28 டிசம்பர் 2011

கணினியும் நீங்களும் – 125


கயல்விழி குணசேகரன் yalvil_24@yahoo.com
கே: நாம் கணினியில் தட்டச்சு செய்வதைப் படிக்கும் நிரலி இருக்கிறதா. படிக்கும் சிறு குழந்தைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.


ப: நல்ல கேள்வி. குழந்தைகள் தட்டச்சு செய்வதைப் படிக்கும் ஒரு நிரலி இருக்கிறது. அதன் பெயர் Hear PC.  இது ஒரு சின்ன நிரலி. நாம் தட்டச்சு செய்ததை இந்த நிரலி படித்துக் காண்பிக்கும். அதன் வழியாக சரியான உச்சரிப்பை நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனைப் பதிவிறக்கம் செய்ய

http://www.4shared.com/file/fBpmraJ1/installhearpc.html? எனும் இடத்திற்குச் செல்லவும். Muat Turun என்பதைச் சொடுக்கி விடவும் அதில் உள்ள Speak Text  என்பதைச் சொடுக்கி விடுங்கள். நீங்கள் தட்டச்சு செய்தது ஒலிபரப்பாகும். அதுபோல் இதில் உள்ள Display Text தட்டச்சு செய்தால் நீங்கள் தட்டச்சு செய்தது தனியாகக் கணினித் திரையில் காண்பிக்கப்படும்.  பயன்படுத்திப் பாருங்கள்.

கே: சில இளம்பெண்கள் மற்றவர்களிடம் கொஞ்சம் பழகியதும் அவர்களுடைய கைப்பேசி எண்களைக் கொடுத்து விடுகின்றனர். கடைசியில் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு அவதிப் படுகின்றார்கள். என்ன சொல்லியும் திருந்திய பாடில்லை. அவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

ப: நான் என்ன அறிவுரை சொல்ல வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாகக் கிளிப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி சொல்லி வருகிறேன். சிலர் கேட்கிறார்கள். ஒரு சிலர் என்னைப் பார்த்து ஒரு மாதிரி ‘லுக்கும் விடுகிறார்கள். பட்ட பிறகும் புத்தி வரமாட்டேன் என்கிறதே.  நெருப்பு சுடும் என்று சொல்லிப் பாருங்கள்.

அது என்ன சுடும்... எப்படி சுடும்... சுட்டுத்தான் பார்க்கட்டுமே என்று
எல்லாம் பிளேட்டையே திருப்பி போடுகிறார்கள். சுட்ட பிறகு ஐயோ சுட்டு புடுச்சே...  ஐயோ சுட்டு புடுச்சே... என்று ஒரே ஒப்பாரி. இதில் ஆண்-பெண் என்று வேறுபாடு எதுவும் இல்லை.

இப்படி எழுதுவதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். எல்லோரையும் சொல்லவில்லை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் கைப்பேசி பேச்சு என்பது ஒரு பேச்சாகவே இருக்கட்டும். அதில் போய் குடும்பம் நடத்தக் கூடாது. ரொம்பவும் தப்பு. உங்களுக்கு என்று வீடு வாசல் இருக்கிறது. தயவு செய்து கைப்பேசி பேச்சை ஒரு பொழுதுபோக்காக மாற்ற வேண்டாம்.

இன்னும் ஒரு வேதனையான செய்தி. எனக்குத் தெரிந்த ஒரு பெண் இருக்கிறார். ஊர் பேர் வேண்டாம். அவருக்கு சோறு, தண்ணி வேண்டாம். கைப்பேசி மட்டும் இருந்தால் போதும்.  என்ன செய்வது. அதைக் கட்டிப் பிடித்து கசக்கிப் பிழிந்து கஞ்சி காய்ச்ச வேண்டும்.

பாவம் அந்தக் கைப்பேசி. போன பிறப்பில் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது. சொல்லுங்கள். என் மீது கோபப்பட வேண்டாம். நான் சொல்வதைத்
தயவு செய்து கேளுங்கள். வயதில் மூத்தவன் என்பதால் சில அறிவுரைகளைச் சொல்ல வேண்டியது என் கடமை.

1. அவசியமின்றி யாருக்கும் கைப்பேசி எண்களைக் கொடுக்காதீர்கள்.
2. பொது இடங்களில் நீட்டப்படும் வருகைப் பதிவேடுகளில் உங்கள் கணவர் அல்லது தந்தையின் கைப்பேசி எண்களைப் பதிவு செய்யுங்கள்.
3. அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்கவும். அழைப்பை எடுத்து ‘Wrong Number' என்று சொன்னாலும் ஆபத்துதான்.
4. கடலைபோடும் ஆசாமிகளை கறாராகத் தவிர்த்து விடுங்கள்.
5. நன்றாகப் பேசுபவர் எல்லாம் நல்லவர் என நம்பாதீர்கள். இனிக்க இனிக்கப் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்களும் அல்ல. கண்டிப்பாகப் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களும் அல்ல.
6. சத்தியம் செய்பவர்களை நம்பவே வேண்டாம். கடைசியில் காரியத்தைச் சாதித்துக் கொண்டு கம்பி நீட்டுவதற்குத் தான் அத்தனை ஆயிரம் சத்தியங்கள். கடைசியில் அவதிப்படுவது நீங்கள் தான்.
7. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் ஆக்கப் பூர்வமான காரியங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக, சீரியலில் இறங்கி சீரியஸாக வேண்டாம். இவை தான் நம்முடைய தாழ்மையான அறிவுரைகள். போதுமா இன்னும் வேண்டுமா!  இதற்கு மேலும் அறிவுரை சொல்ல நமக்கு தெம்பு இல்லை.


