12 டிசம்பர் 2011

கணினியும் நீங்களும் – 123


[உலக இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா, தனது முதல்பக்கத்தில் நம்முடைய மலாக்கா முத்துக்கிருஷ்ணனைப் பற்றி காட்சி படுத்தியுள்ளது. http://ta.wikipedia.org]


செந்தில்குமார்
senthilkumar@gmail.com
கே: வணக்கம் ஐயா. என்னுடைய பக்கத்துக்கு வீட்டுலே wifi இருக்கிறது அதற்கு கடவு சொல் போட்டு  உள்ளார். அதை எப்படி உடைப்பது. தயவு செய்து உதவி செயுங்கள்.
ப: அதாவது நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கதவை  உடைக்கச் சொல்கிறீர்கள். அப்படித் தானே.  கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஆம்பர், ஒரு ஸ்குரு டிரைவர் இருந்தால் போதுமே. அப்புரம் ஏன் என் உதவி. பாவம் அந்த மனுஷன்.

அவர் மாதாமாதம் காசைக் கட்டி நேர்மையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதைப் போய் நீங்கள் இலவசமாக... அதுவும் கதவை உடைத்துக் கொண்டு போய் பார்க்க விரும்புகிறீர்கள்.  உங்களுக்கே அது நியாயமாகப் படுகிறதா.

அவர் உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர் ஐயா. அவருக்குப் போய் துரோகம் செய்ய நினைப்பது பாவம் இல்லையா. அவருடைய அனுமதியைப் பெற்று இணையத்தின் கடவுச் சொல்லைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஒரு இருபது முப்பது வெள்ளியில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது. இது உலகம் அறிந்த உண்மை. அதனால், உடைக்கிறது கிடைக்கிறது எல்லாம் வேண்டாம். அப்புறம் பக்கத்து வீட்டுக்காரருக்கு விஷயம் தெரிந்து உங்கள் கழுத்தைப் பிடித்தால் என்னைக் காட்டிக் கொடுக்க ரொம்ப நேரம் பிடிக்காது.

பத்திரிகையிலே கதை கட்டுரை எழுதுவானே அவன் தான் சொல்லிக் கொடுத்தான் என்று என்னை மாட்டி விடுவீர்கள். அப்புறம் அந்த ஆள் கத்தி கப்பாடா சகிதம் வந்து நிற்பார். என் உடம்பு தாங்காது. வேண்டாம் சாமி. ஆளை விடுங்கள்.


ரோபி மகமது robimahmatu@gmail.com
கே: அன்புள்ள சார், தாங்கள் pc சம்பந்தமான கேள்விகளுக்கு தான் எனது இ-மைல்க்கு பதில் தருவீர்களா. அல்லது நான் சண்டே பேப்பரில்தான் சும்மா பார்க்கணுமா?

ப: இ-மைல்க்கு  பதில் தர முடியாது. அது எல்லாம் சும்மா பேச்சு. மைல் கணக்கில் என்னால் நடக்க முடியாது.  இ-மெயிலுக்குத் தான் பதில் தர முடியும். அதை அப்படியே சண்டே பேப்பரில் பார்க்கலாம். படிக்கலாம். ஆனால், காசு கொடுத்து வாங்கிப் படித்தால் நல்லது.


கலைப்பித்தன், குவாந்தான், பகாங் (குறும் செய்தி)
கே: சார், உங்களிடம் கேட்கலாம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். கேட்டு விடுகிறேன். உங்களைப் போல ஒருத்தர். அசல் உங்கள் மாதிரி. இங்கே கடை கடையாய்ப் போய் யாசகம் கேட்கிறார். மனசிற்கு கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்குப் யாசகம் எடுக்கும் பழக்கம் இருக்கிறதா? நீங்கள் இல்லை என்றால் அப்புறம் அந்த ஆள் யார் சார்?

