24 மார்ச் 2022

1984 ஒலிம்பிக் 800 மீ. சாதனையாளர் பி. ராஜ்குமார்

(மலாயா தமிழர்கள் வரலாறு)

பி. ராஜ்குமார் (பிறப்பு: 10 டிசம்பர் 1964) மலேசியாவில் புகழ்பெற்ற இடைத்தொலைவு ஓட்டக்காரர். அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் 1984 ஒலிம்பிக் 800 மீ; 1500 மீ. போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநித்தவர். லாஸ் ஏஞ்சலஸ் 1984 ஒலிம்பிக் 800 மீ; ஓட்டத்தில், தகுதி இறுதிச் சுற்றில் நான்காம் நிலை.

Rajkumar training in AFC Cologne Athletics Club, Germany,
Before Asian Track and Field championship in Jakarta in 1985

1985-ஆம் ஆண்டு இந்தோனேசியா, ஜகார்த்தாவில் ஆசிய தடகளப் போட்டி விளையாட்டுகள் நடைபெற்றன.

அதில் 800 மீட்டர் ஓட்டத்தில், 1:47.37 விநாடிகளில் ஓர் ஆசிய சாதனையைச் செய்தார். அந்தச் சாதனை, 36 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று வரையிலும் மலேசியாவில் முறியடிக்கப்படவில்லை. அப்போது அவருக்கு வயது 22. இப்போது வயது 57.

அந்த 1985 ஆசிய தடகளப் போட்டி விளையாட்டுகளில், இந்தியாவிற்கு 10 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. மலேசியாவுக்கு ஒரே ஒரு தங்கம் கிடைத்தது. அதுவும் வி. ராஜ்குமாரின் 800 மீட்டர் ஓட்டத்தில் மூலமாகக் கிடைத்தது.

ராஜ்குமார் இப்போது தன் சொந்த ஊரான கோலாகுபு பாருவில், இளைஞர்கள் பலருக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவர்களில் யாராவது ஒருவர் என்றைக்காவது ஒரு நாள் தன் 36 ஆண்டுகாலச் சாதனையை முறியடிப்பார் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றார்.


அவருடைய அந்தச் சாதனை முறியடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார். இப்போது உள்ள தட கள விளையாட்டாளர்கள் தங்களின் ஓட்ட முறைமையை மாற்ற வேண்டும்; முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்கிறார்.

1980-ஆம் ஆண்டில் ஓட்டப் பந்தயக் காலணிகள் வாங்க முடியாமல் தவித்தவர். அப்போது அவருக்கு வயது 15. அந்தக் கட்டத்தில் சிலாங்கூர் பள்ளிகள் விளையாட்டு மன்றத்தின் செயலாளராக இருந்த ஏ. வைத்திலிங்கம் என்பவர்தான் உதவி செய்து இருக்கிறார்.

புதுக் காலணிகளுடன் கோலாலம்பூர் மெர்டேக்கா அரங்கத்தில் சிலாங்கூர் பள்ளிகளின் தடகளப் போட்டியில் பங்கேற்றார். அதுதான் கோலாலம்பூருக்கு அவரின் முதல் பேருந்து பயணம். அங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான போட்டிகளில் இரண்டு தங்கங்களை வென்றார்.

அதன் பின்னர் சாதனைகள் மேல் சாதனைகள்.

_1984 ஒலிம்பிக் சாதனை நேரங்கள்_

# 1500 மீட்டர் - 3:55.19

# 800 மீட்டர் - 1:48.19

_1985 ஆசியா; மலேசியா சாதனை_

# 800 மீட்டர் - 1:47.37[2][3]

_தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்_

# 800 மீ. - 1983 - சிங்கப்பூர் - தங்கம்
    
# 1500 மீ. - 1983 - சிங்கப்பூர் - தங்கம்
    
_ஆசிய தடகள போட்டி விளையாட்டுகள்_

# 800 மீ. - 1985 - ஜகார்த்தா - தங்கம்

கோலாகுபு பாருவில், பல்துறை தொழில் முனைவராகச் சொந்தத் தொழிலில் ராஜ்குமார் ஈடுபட்டு வருகிறார். ஒரு தங்கும் விடுதி; ஒரு பழத்தோட்டம், ஒரு விலங்குப் பண்ணை, ஒரு தேயிலைத் தோட்டம் மற்றும் ஒரு வீடமைப்பு நிறுவனம் போன்றவற்றை நடத்தி வருகிறார்.


