10 ஜூன் 2017

மலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள்


கோத்தா கெலாங்கி பாறைகளில் சோழர் காலத்து கல்வெட்டுகள்
ஜொகூர் மாநிலத்தின் கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் புதிய வரலாற்றுத் தடயங்கள் கிடைத்து உள்ளன. இந்தத் தடயங்கள் ஜொகூர் மாநிலச் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம் என்று பெரிதும் நம்பப் படுகிறது.


அண்மையில் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ (Linggiu) காட்டுப் பகுதியில் தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள் கிடைத்து உள்ளன.

கி.பி. 650ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ விஜய பேரரசு கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ பகுதியில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டி உள்ளது.

அங்கே சிதைந்து போன பல பாறைப் படிக்கட்டுகளும் பாறைக் கோபுரங்களும் பாறைப் படிவங்களும் ஆழமான வரலாற்றுச் சான்றுகளை வெளிப் படுத்துகின்றன.


தாமரை வடிவத்திலான பெரும் கற்பாறைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அனைத்தும் பெரும் பாறைகளில் இருந்து செதுக்கப் பட்ட தாமரை வடிவக் கற்பாறைகள். கலைநுட்பம் கொண்ட வரலாற்றுப் படிவங்கள்.

சுங்கை லிங்க்யூ காட்டுப் பகுதியின் உட்புறங்களில் மட்டுமே இந்தத் தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. காட்டுப் பகுதியின் உட்புறங்களுக்குச் செல்வது மிகவும் சிரமமான காரியம்.

போலீஸார் அனுமதியும் மாநில வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அனுமதியும் தேவை. அரச மலேசிய இராணுவப் படையினர் அந்தப் பகுதியைப் பாதுகாத்து வருகின்றனர்.


தாமரைப் பூக்கள் பாறைத் தடயங்கள் பற்றிய செய்தியை ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் உறுதி படுத்துகிறார்.

தவிர இந்த வரலாற்றுச் சான்றுகள் வழியாக ஜொகூர் மாநிலத்திற்ன் சுற்றுலாத் துறைக்குப் புதிய பரிமாணம் ஏற்படும். அதனால் நிறைய சுற்றுப் பயணிகள் வருவார்கள். அதன் மூலம் ஜொகூர் மாநிலத்திற்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் நம்புகிறார்.

ஆற்று நீர் அரிப்புகளில் காட்சியாகும் கல்வெட்டுகள்

அனைத்துலக ரீதியில் வரலாற்றுச் சுற்றுலா என்பது ஒரு வணிகத் துறையாக மாறி வருகிறது. இந்தக் கட்டத்தில் கோத்தா கெலாங்கியில் கிடைக்கப் பெற்றுள்ள இந்த வரலாற்றுத் தடயங்கள் அந்த மாநிலத்தின் வருமானத் துறைக்குப் புத்துணர்வு கொடுப்பதாகவும் அமைகின்றது.


ஸ்ரீ விஜய பேரரசின் அரசார்ந்த மலர் தாமரை மலராகும். அதாவது ஸ்ரீ விஜய பேரரசினரின் தேசிய மலர் தாமரை மலராகும். ஸ்ரீ விஜய பேரரசினர் எங்கே எல்லாம் அரசாட்சி செய்து இருக்கிறார்களோ அங்கே எல்லாம் இந்தத் தாமரைப் படிவங்களைக் காண முடியும்.
(சான்று: Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. p. 171)


2017 மே மாதம் 20ஆம் தேதி ஓர் ஆய்வுக் குழுவினர் கோத்தா கெலாங்கி சுங்கை அம்பாட் (Sg Ambat) காட்டுப் பகுதியில் வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வு முயற்சியில்

  • ஜொகூர் மாநில பாரம்பரிய அறக்கட்டளையின் துணை இயக்குநர் டாக்டர் கமாருடின் அப்துல் ரசாக் 
  • (Drs Kamaruddin  Abd Razak - Timbalan Pengarah Yayasan Warisan), 
  • வரலாற்றுத் துறை இயக்குநர் ஹாஜி காம்டி காமில் (Hj Kamdi Kamil), 
  • தொல்பொருள் ஆய்வாளர் மஸ்லான் கெலிங் (Mazlan Keling),
  • ஜொகூர் சுற்றுலாத் துறை இயக்குனர் (En Mohd Shukri Masbah - Pengarah Jabatan Pelancongan Negeri Johor)

ஆகியோருடன் மேலும் சில அதிகாரிகளும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.


