19 ஜூன் 2014

திருச்சி கணினிக் கதை

(மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)

சரவணன் குமார், சுங்கை பூலோ, சிலாங்கூர்


கே: ஐயா, நான் தமிழ்நாடு திருச்சியில் இருந்து இங்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அண்மையில் என் நண்பர் அவர் வேலை  செய்யும் இடத்தில் இருந்து ஒரு பழைய கணினியை என்னிடம் வந்து கொடுத்தார். அது சரியாக வேலை செய்யவில்லை. இருந்தாலும் நான் செலவு செய்து பழுது பார்த்தேன். நன்றாக வேலை செய்வதைப் பார்த்த அந்த நண்பர் இப்போது அந்தக் கணினியை வேண்டும் என்கிறார். கொடுக்க முடியாது என்றேன். மிரட்டிப் பார்க்கிறார். மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?


ப: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த மாதிரியான மனிதர்களை நண்பர் என்று அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். மனித நேயங்களை மறந்து வாழும் மானிடப் பிண்டங்கள் எல்லாம் எப்படி ஐயா நண்பர்களாக முடியும். சொல்லுங்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் எனும் பழமொழி இருக்கிறதே அது உங்களுக்குத் தெரியாதா.

பழுது பார்க்க நீங்கள் செலவு செய்த காசை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணினியைத் திருப்பிக் கொடுக்கலாம். கவலைப் பட வேண்டாம். என்னிடம் பழைய கணினிகள் இரண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஈப்போ வரும்போது பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் செலவு செய்த பணத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்க முடியாது என்றால் எனக்குத் தெரிவியுங்கள். சுங்கை பூலோவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புக்கிட் அமான் மலேசியப் போலீஸ் தலைமையகத்தில் ஓர் ஆணையர். அவரிடம் சொல்லி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வோம். கவலைப் பட வேண்டாம்.


நீங்கள் ஒரு தமிழர். நானும் ஒரு தமிழர். நீங்கள் ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள். இங்குள்ள  தமிழர்கள் தான் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றி பிழைப்பது என்பது ஈனத் தனமான செயல். அப்படிப் பட்ட மனிதர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எது உங்களை விட்டுப் போனாலும் கவலைப் படாதீர்கள். தன்னம்பிக்கை மட்டும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொளுங்கள். ஏன் என்றால் தன்னம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதுதான் ஆண்டவரின் அடுத்த அவதாரம். 

18 ஜூன் 2014

சங்கேதச் சொல் மீட்பு

 மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

சுகுமாறன் sugu_1305@yahoo.com

கே: என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கான Password ஐ மறந்து விட்டேன். எப்படி மீட்பது?  உதவி செய்யுங்கள்.



ப: உதவி செய்வது இருக்கட்டும். Password என்பது வெறும் எட்டு எழுத்துகளைக் கொண்ட ஒரு சின்ன பொடிச் சொல். அதை எங்கேயாவது ஓர் இடத்தில் எழுதி வைத்திருக்க வேண்டியதுதானே. அதை மறந்து விடும் அளவிற்கு அப்படி என்ன ஐயா பெரிய வேலை. அப்படி என்ன ஐயா பெரிய மறதி.

இந்தக் காலத்தில் எதற்கு எடுத்தாலும் மறதி மறதி என்று சொல்லிச் சொல்லியே ரொம்ப பேர் மனைவி மக்களை மறந்து விட்டு அலைகிறார்கள். அந்த மாதிரியான மறதி யாருக்கும் வரக் கூடாது. இனிமேல் கவனமாக எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சரியா.

 http://www.snapfiles.com/get/mpw.html எனும் இடத்தில் Mail Password Recovery எனும் நிரலி இருக்கிறது. அதைப் பயன் படுத்தி உங்களுடைய சங்கேதச் சொல்லை மீட்டுக் கொள்ளுங்கள். அது ஒரு சின்ன நிரலி. இன்னும் ஒரு விஷயம்.

உங்கள் கணினியில் இருந்து உங்கள் மின்னஞ்சல் சங்கேதச் சொல்லை மட்டும்தான் அந்த நிரலி எடுத்துக் கொடுக்கும். மற்றவர் மின்னஞ்சலைத் திறந்து பார்க்கலாம். என்று மட்டும் தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம்.

அதைத் தவிர http://www.download3k.com/Install-Mail-PassView.html எனும் இடத்திலும் ஒரு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது. மறுபடியும் சொல்கிறேன். இந்த நிரலிகளைப் பயன் படுத்தி, அடுத்தவருடைய மின்னஞ்சல்களைப் படிக்க முயற்சி செய்ய வேண்டாம். அது ரொம்பவும் தப்பு. 

தமிழ்த் தட்டச்சுப் பலகை

மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

ரகுநாதன், பெட்டாலிங் ஜெயா (குறும் செய்தி 21.12.2013)
கே: தமிழில் Key Board தட்டச்சு, கோலாலம்பூரில் எங்கே கிடைக்கும்?




ப: இப்போது எல்லாம் தமிழில் தட்டச்சு வெளி வருவது இல்லை. நிறுத்தி விட்டார்கள். இப்போது வரும் கணினிகள் மிகவும் நவீனமாகி விட்டன. அதனால் Phonetics எனும் ஒலியியல் முறையைப் பயன் படுத்தித் தமிழில் தட்டச்சு செய்யலாம். 

தமிழ்த் தட்டச்சுப் பலகையை தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வருபவை எல்லாம் Phonetic Key Boards எனும் ஒலியியல் விசைப் பலகைகள்  ஆகும்.

இருந்தாலும் http://www.brothersoft.com/tamil-keyboard-54576.html எனும் இடத்தில் தமிழ் தட்டச்சுப் பலகையை இலவசமாகக் கிடைக்கிறது. அந்த முகவரிக்குப் போய் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள். 


இது ஒரு On Screen Keyboard. அப்படி என்றால்  தட்டச்சுப் பலகை கணினியில் தெரியும் என்று அர்த்தம். தமிழில் 'திரை விசைப் பலகை'  என்று சொல்லலாம். ‘மவுஸ்’ எனும் சுழலியைக் கொண்டு தட்டச்சு செய்யலாம்.

இதே போல ஓர் ஆங்கிலத்  தட்டச்சுப் பலகையும் உங்கள் கணினியில் இருக்கிறது. Start >> Run >> osk என்று தட்டுங்கள். அந்தத் தட்டச்சுப்  பலகை முகப்புத் திரையில் வந்து உட்கார்ந்து கொள்ளும். 


இன்னும் ஒரு விஷயம். ஒலியியல் விசைப் பலகை, திரை விசைப் பலகை எனும் அந்த இரண்டு தமிழ்க் கணினிச் சொற்களையும் அடியேன் உருவாக்கி விக்கிப்பீடியா கலைச் சொல்லகராதிக்கு வழங்கி இருக்கிறேன். செரிவுகளும் சரிவுகளும்  இருக்கலாம். சரி செய்வது உங்கள் கடமை.

நோக்கியா கைப்பேசி

மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

எம்.அன்பரசன், ஈப்போ (குறும் செய்தி 18.12.2013)

கே: சார், நான் ஒரு நோக்கியா கைப்பேசியை நண்பரிடம் இருந்து RM450-க்கு அண்மையில் வாங்கினேன். அந்தக் கைப்பேசி நவம்பர் 2013-இல் வெளி வந்ததாக நண்பர் சொன்னார். கடைக்காரரிடம் கேட்டுப் பார்த்ததில் அக்டோபர் 2013-இல் வெளி வந்தது என்று கடைக்காரர் சொல்கிறார். என் நண்பர் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன்? இரண்டாம் தாரமாக வாங்கியது தப்பாகி விட்டது.


ப: தரம் என்பது வேறு. தாரம் என்பது வேறு. தாரம் என்றால் மனைவி. கைப்பேசியில் இரண்டாம் தாரம் இருப்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரிகிறது. பரவாயில்லை. அந்தக் கைப்பேசி எந்த மாடலைச் சேர்ந்தது என்று சொல்லவில்லை. அதனால் அதன் விலை விவரம் எனக்கும் தெரியவில்லை.

இருந்தாலும் உங்கள் நண்பரை நம்பித் தானே கொடுக்கல் வாங்கலில் இறங்கினீர்கள். நம்பிக்கைதானே அடிப்படை காரணம். அக்டோபர் பத்தாவது மாதத்திற்கும், நவம்பர் பதினோராவது மாதத்திற்கும் முப்பது நாட்கள் தானே ஐயா வித்தியாசம். ஆக, அப்படி என்னங்க இதில் தலை போகிற விஷயத்தைப் பார்த்தீர்கள்.

கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போங்களேன். இனிமேல் யாரிடம் இருந்தும் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சரி, அது எப்போது தயாரிக்கப் பட்டது, என்ன மாடல், என்ன விலை போன்ற விவரங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் வாங்குங்கள். இல்லை என்றால் இந்த மாதிரிதான் மின்னல் மின்னும். இடியும் இடிக்கும்.

நோக்கியா கைப்பேசிகள் தயாரிக்கப்பட்ட தேதியைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. *#92702689# என்று தட்டிப் பாருங்கள். முன்னுக்கு நட்சத்திர புள்ளி வருகிறது. அதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் வாங்கிய அந்தக் கைப்பேசி எப்போது தயாரிக்கப் பட்டது, எப்போது விற்பனை செய்யப் பட்டது போன்ற விவரங்கள் கிடைக்கும்.

உங்கள் நண்பர் ஏதோ அவசரத்தில் சொல்லி இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். பெரிது படுத்த வேண்டாம். அமைதியாக, சமாதானமாகப் போங்கள். கைப்பேசி நன்றாக வேலை செய்கிறது இல்லையா. அதுவரை மகிழ்ச்சி அடையுங்கள்.

மைக்ராசாப்ட் எக்செல்

 மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

ராஜ் பாய்  rajboy42@yahoo.com
 

கே: Microsoft Excel இல் IF  எனும் கட்டளையை எப்படி பயன்படுத்துவது? பலருக்கு சரியாகப் புரியவில்லை. அதைப் பயன்படுத்துவது சிரமம் என்று சிலர் சொல்கிறார்கள். 
ப: பொதுவாக, Microsoft Office இல் Excel என்பது மிகவும்  பயன் தரும் நிரலி ஆகும். ஆனால், இந்த எக்சலில் நூற்றுக்கணக்கான Functions எனும் செயலாற்றிகள் உள்ளன.  இந்தச் செயலாற்றிகளைச் சூத்திரங்கள் என்றும் அழைக்கலாம். எக்சலில் உள்ள எல்லா சூத்திரங்களையும் முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

எக்சலை வைத்துக் கொண்டு, ஒரு மளிகைக் கடையின் கணக்கு வழக்குகளைச் சுலபமாகச் செய்து விடலாம். சரி. இந்த IF  எனும் கட்டளை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.
IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of ’If’condition)

=if(condition, value if true, value if false)

Condition என்பதில் நமக்குத் தேவையான கட்டளைகளைக் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கும் கட்டளை சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான மதிப்பு வரும். தவறான கட்டளையைக் கொடுத்தால் தவறான மதிப்பு வரும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு. ஒருவருடைய வயது 16-க்கும் கூடுதலாக இருந்தால் அவருக்குக் கார் ஓட்டத் தகுதி இருக்கிறது. இல்லை என்றால் கார் ஓட்டத் தகுதி இல்லை. இதை எப்படி எக்சலில் கட்டளை பிறப்பிப்பது. அதை இப்படி உட்புகுத்த வேண்டும்.

=if(age>18,"Eligible to drive","No eligible")

எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>18,"Eligible to drive", "No eligible")

அடுத்து இன்னும் ஒரு சின்ன கணக்கு. ஓர் அடகுக் கடையில் வட்டி வசூல் செய்யப் படுவதை எப்படி எக்சலில் குறிப்பிடுவது. பொதுவாக, மலேசியாவில் 100 ரிங்கிட்டிற்கு மேல் இருந்தால் இரண்டு விழுக்காடு வட்டி.  100 ரிங்கிட்டிற்கு கீழ் இருந்தால் 2.5 விழுக்காடு வட்டி. அது ஓர் எடுத்துக்காட்டு தான்.  இதை எப்படி IF கட்டளையில் செயல்படுத்துவது

=if(amount>100, amount*2, amount*2.5)

எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>100,A1*2,A1*2.5)

பின்னர் இதைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறேன். இப்போதைக்கு இந்தக் கணக்குகளைச் செய்து பாருங்கள்.