தமிழ் மலர் - 10.04.2021
கெலிங் எனும் சொல் மலேசியத் தமிழர்களை இழிவுப் படுத்தும் சொல்லாகப் பார்க்கிறோம். அந்தச் சொல்லைப் பயன்படுத்தும் போது மலேசியத் தமிழர்களுக்கு கோபம் வருகிறது.
அதே அந்தச் சொல்லை 1988; 2012-ஆம் ஆண்டுகளில் டேவான் பகாசா புஸ்தகா (Dewan Bahasa dan Pustaka) தன் அகராதியில் பயன்படுத்தி இருக்கிறது. ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறோம்.
கெலிங் எனும் சொல் எங்கே இருந்து வந்தது? எப்படி வந்தது? ஏன் வந்தது? அந்தச் சொல்லின் பின்னணியில் என்ன நடந்தது? வரலாற்று ஏடுகளில் கலிங்கா எனும் சொல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
இப்போதைய இந்திய மாநிலமான 'ஒடிசா'வின் (Odisha) பழைய காலத்துப் பெயர் கலிங்கம். மகாநதிக்கும் (Mahanadi) கோதாவரி நதிக்கும் (Godavari) இடைப்பட்ட நிலப்பரப்பைக் கலிங்கம் என்று அழைத்து இருக்கிறார்கள்.
இப்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் தான் அப்போதைய கலிங்கத்தின் பெரும்பகுதி அமைந்து இருந்தது. கலிங்கத்தை ஆட்சி செய்த மன்னர்கள், பக்கத்து நாடுகளுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்கள். உலகம் தோன்றியதில் இருந்து காலா காலமாக நம்மவர்களின் பிறவிக் குணம். அவ்வளவு சுலபத்தில் போய் விடாது.
அந்தச் சண்டைச் சச்சரவுகளினால் அவர்களின் எல்லைப் புறங்களும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுருங்குவது உண்டு. ரொம்பவும் இல்லை. ஏன் என்றால் ஒரு மன்னர் சண்டை போட்டு நிலத்தைக் கொஞ்சம் இழந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவருக்கு அடுத்து இன்னொரு மன்னர் வருவார். அவரும் சும்மா இருக்க மாட்டார். எப்படியாவது சண்டை போட்டு ஆக வேண்டும். இல்லை என்றால் தூக்கம் வராது.
சண்டை போட்டு இழந்த நிலத்தை மீண்டும் மீட்டு எடுப்பார். இப்படித் தான் கலிங்கத்தின் எல்லை வரலாறுகளும் கொடுக்கல் வாங்கலில் பின்னிப் பிணைந்து சுருங்கிப் பெருகிப் போய் இருக்கின்றன.
கிருஷ்ணா (Krishna) வைதாரணி (Vaitarani) நதிகள் பாயும் நிலப் பகுதிகளையும் கலிங்கா நாடு என்று அழைத்து இருக்கிறார்கள். ஆனாலும் கலிங்க நாடு முழுமையாக ஒடிசாவில் அமைந்து இருக்கவில்லை. ஒடிசாவின் ஒரு பகுதி தான் கலிங்க நாடு.
சரி. இப்போது மகாபாரதத்திற்குள் கலிங்கம் எனும் பெயர் எப்படி வருகிறது என்று பார்க்கப் போகிறோம். ஒன் மினிட் பிளீஸ். கண்டிப்பாகச் சொல்ல வேண்டி இருக்கிறது.
எங்கு இருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட பேராண்மைச் சாதி சனங்கள் உலக வரலாற்றில் இருக்கவே செய்கிறார்கள். உலகின் பல இடங்களில் இடுப்புக்குக் கீழே பட்டை மட்டைகளைக் கட்டிக் கொண்டு சம்பான் மிதவைகளில் கரை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
ஆறுகளில் கிடைத்த மீன்களைச் சுட்டுத் தின்று பாதி வாழ்க்கையை ஓட்டியவர்களும் இருக்கிறார்கள்.. மரவெள்ளிக் கிழங்குகளில் மீதி வாழ்க்கையை மிச்சப் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சிலருக்கும் பலருக்கும் சுக்கிரத் திசை சுழற்றிச் சுழற்றி அடிப்பதும் உண்டு. மற்றவர்களைப் பார்த்து கிண்டல் கேலி செய்வதும் உண்டு.
