11 ஜூன் 2016

எஸ்.எஸ். ரஜுலா

ரஜுலா கப்ப… ரஜுலா கப்ப… ரஜுலா கப்ப… மூன்று முறை சொல்லிப் பாருங்களேன். ஏதோ ஒரு ரகசியமான சங்கீர்த்தனம் கசிவதை உங்களால் உணர முடியும். சும்மா ஒன்றும் சொல்லவில்லை. இருக்குதுங்க. ஏன் தெரியுங்களா. 


ரஜுலா கப்ப என்கிற சொல் அந்தக் காலத்தில் மலாயாவுக்கு வந்த தமிழர்களின் நாடி நரம்புகளில் வீணை வாசித்த சொல் இல்லையா. அவர்களின் வாழ்க்கையில் ஒன்றித்துப் போன சொல் இல்லையா. ஆகவே, அந்த வகையில் அது ஒரு சாகாரவரம் பெற்ற சொல்லாகும். அதனால் கண்டிப்பாக அதற்கு உயிர்ப்புத் தன்மை இருக்கவே செய்யும்.

அந்தக் கப்பல் இல்லை என்றால் நானும் இல்லை நீங்களும் இல்லை. அதாவது இங்கே இப்போது இந்த மலேசிய மண்ணில் தடம் பதித்து இருக்க மாட்டோம் என்று சொல்ல வருகிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு கிராமத்துக் கரிசல் காட்டில் களை பிடுங்கிக் கொண்டு இருப்போம்.



என்னைக் கேட்டால்… தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்து பெட்டிப் படுக்கையோடு சென்னைக்கு வந்து இருப்பேன். பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் எல்லாம் எனக்கு கூட்டாளி ஆகி இருப்பாங்க... எனக்குள் சும்மா ஒரு ‘பீலிங்’. நடிகைகள் நளினி, நக்மா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் என்னுடன் டூயட் பாடி இருப்பார்கள். சொல்ல முடியாதுங்க.

இது எல்லாம் ஒரு கற்பனை. கோபித்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே, கட்டுரைகளில் பெரிய ரம்பத்தை போட்டு அறுக்கிறேனாம். ஒரு சிலர் குற்றப் பத்திரிக்கை வாசிக்கிறார்கள். ஆக இதோடு நிறுத்திக் கொள்கிறேன். 




எங்கே விட்டேன். ஆங்! ரஜுலா கப்பல். பார்த்தீங்களா… நடிகைகளைப் பற்றி சொல்ல வந்ததும் கட்டுரையே மறந்து போய் விட்டது. மன்னிக்கவும். இந்த ரஜுலா கப்பல் இருக்கிறதே… இது ஒரு காலத்தில் மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கடல்புறாவாக இறக்கை கட்டிப் பறந்து இருக்கிறது.

சரித்திரச் சாசனங்களில் ஊழியூழி காலத்திற்கும் மறக்க முடியாத காலச் சுவடுகளைப் பதித்து விட்டுப் போய் இருக்கிறது. செல்லமாக ரஜுலா கப்ப என்று அப்போது அழைத்தார்கள்.

ரஜூலா கப்பலுக்குப் பின்னால் இரண்டு பெரிய இரும்புத் திருகுகள் இருக்கும். அதாவது காற்றாடிகள். அவை சுற்றினால்தான் கப்பல் கடலில் முன்னுக்குப் போக முடியும். ரஜூலா கப்பல் டீசல் எண்ணெயினால் இயங்கியது. இந்த எண்ணெய் வாடைதான் தலை போகிற காரியம்.

கப்பலின் அடிப்பாகத்தில் ’டெக்’ என்று ஒரு பகுதி இருக்கும். அதற்கும் மேலே முதல் இரண்டாம் வகுப்புகள். வெள்ளையும் சொள்ளையுமாய் வெள்ளைக்காரர்கள்…  பணவசதி படைத்தவர்கள்… இந்த முதல் இரண்டாம் வகுப்புகளில் பயணம் செய்தனர். 




அந்த வகுப்புகளில் மட்டுமே எண்ணெய் வாடை இருக்காது ’டெக்’கிற்கு கீழே இருப்பது ’பங்க்’. இங்கேதான் எண்ணெயின் வாடை அலாதி. தாங்க முடியாது. மிக மிக மோசமாக இருக்கும். பயணம் செய்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

’பங்க்’ பகுதியில் இரும்பால் செய்யப்பட்ட அடுக்குக் கட்டில்கள் நூற்றுக் கணக்கில் இருக்கும். அவை அடுக்கு அடுக்காக இருக்கும். ’பங்க்’ பகுதி, ’டெக்’ பகுதிக்கும் கீழே இருக்கும். இந்த ‘பங்க்’ அல்லது ‘டெக்’ பகுதிகளில் பயணித்தவர்கள்தான் குடுமி குங்குமம் வைத்த நம்முடைய தாத்தா பாட்டிகள். அதாவது நம்முடைய மூதாதையர்கள். 




அப்போதைக்கு அதாவது 1940-களில் ஒரு பயண டிக்கெட் என்பது அறுபத்து நான்கு வெள்ளி. அதற்கு முன் 1930-களில் ரொம்பவுமே குறைவு. இருபத்து எட்டு வெள்ளிதான்.