ப: ஏன்யா எத்தனை பேருயா இந்த மாதிரி வந்து இருக்கீங்க. முதலில் ஒருவர் கதவை உடைக்கச் சொன்னார். அப்புரம் ஒருவர் சும்மா பார்க்கணும் என்கிறார். இப்போது நீங்கள் என்னடா என்றால் என்னைப் பிச்சைக்காரனாக ஆக்கிப் பார்க்கிறீர்கள்.

அது எல்லாம் சரி. ஏன்யா... என்னைப் பார்த்தால் என்ன அப்படி பிச்சை எடுத்துப் பிழைக்கிறவன் மாதிரியா தெரியுது. நீங்கள் பார்த்த அந்த ஆள்... நான் அவன் இல்லை. நான் அவன் இல்லை. சரியா.   எனக்கு பிச்சை எடுக்கிற நிலைமை வராது. அப்படியே  வந்தால், பத்து காசு, இருபது காசு எல்லாம் இல்லை. ‘மினிமம்
அஞ்சு வெள்ளி, பத்து வெள்ளி தான். கொடுத்தால் கொடு கொடுக்காட்டி போ... என்று போய்க் கொண்டே இருப்பேன்.

கத்தரிக்காய் தேங்காய் விலைக்கு விற்கிற காலத்தில் அஞ்சு காசு பத்து எல்லாம் கட்டுப்படி ஆகாது சாமி. எதற்கும் காசை
ரெடி பண்ணி வையுங்கள். வந்தாலும் வருவேன்.

தமிழ்மகன் பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்
கே: Enakku bussines seiya vendum. Vetri pera vendum. Niraya sambatika vendum endru pala aasaigal. Aanal enakku indru varai 1 valiyum teriya villai. Blog muulam panam sambatipathu epadi sir?

ப:  Unggalukku nalla aasaigal. Blog muulama bathil solkiren. Ippa enakku 1 valiyum teriya villai. Mannikkavum.

சுகுமாறன் குப்பு <sukumaran_52@hotmail.com>
கே: ‘ஏழாம் அறிவுதிரைப்படம் ஒரு சீனப் படத்தின் தழுவல் என்று நீங்கள் உங்களுடைய வலைப்பூவில் பதிவு செய்து இருக்கிறீர்கள். ஒரு தமிழ்ப்படம் வெற்றி பெற்றால் அது ஒரு தழுவல், வழுவல் என்று சொல்ல சிலர் வந்துவிடுகிறார்கள். அதில் நீங்களும் ஒருவர். ஒரு தமிழர் இப்படி ஒரு பிரமாதமான படம் எடுத்து இருக்கிறாரே என்று பெருமை படுங்கள். வேதனைப் பட வேண்டாம். தமிழனே தமிழனை இழிவு படுத்தக் கூடாது.
ப: இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. நல்லதைப் பாருங்கள். கெட்டதை விடுங்கள். அதற்காக நான் ரொம்ப ரொம்ப நல்லவன் என்று சொல்ல வரவில்லை. இணையத்தில் தடுமாறிக் காலில் விழுவதைப் பார்க்காமல் தட்டிக் கழிக்க முடியுமா சொல்லுங்கள். இணையத்தில் சுத்த சைவம் என்று சொல்லி உத்தம வேஷம் போட முடியாது. அந்த மாதிரியான இடம் அது.  

‘ஏழாம் அறிவுதிரைப்படம் ஒரு சீனப் படத்தின் தழுவல் என்பது உண்மை. அந்தப் படத்தின் பெயர்  Da Mo Zu Shi அல்லது Master of Zen. 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்தப் படத்தை யூ டியூப்பில் பார்க்கலாம். அதன் முகவரி: http://www.youtube.com/watch?v=xEu84QbN-b4

போதி தர்மர் பிறந்த ஊர் தென் இந்தியா என்று மட்டுமே படத்தில் சொல்லப் படுகிறது. ஆனால், அவர் உண்மையில் பிறந்த இடம் காஞ்சிபுரம். அவர் ஒரு பல்லவ இளவரசர்.

