11 செப்டம்பர் 2017

வாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை

(பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வுப் பதிவு)

வாட்ஸ் அப் சமூகத்தளம் என்பது தகவல் பரிமாற்றத்தில் பல்வேறு வசதிகளைக் கொண்டது. நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பற்பல வசதிகள் இருந்தாலும் பெண்களைத் தொல்லைப் படுத்தும் செயல்கள் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.




உற்றார் உறவினர்கள், சுற்று வட்டங்கள், நண்பர்களை இணைக்கும் தளம் என அதற்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்னும் இருக்கிறது. பெண்கள் வட்டாரத்திலும் வாட்ஸ் அப் பிரபலமானது. வெள்ளிடைமலை. ஆனாலும் அண்மைய காலங்களில் வாட்ஸ் அப்பில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

மற்ற வலைத் தளங்களைக் காட்டிலும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் மிக எளிதில் பரிமாறப் படுகின்றன. அதனால் யார் ஒருவர் ஒரு தகவலை உருவாக்கினார்; அந்தத் தகவல் எப்படி பரவியது என்பதைப் போலீசாரால் கூட சரியாகக் கண்டுபிடிக்க முடியாத ஓர் அவல நிலை. அதனால் பற்பல தவறான தகவல்கள் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றன.

வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைத் தளங்களில் ஒரு பெண் தன் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பெண்ணுக்கு வேண்டாதவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். இல்லையா.

அவர்களில் யார் ஒருவர் வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவமானப் படுத்த முடியும். அவருடைய புகைப் படத்தை ஒரு சில ஒலி ஒளி காணொளிகளில் இணைத்து அவற்றை அப்படியே வாட்ஸ் அப்பில் பதிவு செய்து அசிங்கப் படுத்த முடியும்.

அதனால் அந்தப் பெண்ணின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறி ஆகின்றது... அதுவே பெண்களுக்கு ஓர் அபாய அறிவிப்பு.

*பெண்கள் என்ன செய்யலாம்*

எந்த ஒரு சமூக வலைத் தளமாக இருந்தாலும் சரி. முடிந்த வரையில் பெண்கள் தங்களின் அசல் புகைப் படங்களைப் பதிவேற்றம் செய்யவே கூடாது. மாற்றுப் போலியான படங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

பேஸ்புக்கைப் பாருங்கள். காலையில் செய்த மேக்கப் கலைய விடாமல் இரவு படுக்கும் வரையில் செல்பி எடுத்து என்னையும் பார் என் அழகையும் பார் என்று அரங்கேற்றம் செய்து கொண்டு இருப்பார்கள் சில கிளியோபாட்ராவின் வாரிசுகள்.

அழகின் நினைப்பில் மிதக்கும் அவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்துகள் காத்துக் கொண்டே இருக்கின்றன. அது அவர்களுக்குத் தெரியுமா. புரியவில்லை.

வாட்ஸ் அப்-இல் நான் எனக்குத் தெரிந்தவர்களுடன் தானே தொடர்பில் இருக்கிறேன். அப்புறம் எப்படி பிரச்சினை வரும். எப்படி ஆபத்து வரும் என சிலர் கேட்கலாம். சரி.

வாட்ஸ் அப்-இல் உங்களுக்குத் தெரிந்தவர்களை மட்டுமே இணைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் உங்களின் கைப்பேசி எண்களை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம். உங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரலாம். இல்லீங்களா.

நீங்கள் எந்தப் படத்தை Profile படமாக வைத்து இருக்கிறீர்கள்; என்னென்ன செய்திகளைப் பதிவு செய்கிறீர்கள்; எப்போது எல்லாம் வாட்ஸ் அப்பிற்குள் வருகிறீர்கள் போகிறீர்கள் என்பதை எல்லாம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

இவற்றில் இருந்து தப்ப ஒரே வழி தான் இருக்கிறது. உங்களின் வாட்ஸ் அப் Settings-களை மாற்ற வேண்டும். உங்களுடைய கைப்பேசியில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே உங்களின் தனிப்பட்ட தகவல் தெரிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்.

அல்லது யாருக்குமே உங்களின் தனிப்பட்ட தகவல் தெரியாமல் செய்ய வேண்டும். அதற்கான வசதிகளை வாட்ஸ் அப்பில் இருக்கிறது அவற்றை முறையாகச் செயல் படுத்துங்கள்.

முடிந்த வரையில் உங்களின் அசல் புகைப்படம் மற்றும் நீங்கள் எந்தெந்த நேரங்களில் வாட்ஸ் அப் வருகிறீர்கள் போகிறீர்கள் என்பதை முற்றிலுமாக மறைப்பது நலம் பயக்கும்.

அடுத்து ஆண்கள் நிறைந்த வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதிலும் நிறைய பிரச்னைகள் உள்ளன. எனவே உங்களுக்குத் தெரியாத ஆண்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து விலகி விடுங்கள். அதுவே சிறப்பு.

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் இருக்கும் குழுக்களில் மட்டுமே இணையுங்கள். நம்பிக்கையான தலைவர்கள் இருக்கும் குழுக்களில் இணையுங்கள்.

ஏன் என்றால் வாட்ஸ் அப் குழு மூலமாக உங்களின் விவரங்கள், உங்களின் தொலைபேசி எண்கள் போன்றவை கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத நபர்களுக்குப் போய்ச் சேரும் வாய்ப்புகள் உள்ளன. தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருதலைக் காதலில் தோல்வி அடையும் ஆண்கள் பலர். அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களைப் பழிவாங்க ரொம்ப நேரம் பிடிக்காது. அந்தப் பெண்களைக் கண்ட மாதிரி மிக மிக மோசமாக அவமானப் படுத்த முடியும். வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

எனவே உங்களுக்கு 100க்கு 100 நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படங்களைப் பகிருங்கள். மற்றவர்கள் எவரிடமும் உங்களின் புகைப்படங்களைப் பகிர்வு செய்ய வேண்டாம்.

வேலை வாய்ப்புகள், நேர்காணல்கள் பற்றிய தகவல்களைத் தருவதாகச் சொல்லும் இணையத் தளங்களை நம்பி உங்களின் புகைப் படங்களை இணைக்கவே இணைக்காதீர்கள்.

நாசம் செய்ய நினைக்கும் மோசக்கார ஆண்கள் பலர் நிறைந்த உலகில் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் இல்லை. அதை நினைவுபடுத்தவே இந்த நீண்ட பதிவு.

வாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு

வாட்ஸ் அப்பில் தினமும் பல இலட்சம் தகவல்கள் பரிமாறப் படுகின்றன. உங்களுக்கு வரும் ஒரு தகவல் உண்மையானது என 100 சதவிகிதம் தெரிந்தால் மட்டுமே பகிர்வு செய்யுங்கள். அல்லது பிரபல நிறுவனங்களின் இணையத் தளங்களில் உறுதியிட்டுக் கூறப்படும் தகவல்களை மட்டும் பரிமாறுங்கள்.

*அடையாறு புற்றுநோய் மருத்துவமனை*

அண்மையில் புற்று நோய்க்கான மருந்து அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அந்தத் தகவல் 100 சதவிகிதம் உண்மை இல்லை என அடையாறு புற்றுநோய் மருத்துவமனையே மறுத்து உள்ளது.

பிரபல நடிகர்கள் இறந்ததாகப் பரவிய தவறான தகவல்களையும் நினைவில் நிறுத்துங்கள்.

எனவே உங்களுக்குச் சரியான தகவல் எனத் தெரியாத பட்சத்தில் தகவல்களைப் பரப்பாதீர்கள். சமூக வலைத் தளங்கள் மனிதர்களை இணைக்க உருவாக்கப் பட்டவையே. சமூக விரோதிகள் தவறாகப் பயன்படுத்த இடம் கொடுத்துவிடக் கூடாது.

09 செப்டம்பர் 2017

தெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம்

Lemon Spray for Flea Control
 

எலுமிச்சையில் D-limonene எனும் ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம் தெள்ளுப்பூச்சிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தது.

தேவையான பொருட்கள்:

8 எலுமிச்சை
1.5 லிட்டர் நீர்
356 மில்லி லிட்டர் வினிகர் vinegar


3 மி.மீ. அளவுக்கு எலுமிச்சையை சின்னதாய் வெட்ட வேண்டும். ஒரு பானையில் வெட்டிய எலுமிச்சைகளைப் போடுங்கள். ஒரு முள்கரண்டியால் வெட்டிய துண்டுகளைக் கிண்டுங்கள். எலுமிச்சைத் தோலில் தான் தெள்ளுப்பூசிகளைக் கொல்லும் ரசாயனம் இருக்கிறது. ஆகவே தோலோடு நன்றகப் பிழிய வேண்டும்.



நீர் கலந்து கொதிக்க வையுங்கள். கொதி வந்ததும் ஆகக் குறைவாக சூட்டைத் தணித்து வையுங்கள். 30 நிமிடங்களுக்கு குறைந்த சூட்டில் சூடு ஏற்ற வேண்டும்.



பின்னர் பானையை வெளியே எடுத்து குளிர்ந்த நீரில் வைத்து 8 மணி நேரத்திற்கு ஆற விடுங்கள். அதன் பின்னர் எலுமிச்சைத் துண்டுகளைப் பிழிந்து எடுத்து அவற்றின் சக்கைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்.


எலுமிச்சை சாறு லேசான கட்டியான நிலையில் இருக்கும். அப்போது வினகர் (vinegar) சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். 
 



அதன் பிறகு spray தெளிப்பான் மூலமாக தெளித்து விடுங்கள். தெள்ளுப்பூச்சிகள் இறந்து விடும்.

தெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும்

கே: தெள்ளுப்பூச்சி ஒரு சிலரை மட்டும் தாக்கும் என்பது உண்மையா?

ப: உண்மை. ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடலில் ஒவ்வொரு விதமான ரசாயன கூட்டமைப்பு உள்ளது. மனிதர்களின் தோலின் சுரப்பு நீர் (Skin secretions); வாயு உமிழ்வு (gas emissions) ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும்.


எந்த ஒரு மனிதரின் ரசாயன கூட்டமைப்பு சரியாக அமைகிறதோ அந்த மனிதரை மட்டும் தான் தெள்ளுப்பூச்சிகள் தேடிப் போய் ஒட்டிக் கொள்ளும். அவரே அந்தப் பூச்சிகளுக்கு விருந்தாளி ஆகின்றார்.

ஒருவரின் உடலில் அதிகப்படியான கரியமில வாயு வெளியானால் தெள்ளுப்பூச்சிகள் அவரைத் தேடி வரும்.
 
கே: தெள்ளுப்பூச்சிகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன?

ப: தெள்ளுப்பூச்சிகள் சமிக்ஞை மூலமாகத் தொடர்பு கொள்கின்றன. ஒரு பொருத்தமான இடம் கிடைத்ததும் அது சமிக்ஞை ஒலியை வெளியாக்கும். அந்த ஒலி வரும் இடத்தை நோக்கி மற்ற பூச்சிகள் படை எடுக்கும்.

ஆகவே சமிக்ஞை ஒரு மனிதரின் உடல்பகுதியில் இருந்து வந்தால் அந்த மனிதரை மட்டுமே மற்ற பூச்சிகள் தேடிச் செல்லும். அதனால் உங்கள் அருகாமையில் இருக்கும் மற்றவர்களை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்வது இல்லை.
(Fleas send signals to other fleas, alerting them of the presence of a warm-blooded meal.)

(http://fleascience.com/flea-encyclopedia/life-cycle-of-fleas/adult-fleas/what-attracts-fleas/)

1. ஈரப்பசை இல்லாமல் 3 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை உயிர் வாழும்.

2. இருந்த இடத்தில் இருந்து படுக்கை நிலையில் (horizontal) 11 அங்குலம் தாண்டும். செங்குத்தாக (vertical) 6 அங்குலம் குதிக்கும்.

3. புவியீர்ப்பு சக்தியின் (g force) 7 மடங்கு சக்தியை மனிதனால் தாங்க முடியும். ஆனால் தெள்ளுப்பூச்சி 300 புவியீர்ப்பு சக்தியைத் தாங்க முடியும்.

4. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த தளவாடப் பொருட்களில் குறைந்தது 3 மாதங்களுக்கு ஈரப்பசை படாமல் இருக்க வேண்டும்.

5. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த துணிகளைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடங்களுக்குப் போட்டு எடுத்து உலற வைக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பூச்சிகளைக் கொல்ல முடியும்.

6. தெள்ளுப் பூச்சியினால் பாதிப்பு அடைந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு சுத்தம் செய்தால் பூச்சி இறந்து போகாது. துவைக்கப்பட்ட துணி உலர்ந்ததும் மீண்டும் அந்தப் பூச்சி இயக்கம் பெறும்.

தெள்ளுப்பூச்சி வாழ்க்கைச் சுழற்சி

தெள்ளுப்பூச்சியின் வாழ்க்கையின் 4 கட்டங்கள்
முட்டை (Egg), முட்டைப்புழு (Larva), கூட்டுப்புழு (Pupa), முழுவளர்ச்சி (Adult).

அதன் வாழ்க்கைச் சுழற்சி 20 - 35 நாட்கள். தட்பவெப்ப நிலை, ஈரப்ப்சை பொருத்து அதன் இனப்பெருக்கம் அமைகின்றது. 85 பாகை வெப்பச் சூழல்; 85 விழுக்காடு ஈர்ப்பசை மிகப் பொருத்தமாக அமைகின்றன. ஈரப்பசை இல்லை என்றால் தெள்ளுப்பூசியினால் இயங்க முடியாது. செயலற்ற நிலையில் இருக்கும். ஒரு வருட காலம் வரையிலும் அமைதியாக உறங்கும்.

ஓர் அறையின் தட்பவெப்ப நிலை 55 பாகைக்கும் கீழே குறைந்து போனால் தெல்ளுப்பூசிகளின் இயக்கம் முடங்கிப் போகும். தெள்ளுப்பூச்சியின் இனப்பெருக்கம் வீட்டின் உள்ளே தான் நடைபெறும். வீட்டிற்கு வெளியே அதிக வெப்பம் என்பதால் அங்கே இனப்பெருக்கம் மிகக் குறைவு.

தெள்ளுப்பூச்சி முட்டை
 
ஒவ்வொரு தெள்ளுப்பூச்சியும் 2 - 14 முட்டைகள் இடும். மனித முடிகள் இருக்கும் இடங்களில் முட்டை இடும். மெத்தை, கம்பளம், தரை விரிப்புக் கம்பளம், பாய் போன்றவை அவை முட்டையிடும் இடங்கள்.

தெள்ளுப்பூச்சி முட்டைப்புழு

14 நாட்களில் முட்டையில் இருந்து முட்டைப்புழு ஆகும்

தடுக்கும் முறைகள்

வெற்றிடத் தூய்மிப்பு (vacuum cleaner) கொண்டு தடுக்கலாம். ஒவ்வோரு நாளும் தூய்மை செய்ய வேண்டும். மருந்துநீர்த் தெளிப்பான் மூலமாக பூச்சிகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

05 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6

மலாக்கா மன்னர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலங்களையும் தெரிந்து கொள்வோம்.


•    ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா  1400–1414
•    ஸ்ரீ ராம விக்ரமா 1414–1424
•    முகமது ஷா 1424–1444
•    அபு ஷாகித் 1444–1446
•    முஷபர் ஷா 1446–1459
•    மன்சூர் ஷா 1459–1477
•    அலாவுடின் ரியாட் ஷா 1477–1488
•    முகமது ஷா 1488–1511
•    அகமட் ஷா 1511–1513



பரமேஸ்வராவின் மத மாற்றம் இந்த நாள் வரையில் ஒரு தெளிவற்ற நிலையில் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் பரமேஸ்வரா மதமாற்றம் செய்தார் என்று Malay Annals எனும் மலாய் காலச்சுவடுகள் சொல்கின்றன.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமா 1414-இல் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரைப் பரமேஸ்வரா என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.
(சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781.) 



பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா மறுபடியும் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அதையும் உறுதி படுத்துகிறேன்.

மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்கப் பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். 
(சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781.)

உள்நாட்டு வரலாற்றுப் பாடநூல் ஆசிரியர்கள் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிகவும் கவனமாகக் கையாள வேண்டி உள்ளது.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் செய்த காலத்தில் அவரைப் பலமேசுலா என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச் சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… (Bai-li-mi-su-la) என்றுதான் அழைக்கிறார்கள்.

நமக்கும் வாய் தவறி வந்து விடுகிறது. சரி விடுங்கள். பரமேஸ்வராவைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்து இருக்கிறார்கள். (சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 - 1489)



இந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள் பலமோஸ் லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறிப் போவதையும் கவனியுங்கள். இங்கே தான் சரித்திரம் அழகாகப் பாரிய வீணை வாசிக்கின்றது.

மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். மலாக்கா நாட்டின் அரசர் பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள் சொல்கின்றன.
(Ming Shilu - also known as the Veritable Records of the Ming dynasty, has a comprehensive 150 records or more on Parameswara (Bai-li-mi-su-la) and Malacca.)

ஆக மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா.

இன்னும் ஒரு விசயம். பரமேஸ்வராவின் மனைவியைப் பரமேஸ்வரி என்று தான் சீனாவின் மிங் அரசர் யோங் லே (Yong-lo Emperor) அழைத்து இருக்கிறார். அதாவது சீன மொழியின் பேச்சு வழக்கில் பர்மிசுலி (Ba-er-mi-su-li).

அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னும் ஒரு விசயம். அதாவது யோங் லே அரசர் சீனாவை 1402-ஆம் ஆண்டில் இருந்து 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார் எனும் விசயம்.

இந்தக் காலக் கட்டத்தில் தான் மலாக்காவின் வாணிகம் வளர்ச்சி பெற்று வந்த காலக் கட்டம். இந்தக் கால இடுக்குகளில் தான் பரமேஸ்வரா கடல் பயணம் செய்து இருக்கிறார். அதாவது சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார்.



ஆக சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். பரமேஸ்வரா என்பவர் வாழும் காலத்தில் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் வாழ்ந்து இருக்கிறார். இறக்கும் காலத்திலும் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்தும் போய் இருக்கிறார்.

அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். எங்கே இருந்து சுல்கார்னாயின் என்பவர் வந்தார். எப்படி பரமேஸ்வராவின் பெயர் வசதிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப் பட்டது. உங்களுக்கே குழப்பம் ஏற்பட்டு இருக்கும்.

ஆக வரலாற்றுச் சித்தர்கள் எப்படி எல்லாம் வரலாற்றுச் சித்துகளைக் காட்டி வருகிறார்கள் பாருங்கள். போதுங்களா. எங்கே வருகிறேன்… அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் இப்போது இருந்தே பரமேஸ்வரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை முன் எடுத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் பரமேஸ்வரா எனும் பெயரே வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு விடும். அதனால் தான் வலுவான சான்றுகளுடன் பரமேஸ்வராவின் சரிதையை முன்னெடுத்து வைக்க வேண்டி உள்ளது.

(தொடரும்)