மூதாதையர்களை நினைக்கும் போது நம் கண்கள் பனிக்கின்றன

டெக் பயணிகளுக்கு ஆறு அடிக்கு நான்கு அடி பரப்பளவு கொண்ட ஒரு குட்டி தரைப்பகுதி கொடுக்கப்படும். அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். அந்த இடம் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கலாம். கொஞ்சம் தாமதமாக வந்தவர்களுக்கு, ஏதாவது ஒரு கழிவறைக்குப் பக்கத்தில் இடம் கிடைத்தாலும் கிடைக்கும்.

உள்ளே கழிவறையில் கழுவி விடப்படும் அசிங்கமான நீர் எல்லாம் அந்தப் பக்கம்தான் வருமாம். அந்த நீரைத் துடைத்து விட்டுத்தான் அவர்கள் படுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு இரண்டுக்குப் போன வாடைகளையும் சமாளித்துக் கொள்ள வேண்டும். பாவப் பட்ட அந்த மூதாதையர்களை நினைக்கும் போது நம் கண்கள் பனிக்கின்றன. எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள். நினைத்துப் பாருங்கள்.

எஸ்.எஸ். ரஜூலா கப்பல் இரவில் வேகமாகப் போகும். பகலில் வேகம் கொஞ்சம் குறைவு. எங்கேயும் நிற்காமல் போவது என்றால் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 360 மைல்களைக் கடந்துவிடும். அதாவது 24 மணி நேரத்தில் 360 மைல்கள். 



1970 - சென்னை

சென்னையில் மாலையில் புறப்பட்டு மறுநாள் விடிவதற்குள் நாகப்பட்டினத்தைப் பிடித்து விடும். நாகப்பட்டினத்தில் கப்பல் கரைக்கு வந்து அணையும் வசதிகள் இல்லை. ஆகவே பாய்மரப் படகுகள் மூலமாகப் பயணிகள் கப்பலுக்கு கொண்டு வரப் படுவார்கள். அந்தப் படகுகளில் சரக்குகளையும் கொண்டு வருவார்கள். நூற்றுக் கணக்கான மூட்டைகளைத் தூக்குத் தூக்கிகளின் மூலமாக கப்பலில் ஏற்றுவார்கள்.

தூக்குத் தூக்கி என்றதும் 1954-இல் ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியானது. சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி, ராகினி நடித்து இருந்தார்கள். அந்தப் படத்திற்கும் நாடு விட்டு நாடு வந்த சஞ்சிக் கூலிகளுக்கும் தொடர்பு இல்லை. இருந்தாலும் நினைத்துப் பார்க்கலாமே…
அந்தமான் தீவுகளில் ரஜுலாவின் சாதனைகள்

ரஜுலா கப்பலுக்கு வரும் பயணிகள் உயரமான ஏணிகளின் வழியாக கப்பலுக்குள் ஏறி வர வேண்டும். சமயங்களில் கடலின் அலைகள் வேகமாக இருக்கும். அந்தச் சமயங்களில் ஏணிக்கு அடியில் இரண்டு மூன்று ஆட்கள் உதவிக்கு நின்று கொண்டு இருப்பார்கள். அதே போல பயணிகளை ஏற்றிவரும் படகிலும் இரண்டு மூன்று ஆட்கள் இருப்பார்கள். இவர்கள் பயணிகளைத் தூக்கிக் கப்பலுக்குள் ஏற்றி விடுவார்கள்.

மாலையில் நாகப் பட்டினத்தில் இருந்து பினாங்கிற்குக் கப்பல் புறப்படும். நேராக கிழக்குத் திசைப் பக்கமாகச் செல்லும். அப்புறம் அந்தமான் தீவுகளின் பகுதிக்கு வந்து சேரும். அதன்பின் தென் கிழக்காகத் திரும்பி பினாங்கு வந்து சேரும். எட்டு நாட்கள் பயணம். இந்த மாதிரி அந்தமான் பந்து போகும் சேவை கொஞ்ச நாட்கள்தான் நீடித்தன.




அதன் பின்னர் சில மாதங்களுக்கு எஸ்.எஸ். ரஜூலா கப்பலின் பயணப் பாதையை மாற்றி அமைத்தார்கள். நாகப் பட்டினத்தில் புறப்பட்டு தென்கிழக்காக நிக்கோபார் தீவை நோக்கிச் செல்லும் பாதை.

நிக்கோபார் தீவு அந்தமான தீவிற்கு தெற்கே இருக்கிறது. நிக்கோபார் தீவு வழியாகச் சென்றால் 200 மைல்கள் மிச்சப் படுத்தலாம். நிக்கோபார் தீவைச் சுற்றிலும் பவளப் பாறைகள். ஆபத்து இருக்கும். அதைச் சமாளித்தால் அந்தப் பாதையைப் பயன்படுத்தலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை இங்கேயும் தேடி இருக்கிறார்கள். நினைவு படுத்துகிறேன்.

அப்புறம் அங்கே இருந்து நேராகப் பினாங்கின் வடக்குப் பகுதியை நோக்கிப் பயணிக்கும். பினாங்கு துறைமுகத்தை வந்து அடைந்ததும் வழக்கம் போல பயணிகளும் சரக்குகளும் இறக்கப் படுவார்கள்.