போதி தருமரை சீனர்கள் விஷம் வைத்து கொன்றாக படத்தில் வருகிறது. ஆனால், போதி தர்மர் இயற்கையாக மரணம் அடைந்தார். அவரைச் சீனர்கள் தெய்வமாக நினைக்கின்றனர். அவருக்காக ஷாலின் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

வரலாற்றைக் கையாளும் போது வரம்பு மீறிய பொய்மையைத் திணிக்கக் கூடாது என்பதே என்னுடைய கருத்து. இந்த விஷயம் ஷாலின் தற்காப்புக் கலைஞர்களுக்குத் தெரிந்தால்
ஏழாம் அறிவு தயாரிப்பாளர்களுக்கு (போதி) தர்மஅடி கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

நுனிப்புல்லை மேய்ந்து விட்டு ஆணிவேரைப் பிடுங்கி விட்டதாக நினைப்பது ரொம்பவும் தப்பு.

27 நவம்பர் 2011

பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்

இணையக் கலைகளஞ்சியமான விக்கிப்பீடியாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதன் முகவரி: http://ta.wikipedia.org/wiki/ஜானகி_ஆதி_நாகப்பன்


பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்

இந்தியாவின் 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி. மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடி. தன்னுடைய 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர்.

பர்மா இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீரராகக் களம் கண்டவர். நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்.

சுபாஷ் சந்திர போஸ், மலாயாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்கு தங்களால் இயன்றதை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே ஜானகி ஆதி நாகப்பன், தான் அணிந்திருந்த தங்கக் கம்மல்களைக் கழற்றிக் கொடுத்தார்.

இந்தியத் தேசப் பற்று

சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவிற்கு வந்து பேருரைகள் ஆற்றிய போது தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர்.

நகையும் தமிழரும் பிரிக்க முடியாதவையாக இருந்த காலக் கட்டத்தில், இருந்ததை எல்லாம் மலாயாத் தமிழர்கள் சுபாஸ் சந்திரபோசிடம் அள்ளிக் கொடுத்தனர். அப்போது மலாயாத் தமிழர்களுக்கு இந்தியத் தேசப் பற்று மட்டுமே பிரதானமாக விளங்கியது.

இந்திய தேசிய இராணுவத்தில் மலாயா ஜான்சி ராணிப் படையினர்.

1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் தொடங்கி வைத்த கட்சியாகவே இருந்தது.

மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர்.

இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என்றும் முடிவு செய்தார். அவருடைய குடும்பத்தில் இருந்து பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி ஆதி நாகப்பனின் தந்தையாருக்கு இது பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.

இந்திய தேசிய இராணுவத்தில் சேவை

மலாயாவில் சப்பானியர்கள் ஆட்சி செய்த போது, இந்தியாவைப் பிரித்தானியர்கள் தங்களின் இரும்புப் பிடியில் வைத்து இருந்தனர். அந்தப் பிரித்தானியர்களுக்கு எதிராக இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய இராணுவத்தில் முதன்முதலில் சேர்ந்த மலாயா பெண்களில் ஜானகி ஆதி நாகப்பனும் ஒருவராவார்.

இராணுவ உடையில்  ஜானகி ஆதி நாகப்பன்
வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். முதல் நாள் ராணுவத்தில் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி ஆதி நாகப்பன் அழுததாகவும் சொல்லப்படுகின்றது.

ஆகவே, ஜானகி ஆதி நாகப்பனினால் இராணுவத்தின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. தொடக்கக் காலத்தில் மிகவும் சிரமப்பட்டார்.

காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை அவருக்கு பழகிப் போனது. இராணுவ அதிகாரிகளுக்கான தேர்வில் ஜானகி ஆதி நாகப்பன் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார்.

பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

பத்மஸ்ரீ விருது

ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்கு துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற கேப்டன் ஜானகி ஆதி நாகப்பன், பர்மா இந்தியா போர் முனையில் வீரப் போராட்டம் நடத்தினார். காயம் அடைந்து சிகிச்சையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் விடுதலையில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்து இருக்கிறது. 1977ஆம் ஆண்டு டில்லியில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விருதளிப்புச் சடங்கில், இந்திய அதிபர் கே. ஆர். நாராயணன், ஜானகி ஆதி நாகப்பனுக்கு அந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளில் தன்னை முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொண்டார்.