கே: ஐயா, நான் ஒரு எஸ்.பி.எம். மாணவன். தொல்காப்பியம் தொடர்பான நூல் எனக்குத் தேவைப்படுகிறது. இணையத்தில் எங்கே கிடைக்கும். இலவசமாகக் கிடைக்குமா?


தமிழ் மோகன் tamilanmohan@ymail.com

கே: ‘இணையம்எனும் கணினிக் கலைச்சொல்லை உருவாக்கியவர் ஒரு மலேசியர் என்று கேள்விபட்டேன். இது எந்த அளவிற்கு உண்மை?
ப: நீங்கள் கேள்வி பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. அவர் 1998ஆம் ஆண்டில் இருந்து, பல கணினி கலைச்சொற்களை உருவாக்கித் தந்துள்ளார். ‘இணையம்எனும் சொல்லை மட்டும் அல்ல; செயலர், நினைவி, நிரலி, அடிப்படைச் செயலி போன்ற பல நல்ல கலைச்சொற்களை உருவாக்கித் தந்தவர்.

அவர் வேறு யாரும் அல்ல. மலேசியாவில் முத்திரை பதித்த தமிழ் எழுத்தாளர் திரு.இராஜகுமாரன். அவருடைய தமிழ்ச் சேவை உலகளாவிய நிலையில் மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கின்றது.

(வாசகர்களுக்கு ஓர் அன்பான் வேண்டுகோள். என்னுடைய கைப்பேசிக்கு அழைக்கும் போது அர்த்தமுள்ள ஆரோக்கியமான கேள்விகளைக் கேளுங்கள். அண்மையில் ஒருவர் என்னை அழைத்தார்.

கே: கேள்வி கேட்கலாமா?
ப: கேளுங்கள்
கே: நிலாவில் யார் முதலில் கால் வைத்தது?
ப: இது கணினி கேள்வி இல்லையே?
கே: நீங்கதான் கேள்வி கேட்க சொன்னீங்க?
ப: நீல் ஆர்ம்ஸ்டோங்
கே: வலது காலை முதலில் வைத்தாரா? இடது காலை வைத்தாரா?
ப: வலது காலை
கே: நீங்க பார்த்தீங்களா?
ப: தம்பி, நான் கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். பிறகு அழையுங்கள்
கே: நான் லாரி ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்;

பின்னர், நான் கைப்பேசியை வைத்துவிட்டேன். இரண்டு மூன்று முறை அழைத்தும் பதில் சொல்லவில்லை. இந்த மாதிரி குண்டக்க மண்டக்க மாதிரி கேள்விகள் கேட்கலாமா. சொல்லுங்கள்.

அன்பான கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில்கள் கிடைக்கும். தயவு செய்து கைப்பேசியை நல்லதிற்குப் பயன்படுத்துவோம். நன்மையைப் பெறுவோம். கைப்பேசி அழைப்புகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.)

25 டிசம்பர் 2011

இந்த வார ‘கணினியும் நீங்களும்’ கேள்வி பதில்

இந்த வார ‘கணினியும் நீங்களும்’ கேள்வி பதிலை விரைவில் பிரசுரிக்க முயற்சி செய்கிறேன். வெளியூரில் இருப்பதால் உடனடியாகப் பிரசுரிக்க முடியவில்லை. தாமதத்திற்கு வருத்தங்கள்.

19 டிசம்பர் 2011

கணினியும் நீங்களும் – 124


திருமதி.அமுதாதேவி, ரொம்பின், நெகிரி செம்பிலான் (ஊர் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது)
கே: ஐயா, உங்களுடைய உதவி எனக்குத் தேவைப்படுகிறது. நான் ஒரு சீனரின் பிலாஸ்டிக் நிறுவனத்தில் கிராணியாக வேலை செய்கிறேன். என் கம்பெனிக்கு வந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், வாகனங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் என் கணினியில் சேமித்து வைத்து இருந்தேன். இன்று காலை கணினியைத் திறக்கும் போது அவை அழிக்கப்பட்டு விட்டன.

Recycle Bin
எனும் இடத்திலும் இல்லை. சுத்தமாகக் காலியாக இருக்கிறது. ஒரு சீனர் கம்பெனியில் ஒரு தமிழ்ப்பெண் கிராணி வேலை செய்வது பலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், எனக்குத் தொல்லைகள் கொடுப்பதற்காக இப்படி செய்கிறார்கள். இந்தத் தடவை என் யு.எஸ்.பியிலும் அந்த ஆவணங்களைச் சேமித்து வைக்கவில்லை.