இந்த ஆய்வுப் பணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன். மிகத் துடிப்புடன் பவனி வருகிறார். தன்னலமற்ற சேவைகள். மெய்சிலிர்க்க வைக்கின்றன.

எங்களின் சொந்தப் பணத்தில் தான் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரையில் யாரும் எங்களுக்குப் பண உதவி செய்யவில்லை.

இந்த ஆய்வுகளுக்கு மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வரலாற்று ஆலோசகராகச் சேவை செய்கிறார்.

பல நாட்கள் காடுகளில் தங்கி ஆய்வுப் பணிகள் மேற்கொண்டோம். பூச்சிக்கடி கொசுக்கடி எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டன. பலமுறை குளவிகள் கொட்டி கைகால்கள் முகம் எல்லாம் வீங்கிப் போயின. 
எந்த நேரத்தில் மழை வரும் என்று தெரியாது. வெயில் அடித்துக் கொண்டே இருக்கும் மழை வந்து அடித்துக் கொட்டும்.

பல முறை எங்களுடைய கேமராக்களையும் கைப்பேசிகளையும் பயன்படுத்த முடியாமல் போனது. எங்களுடைய முகாமிற்கு வந்து கைபேசிகளைக் கழற்றி காய வைத்த கொஞ்ச நேரத்தில் மழை அடித்து ஒரு வழி பண்ணிவிடும்.

பாம்புகளுக்குப் பயந்து ஒதுங்கிய இடங்களில் பூரான் தேள்களின் கடிகளையும் வாங்கி இருக்கிறோம்.

ஆனால் இந்த இரத்தம் குடிக்கும் அட்டைகள் இருக்கின்றனவே... ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. அப்படியே உடல் முழுமையும் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும்.

எப்படித் தான் தட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் தேடி வந்து ஒட்டிக் கொள்ளும். புதிதாகச் சில பல அட்டைகளும் சேர்ந்து கொள்ளும். நம் உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை உடலில் இருந்து சட்டென்று பிடுங்கக் கூடாது.

பிடுங்கினால் இரத்தம் ஒழுகிக் கொண்டே இருக்கும். அப்புறம் காயம் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும். அட்டைக் கடித்த இடத்தில் உப்பைக் கரைத்து தடவுவோம். சில பயங்கரமான விடாக்கண்டன் அட்டைகளும் இருக்கின்றன. வேறு வழி இல்லை.

ஓர் ஒதுக்குப் புறமான இடத்திற்குப் போய்... நம் சிறுநீரையே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். அப்படியே அந்த அட்டைகள் கீழே விழுந்து விடும். அப்புறம் பயணத்தைத் தொடருவோம்.

குனோங் கொர்பு, குனோங் தகான் மலைகளில் ஏறும் போது இந்த மாதிரி வேதனைகளைப் பட்டு இருக்கிறோம். அதே மாதிரியான கறுப்பு சிவப்பு அட்டைக் கடிகளையும் இங்கே கோத்தா கெலாங்கியிலும் பார்க்க முடிகிறது.

கோத்தா கெலாங்கியில் பிடித்த ஆய்வாளர்களின் படங்களைப் பதிவு செய்வதால் தாக்கங்கள் வேறு மாதிரியாக அமையலாம். தொடரும் அனுமதி மறுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஒரு சிறுபான்மை இனத்தின் வரலாற்றுப் பின்னணி என்பது ஒரு பெரும்பான்மை இனத்தின் சிறப்புத் தன்மைகளைக் குறைக்கச் செய்யும் என்பது வரலாற்று உண்மை. வீண் பிரச்சினைகள் நமக்கு வேண்டாமே. வரலாற்றைப் பார்ப்போம். அதனால் வருத்தங்கள் வேண்டாமே.

சரி. விசயத்திற்கு வருகிறேன். கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்தது உண்மையாக இருக்கலாம்.

மேலும் கூடுதலான ஆய்வுகள் செய்த பின்னரே உறுதிபடுத்த முடியும் என்பது ஜொகூர் மாநில பாரம்பரிய அறக்கட்டளையின் துணை இயக்குநர் டாக்டர் கமாருடின் அப்துல் ரசாக்கின் முடிவு.