சில ஆண்டுகளுக்கு ரஜுலாவின் பயணப் பாதை அந்த மாதிரியே இருந்தது. நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் எஸ்.எஸ். ரஜூலா ஐந்தே நாட்களில் பினாங்கைப் பிடித்து விடும். அங்கே பயணிகள் சரக்குகளை இறக்கிய பின்னர் 36 மணி நேரத்தில் சிங்கப்பூரைப் பிடித்துவிடும்.

அப்புறம் அங்கு இருந்து புறப்பட்டு பினாங்கு வந்து சேரும். பினாங்கில் இருந்து புறப்பட்டு ஐந்து நாட்களில் மறுபடியும் நாகப்பட்டினத்தைப் பிடிக்கும். அடுத்த நாள் சென்னைக்கு வரும். இப்படித்தான் அதன் பயணப் பட்டியல் அமைந்து இருந்தது.

தலைச் சுற்றல் மயக்கம் குமட்டல் சர்வ சாதாரணம்

இங்கே இன்னும் ஒரு தகவல். நாகப்பட்டினம் என்பது தான் சரியான பெயர்ச் சொல். நாகப்பட்டணம் என்று எழுதுவது தவறு. எந்த ஒரு பட்டணமும் கடற்கரை ஓரத்தில் இருந்தால் அதை பட்டினம் என்று அழைக்க வேண்டும். உட்புற நிலங்களில் இருந்தால் பட்டணம் என்று அழைக்க வேண்டும்.

எஸ்.எஸ். ரஜூலா கப்பலின் டெக் பகுதியில் ஏறக்குறைய 2000 பயணிகள் இருப்பார்கள். ஒரே கூட்டமாக இருக்கும். இட வசதி இல்லாமல், நெருக்கி அடித்துக் கொண்டு வசதிகளே இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்.




பங்க் பகுதியில் காற்றோட்டம் என்பதே இருக்காது. அதையும் தாண்டி எண்ணெயின் நெடி. உயிரை வாங்கிவிடும். வாந்தி குமட்டல் என்பது எல்லாம் சர்வ சாதாரணம். தலைச் சுற்றல் மயக்கம் என்று பலர் சுருண்டே கிடப்பார்கள்.

இதில் கழிவு நீர் பாய்க்கு அடியிலும் வந்து விடும். நாற்றம் வேறு. என்ன செய்வது. பிழைக்க வேண்டும் என்று கைநாட்டு போட்டாச்சே... எல்லா வேதனைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். சஞ்சிக்கூலிகளின் முதல்கட்ட பரிதாப வாழ்க்கை கப்பலிலேயே ஆரம்பிக்கிறது. அப்புறம்தான் கொத்தடிமை சமாசாரம்.

பெரும்பாலும்  பயணிகள் அரட்டை அடித்துக் கொண்டுதான் நேரத்தைக் கழிப்பார்கள். பாட்டுப் பாடத் தெரிந்தவர்கள் பாடிக் கொண்டு இருப்பார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. முதல் மரியாதை கிடைக்கும். தாளம் போடுபவர்களுக்குப் பஞ்சம் இருக்காது.

காலியான டின்களைத் தட்டி இல்லாத தாளங்களை எல்லாம் சேர்த்துக் கொள்வார்கள். நல்லவேளை இளையராஜா இல்லாமல் போனார். இருந்து இருந்தால் மலாயா கித்தா காடுகளில் நிறைய தியாகராஜ பாகவதர்களைப் பார்த்து இருக்கலாம்.

பினாங்கில் இருந்து கப்பல் புறப்பட்டு இரண்டு நாட்கள் வரை, டெக் பயணிகள் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். கப்பலின் டெக் பகுதியில், காற்றோட்டம் கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு நாட்களில், கப்பல் நடுக் கடலுக்கு வந்துவிடும்.

அதற்கு அப்புறம் மூன்று நான்கு நாட்களுக்குப் பயணிகளால் தலையைக்கூட தூக்க முடியாது. அந்த அளவுக்குத் தலைச் சுற்றல்… மயக்கம். இதை ஆங்கிலத்தில் ‘சி சீக்னஸ்’ என்று சொல்வார்கள். அப்புறம் அடுத்த ஒரே நாளில் கப்பல் நாகப்பட்டினத்தைப் பிடித்துவிடும். அடுத்த நாள் சென்னையைப் பிடித்துவிடும்.

ரோணா கப்பல் மத்திய தரைக் கடலில் மூழ்கியது

இரண்டாம் உலகப் போரில், ரோணாவும் ரஜூலாவும் இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களாக மாறின. ரோணா கப்பல் மத்திய தரைக் கடலில் சென்று கொண்டு இருக்கும் போது ஜெர்மன்காரர்கள் அதைத் தாக்கித் தகர்த்து விட்டார்கள் என்று சொல்லப் படுகிறது. ஏவுகணைகளைப் பயன் படுத்தினார்களாம். ரோணா கப்பல் மூழ்கும் போது அதில் ஆயிரம் பேர் இருந்து இருக்கின்றனர். எல்லாரும் இறந்து விட்டார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில், ரஜூலா பல முக்கியமான போர்த் துறைமுகங்களுக்கு துருப்புகளை ஏற்றிச் சென்று இருக்கிறது. பம்பாயில் இருந்து சூயஸ் கால்வாய்க்கு இந்தியப் படைகளைக் கொண்டு சென்று இருக்கிறது. பின்னர் இந்தியப் படைகளைச் சிங்கப்பூருக்குக் கொண்டு சென்று இருக்கிறது.