என் முதலாளி எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்து இருக்கிறார். அதற்குப் பிறகு என்னை வேலையில் இருந்து நீக்கினாலும் நீக்கிவிடலாம். எனக்கு மூன்று குழந்தைகள். என் கணவருக்கு போன வருடம் இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் அவருக்கு இப்போது வேலை இல்லை. நான் சம்பாதித்து என் குழந்தைகளையும் என் கணவரையும் கடந்த ஒரு வருடமாகப் பார்த்து கொள்கிறேன்.

கணினிக் கடைகளில் கேட்டால்
2000
வெள்ளி பணம் கேட்கிறார்கள். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. அழிந்து போன ஆவணங்களை மீட்டுக் கொடுங்கள். இல்லை என்றால் என் வேலை போய் விடும். இது ஓர் அபலையின் கண்ணீர்க் கதை. உங்களைத் தெய்வமாக நினைக்கிறேன். உதவி செய்யுங்கள் ஐயா?

ப: அன்புள்ள சகோதரி, நீங்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்த அன்றே அந்தத் தகவல் மீட்பு நிரலியை மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு அனுப்பி இருந்தேன். தகவல்களை மீட்டுவிட்டதாக அழைத்துச் சொன்னீர்கள். உங்கள் வேலையும் பாதுகாக்கப் பட்டது என்றும் சொல்லி அழுதீர்கள்.

தயவு செய்து அழுவதை நிறுத்துங்கள் அதுதான் நீங்கள் எனக்கு செய்யக் கூடிய ஒரு பெரிய உபகாரம்.  எவ்வளவு பணம் வேண்டும் என்றும் கேட்டு இருந்தீர்கள். உங்கள் வேலை நிலைத்துவிட்டது. உங்கள் குடும்பம் இப்போது சந்தோஷமாக இருக்கிறது.

அதுவே நம்முடைய வாசகர்களுக்கும் எனக்கும் நீங்கள் தரும் பணம்
, பொருள், சன்மானம் எல்லாம். உங்கள் கணவர் நலமுடன் மீண்டும் வேலைக்குச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம்.

சில நேரங்களில் கணினியில் பணிபுரியும் போது சில முக்கியமான கோப்புகளைத் தவறுதலாக அழித்து விடுவோம். பிறகுதான அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும். பின்னர் கவலைபடுவோம்.  கீழே காணும் இடத்தில் இழந்த கோப்புகளை மீட்டுக் கொடுக்கும் நிரலி இருக்கிறது.

அதன் முகவரி:
http://www.4shared.com/file/89hymkuu/WinMend-Data-Recovery.html? அந்த இடத்தில் Muat Turun என்பதைச் சொடுக்கி விட்டு பின்னர் உங்கள் கணினியில் அந்த நிரலியை நிறுவிக் கொள்ளுங்கள். புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என அனைத்தையும் மீட்டுவிடலாம். பயன்படுத்திப் பாருங்கள். உங்களுடைய கருத்துக்களையும் சொல்லுங்கள்.

சதா.சாமிநாதன், சிலிம் ரிவர், பேராக்
கே: USB Thumb Drive, Pen Drive, Flash Drive என்பதைத் தாங்கள் விரலி என்று அழைக்கிறீர்கள். விரலி என்பது விரலி மஞ்சளைக் குறிப்பதாகும். தயவுசெய்து தவறான கலைச்சொல்லை உருவாக்கி தமிழ்மொழியைச் சிதைக்க வேண்டாம்?


ப: நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் அப்புறம் தமிழில் எந்த ஒரு புதிய கலைச்சொல்லையும் உருவாக்க முடியாது சகோதரரே! விரலி மஞ்சள் என்று இருப்பது உண்மை. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்துகிறோமே மஞ்சள், அதற்குப் பெயர்தான் விரலி மஞ்சள்.


விரலைப் போல இருப்பதால் அதற்கு விரலி மஞ்சள் என்று பெயர் வந்தது.  சரி. அதற்குத் தான் ஏற்கனவே மஞ்சள் என்று பெயர் இருக்கிறதே, அப்புறம் ஏன் விரலி என்று ஒரு முன்மொழியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் என்றோ மஞ்சா என்றோ எப்படியாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே.

அது எல்லாம் சரி. நீங்கள் என்ன, கறிக்குப் போடும் மஞ்சளை விரலி மஞ்சள் என்றா சொல்கிறீர்கள். சொல்லியல் படி  விரல்+இயக்கி என்பதை விரலி என்று அழைக்கலாம். தவறு இல்லை. இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவே அந்த யு.எஸ்.பி. சாதனத்தை
விரலி ஏற்றுக் கொண்டு விட்டது. பயன்படுத்தியும் வருகிறது.

உலகத்தில் உள்ள தமிழர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அப்புறம் ஏன் இந்தப் புகைச்சல்.  எதையும் ‘பாசிட்டிவாக
எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் ஒன்று. தாசா கத்தியைப் பிடித்துக் கொண்டு யாரும் பாசா புலியைப் பிடிக்கப் போக மாட்டார்கள்.

