24 பிப்ரவரி 2017

சார்டின்

மத்தியத் தரைக்கடல் பகுதியில் Sardinia  எனும் தீவில் கி.மு. 300களில் ஒரு வகை மீனைப் பிடித்து உப்புக் கண்டம் போட்டு சாப்பிட்டார்கள். அந்த மீனுக்குத் தான் Sardine என்று பெயர் வைத்தார்கள்.


அந்த மீன்கள் 1911இல் இங்கிலாந்தில் டின்களில் (குவளைகளில்) அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. பின்னர் காலத்தில் சார்டீன் எனும் அந்தச் சொல் கப்பலேறி மலாயாவுக்குள் வந்து விட்டது. குவளைக் கருவாடு என்று தமிழ்ப்படுத்தப் படுகிறது. அந்தப் பெயர்ச் சொல்லில் சற்றே மயக்கம் ஏற்படுகிறது.

கருவாடு - உலர்மீன் (dried fish); உப்புக்கண்டம் போட்டுக் காய வைக்கப்பட்ட மீன். 

Sardine - சாளை; சூடை; மத்தி
Sardine fish - சீடை மீன்; மத்தி மீன்

(சொற்பிறப்பியல்)
Sardina - லத்தீன் சொல்.  

 (சான்று: http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=sardine+fish)

காப்பியனை ஈன்றவளே


கவிஞர் சீனி நைனா முகம்மது

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
       
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!

உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களைக் கொண்டு ஒரு பாடலை மலேசிய எழுத்தாளர் சங்கம் இயற்றியது. அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் ஆர்.பி.எஸ்.ராஜூ, பாடியவர்கள்: துருவன், பாபு லோகநாதன்.  

23 பிப்ரவரி 2017

இடைக்காலம்

இடைக்காலம் என்பது ஒரு பெயர்ச் சொல். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், முற்காலம், பிற்காலம், தற்காலம், இடைக்காலம், குளிர் காலம், கோடைக் காலம், மழைக் காலம், வேனில் காலம், பனிக் காலம், சாயுங்காலம், பேறுகாலம் இப்படி நிறைய காலங்கள் உள்ளன.

சாயங்காலம் அல்ல சாயுங்காலம். அதாவது சூரியன் சாயும் காலம். பலர் சாயங்காலம் என்று சொல்கிறார்கள். அது தவறு. சாயுங்காலம் என்பதே சரி.

சட்டம் நடைமுறைக்கு வருவதில் இடைப்பட்ட காலம் என்று ஒரு காலம் வரும். அதுவும் ஓர் இடைக்காலம் தான். இடைமாறுபாட்டுக் காலத்தையும் இடைக் காலம் என்றும் சொல்லலாம். பணியேற்பு இடைக்காலம், வரலாற்று இடைக்காலம்... இவற்றையும் இடைக்காலப் பட்டியலில் சேர்க்கலாம்.

தற்காலிகம் என்பதும் ஒரு பெயர்ச் சொல். அதன் பொருள் நிலையற்றது அல்லது நிரந்தரம் இல்லாதது. ஆக தற்காலிகம் என்பது நிரந்தரம் இல்லாததைக் குறிப்பிடுகின்றது.