03 ஜூன் 2017

சிவராசா எல்லை மீறிவிட்டார்

சிலாங்கூர் சுல்தான் பகிரங்க அறிவிப்பு

(நன்றி: செல்லியல்)
சான்று: http://www.selliyal.com/archives/150388

ஷா ஆலாம் – இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, தனது உத்தரவை மீறி பள்ளி வாசல் ஒன்றில் அரசியல் உரை நிகழ்த்தியதற்காகச் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மீது நேரடியாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்து இருக்கிறார்.

சிவராசா ‘தனது செயலால் எல்லை மீறிவிட்டார்’ எனப் பகிரங்கமாகக் கூறி இருக்கிறார்.

முஸ்லீம்களாக இருந்தாலும் சரி முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி யாரும் பள்ளி வாசலை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என நான் உத்தரவிட்டு இருக்கிறேன். சிவராசா எனது உத்தரவை மீறிவிட்டார். எல்லை மீறிவிட்டார் என சிவராசாவின் பெயர் குறிப்பிட்டு சிலாங்கூர் சுல்தான் உரையாற்றினார்.

இதற்கிடையில் சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பப் போவதாகக் கூறி இருக்கும் சிவராசா, தான் இன்னும் அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

“பள்ளிவாசல்கள் தொழுகைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மதத்தைப் பற்றி மேலும் கூடுதலாகத் தெரிந்து கொள்ளும் மையங்களாகத் திகழ வேண்டும், முஸ்லீம்களை ஒன்றுபடுத்த வேண்டுமே தவிர மாறாக பிளவுபடுத்தக் கூடாது.

பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்கள் பள்ளிவாசல்களில் அரசியலை அனுமதிக்கக் கூடாது என்ற தனது உத்தரவை மதிக்க வேண்டும்” என்றும் சிலாங்கூர் சுல்தான் தனதுரையில் வலியுறுத்தினார்.

01 ஜூன் 2017

தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம்

தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம். தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் மொழியைத் தாயாக மதிக்க வேண்டும். தரணி போற்றும் மொழியாகத் தமிழை உயர்த்த வேண்டும்.


ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் பயின்று இப்போது அமெரிக்கா புளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியில் மூலக்கூற்றுத் தொற்று நோய்ப் பிரிவில் பேராசிரியராகப் பணி புரியும் டாக்டர் கலைமதியின் அறைகூவல்.

தமிழ்க்குயிலார் கா.கலியபெருமாள் அறக்கட்டளையின் சார்பில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் *தமிழ்ப்பள்ளி மாணவர்களும் முன்னேற்றப் பாதையும்* எனும் தலைப்பில் நடைபெற்ற  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அந்த அறைகூவலை விடுக்கப்பட்டது.

தமிழ்ப் பள்ளியில் பயின்றவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல முக்கியப் பதவிகளில் சேவை செய்கின்றனர் என்பதற்கு டாக்டர் கலைமதி ஓர் எடுத்துக்காட்டு.

25 மே 2017

பெண் புத்தி பின் புத்தி

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். 


கல்வி ஆகட்டும், காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும். எந்தப் பிரச்சனை வந்தாலும் அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு பின்விளைவுகளைத் தரும் என்பதை நன்கு யோசித்து விட்டு அதற்குத் தகுந்த முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும்.

பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் பெண் புத்தி பின் புத்தி என்றார்கள்.

இதை நாம் எந்த இலட்சணத்தில் புரிந்து கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. உங்களுக்கே தெரியும். பெண் இல்லாமல் எந்த ஓர் ஆணும் பேர் முடியாது.

உண்மையிலேயே பெண் புத்தி முன் புத்தி என்று தான் சொல்ல வேண்டும். அதற்காகப் பெண்களுக்குத் தலைக்கனம் பிடிக்காமல் இருந்தால் சரி.