மனைவியின் பெயர் சரோஜா. இரு பிள்ளைகள். மகள் கிரித்திகா. மகன் யுவன். ஒரு காலத்தில் ஓட்டப் பந்தயக் காலணிகள் வாங்க முடியாமல் தவித்தவர். இப்போது ஓட்டப் பந்தயத் துறையையும் தாண்டிய நிலையில் பல இலட்சங்களுக்கு அதிபதியாகத் திகழ்கின்றார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.03.2022

சான்றுகள்:

1. Rajkumar proved to be the continent’s best 800m runner when he won the gold in the 1985 Asian Track and Field championship in Jakarta as a 22 year old. - https://www.nst.com.my/sports/others/2019/07/504947/former-national-stars-keen-getting-malaysian-athletes-right-track-again

2. Batulamai Rajakumar - https://www.sports-reference.com/olympics/athletes/ba/batulamai-rajakumar-1.html

 

மலாயா தமிழர்களும் மலாயா கப்பல்களும்

தமிழ் மலர் - 24.03.2022

மலாயாவிற்குத் தமிழர்கள் கப்பல் ஏறி வந்த கதை பெரிய ஒரு கண்ணீர்க் கதை. 250 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு நெடிந்து போகின்ற ஒரு தொடர்கதை.

அந்த நீண்ட கதையில் தமிழர்கள் சிந்திய இரத்தம், கொட்டிய தியாகம், தூவிய அர்ப்பணிப்புகள்; சொற்களில் மாளா. எப்படி எழுதினாலும் எழுதித் தீர்க்கவே முடியாது.

நிலவுக்கே ஏணி வைத்து எழுதினாலும் தமிழர்களின் சோகக் கதைகள் அதையும் தாண்டி உச்சிக்குப் போய் இமயம் பார்க்கும். அப்பேர்ப்பட்ட அர்ப்பணிப்புகளைத் தமிழர்கள் இந்த நாட்டிற்கு வழங்கி இருக்கிறார்கள். சத்தியமாகச் சொல்கிறேன். வாரி இறைத்து இருக்கிறார்கள். திருத்திக் கொள்ளுங்கள்.


அவர்களின் உயிர்களையும் உடல்களையும் சுமந்து வந்த கப்பல்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மலாயா தமிழர்களின் வரலாற்றில் மிகவும் ஆழமாய்ப் பதிந்து போன ஒரு கடல் காவியம் என்றால் அதுதான் எஸ்.எஸ். ரஜுலா கப்பல். தமிழர்களால் 'ரசுலா கப்ப' என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஓர் அழகிய கடல் ஓவியம்.

அந்தக் கப்பல் மறைந்து போய் விட்டது. இருந்தாலும் அது விட்டுச் சென்ற பல வரலாற்றுத் தடங்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. சொல்லப் போனால் மலாயா தமிழர்களின் வரலாற்றில் அந்தக் கப்பல் ஒரு ஜீவநாடி. ஒரு சப்தநாடி.


இந்தக் கப்பலைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள். இப்போது நாம் ஓரளவிற்கு ஒரு மனநிறைவான வாழ்க்கை வாழ்கிறோம். இனவாதத்தையும் மதவாதத்தையும் விட்டுத் தள்ளுங்கள். ஆனால் நம் மூதாதையர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். கண்ணீர் விட்டு இருப்பார்கள். தண்ணீர்க் கப்பல்களில் வேதனைகளோடு வந்து இருப்பார்கள். அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மலாயா தமிழர்களுக்குப் பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையும் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதே போலத் தான் இலங்கையின் மலையகத் தமிழர்களுக்கும் கொடுமைகள். அதைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத பாரதியார் ஒரு கவிதை எழுதினார்.

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!