1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.காவை உருவாக்கினார்.

மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் ம.இ.காவின் மகளிர் பகுதி சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார்.

அந்தப் பதவியை 1986ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் வகித்தார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவர்தான்.

1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ம.இ.கா. அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ ஆதி நாகப்பனுக்கும் இவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கு 1949-இல் திருமணம் நடைபெற்றது.

டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க காலத்தில் இருந்து பக்கபலமாக இருந்து வந்தார். 85 வயதைத் தாண்டிவிட்ட இவர் இப்போது கோலாலம்பூரில் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப் படுகிறது.

ஆதி நாகப்பன் தமபதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருடைய பெயர் ஈஸ்வர் நாகப்பன். அவர் சிங்கப்பூரில் வீடு விற்பனை தொழில்துறையில் ஈடுபட்டுள்ளார்.

கணினியும் நீங்களும் – 122


சிவகுருநாதன்  <sivaguru_tam@gmail.com>
கே: அதிக நேரம் கணினியைப் பயன் படுத்துவதால் என் முட்டிக்கை வலிக்கிறது. அதைத் தவிர்க்க வழி இருக்கிறதா?

ப:
வலி தீர்க்க வழி இருக்கிறது. பொதுவாகவே, நீண்ட நேரம் சுழலியைப் பிடித்து வேலை செய்யும் போது முட்டிக்கை, கை விரல்கள் வலிக்கச் செய்யும். சரியான முறைகளைக் கையாள வேண்டும். கைகள் மடங்கிய வாக்கில் இருக்கக் கூடாது. நேராக இருக்க வேண்டும்.

அதே போல சுழலியைப் பிடிக்கும் போது மணிக்கட்டு சுழலியின் மீது இருக்கக் கூடாது. படங்களைப் பாருங்கள். அதன் படி பின்பற்றுங்கள். வலிகளைக் குறைக்கலாம்.

ஒரு மணி நேரம் கணினியில் வேலை செய்த பின்னர், அப்புறம் ஓர் ஐந்து நிமிடம் எழுத்து நடந்து பாருங்கள். உட்கார்ந்தே இருக்க வேண்டாம். இதயத்திற்கும் சரி இல்லை. இடுப்பிற்கும் சரி இல்லை.

யுகா ஸ்ரீ  <kyugasri@gmail.com>

கே: ஓர் இணையதளத்தை Hacking  செய்து விட்டார்கள். நம்முடைய வங்கிக் கணக்கை Hacking  செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஹேக்கிங்   என்றால் என்ன?

ப: Hacking  என்றால் மென்பொருள் திருட்டு. ஒருவர்  தன்னுடைய அறிவுத் திறமையால், ஓர் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் ஒரு  மென்பொருளைத் திருத்துதல் அல்லது சிதைத்தல் செய்வதைத் தான் ஹேக்கிங் என்று சொல்கிறோம்.


இணையத்தில் ஒரு செய்தியையோ அல்லது ஒரு கணக்கையோ பாதுகாக்க அவற்றுக்கு என ஒரு கடவுச்சொல்லை உருவாக்கி அதனைப் பாதுகாத்து வைத்து இருப்பார்கள்.

ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள சில வசதிகள் மூலம் ஒரு சிலர் அந்த கடவுச்சொல்களைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்கிறார்கள். அது மட்டும் இன்றி அந்த கணக்கையும் முடக்கி விடுகிறார்கள். இந்தச் செயலைத் தான்
ஹேக்கிங் என அழைக்கிறோம்.

இந்தச் செயலினால் மிகப்பெரிய தளங்கள் கூட பாதிக்கப் படுகின்றன. ஆகவே, நம்முடைய கடவுச்சொல்லை மற்றவர்கள் சுலபத்தில் தெரிந்து கொள்ள முடியாதபடி மிகவும் கடினமாக அமைத்து வைத்து இருக்க வேண்டும்.