கலிங்கம் என்பது 2500 ஆண்டுகளுக்கு முந்திய பேரரசு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதனால் தான் இங்கே மகாபாரதத்தைக் கொண்டு வர வேண்டி இருக்கிறது.
மகாபாரதம் பற்றி அனைவருக்கும் தெரியும். இரு பழைமை வாய்ந்த இதிகாசங்கள். ஒன்று மகாபாரதம். மற்றொன்று இராமாயணம்.
மூத்த இதிகாசமாகக் கருதப் படுவது மகாபாரதம். அதை இயற்றியவர் வியாசர். தமிழில் மொழி பெயர்த்தவர்களில் ஒருவர் வில்லிப்புத்தூரார். மகாபாரதம் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப் பட்டது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கும் முன்னால் இயற்றப் பட்டு இருக்கலாம் என்று அண்மைய கால ஆய்வுகள் சொல்கின்றன.
மிக அண்மையில் ஜே. எல். புரோக்கிங்டன் (J. L. Brockington) என்பவர் எழுதிய சமஸ்கிருத காவியங்கள் (The Sanskrit Epics) எனும் ஆய்வு நூல்; மகாபாரதம் 2500 ஆண்டுகளுக்கும் முந்தியது என சான்றுகள் சொல்கின்றது. (Literary Criticism - 596 pages, Leiden (1998). மகாபாரதத்தில் நான்கு பேரரசுகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
1. மேகலா பேரரசு (Mekala Kingdom);
2. உத்கலா பேரரசு (Utkala Kingdom);
3. கலிங்கா பேரரசு (Kalinga Kingdom);
4. உத்பாலா பேரரசு (Utpala Kingdom).
இவை அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கும் முந்திய அந்தக் காலத்துப் பேரரசுகள். 2000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே இந்தியாவில் கோலோச்சிய பேரரசுகள். இதை முதலில் நினைவில் கொள்வோம். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்பது பின்னர் தெரிய வரும்.
மகாபாரதம் என்று சொன்னாலே சில 'லிபரல்’வாதிகள் அதாவது முற்போக்கான தாராளவாதிகளுக்குப் பிடிக்காது. சிலர் முகம் சுழிப்பார்கள். இதிகாச இலக்கியங்கள் மூட நம்பிக்கையானவை என்றும் சொல்வார்கள்.
பிரச்சினை இல்லை. இப்போது இங்கே சில சான்றுகளை முன்வைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் தான் மகாபாரதத்தைப் பற்றி சொல்ல வேண்டி உள்ளது.
கெலிங் எனும் சொல் ஓர் இனத்தின் மீது அவச் சொல்லாக அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல் அவமதிப்பான சொல் அல்ல. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் கோலோச்சிய கலிங்க நாட்டைக் குறிக்கும் சொல்.
அந்தச் சொல்லில் இருந்து தான் கெலிங் எனும் சொல் தோன்றியது. இதை நிரூபிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனால் தான் மகாபாரதத்தை முன் வைக்கிறேன். சரி.
குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்கு ஆதரவாகக் கலிங்கர்கள் செயல்பட்டதாகப் பதிவுகள் உள்ளன. (மகாபாரதம் பருவம் - 8; கர்ண பர்வம் பகுதி – 22)
நகுலனிற்கு எதிராக மேகலர்கள் (Mekalas); உத்கலர்கள் (Utkalas); கலிங்கர்கள் (Kalingas); நிஷாதர்கள் (Nishadas); தாம்ரலிப்தர்கள் (Tamraliptas) களம் இறங்கியதாக மகாபாரதம் சொல்கிறது.
இங்கே கலிங்கர்கள் எனும் சொல் வருவதைக் கவனிக்க வேண்டும். ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே கலிங்கம் எனும் சொல் பயன்பட்டில் இருந்து இருக்கிறது.