இரண்டாவது உலகப் போரில், நேதாஜியின் இந்திய விடுதலை இராணுவத்திற்கு எதிராக இதே இந்த ரஜுலா கப்பலைத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்கிற விசயம் பலருக்குத் தெரியாது. பல ஆயிரம் இந்திய வீர்ர்களை மலாயாப் போர் முனைகளுக்கு கொண்டு சென்று ரஜுலா கப்பல் சரித்திரம் படைத்து இருக்கிறது.

அதன் பின்னர், போர்னியோ நியூ கினி காடுகளுக்கும் துருப்புகளைக் கொண்டு சென்றது. நியூ கினி எனும் நாடு அந்தக் காலத்தில் மனிதக் காட்டுவாசிகள் வாழ்ந்த புண்ணிய பூமி. ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே இருக்கிறது. அதையும் ஜப்பானியர்கள் விடவில்லை. அங்கேயும் அவர்களின் சூரியக் கொடியை ஏற்றிப் பறக்க விட்டார்கள்.

பர்மாவை ஜப்பானியர்களிடம் இருந்து மீட்டு எடுக்கவும், அதே சமயத்தில் இந்தியாவைப் பாதுகாக்கவும் ரஜூலா ஒரு ஆம்புலன்ஸ் கப்பலாகவும் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சி பின்னர் இடம்பெறும்.

07 ஜூன் 2016

மலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள்

மலாயாவிலும் சரி இலங்கையிலும் சரி… ஆங்கிலேயர்களின் ராஜபோக வாழ்க்கைக்குக் கங்காணி முறை தான் தூபம் ஏற்றி வைத்தது. மலாயாவில் கங்காணி முறை என்று அழைத்தார்கள். அங்கே இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று அழைத்தார்கள். 
 

இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இரண்டுமே ஆள்கடத்தும் ஜீபூம்பா சதிராட்டங்கள் தான். எருமை மாட்டின் மீது கொக்கு உட்கார்ந்தால் எருமைக்கு லாபம். அதையே மாற்றிப் போட்டுப் பாருங்கள். கொக்கின் மீது எருமை மாடு உட்கார்ந்தாலும் எருமைக்குத் தானே லாபம். பாவம் கொக்கு!

ஒரு கட்டத்தில் ஒப்பந்தக் கூலி முறையால் இலங்கைக்குத் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலை. அதனால் மலாயாவில் பயன்படுத்தப்பட்ட கங்காணி முறையை இலங்கையிலும் கொண்டு வந்தார்கள்.

அலிபாபா குகைகளின் விசித்திரங்கள்

ஒன்று மட்டும் உண்மை. மலாயாவில் கங்காணி முறையை முதலில்  சோதித்துப் பார்த்தார்கள். பக்குவமாக இருக்கிறது என்று டிக்கெட் கொடுத்தார்கள். அதன் பின்னர்தான் இலங்கையிலும் அந்த முறையை அமலுக்கு கொண்டு வந்தார்கள். 


இலங்கையில் அந்தக் கங்காணி முறை அமல்படுத்தப் பட்டாலும் அதனை ஒப்பந்தக் கூலி முறை என்றே தொடர்ந்து அழைத்தார்கள். பின்னர் காலத்தில் அது ஒரு வழக்குச் சொல்லாகவும் மாறிப் போனது. ஆனால் உண்மையாகப் பார்த்தால் அது மலாயாவின் கங்காணி முறை தான்.

ஒரு முக்கியச் செய்தி. மறுபடியும் வாசிப்பது சஞ்சிக்கூலிகள். ஒப்பந்தக் கூலி முறை என்பது வேறு. கங்காணி முறை என்பது வேறு. இதைப் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டு உள்ளது.

ஒப்பந்தக் கூலி முறை என்றால் ஒரு தொழிலாளியும் ஒரு முதலாளியும் நேரடியாகச் செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தம். கங்காணி முறை அப்படி இல்லை. கங்காணி முறையில் கங்காணியே நேரடியாகக் களம் இறங்கிப் போவார். அப்படியே ஆசை ஆசையாய் ஆயிரம் வார்த்தைகள். அப்படியே ஆட்களை அள்ளிக் கொண்டு வருவார். அது ஒரு வழக்கம்.


இருப்பினும் சஞ்சிக்கூலிகள் விசயத்தில் மூலகர்த்தாவாக இருந்தவர்கள் இலங்கையின் மலையகத் தமிழர்கள்தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழர்களை முதன்முதலாக இலங்கைக்குத் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். அதனால் அலிபாபா குகைகளில் இருந்து தங்கப் பேழைகள் கிடைக்கும் என்று ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை. 100 விழுக்காட்டுப் புளங்காகிதங்கள்.

