10 அக்டோபர் 2017

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

ஆண்டு தோறும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதித் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. 1901-ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்று உள்ளார்கள்.


1902 - ரொனால்டு ரோஸ் - மருந்தியல் - இந்தியாவில் பிறந்தவர்
1907 - ரிட்யார்ட் கிப்ளிங் - இலக்கியம்     இந்தியாவில் பிறந்தவர்
1913 - இரவீந்திரநாத் தாகூர் - இலக்கியம் - இந்தியர்
1930 - சர் சி. வி. இராமன் - இயற்பியல் - இந்தியர்
1968 - கோவிந்த் கொரானா - மருந்தியல் - இந்தியர்
1979 - அன்னை தெரேசா - அமைதி - இந்தியர்
1983 - சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் - இந்தியர்
1989 - டாலாய் லாமா - அமைதி - இந்தியர்
1998 - அமர்த்தியா சென் - பொருளியல் - இந்தியர்
2001 - வி.எஸ். நைப்பால் - இலக்கியம் - இந்தியர்
2009 - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் - இந்தியாலில் பிறந்த அமெரிக்கர்
2014 - கைலாஷ் சத்யார்த்தி - அமைதி - இந்தியர்

ரபீந்தரநாத் தாகூர்

நோபல் பரிசை இதுவரை மூன்று தமிழர்கள் பெற்று உள்ளனர். அந்தப் பெருமைக்கு உரியவர்கள் சரி சி.வி. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009).

நோபல் பரிசு வழங்கப் படும் முறையில் பல்வேறு நையாண்டிகளின் கிண்டல் சுவைகள் தொக்கி நிற்கின்றன. இந்த நோபல் பரிசின் இலட்சணம்தான் என்ன. அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் ஒரு முறை அல்ல இரண்டு முறைகள் அல்ல. 1937 முதல் 1948 வரை  ஐந்து முறைகள் பரிந்துரைக்கப் பட்டன. 

சரி சி.வி.ராமன்

இருந்தாலும் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவே இல்லை. பல வருடங்களுக்குப் பிறகு நோபல் பரிசுக் கமிட்டி தன் தவற்றை ஒப்புக் கொண்டது. ஆனால் என்ன. நோபல் பரிசுக் கமிட்டியின் பாரப்ட்சம் தொடர்கிறது.

என்றாலும் 1948-ஆம் ஆண்டில் காந்திஜி மறைந்தார். ஆனால் நோபல் பரிசு கமிட்டி ஓர் அறிவிப்பு செய்தது. உயிருடன் இருக்கும் எவரும் இந்தப் பரிசுக்குத் தகுதி பெற முடியாது என்ற அறிவிப்பு. அதனால் அமைதித் துறைக்கான பரிசு வழங்கப்படவில்லை என்றது.

ஆனால், டாக் ஹெம்மர்ஸால்ட் (Dag Hammarskjöld) எனும் ஸ்காண்டிநேவியர் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் 1961-ஆம் ஆண்டு அவருடைய இறப்புக்குப் பின்னர் அவருக்குப் பரிசு வழங்கப்பட்டது. அதற்காக ஒரு சப்பைக் கட்டுக் காரணம். பரிசு அறிவிக்கப்பட்ட போது அவர் உயிரோடி இருந்தார் எனும் காரணம்.

இப்போது எல்லாம் விருது வழங்குவதில் ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. அதற்குப் பேசாமல் ஓர் அமைப்பை உருவாக்கி அதற்குத் தலைவராக ஆகி விடலாம். அப்படியே ஒரு கோப்பிக் கடையில் பத்து பேரைக் கூப்பிட்டு தனக்குத் தானே ஊசிமணி, ஊசிப் போகாத மணி, பாசிமணி, பாசி பிடித்த மணி எனும் விருதுகளைத் தாராளமாகக் கொடுத்துக் கொள்ளலாம். எப்படி வசதி.

என்ன பேசி என்ன பண்றது. இங்க மட்டும் என்ன வாழ்கிறதாம். விருது கொடுப்பது எல்லாம் இப்போது கச்சான் பூத்தே கம்பத்தில் கடலை பக்கோடா வாங்கிற மாதிரி காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

இனிமேல் இந்த மாதிரி விருது வழங்கும் விசயங்களை எல்லாம் ஆதித்யா சேனலில் தான் காண்பிக்க வேண்டும். கைதட்டிச் சிரிக்க வேண்டும். அம்புட்டுத் தான்.