சான்று: https://mahabharatham.arasan.info/2017/02/Mahabharatha-Karna-Parva-Section-22.html
சான்றுகள் ஆங்கிலத்தில் உள்ளன. பதிவு செய்ய வேண்டியது ஒரு கட்டாயம்.
Utkalas were mentioned as taking part in the Kurukshetra War siding with the Kauravas. Many Mekalas and Utkalas, and Kalingas, and Nishadas, and Tamraliptakas, advanced against Nakula, showering their shafts and lances, desirous of slaying him (8:22).
சான்று: https://sacred-texts.com/hin/m08/m08022.htm
மகாபாரதத்தில் குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்கு ஆதரவாகக் கலிங்கர்கள் செயல்பட்டதால் பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பதிவுகள் உள்ளன. (மகாபாரதம் 07: துரோணபர்வம்; துரோணாபிஷேக பர்வம் – 04)
அதில் 'கௌரவர்களுக்கு ஊக்கம் அளித்த கர்ணன்’ எனும் பகுதியில் உத்கலர்கள், மேகலர்கள், பவுந்திரர்கள், கலிங்கர்கள், ஆந்திரர்கள், நிஷாதர்கள், திரிகர்த்தர்கள், வாலிகர்கள் ஆகியோர் அனைவரும் போரில் வீழ்த்தப் பட்டனர் எனும் வாசகம் வருகிறது.
(சான்று: https://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Drona-Parva-Section-004.html)
இதே சான்றுகள் ஆங்கிலத்தில் உள்ளன.
The Utpalas, the Mekalas, the Paundras, the Kalingas, the Andhras, the Nishadas, the Trigartas, and the Valhikas, were all vanquished by Karna (7:4).
(சான்று: https://sacred-texts.com/hin/m07/m07004.htm)
மீண்டும் சொல்கிறேன். கெலிங் எனும் சொல் எங்கே இருந்து வந்து இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் தான் மகாபாரதத்தையும் மேற்கோள் காட்ட வேண்டி வந்து உள்ளது. அதற்காக மறுபடியும் மகாபாரதத்தின் சில பகுதிகளைப் படிக்க வேண்டி வந்தது.
ஆங்கிலத்தில் உள்ளது தமிழில் சரியாக இருக்கிறதா. தமிழில் உள்ளது ஆங்கிலத்தில் சரியாக இருக்கிறதா. இப்படி இரு புறமும் நிறுத்துப் பார்க்க வேண்டி வந்தது.
இன்னும் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் தேசிய கீதமான ஜன கன மன பாடலில் உத்காலா உப்காலா எனும் பெயர்கள் வருகின்றன. நினைவில் கொள்வோம். (India's national anthem, Jana Gana Mana)
இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு வாயாங் கூலிட் (Wayang Kulit) எனும் நிழல் பொம்மலாட்டம் படைக்கப் படுகிறது. இந்த நிழல் பொம்மலாட்டம் தொடக்கத்தில் ஜாவா, பாலி, லொம்போக் போன்ற இடங்களில் தோன்றியது.
மகாபாரதத்தின் கிருஷ்ணரைப் பற்றிய பொம்மலாட்டங்கள் மத்திய ஜாவாவில் மிகவும் புகழ் பெற்றது. அந்த ஆட்டத்திற்கு ரிங்கிட் (Ringgit) என்று பெயர். அதைவிட பாலித் தீவில் இன்னும் அதிகமான வரவேற்பு. ஏன் என்றால் அங்கே இந்துக்கள் அதிகம். இந்து மதம் முக்கிய மதம்.
இந்த மகாபாரதப் பொம்மலாட்டம் மலேசியாவிலும் புகழ் பெற்றது. கிளந்தானில் கடந்த 250 ஆண்டுகளாக மகாபாரத இராமாயண நிழல் பொம்மலாட்டங்கள் நடைபெற்று வந்தன.
அண்மையில் 1990-ஆம் ஆண்டு கிளந்தானில் மகாபாரத இராமாயண நிழல் பொம்மலாட்டத்திற்குத் தடை விதிக்கப் பட்டது. ஆனால் வேறு வடிவத்தில் இன்றும் நடைபெறுகிறது.
