22 ஏப்ரல் 2012

மலேசிய வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசு


விக்கிபீடியாவில் இந்தப் புதினம் வெளிவந்துள்ளது. அதன் முகவரி:



மலேசிய வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசு
சிபில் கார்த்திகேசு மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரத் தமிழ்ப் பெண்மணி. பல நூறு சீனர்களின் உயிர்களை ஜப்பானியர்களிடம் இருந்து காப்பாறியவர். அவரை ஒரு வீர மங்கையாக மலேசியச் சீனர் சமுதாயம் கருதி வருகிறது.

மலேசியச் சீனர் சமுகத்தினர் இன்று வரை, சிபில் கார்த்திகேசுவை தியாகி என்றும் போற்றிப் புகழ்கின்றனர். சீனர்கள் பலர் இவருடைய பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி அவருடைய தன்னலமற்றச் சேவையை நினைவு கூறுகின்றனர்.

சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவருடைய அப்பா ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. அம்மா ஒரு தமிழர்.


1940ல் சிபில் கார்த்திகேசு இளமையாக இருக்கும் போது
சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு தாதி. சீன மொழியில் நன்கு சரளமாகப் பேசக் கூடியவர். இவர் இந்தோனேசியா சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர்.

1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ் செயிண்ட் ஜான் தேவாலயத்தில் நடந்தது.

ஆறுமுகம் கணபதி பிள்ளை என்பதன் சுருக்கமே ஏ.சி.கார்த்திகேசு ஆகும். இவர்
சிங்கப்பூர் காலாங் மருத்துவக் கல்லூரியில் படித்து 21 வயதிலேயே மருத்துவர் ஆனவர்.


1948ல் இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சை பெறும் போது
பின்னர் இருவரும் சேர்ந்து ஈப்போ பிரவுஸ்டர் சாலையில் (இப்போது ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா என்று அழைக்கப்படுகிறது) ஒரு சிறிய மருத்துவ விடுதியைத் திறந்து நடத்தி வந்தனர். அந்த மருத்துவ விடுதியில் கணவருக்கு மருத்துவப் பணி. சிபில் கார்த்திகேசுவிற்குத் தாதியர் பணி.

ஏறக்குறைய 15 ஆண்டுகள் அங்கே
தொழில் புரிந்தனர். டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு சீன சமூகத்தவரிடம் மிகவும் அன்பாகப் பழகினார். நல்ல மரியாதை கிடைத்தது. அதனால் ஈப்போ வாழ் சீனர்கள் அவரைச் செல்லமாக யூ லோய் டெ என்றும் அழைத்தனர்.


2012ல் இப்போதைய பாப்பான் பட்டணம்

1941 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படை எடுத்தனர். ஜப்பானியர்கள் ஈப்போ நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கணவனும் மனைவியும் பாப்பான் எனும் சிறு நகருக்குப் புலம் பெயர்ந்தனர்.

அங்கே புதிதாக ஒரு மருத்துவ விடுதியைத் திறந்தனர். இந்தப் பாப்பான் சிறு நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஈயச் சுரங்கத் தொழிலுக்குப் பெயர் போனது. சீனர்கள் அதிகமாக வாழும் இடம்.


1940ல் டாக்டர் கார்த்திகேசு
ஜப்பானியர்கள் மலாயாவிற்கு வந்த சில காலத்தில் டாக்டர் கார்த்திகேசு மறுபடியும் ஈப்போவிற்கு வந்து விட்டார். பழைய ஈப்போ மருத்துவ விடுதியை மறுபடியும் திறந்து நடத்தினார்.

சிபில் கார்த்திகேசு பாப்பான் பட்டணத்திலேயே தங்கி பாப்பான் மருத்துவ விடுதியைப் பார்த்துக் கொண்டார். ஏழை
எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.


1992ல் ஈப்போ பிரவுஸ்டர் சாலை 
ஜப்பானியர்கள் மலாயாவைக் கைப்பற்றிய பின்னர் கொடுங்கோல் ஆட்சி செய்தனர்.  மலாயா மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தனர்.

இலட்சக் கணக்கான மக்களை சித்ரவதையும் செய்தனர். இவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் சீனர்கள் ஆகும். இந்தியர்களைப் பார்த்தால் ‘காந்தி.. காந்தி’ என்று சத்தம் போட்டு இரைந்து கைகளைத் தூக்கிச் செல்வார்கள்.


1941 ஆம் ஆண்டு மலாயாவில் ஜப்பானியர்களின் அட்டகாசம்
இருந்தாலும் சியாம் மரண இரயில் பாதை போடுவதற்காக பல்லாயிரம் இந்தியர்களை கொண்டு சென்று அங்கு அவர்களைப் பலிக்கடா ஆக்கியது வேறு ஒரு வரலாறு.

ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் சில பல கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் Malayan People’s
Anti-Japanese Army (MPAJA) எனும் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம். இந்த இராணுவம் மலாயா நாடு முழுவதும் துளிர் விட்டிருந்தது.


1942ல் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்
பேராக் மாநிலத்தில் சுங்கை சிப்புட், தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், பாப்பான், பூசிங், கோப்பேங் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல் பட்டது.

இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தான் பின்னாளில் மலாயாக் கம்னியூஸ்டு கட்சி என்று மாறியது. மலாயாவைக் கம்னியூஸ்டு  நாடாக மாற்ற பல திட்டங்கள் போட்டது.

ஜப்பானிய ஆதிக்க எதிர்ப்புப் போராளிகள் மறைந்து இருந்து ஜப்பானியர்களைத் தாக்கி வந்தனர். அந்த மாதிரியான தாக்குதலில் பாப்பான், பூசிங் இடங்களில் இருந்த பல போராளிகள் காயம் அடைந்தனர். 


1943ல் பாப்பானில் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதி
காயம் அடைந்த போராளிகள் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதிக்கு ரகசியமாகக் கொண்டு வரப் பட்டனர். மருத்துவ விடுதிக்கு பின்புறம் ஒரு காய்கறித் தோட்டம் இருந்தது.

மருத்துவ உதவிகள் தேவைப் பட்டு அந்தப் போராளிகளைக்
கொண்டு வரும் போது அந்தக் காய்கறித் தோட்டம் அவர்களுக்கு நல்ல ஒரு மறைவிடமாக அமைந்தும் போனது.


2011ல் மருத்துவ விடுதிக்குப் பின்னால் இருக்கும் காய்கறித் தோட்டம்
அந்தப் போராளிகளுக்கு சிபில் கார்த்திகேசு இலவசமாக மருத்துவம் செய்து அனுப்பி இருக்கிறார். சுற்று வட்டார சீனர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.

அதே நேரத்தில் தன்னுடைய விடுதியில் ஒரு சின்ன சிற்றலை வானொலியையும் சிபில் கார்த்திகேசு வைத்திருந்து இருக்கிறார். பி.பி.சி வானொலிச் செய்திகளை ரகசியமாகக் கேட்டு வந்தார்.
செய்திகளை பாப்பான் மக்களுக்கு ரகசியமாகத் தெரிவித்தும் வந்தார். 1943 ஆம் ஆண்டு வரை அவ்வாறு நடந்து வந்துள்ளது. சிபில் கார்த்திகேசு செய்தவை அனைத்தும் ஜப்பானியர்களுக்கு எதிரானச் செயல்கள்.

பாப்பான் பட்டன மக்கள் தான் அதிகமாகப் போராளிகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை Kempetei எனும் ஜப்பானிய இராணுவப் போலீசார் அறிய வந்தனர். அதனால் பாப்பான் பட்டன மக்களைக் கைது செய்ய ஆரம்பித்தனர். 