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா. சுரண்டும் கலைக்கு ஒரு பெரிய கலைகளஞ்சியத்தையே எழுதியவர்கள் சும்மா இருப்பார்களா. ஆக, சஞ்சிக்கூலிகளின் முன்னோடிகள் யார் என்றால் அவர்கள் தான் இலங்கையின் மலையகத் தமிழர்கள். மலாயாத் தமிழர்கள் அல்ல.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழ்ந்த ஏழைக் குடியானவர்கள், இலங்கைக்குப் போய் வேலை செய்ய விரும்பினால் ஓர் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால் போதும். அதாவது ஒரே ஒரு கைநாட்டு. 


ஒப்பந்தக் காலம் முடியும் வரையில் அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தோட்டங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும். மீறினால் முதலாளி விதிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். அதற்கும் சரி என்று தலையை ஆட்ட வேண்டும்.

நிஜப் புலிகள் எல்லாம் பூனை மாதிரி

இருந்தாலும் பாருங்கள். வேலைக்குப் போன இடத்தில் நடந்த அநியாயம் அக்கிரமங்களைப் பார்த்துச் சகிக்க முடியாமல் சிலர் திருட்டுத் தனமாகத் தாயகத்திற்குத் திரும்பி ஓடி வந்ததும் உண்டு. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களிடம் அது ஒரு வழக்கமாகியும் போனது.

இரவோடு இரவாகத் தப்பித்துக் காட்டுப் பாதைகளில் நடந்தே போய் இருக்கிறார்கள். போகும் வழியில் யானைகளைப் பார்த்து இருப்பார்கள். புலிகளையும் பார்த்து இருப்பார்கள். ஆனால் நிச்சயமாக பயந்து இருக்க மாட்டார்கள். ஏன் தெரியுமா. 


இவற்றைவிட பெரிய பெரிய கொடிய மிருகங்களை எல்லாம் பார்த்தவர்கள் தானே. பசுத் தோல் போர்த்திய புலிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன அவர்களுக்கு நிஜப் புலிகள் எல்லாம் என்ன… பூனை மாதிரி தெரிந்து இருக்கும். 

காட்டு மிருகங்களைப் பொருத்த வரையில் அவை எல்லாம் அவர்களுக்கு திருநெல்வேலியின் இருட்டைக் கடை அல்வாக்கள்! புலியும் அடித்து இருக்காது. கிலியும் அடித்து இருக்காது. அனுபவம் பேசி இருக்கும்.

ஆனால் மலாயாத் தமிழர்களால் அப்படி எல்லாம் ஒன்றும் தப்பித்து ஓட முடியவில்லை. மீண்டும் கப்பலேறி ஊருக்குத் திரும்பிப் போவது என்பது எல்லாம் என்ன லேசுபட்ட காரியமா. நடக்கிற காரியமா. 


அதனால், கஷ்டமோ நஷ்டமோ… வாங்கி வந்த வரம் என்று எஞ்சிய நாட்களை எண்ணிப் பொருமி இருக்க வேண்டும். 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் வயற்காட்டு மண்ணையும் மணல்வீட்டுத் திண்ணை மேட்டையும் நினைத்து நினைத்துப் புலம்பி இருக்க வேண்டும். ஆக வேதனைப்பட்டது தான் மிச்சம்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடி வந்த மலையகத் தொழிலாளர்களின் கதை வேறு. தோட்ட முதலாளி போலீஸில் புகார் செய்வார். கிராமத்தில் இருக்கும் காவல் துறையினர், தப்பி வந்த தொழிலாளர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்வார்கள். மீண்டும் அதே அந்தப் பழைய ராகம். பழைய பாசறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப் படுவார்கள்.

எள் என்றதும் எண்ணெயாய் வடிந்த கங்காணிகள்

தப்பித்து வந்தாலும் வெள்ளைக்காரர்களின் குரங்குப் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. அந்த மாதிரி தப்பிப் போய் பிடிபட்டவர்களுக்கு கசையடிகள் காத்து நிற்கும். காட்டு மரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்குக் கட்டிப் போட்டு எறும்புகளைப் பிடித்து வந்து கடிக்க வைப்பார்கள். சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவார்கள். கால்களில் சூடு போடுவதும் நடக்கும். 


அதுதான் ஏற்கனவே கையொப்பம் போட்டுக் கொடுத்து விட்டார்களே. அப்புறம் எப்படி முதலாளிகளின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும். சொல்லுங்கள். தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கைநாட்டு போட்டுக் கொடுத்தாகி விட்டதே. வெள்ளைக்காரன் சும்மா இருப்பானா.

ரொட்டியில் பட்டர் தடவ கத்தியைத் தேடுகிறவன் பிடிபட்டவர்களை வறுத்து எடுக்காமல் சும்மா விடுவானா. அந்த வேலைகளை வெள்ளைக்காரர்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

செய்து கொடுக்கத் தான் கறுப்புக் கங்காணிகள் தயாராக இருந்தார்களே. அது பற்றாதா? எள் என்றதும் எண்ணெயாய் வடிய ஆள் இருந்த வரையில் வெள்ளைக்காரர்களின் வேலைகள் நன்றாகவே நடந்து முடிந்தன.