கோத்தா திங்கி சுங்கை அம்பாட் காட்டுப் பகுதியில் ஆய்வுகள் செய்ய மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் - மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் புவியியல், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன.


ஏறகனவே கோத்தா திங்கி மலைக்காட்டுப் பகுதியில் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அங்கே பாழடைந்த கோட்டைக் கோபுரங்கள் உள்ளன.

அவை ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைந்து போன வரலாற்றுப் படிவங்கள் ஆகும்.


அதைத் தவிர சோழர் காலத்துக் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் எப்போது செதுக்கப் பட்டவை என்று தெரியவில்லை. ஆனால் அவை இராஜாராஜன் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்று உறுதியாக நம்பப் படுகிறது.

கி.பி. 1025ஆம் ஆண்டு சோழர் காலத்து நாணயங்களில் காணப்பட்ட அதே வரைப் படிவங்கள் ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியின் கற்பாறைகளிலும் செதுக்கப்பட்டு உள்ளன. அந்த மாதிரியான கல்வெட்டுப் பாறைகள் ஆற்றின் சில இடங்களில் காணப் படுகின்றன என்று கணேசன் கூறினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் துணை அரசு இயங்கி வந்துள்ளது. புத்த மதம் வேரூன்றி இருந்துள்ளது.


அந்தச் சமயத்தில் சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு இராஜேந்திர சோழனின் கடல் படைகளினால் தாக்கப்பட்டு அந்தப் பேரரசு நிர்மூலமானது.

ஸ்ரீ விஜய பேரரசைத் தாக்கிய இராஜேந்திர சோழன் அடுத்ததாக கோத்தா கெலாங்கியில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசின் கோட்டைகளையும் பொதுமக்கள் குடியிருப்புகளையும் தாக்கித் தவிடு பொடியாக்கி விட்டான்.

பின்னர் மலாயா தீபகற்பத்தின் வடக்கே இருந்த கடாரத்தையும் தாக்கினான்.

ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை வடிவக் கற்படிவங்கள்

ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழு 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டது. இது ஒரு தன்னார்வ வரலாற்று ஆய்வுக் குழுவாகும்.

தமிழ் மலர் நாளிதழில் வெளிவந்த மலாயா தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் கோத்தா கெலாங்கி எனும் கட்டுரைப் படித்த கணேசன் அந்த வரலாற்று மீட்புக் குழுவை உருவாக்கினார்.

அதன் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். கோத்தா கெலாங்கி வரலாற்றுத் தேடலில் தீவிரமாகவும் களம் இறங்கி உள்ளார்.

வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் 
ஸ்ரீ விஜய பேரரு காலத்ுப் ப

கோத்தா திங்கி, உலு திராம், ஜொகூர் பாரு நகரங்களில் வாழும் நண்பர்களின் தூண்டுதலால் கணேசன் அந்த வரலாற்றுத் தன்னார்வக் குழுவைத் தோற்றுவித்தார். தற்சமயம் அந்தக் குழுவில் 15 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அண்மைய காலங்களில் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

பல நாட்கள் மழையில் நனைந்து கோத்தா கெலாங்கி வரலாற்றுத் தடயங்களைத் தேடி வருகின்றனர். அதே சமயத்தில் ஜொகூர் வனக் காப்பக அதிகாரிகளின் உதவிகளையும் பெற்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி இந்திய கோட்டைகள் அங்கே இருக்கின்றன என்பது மலேசியர்கள் பலருக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியும். வேட்டைக்குப் போன அவர்களில் சிலருக்குப் பழம் காலத்துக் கற்சிலைகள் கிடைத்து இருக்கின்றன.


அவற்றை அவர்கள் எடுத்து வந்து விளையாட்டுப் பொருட்களாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அந்தப் பொருட்கள் அனைத்தும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைப் பொருட்கள். என்பது அந்த பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியாது என்று கணேசன் கூறினார்.

இருந்தாலும் அவர் கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளுக்குள் சென்று பூர்வீகக் குடிமக்களைச் சந்தித்துப் பேசுகிறார். நேரடியாகப் பார்த்த கோட்டைச் சுவடுகளை ஆவணப் படுத்தியும் வருகிறார்.