தமிழ்வாணன் thamilvanan@yahoo.com

கே: உலகம் முழுமையும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் Pen Drive எனும் விரலியைக் கண்டுபிடித்தவர் ஒரு மலேசியர் என்று கேள்விப் பட்டேன. உண்மையா சார். அந்த அளவிற்கு மலேசியாவில் கணினி மேதைகள் உள்ளனரா?

ப: Pen Drive எனும் விரலியைக் கண்டுபிடித்தவர் ஒரு மலேசியர் என்பது உண்மை. அவருடைய பெயர் புவா கெயின் செங். வயது 36. சிலாங்கூர், செக்கிஞ்சானில் பிறந்தவர். அங்குள்ள சீனப் பள்ளியில் படித்தவர். மேல் படிப்பிற்காக உள்ளூர் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பம் செய்தார்.
Phua Kein Seng

தகுதி இல்லை என்று நிராகரிக்கப் பட்டார். மனம் வெறுத்துப் போய் தைவானுக்குச் சென்று பட்டப் படிப்பை மேற்கொண்டார். தன்னுடைய அறிவியல் திறமையைப் பயன்படுத்தி USB Drive SoC எனும் விரலியை 2001ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். உலகம் முழுமையும் கோடிக்கணக்கான விரலிகள் விற்பனையாகி விட்டன.

இப்போது அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் மலேசியப் பல்கலைக்கழகங்களினால் நிராகரிக்கப் பட்ட ஒரு சாதாரண மாணவர். ஓர் அறிவுக் களஞ்சியத்தை வேறு ஒரு நாட்டிற்கு நாம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம். இவர் மூலமாக தைவான் நாடு இதுவரை 90 பில்லியன் ரிங்கிட் சம்பாதித்து விட்டது.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு 25 பினாங்கு பாலங்களைக் கட்டிவிடலாம். 7 பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைக் உயர்த்தி விடலாம். இருந்தாலும் பரவாயில்லை.

ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். காபி, தேநீரை வடிகட்டலாம். ஆனால், மனித மூளையை மட்டும் வடிகட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பது ரொம்பவும் தப்புங்க ஐயா. இது என் கருத்து.  அவரைப் பற்றிய செய்தி கீழ்க்காணும் இணைய முகவரியில் இருக்கின்றது:

15 டிசம்பர் 2011

சாகாவரம் பெற்ற துன் சம்பந்தன்


மேல்விவரங்களுக்கு: http://ta.wikipedia.org/wiki/வீ._தி._சம்பந்தன்

மலேசிய அரசியலில் கோடீஸ்வரராக வந்தவர். அரசியலை விட்டுப் போகும் போது ஏழையாகி, ஒரு வேட்டி ஜிப்பாவுடன் கண்ணீர்க் கடலில் மூழ்கிப் போனவர். தன்னுடைய பணம், பொருள், செல்வம், கோடிக்கணக்கான குடும்பச் சொத்துகள் அனைத்தையும் மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்த ஒரு பெரிய சகாப்தம்.  மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் அவரை சாகும்வரை  மறக்க மாட்டோம்.

மலேசியாவின் காமராசர்
உலகத் தமிழர்களால் போற்றப் படும் ஒரு சகாப்தம்.
சாகாவரம் பெற்ற ஒரு சாம்ராஜயம்.

துன் வீராசாமி திருஞான சம்பந்தன் அவர்கள், மலேசிய இந்திய காங்கிரசின் 5-ஆவது தலைவர். மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில் மூத்த அமைச்சர் பதவிகளை அலங்கரித்தவர். மலேசிய இந்தியச் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர்.

இந்தியாவின் ’பாரத ரத்னா’ விருதிற்கு இணையான மலேசியாவின் ஆக உயரிய ’துன்’ விருதைப் பெற்ற முதல் தமிழர். சுத்தமான கைகளுடன் வந்தவர், சுத்தமான கைகளுடன் மறைந்தும் போனார்.

அரசியலில் கோடீஸ்வரராக நுழைந்து ஏழையாகி மறைந்து போனவர். தன்னுடைய பணம், பொருள், செல்வம், குடும்பச் சொத்துகள் அனைத்தையும் மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்த மாமனிதர். மலேசியாவின் காமராசர் என்று மலேசியத் தமிழர்களால் புகழப் படுகிறார்.

காலத்தால் அழிக்க முடியாத அரிய பெரிய காரியங்களைச் செய்து முடித்து, மலேசிய இந்தியர்களின் நெஞ்சங்களில் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மாபெரும் மனிதர்.

மலாயா சுதந்திரம் அடைவதற்கு இந்திய மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த மலேசியத் தலைவர்களில் துன் சம்பந்தனும் ஒருவர்.

பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் வீராசாமி - செங்கம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது புதல்வராக துன் வீ.தி.சம்பந்தன் பிறந்தார். துன் சம்பந்தனின் தந்தையார் வீராசாமி, 1896-இல் மலாயா வந்தார். குறுகிய காலத்தில் சில ரப்பர் தோட்டங்களுக்கு உரிமையாளர் ஆனார். வீராசாமியின் உடன் பிறப்புகள்: வி.மீனாட்சி சுந்தரம், வி.கிருஷ்ணன், வி.சரஸ்வதி.