ஆங்கிலேய ராஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று வீரவசனம் பேசியவர்கள் ஆயிற்றே. நாயைச் சுடுவது என்றாலும் நக்கி விட்டுத் தான் சுடுவோம் என்று பாளையங் கோட்டையில் மேஜர் பேனர்மேன் சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.

பரங்கியர் இழைத்தக் கொடுமைகள்

தமிழ்ப் பாட்டாளிகளுக்கு பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கண்ணீர் விட்டு அழுத பாரதியார் தன்னுடைய பாடல்களில் இப்படி எழுதி இருக்கிறார்.

"கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!"

"நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!"


சரி. இங்கே மலாயா நாட்டில் நம் தமிழர்களின் கண்ணீர்க் கதை ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு ஒரு தொடர்கதையாய் நீண்டு போகின்றது. அந்த நீண்ட அத்தியாயத்தில் நம் இனத்தவர் சிந்திய இரத்தம், துடைத்த வியர்வை, இரைத்த தியாகம், தூவிய அர்ப்பணிப்புகள் சொல்லில் மாளா. 


இன்றைய இந்த மலேசியா என்கிற நவீன தேசம் கம்பீரமாய் எழுந்து நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் பிடித்து அழகு பார்க்கின்றது. இவை வரலாறு சொல்லும் உண்மைகள். ஆக அந்த உண்மைகளும் உரிமைகளும் என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு விஷயம். நாம் என்ன எழுதினாலும் அவற்றின் படிவங்கள் தேசிய பழஞ்சுவடிக் காப்பகத்தில் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப் படுகின்றன. தவிர இணையத்திலும் உடனுக்குடன் பதிந்து விடுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் சில பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய வாரிசுகள் அந்தப் படிவங்களை நிச்சயம் படிப்பார்கள்.

மலாயா மண்ணைச் செம்மைப்படுத்திய தமிழினம்

மலேசியாவில் சிலபல தமிழ் நாளிதழ்கள் இருந்தன. அவற்றில் நம் இனம் அனுபவித்த வேதனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. மலையும் மடுவும் பாறைகளும் நிறைந்த மலாயா மண்ணைத் தமிழினம் செம்மைப் படுத்தியது. சாலைகளை அமைத்துக் கொடுத்தது. கம்பிச் சடக்குகளில் ரயில் வண்டிகளை ஓட வைத்தது என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள்.

இந்த மாதிரியான படிவங்கள் தான் எதிர்காலத்தில் சான்றுகளாக மாறும். ஆகவே, நம் மூதாதையர்களைப் பற்றி இப்போதே நாம் எழுதி வைக்க வேண்டும். எழுதியவற்றை ஆவணப் படுத்த வேண்டும்.

05 ஜூன் 2016

மலாயாவில் கங்காணி முறை

திருநெல்வேலியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கிராமம். அதன் பெயர் கீழத்திரு வேங்கடநாதபுரம். அந்த ஊரில் ஒரு கோயில். அதன் பெயர் செங்காணி. சிவப்பு நிலம் என்று பொருள். 

அங்கே இருந்துதான் முதன் முதலாகக் கங்காணி முறை தொடங்கியதாகச் சொல்லப் படுகிறது. அந்த இடத்தில் இருந்து தான் முதன் முதலாக ஆட்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டதாகவும் ஒரு பேச்சு.

Balu Estate Kuala Lumpur 1912
இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. வரலாற்று நூல்களை அலசிப் பார்த்தாகி விட்டது. உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் மலாயா சரித்திரத்தில் கங்காணிகள் நல்ல ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். அது கசக்கிப் பிழியப்பட்ட சஞ்சிக்கூலிகளின் அவல வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அதற்கு முன்னால் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களைப் பற்றிய தொடர்ச்சி. 



Batang Kali Estate Ulu Yam 1912
இலங்கையில் மிக அழகான, மிக அரிதான இயற்கை வன வளங்கள் இலங்கை மலையகத்தில் தான் உள்ளன. ஒரு நிமிடம் பிளீஸ்! இலங்கையின் மத்திய மலைப்பகுதியை மலையகம் என்று இலங்கையிலும் அழைகிறார்கள். நாமும் இங்கே தீபகற்ப மலேசியாவை மலையகம் என்றுதான் அழைக்கிறோம். 

ஆக, முரண்பாடுகள் வரலாம் இல்லையா. அதைத் தவிர்க்க இலங்கை மலையகம் எனும் சொல்லையே இங்கே பயன்படுத்துவோம். சரியாக இருக்கும்.  

உலகப் புகழ் பெற்ற சிலோன் டீ

இலங்கை மலையகத்தில் அழகான நீர்வீழ்ச்சிகள், அழகான ஆறுகள், அழகான ஏரிகள் இருக்கின்றன. ஏறி இறங்கும் மலைத்தொடர்கள், குனிந்து நிமிரும் குன்றுகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இலங்கையின் மற்ற மற்ற இடங்களைக் காட்டிலும் மாறுபட்ட காலநிலை. வேறுபட்ட வானிலை. இந்த மலையகப் பகுதி ஒரு குளிர்ப் பிரதேசமாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சொர்க்கபுரியாவும் விளங்குகின்றது. 