உங்களின் கடவுச்சொல்லில் எழுத்துகள், எண்கள், குறியீடுகள் போன்ற அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும். சரியா. உதாரணமாக என்னுடைய கடவுச் சொல்:
Hymn#0%2. (மாற்றம் செய்து இருக்கிறேன்.) 

கடினமான பாஸ்வேர்ட் உருவாக்க பல கடவுச்சொல் உருவாக்கிகள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று Random-Password-Generator. இந்த நிரலியைக் கீழ்காணும் தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

http://download.cnet.com/Random-Password-Generator/3000-2092_475012472.html?part=dl-6271865&subj=dl&tag=button

இலவசம் தான். நீங்கள் உருவாக்கிய கடவுச்சொல்லை எங்கேயாவது பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். காணாமல் போய் விட்டால் என்னை அழைத்துக் கேட்க வேண்டாம்.

அந்த மாதிரி பல முறை நடந்து இருக்கிறது. வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அஞ்சு நிமிஷம் கழித்து
வாழைப்பழம் எங்கே காணோம், இங்கேதான் வச்சேன் என்று வீடு பூரா தேடக் கூடாது.

அடுத்து இன்னும் ஒரு முக்கியமான விஷயம். 2011 ஆம்  ஆண்டின் மிக ஆபத்தான 100 கடவுச்சொல்களை வெளியிட்டு உள்ளனர். அவற்றில் சிலவற்றைப் பாருங்கள். 
1.  password                                                       
2.  123456                                                      
3.  12345678                                                      
4. 
qwerty                                                
5.  abc123
6.  monkey
7.  1234567
8.  letmein
9.  trustno1
10.  ragon
11.  baseball
12.  111111
13.  iloveyou
14.  master
15.  sunshine
16.  ashley
17.  bailey
18.  passwOrd
19.  shadow
20.  123123

மேலே உள்ள இந்த 20 கடவுச்சொல்களைத் தான் உலகில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தக் கடவுச்சொல் களை நீங்கள் வைத்து இருந்தால் தயவு செய்து மாற்றிவிடுங்கள்.  இணையத் திருடர்கள் சுலபமாக உங்களின் கடவுச்சொல்லைக் கண்டறிய முடியும்.

இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி அவர்களின் கணக்குகளைப் பாதுகாக்க உதவி செய்யுங்கள்.

22 நவம்பர் 2011

லிம் லியான் கியோக்

(இந்தக் கட்டுரை தமிழ் இணையக் கலைக் கள்ஞ்சியமான விக்கிப்பீடியாவில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதன் முகவரி: http://ta.wikipedia.org/wiki/லிம்_லியான்_கியோக்)

தமிழ்மொழி தாய்மொழி இல்லை என்று சொல்லும் தமிழர்கள் வாழும் இந்த உலகில், அந்தத் தமிழ்மொழிக்காக ஒரு மலேசியச் சீனர் உண்ணாவிரதம் இருந்து தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பு செய்து இருக்கிறார் என்பது உலகத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் அதிசயமான செய்தி.


இன மொழி போராட்டவாதி லிம் லியான் கியோக்

லிம் லியான் கியோக் (Lim Lian Geok) மலேசியாவைச் சேர்ந்த ஒரு சமூக நீதி செயல்பாட்டாளர். சமூக நீதிக்கும், இன ஒற்றுமைக்கும் போராடியவர். அவர் ஒரு சீனராக இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். அந்தச் சமயத்தில் எந்த ஒரு தமிழரும் அந்த உரிமைப் போராட்டங்களுக்கு முன் வரவில்லை. ஆனால், துன் சம்பந்தன் அவர்கள் மறைமுகமாகப் பொருளுதவிகள் செய்து உள்ளார்.

சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை மலேசியா அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்.

லிம் லியான் கியோக் நூல் வெளியீட்டு விழாவில்
மலேசியத் தமிழறிஞர் ஆ.சோதிநாதன் அவர்கள்

சீன, தமிழ் மொழிகள் மலேசியாவில் அதிகாரப் பூர்வமான மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர். அதனால், 1961 ஆம் ஆண்டு அவருடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. அவருடைய ஆசிரியர் தொழிலும் பறிக்கப் பட்டது.