09 அக்டோபர் 2017

தொப்பை குறைய வேண்டுமா

நீர்ச் சத்து
அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். நீர்ச் சத்தைத் தக்க வைக்கலாம். நீர்ச் சத்து பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். நாம் உண்ணும் உணவைத் தண்ணீர் நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதும் இல்லை. அதனால் தொப்பை விழுவதும் இல்லை.


தொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி
தொப்பை இருக்கிறது என்பதற்காகப் பட்டினி கிடப்பது ஆபத்தானது. அதனால் உடல் பருமன் தான் அதிகரிக்கும். உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். சரியான நேரத்திற்குச் சரியான சத்துள்ள உணவுகள் போதும். எப்பொழுது பார்த்தாலும் அரைத்துக் கொண்டு இருப்பதும் உடல் நலத்திற்கு நல்லது அல்ல.


உற்சாகமான நடை
தொப்பை வயிறு குறைய தினசரி ஓர் அரைமணி நேரமாவது உற்சாகமாக நடக்க வேண்டும். இது இதயத்திற்கும் இதமானது. இந்தப் பயிற்சி தொப்பையை மட்டும் கரைக்கவில்லை. அன்றைய நாளை நன்றாக உற்சாகத்துடன் நடத்தியும் செல்லும்.

பழங்கள், காய்கறிகள்
அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியம் தர வேண்டும். அவற்றின் நார்ச்சத்து உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. பழங்களில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. அவை உடலின் இயக்கத்தைச் சரியாக இயங்கச் செய்கின்றன.


செயற்கை குளிர்பானங்கள்
தொப்பை போடுவதற்குச் செயற்கைக் குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணம் ஆகும். ஜூஸ், சோடா, கொக்கோ கோலா, பெப்சி கோலா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரைன் சர்க்கரை உபயோகப் படுத்தப் படுகிறது. அதனால் வயிற்றில் தொப்பை சேருகிறது. என் அனுபவத்தில் அதிகமாக கொக்கோ கோலா சாப்பிட்டு ஒரு கட்டத்தில் வயிறு பெருத்துப் போனது உண்டு. கரைத்து விட்டேன்.

இலை போல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத் தீனி, குளிர் பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

நீங்களும் செய்து பாருங்கள். இரண்டே இரண்டு வாரங்களில் மாற்றங்கள் தெரியும். உணவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நானும் சொல்கிறேன். செய்து பார்த்து பலன் அடைந்து இருக்கிறேன்.

அதற்காக ஒரு சிலரைப் போல மதியம் சாப்பிடாமல் பட்டினி கிடந்து இரவில் சோற்றுக்கும் தோசைக்கும் அலைய வேண்டாம். வாங்கு வாங்கு என்று வாங்கிக் கட்டி வயிறு வீங்கி அலையவும் வேண்டாம்.

05 அக்டோபர் 2017

மன்னிப்போம் மறப்போம்

நமக்கு ஒருவர் தீங்கு செய்து விட்டால் அதை நினைத்துக் கொண்டே இருந்தால் அதுவே ஒரு பெரும் பாவச் சுமை. அந்தச் சுமையை இறக்கி வைத்துவிட வேண்டும். மற்றவர்கள் செய்த தீங்குகளையும் பாவங்களையும் நமக்குள் போட்டு பூட்டி வைப்பதும் இன்னொரு பாவம். 


அதே நிலையில் யாரையும் பழி வாங்கும் எண்ணமும் இருக்கக் கூடாது. பழி வாங்க வேண்டும் என்று நினைப்பதே பெரிய பாவம். நமக்கு தீங்கு செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தப்பு. அதனால் நம்முடைய கர்மவீனைகள் தீரா.

நம்முடைய கர்மவினைகளைச் சீர் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் நமக்கு செய்த பாவங்களை மறக்க வேண்டும். அப்போது தான் நாம் நல்ல ஒரு மனிதனாக வாழ்ந்து காட்ட முடியும்.

நாம் என்றைக்கும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பதும் பாவம். அவர்கள் பாவம் நினைத்தால் அது அவர்களுக்கே போய்ச் சேரட்டும். நாம் மட்டும் யாருக்கும் பாவம் செய்யக் கூடாது. நினைக்கவும் கூடாது. 


எது எது நடக்குமோ அது அது நடந்தே ஆகும். நடப்பது எல்லாம் நன்மைக்கே எனும் எண்ணம் எப்போது நமக்குள் துளிர்க்கின்றதோ அப்போதே நம்முடைய பாவங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகத் தொடங்குகின்றன. நல்லதை நினைப்போம். நல்லதைச் செய்வோம்.

மற்றவர்கள் நமக்கு இழைத்த தீங்குகளையும் பாவங்களையும் மறப்போம். மன்னிப்போம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

04 அக்டோபர் 2017

துன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில்


துன் மகாதீர் 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். அவருடைய ஆளுமையின் போது ஜ.செ.க. கட்சியை மலேசியாவின் மிகப் பெரிய தீண்டாமையாகச் சித்தரித்தவர். அதன் தலைவர்களாக இருந்த பட்டு, கர்ப்பால் சிங், சென் மான் ஹின், லிம் கிட் சியாங் போன்றவர்களைத் தடுப்புக் காவலில் தூக்கிப் போட்டு வருடக் கணக்கில் ஒரு வழி பண்ணியவர்.

பட்டு எனும் ஒரு தமிழனை நசுக்கி நகர முடியாமல் செய்தவர். கமுந்திங் சிறைக் கூடத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர். ஆனால் பாருங்கள் நேற்று திங்கட்கிழமை அதே ஜ.செ.க. தலைமையகத்தில் கால் பதித்து அழகு செய்து இருக்கிறார்.

வண்டியும் ஒரு நாள் படகில் ஏறும் என்று சும்மாவா சொன்னார்கள். அரசியலில் இது எல்லாம் சகஜம்பா என்று சொல்லிப் போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.


துன் மகாதீருக்குப் பின்னால் ராக்கெட் சின்னம் இருப்பதைக் கவனியுங்கள். அவருக்கு அருகே பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில். ஜ.செ.க. பொதுச் செயலாளர் லிம் குவான் எங்.

எதிரியை வீழ்த்த... என்ன வேண்டும் என்றாலும் செய்பவர்கள் சிலர். அதில் துன் மகாதீருக்குச் சிம்மாசனம் கொடுக்கலாம். அவருக்கு நடிப்பரசன் நம்பர் ஓன் பட்டத்தை சிபாரிசு செய்யலாம். ஓநாய் நனைகிறதே என்று ஆடு அழுதாலும் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதாலும் ஆட்டிற்குத் தான் ஆபத்து.

எதையும் பாசிட்டிவ் மனத்துடன் ஏற்றுக் கொள்வோம். நல்லதே நடக்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம். ஆயிரம் தான் சொன்னாலும் என் மலேசியத் தமிழர் இனத்திற்கு துன் மகாதீர் செய்த துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது. மன்னிக்கவே மாட்டேன்.

இருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு


 
 
பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளிக்கு எதிரான வழக்கு

இந்த வழக்கு 2017 செப்டம்பர் 28-இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணைக்கு வந்தது. 

அதைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் தோற்றுப் போனது. அதனால் இந்த வழக்கு முழுமையான விசாரணைக்கு உட்படும் என அறிவிக்கப் பட்டது.


இருமொழித் திட்டத்தைத் தமிழ்ப் பள்ளிகள் அமலாக்கம் செய்யக் கூடாது என்று மே 19 இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளி இந்த இருமொழித் திட்டத்தை அந்தப் பள்ளியில் அமல் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரி ஒரு நீதி மறுசீராய்வு (Judicial Review) மனுவைக் கடந்த 5.9.2017-இல் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

அதன் சார்பாக அந்த வழக்கின் முழு விசாரணைக்கு முன்பாக அப்படிப் பட்ட வழக்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அத்துடன் அந்த வழக்கு நீதி மறுசீராய்வுக்கு உகந்ததா என்பதையும் உயர் நீதி மன்றம் பரிசீலனை செய்யும். 



அந்த வகையில் கடந்த 28.9.2017-இல் நீதிபதி டத்தின் ஹாஜா அசிசா பிந்தி ஹாஜி நவாவி அவர்கள் முன் பரிசீலனக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்த வழக்கு மறுசீராய்வுக்கு உகந்தது என்ற தீர்ப்பையும் வழங்கியது.

இந்த வழக்கின் பிரதிவாதிகள்:

1.     பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. பஞ்சினியம்மாள்; 

2.     மலேசியக் கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர்; 

3.     மலேசியக் கல்வி அமைச்சர்;



பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளிக்கு எதிரான இந்த வழக்கின் வாதிகள்: 
 
1.     பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராஜரெத்தினம்;

2. பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவர் டாக்டர் செ. செல்வம்; 

3.      சுவராம் இயக்கத்தின் இயக்குனர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் 
4.     ஒரு பெற்றோர்.

இவர்களின் வழக்குரைஞராகத் தினகரன் வாதாடினார். இந்த வழக்கு மீண்டும் இந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

செய்தி: செம்பருத்தி