Batu Caves Estate 1912
சிலோன் டீ என்றால் உலகப் புகழ் பெற்றது. அது உங்களுக்கும் தெரியும். ஆக, அது பயிர் செய்யப்படும் இடத்தைப் பார்க்க எல்லோருக்குமே ஆசை வருமா வராதா. அதனால் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இலங்கை மலையகத்தை தேடிச் செல்வதில் நிச்சயமாக அர்த்தம் இருக்குமா இருக்காதா. கண்டிப்பாக இருக்கும்.

இலங்கைத் தீவின் நடு மையப் பகுதியில் இலங்கை மலையகம் அமைந்து இருக்கிறது. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம். இந்தத் தேயிலைத் தோட்டங்கள் தான் இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

இதை எவராலும் மறுதலிக்க முடியாது. தேயிலை மூலமாகக் கிடைக்கும் அந்நிய செலாவணியே இலங்கையின் பிரதான மூலவளமாகவும் அமைகின்றது. ஏறக்குறைய 25 விழுக்காட்டு மூலதனம் அங்கே இருந்து தான் வருகிறது. அதை வைத்துக் கொண்டு தான் இலங்கை அரசாங்கமும் இல்லாத ஆட்டங்களை ஆடி வருகிறது. 



Changkat Salak Estate 1912
அந்தக் காசை வைத்துக் கொண்டு தானே தங்களின் இராணுவத்திற்கு ஆயுதத் தளவாடங்களை வாங்குகிறார்கள். தமிழர்கள் சம்பாதித்துக் கொடுக்கும் காசை வைத்துக் கொண்டு தானே தமிழர்களையே அழித்து ஒழிக்கிறார்கள். என்னே புத்தி. விட்டால் பெண்டு பிள்ளைங்களையும் அடைமானம் வைத்து விடுவார்கள் போல இருக்கிறது. விடுங்கள்.

இலங்கை மலையகத்தில் இப்போது 842,323 தமிழர்கள் இருக்கிறார்கள். இது 2012 புள்ளிவிவரங்கள். இந்தியாவுக்குத் திரும்பிப் போனவர்கள் ஒரு எட்டு இலட்சம் பேர் இருப்பார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் பத்துப் பதினைந்து இலட்சம் வரும். ஆக, இப்படி இலங்கையின் பொருளாதார மூலசக்தியாக விளங்கும் மலையகத் தமிழர்களை இலங்கை அரசாங்கம் பெரும்பாலும் புறக்கணித்தே வந்தது. இன்னும் புறக்கணித்து வருகிறது. அப்போது வெள்ளைக்காரர்கள் பிழிந்து எடுத்தார்கள். இப்போது சிங்களவர்கள் உறிஞ்சி எடுக்கிறார்கள். பெரிய வித்தியாசம் எதையும் பார்க்க முடியவில்லை.

லயம் என்கிற தகர டப்பாக்கள்

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன், இலங்கை மலையகத் தமிழர்கள் எப்படி இருந்தார்களோ, அப்படியேதான் இன்னமும் இருக்கிறார்கள். பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இங்கே நம்ப இடத்தில் கொஞ்சம் பரவாயில்லை. 



Damansara Estate Batu Tiga 1912
ஆக, இந்த இரண்டு சஞ்சிக்கூலிகளின் புலம்பெயர்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சிலச்சில உரிமைப் பிரச்சினைகளைத் தவிர… இங்கே எவ்வளவோ தேவலாம். அங்கே உணவு, உடை உறைவிடம் என்கிற அடிப்படை வசதிகளுக்கே அலைமோதுகிறார்கள். அந்த அடிப்படை வசதிகளையே நிவர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

“லயம்” என்கிற தகர டப்பாக்கள்தான் அவர்களின் குடியிருப்புகள். அதுவே அவர்களின் வாழ்விடங்களாகவும் அமைகின்றன. மிகவும் குறுகிய அறைகளில் மொத்தக் குடும்பமும் சுருண்டுக் கிடக்கும். அப்படி ஒரு பரிதாப நிலை. எவராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாதது. அந்த ராமாயணம் இன்னமும் அங்கே தொடர்ந்து காவியம் பேசுகிறது.

அதே சமயத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழினத் தலைவர்களின் வாய்ச் சவடாலும் தொடர்கிறது. நான் எங்கே வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். கத்திக் கதறும் இலங்கை மலையகத் தமிழர்களைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். கரிசனை இல்லாத வெட்கக் கேடுகள்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

சரி நம்ப கங்காணிகளைப் பற்றிய விசயத்திற்கு வருவோம்.

19-ஆம் நூற்றாண்டில் 'சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் மலாயா, சுமாத்ரா, சிங்கப்பூர், ஜாவா போன்ற நாடுகளுக்குக் கொண்டு வரப் பட்டனர். செட்டி நாட்டில் இருந்து லேவாதேவித் தொழில் செய்வதற்காக நாட்டுக் கோட்டை நகரத்தார்களும் வந்தனர். 


Kalumpang Estate Bagan Serai 1912


தமிழகக் கரையோரப் பட்டினங்களில் இருந்து தமிழ் முஸ்லிம்கள் வந்தனர். இவர்கள் பினாங்கு, கிள்ளான், சிங்கப்பூர் நகரங்களில் சிறிய அளவில் வர்த்தகங்களைச் செய்தனர்.