நம் நாடு மலேசியா பெருமைக்குரியது. இந்த 21-ஆம் நூற்றாண்டில் நம்முடைய நாடு மிகக் கம்பீரமாய் எழுந்து வானளாவி நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் போட்டு அழகு பார்க்கின்றது.


பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் வியக்கத் தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து நிற்கிறது. நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். வெளிநாடுகளில் சென்று பார்க்கும் போது தான் நம்முடைய நாடு எவ்வளவு வளமிக்கது; சுபிட்சமானது என்று உணர முடிகின்றது.

அவை எல்லாம் வரலாறு சொல்லும் உண்மைகள். அந்த உண்மைகளும் சரி; அந்த உரிமைகளும் சரி; அவற்றின் பின்னால் எழுந்து நிற்கும் மலேசிய தமிழர்களின் அர்ப்பணிப்புகளும் சரி. என்றைக்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சொர்க்க பூமியை சுயநலம் பார்க்கும் ஒரு சில அரசியல்வாதிகள் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொன்னால், ஒரு கோமாளித் தனமான அரசியலை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

எஸ்.எஸ். ரஜுலா கப்பல்

யானை வந்தால் என்ன. பூனை வந்தால் என்ன. எங்க வீட்டுப் பானை எட்டு வருசத்துக்கு நிறைஞ்சு இருக்கணும். என் குடும்பம் நல்லா இருந்தால் போதும் என்கிற சுயநலக் கூத்துகள்.

என்ன செய்வது. இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை. காலம் கெட்டுப் போய்க் கிடக்கிறது. ஊர் பொல்லாப்பு வேண்டாங்க.

ரஜுலா கப்பலுக்கு முன்னர் 1870 - 1900-ஆம் ஆண்டுகளில் சில கப்பல்கள் சென்னைக்கும் பினாங்கிற்கும் ஓடி இருக்கின்றன. அவை வேகமாகச் செல்லவில்லை. சென்னையில் இருந்து பினாங்கிற்கு வந்து சேர இரண்டு வாரங்கள் வரை பிடிக்கும். ஆண்டைக் கவனியுங்கள். 1870-ஆம் ஆண்டுகள்.

நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவியின் மூலமாகப் பயணச் சேவைகள். அவற்றில் சில கப்பல்கள் பெயர் தெரியாமலேயே மறைந்து போய் விட்டன. 1930-ஆம் ஆண்டிற்குப் பின்னால் ஓடிய கப்பல்கள் எட்டு பத்து நாட்களில் பினாங்கு துறைமுகத்தைப் பிடித்து இருக்கின்றன.

எஸ்.எஸ். ஜல உஷா

எஸ்.எஸ்.ரஜுலா கப்பல் இருக்கிறதே இது ஐந்தே ஐந்து நாட்களில் பினாங்கை வந்து பிடித்து இருக்கிறது.

1870-ஆம் ஆண்டுகளில் தமிழர்களை ஏற்றி வந்த கப்பல்கள்:

1. ரோணா (HMT Rohna)

2. அரோண்டா (SS Aronda)

3. ரஜூலா (SS Rajula)

4. ஜலகோபால் (SS Jala Gopal)

5. ஜல உஷா (SS Jala Usha)

6. திலவரா (MS Dilwara)

7. ஸ்டேட் ஆப் மெட்ராஸ் (SS State of Madras)

8. துனேரா (MS Dunera)

9. எம்.வி.சிதம்பரம் (MV Chidambaram)

இந்தக் கப்பல்கள் இன்னும் மலேசியத் தமிழர் மனங்களில் சம்மணம் போட்டு நிலைத்து நிற்கின்றன. அவற்றை மறக்க முடியுமா. ஆகக் கடைசியாக ஓடியது எம்.வி. சிதம்பரம் கப்பல் ஆகும். 1985-ஆம் ஆண்டில் ஒரு தீ விபத்து. அதோடு அதன் கடல் வாழ்க்கையும் முடிந்தது.

1940-ஆம் ஆண்டுகளில் ரோணாவும் ரஜூலாவும்தான் ஒரே சமயத்தில் இணைந்து பயணித்தன. அதன் பின்னர் ரஜூலாவும் ஜலகோபாலும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு ஓடின.