1943ல் ஜப்பானிய இராணுவப் போலீசார்
அந்த வகையில் சிபில் கார்த்திகேசு 1943 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப் பட்டார்.அப்போது ஜப்பானியர்களின் போலீஸ் தலைமையகயகம்  ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளியில் இருந்தது.

அங்கே விசாரணை எனும் பேரில் கேள்விகள் மேல் கேள்வி. போராளிகளின் பெயர்களைச் சொன்னால் போதும். விட்டு விடுகிறோம். மன்னித்து விடுகிறோம் என்று ஜப்பானியர்கள் கெஞ்சினர்.

சிபில் கார்த்திகேசு சித்ரவதை செய்யப் பட்ட பள்ளி - 2011ல் எடுத்த படம்
ஒன்றும் நடக்கவில்லை. சொன்னாமல் மட்டும் விட்டு விடுவார்களா. உண்மையைச் சொன்னால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கப் படும்.

ஒரு நாளைக்கு பத்து பேர் விகிதம் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து இருக்கிறார். பேராக் வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 6000 போராளிகளுக்கு அவர் அவசர சிகிச்சை செய்து இருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் என்றால் 30,000 பேரின் உயிருக்கு ஆபத்து
என்பதை சிபில் கார்த்திகேசு உணர்ந்தார். தன் உயிர் போனாலும் பரவாயில்லை. உணமையைச் சொல்லாமல் எல்லாவிதச் சித்ரவதைகளையும் தாங்கிக் கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு பத்து காஜா சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டார்.
1943லிருந்து 1945 வரை சிபில் கார்த்திகேசு சித்ரவதை செய்யப்பட்ட இடம்
அங்கேதான் சித்ரவதை எனும் பேரில் பெரிய பெரிய அநியாயங்கள் நடந்து இருக்கின்றன. தன்னுடைய சுயசரிதையில் இவை எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். என்ன மாதிரியான அநியாயங்கள் என்று சொல்ல நமக்கு மனம் வரவில்லை. 

வெளிக்காயம் இல்லாத சித்ரவதைகள்.
தூங்க விடாமல் செய்தல்.

தண்ணீருக்குள் தலையை அழுத்திப் பிடித்து மூச்சு நின்று போகும் போது தலையை
வெளியே எடுத்தல். 


1943ல் ஜப்பானியர்கள் மலாயாவில் சித்ரவதை செய்யும் காட்சி
ஐஸ் கட்டியில் கட்டிப் போட்டு உட்கார வைத்தல்.

காலைக் கட்டித் தொங்க விடுதல்.

படுக்க வைத்து அவர் மீது ஐந்து பேர் ஏறி
மிதித்தல்.

பிறப்பு உறுப்பில் சவர்க்கார நீரைப் பாய்ச்சி மயக்கம் அடையச் செய்தல்.

இப்படி கணக்கு வழக்கு இல்லாத அநியாயங்கள்.

மிருகத் தனமாகச்
சித்ரவதைகள்.

ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளி தான் ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் தலைமை இடமாக இருந்தது. பல சீனச் சமூகத் தலைவர்களும் விசாரணை என்ற பெயரில் சிரச் சேதம் செய்யப் பட்டனர். அதனால் ஆவிகள் உலவுவதாக கூட இன்று வரை வதந்திகள் உலவுகின்றன.


1943 - 1945 வரை ஜப்பானிய சித்ரவதைக்கு ஆளான வில்லியம் பிள்ளை கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசுவைப் போல அவருடைய கணவர் டாக்டர் கார்த்திகேசுவையும் கட்டி வைத்து அடித்தனர். தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அவர் மறுத்து விட்டார். அவர்களுடைய மகன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை.

அவனையும் ஒரு மரத்தில் கட்டித்
தொங்க விட்டனர். சித்ரவதை செய்தனர். தாயாரின் முன்னாலேயே பயங்கரமான சித்ரவதைகள் செய்தனர்.

தவம் கார்த்திகேசு தன் ஆங்கிலேயக் கணவருடன்
கடைசியாக மகள் தவம் கார்த்திகேசுவையும் சிதரவதை செய்து இருக்கின்றனர். இவை அனைத்தையும் பார்த்தும் சிபில் கார்த்திகேசு மனம் தளரவில்லை. ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த மலாயா ஜப்பானிய எதிர்ப்பு போராளிகளைக் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை.

சார்ஜண்ட் எக்கியோ யோஷிமுரா என்பவன் தான் அவர்களைச் சித்ரவதை செய்வதில்
தலைவனாக இருந்தவன். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஒரு குடும்பமே ஜப்பானியரின் சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கிறது.


சிபில் கார்த்திகேசுவைக் கொடுமை படுத்திய எக்கியோ யோஷிமுரா
இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சியும் தோல்வி கண்டது. 1945 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவில் இருந்து வெளியேறினர். ஆங்கிலேயர்கள் வந்தனர். கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.


இரண்டாவது உலகப் போரில் சரண் அடையும் ஜப்பான்
அவர் பத்து காஜா சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக அவர் பாப்பான் பட்டணத்திற்கு கொண்டு வரப் பட்டார். பாப்பான், பூசிங் நகர மக்கள் அனைவருமே திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை உடனடியாக இங்கிலாந்திற்கு விமானத்தின் மூலமாகக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் மருத்துவம் வழங்கப் பட்டது. அப்போதுதான் சிபில் கார்த்திகேசு No Dram of Mercy எனும் தன் சுயசரிதையையும் எழுதினார். அவரால் எழுத முடியவில்லை. மற்றவர் துணை கொண்டு எழுதினார்.


சிபில் கார்த்திகேசு எழுதிய சுயசரிதை
அப்போது சிபில் கார்த்திகேசுவை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பார்க்க ஆசைப் பட்டார். அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் தள்ளு வண்டியில் கொண்டு வரப் பட்டார். இந்தச் சமயத்தில் தான் ஜப்பானின் ஹீரோஷிமா, நாகாசாக்கியில் அணுகுண்டுகள் போடப் பட்டன.

அங்கே சிபில் கார்த்திகேசுவிற்கு இங்கிலாந்தின் ஆக உயரிய விருதான கிங் ஜார்ஜ் வீர விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் கிங் ஜார்ஜ் வீர விருதை பெற்றது இல்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஆங்கிலேய அரசின் சகல மரியாதைகள், மிகச் சிறப்பான மருத்துவச் சேவைகள் சிபில் கார்த்திகேசுவிற்கு வழங்கப் பட்டன.


கிங் ஜார்ஜ் விருது
இருந்தாலும் ஜப்பானிய சித்ரவதையினால் ஏற்பட்ட உள் உடல் வேதனைகளை மருத்துவர்களால் முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி தன்னுடைய 49வது வயதில் அவர் இறந்து போனார். அவருடைய உடல் ஸ்காட்லாந்து லானார்க் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. பின்னர் அந்தப் பூதவுடல் லானார்க் சமாதியில் இருந்து 20.3.1949ல் தோண்டி எடுக்கப் பட்டு, பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது. ஓர் ஆங்கில எழுத்தாளர் இப்படி எழுதி இருக்கிறார்.


ஸ்காட்லாந்தில் உள்ள லானார்க மருத்துவமனை.
இங்கே தான் சிபில் கார்த்திகேசு இறந்தார்.
”Her remains having arrived from Scotland by a ship to Penang and then travelled home to Ipoh 141 Brewster Road. One of the largest funeral processions ever seen in Perak took place. Sybil the Ipoh Heroine was treated in royal style and 100,000 people of Perak and from all parts of the country turned out to say goodbye.Even people came from Thailand,Vietnam,Borneo and Indonesia.”