தவிர யாழ்ப்பாணம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தனர். ஆனால், குறைவான எண்ணிக்கை. சீக்கியர்களை மறந்துவிடக் கூடாது. இவர்கள் மலாயாவிற்கு வந்து போலீஸ், இராணுவம், காவல், சிறுவியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டனர். தமிழர்களைப் பொருத்த வரையில் அவர்களில் பெரும்பாலோர் ரப்பர், காபித் தோட்டங்களில் கூலிவேலைகள் செய்தனர்.

ஆங்கிலேயர்களின் கைப் பாவைகள்

இந்தக் கங்காணிகள், தென்னிந்தியாவில் கொண்டு வரப்பட்ட கூலிகளை அடிமைப்படுத்தினர். முதலாளிமார்களின் கைப்பிள்ளையாகவும் சேவகம் செய்தனர். தன் சொந்த இன மக்களையே காசுக்காக அடித்து துவைத்துக் காயப் படுத்தினர். ஆங்கிலேயர்களின் கைப் பாவைகளாகப் பிழைத்து வந்த இவர்களைக் கறுப்புக் கங்காணிகள் என்று அழைப்பதும் உண்டு.

 
Kampsey Estate Selangor 2 1912
இவர்கள் இந்தியாவுக்குப் போய் ஆட்களைப் பிடித்து வருவதை, கங்காணி முறை என்று அழைத்தார்கள். அதை இப்படியும் சொல்லலாம். ஆசை வார்த்தைகளை மூலதனமாகப் போட்டு, சாணக்கியச் சாதுர்யமாக வெள்ளந்திகளைக் கவர்ந்து இழுத்து வரும் முறைதான் கங்காணி முறை.

ஆங்கிலேய முதலாளிகள் தங்கள் வேலைகளை எளிமையாக்குவதற்காக, இந்தக் கங்காணி முறையை அமல் படுத்தினார்கள். பணம் கொடுத்து கங்காணிகளைத் தென்னிந்தியாவிற்கு அனுப்பி ஆட்களைக் கொண்டு வருமாறு பணித்தனர். கங்காணிகள் கொண்டு வரும் ஆட்களின் எண்ணிக்கையைப் பொருத்து கங்காணிகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது.

மழையை நம்பி விவசாயத்தில் ஈடுபட்ட கிராமங்களில் வறுமை நிலவிய காலக்கட்டம். அதுவே கங்காணிகளுக்குச் சாதகாக அமைந்தது. பலப்பல நம்பிக்கைகள். பலப்பல உறுதிகள். அடுக்கடுக்காய் அள்ளித் தெளித்து ஆட்களைப் பிடித்து இழுத்து வந்தனர். அந்த வேலைகளை கங்காணிகள் மிகச் சிறப்பாகவே செய்து வந்தனர்.


Damansara Estate Batu Tiga Selangor 1912

மலாயாவில் எளிதாக சம்பாதிக்கலாம். குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகிவிடலாம் என்கிற கங்காணிகள் ஆசை வார்த்தைகள். அவற்றை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக் கணக்கில் கொண்டு வரப்பட்டனர். இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று பாகுபாடுகள் இல்லை.

தமிழர்கள் வரலாற்றில் ரஜுலா கப்பல்

எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த தென் இந்திய மக்களும், சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அப்படி வரும் போது சாதி என்கிற சடங்குச் சம்பிரதாயமும் இறக்குமதி ஆனது.

அப்போது தலை விரித்து ஆடியது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வருகிறது. இப்படியும் சொல்லலாஅம். கழுத்து அறுக்கப்பட்டு கசாப்புக் கடைகளில் விற்பனை ஆகிறதாம். ஒரு கிலோ ஒன்றரை வெள்ளியாம். கேள்விப் பட்டேன்.

கங்காணிகளை முழுக்க முழுக்க நம்பிய கிராம மக்கள் கடல் கடந்து பயணம் செய்தார்கள். கப்பலில் பலர் நோய்வாய்ப்பட்டு கப்பலிலேயே இறந்து போனார்கள். அப்படி இறந்தவர்களின் உடல்களைக் கடலிலேயே வீசி விடுவார்கள். வேறு வழி.

ரஜுலா கப்பலைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தக் கப்பல் மறைந்து போனாலும், அது விட்டுச் சென்ற சில மந்திரப் புன்னகைகள் மட்டும் இன்னும் நம் வரலாற்றில் இருந்து மறையவில்லை. தமிழர்கள் வரலாற்றில் அது ஒரு ஜீவநாடி. சமயங்களில் ரஜுலா கப்பலைச் சிங்காரச் சிறுக்கியே வித்தாரக் கள்ளியே என்று அழகாகவும் வர்ணனை செய்வார்கள். கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.

கங்காணிகளைக் குறை காண்பது நமது நோக்கம் அல்ல. அவர்களின் அணுகுமுறைகளினால் ஏற்பட்ட சமூகத் தாக்கங்களைப் பார்க்கிறோம். மனிதாபிமான உணர்வுகளைத் தாண்டிய வஞ்சனைகளில் குறை காண்கிறோம். அவர்களின் அதிகாரக் கோப்புகளில் நியாயங்களைத் தேடுகிறோம்.