லிம் லியான் கியோக், தான் வாழ்ந்த அந்த மலேசிய நாட்டிலேயே நாடற்றவராக இறந்து போனார்.

லிம் லியான் கியோக் இறந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள சீனர்களும், தமிழர்களும் அவருக்கு 'இறப்பிற்குப் பின் குடியுரிமை' வழங்கிச் சிறப்பிக்கப் பட வேண்டும் எனறு உணர்ச்சிக் குரல்களை உயர்த்தி வருகின்றனர். அது தொடர்பாக, மலேசியப் பேரரசரிடம் மகஜர்கள் வழங்கப் பட்டுள்ளன.

லிம் லியான் கியோக் 1901 ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி யோங் சுன் , பூஜியான் சீனாவில் பிறந்தவர். தன் முயற்சியால் கல்வி கற்ற பின்னர், 1930-களில் மலாயாவிற்கு வந்தார். ஆசிரியர் பணியில் ஆர்வமாகி, அந்தச் சேவையில் தன்னை முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொண்டார்.

மலேசியா, பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை பெற்ற போது கல்வி சட்டங்கள் சீரமைக்கப் பட்டன. அந்தச் சீரமைப்புகள் சீன, தமிழ் தாய் மொழிகளுக்குப் பாதகமாக இருந்தன. கோலாலம்பூர் ஆசிரியர் சங்கத்துடன் தாய்மொழிக் கல்விக்கான உரிமைகளைப் பற்றி பேசினார்.

பின்னர், 1955-இல் சீன, இந்திய இனங்களின் உரிமைகள் குறித்து பிரதமர் துங்குவுடன் நடந்த ‘மலாக்கா பேச்சில்’ சீனர் அமைப்புகளுக்குத் தலைமை தாங்கியவர் அவர்.

பிறகு, 1956 ரசாக் திட்டத்தின் போதும், 1961 ஆம் ஆண்டு ரஹ்மான் திட்டம் அமல் படுத்தப் பட்ட போது தாய் மொழிகளின் கல்விக்கு நேர்ந்த பின்னடைவுகளைச் சரி செய்யச் சொல்லி அரசைத் தொடர்ந்து வலியுறுத்தினார். இதன் காரணமாக அவரது குடியுரிமையை அன்றைய பிரித்தானிய அரசு தடை செய்தது.

இத்தனைக்கும் லிம் மலாயா நாட்டில் சீன இனம் மற்ற இனங்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டுமென விரும்பியவர். அவரது எதிர்ப்புகளைக் கூட சாத்வீகமான முறையில் முன் வைத்தவர் அவர்.

1961-இல் குடியுரிமையும் பணியுரிமமும் பறிக்கப்பட்ட பிறகு பலர் உதவ முன்வந்தனர். ஆனால், அவர் கோலாலம்பூரில் இருந்த சீனர் தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை செய்தார். மிக எளிமையாக வாழ்ந்தார்.

1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாத 18 ஆம் இதயம் பாதிக்கப் பட்டு தேதி இறந்து போனார். அவர் இறக்கும் வரை நாடற்றவராகவே வாழ்ந்தார்.

மலேசியாவில் இதுவரை நடந்த இறுதி ஊர்வலங்களில் லிம் லியான் கியோக்கிற்குத் தான்  ஆகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது. மலேசியச் சீனர்களின் ஆத்மா என்று சீனப்பள்ளி ஆசிரியர்கள் புகழாரம் செய்கின்றனர்.

ஆனால், எந்த ஒரு மனிதரின் போராட்டத்தினால், தமிழ் சீன மொழிப் பள்ளிகள் உயிர் பெற்று உலா வருகின்றனவோ, அதே அந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் இப்போதைய இளம் தமிழர்கள், லிம் லியான் கியோக் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.

அதைவிட அவரைப் பற்றி தெரிந்து கொள்வதில் அக்கறை இல்லை என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும்.