அந்த வகையில் கணேசனின் அரிய முயற்சிகளினால் அங்கே அடர்ந்த காட்டிற்குள் புராதன கருங்கல் கோட்டை இருப்பதும் தெரிய வந்தது.


உயரமான கருங்கற்களால் உருவாக்கப்பட்ட பெரும் பெரும் தூண்கள், சிதறிய சின்ன பெரிய கற்பாறைகள், செங்குத்தான ராட்சச உயர்ப் பாறைகள் போன்றவற்றைக் கண்டு பிரமித்துப் போய் இருக்கிறார்.

செஜாரா மலாயு (Sejarah Melayu) என்பது பழம் பெரும் மலாய் இலக்கிய மரபு நூல். மலாயாவின் 1500 ஆண்டு காலச் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட ஒரு காப்பியம்.

1511-இல் மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள. அப்போது அசல் செஜாரா மெலாயு சுல்தான் மகமுட் ஷாவிடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டுதான் அவர் பகாங்கிற்குத் தப்பிச் சென்றார்.

அதே அந்த அசல் செஜாரா மெலாயு 1528-இல் ஜொகூரில் இருக்கும் கம்பார் நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஜொகூரின் அரசப் பிரதிநிதியான ஓராங் காயா சாகோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுதான் அசல் பிரதி. ஆனால் பழுதடைந்து போய் இருந்தது.
(சான்று: http://www.nhb.gov.sg/collections/artefactually-speaking/artefactually-speaking---tamil-language/the-sejarah-melayu-malay-annals)

அதன் பிறகு ஜொகூர் சுல்தான்கள் அந்த வரலாற்று நூலைச் செப்பனிட்டு, சில மாற்றங்களையும் செய்தனர். ஜொகூர் சுல்தான்கள் மட்டும் இல்லை என்றால் செஜாரா மெலாயுவும் இல்லாமல் போய் இருக்கும்.

அந்த செஜாரா மெலாயுவின் அசல் பிரதியில் கோத்தா கெலாங்கியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கோத்தா கெலாங்கி என்பது புஜநகரம் (Bijnagar) என்று அழைக்கப் படுகிறது. சயாமிய மொழியில் கெலாங்கி (Gelanggi). சீன மொழியில் கெலாங் கியா (Khlang Khiaw அல்லது Glang Kiu)

அடுத்து இன்னும் ஒரு முக்கியமான செய்தி. 2005-ஆம் ஆண்டில் கோத்தா கெலாங்கி பற்றிய செய்திகளை உள்நாட்டு ‘தி ஸ்டார்’ ஆங்கில நாளிதழில் வெளியிட்டது.

கோத்தா கெலாங்கி என்பது ஸ்ரீ விஜய பேரரசின் புரதானத் தலைநகரம் ஆகும். இந்தோனேசியா சுமத்திராவில் கி.பி. 650-இல் இருந்து கி.பி. 1377 வரை செல்வச் செழிப்புடன் களை கட்டி இருந்த மாபெரும் பேரரசு.

சீனா நாட்டு வணிகர்கள் அங்கே போய் இருக்கிறார்கள். அராபிய வணிகர்களும் தொடர்புகளை வைத்து இருக்கிறார்கள். பூகிஸ் மக்களும் வணிகம் செய்து இருக்கிறார்கள்.

ஸ்ரீ விஜய பேரரசு என்பது அந்தக் காலத்தில் சுமத்திராவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் பேரரசு ஆகும். இந்த ஸ்ரீ விஜய பேரரசின் கிளை அரசாங்கங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் கோலோச்சி உள்ளன.

பேராக் புருவாஸ் கங்கா நகரம், கெடாவில் பூஜாங் பள்ளத்தாக்கு, ஜொகூர் கோத்தா கெலாங்கி போன்ற நகரங்கள் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்து இருக்கின்றன.
(சான்று: Coedès, George (1968). Walter F. Vella, ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press)

ஒரு செருகல். இப்போது இந்தோனேசியக் கல்வியாளர்களிடையே ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதாவது இந்தோனேசியாவிற்கு ஒரு தேசிய அடையாளம் வேண்டும். அது ஒரு வரலாற்று அடையாளமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விவாதம்.

