02 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1

ஏழு சுவரங்களில் சம்பூர்ண ராகம். ஆறு சுவரங்களில் சாடவ ராகம். ஐந்து சுவரங்களில் ஔடவ ராகம். நான்கு சுவரங்களில் வக்ர ராகம். அரகோண சுவரங்களில் தலையான ராகம் சம்பூர்ண ராகம். அதுவே அப்போதும் எப்போதும் ஓர் அழகிய அற்புதமான பரமேஸ்வரா ராகம். 


பரமேஸ்வரா என்பது ஒரு ராகம். மலேசிய வரலாற்றில் மறைக்க முடியாத ஓர் அபூர்வ ராகம். ஒரு காலத்தில் அது ஒரு தெய்வீக ராகம். இருந்தாலும் இப்போதைக்கு வேதனையின் விளிம்பில் விசும்பிக் கொண்டு இருக்கும் ஒரு விசும்பல் ராகம்.

சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்துப் பள்ளிப் பாட நூல்களில் இருந்து கனவுகளாய்க் கரைந்து கசிந்து போகின்ற காம்போதி ராகம்.

எந்த ஒரு மனிதனும் காணாமல் போகலாம். அவனைத் தேடிக் கண்டிப்பிடிக்கலாம். உருக்குலைந்து போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்த்து விடலாம். ஆனால் பெயரே காணாமல் போனால் எப்படிங்க. அதுதான் இங்கே நடக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. எழுதுவதற்கு வெட்கமாகவும் இருக்கிறது.

கடல் தாண்டிய கரையில் அத்திம் மேடு என்பது ஒரு பௌர்ணமிக் கோளாறு என்றால் அதுவே இங்கே ஒரு பட்டப் பகல் கொள்ளை. ஆக பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு இருண்ட இருட்டில் எருமை மாடு எப்படிங்க தெரியப் போகிறது.

கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எத்தனை நாளைக்குத் தான் படம் காட்டிக் கொண்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

சில வரலாற்றுக் கத்துக் குட்டிகள் அப்படித் தான் படம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. திரை கிழிய படம் காட்டிவிட்டுப் போகட்டும். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் என்றைக்கும் உண்மை மறையக் கூடாது. அந்த உண்மை மறைக்கப் படவும் கூடாது. அவை தான் மனத்தை நெருடும் ஆதங்க ஆர்ப்பரிப்புகள்.

உண்மையை மறைத்து எவ்வளவு காலத்திற்குத் தான் பேர் போட முடியும். சொல்லுங்கள். உலக மக்களிடம் எத்தனை காலத்திற்குத் தான் பில்டப் செய்ய முடியும். சொல்லுங்கள்.

உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெத்த அப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவனின் பெயரைப் போட்டால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? பரமேஸ்வரா எனும் பெயர் இந்த மண்ணில் நிலைக்க வேண்டும்.

பரமேஸ்வரா எனும் ஒரு மகா புருசர் தான் மலாக்காவைத் தோற்றுவித்தார் எனும் சத்தியமான உண்மை நிலைக்க வேண்டும். இப்போது வாழும் நாம் மரித்துப் போனாலும் நம்முடைய வாரிசுகள் அந்த உண்மையைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அந்த வரலாற்று உண்மை நிலைத்து நீடிக்க அவர்கள் போராட வேண்டும். (தொடரும்)

30 ஆகஸ்ட் 2017

தெள்ளுப்பூச்சி

தெள்ளு பூச்சி (Corrodopsylla curvata - Shrew Flea).  Shrew என்றால் மூஞ்சுறு எலி. Flea என்றால் தெள்ளு வகையைச் சேர்ந்த உண்ணி. இதன் அசல் பெயர் மூஞ்சூறு தெள்ளுப் பூச்சி. 




Body plan of the cat flea.
Encyclopædia Britannica, Inc.

எலி, சுண்டெலி, மூஞ்சுறு எலி, அணில், பூனை, நாய் போன்ற பாலூட்டிகளை ஒட்டி அவற்றின் இரத்ததை உறிஞ்சிக் குடித்து குஞ்சுகள் பொரிக்கும். இந்தச் சிறு வகை உயிரினங்கள் இல்லாத போது தான் மனிதர்களை நாடிச் செல்லும். இது வெளிப்பக்க ஒட்டுண்ணியாகும் (ectoparasitic).

தெள்ளுப் பூச்சிகளுக்கு இறக்கைகள் இல்லை. இதன் நீளம் 0.1 லிருந்து 1 cm (0.039 லிருந்து 0.39 அங்குலம்). இதுவரை 2000 வகையான தெள்ளுப் பூச்சிகளை அடையாம் கண்டு இருக்கிறார்கள்.

 


Flea (Ctenocephalides)

10-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை பிளேக் நோய் (bubonic plague) தாக்கியதால் மொத்த மக்கள் தொகையில் கால்வாசி பேர் இறந்து போனார்கள். இந்தப் பிளேக் நோய்க்கு எலிகள் மட்டும் காரணம் அல்ல. அந்த எலிகளை ஒட்டி வாழ்ந்த இந்தத் தெள்ளு பூச்சிகளும் ஒரு காரணம்.

ஆடு மாடுகளையும் தாக்கும் தெள்ளுப் பூச்சிகளை Ctenocephalides felis என்று அழைக்கிறார்கள். மனிதர்களைத் தாக்கும் தெள்ளுப் பூச்சிகளை (human flea - Pulex irritans) என்று அழைக்கிறார்கள். நாய்த் தெள்ளுகளுக்கு Ctenocephalides canis என்று பெயர். 



Spilopsyllus cuniculi – rabbit flea

கோழித் தெள்ளுகளுக்கு Ceratophyllus gallinae என்று பெயர். ஆப்பிரிக்க மனிதர்களைத் தாக்கும் தெள்ளுகளுக்கு Ceratophyllus niger என்று பெயர். தென்கிழக்காசிய நாடுகளில் Xenopsylla cheopis எனும் தெள்ளுண்ணி எலிகள் மூலமாகப் பரவுகின்றன.

மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறையும் போது அவர்கள் மீது இந்த ஒட்டுண்ணிகள் மிகையான தாக்கங்களை உண்டாக்கும்.


மனிதர்களின் தலைமுடி, அக்குள் பகுதி, மறைப் பகுதிகளில் உள்ள மயிர்களுக்கு இடையில் தஞ்சம் அடைந்து இரத்தம் உறிஞ்சி குஞ்சுகள் பொரிக்கும். 3 லிருந்து 4 நாட்களுக்குள் குஞ்சுகள் பொரிக்கும். தெள்ளுண்ணி அல்லது தெள்ளு பூச்சியைப் பார்க்கிறது கஷ்டம். எப்பவும் குதித்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஒட்டுண்ணி அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தைத் தாண்டும். அதாவது ஒரு மனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம். எப்போதும் துள்ளிக் கொண்டே இருக்கும். நெட்டை வாக்கில் 7 அங்குலம் குதிக்கும். நேர் வாக்கில் 11 அங்குலம் வரை துள்ளிப் பாயும்.

மூஞ்சுறு எலி

இதை ஒழிப்பதோடு மட்டும் சரியாகி விடும் விசயம் இல்லை. தொடர்ந்து கவனிக்கப்பட‌ வேண்டிய‌ விசயம். திரும்பத் திரும்ப‌த் தெள்ளு வரலாம். சுத்தம் செய்ய செய்ய வந்து கொண்டே இருக்கும்.

துணிகளை வெயிலில் காய‌ போட்டாலும் பிரயோசனம் இல்லை. இவற்றுக்கு வெயிலோ, வெப்பமோ எதுவும் செய்வது இல்லை. ஒரு தடவை துணிகளில் அல்லது பலகை இடுக்குகளில் முட்டையிட்டால் அது பொரிக்கும். 

 

பின்னர் திரும்ப‌ கடிக்க ஆரம்பிக்கும். மனித இரத்தம் மற்ற உயிரினங்களைக் கடித்து இரத்தம் குடித்து முட்டைகள் போடும்.

ஒரு தெள்ளுண்ணி 30 லிருந்து 35 முட்டைகள் போடும். இவற்றின் வாழ்நாள் 7 லிருந்து 8 மாதங்கள். இந்தக் காலத்தில் உணவு இல்லை என்றாலும் பட்டினியாகவே இருக்கும். சந்தர்ப்பம் வரும் வரை அமைதியாகக் காத்து இருக்கும்.



Human flea - Pulex irritans

ரச‌ கற்ப்பூரம் பொடி செய்து துணிகளில் தூவினால் இந்தப் பூச்சி சாகும் என்று சொல்ல முடியாது. தெள்ளு ஒரே இடத்தில் இராமல் துள்ளிக் கொண்டே இருக்கும். வாசனை பொறுக்க‌ முடியாமல் கட்டிலிருந்து விலகி இருக்கலாம். 


கற்பூர‌ வாசனை தீர்ந்ததும் மீண்டும் வரும். எலுமிச்சை சாறுக்கு விலகி இருக்கும். வாடை மறைந்ததும் மீண்டும் வரும். தாய்ப் பூச்சி செத்தாலும் அதன் முட்டைகள் இருக்கும். 



தற்காலிகமாக‌ insect repellent பயன்படுத்தலாம். தெள்ளுக்கும் சேர்த்த‌ மருந்து தானா என்பதைக் கவனித்து வாங்குங்கள். இந்த மருந்தும் 6 மணி நேரத்தில் வீரியம் இழந்துவிடும்.

தெள்ளு கட்டிலில் மட்டும் இருப்பது இல்லை. கட்டிலின் அடியில், கதவு இடுக்குகளில் கூட‌ ஒளிந்திருக்கும். முழு வீட்டிற்கும் சிகிச்சை செய்தாக‌ வேண்டும். ஒரு தட‌வை வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்யுங்கள். வேண்டாத‌ பொருட்களை அப்புறப் படுத்துங்கள். படுக்கை மெத்தைகளை எரித்து விடுங்கள்.

நீர்த் தொட்டிகளை அடிக்கடி இடம் மாற்றி வையுங்கள். முடிந்தால் தொட்டிகளைக் ஒட்டுக் கால்களின் மேல் வைக்கலாம். இதற்கு என‌ உள்ள‌ மருந்து தெளிப்பாளர்களைப் பிடித்தால் வீட்டைச் சுற்றி உள்ள‌ பகுதிகளுக்கும் மருந்து தெளித்து விடுவார்கள்.

(Because fleas are able to leap horizontal or vertical distances 200 times their body length and to develop an acceleration of 200 gravities, they have been described as insects that fly with their legs.)

(சான்று: https://www.britannica.com/animal/flea#ref256631)

28 ஆகஸ்ட் 2017

தொட்டால் சிணுங்கி

தொட்டால் சிணுங்கியைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று கேட்டால் பலரும் சொல்லும் பதில் தொட்டால் சிணுங்கும்... அதுதான் தொட்டால் சிணுங்கி என்று சொல்வது உண்டு. 


உலகத்தில் முதன் முதலில் இந்தத் தொட்டால் சிணுங்கி தாவரம் South America and Central America நாடுகளில் பிறந்து தான் சிணுங்கத் தொடங்கியதாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்தத் தாவரமும் ஒரு மிகப் பெரிய இடத்தைப் பிடித்து இருக்கிறது.

மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப உபயோகித்தால் தீராத பிணிகள் நீங்கி விடுகின்றன. தாவரங்களில் மிக விநோதமாக உள்ள ‘தொட்டாச் சிணுங்கி’ என்ற ஒரு வகைச் செடியைத் தாவரவியலாளர் _மிமோஸாபொடிக்கா_ (Mimosa pudica) எனும் பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

நாம் தொட்டவுடனே சுருங்கும் தன்மை கொண்டதால் தொட்டாச் சுருங்கி என்று பெயர் வந்தது. காலப் போக்கில் இந்தப் பெயர் தொட்டால் சிணுங்கி என்று மருவியதாம்.

இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும் போது காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன.

தொட்டால் சிணுங்கி ஒரு மூலிகை. சித்த மருத்துவத் துறையில் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. சித்த வைத்திய முறையில் இரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப் படுகிறது. 

சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் தொட்டால் சிணுங்கி செடிக்கு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

26 ஜூலை 2017

வணக்கம் கூறும் தமிழர் இயல்பு

எப்போது மனிதன் பேசக் கற்றுக் கொண்டானோ அப்போது இருந்தே வணக்கம் சொல்லும் பழக்கம் அவனுடைய வாழ்க்கையில் இணைந்து நனைந்து கனிந்து விட்டது. 



வணக்கம் கூறுவது என்பது வாழ்வியல் இயல்பு. அது அவர்களின் வாழ்க்கையில் ஒன்றித்துப் போன அன்றாட இயல்பு.

உலகவாழ் மக்கள் அவர்களின் மொழிக்கும் அவர்களின் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு வணக்கம் சொல்லும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். 

மலேசியாவில் நம் சகோதர மலாய் இன மக்கள் ஒருவரைக் காலையில் பார்த்ததும் ‘செலாமாட் பாகி’ (Selamat Pagi);  மதியத்தில் ’செலாமாட் தெங்கா ஹரி’ (Selamat Tengahari); இரவில் ‘செலாமாட் மாலாம்’ (Selamat Malam) என்று சொல்கின்றனர். 


அது அவர்களின் இயல்பு. அது அவர்களுக்கு உரிய மொழி, பண்பாட்டு அடிப்படைச் செயல். அதை அப்படியே தமிழிலில் பார்த்தால் ‘நலம் மிக்க காலை நேரம்’, ‘நலம் மிக்க நண்பகல் நேரம்,’ ‘நலம் மிக்க மாலை நேரம்’ என்று பொருள் படுகின்றன. சரி.

அந்தப் பக்கம் பார்த்தால் ஆங்கிலேயர்கள் ‘குட் மார்னிங்’ (Good morning), ‘குட் ஆப்டர்நூன்’ (Good afternoon), ‘குட் ஈவ்னிங்’ (Good evening) என்று சொல்கிறார்கள். அது ஆங்கிலேயர்களின் இயல்பு. சரி.

இருந்தாலும் இன்றைய நாளில் தமிழர்கள் வணக்கம் சொல்லும் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. 



 காலையில் சந்திக்கும் போது ‘காலை வணக்கம்’; மாலையில் சந்திக்கும் போது ‘மாலை வணக்கம்’; இரவில் சந்திக்கும் போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர். தப்பு என்று சொல்லவில்லை. அது நம் பண்பாடு அல்ல என்று சொல்ல வருகிறேன்.

அதாவது காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்வது நம் தமிழர்களின் மரபு அல்லஎன்று சொல்ல வருகிறேன். அது ஆங்கிலேயர்களின் மரபு. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.

வணக்கம் என்னும் சொல்லைத் தமிழர்களாகிய நாம் பண்பாட்டுக் கலப்பு இல்லாமல் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரும் சொல்லாக ‘வணக்கம்’ அமைந்து இருக்கிறது.

மற்ற பண்பாடுகளுடன் கலந்துவிட்ட ‘காலை வணக்கம்’, ‘நண்பகல் வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற சொல் தொடர்கள் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டிற்கு முரண் பட்டவையாக உள்ளன என்பது என் கருத்து. 
 



 ஆக வணக்கம் என்பதை வணக்கம் என்று சொல்வதே சாலப் பொருத்தம். சாலவும் சிறப்பு.

உடனடியாக மாற்றுங்கள் என்று சொல்லவில்லை. காலப் போக்கில் சன்னம் சன்னமாய் மாற்றிக் காட்டலாமே. யாரையும் வற்புறுத்தவில்லை. ஏன் என்றால் பழக்க தோஷம் என்னையும் விடவில்லை. 

சில வேளைகளில் நானும் காலை வணக்கம் கலந்த படச் செய்திகளைப் பகர்வதும் உண்டு. பகிர்வதும் உண்டு. சன்னம் சன்னமாய் மாற்றிக் காட்டுவோம்.

25 ஜூலை 2017

சசிகலா என்றும் நித்தியகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை. ஆனாலும் சிறையின் விதிமுறைகளைச் சசிகலா மீறி இருக்கிறார். இந்தச் சிறைமீறல் குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப் பட்டால் மேலும் பல ஆண்டுகள் கூடுதலாகச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். 
 

சசிகலாவைப் பொருத்த வரையில் கிடைத்தாலும் ஒன்றுதான் கிடைக்காமல் போனாலும் ஒன்றுதான்.

சிறையில் சசிகலாவுக்கு ஒதுக்கப் பட்டவை 5 அறைகள்; அங்கே அவருக்குக் கொடுக்கப்பட்ட இருந்த வி.ஐ.பி. வசதிகள்; நட்சத்திர ஓட்டல் வாழ்க்கை; அடுத்து பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் போன்ற அனைத்து விவரங்களும் கசியத் தொடங்கி விட்டன.



பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உண்மையிலேயே நட்சத்திர ஓட்டல் போல் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன என்று பெங்களூரு சிறைத் துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா சொல்லப் போய் அதுவே கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. டி.ஐ.ஜி ரூபா சொல்கிறார்... சசிகலாவுக்கு...

தனி சமையல் அறை; 
ஓய்வு எடுக்க தனி அறை; 
படுப்பதற்கு ஓர் அறை; 
ஒரு வெற்று அறை;
சோபா இருக்கை சந்திப்பு அறை;  

இப்படி மொத்தம் அவருக்கு மட்டும் 5 அறைகள். இதற்காக 2 லிருந்து 5 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருக்கிறது.


சசிகலாவை மற்ற கைதிகள் நெருங்கவே முடியாதபடி அவருக்கு என்று தனிப்பட்ட அறை. வேறு யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்குத் தடுப்புப் சுவர் வேறு.

சிறையில் இருக்கும் சசிகலாவை அவரின் உறவினர்கள் அல்லது கட்சிக்காரர்கள் சந்திக்க வேண்டும் என்றால் அந்தச் சந்திப்புக் காட்சிகளை வீடியோ கேமரா கண்காணிப்பில் தான் நடக்க  வேண்டும்.

ஆனால் சசிகலாவுக்கு அப்படி அல்ல. அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த பார்வையாளர் அறையில் கேமரா வசதிகள் அகற்றப்பட்டு உள்ளன. 



வீட்டில் இருப்பது போலவே சசிகலா சகல வசதிகளுடன் சிறையில் இருக்கிறார் என்று பெங்களூரு பத்திரிகைகள் டி.ஐ.ஜி. ரூபாவை மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளைச் சிறைத் துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் மறுத்துப் பேசினார்.

அவர் சொன்னார்: ''வி.வி.ஐ.பி. என்ற அடிப்படையில் பாதுகாப்பு விதிகள் சசிகலாவுக்குக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. ரூபா சொல்வது போல சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை... என்கிறார் சத்தியம் தவறாத சத்யநாராயண ராவ்.

ஆனால் சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து இருப்பது போல ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.



இந்த நிலையில் சசிகலாவை வேறு ஒரு சிறைக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப் படுகிறது. அப்படி சிறை மாற்றப் பட்டால் தும்கூருவில் உள்ள மகளிர் சிறைக்குச் சசிகலாவை மாற்றலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவுக்குச் சொகுசு வசதிகள் கிடைக்க கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தும்கூருவைச் சேர்ந்தவர். அவர் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வருகிறார். அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பை நடத்தி வருகிறார். 



இவர் அ.தி.மு.க.(அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமானவர். இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டு சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க உதவிகள் செய்து இருக்கிறார்.

அவர் மூலமாகச் சிறை அதிகாரிகளுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாக கைமாறி உள்ளது. சிறையில் வேலை செய்த சிலருக்கு மாதச் சம்பளத்தைப் போல் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.