கோலாகங்சாரில் உள்ள கிளிபர்ட் பள்ளியில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் இந்தியாவில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் இளநிலை பட்டம் பெற்றார். நாடு திரும்பியதும் தன் குடும்பத்தின் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார்.

இளம் வயதில் தலைவர் பதவி இளவயதில் பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும் பயிலும் காலத்தில் சமூக நடவடிக்கைகளில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபாடு காட்டி வந்தார்.

துன் சம்பந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்திய தேசிய இயக்கத்தின் கொளகைகளினால் கவரப் பட்டார்.

பிரித்தானியர்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களிலும் துன் சம்பந்தன் கலந்து கொண்டார். அந்த வகையில் ஒரு போராட்டத்தின் போது காயமும் அடைந்து இருக்கிறார். சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு போன்றோரின் அரசியல் கொளகைகள் அவருக்குப் பிடித்துப் போயின.

அதனால், இந்திய தேசிய காங்கிரஸின் இளைஞர் அணியில் இணைந்து தீவிரமாகச் செயல் பட்டார். அப்பொழுது தான் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட்டின் நட்பு கிடைத்தது.

விஜய லட்சுமி பண்டிட் மலாயா வருகை

1942 ஆம் ஆண்டு அவருடைய தந்தையார் மலாயாவில் இறந்த பொழுது துன் சம்பந்தனால் திரும்பி வர முடியவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக் கட்டம் அது. 1946-இல் தான் அவரால் திரும்பி மலாயா வர முடிந்தது.

தாயகம் திரும்பியதும் குடும்பத்தாரின் ரப்பர் தோட்ட நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார். பின்னர், 1954-இல் சுங்கை சிப்புட்டில் மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியை நிறுவினார். அப்பள்ளியைத் திறந்து வைக்க விஜய லட்சுமி பண்டிட்டைக் கேட்டுக் கொண்டார்.

அவரும் மலாயாவுக்கு வருகை புரிந்து மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியைத் திறந்து வைத்தார். மலாயாவில் பல இடங்களில் எழுச்சியுரைகள் ஆற்றிச் சென்றார்.

அவருடைய தலைமைத் துவத்தை வெளிப் படுத்தும் வகையில் தனது 36-ஆவது வயதில் மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் பதவியை ஏற்றார். ம.இ.கா உருவாக்கப் பட்டு ஒன்பது ஆண்டுகளில் துன் சம்பந்தன் தலைவரானார். அப்பொழுது 35 கிளைகள் மட்டுமே ம.இ.காவில் இருந்தன. அவர் 18 ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்து விலகும் போது ம.இ.காவில் 300 கிளைகள் இருந்தன.

அரசியல் வாழ்க்கை

1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்திய காங்கிரசைக் (MIC) கூட்டணி கட்சியில் (Parti Perikatan) இணைத்தார். அம்னோ (UMNO), மலேசிய சீன காங்கிரஸ் (MCA) மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியே இந்த கட்சியாகும். மலாயா சுதந்திரம் அடைவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன், மத்திய கூட்டரசுப் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

மலாயாவின் முதல் பொதுத் தேர்தல் 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது.மலாயாவில் முதலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் வீ.தி.சம்பந்தன் பேராக் மாநிலத்தில், கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தொழிலாளர் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம்

பின்னர் அவர் சுகாதார அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1959-இல் எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் தபால் அமைச்சராக பதவி வகித்தார். அவர் இறுதியாக ஏற்ற பதவி தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகும். அவருடைய ஆட்சி காலத்தில் மக்களுக்குப் பல வகையில் நன்மை பயத்துள்ளார்.

மலேசிய வரலாற்றில் முக்கிய நாளாக அமைவது சுதந்திர தினமாகும் (31 ஆகஸ்டு 1957). மலேசிய சுதந்திரம் அடைய மூன்று முக்கிய தலைவர்கள் சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களின் பிரதிநிதியாக துன் சம்பந்தன் கையொப்பம் இட்டார்.

சுவையான நிகழ்ச்சி

மலாயா கூட்டரசு சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்ற பின்னர் துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பாவுடன் சட்டமன்றக் கூட்டங்களுக்குச் சென்று வந்தார். தொழிலாளர் அமைச்சராகப் பதவிக்கு வந்தும் வேட்டி ஜிப்பா அணிவதை விட்டுக் கொடுக்கவில்லை. இது பிரித்தானிய அரச அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

1957 ஆம் ஆண்டு மலாயா விடுதலைக்கான இறுதி பேச்சுவார்த்தைகள் லண்டனில் நடைபெற்றன. அப்போது துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பா அணிந்து கொண்டு தான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். இது அங்குள்ள பிரித்தானிய உயர் அதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

வேட்டி ஜிப்பா கலாசாரம்

அதைக் கண்ட பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஒரு முடிவு எடுத்தார். துன் சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். துன் சம்பந்தனிடம் அமைதியாகச் சொல்லிப் பார்த்தார்.

துன் சம்பந்தன் கேட்பதாக இல்லை. அது மட்டும் இல்லை. லண்டனில் நடக்கும் போது துன் சம்பந்தனால் வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு நாள் லண்டனில் உள்ள பிக்காடிலியில் இருக்கும் ஆண்களுக்கான அணிகலன் கடைக்கு (Simpson’s men’s store in Piccadilly) அழைத்துச் சென்றார்.