அப்படி என்றால் ஸ்ரீ விஜய பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா அல்லது மஜாபாகித் பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா. எந்த அடையாளம் இந்தோனேசியாவிற்குச் சரியாகப் பொருந்தி வரும் என்று இந்தோனேசியக் கல்வியாளர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.

ஸ்ரீ விஜய மஜாபாகித் இந்த இரண்டுமே இந்தோனேசியாவின் அடையாளமாக இருக்கட்டும் என்று இந்தோனேசியத் தேசியவாதிகள் பலர் முன்மொழிகின்றனர். ஸ்ரீ விஜய - மஜாபாகித் எனும் அந்த இரு பெயர்களுமே தங்களின் பழைமையான மகத்துவத்திற்கும் பழமையான மேன்மைக்கும் பெருமை சேர்ப்பதாகப் பெருமை படுகின்றனர்.

இருந்தாலும் பொதுவாக ஸ்ரீ விஜய எனும் பெயரே அவர்களின் தேசியப் பெருமையின் அடையாளமாகக் கருதப் படுகிறது. பலேம்பாங் வாழ் மக்கள் ஸ்ரீ விஜய எனும் பெயர் தான் தேசிய அடையாளம் என்று போராடி வருகின்றனர்.

அந்தத் தாக்கத்தில் கெண்டிங் ஸ்ரீ விஜயா (Gending Sriwijaya) எனும் பாடலை உருவாக்கி அதனை இந்தோனேசியப் பாரம்பரிய நடனங்களுக்குப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஜொகூர் மாநிலத்தில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் புதிய வரலாற்றுத் தடயங்கள் கிடைத்து இருப்பது இந்தோனேசியா மக்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் அல்ல.

ஸ்ரீ விஜய பேரரசு தீபகற்ப மலேசியாவையும் ஆட்சி செய்து இருக்கிறது என்பது உலக வரலாற்று அறிஞர்களுக்கு தெரிந்த விசயம். வரலாற்று ஆசிரியர்களுக்கு அது ஒன்றும் அதிசயம் அல்ல.
(சான்று: Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions by Hermann Kulke,K Kesavapany,Vijay Sakhuja p.305)

09 ஜூன் 2017

வீட்டுக்கு வீடு கோயில் தேவையா

ஓர் ஆடு மேய்க்கும் சிறுவனின் கையில் ஒரு சின்ன இரும்பு குச்சி. ஒரு பாறையின் அருகில் சென்றான். அந்தப் பாறையில் உள்ள காந்த சக்தியினால் கையில் இருந்த இரும்புக் குச்சி பாறையில் ஒட்டிக் கொண்டது.

இதை மற்றவரிடம் போய்ச் சொன்னான். அந்தப் பாறையை ஆராய்ந்து பார்த்தார்கள். அதில் காந்தச் சக்தி இருப்பது தெரிய வந்தது. சரி.




இதே இந்த நிகழ்ச்சி இங்கு ஓர் இடத்தில் நடந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் தெரியுங்களா. அந்தப் பாறைக்கு இழுத்தடிச்சான் பாறை என பெயர் வைத்து இருப்பார்கள். உடனே அங்கே ஒரு கோயிலையும் கட்டி இருப்பார்கள்.

அப்புறம் எங்காவது காட்டில் மேய்கிற ஒரு பாம்பை அடித்துப் பிடித்துச் செத்தும் சாகாமல் பாதி உயிரோடு கொண்டு வருவார்கள். அதை அப்படியே அந்தப் பாறையின் மேல் சுருட்டிப் படுக்க வைப்பார்கள்.

அப்புறம் ஊர் முழுக்க தண்டோரா. பத்திரிகை நிருபர்களை கூப்பிட்டு பப்ளிசிட்டி. அப்புறம் வீடியோ படம் எடுத்து யூடியூப்பில் போட்டுக் காட்டுவார்கள். அப்புறம் என்ன.

அந்தக் கோயிலுக்கு ஒரு பேரை வைத்து மஞ்சள் கடுதாசியில் பத்திரிகை அடித்து உலகம் பூராவும் வசூல். இது மலேசியாவில் நடக்கிற ஒரு சாமான்யக் கூத்து.

கோயில் கட்டியது அடுத்தவன் நிலமாக இருக்கும். நிலத்தின் சொந்தக்காரன் சும்மா இருப்பானா. வந்து கேட்பான். வாய்ச் சண்டை. வாய்ச் சவடால். கை வரிசை. கத்திக்குத்து. அப்புறம் அரசியல் தலையீடுகள். இப்படித் தான் மலேசியா முழுவதும் ஆயிரம் ஆயிரம் கோயில்கள் புற்றீசல் மாதிரி பூத்துக் குலுங்குகின்றன. 



அதை விடுங்கள். வீட்டுக்கு வீடு கோயில் என்பது இப்போதைக்கு ஓர் ஐதீகமாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சாமி அறை போதுங்க. ஆனால் அப்படியா நடக்கிறது. ஒரு சாமி அறை பற்றாதுங்களா... போதுங்க.

வீட்டு முகப்பில் ஒரு கோயிலையே கட்டி... அதற்கு உறுமி மேளம், நாதஸ்வரம், இத்யாதி இத்யாதி. அப்புறம் நாலைந்து ஒலிப்பெருக்கிகளில் ஒரு கிராமமே அதிர்ந்து அண்ட சாசரங்கள் உதிர்ந்து அடங்கிப் போகும் அளவுக்குப் பக்திப் பரவசப் பாடல்கள்.

ஊரே அடங்கிப் போய் இருக்கும் நேரத்தில் திடீரென்று ஒரு ஜிங்கு ஜிக்கான் பாடல். அப்புறம் என்ன. கோயிலுக்கு வந்தவர்கள் சிலர் குத்தாட்டம் போடுவார்கள். உண்மையாக நடக்கிற விசயம்ங்க. தப்பாகச் சொல்லவில்லை. நான் பார்த்து வேதனைப் பட்டு இருக்கிறேன்.

கோயில் தலைவருக்கு அதை நிறுத்த வீரம் இருக்காது. துணிச்சல் இருக்காது. ஆனால் அந்தக் கம்பத்து மக்களைத் தூங்க விடாமல் செய்தால் மட்டும் சந்தோஷம். என்ன ஜென்மங்களோ.



பாவம் அக்கம் பக்கத்துக்காரர்கள். தூக்கம் போய் மயக்கம் வந்து ஒரு பத்து நாளைக்கு மன உலைச்சல்கள். இவர்களின் உடல் உலைச்சல்கள் மன உலைச்சல்கள் கோயில் சொந்தக்காரனுக்குத் தெரியுமா. அவனுக்கு அவன் கோயில் தான் பெரிசு. மற்றவங்களைப் பற்றி Just dont care.

அப்புறம் தெருவிற்குத் தெரு கோயில்கள். எங்கேயாவது ஒரு துண்டு நிலம் சும்மா கிடந்தால் போதும். அங்கே ஒரு கோயில். போகிற பக்கம் எல்லாம் கோயில் கோயில் கோயில்கள். தடுக்கி விழுந்தாலும் ஒரு கோயில். வெட்கமாக இருக்கிறது.

ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு தனிநபரின் அதிகாரத்தையும் வருமானத்தையும் அழகு பார்க்க... பார்க்கும் இடம் எல்லாம் சிறுதெய்வக் கோயில்கள். தேவை தானா.

நாலு மரக் கட்டைகள். நாலு அலுமினியத் தகரங்கள். நாலு பலகைகள். நாலு ஆணிகள். அப்புறம் நாலு நம்பர் கேட்க நாலு சீனன் குச்சிகள். இதற்கு பெயர் தான் இந்துக் கோயிலா. சொல்லுங்கள். என்னங்க இது. அப்புறம் எங்கேயாவது ஒரு பாம்பைப் பிடுத்துக் கொண்டு வந்து படம் காட்டுவது.

கிலோ கணக்கில் சாம்பிராணியைக் கொளுத்தி பாவம் அந்தப் பாம்பு. மூச்சுவிட முடியாமல் செத்துக் கொண்டு இருக்கும். அதைப் பார்க்க வருபவர்களுக்கும் மூச்சுத் திணறல்.

அந்தத் திணறலில் ஒரு மகராசிக்குச் சாமி வந்து ’டேய் சொர்ணக்கா வந்து இருக்கேண்டா... இரண்டு கிடா இரண்டு போத்தல் கொண்டாங்கடா என்று சத்தம் போடுவாள்.

சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வாங்கிக் கொடுப்பார்கள். நான் கேட்டது செவன் அப் இல்லேடா முண்டம்... ராயல் ஸ்டவுட்டுடா... என்று பதில் வரும்.

சரி. அப்புறம் நிலத்தின் சொந்தக்காரன் வந்து கேட்டால் எங்கள் மதத்தை சீனாக்காரன் அவமதிக்கிறான். கேட்க நாதியே இல்லையா என்று கூப்பாடு. நிலத்தின் சொந்தக்காரன் சும்மா இருப்பானா.

கோயிலை உடைக்கிறான் என்று ஒட்டுமொத்த நாடே நடுங்குற மாதிரி காட்டுக் கத்தல். சொந்த பந்தம் எல்லாம் ஒன்றுகூடி ஒரு பேரணி. அதைப் பார்த்து அமைச்சர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் குலை நடுக்கம்.

எங்கேடா ஓட்டு கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து அவர்களும் சமாதான ஆயுதங்களைத் தூக்கித் தங்கள் சாக்குப் போக்கு கைவரிசையைக் காட்டுவார்கள்.

அதைப் பார்க்கப் பத்து பேர் கூட்டம். அப்படியே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இதுவும் ஓர் அரசியல் கூத்து. ஏங்க எத்தனை நாளைக்குத் தான் காதில் பூ சுற்றுவது. சலிச்சு போச்சு.



மலேசியாவில் பதிவு செய்யப் படாமல் 42,000 கோயில்கள் இருக்கின்றன. பதிவு செய்யப்பட்டவை 14,000. காட்டுக்குள் புற்றுக் கோயில்கள் ஒரு இலட்சம் இருக்கலாம் என்று ஆய்வுக் கணிப்புகள் சொல்கின்றன.

தயவு செய்து மலேசிய இந்து அமைப்புகளின் மீது பழி வேண்டாமே. எங்கேயோ பகாங் காட்டுக்குள் ஒரு புற்றுக் கோயில் இருக்கும். அதைப் பற்றி இந்து சங்கத்திற்கு எப்படி தெரியும்.

மற்ற இனங்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி நம் சமயத்தைக் கேவலப்படுத்த வேண்டாம். கண்ட கண்ட இடங்களில் கோயிலைக் கட்டுவது நம் சமயத்திற்குத் தான் அவமானம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

05 ஜூன் 2017

பரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இது ஒரு மெகா சீரியல்.


மலாக்கா சுல்தான்களின் ஆட்சி காலம்

•    பரமேஸ்வரா  1400–1414
•    ஸ்ரீ ராம விக்ரமா 1414–1424 (மத மற்றம்)
•    சுல்தான் முகமது ஷா 1424–1444
•    சுல்தான் அபு ஷாகித் 1444–1446
•    சுல்தான் முஷபர் ஷா 1446–1459
•    சுல்தான் மன்சூர் ஷா 1459–1477
•    சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477–1488
•    சுல்தான் முகமது ஷா 1488–1528

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகனின் பெயர் ஸ்ரீ ராம விக்ரமா. 1414-இல் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரை பரமேஸ்வரா என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781

பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அதையும் உறுதி படுத்துகிறேன். 




மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்கப் பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

பரமேஸ்வரா என்பவர் வாழும் காலத்தில் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் வாழ்ந்து இருக்கிறார். இறக்கும் போதுகூட பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்தும் போய் இருக்கிறார். 


அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். எங்கே இருந்து சுல்கார்னாயின் என்பவர் வந்தார்.

எப்படி பரமேஸ்வராவின் பெயர் வசதிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப் பட்டது. உங்களுக்கே குழப்பம் ஏற்பட்டு இருக்கும். ஆக வரலாற்றுச் சித்தர்கள் எப்படி எல்லாம் வரலாற்றுச் சித்துகளைக் காட்டி வருகிறார்கள் பாருங்கள். போதுங்களா. எங்கே வருகிறேன்… அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் இப்போது இருந்தே பரமேஸ்வரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை முன் எடுத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் பரமேஸ்வரா எனும் பெயரே வரலாற்றில் இருந்து காணாமல் போய் விடும்.