02 மார்ச் 2017

மொரிசியஸ் தமிழர்

மொரிசியஸ் (Mauritius) ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது

மொரிசியஸ் தீவு நீண்ட காலமாக அறியப் படாமலும் மனிதவாசம் இல்லாமலும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப் பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர்.


தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றி உள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் பதவி வகித்து உள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப் படுகிறது. 

அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவி செய்ய முன்வந்தது. இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.



மொரிசியசில் வாழும் தமிழ் மக்களை மொரிசியஸ் தமிழர் எனலாம். இவர்கள் மொரிசியசின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 75,000 பேர். இவர்கள் தங்களை இந்துத் தமிழர்கள் எனத் தெரிவித்துக் கொள்கின்றனர். இவர்களில் 54,000 பேர் தங்களின் தாய்மொழி தமிழ் எனத் தெரிவித்தனர். 

இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுகின்றனர். மேலும் 3,300 பேர் தமிழும் இன்னொரு மொழியையும் வீட்டில் பேசுகின்றனர்.


தமிழர்கள் திறமை வாய்ந்த உழைப்பாளிகள். அவர்களைக் கௌரவிக்கும் விதமாக மொரிசியஸ் அரசு, மொரிசியஸ் ரூபாய் பணத்தில் தமிழ் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிடுகிறது. தைப்பூசம், தீபாவளிப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. 

பல இன மக்களின் மொழிக் கலப்பால் மொரிசியஸ் கிரியோல் என்னும் மொழி உருவானது. இந்த மொழியின் பல சொற்கள் தமிழில் இருந்து பெறப் பட்டவை.


தங்கள் பண்பாட்டைப் பேணிக் காப்பதற்காகத் தமிழ் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. சன்னாசி, சுப்பிரமணி, பொன்னுசாமி, முத்தையன் ஆகிய பெயர்கள் அதிகம் காணப் படுகின்றன. பன்மொழிச் சூழலில் வளர்ந்தாலும் தமிழிலேயே எழுத்து வழக்கங்கள் மேற்கொள்ளப் படுகின்றன

மொரிசியஸ் ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம், சேனல் 16 என்ற பிரிவில் தமிழில் சேவைகளை வழங்குகிறது. பத்திரிகை என்ற இதழ் தமிழ் மொழியில் கட்டுரைகளை வெளியிடுகிறது. ஒனெக்சு எப்.எம் தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்புகிறது. அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப் படுகின்றன. 


பிற வானொலி நிலையங்களும் பகுதி நேரத் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. இந்தியத் தொலைக்காட்சியான பொதிகை டி.வியும் பிற அரசு தொலைக்காட்சிகளும் தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன. 

பெரும்பாலான தமிழர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். முருகன், மாரியம்மன் கோயில்கள் பெருமளவில் உள்ளன.


தைப்பூச நாள் மொரீசிஸ் நாட்டின் தேசிய அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொரிசியஸ் தமிழ்க் கோயில்கள் கழகம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் ஆகியன தமிழர் வாழ்வியலில் இயங்குகின்றன. 

இங்கே ஏறத்தாழ 120 தமிழ்க் கோயில்கள் உள்ளன. இவற்றில் 70 கோயில்கள் முருகனுக்கும், 40 கோயில்கள் அம்மனுக்கும் உரியவை.

ஏறத்தாழ 200 இளநிலைப் பள்ளிகளில் 100 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கின்றனர். 2013 ஆம் ஆண்டு இலக்குவனார் பெயரில் போர்ட் லூயிசில் தமிழ்ப் பள்ளி தொடங்கப் பட்டுள்ளது. தமிழைப் பல்கலைக் கழகத்தின் வழியாகப் படிக்க இந்திய அரசு உதவி வருகிறது.

01 மார்ச் 2017

மகாபாரத எலும்புக்கூடு

 பொய்யாக இருந்தாலும் அந்தப் பொய் உவாக்கப்பட்ட பரபரப்பின் மேல் நம் அனைவருக்குமே சற்று அலாதியா ஆர்வம். அண்ல்மையில் ஒரு செய்தி. இணையத்தில் காய்ச்சல் பிடித்து கலாய்க்கும் செய்தி... அப்படிப் பரவிய ர் அதிசயமான பொய்.

ராமாயண மகாபாரத எலும்புக்கூடு என்று ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு செய்தியை உருவாக்கி அதைப் பரவ விட்டு உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.


மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் கடோத்கஜன். அவனுடைய 40 அடி எலும்புக்கூடு வட இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று ஒரு செய்தி. கடைசியில் இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ‘தொல்பொருள் ஆராய்ச்சி’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் பிடிக்கப்பட்டவை.

வவை டிஜிட்டல் புகைப்பட ஆர்வலர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியின் போது எடுக்கப்பட்வை. எப்படியோ உண்மை ஒரு வழியாகத் தெரிய வந்தது. இருந்தாலும் மகாபாரத ரசிகர்கள் விடுவதாக இல்லை. ஆப்பிரிக்காவில் கிடைத்த எலும்புக் கூடுகளையும் சீனாவில் 
கிடைத்த எலும்புக் கூடுகளையும்  இணையத்தில் போட்டுத் தாக்குத் தாக்கு என்று தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.



உண்மையில் இது 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி கினோ டி டொமினிசிஸ் (Gino De Dominicis) எனும் இத்தாலிய சிற்பி இத்தாலி மிலான் நகரில் உருவாக்கிய இராட்சச மனித எலும்புக்கூடு. 




இந்த எலும்புக்கூடு ராமாயணம், மகாபாரதம் எதிலும் இல்லை. ஆனால் ராமாயண மகாபாரத எலும்புக்கூடு என்று ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு செய்தியை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து அதைப் பரவ விட்டு உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
(சான்று: https://shewalkssoftly.com/page/227/?pages-list)


காந்தி நடனம்

வேலை வெட்டி இல்லாதவர்கள் அண்ணல் காந்தியையும் விட்டுவைக்கவில்லை. அவரைப் பற்றியும் தவறான படங்களை இணையத்தில் பதிவு செய்கிறார்கள்.

ஆங்கிலப் பெண்ணுடன் காந்தி நடனம் என்ற பெயரில் ஒரு புகைப்படம் பல வருடங்களாக இணையத்தில் பரவி வருகிறது. 
 




ஆனால் உண்மையில் அது ஆஸ்திரேலியா நடிகர் ஒருவர் காந்தியைப் போல வேடமிட்டு ஒரு பார்ட்டியில் நடனமாடும் போது எடுத்த புகைப்படம் ஆகும்.

⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு

1. புதிய திறன்பேசி வாங்கியதும் அல்லது புதிய மின்கலம் வாங்கியதும் முதலில் 8 மணி நேரம் மின்னூட்டம் செய்வது மிக மிக அவசியம். ஒரு மணி அல்லது 2 மணி நேரத்தில் ’Battery Full’ என காட்டினாலும் மின்னேற்றம் (Charge) செய்வதை நிறுத்தாதீர்கள். 8 மணி நேரம் முடிந்த பின்பே மின்னேற்றம் செய்வதை நிறுத்துங்கள்.

2. எப்போது திறன்பேசி "Battery Low" என காட்டுகிறதோ அப்போதுதான் மின்னூட்டம் செய்ய வேண்டும். சற்றுக் குறைந்ததும் உடனே மின்னூட்டம் செய்யக் கூடாது.


3. திறன்பேசியின் மின்கலம் mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலமா என சோதித்துப் பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணைய வசதி உள்ள திறன்பேசிகளுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலம் தேவை.
                       
4. இரவு நேரங்களில் திறன்பேசியை மின்னேற்றத்தில் இணைத்துவிட்டு காலையில் கழற்றும் வழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி மின்னூட்டம் செய்வதால் உங்களுடைய மின்கலம் விரைவில் பருத்துப் பெருத்து... பின்னர் பயன்படாமலேயே போகும்.



5. புளூடூத் (Bluetooth) வசதி, வை-பை (wifi) வசதி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் அடைத்து வைப்பதே சிறந்தது. எப்போதும் திறந்தே வைத்து இருந்தால் மின்கலத்தின் தயாரிப்பு நிலையில் இருந்த ஆற்றல் குறைந்து கொண்டே போகும்.                       

6. அழைப்பு ஒலிக்கு (Ringtone) ஒரு முழு பாட்டையும் வைக்காமல் Cut Songs அல்லது Split Songs எனும் குறுகிய பாடல்களையே அழைப்பு ஒலியாக வைத்தால்... மின்கலத்தின் திறன் அதிகமாகச் செலவழிக்கப் படுவதைத் தவிர்க்கலாம்.


7. திறன்பேசியில் எப்போதும் பாடல்களைப் பாட விடாதீர்கள்.

8. திறன்பேசியின் திரை வெளிச்சத்தைக் குறைத்து வையுங்கள். அனைத்து திறன்பேசிகளிலும் (Power Saver Mode) இருக்கும். அதை முடுக்கி (Activate) விடுங்கள் இதனால் உங்களுடைய மின்கலம் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்கும்.

9. திறன்பேசியின் முகப்பில் அதிக பிக்ஸ்ல்கள் (Pixels) கொண்ட படங்கள் வேண்டாமே. இதனால் மின்கலத்தின் ஆற்றல் மிக விரைவில் தீர்ந்து விடும்.


28 பிப்ரவரி 2017

எந்த வயதில் எது வெற்றி



4 வயதில் தனியாக நடக்க முடிந்தால் அது வெற்றி !

8 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால் அது வெற்றி !

12 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அது வெற்றி !

18 வயதில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால் அது வெற்றி !

22 வயதில் பட்டதாரியாகப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினால் அது வெற்றி !

25 வயதில் நல்ல வேலை கிடைத்தால் அது வெற்றி !

30 வயதில் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ள முடியுமானால் அது வெற்றி !

35 வயதில் போதுமான அளவு சம்பாதிக்க முடியுமானால் அது வெற்றி !

45 வயதில் இளைஞரைப் போன்ற உருவத்தை தக்க வைக்க முடியுமானால் அது வெற்றி !

50 வயதில் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால் அது வெற்றி !

55 வயதில் தன் கடமைகளைத் தொடர்ந்து சரியாகச் செய்ய முடியுமானால் அது வெற்றி !

60 வயதில் ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப் படாமல் செயலாற்ற முடியுமானால் அது வெற்றி !

65 வயதில் நோய் இல்லாமல் வாழ முடியுமானால் அது வெற்றி !

70 வயதில் மற்றவர்களுக்குப் பாரமில்லாமல் வாழ முடியுமானால் அது வெற்றி !

75 வயதில் பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால் அது வெற்றி !

80 வயதிற்கு மேல் மற்றவர் துணை இல்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால் அது வெற்றி !