20 நவம்பர் 2011

கணினியும் நீங்களும் – 121

அம்மணி சுப்பிரமணியம்  ammanee@ymail.com
கே: உலகத்தின் மக்கள் தொகை 7 பில்லியனை இன்னும் சில வாரங்களில் தொட்டுவிடும் என்று சொல்கிறார்கள். உங்கள் இணையம் என்ன சொல்கிறது?


ப: 1960-இல் உலக மக்கள் தொகை 3.5 பில்லியனாக இருந்தது.  ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகி விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் ஏழு பில்லியனைத் தொட்டு விடும் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டு கட்டுப்படி ஆகுமா. இப்போதே பல ஏழை நாடுகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன. அதை விடுங்கள். உங்களுக்கு ஓர் அதிசயமான நிரலியைத் தருகிறேன்.

நம்முடைய மனித இனம்  தோன்றிய காலத்தில் இருந்து நீங்கள் எத்தனையாவது மனிதராகப் பிறந்து இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஓர் இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இதை லண்டன் பி.பி.சி. வானொலி நிலையம் உருவாக்கி இருக்கிறது. அதில் உங்களுடைய பிறந்த தேதியைக் கொடுத்தால் போதும். நீங்கள் இந்த உலகில் எத்தனையாவது மனிதராகப் பிறந்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுகிறது. அது மட்டும் இல்லை. உலகில் இதுவரை வாழ்ந்த மனிதர்களில்  நீங்கள் எத்தனையாவது மனிதராக வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் சொல்லி விடுகிறது.  நல்ல ஓர் அருமையான நிரலி.

அதன் முகவரி: http://www.bbc.co.uk/news/world-15391515.
இந்த இணையத் தளம் Global Footprint Network எனும் இணையத் தளத்துடன் இணைந்து செயல் படுகிறது.

என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். இப்போது இந்த உலகில் வாழும் மனிதர்களில் நான் 2,478,881,987 ஆவதாகப் பிறந்தவன் என்று சொல்கிறது. இதுவரை பூமியில் வாழ்ந்தவர்களில் நான் 75,484,479,557 ஆகப் பிறந்த மனிதன் என்றும் சொல்கிறது.

நம்முடைய பூமியில் வாழ்ந்த அந்த மனிதர்களில் அசோகர், அலெக்ஸாண்டர், ஜெங்கிஸ்கான், நெப்போலியன், மகாத்மா, அன்னை திரேசா போன்ற மாமனிதர்களுடன் மலாக்கா பரமேஸ்வராவும் இருக்கிறார். கடாரம் கொண்ட ராஜா ராஜா சோழனும் இருக்கிறார். அதில் நானும் நீங்களும் இருக்கிறோம். மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கின்ரது. கணினி கணக்குப் பண்ணிச் சொல்லுவதை நம்பித் தானே ஆக வேண்டி உள்ளது. எதற்கும் நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன்.


அசோக் முகிலன்
கே: சென்ற வாரத்திய ‘கணினியும் நீங்களும்பகுதியில் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் காஞ்சிபுர காஞ்சி ஆசிரமத்திற்குப் போய் புத்த மதத்தைத் தழுவியதாக எழுதி இருந்தீர்கள். ஆனால், உண்மையில் முதலில் அவர் இந்து சமயத்தைத் தழுவினார் என்பதைப் பற்றி எந்தத் தகவலையும் தரவில்லை. அவர் அமெரிக்காவில் படிக்கும் போது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு உணவிற்காக ஹரே கிருஷ்ணா ஆசிரமத்திற்கு ஏழு மைல் நடந்தே போய் இருக்கிறார் என்பதையும் நீங்கள் எழுதவில்லை.

ப: தவற்றைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. யானைக்கும் அடி சறுக்கும் தெரியும் இல்லையா. என்ன செய்வது. வழுக்கி விழுந்து விட்டது. தூக்கி விட்டதற்கு மறுபடியும் நன்றிகள். இன்னொரு விஷயம். ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் காஞ்சிபுர காஞ்சி ஆசிரமத்தில் இந்து சமயத்தைத் தழுவியது உண்மை. பின்னர், அமெரிக்கா திரும்பிய போது புத்த மதத்தைத் தழுவி இருந்தார் என்பதும் உண்மை. ஒரு சில நாட்கள் இந்து சமயத்தில் ஐக்கியமாகி இருந்தார். 