இவற்றில் ரோணாவும் அரோண்டாவும் கடலில் மூழ்கி விட்டன. ரோணா கப்பல் மத்தியத்தரைக் கடல் பகுதியில் மூழ்கிப் போனது. அரோண்டா கப்பல் 1940-ஆம் ஆண்டு ஒரு வெடிப்பு சம்பவத்தால் கனடா நாட்டுக்கு அருகில் மூழ்கிப் போனது. சரி.

சஞ்சிக்கூலியாய் மலாயாவுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கைநாட்டுப் போட்டு சத்தியம் செய்து விட்ட ஒருவர் தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு கடனாளியாகத் தான் புறப்படுகிறார். கப்பலில் ஏறும் போதே கடன்காரர்தான்.

கிராமத் தலைவரிடம் கைநீட்டி வாங்கிய கடன்.
சொந்த பந்தங்களிடம் வாங்கிய கடன்.
வயல்காட்டை அடகு வைத்த வட்டிக் கடன்.
கிணறு வெட்ட வாங்கிய கடனுக்கு வட்டிக் கடன்.
குடிசைக்கு ஒட்டுப் போட வாங்கிய கடன்.
காளைக்கு விதையடிக்க வாங்கிய கடன்.
ஐயனார் சாமிக்கு அரிவாள் வாங்கிய கடன்.

இப்படி எக்கச்சக்கமான கடன் சுமைகள். அவற்றுக்கு வட்டிக் குட்டிகள். அந்தக் கடன்களுக்குக் கொஞ்சமாவது தண்ணீர் காட்ட வேண்டும். இல்லையா. இல்லை என்றால் சொந்த பந்தங்கள் சும்மா விடுவார்களா? வீணாய்ப் போன அசிங்கமான வார்த்தைகளை அள்ளிக் கொட்டி மானத்தை வாங்கி விடுவார்களே.

அடுத்து கடல் கடந்து போகும் பயணத்துக்கான தட்டு முட்டுச் செலவுகள். வேறுவழி இல்லாமல் வேலைக்கு ஆள் சேர்த்த அதே கங்காணியிடமே கடன் வாங்க வேண்டி இருக்கும். இங்கேதான் ஆரம்பக் கடன்கள் அதிரடியாய் ஆரம்பிக்கின்றன.


ஆக தமிழகத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு தொழிலாளி ஒரு கங்காணியின் கடன்காரராகத் தான் புறப்படுகிறார். இந்த முதல் கடன் தான் பின்னர் காலத்தில் முதலைக் கடனாக விஸ்வரூபம் எடுக்கிறது.

அதுவே ஒரு சாமான்ய மனிதனை வெட்டி வீசப் போகும் ஒரு பயங்கரமான சதித் திட்டமாக மாறிப் போகின்றது. அதுவே ஆள் சேர்க்க வந்த ஒரு கங்காணி பயன்படுத்தப் போகும் துருப்புச் சீட்டு. ஆக பிறந்த மண்ணிலேயே அந்தச் சாமான்ய மனிதன் ஒரு கடனாளியாகத் தான் புலம் பெயர்கிறான்.

இது அதோடு முடிந்து போவது இல்லை. மலாயாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கேயும் பற்பல சடங்குச் சம்பிராதயச் செலவுகள்.

காத்தமுத்துக்கு காதுகுத்து…
தீத்தம்மாவுக்கு திருமணம்…
ஈச்சப்பனுக்கு ஈமச்சடங்கு…
வாத்தியார் மக வயசுக்கு வந்துட்டா

என்று இப்படி எக்கச் சக்கமான சடங்குச் சங்கதிகள். சம்பிரதாயச் சாணக்கியங்கள். அதே கங்காணியிடம் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. அதுவும் அதோடு நின்று போவது இல்லை. தொடரும் தொடர்வண்டிச் சரக்காய் மாறிப் போகின்றது. மேலும் ஒரு வரலாற்றுத் தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

சான்றுகள்:

1. Tragic Orphans: Indians in Malaysia" by Carl Vadivella Belle, Publisher: Institute of Southeast Asian Studies

2. Sandhu, Kernial Singh (2006). Indian Communities in Southeast Asia. ISEAS Publishing.

3. Arasaratnam, Sinnappah (1970). Indians in Malaysia and Singapore. London: Oxford University Press

4. Amarjit Kaur, Indians in Malaysia, 1900–2010: Different Migration Streams, One Diaspora In: Tracing the New Indian Diaspora



 

23 மார்ச் 2022

மலாயாவின் முதல் ஒலிம்பிக் வீரர் சின்னையா கருப்பையா

மலேசிய ஒலிம்பிக் வரலாற்றில், மலேசியாவின் முதல் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில், மலேசியாவைப் பிரதிநிதித்த முதல் மலேசியர்; முதல் மலேசிய இந்தியர்; முதல் மலேசியத் தமிழர் *சின்னையா கருப்பையா* (Sinnayah Karuppiah).


66 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயக் காலனித்துவக் காலத்தில், மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஒரு தமிழர், ஓர் அனைத்துலகப் போட்டியில் மலாயாவைப் பிரதிநிதித்து உள்ளார்.

மணி ஜெகதீசன் அவர்கள் 1960 ரங்கூன் ஒலிம்பிக்கில் ஓடுவதற்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, சின்னையா கருப்பையா, 1956 மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் தடம் பதித்து உள்ளார்.

1956-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா; மெல்பர்ன் நகரில் 13-ஆவது ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 100 மீட்டர் தகுதிச் சுற்றில் 11.56 விநாடிகளில் ஓடி, சின்னையா கருப்பையா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். இருந்தாலும் இறுதிச் சுற்றில் 4-ஆம் இடத்தைப் பிடித்தார்.

சின்னையா கருப்பையா 1937-ஆம் ஆண்டில் ரவாங்கில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிரமப்பட்டு பயிற்சி எடுத்தவர். சப்பாத்து இல்லாமல் வெறுங்கால்களில் ஓடியவர்.

இருப்பினும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தேர்வு செய்யப் பட்டதால், கூட்டரசு மலாயா ஒலிம்பிக் மன்றம் இவருக்கு காலணிகள், ஆடை அணிகலன்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்து உள்ளது.

1956 மெல்பர்ன் 13-ஆவது ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சியில் 33 பேர் கொண்ட மலாயா குழுவினர் பங்கு எடுத்துக் கொண்டனர். (32 ஆண்கள்; ஒரு பெண்).


அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தில் (International Olympic Committee) சேர்வதற்கு, புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டரசு மலாயா ஒலிம்பிக் மன்றத்திற்கு (Federation of Malaya Olympic Council) 1954-ஆம் ஆண்டில் அனுமதி கிடைத்தது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1896-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டாலும், அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு 1954-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்கு அனுமதி கிடைத்தது.

அதே அந்த மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் மற்றொரு தமிழர், மாணிக்கவாசம் அரிச்சந்திரா, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்து உள்ளார். அவரையும் நாம் நினைவில் கொள்வோம்..

1956 மெல்பர்ன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மலாயாவைப் பிரதிநிதித்த இதர இந்தியர்கள்:

# சுபாத் நடராஜா
# மாணிக்கம் சண்முகநாதன்
# சலாம் தேவேந்திரன்
# ராஜரத்தினம் செல்வநாயகம்
# நோயல் அருள்

மலேசியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்த முதல் மலேசியத் தமிழர் *சின்னையா கருப்பையா* 1990-ஆம் ஆண்டு தன்னுடைய 53-ஆவது வயதில் ஒரு சாலை விபத்தில் காலமானார்.

அவர் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற வரலாற்றுச் சாதனை மமேசிய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.03.2022

*மலேசியாவின் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள்*

சான்றுகள்:

1. Olympedia – Sinnayah Karuppiah Jarabalan - Competed in Olympic Games. www.olympedia.org.

2. Evans, Hilary; Gjerde, Arild; Heijmans, Jeroen; Mallon, Bill; et al. "Sinnayah Karuppiah Jarabalan Olympic Results". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC.