில் தஞ்சம் அடைந்தனர்.


அடுத்தக் கட்டமாக ஸ்ரீ விஜயா அரசு, பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்கு நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக்.

தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்து இருந்தது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1324-இல் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார்.

சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன்

அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் கவலைப் படவில்லை. சிங்கப்பூர் எனும் ஓர் ஊரை உருவாக்கினார். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான்.

சிங்கப்பூர் ஓர் ஊர் தான். சின்ன ஒரு மீன்பிடி கிராமம். அப்போது அது ஒரு நகரம் அல்ல. மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.


1366-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். அது சயாம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலாகும்.

நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வ ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல, அவருக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரையும் சீனத் தூதர் வழங்கினார்.

சிங்கப்பூரின் புதிய நிர்வாகத்திற்குச் சீனாவின் பக்கபலம் இருப்பதைப் பார்த்த சயாம் கலக்கம் அடைந்தது. அதனால் நீல உத்தமன் மீது தாக்குதல் நடத்த சயாம் அச்சப் பட்டது.

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவியை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.

ஸ்ரீ ராணா வீரா கர்மா சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் பதவிக்கு வந்தார். இவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் தான் மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேஸ்வரா. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதல்கள்

இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது. மறுபடியும் ஒரு நினைவுறுத்தல். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக்.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தி இருக்கிறது. அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாகத் தான் சிங்கப்பூர் அரசின் மீது மஜாபாகித்தின் திடீர் தாக்குதல்களும் அமைந்தன.

எல்லாமே சண்டைகள் சச்சரவுகள். அவன் அடித்தால் இவன் திருப்பி அடிப்பது. இவன் அடித்தான் அவன் அடிப்பது. அப்புறம் கத்திக் குத்து, சமுராய் சண்டை. அந்த அழகுச் சண்டைகள் இன்னும் தொடர்கின்றன. இப்போது நடக்கும் குண்டர் கும்பல் சண்டைகளைத் தான் சொல்கிறேன்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். சொல்லி இருக்கிறேன். இவர் மஜாபாகித்தின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். உள்ளூர் வரலாற்று நூல்களில் சயாம் நாடுதான் சிங்கப்பூரைத் தாக்கியதாகச் சொல்லப் படுகிறது. உண்மை அதுவல்ல.

உண்மையில் மஜாபாகித் அரசின் பெயரை மறைத்து விட்டார்கள். தெரியாமல் செய்தார்களா... தெரிந்தே செய்தார்களா. தெரியவில்லை. அது ஆண்டவனுக்குத் தான் தெரியும். அது மட்டும் இல்லை.

அது மட்டும் இல்லை. முன்பு துமாசிக்கை ஆட்சி செய்த தெமாகியைப் பரமேஸ்வரா கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சிலர் சொல்வார்கள். சில வரலாற்று நூல்களும் அப்படித் தான் சொல்கின்றன. அது ரொம்பவும் தப்பு. தெமாகியைக் கொன்றது நீல உத்தமன். பரமேஸ்வரா அல்ல. இந்த உண்மையை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். பாவம் ஒரு பக்கம்.பழி ஒரு பக்கம். மேலும் பல உண்மைகள் அடுத்த கட்டுரையில் அவிழ்க்கப்படும். (தொடரும்)