ஸ்காட்லாந்தில் இருந்து அவருடைய உடல் பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப் பட்டது. அங்கு இருந்து பின்னர் ஈப்போவில் உள்ள அவருடைய புருவ்ஸ்டர் சாலை இல்லத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது.


ஈப்போ கோனாலி சாலையில் இருக்கும்
சிபில் கார்த்திகேசுவின் கல்லறை
அவருடைய உடல் ஈப்போ செயிண்ட் மைக்கல் மாதா கோயில் அருகில் இருக்கும் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டது.அதை கொனாலி சாலை கிறிஸ்துவ மயானம் என்று இப்போது அழைக்கிறார்கள்.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப் படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று ஓர் இலட்சம் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து அந்தக் கணக்குச் சொல்லப் படுகிறது.

சிபில் கார்த்திகேசுவினால் உயிர் தப்பியவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். ஆகவே அவ்வளவு பெரிய
மக்கள் கூட்டம் கூடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. இது நடந்தது 1949 ஆம் ஆண்டில்.

மலேசிய மண்ணிலும் சரி, பேராக் மாநிலத்திலும் சரி இன்றும் சீனர்களிடையே சிபில் கார்த்திகேசு மிகவும் பிரபலமாகப் பேசப் படுகிறார். சிபில் கார்த்திகேசுவின் பெயரை ஈப்போ மாநகரத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைத்து பெருமையும் செய்து இருக்கிறார்கள்.

சீனர்கள் பலர் தங்கள்
பிள்ளைகளுக்கு சிபில் என்று பெயர் வைத்து சிபில் கார்த்திகேசுவை நினைத்துப் பார்க்கிறார்கள். மலேசியத் தமிழர்களில் இப்போதைய இளைஞர்களுக்கு அவரைப் பற்றி தெரியாமல் இருக்கிறது.

அவர் வாழ்ந்து மறைந்த பாப்பான் பட்டணத்து இல்லம் ஓர் அருங்காட்சியகமாக இப்போது மாற்றப் பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப் பட்டு பத்திரமாகக் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

சீனா, தைவான், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் சீனர்கள் அவருடைய சமாதிக்குச் சென்று மலர் வளையங்கள் சார்த்தி விட்டுச் செல்கின்றனர்.


ஒல்கா கார்த்திகேசு - சிபில் கார்த்திகேசுவின் மூத்த மகள். 
கடைசியாக ஈப்போவில் எடுத்த படம்.

சிபில் கார்த்திகேசுவிற்கு மூன்று பிள்ளைகள்:

1. வில்லியம் பிள்ளை (பிறப்பு 1918)
2. ஒல்கா கார்த்திகேசு (பிறப்பு 1921)
3. தவம் கார்த்திகேசு (பிறப்பு 1936)

கார்த்திகேசு தம்பதியினரின் முதல் மகன் மைக்கல் கார்த்திகேசு பிறந்த ஒரு சில மணி நேரத்தில் இறந்து போனார். அதனால் அவர்கள் வில்லியம் பிள்ளை எனும் சிறுவனை எடுத்து வளர்த்தனர். இவரும் ஜப்பானியர்களால் கைது செய்யப் பட்டார். அப்போது அவருக்கு 30 வயதிற்கும் கூடுதலாக இருக்கும். வில்லியம் பிள்ளை, கோப்பேங் சிறையில் சித்ரவதை செய்யப் பட்டார்.

சிபில் கார்த்திகேசுவின் கல்லறையில்
அதற்கு பிறகு அவர் தைப்பிங் சிறைச் சாலைக்கு அனுப்பப் பட்டார். மலாயாவில் இருந்து ஜப்பானியர்கள் வெளியானதும் இவரும் விடுவிக்கப் பட்டார். பின்னர், இவர் நிங் பாய்க் சூ எனும் ஈப்போ சீனப் பெண்ணை மணந்தார். இவரைப் பற்றிய மேல் விவரங்கள் கிடைக்கவில்லை.

பெற்றோர்களையும் அண்ணன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு போனதும் தனது பாட்டியையும் கடைசி தங்கை தவம் கார்த்திகேசுவையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இரண்டாவது மகள் ஒல்கா கார்த்திகேசுவின் மீது விழுந்தது.


சிபில் கார்த்திகேசுவின் படுக்கை அறை
தவம் கார்த்திகேசுவிற்கு அப்போது ஏழு வயது. அந்தச் சிறுமியையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை. அவளையும் பிடித்துக் கொண்டு போய் சித்ரவதை செய்துள்ளனர். அந்த வேதனையையும் தாங்க வேண்டிய நிலைமை ஓல்காவிற்கு ஏற்பட்டது.

ஒல்கா கார்த்திகேசு இன்னும் ஈப்போவில்
வாழ்கிறார். இவருக்கு வயது 90. இவருக்கு ஈப்போ சீனர்களும் தமிழர்களும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். (கடைசி தகவல்: 2009)

1952 ஆம் ஆண்டு சிபில் கார்த்திகேசுவின் கடைசி மகள் தவம் கார்த்திகேசுவிற்கு மருத்துவம் படிக்க இங்கிலாந்து அரசு நிதியுதவி செய்தது. அவர் லண்டன் சென்று இரண்டு ஆண்டுகள் படித்து விட்டு படிப்பை நிறுத்திக் கொண்டார். மூன்று ஆண்டுகள் ஊர் சுற்றி விட்டு 1957 ஆம் ஆண்டு மலேசியா திரும்பினார். 


பாப்பான் பட்டணத்தில் இருக்கும்
சிபில் கார்த்திகேசு அரும் காட்சியகம்
இங்கிலாந்தில் இருக்கும் போது அங்கேயே தவம் கார்த்திகேசு ஓர் ஆங்கிலேய வழக்கறிஞரைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார். நாடு திரும்பிய தவம் கார்த்திகேசு தன் அக்காள் ஒல்கா கார்த்திகேசுவை இங்கிலாந்திற்கு வரும்படி அழைத்தார்.

ஒல்கா மறுத்து விட்டார். தன் தந்தை கார்த்திகேசுவின்
கடைசி காலம் வரை அவருடனே இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். சொன்னபடி தன் தந்தையின் கடைசி கால்ம் வரை இருந்தார். 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய 81 வது வயதில் டாக்டர் கார்த்திகேசு காலமானார். இவருடைய உடல் ஈப்போ தம்பூன் எனும் இடத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது.


சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய
மற்றொரு நூல்

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய நூல்கள்:

1. No Dram of Mercy, Neville Spearman, 1954; Oxford University Press.

2. Faces of Courage: A Revealing Historical Appreciation of Colonial Malaya's Legendary Kathigasu Family by Norma Miraflor & Ian Ward

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பு செய்தது.

பின்னர்
மலேசியாவின் அஸ்ட்ரோ தொலைக் காட்சி நிலையம் Apa Dosaku? எனும் தலைப்பில் 10 வாரங்களுக்கு சிபில் கார்த்திகேசு பற்றிய நாடகத் தொடரை ஒளிபரப்பு செய்தது.


Apa Dosaku தொலைக்காட்சி நாடகத் தொடர். 
சிபில் கார்த்திகேசுவின் பேத்தி

அண்மையில் அவர் வாழ்ந்த அந்த பாப்பான் நகரத்து வீட்டை நானும் சென்று பார்த்தேன். அப்போது ஐந்தாறு சீனர்கள் மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றனர். அனைவரும் மிக மிக வயதானவர்கள். 