முதலில் மறுத்த துன் சம்பந்தன் வேறு வழி இல்லாமல் புது உடைகளுக்கு சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் துன் சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரம் ஒரு முடிவிற்கு வந்தது.

அமைச்சர் பதவிகள்

    1955 - 1957: தொழிலாளர் அமைச்சர்
    1957 - 1959: சுகாதார அமைச்சர்
    1959 - 1969: பொதுப்பணி, அஞ்சல், தந்தித்துறை அமைச்சர்
    1972 - 1974: ஒற்றுமைத் துறை அமைச்சர்


பத்திரிகை உலகில்

துன் சம்பந்தன் 1960 களில் மலைநாடு தமிழ்த் தினசரியையும் ‘மலாயன் டைம்ஸ்’ ஆங்கில தினசரியையும் நடத்தினார். பத்திரிகை நடத்தியதால் குடும்பச் சொத்தில் பெரும் பகுதியை இழக்க நேரிட்டது. மலாயாவில் உள்ள இந்திய சமூகத்தினரைப் பற்றிய செய்திகளையும் ம.இ.கா பற்றிய செய்திகளையும் ஆங்கிலப் பத்திரிகைகளில் அதிகமாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்பது துன் சம்பந்தனின் விருப்பம்.

அந்த ஆர்வத்தில் பெரிய அளவில் ‘மலாயன் டைம்ஸ்’ தினசரியை நடத்தினார். பத்திரிகை நட்டத்தில் போய்க் கொண்டிருந்தாலும் ஆங்கிலப் பத்திரிகையை நடத்த வேண்டும் எனும் ஒரு பிடிவாதத்தில் துன் சம்பந்தன் தனது குடுமபச் செல்வத்தையே இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

தோட்டத் துண்டாடல்

1955 – 1965 ஆம் ஆண்டுகளில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டு முதலாளிகள் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.

அதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் வீதியில் நின்றனர். உடனடியாக அரசாங்கம் தலையிட்டு தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருப்பினும் துண்டாடல் தொடர்ந்து வந்தது. இந்தக் கட்டத்தில் ம.இ.கா.வும் களம் இறங்கியது.

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்

துன் சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று, தோட்டத் தொழிலாளர்களும் முதலாளிகள் ஆகலாம் என்று பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார். அந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இச்சங்கம் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 14-இல் தொடங்கப் பட்டது.

பின்னர், துன் சம்பந்தன் அந்த வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970 ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.

85,000 தொழிலாளர்களுக்கு வேலை

1979 ஆம் ஆண்டில் துன் சம்பந்தன் இறக்கும் போது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்திற்கு 18 ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 120 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். அவற்றில் 85,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.

துன் சம்பந்தனின் மறைவிற்குப் பின், 1980ஆம் ஆண்டில் இருந்து 1985 ஆம் ஆண்டு வரை தோ புவான் உமாசுந்தரி சம்பந்தன் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

துன் விருது

குறிப்பாக பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் ஒற்றுமையை உருவாக்க அவர் பெரிதும் பங்கு வகித்துள்ளார். தொடர்ந்து அவர் பிஜியில் உள்ள இந்தியர்களையும் பூர்வக் குடியினரையும் ஒருமைப்படுத்த பெரும் பங்காற்றியுள்ளார்.

துன் சம்பந்தன் 1966-இல் டான்ஸ்ரீ விருதும் மறு ஆண்டில் மலேசியாவின் மிக உயரிய விருதான ‘துன்’ விருதும் பேரரசரால் வழங்கிக் கௌரவிக்கப் பட்டார். மலாயா பல்கலைக்கழகம் 1971-இல் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தது.

1973-இல் வயதான காரணத்தால் அவர் மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகிய முக்கிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தமிழ் நேசன் நாளிதழின் அஞ்சலி

1979-ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி துன் சம்பந்தன் அவர்கள், தன்னுடைய 60ஆவது வயதில் இதய நோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். அரசாங்க மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு அவர் பிறந்த ஊரான சுங்கை சிப்புட்டில் நிகழ்ந்தது.

இந்திய சமுதாயத்திற்கு துன் சம்பந்தன் ஆற்றி இருக்கும் தொண்டு மகத்தானது. துன் சம்பந்தன் மறைந்த மறுநாள் தமிழ் நேசன் நாளிதழ் நீண்ட தலையங்கம் எழுதியது.

அதில் இடம்பெற்ற பகுதி:

“ இந்திய வம்சாவளியினர் ஏழைகளாக இருக்கலாம். ஆனால், கோழைகளாக வாழக் கூடாது என்பது அவர் வழங்கிய தாரக மந்திரம். துன் சம்பந்தனின் அரசியல் எதிரிகள் கூட அவரின் நேர்மைக்குத் தலை வணங்கினர். துன் சம்பந்தன் மறைவு பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டில் பாடுபட்டு உழைத்து பல இன்னல்களுக்கு உள்ளாகி வாழ்க்கை ஒளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. இந்த இழப்பு அனைவருக்குமே ஏற்கத் தயங்குகிற ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நாட்டின் சுதந்திரத்திற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்ட ஒரு வீர புருஷரை இழந்து விட்டோம். ”

துன் சம்பந்தன் சாலை

அவருடைய அரும் சேவையை நினைவு கொள்வதற்காக கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் (Brickfields) சாலைக்கு ‘துன் சம்பந்தன் சாலை’ என்று இவருடைய பெயர் சூட்டப்பட்டது.

அதே போல ஈப்போவின் பழைய நகரில் துன் சம்பந்தன் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளின் பெயர்களும் அவரின் பெயரில் இயங்கி வருகின்றன.

கோலாலம்பூர், துன் சம்பந்தன் சாலையில் உள்ள அதி விரைவு ரயில் சேவை மையத்திற்கு LRT Tun Sambanthan என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.

14 டிசம்பர் 2011

ஜான் திவி - மறக்க முடியாத மனிதர்

இந்தக் கட்டுரை இணையக் கலைகளஞ்சியமான விக்கிப்பீடியாவில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. http://ta.wikipedia.org/wiki/ஜான்_திவி

ஜான் திவி
மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் 
மறக்க முடியாத மனிதர்

ஜான் திவி, மலேசிய இந்தியர்கள் வரலாற்றில்  மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர்.

இவருடைய முழுமையான பெயர் ஜான் திவ்வியநாதன்.
(John Aloysius Thivy) பிறந்த தேதி :4 ஜூன் 1904.நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். மலேசிய இந்தியர்களின் அரசியலில் முன்னோடியாக வாழ்ந்தவர்.

இந்திய தேசிய இராணுவத்தில் தீவிரமாக ஈடுபட்டு பர்மா முன்னணியில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியுடன் இணைந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டார்.

1945 செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் சாங்கி சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். இந்தியா விடுதலை அடைந்த பிறகே அவர் விடுதலையானார். அவர் விடுதலைக்கு இந்தியப் பிரதமர் நேரு முக்கிய பங்கு வகித்தார்.

ஜான் திவி 1904 ஆம் ஆண்டு மலேசியா, பேராக், கோலாகங்சாரில் பிறந்தார். அவருடைய முழுப்பெயர் ஜான் அலோசியஸ் திவி. இவருடைய தந்தையாரின் பெயர் லூயிஸ் திவ்வியநாதன். இவர் கோலாகங்சாரில் புகையிலை, சுருட்டுத் தொழில் வியாபரம் செய்து வந்தார்.

லூயிஸ் திவ்வியநாதனின் மூத்த புதல்வர் ஜான் திவி. தன் தகப்பனாரின் பெயரான திவ்வியநாதன் என்பதைச் சுருக்கி திவி என்று வைத்துக் கொண்டார். கோலாகங்சார் கிளிபோர்ட் ஆங்கிலப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பயின்றார்.

மகாத்மா காந்தியுடன் சந்திப்பு

பின்னர், தைப்பிங் செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் இடைநிலைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டார். 


அதன் பின்னர் லண்டனுக்குச் சென்று சட்டக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினார். இந்தக் காலக் கட்டத்தில் தான் இவர் மோகன்தாஸ் காந்தியைச் சந்தித்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் ஜான் திவிக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

மலாயா திரும்பியதும் ஈப்போவில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். கிந்தா இந்தியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின் பொதுப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1940 ஆம் ஆண்டு வரையில் ஈப்போவில் வழக்கறிஞராகப் பணி புரிந்து வந்தார்.

இந்தியா தற்காலிக அரசாங்கத்தில் அமைச்சர் பதவி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மலாயாவுக்கு வந்த போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பழக்கத்தின் மூலமாக நேதாஜியின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். பிரித்தானியாருக்கு எதிராக இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். நேதாஜியின் நம்பிக்கைக்கு உரியவராக வாழ்ந்தார்.

1943 அக்டோபர் 21 ஆம் தேதி சிங்கப்பூரில் சுதந்திர இந்தியா தற்காலிக அரசாங்கம் நேதாஜியினால் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜான் திவி இடம் பெற்றார்.

அதன் பின்னர் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை முழுமையாக மேற்கொள்ளாமல் சமூக, அரசியல், பொதுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டப் பணிகளிலும் நேதாஜிக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.

இந்தக் காலக் கட்டத்தில் மலாயா, சிங்கப்பூர் இந்தியர்களிடையே அதிக செல்வாக்கு உள்ளவர்களாக நேதாஜி, ராஜ் பிகாரி போஸ், ஜான் திவி ஆகியோர் விளங்கினர்.

1945 ஆகஸ்டு 21-இல் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் சப்பானியர்கள் சரணடைந்தனர். அவர்களுடைய ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. இந்திய தேசிய இராணுவத்தின் நடவடிக்கைகளும் நிலைகுத்திப் போயின.

அதற்கு முன்னர், ஆகஸ்டு 18-இல் சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ செல்லும் வழியில் நிகழ்ந்த விமான விபத்தில் விடுதலை வீரர் நேதாஜி மரணம் அடைந்தார்.

சிங்கை சாங்கியில் சிறைவாசம்

அந்த விபத்திற்குப் பின்னர், தலைவர் இல்லாத நிலையில் இந்திய தேசிய இராணுவம் முடங்கிப் போனது. இந்திய தேசிய இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இந்திய அதிகாரிகளைப் பிரித்தானிய இராணுவம் கைது செய்து அவர்களை சிங்கப்பூர் சாங்கிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் ஜான் திவி விடுதலை செய்யப்பட்டார்.


ஜான் திவியின் விடுதலையில் இந்தியப் பிரதமர் நேருவின் நேரடியான தொடர்பு இருந்தது. நேதாஜி வளர்த்துவிட்ட தேசப் பற்று ஜான் திவியின் உடலில் கொழுந்து விட்டு எரிந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் மலாயாவுக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்கிற அவசியத்தை ஜான் திவி உணர்ந்தார்.

மலாயா இந்தியர்களுக்கு தேசிய அரசியல் அமைப்பு

மலாயாவுக்கு சுதந்திரம் கிடைக்க தன் நண்பர்களுடன் சேர்ந்து போராடுவது என்று ஜான் திவி முடிவு செய்தார். ஆகவே, மலாயா இந்தியர்களுக்கு தேசிய அளவில் ஓர் அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

அதன் விளைவாக 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்ற அகில மலாயா இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் மலாயா இந்தியர் காங்கிரஸ் தோற்றம் கண்டது. மலேசியாவில் ம.இ.கா உருவாவதற்கு இந்திய தேசிய இராணுவத் தொண்டர்களே முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் உத்வேகத்தினால் தான் மலேசிய இந்தியர்களுக்கு என்று ஒரு தனி அரசியல் கட்சி உருவானது.

இந்தச் சமயத்தில் மலாய்க்காரர்களுக்கு இந்தியர்களின் மலாயா நாட்டு விசுவாசத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மலாயா இந்தியர்கள் முழு விசுவாசத்துடன் நாட்டின் விடுதலைக்காகப் போராடுவார்கள் என்று ஜான் திவி உறுதி அளித்தார்.

ஜான் திவியின் முதல் பேருரை

நேதாஜியின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய இந்தியச் சுதந்திரக் கழகம், இந்திய தேசிய இராணுவம் போன்ற இயக்கங்களுடன் தீவிரமான தொடர்புகளைக் கொண்டிருந்த மலேசிய இந்தியவாதிகளே ம.இ.காவின் முதல் நிர்வாகக் குழுவில் பொறுப்புகளை வகித்தனர்.

ஜான் திவி ம.இ.கா தலைவர் பொறுப்பை ஏற்று முதல் பேருரை ஆற்றும் போது நேதாஜியை நினைவு கூறும் வகையில் அவருடைய உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
“ தென்கிழக்கு ஆசியாவில் வாழும் இந்தியர்கள் போர்க் காலத்தில் பல தியாகங்களைச் செய்துள்ளனர். தங்களின் வீரத்தையும் தீரத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிகளும் ஒழுங்குமுறைகளும் அவர்களைத் துணிச்சல்காரர்களாகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் மாற்றிக் காட்டியுள்ளன. அவற்றினால் நம் இந்தியர்கள் ஒற்றுமை எனும் ஓர் உயர்ந்த தத்துவப் பொக்கிஷத்தைப் பெற்றுள்ளனர். ”

இந்திய அரசாங்கம் வழங்கிய பதவி

ம.இ.கா தோற்றம் கண்ட மறு ஆண்டான 1947-இல் அதன் முதல் பேராளர் மாநாடு ஜான் திவியின் தலைமையிலேயே நடைபெற்றது. அதே ஆண்டு ஜூலை மாதம் இந்திய அரசாங்கம் அவரை மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் பிரதிநிதியாக நியமனம் செய்தது.

அந்தப் பதவி ஒரு தூதர் அந்தஸ்தைக் கொண்டதாகும். அந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஜான் திவி முதலில் தயக்கம் காட்டினார்.

இருப்பினும் ஜான் திவியின் நலன்களில் அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே 1947 ஆகஸ்டு மாதம் 3-இல் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜான் திவி பொறுப்பேற்றார்.

மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் இந்திய அரசாங்கப் பிரதிநிதியானதும் ம.இ.கா தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்வு

இந்தக் கட்டத்தில் ஜான் திவி இந்தியாவின் அரசாங்கப் பிரதிநிதியாக ஹாங்காங், வடபோர்னியோ, சரவாக், புருணை போன்ற நாடுகளுக்கும் பொறுப்பு வகித்தார்.

1950-இல் மொரிசியஸ் நாட்டிற்கு இந்தியாவின் அரசாங்க ஆணையராக அனுப்பப்பட்டார். 1952-இல் நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.

1953-இல் இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்த்தப்பட்டு, சிரியா நாட்டிற்கு இந்தியத் தூதராக அனுப்பப்பட்டார். 1955-இல் இத்தாலி நாட்டின் தூதராகப் பொறுப்பேற்றார். ஜான் திவி 1959 ஜூன் மாதம் 4 ஆம் தேதி இயற்கை எய்தினார்.