19 ஆகஸ்ட் 2012

பிரம்படிகளின் பிம்பங்கள்

எச்சரிக்கை: பிரம்படிகள் கிடைத்த மனிதர்கள் அனுபவித்த கொடூர வேதனைகளைப் பற்றிய கட்டுரை. இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்க்கலாம். இந்தக் கட்டுரை மலேசியாவில் வெளிவரும் ‘தினக்குரல்’ நாளிதழில் 29.6.2012இல் பிரசுரிக்கப்பட்டது.

 

மனிதனாகப் பிறந்த வருக்கும் ஏதாவது ஒரு வகையில் பிரம்படி கிடைத்து இருக்கும். ஆசிரியரிடம் சின்ன சின்ன அடிகள். டியூஷன் ஆசிரியரிடம் லேசான அடிகள். அப்பா அம்மாவிடம் செல்லமான அடிகள். தாத்தா பாட்டியிடம் தமாஷான அடிகள். வை எல்லாம் அடுத்த விநாடியே மறைந்து போகும் கொசுக்கடிகள். அவை மனதில் நிற்பதும் இல்லை. கனவில் வருவதும் இல்லை. காணாமல் போகின்ற அனுபவங்கள்.

ஆனால், சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொடுக்கிறார்களே பிரம்படிகள்,  அவை ஜென்மா ஜென்மத்திற்கும் சாகாவரம் பெற்றவை. ஓர் அடியில் மேல் தோல் பிய்த்துக் கொள்ளும். இரண்டாவது அடியில் சதை பெயர்த்துக் கொண்டு வரும். மூன்றாவது அடியில் தோல் சதை காற்றில் பஞ்சு மாதிரி பறக்கும்.  நான்காவது அடியில்  இரத்தம் பிய்த்துக் கொண்டு ஊற்றும்.


எல்லாம் பிட்டத்தில் விழும் அடிகள்தான். அதனால் செத்துச் சமாதி கட்டும் போதும்கூட பிரம்படி வடுக்கள் சொந்த பந்தமாக ஒட்டிக் கொண்டே வரும். அத்தனை ஆழமான வடுக்கள்.

ஆயுதமேந்திய கொள்ளை, வன்புணர்வு (Rape), வன் தாக்குதல் (Aggravated Assault), ஒருபால்புணர்வு, நம்பிக்கை மோசடி, வழிப்பறி கொள்ளை, வீட்டை உடைத்து கொள்ளை, மானபங்கம் செய்தல் (Outrage of Modesty), விலைமாதின் வருமானத்தில் வாழ்தல் (Living on prostitution)  போன்ற குற்றங்களுக்காகப் பிரம்படிகள் கொடுக்கப்படுகின்றன.


2003 ஆம் ஆண்டில் இருந்து வட்டி முதலைகளுக்கும், திருட்டுத்தனமாய் வட்டிக்கு விடுபவர்களுக்கும் பிரம்படிகள் கொடுக்க சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. ஒரு கொசுறு. பிரம்படிகள் ஆண்களுக்கு மட்டுமே. பெண்களுக்கு இல்லை.  

ஒருவருக்கு 12 பிரம்படிகள் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், அத்தனைப் பிரம்படிகளையும் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் கொடுத்து தீர்த்துவிடுவார்கள். தவணை முறையில் இந்த மாதம் இரண்டு அடுத்த மாதம் இரண்டு என்கிற பேச்சிற்கே இடமில்லை.


ப்படித்தான் வெளியில் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். அது தவறு. 24 பிரம்படிகள் என்றால் அந்த 24 பிரம்படிகளையும் ஒரே நாளில் ஒரே தடவையாக கொடுத்து முடித்து விடுவார்கள். (சான்று: http://www.corpun.com/singfeat.htm#offences -  Judicial Caning in Singapore, Malaysia and Brunei)  

ஒரு கைதிக்கு அதிகபட்சமாக 24 பிரம்படிகள் கொடுக்க சட்டம் அனுமதி அளிக்கிறது. அப்படி 24 பிரம்படிகளையும் கொடுக்கும் போது பக்கத்தில் மருத்துவர் எப்போதும் தயார் நிலையில் இருந்து கொண்டே இருப்பார். ஒரு கைதியால் அத்தனை அடிகளையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்று பரிசோதனை செய்து உறுதிபடுத்துவார்.


பெரும்பாலும் நான்காவது ஐந்தாவது அடிகளில் மயக்கம் வந்துவிடும். அருகில் இருக்கும் சிறைப் பாதுகாவலர்கள் மயக்கத்தைத் தெளிய வைப்பார்கள். மயக்கம் தெளிந்ததும் மறுபடியும் பிரம்படிகள் தொடரும்.  மருத்துவர் நிறுத்தச் சொல்லும் வரையில் தண்டனை நிறுத்தப் படாது. அடி வாங்கும் போது கைதிக்கு ஒன்றுக்கு போவது இரண்டுக்குப் போவது எல்லாம் சகஜம்.


ஒரு கைதிக்கு பிரம்படி கொடுக்க முடியுமா முடியாதா என்பதை மருத்துவ ரீதியில் முதலில் உறுதி செய்து கொள்வார்கள். எந்த நேரத்திலும் பிரம்படியை மருத்துவர் நிறுத்த முடியும். பிரம்படி கொடுக்கப்பட்டதும் அந்தக் கைதி உடனடியாக சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார். அங்கே அவரைக் குப்புறப் படுக்க வைத்து பிட்டத்தைச் சுத்தம் செய்து மருந்து போடுவார்கள்.


காயங்கள் ஆறுவதற்கு மூன்று வாரங்கள் பிடிக்கும். அந்த மூன்று வாரங்களும் ஒழுங்காக உட்கார முடியாது. மல்லாந்து படுக்க முடியாது. சிலுவார் போட்டு நடக்க முடியாது. கைலிதான் கட்ட வேண்டும். பிரம்படியின் வலி இருக்கிறதே, அது பத்தாண்டுகள் வரை நீடித்து இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

தவிர,  இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு விதிவிலக்கு. அவர்களுக்கு பிரம்படி கிடையாது. (சான்று: "10 years on, and we still feel the pain", The New Paper, Singapore, 10 September 1991)


எப்போது பிரம்படி கொடுக்கப்படும் என்பதைக் கைதியிடம் முன்கூட்டியே சொல்லமாட்டார்கள். கடைசி நிமிடத்தில்தான் சொல்வார்கள்.  மலேசியாவைப் பொருத்த வரையில் சிறைச்சாலையில் ஒரு திறந்த வெளியில்தான் பிரம்படி கொடுக்கப்படும்.

பிரம்படி கொடுக்கப்படுவதை மற்ற கைதிகள் பார்க்க முடியாது. அந்தச் சமயத்தில் சிறை அதிகாரிகள் சிலர், ஒரு மருத்துவர், ஆண் நர்ஸ்கள், பிரம்படி கொடுப்பவர்கள் மட்டுமே இருப்பார்கள். பிரம்படி கொடுப்பவர்களைப் பிரம்படிக்காரர்கள் என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் Caning Officers.


இவர்கள் நல்ல உடல்கட்டுடன், தற்காப்புக்கலை தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த பிரம்படி மன்னர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். மணல் மூட்டைகள், வைக்கோல் பொம்மைகள், வாழைமரங்கள் போன்றவற்றில் பல மாதங்களுக்கு பிரம்படி பயிற்சி பெற்றவர்கள். மலேசியாவில் மொத்தம் 62 பிரம்படிக்காரர்கள் இருக்கிறார்கள். (சான்று: Amnesty International Briefing on Singapore, January 1978)

பிரம்படி என்பது குறைவான உடல் சேதத்தில் மிகையான வேதனையைத் தருவதாக இருக்க வேண்டும். அதுதான் பிரம்படியின் தாரக மந்திரம். பிரம்படிக்காரர்களுக்கு அவர்களுடைய சம்பளம் போக, ஒவ்வோர் பிரம்படிக்கும் மிகை ஊதியம் (Bonus) வழங்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு வரை ஒரு பிரம்படிக்கு 3 ரிங்கிட்  மிகை ஊதியம். இப்போது ஒரு பிரம்படிக்கு பத்து ரிங்கிட். காஜாங் சிறைச்சாலையில் ஒவ்வொரு புதன், வெள்ளிக்கிழமைகளில் பிரம்படிச் சடங்கு நடைபெறுகிறது.


சிறைச்சாலை விதிகளின்படி ஒருவருக்கு பிரம்படி அவருடைய பிட்டத்தில்தான் கொடுக்கப்பட வேண்டும். மற்றபடி உடம்பில் வேறு எங்கும் அடிபடக்கூடாது.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் கைதிகள் அனைவரையும் ஓர் அறைக்குள் பூட்டி வைப்பார்கள். பின்னர் ஆறு ஆறு பேராக அறைக்கு வெளியே கொண்டு வரப்படுவார்கள். நடைபாதையில் உட்கார வைக்கப்படுவார்கள். பின்னர் ஒருவர் ஒருவராக நிர்வாணமாக, பிரம்படி கொடுக்கப்படும் இடத்திற்கு அழைத்து வரப்படுவார்.


அங்கே இருக்கும் A வடிவ சாய்கால் சட்டத்தில் (Trestle A-frame) கைதி நிற்க வைக்கப்படுகிறார். அவருடைய ஆண் பாகத்தில் ஒரு சின்ன பஞ்சு மெத்தை பாதுகாப்புக்காக வைக்கப்படுகிறது.  சிறுநீரகப் பகுதியின் மேல்புறமும் ஒரு பஞ்சு மெத்தை வைக்கப்படுகிறது. முகம் கட்டப்படுவது இல்லை. வாயில் துணி வைக்கப்படுவதும் இல்லை. கைகளும் கால்களும் வார்ப்பட்டைகளினால் இறுக்கமாகக் கட்டப்படுகின்றன. பின்னர், பிரம்படிக்காரர் கைதி கட்டப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து ஐந்து அடிகள் பின்னால் தள்ளி நிற்பார்.

முதல்நாள் நீரில் ஊறப்போட்ட பிரம்பு இளக்கமாகவும் பதமாகவும் இருக்கும். நீரில் ஊறப்போட்ட பிரம்பு உடையாது, சிதறாது. இன்னோர் அதிகாரி ‘சத்துஎன்று சத்தமாகச் சொல்வார். அடுத்த ஐந்தாவது விநாடியில் கைதியின் பிட்டத்தில் அடி விழும். அடுத்து, முப்பது விநாடிகள் கழித்து ‘டுவாஎன்று உரக்கமாகக் கத்துவார். இரண்டாவது அடி விழும்.


சமயங்களில் இரு பிரம்படிக்காரர்கள் மாறி மாறி அடிகளைக் கொடுப்பார்கள். பிட்டத்தில் அடி விழும் போது அந்தப் பிரம்பின் நுனியை பிட்டத்தோடு சேர்த்து இழுப்பார்கள். அப்படி இழுப்பது என்பது கொடுமையிலும் கொடுமையான வலியைக் கொடுக்கும். எவ்வளவு பலத்தைக் கொண்டு அடிக்க முடியுமோ அவ்வளவு பலத்தையும் கொண்டு ஒரே இடத்தில் குவித்து அடியைக் கொடுப்பார்கள்.

ஒரு பிரம்பின் நீளம் 4 அடி. அதாவது ஒரு மீட்டர். அதன் தடிப்பு அரை அங்குலம். (1½ செண்டிமீட்டர்) மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பிட்டத்தை நோக்கி வரும் பிரம்பு,  90 கிலோகிராம் தாக்கத்தைக் கொடுக்கிறது. அந்தத் தாகத்தில்தான் தோல் பிய்ந்து, சதை பிய்ந்து, இரத்தம் பீய்ச்சுகிறது. 


ஆரமபத்தில் ஒரே இடத்தில் இரண்டு அடிகள் அடுத்து அடுத்து விழுவது இல்லை. ஓர் அடி மேலே விழும். அடுத்த அடி சற்று கீழே அல்லது அதற்கும் மேலே விழும்.  அந்த அளவுக்கு பிரம்படிக்காரர்கள் கெட்டிக்காரர்கள்.  

ஆனால், பதினைந்தாவது பிரம்படிக்கு மேலே போகும் போது, அடிபட்ட இடத்திலேயே அடி விழுவதும் உணடு. அடிபட்ட இடத்திலேயே அடி விழுந்தால் வலி குறைவாக இருக்கும் என்பதையும் கண்டுபிடித்து வைத்து இருக்கிறார்கள். புதிய இடத்தில் அடி விழும் போதுதான் அதிகமான வேதனையைக் கொடுக்கும்.


இவ்வளவு நடந்து கொண்டு இருக்கும் போது கைதியின் எதிர்வினை எப்படி இருக்கும். அதையும் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான கைதிகள் முதல் மூன்று அடிகள் வரை போராட்டம் நடத்துவார்கள். அதற்கு பின்னர் அவர்களுடைய போராட்டம் குறைந்து போகும். ஏன் என்றால் அந்தக் கட்டத்தில் அவர்களுடைய உடல் பலகீனமாகிப் போய் விடுகிறது.

மூன்றாவது அடிக்குப் பின்னர் அதிர்ச்சியில் உடல் சரிந்து போகும். உடனே மருத்துவரும் அவருடைய உதவியாளர்களும் கைதியின் காயங்களுக்கு மருந்து போடுவார்கள். மயக்கம் அடைந்து விட்டது போல சிலர் நடிப்பதும் உண்டு. மருத்துவர் பரிசோதித்து மயக்கம் இல்லை என்று சொன்னதும், பிரம்படிச் சடங்கு மறுபடியும் தொடங்கும்.


நீதிமன்றம் விதித்த அத்தனை பிரம்படிகளையும் வழங்கிய பின்னர்தான் சடங்கு ஒரு முடிவிற்கு வரும். 16 பிரம்படிகள் என்றால் 16 பிரம்படிகளும் முடிந்தாக வேண்டும். மருத்துவர் நிறுத்துச் சொல்லும் வரையில் நிறுத்த மாட்டார்கள்.

அடி வாங்கும் போது கைதிகளில் சிலர் வலுக்கட்டாயமாக அமைதியாக நிற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மூன்று அடிகள் வரை தாக்குப் பிடிப்பார்கள். அதற்கு பிறகு அவர்களால் முடியாது. அடி விழும் போது சிலர் ஆண்டவரைச் சத்தம் போட்டு கூப்பிடுவார்கள்.  சிலர் கருணை காட்டும்படி கெஞ்சிக் கதறுவார்கள். சிலர் வெறித்தனமாக அலறுவார்கள். (சான்று: "The Caning of Michael Fay: The Inside Story by a Singaporean", by Gopal Baratham, KRP Publications, Singapore, 1994)


பிரம்படிகள் கொடுக்கப்படுவதில் முதல்வகைப் பிரம்படி என்றும் இரண்டாம் வகைப் பிரம்படி என்றும் இரு வகைகள் உள்ளன.  இதில் முதல் வகை மிக மோசமான வேதனையைக் கொடுக்கும். இரண்டாம் வகை சுமாரானது. மலேசியாவிற்குள் கள்ளத்தனமாக வந்து பிடிபடுபவர்களுக்கு இரண்டு பிரம்படிகள் கொடுக்கப்படுவதற்கு சட்டம் வகை செய்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரம்படிகள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. வணிகக்குற்றங்கள் (White Collar Offences) தண்டனை பெற்றவர்களுக்கும் இரண்டாம் வகை பிரம்படிகளே!

2004, 2005 ஆம் ஆண்டுகளில் 18,607 கள்ளக்குடியேறிகளுக்கு பிரம்படிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் 15,214 பேருக்கு ஒரே ஒரு பிரம்படி கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் 11,473 இந்தோனேசியர்களும் பிரம்படி பெற்றார்கள். அண்மைய புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை.

இன்னும் ஒரு விஷயம். ஒருவருக்கு அதிகபட்சமாக 24 பிரம்படிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று சட்டம் சொல்கிறது. அவர் செய்த ஒரு குற்றத்திற்கு 24 பிரம்படிகள் என்றால் 24 பிரம்படிகள்தான்.

ஆனால், அவர் இரண்டு குற்றங்களைச் செய்து, 48 பிரம்படிகள் என்றால், அவர் அந்த 48 பிரம்படிகளையும் வாங்கித்தான் ஆக வேண்டும். தயவு தாட்சண்யம் கிடையாது. இரண்டு தண்டனைகளும் (Concurrently) ஒரு சேர வழி இல்லை. 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு காம வெறியனுக்கு 50 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

அது மலேசிய சிறைச்சாலை சாதனை. மற்றபடி, மருத்துவர் அனுமதிக்காமல் அந்த 50 பிரம்படிகளையும் ஒரே சமயத்தில் கொடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டும் இல்லை. 50 அடிகளையும் ஒரே சமயத்தில் கொடுத்து விடுங்கள் என்று கைதி கேட்டுக் கொண்ட பிறகுதான் தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரில் சற்று மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி. 1991ஆம் ஆண்டு குவேக் கீ சோங் என்பவர் ஆயுதம் ஏந்தி நான்கு முறை கொள்ளைகள் அடித்தார். அவருக்கு சிறைத்தண்டனையும், ஒரு கொள்ளைச் சம்பவத்திற்கு 12 பிரம்படிகளும் கொடுத்து தீர்ப்பு வழங்கபட்டது. அப்படி என்றால் 48 பிரம்படிகள்.

ஆனால், அந்த 48 பிரம்படிகளையும் ஒரே தடவையாக கைதிக்கு கொடுத்துவிட்டனர். அரசாங்கத்தின் மீது குவேக் வழக்கு தொடர்ந்தார். 48 பிரம்படிகளுக்குப் பதிலாக 12 பிரம்படிகள் என நான்கு முறை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார். அரசாங்கம் அவருக்கு நஷ்டயீடு கொடுத்தது.  அதுவும் ஒரு வரலாறு.

பிரம்படிக்காரர்களின் மனநிலை எப்படி இருக்கும். அரசாங்கத்திற்காகவும் நீதித்துறைக்காகவும் ஒருவரை அடிக்கிறேன். வேண்டும் என்று ஒருவரைத் துன்புறுத்தவில்லை.  ஆண்டவா என்னை மன்னித்துவிடு என்று வேண்டிக் கொண்டுதான் பிரம்படி கொடுக்கிறார்கள். தூக்குத் தண்டனை நிறைவேற்றுகிறார்களே அவர்களில் சிலருக்கு பல நாட்கள் தூக்கமே வராதாம். சாப்பிட முடியாதாம்.

மனிதனாய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்று ஒரு கவிஞர் பாடினார். அதையே கொஞ்சம் மாற்றினால் மனிதாய்ப் பிறந்து பிரம்படி வாங்க மாபாவம் செய்திடல் வேண்டும் அம்மா என்று வருகிறது.

உப்பைத் தின்ன வேண்டாம். தண்ணீருக்கு அலையவும் வேண்டாம். தப்புகளைச் செய்ய வேண்டாம் பிரம்படிகளைப் பெறவும் வேண்டாம். பிரம்படிகள் இருக்கிறதே... ஐயோ கடவுளே... தயவு செய்து அது வேண்டவே வேண்டாம். தப்பு தண்டாக்கள் வேண்டாம்... வேண்டாம்.

நியாயமாக, நீதியாக, சட்டத்திற்கு கட்டுப்பட்டு, நல்ல ஒரு மனிதனாக நடந்து கொள்வோம். பிரம்படிகளைப் பற்றி நினைக்கவே வேண்டாம். பிரம்படிகள் வேண்டவே வேண்டாம். 

(படங்கள்: மலேசியாவில் இருக்கும் புடு சிறைச்சாலை, காஜாங் சிறைச்சாலைகளின்  அரும் காப்பகத்தில் இருந்த கிடைத்த பதிவுப்படங்கள். இந்தப் படங்கள் மற்ற சில கல்விக் கூடங்களிலும் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.)

15 ஆகஸ்ட் 2012

கொலம்பஸ் செய்த கொடுமைகள்

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கிறிஸ்தபர் கொலம்பஸ்என்று பதில் வரும். சிலர் அவரை மாவீரன் கொலம்பஸ் என்று புகழாரம் சூட்டுவார்கள். சிலர் மனிதர்களில் மாணிக்கம் என்றும் பரிவாரம் கட்டுவார்கள். சிலர் இமயத்தின் சிகரத்தில் வைத்து ஏற்றி வைப்பார்கள். இன்னும் சிலர் அமெரிக்காவைத் தேடி வந்த இமயவர்மன் என்றும் பாலாபிஷேகம் செய்வார்கள்.



ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர் மனுக்குலத்தின் மனதில் நிலைத்து நிற்கும் தகுதியை இழந்து விட்டார். அதுதான் உண்மையான உண்மை. பள்ளி வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டிப் பாருங்கள். கொலம்பஸ் என்பவர் உலகின் உன்னதமான கண்டுபிடிப்பாளராகச் சித்தரிக்கப் படுகிறார். கல்லூரி நூலகங்களில் தேடிப் பாருங்கள். புதிய உலகைக் கண்டுபிடித்த ஓர் அவதாரப் புருஷனாகச் சிறப்புச் செய்யப் படுகிறார். உண்மைதான்.

தூக்கில் தொங்கும் அரவாக் பெண்கள்
அவருடைய மறுபக்கத்தைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் மூச்சு அடைத்து பேச்சு நின்று போகும். அந்த அளவிற்கு திடுக்கிடும் அலி பாபா கதைகள் மூட்டை மூட்டையாகக் இருக்கின்றன. அவற்றைக் கட்டிக் கொண்டு ஓடும் கொலம்பஸ் எனும் தனிமனிதர், மனித நீரோட்டத்தில் மூழ்கடிக்கப் படுகிறார். அந்தக் கதைகள் இதிகாச இடிச்சுவர்களாகவும் மாறிப் போகின்றன.

அரவாக் மக்கள்
கொலம்பஸ், ஒரு பாவப்பட்ட ஜென்மமாகத் தெரிகின்றார். கொலம்பஸ் ஒரு பரிதாபப் பிறவியாகவும் மங்கிப் போகிறார். உண்மையிலேயே அவரை இட்லருக்கு ஜோடியாக சேர்க்கலாம். அல்லது அடுத்த வாரிசாக இடி அமினைக் கூட்டு சேர்க்கலாம். தப்பே இல்லை.
(சான்று:http://kathmanduk2.wordpress.com/2007/10/09/in-1492-columbus-sailed-the-ocean-blue/)

ஏன் தெரியுமா? அவர் செய்த பாவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. உலகத்தின் படு மோசமான சித்ரவதைகளுக்கும் ஒரே ஓர் ஓட்டுச் சாவடியாக வாழ்ந்து திகழ்ந்தவர் தான் இந்தக் கொலம்பஸ். இப்படி சொன்னால் நீங்கள் என்னை நம்புவீர்களா என்று தெரியவில்லை. நம்புவதும் நம்பாததும் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், நான் சொல்லப் போகும் இந்த உண்மைகள் சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.

அரவாக்ஸ்
ஆக, எல்லாருக்கும் தெரிய வைப்பதே நல்லது. கோகினூர் வைரத்திற்கும் கோலார் தங்கத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும் அல்லவா. அதே போல கொலம்பஸின் உண்மையான அகத்திற்கும் புறத்திற்கும் இடையே நிலவும் வித்தியாசம் தெரிய வேண்டும் அல்லவா?

பணம், புகழ், செல்வாக்கிற்காகப் பல ஆயிரம் சாமான்ய மனிதர்களை வெட்டிச் சாய்த்தவர்தான் இந்தக் கொலம்பஸ். அந்தச் சமாதிகளில் கன்னிப் பெண்களைக் கட்டி வைத்து  காமக் களியாட்டம் போட்டவர் தான் இந்தக் கொலம்பஸ். உடல்பசிக்கு சின்னஞ்சிறு சிறுமிகளைக் கிழித்துப் போட்டு தாண்டவம் ஆடியவர்தான்  இந்தக் கொலம்பஸ்.

கொடுமை செய்யப்பட்ட அரவாக்ஸ் பெண்கள்

(கீழ்க்காணும் இணையத் தளத்தில் ஹாயித்தி நாட்டு மக்களை எப்படி விலங்கிட்டு அடிமைகள் ஆக்கினார்; இளம் பெண்களை நூற்றுக்கணக்கில் பிடித்துக் கொண்டு போய் ஐரோப்பாவில் விற்று காசு பார்த்தார் எனும் விவரங்கள் உள்ளன. இவருடைய காம சேட்டைகளுக்கு அளவே இல்லை. அவற்றை நான் இங்கே எழுதவில்லை.
(சான்று: http://www.4tamilmedia.com/special/republish/1392-2011-10-13-07-16-01)

கொலம்பஸின் படத்தைப் பாருங்கள். பால் வடியும் முகம் என்று சொல்வார்களே அதே முகம். அந்தப் பால்முகத்தின் மறுபக்கத்தைத் திருப்பிப் போடுகிறேன். படியுங்கள். படித்து விட்டு கொலம்பஸ் கொன்று குவித்த அந்த வெள்ளந்தி மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் இறுதிக் கடனாக அமையட்டும்.

கொலம்பஸ் எதிர்ப்பு பதாகை
யார் இந்த கொலம்பஸ் Christopher Columbus?  இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரில் 1451-இல் பிறந்தவர். இவர் ஒரு கடல் பயணி. ஒரு வணிகர். 1492-இல் அட்லாண்டிக் மாக்கடலைக் கடந்து கரிபிய தீவுகளுக்கு வந்த முதல் ஐரோப்பியர். இதுவும் தவறு தான். ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆக, அந்த நாடுகளை வெளியுலகத்திற்கு விளம்பரம் செய்த பெருமையை மட்டும் இவருக்கு கொடுக்கலாம்.

பதின்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள், ஜப்பானியர்கள், ஆசிய நாட்டவர்கள் பெர்ரிங் நீரிணை வழியாக அமெரிக்காவில் நுழைந்து கொடி கட்டி விட்டனர். அவர்களின் கலப்புதான் இப்போதைய அமெரிக்கச் சிவப்பு இந்தியர்கள். 1002-இல் வைக்கிங் இனத்தைச் சேர்ந்த லெய்ப் எரிக்சன் (Leif Erikson) என்பவர் கனடாவில் தடம் பதித்தார். 1424-இல் அர்மாண்டோ கோர்ட்டசா (Armando Cortesao) எனும் போர்த்துகீசியர் அமெரிக்காவின் வரைபடத்தை வரைந்து காட்டினார்.
அதன் பின்னர் அமெரிகோ வெஸ்புசி (Amerigo Vespucci) எனும் இத்தாலியர், தென் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இவருடைய அமெரிகோ எனும் பெயரால் தான் அமெரிக்காவிற்கு பெயரே கிடைத்தது. இவர்களுக்குப் பின்னால் 1492-இல் போனவர் தான் நம்முடைய கதாநாயகன் கொலம்பஸ்.
(சான்று:http://www.associatedcontent.com/article/2277079/who_discovered_america_not_christopher.html?cat=37)

இந்தியாவைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று தயிர் சாதம் கட்டிக் கொண்டு கிளம்பிப் போனவர்  கொலம்பஸ். ஆனால், அவர் இந்தியாவைக் கண்டுபிடிக்கவில்லை. மேற்கு இந்தியத் தீவுக் கூட்டத்தில் உள்ள பஹாமாஸ் தீவில் தரை தட்டினார். அதன் பின்னர், அடுக்கடுக்காக பல அமெரிக்க நிலப்பகுதிகளில் கால் பதித்தார். அவற்றை எல்லாம் ஸ்பெயின் நாட்டின் சொத்துகளாகப் பிரகடனம் செய்தார்.


நெருப்பில் வீசப்படும் குழந்தைகள்
இந்த மனிதர் அப்படியே இந்தியாவிற்கு வந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்தக் காலக் கட்டத்தில் பாமினி பேரரசு இந்தியாவை ஆட்சி செய்து வந்தது. மலாக்காவைப் பரமேஸ்வரனின் சந்ததியினர் ஆட்சி செய்து வந்தனர். 1497-இல் தான் வாஸ்கோட காமா இந்தியாவிற்கு வந்தார்.

புது இடங்கள், புது மனிதர்கள், புது வாழ்க்கை முறைகள். புதுப் பூர்வீகங்கள். வெளுத்ததை எல்லாம் பால் என்று நினைத்த பூர்வீக  வெள்ளந்திகள்; மண்ணின் மைந்தர்கள். அவர்களை அப்பாவித் தனமான பிள்ளைப் பூச்சிகள் என்று சொன்னால் சரியாக இருக்கும். கபடு சூது தெரியாத சமாதானப் பிரியர்கள். அவர்களை அரவாக் என்று அழைக்கிறார்கள்.

கால்கள் வெட்டப்படும் அரவாக்ஸ் மக்கள்
அந்த அரவாக்ஸ் பூர்வீக மக்களில் பல ஆயிரம் பேரை கொலம்பஸ் அடிமைகளாக்கினார்.http://www.blackstudies.ucsb.edu/antillians/arawaks.html
அவரை எதிர்த்துப் போராட்டம் செய்தவர்களை அடியோடு அழித்துச் சமாதி கட்டினார். அவர்கள் வைத்திருந்த தங்கம், முத்துப் பவளங்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்தார்.

இவை எல்லாம் முடிந்த பிறகுதான் தன்னோடு வந்த நூற்றுக்கணக்கான வேலையாட்களுக்குப் பரிசுகள் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார். யாருடைய மனைவி, யாருடைய மகள் என்று ஒரு கணக்கு வழக்கு இல்லை. ஒரு கிராமத்திற்குள் போக வேண்டியது. ஆண்களை எல்லாம் இழுத்து வந்து ஒரு கூடாரத்திற்குள் கட்டிப் போடுவது.

கொலம்பஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
பெண்களைச் சுற்றி வளைத்து வரிசையாக நிற்க வைப்பது. எந்த வேலைக்காரனுக்கு எந்தப் பெண் வேண்டுமோ அவளை ‘இந்தா எடுத்துக்கோஎன்று தூக்கிப் போடுவது. அப்படித்தான் கொலம்பஸின் அன்பளிப்பு அபிஷேகம் நடந்தது.
(சான்று:http://www.associatedcontent.com/article/234894/christopher_columbus_hero_or_villain.html?cat=37)

இப்படித்தான் கொலம்பஸ் பல ஆயிரம் அரவாக்ஸ் இனத்துப் பெண்களைக் கத்தி முனையில் சின்னா பின்னமாக்கினார். பல ஆயிரம் கன்னிப் பெண்களைத் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்களாக ஆக்கினார். பல ஆயிரம் சின்னச் சின்னச் சிறுமிகளைச் சுருட்டிப் போட்ட சுண்டெலிகளாக  மாற்றினார்.

கொடுமைப்படுத்தப் படும் அரவாக்ஸ்
தப்பி ஓடிய பெண்கள், வணங்காமல் இணங்காமல் போன பெண்கள், குற்றுயிரும் குலை உயிருமாய்க் கிடந்த மிச்சம் மீதிப் பெண்களை என்ன செய்தார் தெரியுமா? தன்னுடன் கொண்ட வந்த நாய்களுக்கு தீனியாகப் போட்டார். அந்தப் பெண்களின் ஓலமும் ஒப்பாரியும் அடங்கிப் போகும் வரை நாய்கள் கடித்துக் குதறின.http://thanksalotobama.com/thanksobblog/?p=1445

அண்மையில் கிடைக்கப் பெற்ற வரலாற்றுச் சான்றுகள் இந்த உண்மைகளைச் சொல்கின்றன. உண்மையான கொலம்பஸின் வரலாற்றைத் தெரிந்து கொண்டவர்கள் இப்போது கொலம்பஸ் எனும் பெயரைக் கேட்டதும் முகம் சுழிக்கிறார்கள். இப்படிப் பட்ட ஓர் அரக்கனா என்று அதிர்ச்சியும் அடைகின்றனர்.

அரவாக்ஸ் மக்கள்
அமெரிக்காவில் கொலம்பஸ் எனும் சொல் ஒரு பாவகரமான சொல் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. அங்கே கொலம்பஸ் தினம் கொண்டாடப்படுவதில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கொலம்பஸின் கொடுமைகளுக்கு, கொடூரங்களுக்கு எல்லாம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அமெரிக்கர்கள் காலம் தாழ்ந்து இப்போது ஆதங்கப் படுகிறாகள்.

கொலம்பஸ் தானே கைப்பட எழுதி வைத்த தினக் குறிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டு இருக்கின்றன.

கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான பார்த்தலோமே லாஸ் காஸாஸ்(Bartolome De Las Casas) என்பவர் கொலம்பஸ் செய்த கொடுமைகளைப் பார்த்து மனம் நொந்து போய் எழுதிய குறிப்புகளும் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் அமெரிக்கப் பூர்வீக மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டு உள்ளன.

அமெரிகோ வெஸ்புசி
1492 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-இல் கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்தார். அப்போது அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த மக்கள் சமாதான விரும்பிகள் என்று அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தன்னுடைய  தினக்குறிப்பில் இப்படி எழுதி இருக்கிறார்.http://www.associatedcontent.com/article/234894/christopher_columbus_hero_or_villain.html?cat=37

"அரவாக்ஸ் மக்கள் தம்மிடம் இருப்பதை எல்லாம் எல்லோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறார்கள்."

"அரவாக்ஸ் மக்களிடம் எந்தவித ஆயுதங்களும் இல்லை. அவர்களுடைய சமூகத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை. கைதிகள் என்று யாரும் இல்லை. அங்கே சிறைகள் இல்லை. எங்களுடைய கப்பலான சாந்தா மரியா கரை தட்டிய போது கப்பலில் இருந்தவர்களையும் கப்பலில் இருந்த பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த எந்த ஒரு பொருளையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை..."

நாய்களுக்குத் தீனியாகும் அரவாக்ஸ் மக்கள்
இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யும் பரந்த மனப்பானமை கொண்ட நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைமாறு என்ன தெரியுமா?

அந்த மக்களை அப்படியே அடிமைகளாக்கினார். அங்கு இருந்த தங்கச் சுரங்கங்களில் அவர்களைக் கட்டாய வேலை வாங்கினார். மகிழ்ச்சியாக வாழ்ந்த அரவாக்ஸ் மக்கள் மனம் ஒடிந்து போனார்கள். அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கூட்டுத் தற்கொலையும் செய்து கொண்டனர்.

அரவாக்ஸ் பெண்களைக் கொலம்பஸின் வேலையாட்கள் பாலியல் அடிமைகளாக ஆட்டிப் படைத்தனர். கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் வேலையாட்கள் 9 , 10 வயது சிறுமிகளைத் தேடிச் சென்றார்கள்..."
(சான்று:http://www.associatedcontent.com/article/31981/leif_erikson_the_real_european_discoverer.html?cat=37)

அரவாக்ஸ் மக்களை அடிமைகளாக்கிய பிறகு அவர்கள் இறக்கும் வரையில் வேலை வேலை என்று அவர்களுடைய இரத்தம் பிழிந்து வேலை வாங்கப் பட்டனர். ஓர் அடிமை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் எடுத்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குத் தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள்.

அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரவாக்ஸ் தொழிலாளிகளின் மூக்கு, காதுகள் அறுக்கப் பட்டன. அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடியவர்கள் பிடிபட்டால் உயிரோடு கொளுத்தப் பட்டனர்.

கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். வேட்டையாடும் நாய்கள் அவர்களைக் கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாகப் பிய்த்து விடும். அது மட்டும் இல்லை. கொலம்பஸின் வேலைக்காரர்கள் தங்களுடைய நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டித் தீனி போட்டார்கள்! என்னே கொடுமை.

ஒரே நாளில் கொலம்பஸ் ஆட்கள் 3000 பேரின் தலைகளை வெட்டி வீசி இருக்கிறார்கள். 3000 பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். 

வரலாற்று ஆய்வாளர்கள் இப்படி எழுதி உள்ளனர்.In 1492, the population on the island of Hispaniola probably numbered above 3 million. Within 20 years of Spanish arrival, it was reduced to only 60,000. Within 50 years, not a single original native inhabitant could be found.

1492- இல் முப்பது இலட்சம் அரவாக் மக்கள் இருந்தனர். ஸ்பெனியர்கள் வந்த 20 ஆண்டுகளில் அந்தத் தொகை 60,000 ஆகக் குறைந்தது. 50 ஆண்டுகளில் ஒரே ஓர் அரவாக்ஸ் மனிதர் கூட இல்லை.

ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால்  இருந்து வந்த கொலம்பஸையும் அவனுடைய ஆட்களையும், அரவாக்ஸ் மக்கள் இனிய முகத்துடன் வரவேற்றார்கள். முகம் சுழிக்காமல் விருந்தோம்பல் செய்தார்கள். இருந்ததை எல்லாம் கொடுத்தார்கள். அப்பேர்ப்பட்ட அந்த வெள்ளந்தி மக்களுக்கு கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் என்ன என்று பார்த்தீர்களா.

இவை வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய வரலாற்றுப் புதினங்கள் தானே. மலரும் பூமியில் மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய மக்கள் மலர்ந்தும் மலராத பாவி மலர்களாகப் போய் விட்டனர். அவர்கள் காலத்தால் மறக்க முடியாத சொப்பனச் சீமான்கள். அவை காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுகள்.

இலங்கையில் ஓர் இனம் அழிவதற்கு காரணமாக இருந்தது மகிந்தா என்கின்ற மனிதம் கெட்டுப் போன ஒரு பேய். அமெரிக்க மண்ணில் அரவாக்ஸ் என்கிற இனம் அழிவதற்கு காரணமாக இருந்தது கொலம்பஸ் என்கின்ற ஒரு நன்றி கெட்ட பேய். அந்த வெள்ளந்தி மக்களுக்காக ஒரு மௌன அஞ்சலி. அதில் சில மௌன ராகங்கள்!