கண்களைக் குளமாக்கும் சிபில்
கார்த்திகேசுவின் பாப்பான் இல்லம்
அவர்களின் அத்தனை பேரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். அதைப் பார்த்த என் கண்களும் குளமாகிப் போயின. என் மனதில் ஓர் இறுக்கம். அவர் பயன் படுத்திய சில பொருட்களையும் தடவிப் பார்த்தேன். சிபில் கார்த்திகேசு அந்தப் பொருட்களில் இருந்து புன்னகை செய்து கொண்டு இருந்தார். இந்தக் கட்டுரையை எழுதும் போது என் மனம் ரொம்பவும் வலிக்கின்றது. சத்தம் போடாமல் அழவும் செய்கின்றது.

15 ஏப்ரல் 2012

கணினியும் நீங்களும் – 136


ராமசாமி கருப்பையா  ramasamy_karuppiah@yahoo.com
கே: Google  மூலமாகத் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்று கேள்விப்பட்டேன். அதற்கு தனியான நிரலி தேவையா?


ப: Google  தேடல் இயந்திரம் 22 மொழிகளில் இலவசமாக தட்டச்சு நிரலியை வழங்கி வருகிறது. கூகிள் தேர்வு செய்த மொழிகளில் நம்முடைய தமிழ்மொழியும் ஒன்று. கூகிள் நிரலியைக் கொண்டு எளிதாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம். கூகிள் நிறுவனத்தின் தமிழ் தட்டச்சு நிரலியை எப்படி கணினியில் பதிப்பது (Install) என்பதை விளக்கமாகச் சொல்கிறேன். அந்த நிரலியின் பெயர் Google IME.

கூகிள் நிறுவனத்தின் தமிழ் தட்டச்சு நிரலியில் தட்டச்சு செய்வது என்பது மிகவும் எளிது. இந்த நிரலியை Windows XP, Windows Vista, Windows 7 என எல்லா இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம். 

தவிர, லினாக்ஸ் இயங்குதளம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். லினாக்ஸ் என்பது ஒரு திறந்த வெளிமூல நிரலி. கணித விற்பனர் Linus Torvalds என்பவர் 1991ஆம் ஆண்டு உருவாக்கித் தந்த  இலவசமான இயங்குதளம். அந்த இயங்குதளத்திலும் கூகிள் ஐ.எம்.ஐ.நிரலியைப் பயன்படுத்த முடியும்.

http://www.google.com/ime/transliteration/ எனும் இணையத்தளத்தில் இருந்து அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் அளவு 723 KB. இது ஒரு துணை நிரலி ஆகும். அதை உங்கள் கணினியில் இயக்கிவிடுங்கள். இந்தக் கட்டத்தில் உங்கள் கணினி இணையத்தில் இருக்க வேண்டும். மறந்துவிட வேண்டாம். 

இந்தத் துணை நிரலி, முதன்மை நிரலியை இணையம் மூலமாக கணினிக்குள் கொண்டு வந்து பதிப்புச் செய்யும். நீங்கள் எந்தக் கவலையும்பட வேண்டாம். எல்லா வேலைகளையும் அதுவே செய்துவிடும். பின்னர், நீங்கள் Control Panel பகுதிக்குச் சென்று Regional and Language Options எனும் சின்னத்தைச் சொடுக்குங்கள். 

அதில் Languages எனும் தத்தல் இருக்கும். Tab என்பதைத் தமிழில் தத்தல் என்று அழைக்கலாம். அதைச் சொடுக்கினால் Details எனும் பகுதி இருக்கும். அதைச் சொடுக்கிவிடுங்கள். அங்கே Tamil என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதற்கு பக்கத்தில் ADD எனும் ஒரு பொத்தான் இருக்கும். அதைச் சொடுக்கி OK என்று அழுத்திவிட்டு வெளியேறி விடவும்.

இப்போது உங்களுடைய கணினியின் முகப்புத் திரைக்கு வாருங்கள். அங்கே ஆகக் கீழே TASK BAR எனும் பணிப்பட்டை இருக்கும். அதைப் பாருங்கள்.  இப்போது அதில் TA என தமிழ் மொழிக்கான சுட்டி இணைந்து இருக்கும்.

அடுத்து நீங்கள் Microsoft Word ஐ திறக்க வேண்டும். ஏற்கனவே, பணிப்பட்டையில் உள்ள TA ஐ சொடுக்கி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இனிமேல் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம். இதுதான் கூகிளின் தமிழ் தட்டச்சு செயல்பாட்டுமுறை. ஏதாவது சிக்கல் என்றால் எனக்கு அழையுங்கள்.

ஜாகிர் உசேன், தாமான் துங்கு ஜாபார், செனாவாங், சிரம்பான்
கே: தமிழில் தட்டச்சு செய்யும் போது ‘லதாஎனும் யுனிகோட் எழுத்துருவைத் தவிர வேறு தமிழ் எழுத்துகள் இல்லையா. தயவு செய்து வேறு தமிழ் யுனிகோட் எழுத்துகளை வாசகர்களுக்கு தெரியப்படுத்துங்கள். எல்லாருக்கும் பயனாக இருக்கும். உங்களின் கணினி சேவைக்கு எங்களின் வாழ்த்துகள்.

ப: நன்றி. இதைப்பற்றி பல நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன் நீங்களும் சொல்லி வைத்த மாதிரி தொலைப்பேசியில் அழைக்கிறீர்கள். ’லதா’ யுனிகோட் எழுத்துருவைப் போல வேறு எழுத்துகளும் இருக்கின்றன. இடத்தைச் சொல்கிறேன். போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

’லதா’ யுனிகோட் எழுத்துரு என்பது மைக்ராசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே பதிக்கப்பட்டிருக்கிறது.  2000ஆம் ஆண்டில் Windows XP இயங்குதளத்தை உருவாக்கும் போதே அதில் லதா சேர்க்கப்பட்டுவிட்ட்து. அந்த எழுத்தை இயக்குவதுதான் நம்முடைய பொறுப்பு.

சரி. இந்த ’லதா’ எழுத்தைத் தவிர வேறு தமிழ் எழுத்துகளை நம் கணினியில் பதிக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். முடியும் என்பதுதான் என் பதில். http://www.azhagi.com/freefonts.html#unicode  எனும் இணையத்தளத்திற்குச் செல்லவும். அங்கே unicode 150, unicode 195, unicode 021, unicode 042, unicode 032 எனும் அழகு அழகான யுனிகோட் எழுத்துருகள் உள்ளன. 
அவற்றைப் பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் பின்னர் Control Panel க்குச் சென்று Fonts எனும் கோப்பைச் சொடுக்கவும். அதில் File எனும் இடத்தில் Install New Font என்பதைச் சொடுக்கி விடவும். எந்த இடத்தில் அந்தப் புதிய எழுத்துருகள் இருக்கின்றன எனும் இடத்தைக் காட்டவும். பின்னர் அந்த எழுத்துகள் உங்கள் கணினியில் பதிக்கப் படும். 
அடுத்து நீங்கள் Microsoft Word இல் தட்டச்சு செய்யும் போது, புதிதாகத் பதிக்கப்பட்ட தமிழ் யுனிகோட் எழுத்துகளைத் தேர்வு செய்து தட்டச்சு செய்யுங்கள். அந்த எழுத்துகளைப் பார்த்து நீங்களே அதிசயப்படுவீர்கள். 
எனக்கு அழைத்து உங்களுடைய அனுபவங்களைச் சொல்லுங்கள். அப்போதுதான் அடுத்த என்ன என்ன புதிய பதிப்புகளை உங்களிடம் சேர்ப்பிக்கலாம் எனபதைப் பற்றி என்னால் முடிவு செய்ய முடியும். சரியா.

கலைப்பித்தன், குவாந்தான், பகாங்
கே: இப்பொழுது எல்லாம் உங்களுடைய கேள்வி பதிலில் அதிகமான வடச் சொற்களைக் கலக்கிறீர்கள். பாலில் தண்ணீரைக் கலக்கலாம். ஆனால், தண்ணீரில் பாலைக் கலக்கக் கூடாது. அது உங்களுக்கு தெரியும் தானே?