இந்த இடத்தில் தான் குழப்பம் வந்தது. அதனால், ஒட்டு மொத்தமாக அவரைப் புத்து சமயத்தவர் என்று எழுதி விட்டேன். தம்பி அசோக்கு... இப்படி எல்லாம் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு படிப்பீர்கள் என்று தெரியாமல் போய் விட்டது ஐயா. இனிமேல் பார்த்துப் பதனமாய் எழுத முயற்சி செய்கிறேன்.


சேகரன் சுபரத்தினம்  segaran_vasan@gmail.com
கே: பேஸ்புக் போல வேறு இணையத் தளங்கள் உள்ளனவா?
ப: ஒரு முப்பது நாற்பது சமூகத் தளங்கள் உள்ளன. அவற்றில் சில பிரபலமான தளங்களின் பெயர்களைத் தருகிறேன். Bebo, Flickr, Orkut, Mosoto, Wallop, Mashable, Myspace, Linkedin,  Youtube,  Tagged,  Xing,  Living Social போன்றவை நம்பகரமான தளங்கள். இவற்றில் என்னுடைய தேர்வு : ஆர்க்குட், யூ டியுப்.



ராஜ் பாய்  rajboy42@yahoo.com
கே: Microsoft Excel இல் IF  எனும் கட்டளையை எப்படி பயன்படுத்துவது? பலருக்கு சரியாகப் புரியவில்லை. அதைப் பயன்படுத்துவது சிரமம் என்று சிலர் சொல்கிறார்கள்.


ப: பொதுவாக, Microsoft Office இல் Excel என்பது மிகவும்  பயன் தரும் நிரலி ஆகும். ஆனால் இந்த எக்சலில் நூற்றுக்கணக்கான Functions எனும் செயலாற்றிகள் உள்ளன.  இந்தச் செயலாற்றிகளைச் சூத்திரங்கள் என்று அழைக்கலாம். இந்தச் சூத்திரங்களை முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு. எக்சலை வைத்துக் கொண்டு ஒரு சின்ன மினிமார்க்கெட்டின் கணக்கு வழக்குகளைச் சரியாகச் செய்து விட முடியும். IF  எனும் கட்டளை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of Ifcondition)

=if(condition, value if true, value if false)

Condition என்பதில் நமக்குத் தேவையான கட்டளைகளைக் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கும் கட்டளை சரியாக இருந்தால் சரியான மதிப்பு வரும். தவறாக இருந்தால் தவறான மதிப்பு வரும்.


ஒரு சின்ன எடுத்துக்காட்டு. ஒருவருடைய வயது 17 க்கும் மேல் இருந்தால் அவர் மலேசியாவில் கார் ஓட்டத் தகுதி பெற்றவர். இல்லை என்றால் கார் ஓட்டத் தகுதி இல்லாதவர். இதை எப்படி எக்சலில் கட்டளை பிறபிப்பது.

=if(age>18,"Eligible to drive","No eligible")
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>18,"Eligible to drive", "No eligible")

2. சரி, ஓர் அடகுக் கடையில் வட்டி வசூல் செய்யப் படுவதை எப்படி எக்சலில் குறிப்பிடுவது. பொதுவாக, மலேசியாவில் 100 ரிங்கிட்டிற்கு மேல் இருந்தால் இரண்டு விழுக்காடு வட்டி.  100 ரிங்கிட்டிற்கு கீழ் இருந்தால் 2.5 விழுக்காடு வட்டி. இது ஓர் எடுத்துக்காட்டு தான்.  இதை எப்படி IF கட்டளையில் செயல்படுத்துவது

=if(amount>100, amount*2, amount*2.5)
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>100,A1*2,A1*2.5)
அடுத்து அடுத்து வரும் பகுதிகளில் இதைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும்