18 ஜூன் 2014

பில் கேட்ஸ்

 மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

கணேசன் கணபதி, தாமான் இண்டா, தாப்பா
கே: உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். அவர் ஒரு கஞ்சன் என்று கேள்விப் பட்டேன். உண்மையா?


ப: நீங்கள் கேள்விப் பட்டது ரொம்பவும் தப்புங்க. பார்ப்பதற்குத்தான் அவர் ஒரு  கஞ்சனைப் போலத் தெரியும். முன்பு நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், அவர் கஞ்சன் இல்லை. கொடை நெஞ்சங்களில் இவரும் ஓர் அவதாரம் என்றுதான் சொல்ல வேண்டும். 



கணினி மூலமாக பல ஆயிரம் கோடி டாலர்களைச் சம்பாதித்தார் என்பது உண்மைதான். சின்னச் சின்ன கணினி நிறுவனங்களைக் களை எடுத்தார் என்பதும் உண்மைதான். ஆனால், கோடிகளைச் சம்பாதித்த பிறகு, மனிதர் மாறிப் போனார் என்பதும் உண்மை தான். இருந்தாலும் இப்போது நிறைய தான தர்மங்களைச் செய்து வருகிறார். 

அவருடைய உண்மையான சொத்து மதிப்பு 29,400 கோடி  மலேசிய ரிங்கிட். இதில் 8,600 ஆயிரம் கோடிகளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்து விட்டார். அதனால் உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப் பட்டார்.  

இப்போது 20,800 கோடிகளை வைத்து இருக்கிறார். அதில் கூட 95 விழுக்காட்டுப் பணத்தையும் உலக மக்களுக்கே தானம் செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். அவரைப் போய் கஞ்சன் என்று சொல்லலாமா. அது நமக்கே நியாயமாகப் படுகிறதா? 

பில்கேட்ஸும் அவருடைய மனைவியும் இணைந்து பில் மெலிண்டா கேட்ஸ் அறக் கட்டளையை நிறுவி இருக்கிறார்கள். இதுவரை ஏறக்குறைய 32 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிகளுக்காக வழங்கி இருக்கின்றனர். 

அந்தப் பணத்தைக் கொண்டு நம்முடைய பெட்ரோனாஸ் கோபுரங்களைப் போல நான்கு கோபுரங்களைக் கட்டலாம். ஒரு பில்லியன் என்பது 300 கோடி. இவரைப் பற்றி http://www.billgatesmicrosoft.com/networth.htm எனும் இணையத் தளத்தில் நிறைய தகவல்கள் உள்ளன.

பில்கேட்ஸ் Business At The Speed of Thought என்ற நூலை எழுதினார்.  25 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது. 60 நாடுகளில் விற்பனையாகிறது. அதற்கு முன் அவர் எழுதிய The Road Ahead என்ற நூலும்  அதிகமாக விற்பனையானது. 

இரு நூல்களின் மூலமாகக் கிடைத்த பணத்தை அப்படியே அற நிதிகளுக்கு கொடுத்து விட்டார். அவருடைய அறப் பணிகளை மனுக்குலம் மறக்காது.

10 ஜூன் 2014

இந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள்

மலேசியா தினக்குரல் நாளிதழில் 13.07.2012 பிரசுரிக்கப்பட்ட கட்டுரை

இந்திய மகாராஜாக்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், மாபெரும் காலச் சுவடுகளை விட்டுச் சென்று இருக்கிறனர். பொழுது போகவில்லையே என்று புலிகளை வேட்டையாடிக் குவித்தவர்கள் இருக்கிறார்கள். வலிமை குறைந்த ராஜாக்களை வாழைப் பூவாய் வறுத்து எடுத்தவர்கள் இருக்கிறார்கள். 


அரிய பெரிய கோயில்களைக் கட்ட வேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கான அப்பாவிகளை அடிமைகளாக ஆக்கியவர்கள் இருக்கிறார்கள். கஜானா காலி ஆகிறதோ இல்லையோ அந்தபுரங்கள் நிறைந்து வழிய வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜாக்களும் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துச் சென்ற அந்தபுரங்கள் இன்று வரை சிந்து பைரவிகள் பாடுகின்றன. 

\
இதில் புலிகளை வேட்டையாடி, தங்களின் வேட்கையைத் தணித்துக் கொண்ட ராஜாக்கள் ஒரு ரகம். எந்த ஒரு மகாராஜா அதிகமான புலிகளைச் சுட்டார். எந்த வகையான புலிகளைச் சுட்டார் எனும் வக்கரமான போட்டிகளுக்கு வஞ்சகம் இல்லாத அரங்கேற்றங்கள்.


ஒரு மகாராஜா ஒரு வேட்டையில் மூன்று புலிகளைச் சுட்டார் என்றால், அந்தச் செய்தி அடுத்த மகாராஜாவிற்குப் போகும். அந்த மகாராஜா நான்கு புலிகளைச் சுடுவார். அப்புறம் இன்னொரு மகாராஜா ஆறு புலிகளைச் சுடுவார். வேறொரு மகாராஜா ஏழு புலிகளைச் சுடுவார். தங்களின் பராக்கிரமத்தை அதன்வழி பறைசாற்றிக் காட்டினார்கள். அவற்றில் ஆரோக்கியமற்ற அசிங்கத் தனங்கள் தெரிந்தன.


’தாவி வரும் கடல் அலைகளை எண்ணி விடலாம். அதில் தவழ்ந்து போகும் மீன்களை எண்ணி விடலாம். கரையில் வந்து மோதும் மணல்களைக்கூட எண்ணி விடலாம். ஆனால், இந்தியக் காடுகளில் காணாமல் போன புலிகளை மட்டும் எண்ணவே முடியாது என்று’  ஓர் இந்திய எழுத்தாளர் மனம் உடைந்து போய் சொன்னார். நினைவிற்கு வருகிறது.


புலிகளைச் சுடுவதற்கான வெடி மருந்து சீனாவில் இருந்து ஒற்றர்கள் மூலம் கிடைத்தது. பாரசீகத்தில் இருந்தும் கிடைத்தும் இருக்கிறது. துப்பாக்கிகளைச் சொந்தமாகச் செய்து கொண்டார்கள். அனைத்தும் நாட்டுத் துப்பாக்கிகள். ஒரு விஷயம்! அகில இந்தியாவிலும் இருந்த மகா ராஜாக்களைப் பற்றிதான் பொதுவாகச் சொல்கிறேன். எந்த ஒரு மகாராஜாவையும் சிறுமை படுத்தும் எண்ணம் நமக்கு இல்லை.


சங்க கால தமிழ் இலக்கியத்தில் புலியை முறத்தால் விரட்டி அடித்த கதை இருக்கிறது. காதல் தலைவன் புலியின் பல்லைப் பிடுங்கி வந்து தாலி கட்டியதாகவும் கதை இருக்கிறது. விடுதலை வீரர் திப்பு சுல்தான், தனிமனிதனாய் நின்று புலியுடன் போராடி வெற்றிப் பெற்ற வீரக் கதையும் இருக்கிறது. 


சாலுக்கிய மன்னர்களான சக்திவர்மன், விமலாதித்தன், சோழ மன்னர்களான மதுராந்தகன், குலோத்துங்கன் போன்றவர்களும் புலிகளை எதிர்த்துப் போராடி உள்ளதாக வரலாறு சொல்கிறது. ஆனால், தமிழ் நாட்டு மன்னர்களும் சரி; அங்கே இருந்த சமஸ்தான அதிபதிகளும் சரி; பொழுது போக வில்லையே என்பதற்காகப் புலிகளைக் கொன்று போக்கரித்தனம் பண்ணியதாகச் சரித்திரமே இல்லை. அது மட்டும் உண்மை.


வீரத்தை வெளிப் படுத்தவும், விரதத்தைக் கைவிடவும் எங்கோ ஒன்று இரண்டு நடந்து இருக்கலாம். அதற்காகக் கணக்கு வழக்கு இல்லாமல் புலிகளைக் கொன்று குவித்தார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சேர சோழ பாண்டிய மன்னர்களுக்குப் பின்னால் வந்த கதையைச் சொல்கிறேன். முல்லைக்குத் தேர் கொடுத்த மண்ணில் மனிதநேயங்கள் வாழ்ந்தன. இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.


இப்படியே பல காலமாக மகாராஜாக்கள் புலிகள் சுடுவதில் சாதனை படைத்து வந்தனர். பதப்படுத்தப் பட்ட புலிகளை அரண்மனைச் சாசனங்களில் தொங்க விட்டு அழகு பார்த்தனர். கஜானா நிறைய வேண்டும், அந்தபுரம் வழிய வேண்டும் என்று சிலர் புலிகளின் மேல் அமர்ந்து யாகமும் செய்ததாக வரலாறு சொல்கிறது.


தங்களுடைய எதிரிகள் தங்களைப் பார்த்து பயப்பட வேண்டும்; அந்தபுரத்து ராணிகள் ஆசை ஆசையாய்ப் புகழ வேண்டும்; அவர்களுக்கு இடையே போட்டி பொறாமை, இத்யாதி இத்யாதிகள் வரவேண்டும் என்பதற்காகவே, அந்த மாதிரியான வீர சாகசங்களை மகாராஜாக்கள் செய்தனர் என்றும் சொல்லப் படுகிறது.


ஆங்கிலேயர்கள் முதன்முதலில் இந்தியாவிற்குள் வந்த போது, வலது காலை எடுத்து வைக்கவில்லை. இடது காலைத்தான் வைத்தனர். அதற்கு முன்னதாகவே, அங்கு இருந்த மகாராஜாக்களுக்கு சுடும் ஆயுதங்கள் கிடைத்து விட்டன.


டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் கையை வீசிக் கொண்டு சும்மா ஒன்றும் வரவில்லை. துள்ளும் ரம்பைகளைத் தூக்கி வராவிட்டாலும் துப்பாக்கி ரவைகளை அள்ளிக் கொண்டு வந்தனர். வான்கோழிகளையும் வாளி வாளியாக வெண்ணெய்ப் பதார்த்தங்களையும் கொண்டு வந்தனர். குளிக்கவும் மினுக்கவும் நல்ல நல்ல வாசனைப் பொருட்களைக் கொண்டு வந்தனர்.


துப்பாக்கிகள் வருவதற்கு முன்னரே மகாராஜாக்கள் யானைகள் மீது ஏறி வேட்டையாடினர். கண்ணியில் அல்லது கம்பி வலையில் சிக்கிய புலிகளை ஈட்டிகளால் குத்திக் கொன்றனர். அதைத் தூக்கி வந்து அரண்மனையில் பரப்பிப் போட்டு சர்க்கஸ் வேடிக்கை காட்டினர். 


புலியைச் சுடுவதும், கொல்வதும், தோலை உரிப்பதும் வீரத்திற்கு விவேகம் என்று நினைத்து இருக்கலாம். நிறைவான கல்வித்தரம் நிறையாத காலத்தில் குறைவான சிந்தனைகள் நிறையாமல் போய் விட்டன. உண்மைதானே!


சில சமயங்களில், போர் வீரர்கள் மட்டும் புலி வேட்டைக்குப் போவார்கள். ராஜா போகமாட்டார். புலி கிடைப்பதும் கிடைக்காததும் நேரம் காலத்தைப் பொருத்தது. புலி கிடைத்தால், முடிந்த வரை அதைக் கொல்ல மாட்டார்கள். அப்படியே ஒரு கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்து விடுவார்கள். 


குடிக்க மட்டும் தண்ணீர் கொடுப்பார்கள். சாப்பாடு எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கழித்து, சகல பரிவாரங்களுடன் ராஜா காட்டிற்குப் போவார். கூண்டைத் திறந்து விடுவார்கள். பாவம் அந்தப் புலி. செத்தேன் பிழைத்தேன் என்று தட்டுத் தடுமாறி வெளியே வந்து ஓட்டம் எடுக்கும். அவ்வளவுதான். 


உடனே ராஜா தன்னுடைய துப்பாக்கியை எடுத்து, நொண்டிப் புலியைச் சுட்டு வீழ்த்துவார். போர் வீரர்கள் கைதட்டி மேளம் தட்டி ஆலாபனை செய்வார்கள். செய்தி எட்டு திக்கும் பரவும். அரண்மனை வட்டாரத்தில் ஒரே கொண்டாட்டம். அந்தபுரத்தில் ஒரே கோலாகலம்.



அந்தக் காலத்தில், ஒரே ஒரு ராஜாவுக்கு ஒன்பது ராணிகள் இருந்தார்கள் என்று சொல்வார்கள். பற்றாக் குறைக்கு நூற்றுக் கணக்கில் அந்தபுர வைப்பாட்டிகள் வேறு. அவை எல்லாம் உண்மைகள்தான். இன்னும் சொல்லப் போனால், அந்தக் காலத்து ராஜாக்களுக்கு ஆயிரம் மனைவிகள் வரை இருந்து இருக்கிறார்கள். எதற்காக அத்தனை மனைவிகள் என்பதை அவர்களிடம்தான் போய்க் கேட்க வேண்டும்.


காஷ்மீர் ராஜா ஹரி சிங். அவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு 365 மனைவிகள். அதாவது மனைவிகள் மட்டும்தான் 365 பேர். மற்றபடி அந்தபுரத்துச் சின்னஞ் சிறுசுகளைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். அத்தனை பேரையும் ஒரே ஒருவர் எப்படி சமாளித்தார் என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அத்தனை மனைவிகளின் முகங்களையாவது ஞாபகம் வைத்து இருக்க முடியுமா என்பது தான் பிரச்சினை. அதை நினைத்து எனக்கு மண்டை குழம்பிப் போனதுதான் மிச்சம்.


மொகலாய மன்னர் ஜகாங்கீரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு அதிகாரப் பூர்வமாகப் பதினெட்டு மனைவிகள். சிறை பிடித்த அழகிகள் ஒரு 150 பேர். இவர்கள் ’செக்கண்ட் கிலாஸ்’ மனைவிகள். இதைத் தவிர, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் பெண்களாக ஒரு 200 பேர்.

எல்லாப் பெண்களையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியுமா. முடியாது. அதனால், இன்றைக்கு ஒரு பத்து பேர் என்றால் நாளைக்கு ஒரு பத்து பேர். இப்படியே ஒவ்வொரு நாளும் ஒரு பத்து பேரைப் பார்ப்பது ஒரு வழக்கமாகிப் போனது. இன்னும் இரு தகவல்.

எப்படி பேர் போட்டார்கள்

அவருடைய அந்தபுரத்தில் இருந்த எல்லாப் பெண்களையும், பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு, ஒரு பெண்ணுக்கு ஐந்தே ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அத்தனைப் பேரையும் சும்மா பார்த்துவிட்டு வரவே 25 மணி நேரம் பிடிக்குமாம். அதாவது ஒரு நாள் பிடிக்கும். சும்மா பார்த்துவிட்டு வருவதற்குத் தான் அந்தக் கணக்கு. சரிங்களா.

இருக்கின்ற ஒன்றை வைத்துக் கொண்டு, அதனிடம் பேர் போடுவதற்கே சிலர் அவதிப் படுகிறார்கள். என்னையும் சேர்த்துதான். இதில் டஜன் கணக்கில் மனைவிகளா? எப்படி அந்த ராஜாக்கள் அத்தனை சந்திரமுகிகளிடம் பேர் போட்டார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பொறாமையாகவும் இருக்கிறது. பிரச்சினையை விடுங்கள். எப்படியோ வாழ்ந்து இருக்கிறார்கள். வாழ்ந்தும் போய் விட்டார்கள்.

நம்ப கதைக்கு வருவோம். அப்புறம் சில நாட்கள் கழித்து, புலியைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்த உண்மையான போர் வீரர்கள், திடீரென்று காணாமல் போய் விடுவார்கள். களையெடுப்பு என்று சொல்வார்களே. அதுதான் இது.

புலி வேட்டையில் புதிய சகாப்தம்

ராஜாவின் இரகசியம் தெரிந்தவர்கள் ஆயிற்றே. ஆக, ராஜாவின் ரகசியங்கள் காக்கப் படுவதில் ராஜதந்திர முறைகள் கையாளப்படும். இருந்தாலும் பாருங்கள். விசுவாசமான ஊழியர்களில், மகாராஜாவைப் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் மூலமாக இரகசியம் வெளியே கசிந்தன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைபற்றிய பின்னர், இந்தப் புலி வேட்டை வேறு வடிவத்தில் பரிமாணம் எடுத்தது. அதற்கு முன்னரே டச்சுக்காரர்களும் போர்த்துகீசியர்களும் வந்து குசலம் விசாரித்துப் போய் விட்டனர்.

புலி வேட்டையில் மகாராஜாக்களுடன் ஆங்கிலேயர்களும் சேர்ந்து கொண்டார்கள். அது ஒரு புதிய சகாப்தம். புலிகளைக் கொன்று அவற்றின் தோல்களை உயர்த்திக் காட்டிய அந்த மகாராஜாக்களின் நீண்ட பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்திராகாந்தி என்கிற இரும்புப் பெண்மணி

அப்புறம் என்ன. இந்திராகாந்தி எனும் ஓர் இரும்புப் பெண்மணி வந்தார். புலிகளின் பற்களைப் பிடுங்கிய மகாராஜாக்களின் கடைவாய்ப் பற்களை' எல்லாம் பிடுங்கி எடுத்தார். மகாராஜாக்கள் ஊர்வலம் போன நிலத்தை எல்லாம் பிடுங்கி, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தார். முரண்டு பண்ணிய ஜாமின்தாரர்களைச் சிறையில் தூக்கிப் போட்டார்.

காட்டில் வாழ்ந்த புலிகளுக்கு சாப விமோசனம் கிடைத்தது. மான்களுக்கும் மயில்களுக்கும் சரணாலயங்கள் கிடைத்தன. வாயில்லா ஜீவன்களுக்கு வேதங்கள் வாசித்த அந்த இந்திரா காந்தி என்கிற அந்த மயிலையும் சுட்டுக் கொன்று விட்டார்கள். இது அண்மைய வரலாறு.

அழிந்து வரும் புலியினம்

பொழுது போக்கிற்காகப் புலிகளை வேட்டையாடியது அந்தக் காலம். இப்போது அதை நினைத்துப் பார்த்தாலே பாவமாகத் தெரிகிறது. உலகில் புலியினம் அழிந்து வருகிறது. ஜாவா புலி, பாலி புலி, காஸ்பியன் புலி, இவை முற்றாக அழிந்து விட்டன. டாஸ்மேனியா புலியும் சென்ற நூற்றாண்டில் தான் அழிந்து போனது. சீனப் புலியும் அழிந்து வருகிறது.

எஞ்சி இருப்பவை சுமத்திரா, சைபேரிய, இந்திய, மலாயாப் புலிகள். இவற்றின் எண்ணிக்கை இப்போதைக்கு 6000-க்கும் குறைந்து விட்டதாக ஐ.நா. புள்ளி விவரங்கள் சொல்கின்றன. எவ்வளவோ கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. இருந்தாலும் புலியை மருந்து மாத்திரைகளுக்காகக் கொன்று குவிப்பது மட்டும் நின்றபாடு இல்லை.

மனித ஜென்மங்கள் மாறவே இல்லை

இப்படியே போனால், பூமியில் உள்ள எல்லா வாயில்லா ஜீவன்களையும் மனிதர்கள் அழித்து விடுவார்கள். நரமாமிசங்களைத் தின்னும் காட்டிமிராண்டிகள்கூட முள்கரண்டியால் சாப்பிடும் நாகரிகத்திற்கு வந்து விட்டார்கள். இருந்தாலும் புலிகளைக் கொல்லும் மனித ஜென்மங்கள் மட்டும் இன்னும் மாறவே இல்லை. திருந்தவும் இல்லை.

இந்தியாவில் பழங்காலத்தில் கட்டப்பட்ட பல நூறு அரண்மனைகள் இன்னும் அழியாமல் அப்படியே இருக்கின்றன. அந்த அரண்மனைகளில் இருக்கும் பல நூறு புலிகளின் தலைகள் இன்னும் கதைகள் பேசுகின்றன. 

நளினங்கள் காட்டிய அந்தபுரச் சந்திரமுகிகளிடம் மகாராஜாக்கள் எப்படி பேர் போட்டார்கள் என்பதைப் பற்றியும், கதைக் கதையாய்ப் பேசுகின்றன. அந்தப் புலிகள் பாடும் சிந்துபைரவிகள் என் காதுகளில் விழுகின்றன. உங்களுக்குக் கேட்கிறதா?

# Please click your  Reactions.

08 ஜூன் 2014

இணையம் மூலமாக இலவச மென்பொருட்கள்

பிரீத்தி சந்தானம்  preetisanthnam@ymail.com
கே: இணையம் மூலமாக இலவச மென்பொருட்களை, அதாவது நிரலிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்கிறோம். அப்படி பதிவிறக்கம் செய்யும் போது அந்த நிரலிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்று தெரியவில்லை. அவை பாதுகாப்பானவை என்று எப்படி கண்டறிவது?

 
ப: நல்ல கேள்வி. இணையம் என்பது நம் வாழ்க்கையில் ஓர் இனிமையான தோழனாகி விட்டது. படங்கள், பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழ்ச்சி அடைகிறோம். இணையம் என்பது ஓர் இனிமைப் பொக்கிஷம். 

ஆனால் இலவசமாகக் கிடைக்கும் பொருட்களினால், கணினிகள் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.  இதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே, இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, நல்ல சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். 



1.    இலவசம் என்று தெரிந்ததும் கிடைக்கின்ற எல்லா மென்பொருட்களையும் கணினியில் பதிப்பு செய்யும் ஆசையை முற்றாகத் தவிர்த்து விடுங்கள். பதிவிறக்கம் செய்யப் படும் நிரலி மிகவும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே கணினியில் நிறுவிக் கொள்ளலாம்.



2.    பதிவிறக்கம் செய்யப் படும் நிரலி அல்லது நிரலிகளை ஒருமுறை மட்டும் தான் பயன் படுத்த முடியும் என்றால், தயவு செய்து அந்த நிரலிகளைப் பதிவிறக்கம் செய்யவே வேண்டாம். 



3.    எந்த ஓர் இலவச நிரலியையும், அதனுடைய தயாரிப்பு இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் தங்களின் நிரலியைப் பற்றி அவர்களே தரம் உயர்த்திப் பேசுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.



4.    இலவச நிரலிகளைத் தரம் பிரித்து அவற்றை முறையாக  தொகுத்து வழங்கும் தளங்களான cnet, brothersoft, majorgeek, softpedia, filehippo, tucows, pcworld போன்ற நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

5.    நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்தாலும், மற்ற கணினிப் பயனர்களின் கணிப்பும் விமர்சனங்களும் எப்படி உள்ளன என்பதையும் கண்டறியுங்கள். (Reviews).




6.    cnet, tucows, pcworld  போன்ற பிரபல தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, தகுதி மதிப்பீடு (Product Ranking) 1 அல்லது 2 க்குள் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பீடு 3 ஆக இருந்தால் பரவாயில்லை. ஆனால், 4 அல்லது 5 க்குப் போனால் அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.



7.    ஒரு தளத்தில் இருந்து ஒரு நிரலியைப் பதிவிறக்கம் செய்யும் போது கடந்த காலங்களில் எத்தனை பேர் அதனைப் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். அதிகமானோர் பதிவிறக்கம் செய்து இருந்தால் அந்த மென்பொருள் அப்போதைய சமயத்தில் நன்றாக இருக்கிறது என்று பொருள்.  ஆக, அந்த நிரலியை தயக்கம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம். 



8.    அடுத்து, கணினியில் ஒரு வேலையைச் செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட நிரலிகளைக் கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். எடுத்துக்காட்டாக Video Players, PC Cleaners, Photo Editors, Downloaders. இவற்றில் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு பிடித்த ஒரே ஒரு நிரலியை மட்டும் கணினியில் வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத மற்ற நிரலிகளை அப்புறப் படுத்தி விடுங்கள்.



இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் கணினி உங்கள் பேச்சைக் கேட்கும். இல்லை என்றால் மன்னியுங்கள். அம்மி மிதிக்காது. அருந்ததியையும் பார்க்காது. புரியும் என்று நினைக்கிறேன்.

[ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், இந்தக் கணினியும் நீங்களும் பகுதி, இந்த வலைப்பதிவில், பதிவேற்றம் செய்யப் படுகிறது. அங்கே அந்த இணைய முகவரிகளுக்கு நேரடியான இணைப்புகள் கொடுக்கப் பட்டு உள்ளன. Google தேடல் இயந்திரத்தில் ksmuthukrishnan என்று தட்டச்சு செய்யுங்கள். வலைப்பதிவுகள் இருக்கும். அதில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். மின்னஞ்சல் மூலமாகக் கேள்விகளை எழுதி அனுப்புங்கள். கணினி தொடர்பான அவசர அழைப்புகளுக்கு மட்டும் 012-9767462 கைப்பேசி எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.]

கணினியில் ஆபாசம்

 மலேசியா ‘புதிய பார்வை’ நாளிதழில் இன்று 08.06.2014 பிரசுரிக்கப்பட்டது.

திருமதி. பெயர் இல்லை. போர்ட் கிள்ளான், சிலாங்கூர்.
கே: என்னுடைய வீட்டின் கீழ்மாடியில் ஓர் அறையில் ஒரு கணினி இருக்கிறது. மேல்மாடியில் ஐந்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள். நான் இருக்கும் போது அவர்கள் கணினியைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சில நாட்களாக நான் கணினியைத் திறந்ததும் ஆபாசப் படங்கள் திரையில் வருகின்றன. அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்து விட்டேன். நான் இல்லை நீ இல்லை என்றுதான் பதில் வருகிறது. 

கணினியை எத்தனை மணிக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. கணினியை நான் அடைத்துப் போட்டாலும் திறந்து விடுகிறார்கள். என் மகன்களைப் போல இருக்கிறார்கள். யாரோ ஒருவர் செய்கின்ற குற்றத்திற்காக எல்லாரையும் தண்டிக்க மனம் வரவில்லை. உங்களின் ஆலோசனை தேவைப் படுகிறது.

ப: உங்கள் மனவேதனை புரிகிறது. செம்மறியாட்டுக் கூட்டத்தில் ஒரு கரும் பூனை. கருவாட்டைத் தின்றுவிட்டு, புல்லைத் தின்பதாகப் படம் காட்டுகிறது. சரி, அந்த மாதிரியான கழிசடைகளைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான். தெரியும் தானே. 


ஒரு வீட்டில் உள்ள ஒரு கணினியை எத்தனை மணிக்குத் திறந்தார்கள். எத்தனை மணிக்கு என்ன என்ன பார்த்தார்கள். எத்தனை மணிக்கு அடைத்தார்கள். அவற்றை அப்படியே படம் பிடித்துக் காட்ட ஒரு நிரலி இருக்கிறது. இலவசம் இல்லை. இருந்தாலும் ‘புதிய பார்வை’ வாசகர்களுக்கு இலவசமாய்த் தருகிறோம். 



திருடன் கணினியின் முன் உட்கார்ந்து கணினியைத் தொடக்கிய அடுத்த விநாடியே அந்த நிரலி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அவன் என்ன என்ன எழுத்துகளைத் தட்டச்சு செய்கிறான். எங்கே எங்கே போகிறான் என்பதை எல்லாம் பதிவு செய்யும். கணினியைத் தொடங்கிய ஐந்து நிமிடங்களில், அந்த நிரலி உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக செய்தியையும் அனுப்பும். அல்லது கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக  அனுப்பச் சொல்லி நிரலியில் வடிவமைத்துக் கொள்ளலாம்.



அது மட்டும் இல்லை. உங்கள் கணினியில் படம் பிடிக்கும் கருவி இருந்தால் அதையும் நீங்கள் இயக்கி விடலாம். யாருக்கும் தெரியாமல் காமிரா படம் பிடித்து வைத்துக் கொள்ளும். ஆனால், இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. அப்படிப்பட்ட ஒரு நிரலி கணினிக்குள் இருப்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் யாருக்கும் தெரியாது. பார்க்கவும் முடியாது. (Hidden Mode). 



அப்புறம், பாலாபிஷேகம் செய்யலாமா இல்லை கோலாபிஷேகம் செய்யலாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம் http://uploaded.net/file/acc98lwf இந்த இடத்திற்குப் போய் Free Download என்பதைச் சொடுக்கி விடுங்கள். என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டீர்களே.

டிவிட்டர் என்றால் என்ன?



மலேசியா ‘புதிய பார்வை’ நாளிதழில் இன்று 08.06.2014 பிரசுரிக்கப்பட்டது.


சேகர், (பேருந்து ஓட்டுநர்) ரிங்லெட், கேமரன் மலை, பகாங்
கே: டிவிட்டர் என்றால் என்ன? உங்களிடம் டிவிட்டர் கணக்கு இருக்கிறதா?


ப: டிவிட்டர் என்பது எஸ்.எம்.எஸ் போன்ற ஒரு குறும் செய்திச் சேவை. அதிக பட்சம் 140 எழுத்துக்களை மட்டும் தட்டச்சு செய்யலாம். நீங்கள் நினைக்கும் எதையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம். இணையத் தொடர்புகளையும் இணைத்துக் கொள்ளலாம். எல்லாமே எழுத்துகளாக மட்டுமே இருக்க வேண்டும்.


டிவிட்டரில் பதிவு செய்யாதவர்கள், டிவிட்டரில் இருந்து வரும் செய்திகளைப் படிக்கலாம். ஆனால், பதிலுக்குச் செய்திகளை அனுப்ப முடியாது. டிவிட்டர் இணையத் தளத்திற்குச் சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பிறகு, ’டிவிட்’ செய்யலாம். டிவிட்டர் கணக்கைத் தொடக்குவது சுலபம். பயன்படுத்துவதும் சுலபம். வெரி வெரி ஈசி. ஒரு பத்து நிமிடத்து வேலைதான். முற்றிலும் இலவசமான சேவை.


இந்த டிவிட்டர் 2006 ஜூலை 15-ஆம் தேதி உலகளாவிய நிலையில் அறிமுகம் செய்யப் பட்டது. ஜேக் டோர்சி, இவான் வில்லியம்ஸ், பிஸ் ஸ்டோன், நோவா கிளாஸ் என்கிற நான்கு நண்பர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கியதுதான் இந்த டிவிட்டர். மிக விரைவாக உலகம் முழுமையும் படர்ந்தது. 2012-ஆம் ஆண்டு கணக்குப்படி 500 மில்லியன் பேர் பதிவு செய்யப்பட்ட பயனர்களாக இருக்கின்றனர். ஒரு நாளைக்கு 340 மில்லியன் செய்திகள் அனுப்பப் படுகின்றன.

தவிர, டிவிட்டரின் வழி, ஒரு நாளைக்கு 16 கோடி கேள்விகளும் கேட்கப் படுகின்றன. உலகத் தலைவர்களில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்குத் தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்கு 42,700,710 ரசிகர்கள். இது 2014 ஏப்ரல் 27-ஆம் தேதி புள்ளி விவரம். 

மற்றபடி இந்தியப் பிரதமர் மோடி வெற்றி பெறுவதற்கு, இந்த டிவிட்டர் ஊடகம் மிகவும் உதவி செய்து இருக்கிறது. மோடியின் உதவியளார்கள் மில்லியன் கணக்கில் டிவிட்டர் செய்திகளை அனுப்பி இருக்கிறார்கள். இருந்தாலும், ஒரு கட்டத்தில் மோடியின் டிவிட்டர் கணக்கைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். ஏன் என்று தெரியவில்லை. இத்தாலியர்களைக் கேட்டால் தெரியும் என்று நினைக்கிறேன். எத்தனையோ தடைகளைப் போட்டும், மோடி ஜெயித்துக் காட்டி விட்டார்.


எனக்கு டிவிட்டர் கணக்கு இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்கள். இருக்கிறது. பயன்படுத்துவது ரொம்பவும் குறைவு. அதற்கும் காரணம் இருக்கிறது. எங்கேயும் எந்த நேரத்திலும் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று ஒரு சிலர் இருக்கவே செய்வார்கள். தெரியும் தானே. அந்த மாதிரி டிவிட்டரிலும் எதையாவது அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். நாமும் மரியாதைக்கு எதையாவது கிறுக்கி அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் கோபித்துக் கொள்வார்கள்.


முக்கியமான விஷயமாக இருந்தால் பரவாயில்லைங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால், ராஜாவைக் காணோம் என்று ஒரு ‘டிவிட்’ செய்தி வந்தது. எந்த ராஜா என்று விசாரித்துப் பார்த்தால், ராஜா என்பது அவர்கள் வீட்டுச் செல்லப் பூனையாம். என்னங்க அநியாயம். இதுகூட ஒரு ’டிவிட்’ செய்தியா. அவர்களுக்கு அது பெரிசாக இருக்கலாம். அவர்கள் வீட்டுப் பூனை, பக்கத்து வீட்டில் இருக்கும் தன் காதலி பார்வதியைப் பார்க்கப் போய் இருக்கலாம் இல்லையா. அதற்கு ஒரு டிவிட்டர் செய்தியா.


படுக்கையை விட்டு எழுந்து விட்டேன். பல் விளக்கப் போகிறேன். டீ சாப்பிட போகிறேன். காதலில் சொதப்புவது எப்படி. நீ ரொம்ப மோசம்டா. அடுத்த வாட்டி பார்த்தேன் செருப்படி. இப்படி அழகு அழகான தமிழ்ச் சொற்களை டிவிட்டரில் பார்த்து இருக்கிறேன். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தோற்றது போங்கள்.


கணினித் தொழில்நுட்பம் என்பது, இறைவன் நமக்கு கொடுத்த ஓர் அரிய வரப் பிரசாதம். அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அசிங்கப் படுத்தினால் அப்புறம் ஏழேழு ஜென்மத்திற்கும் சரஸ்வதி எட்டிப் பார்க்க மாட்டார்.

https://twitter.com/login எனும் முகவரிக்குச் சென்று இலவசமாகப் பதிந்து கொளுங்கள். அப்புறம் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு செய்தி அனுப்பலாம். நைஜீரியாவின் போக்கோ ஹாராமிற்கும் அனுப்பி வைக்கலாம். ஆனால், பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. அது எல்லாம் சரி. டிவிட்டரில் சேர்ந்துவிட்ட சந்தோஷத்தில் என்னை மறந்துவிட வேண்டாம்.