ப: தெரியும் சாமி தெரியும். என்ன செய்வது... கணினிக்கு மாங்கல்ய தோஷம். எனக்கு அதைத் தொட்டாலே கன்னிகா தோஷம்.  பூர்வஜென்ம தோஷம் என்றால் சும்மாவா. அதனால், வடச் சொற்கள் விருந்தாளியாக வந்து போகின்றன. அதைப் போய் பெரிசா எடுத்துக்க வேண்டாம் சாமி. இனிமேல் பரிகார பிரதோஷம் நடக்கும்!

மனைவிக்கு ஆசையாய் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு போய்க் கொடுக்கிறோம். அதில் கொஞ்சம் கனகாம்பரமும் சேர்ந்து போகிறது. அதை என்ன வேண்டாம் என்றா மனைவி சொல்லப் போகிறாள். வேண்டாம் என்று சொன்னால் அவளுக்கு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டு போங்கள்.


குமாரி.ஜெயதிலகா சுரேந்திரன், மெந்தகாப், பகாங்
கே: நான் என் கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்துகிறேன். காலையிலிருந்து மாலை வரை கணினியை அடைப்பதில்லை. அதனால் கணினிக்கு பிரச்னை வருமா?
ப: அருமையான கேள்வி. வெகு நாட்களுக்குப் பின்னர் எனக்கு கணினி மயக்கத்தை ஏற்படுத்திய கேள்விகளில் இதுவும் ஒன்று.  அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண்டிருந்தால் கணினி கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம். 
 கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  கணினிக்குள் ஏற்படும். ஒவ்வொரு முறையும் இந்த மின் அதிர்ச்சி உண்டாகிக் கொண்டே இருக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள், அப்புறம் அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அந்த அதிர்ச்சியைக் கணினிக்குள் இருக்கும் சின்னச் சின்ன சாதனங்கள் தாங்கிக் கொண்டே இருக்கின்றன. 
இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்துவிட வேண்டும்.
பின்னர் அதற்கு ஒரு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

திருமதி.தட்சாயிணி அழகன், தாமான் மேவா, பெர்ச்சாம், ஈப்போ
கே: நான் அண்மையில் ஒரு தமிழ் தட்டச்சு நிரலியை வாங்கினேன். அதன் விலை 200 ரிங்கிட். வாங்கிய ஒரு சில நாட்களில் என் கணினி கெட்டுப் போனது. அதனால், வேறு ஒரு கணினியில் அந்தத் தமிழ் நிரலியை இன்ஸ்டால் செய்தேன்.  

சிடி சாவியைக் கேட்கிறது. நிரலியை விற்ற கடைக்காரரிடம் புகார் செய்தேன். அவர் விரலியை எங்கிருந்து வாங்கினாரோ அந்த நிறுவனத்திற்கு போன் செய்தார். அந்த கம்பெனி கோலாலம்பூரில் இருக்கிறது. அதற்கு அவர்கள் சிடியை விற்றவர் வெளியூருக்குப் போய்விட்டார். புதுசாக ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். 

வாங்கி ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் இன்னும் ஒரு 200 ரிங்கிட்டா என்று கோட்டோம். அதற்கு அவர்கள் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு கணினிக்கு ஒரு நிரலிதான். அதை வேறு கணினிக்கு மாற்ற முடியாது என்று போனை வைத்துவிட்டார்கள். 

மறுபடியும் போன் அடித்தால் எடுக்க மறுக்கிறார்கள். எடுத்தாலும் கீழே வைத்து விடுகிறார்கள். இது நியாயமா? இதை உங்கள் பத்திரிகையில் போடுங்கள்.

ப: என்ன நடந்தது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒரு தரப்பு வாதத்தை வைத்துக் கொண்டு முடிவு சொல்ல முடியாது. அந்த நிறுவனத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள். நான் கேட்டுப் பார்க்கிறேன். 

இன்னும் ஒரு செய்தியை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். சில நிறுவனங்கள் தமிழ் தட்டச்சு நிரலியை நூறு, இருநூறு ரிங்கிட் என்று விற்கின்றன. நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், அவர்களுடைய நிரலியை வாங்கிப் பயன்படுத்தும் போது ஏதாவது பிரச்னை என்று அழைத்தால் அவர்கள் வாடிக்கையாளர்களைக் கண்டு கொள்வதே இல்லை. 

நண்பன் வாசகர்கள் பலர் என்னிடம் இதை ஒரு பெரிய குறையாகச் சொல்லி வருகின்றார்கள். ”பணம் வாங்கும்போது மட்டும் கண்டிசனாக வாங்கிக் கொள்கிறார்கள். பிரச்னை என்று வந்து உதவி கேட்டால்... அவரைக் கேளு இவரைக் கேளு... என்று சால்சாப்பு சொல்கிறார்கள்” என்று வேதனைப்படுகிறார்கள்.   

இன்னும் ஒரு விஷயம். தமிழில் உள்ள நிரலிகளில் மாற்றங்கள் செய்து, ‘மலேசியா தமிழ் தட்டச்சு’ என்று இலவசமாக மலேசியத் தமிழர்களுக்கு வழங்க நான் முடிவு செய்து இருக்கிறேன். முதலில் தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோம். காசு சம்பாதிப்பது அடுத்த பட்சம்.

டோனி பெர்னாண்டஸ் - ஏர் ஏசியா


ஏர் ஏசியா விமானம்

டோனி பெர்னாண்டஸ் அல்லது டான்ஸ்ரீ அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் Tony Fernandes CBE  (பிறப்பு: 30 ஏப்ரல்1964) என்பவர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா Air Asia எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் (Now everyone can fly) எனும் மகுட வாசகத்தை மந்திரச் சொல்லாக உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.

டோனி பெர்ணாண்டஸ்
பெர்னாண்டஸ் மங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். நொடித்துப் போன ஒரு நிறுவனத்தை தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சிகளினால் நிலைநிறுத்தினார். 

புதிதாக வாங்கிய விமானத்தின் விமானை இருக்கையில்
ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். இப்போது 88 ஏர்பஸ் விமானங்களுக்குச் சொந்தக்காரர். மலேசியாவில் ஏறக்குறைய 9000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார். டோனி பெர்னாண்டஸ் இப்போது மலேசியப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

பிறப்பும் கல்வியும்

டோனி பெர்னாண்டஸ், கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் 1964 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மையத்திற்குப் பின்னால் இருக்கும் திரேச்சர் சாலை பகுதியில் வளர்ந்தார். தற்சமயம் திரேச்சர் சாலை, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் ஐந்தாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள அலிஸ் ஸ்மித் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

கைக்குழந்தையாக டோனி
டோனி பெர்னாண்டஸின் தந்தையார் ஓர் இந்தியக் குடிமகன். கோவாவைச் சேர்ந்தவர். அவர் ஒரு மருத்துவர். வெகு நாட்களாக கொல்கத்தாவில் பணிபுரிந்தார். பின்னர், சில காலத்திற்கு தொழில் மலேசியா புரிய வந்தார். வந்த இடத்தில் டோனி பெர்னாண்டஸின் தாயாரைச் சந்தித்தார். திருமணம் செய்து கொண்டார்.

தாயார் எனா பெர்னானண்டஸ்

டோனி பெர்னாண்டஸின் தாயார் எனா பெர்னாண்டஸ் மலாக்காவைச் சேர்ந்தவர். அவர் ஓர் இசைக்கலை ஆசிரியர். மலேசியாவில் அவர் Tupperware எனும் நெகிழிப் பாண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரத் துறையிலும் இருந்தார்.

இளைஞராக டோனி
டோனி பெர்னாண்டஸுக்கு 16 வயதாக இருக்கும் போது அவருடைய தாயார் இறந்து போனார். தாயாரின் இறப்பு டோனி பெர்னாண்டசைப் பெரிதும் பாதித்தது. அதனால் அவர் வெளி உலகத் தொடர்புகளை முற்றாக ஒதுக்கினார். தன் முழு கவனத்தை படிப்பிலும் பணம் சம்பாதிப்பதிலும் திசை திருப்பினார்.

விமானச்சேவை விண்ணப்பம்

1977இல் இருந்து 1983 வரை இங்கிலாந்து, சுரே எனும் நகரில் இருக்கும் எப்சோம் கல்லூரியில் மேல்படிப்பைத் தொடர்ந்தார். 1987-இல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றார். 1987-1989 வரை சர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விர்ஜின் இசைத்தட்டு நிறுவனத்தில் நிதித்துறை தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். பிரான்சன் இங்கிலாந்தின் நான்காவது பெரிய பணக்காரர்.

ஏர் ஏசியா பணிப்பெண்கள்

1901ஆம் ஆண்டு இங்கிலாந்தின உயரிய கணக்காயர் பட்டயத்தைப் பெற்றார். 1992லிருந்து 2001 வரை வார்னர் இசைக் குழுமத்தில் தென்கிழக்காசிய துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் கட்டத்தில் தான் மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க அரசாங்கத்திடம் உரிம விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

பிரதமர் மகாதீருடன் சந்திப்பு

2001 ஆம் ஆண்டில் ஏர் ஆசியா விமானச் சேவை மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது. அந்த விமான நிறுவனம் திவாலாகி விழுந்து சரிந்து கொண்டிருந்தது. 

டோனி தன் மனைவி உறவினர்களுடன்

அந்தக் கட்டத்தில் மறுபடியும் டோனி பெர்னாண்டஸ் மலிவு விலை விமானச் சேவைக்கு உரிமம் கேட்டு மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அவருடைய விண்ணப்பம் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.

தாய்லாந்தில் ஏர் ஏசியா விமானச் சேவையைத் தொடக்கிய போது
மனம் தளராத டோனி பெர்னாண்டஸ், அப்போதைய பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க அனுமதி கேட்டார். அந்த கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது மலேசிய உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் துறை அமைச்சின் பொதுச் செயலாளராக இருந்த டத்தோ பாமின் ரெஜாப் என்பவரின் நட்பு டோனி பெர்னாண்டஸுக்கு கிடைத்தது.

பிரிட்டிஷ் அரசு வழங்கிய CBE விருது

அவர் மூலமாக பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பும் கிடைத்தது. ’புதிதாக ஒரு விமானச் சேவை வேண்டாம். முடிந்தால் நட்டத்தில் போய்க் கொண்டிருக்கும் ஏர் ஆசியா விமானச் சேவையை எடுத்து நடத்திப் பார். உன் அதிர்ஷ்டம்’ என்று ஐந்தே நிமிடங்களில் பேசி டோனி பெர்னாண்டஸை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரதமர் துன் மகாதீர்.

உலகின் சிறந்த விமானச் சேவை விருது

அப்போது டோனி பெர்னாண்டஸுக்கு வயது 37. உலகச் சாதனை ஒன்றைச் செய்யப் போகிறோம் என்று அறிந்திராத வயது. பிரதமர் துன் மகாதீரின் கருத்துகளை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விமானச் சேவை உலகில் காலடி எடுத்து வைத்தார் டோனி பெர்னாண்டஸ்.

ஏர் ஆசியா விமானச் சேவை

2001ஆம் ஆண்டு ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு 40 மில்லியன் ரிங்கிட் கடன் இருந்தது. அந்த நிறுவனத்தை மலேசிய அரசாங்கத்தின் டி. ஆர். பி.ஹைகாம் நிறுவனம் நடத்தி வந்தது. இரண்டே இரண்டு பழைய போயிங் 737-300 ரக விமானங்கள் மட்டுமே சேவையில் இருந்தன. 

பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியர் விருது

ஆனால், ஏர் ஆசியா விமானச் சேவையை தூக்கி நிறுத்த முடியும் என்று டோனி பெர்னாண்டஸ் நம்பினார். அந்த நிறுவனத்தை ஒரே ஒரு ரிங்கிட் மூலதனத்தில் வாங்கிக் கொண்டார்.

2003ஆம் ஆண்டு தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தன்னுடைய விமானச் சேவையை விரிவுபடுத்தினார். ஏர் ஆசியா விமான நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 

பல கோடி மதிப்புள்ள பிரெஞ்சு விமாங்களை
வாங்கிய போது பிரெஞ்சு அதிபருடன் உரையாடல்.

இப்போது 25 நாடுகளில் உள்ள 400 நகரங்களுக்கு தன் அனைத்துலகச் சேவையை வழங்கி வருகிறது. அதன் துணை நிறுவனங்களாக தாய் ஏர் ஆசியா (Thai AirAsia), இந்தோனேசியா ஏர் ஆசியா (Indonesia AirAsia) எனும் இரு நிறுவனங்கள் உள்ளன.

'டோனி பெர்னாண்டஸுக்கு கிறுக்குப் பிடித்துப் போய் விட்டது. அதனால் தான் ஏர் ஆசியா விமான நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்' என்று சொன்னவர்கள் அவரை இப்போது நம்பிக்கையின் நட்சத்திரமாகப் புகழ்கின்றார்கள். அவருடைய அணுகுமுறையைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் பல மலிவு விலை விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பார்முலா ஓன் கார் பந்தயத்தில் லோட்டஸ் குழுவை உருவாக்கிய போது
சாதனைகள்

டோனி பெர்னாண்டஸின் மிகப்பெரிய சாதனை ஏர் ஆசியா உள்நாட்டு விமானச் சேவையை அனைத்துலக விமானச் சேவையாக மாற்றியமைத்ததே. ஏர் ஆசியா விமானச் சேவை தோற்றுவிப்பதற்கு முன்னர் ஆசிய வட்டாரத்தில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் (open-skies) இல்லாமல் இருந்தது.

ஒரு பள்ளி நிகழ்ச்சியில்... ஒரு மாணவியின் பள்ளிச் சீருடையில்

2003 ஆம் ஆண்டில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் உருவாக்கம் பெறுவதற்கு டோனி பெர்னாண்டஸ் முழுமூச்சாக ஈடுபட்டார். அதற்கு பிரதமர் துன் மகாதீரும் உறுதுணையாக இருந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாக இருந்தவர் டோனி பெர்னாண்டஸ். அதன் பயனாக பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோன்றியுள்ளன.

பாரிஸ் விமானக் காட்சியில் பிரெஞ்சு அமைச்சர்,
மற்றும் மலேசிய அமைச்சர் ரபீடா அஷீஸுடன்
மலிவுவிலை விமானச் சேவைகள்
  •     மலேசிய பயர்ஃபிளை - Malaysia's Firefly (மலேசிய விமானச் சேவைக்குச் சொந்தமானது)
  •     சிங்கப்பூர் டைகர் ஏர்வேய்ஸ் - Singapore’s Tiger Airways (சிங்கப்பூர் விமானச் சேவைக்குச் சொந்தமானது)
  •     சிங்கப்பூர் ஸ்கூட் - Singapore’s Scoot (சிங்கப்பூர் விமானச் சேவைக்குச் சொந்தமானது)
  •     சிங்கப்பூர் வேலுயூ ஏர் - Singapore’s Valuair (சிங்கப்பூர், கந்தாஸ் விமானச் சேவைகளுக்குச் சொந்தமானது)
  •     ஜெட்ஸ்டார் ஆசியா - Jetstar Asia (சிங்கப்பூர், கந்தாஸ் விமானச் சேவைகளுக்குச் சொந்தமானது)
  •     தாய்லாந்து நோக் ஏர் - Thailand's Nok Air
  •     வியட்நாம் ஜெட்ஸ்டார் பசிபிக் - Vietnam's Jetstar Pacific (பசிபிக் விமானச் சேவைக்குச் சொந்தமானது)
  •     பிலிப்பைன்ஸ் செபு பசிபிக் - Philippines's Cebu Pacific

பிரிட்டிஷ் அரசியாரின் விருது

பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் அரசியார், டோனி பெர்னாண்டஸுக்கு சி.பி.இ. (Commander of the Order of the British Empire) எனும் பிரித்தானிய உயர் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.பிரிட்டனுக்கும் மலேசியாவுக்கும் இடையில் வர்த்தக, கல்வித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் அந்த விருது வழங்கப்பட்டது.

’ஏர் ஏசியா, ட்யூன் குழுமம், லோட்டஸ் டீம் ஆகியவற்றில் உள்ள என் அனைத்துப் பங்காளிகளும் நண்பர்களும் ஊழியர்களும் வழங்கிய கடின உழைப்பு, உறுதி, விடா முயற்சி ஆகியவற்றுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் அது’ என்று டோனி பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

பிரெஞ்சு அரசாங்கத்தின் விருது

வான் போக்குவரத்துத் தொழில் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பணிகளைப் பாராட்டும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 2010ம் ஆண்டு Officer of the Legion d’honneur எனும் கௌரவ விருதை வழங்கிச் சிறப்பித்தது.

இந்த விருதை 1802 ஆம் ஆண்டு பிரெஞ்சு மகா வீரர் நெப்போலியன் போனபார்ட் உருவாக்கினார். பிரான்சு
நாட்டிற்கு அரிய சேவைகளை வழங்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

பிரஞ்சுக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயரிய விருது அதுவாகும். இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன் போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் போர்ப்ஸ் என்னும் அனைத்துலக சஞ்சிகை டோனி பெர்னாண்டசை ’2010ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய வணிகர்’ ஆகத் தேர்ந்தெடுத்தது.

விருதுகள்
  • பிரித்தானியாவின் Commander of the Order (CBE) விருது.
  • பிரெஞ்சு Officer of the Legion d’honneur விருது.
  • மலேசியப் பேரரசரின் டான் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ விருதுகள்
  • மலேசியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி (Malaysian CEO of the Year 2003)
  • மலேசியா, நெகிரி செம்பிலான் மாநில சுல்தானின் டத்தோ விருது
  • மலேசியா, பகாங் மாநில சுல்தானின் டத்தோ விருது 2007
  • மலேசியா, பகாங் மாநில சுல்தானின் டத்தோ ஸ்ரீ விருது 2008
  • மலேசிய தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் விருது (Honorary Doctorate from Universiti Teknologi Malaysia (UTM) 2010.)

அனைத்துலக சிறப்பு விருதுகள்
  •     அனைத்துலக ஹெரால்ட் டிரிபியூன் விருது (International Herald Tribune Award)
  •     மிகச் சிறந்த தலைமைத்துவம் (Asia Pacific Leadership Awards 2009)
  •     போர்ப்ஸ் சிறந்த வணிகர் விருது 2010 (Forbes Asia businessman of the year)
  •     2011 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த படைப்புத் திறனாளி (Top 100 Most Creative People in Business.)
  •     பிரான்ஸ் நாட்டின் Legion d'Honneur Order விருது.
  •     பிரித்தானிய அரசாங்கத்தின் Commander of the Order (CBE) விருது
  •     எர்னஸ்ட் யாங் தொழில் முனைவர் விருது (Ernst & Young Entrepreneur of the Year Awards 2004.)
  •     விமானச்சேவை வணிக வியூக விருது (Airline Business Strategy Award 2005.)
  •     ஆசிய பசிபிக் வான் போக்குவரத்துக் கழக விருது (Centre for Asia Pacific Aviation (CAPA) 2004, 2005.)
  •     லாரேதே ஆளுமை விருது (The Brand Laureate’ Brand Personality Personality 2006, 2007.)
  •     இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ கணக்காயர் பட்டயம் (Association of Chartered Certified Accountants in 1991.)
  •     ஆசிய பசிபிக் வான் போக்குவரத்துக் கழக சகாப்த விருது (CAPA Legend Award 2009)

08 ஏப்ரல் 2012

கணினியும் நீங்களும் – 134

வசந்தமோகன் vasanthmoga@gmail.com
கே: நான் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து ஒரு மரச் சாமான்கள் தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய திறமையைப் பார்த்த சீன முதலாளி எனக்கு கணக்கர் வேலையைக் கொடுத்தார். நான் ஒரு பட்டதாரி. என் கம்பெனியில் இருந்து சாமான்களை வாங்கிய மற்ற கம்பெனிகளுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி பணத்தைக் கட்ட சொல்ல நினைவூட்டுவது என் பொறுப்பு. 
நான் மின்னஞ்சல்களை அனுப்பிய பிறகும் ‘இல்லை’ என்று சொல்லி என் முதலாளியிடம் சொல்கிறார்கள். அதனால், நான் என் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று என் முதலாளி நினைக்கிறார். என்னை வேலையில் இருந்து நிறுத்துவதற்கு சிலர் திட்டம் போட்டு சதி வேலை செய்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. 
நான் ஒரு தமிழன். அதுவும் இந்தியாவில் இருந்து வந்தவன். கிராணி வேலை செய்வது சில சீனர்களுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது என்னை வேலையில் இருந்து நிறுத்திவிட வேண்டும் என்றே தொல்லை கொடுக்கிறார்கள். நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் அவ்ர்களிடம் போய்ச் சேர்ந்துவிட்டது என்று எப்படி என் முதலாளியிடம் நிரூபிப்பது?  நான் ஜிமெயில் பயன்படுத்துகிறேன்.

ப: மேய்கிற மாட்டை நசுக்குகிற மாடு கதை தெரியும் தானே. தானும் மேயாது. மேய்கிற மாட்டையும் மேயவிடாது. அந்த மாதிரி சில சோறு தின்கிற மாடுகளும் நம்மோடு இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் நல்லா இருப்பது சில மாடுகளுக்குப் பிடிக்கவில்லை. கவலையை விடுங்கள். அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம். 

மின்னஞ்சல்கள் அனுப்பியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தப்பு தாளம் வாசிக்கிறார்கள் என்றால் அங்கே ஏதோ திருகுதாளம் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.  அதற்கு ஒரு வழி இருக்கிறது. Track all your sent emails in Gmail எனும் ஒரு சின்ன நிரலி இருக்கிறது. http://www.techshortly.com/2012/04/track-all-your-sent-emails-in-gmail.html எனும் இணையத் தளத்திற்குப் போய் அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்து, அதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள்.

அடுத்த முறை மின்னஞ்சல் அனுப்பும் போது Track எனும் பொத்தானைச் சொடுக்கி விடுங்கள். அவர் அங்கே மின்னஞ்சலைத் திறந்ததும், இங்கே உங்களுக்கு பச்சை விளக்கு எரியும். மின்னஞ்சலைத் திறந்து படித்துவிட்டு ‘நான் உன் மெயிலை பார்க்கவே இல்ல... படிக்கவே இல்லை’ என்றால்... அந்த பச்சியிடம் கொஞ்சம் பிச்சியே பழகுங்கள்.

பணத்திற்காக சொந்த இரத்த பாசத்தையே விலை பேசுகின்ற உலகத்தில் வாழ்கிறீர்கள் ஐயா வசந்தமோகன். அதுவும் நாடு விட்டு நாடு வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. பண உதவியைத் தவிர வேறு உதவி கேளுங்கள். செய்யத் தயாராக இருக்கிறேன்.

கே:இணையக்கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா எத்தனை மொழிகளில் வெளிவருகிறது. எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? அதில் யார் எந்தக் கட்டுரையை எழுதியது என்று எப்படி கண்டுபிடிப்பது?


ப: உலகில் உள்ள 196 நாடுகளில், 284 மொழிகளில் இணையக்கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா வெளிவருகிறது. எத்தனை ஆசிரியர்கள் என்று சரியாகத் தெரியவில்லை. ஆசிரியர்கள் என்று சொல்வதைவிட விக்கிப்பீடியர்கள் என்று சொல்வதுதான் சரி.  தமிழ்மொழிக்கு பலர் உள்ளனர்.

அவர்களில் சிறப்பாகப் பங்களித்து வரும் சிலரைப் பற்றிய விவரங்களை http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பங்களிப்பாளர்_அறிமுகம்/ எனும் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்களில் ஒருவர் மலேயசித் தமிழர். அவர் யார் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

யார் எந்தக் கட்டுரையை எழுதியது என்று கண்டுபிடிக்க வழி இருக்கிறது. எடுத்துக்காட்டாக ’புடு சிறைச்சாலை’ என்று தட்டச்சு செய்தால் புடு சிறைச்சாலை பற்றிய கட்டுரையின் பக்கத்திற்கு போகும். அங்கே ‘வரலாற்றைக் காட்டவும்’ என்பதைச் சொடுக்குங்கள். அதில் யார், எப்போது எழுதியது என்பது தெரிந்துவிடும். 

கணினியும் நீங்களும் – 133

ராமசாமி கருப்பையா  ramasamy_karuppiah@yahoo.com
கே: Facebook கிற்கு ஆஸ்கார் விருது விருது கிடைத்திருப்பதாகக் கேள்விபட்டேன். இது எந்த அளவிற்கு உண்மை. நான் மெக்சிஸ் அகன்ற அலைவரிசையைப் பயன் படுத்துகிறேன். மிகவும் மெதுவாக வேலை செய்கிறது. எப்படி வேகமாக இயங்கச் செய்வது. நான் பயர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துகிறேன்.


ப: பேஸ்புக் என்பது ஒரு சமூகவலைத்தளம். அதற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை.  பேஸ்புக்கை வைத்து ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் பெயர் The Social Network. அதற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது என்பது உலகின் சிறந்த ஆங்கில அனைத்துலகத் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஓர் உயரிய அங்கீகாரம் ஆகும். 

சோசியல் நெட்வோர்க்படத்திற்கு 8 ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் 3 விருதுகள் கிடைத்தன. 2009ஆம் ஆண்டு பென் மெஸ்ரிச் என்பவர் The Accidental Billionaires எனும் தலைப்பில் ஒரு நாவலை எழுதினார். காதலியால் வஞ்சிக்கப்பட்ட ஓர் இளைஞன் இணையத்தில் ஒரு சமூகத் தளத்தை உருவாக்குகிறான். அதில் தன் காதலியின் படங்களைப் பதிவேற்றம் செய்கிறான். பல்கலைக்கழக மாணவர்களிடையே அந்தத் தளம் பிரபலம் அடைகிறது. காலப்போக்கில் அந்த இளைஞன் கோடீஸ்வரனாகிறான். 

120 மில்லியன் ரிங்கிட் பட்ஜெட்டில் சோசியல் நெட்வோர்க்படம் எடுக்கப்பட்டது.  ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தயாரிப்பாளர்களுக்கு 675 மில்லியனை வசூலித்துக் கொடுத்தது. படத்தைப் பார்த்த பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் கூட அந்தப் படம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று நினைக்கவில்லையாம்.  தன்னைப் பற்றி தவறுதலான கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.  

பேஸ்புக் மூலமாக 54,560 மில்லியன் ரிங்கிட் சொத்திற்கு அதிபதியாக இருக்கிறார் Mark Zuckerberg எனும் 27 வயது இளைஞர்.  சுக்கர்பர்க்கிற்கு சுக்கிரன் சுழற்றி சுழற்றி அடிக்கிறது என்று சொல்லலாம். தப்பே இல்லை. உங்களுடைய இன்னொரு கேள்விக்கு அடுத்த வாரம் பதில் சொல்கிறேன்.

மு.பால்வரதன், செங்கன் ஜெயசீலன், ஆர்.சதீஷ்கனி, சபா.நிர்மலன்
மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள்

கே: சென்ற வாரக் கேள்வி பதிலில் Open Source Project என்பதைத் திறவெளி மூலப் பணி என்று நீங்கள் தமிழ்ப்படுத்தி உள்ளீர்கள். அதை இன்னும் அழகாக,எளிமையாகத் தமிழ்ப்படுத்த முடியும் என்பது எங்களுடைய நம்பிக்கை. 
ப:தங்கள் கருத்திற்கு நன்றி. Open Source  என்றால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளக் கூடியது என்று பொருள்படும். அதாவது கட்டுப்பாடு இல்லாத மூலம் என்று பொருள்.  அதைத் திறவூற்று, திறமூலம் அல்லது திறவெளி மூலம் என்று தமிழ்ப்படுத்தலாம். Open Source Project என்பதைத் திறவெளி மூலப்பணி என்று நான் தமிழ்ப்படுத்தினேன். அதை மேலும் எளிமை படுத்தலாம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பல்கலைக்கழக மாணவர்கள். இவ்வளவு பரிவு காட்டுவது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. 

கணினி உலகில் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் தமிழ்ப்படுத்தும் ஒரு சொல்லை உலகில் உள்ள எல்லாத் தமிழர்களும் எல்லாக் காலத்திற்கும் பயன்படுத்தப் போகிறார்கள். அதை முதலில் மனதில் பயபக்தியுடன் நிலைபடுத்திக் கொள்ள வேண்டும். 

ஒரு சொல்லை உருவாக்கிக் கொடுக்கிறோம். நாம் இறந்து போன பிறகு, வருகின்ற நம்முடைய சந்ததியினர் இன்னும் பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்தச் சொல்லைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்கிற ஓர் உயிர் அச்சம் உடலோடு ஒட்டிக் கொள்ள வேண்டும். மொழிக்கு முதல் மரியாதை. அப்புறம்தான் மனிதனுக்கு மரியாதை. 

தமிழ்ப்படுத்தும் போது ஒரு சின்ன இழைத் தவறும் நடந்துவிடக் கூடாது. ஆகவே, ஒரு சொல்லை உருவாக்கும் கட்டத்தில் அந்தச் சொல்லின் மூலக் கூறுகள், ஒலி அசைவுகள், சொல் வேர்த்தன்மை, பிறமொழி ஊடுருவல், பிறமொழிச் சாரல், புவிசார் வழக்கு, பயன்பாடு இலகுகள் போன்ற பல கூறுகளை நன்கு   அலசிப் பார்க்க வேண்டும். Open Source  என்பதற்கு திறவெளிமூலம் எனும் சொல்லே சரியாக அமைகின்றது என்பது என்னுடைய கருத்து.

சில தமிழாக்கங்கள்:

function = செயலாற்றி
open source = திறமூலம், திறந்த வெளிமூலம்
open base = திறந்த அடித்தளம்
open walk = திறந்த நடை
open end = திறந்த முனை
open university = திறந்தவெளி பல்கலைக்கழகம்
source document = மூல ஆவணம்