கெலிங் என்று சொல்லப்படும் கலிங்கர்கள் மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அந்தப் பொம்மலாட்டம் வழியாக மலேசியர்கள் உணர வேண்டும். சரி. இப்போது இந்தியாவில் இருக்கும் சடீஸ்கார் (Chhattisgarh) மாநிலத்தின் ஒரு பகுதியும் கலிங்கம் தான்.
இந்தியாவில் நர்மாதா நதி பாயும் அமரகாந்தகம் (Amarakantaka) மலைக்காடுகள் வரை கலிங்க நாடு பரவி இருந்து இருக்கிறது. கிழக்கே அகன்று விரிந்து கிடப்பது வங்காள விரிகுடா.
கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவஞானி மெகாஸ்டீனஸ் (Megasthenes) இண்டிகா எனும் நூலை எழுதி இருக்கிறார். அதில் கலிங்க நாட்டில் வாழ்ந்த மக்களை கலிங்கா (Calingae) என்று எழுதி இருக்கிறார்.
கலிங்க நாடு கலிங்கப் பூர்வீகக் குடிமக்களால் உருவாக்கப்பட்ட நாடு. கலிங்கா என்பது ஒரு பூர்வீக இனத்தின் பெயர். சில பூர்வீகக் குடிமக்கள் குழுவினர் ஒன்று சேர்ந்து கலிங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
1971-ஆம் ஆண்டு தினேஷ் சந்திரா சர்க்கார் (Dineschandra Sircar) என்பவர் இந்தியாவைப் பற்றி ஓர் ஆய்வு நூலை எழுதி இருக்கிறார். அதில் 168-ஆவது பக்கத்தில் அந்தப் பூர்வீகக் குடிமக்களைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். (Studies in the Geography of Ancient and Medieval India)
கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த அங்கவர்கள் (Angas); வாங்கர்கள் (Vangas); பூந்தரர்கள் (Pundras); சுகமர்கள் (Suhmas) ஆகிய பூர்வீக மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்து கலிங்கத்தைத் தோற்றுவித்து இருக்கிறார்கள்.
ஒடிசாவின் பைதரணி நதி (Baitarani) முதல் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வரஹானந்தி (Varahanandi) வரை பரந்து விரிந்த ஒரு நிலப்பரப்பைக் கலிங்கர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பெரிய விசயம்.
பண்டைய காலங்களில் கலிங்க நாட்டின் தலைநகரம் தந்தகுரா (Dantakura). அதை தந்தபுரா நகரம் (Dantapura) என்றும் அழைப்பது உண்டு. இப்போது ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம். அங்கே புகழ்பெற்ற தண்டவக்த்ரா (Dantavaktra) கோட்டை இருக்கிறது. அருகாமையில் லங்குலினி நதி (Langulini) ஓடுகிறது.
கலிங்கத்தின் வரலாறு நீண்ட ஒரு வரலாறு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. அந்த வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டால் தான் கெலிங் என்று கிண்டல் செய்பவர்களை எதிர்த்துப் பேச முடியும்.
கட்டுரைகளைப் பத்திரப் படுத்தி வையுங்கள். வரலாற்றுச் சான்றுகளாக அமையும். அடுத்தக் கட்டுரையில் கலிங்க நாட்டின் மாபெரும் மன்னன் கலிங்கா காரவேலன் பற்றி தெரிந்து கொள்வோம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.04.2021
சான்றுகள்:
1. Ganjam area was a part of ancient Kalinga which was occupied by Ashok in 261 B.C. - https://ganjam.nic.in/about-district/
2. Chandramani Nayak (2004). Trade and Urban Centres in Ancient and Early Medieval Orissa. New Academic.
3. R. C. Majumdar (1996). Outline of the History of Kalinga. Asian Educational Services.
4. Mano Mohan Ganguly (1912). Orissa and Her Remains--ancient and Medieval: (District Puri).
5. Snigdha Tripathy (1997). Inscriptions of Orissa. I - 5th-8th centuries A.D. Indian Council of Historical Research