08 மார்ச் 2019

போர்னியோ டயாக் இந்துக்கள்

 Dayak Hindus in Borneo

 அமெரிக்காவில் அமேசான் மழைக் காடுகள். அவை அழகிய பச்சைப் பசுமைகளின் மறுபிறவிகள். ஆசியாவின் களிமந்தான் காடுகள். அவை அழகிய பச்சைப் பசேல்வெளிகளின் அரும்பிறவிகள். இரண்டுமே பழமை வாய்ந்த பச்சை மழைக் காடுகள். இரண்டுமே ஈரம் பாய்ந்த இயற்கைச் செல்வங்கள். 



கோடிக் கோடியான உயிரினங்கள் கோடிக் கோடியான ஆண்டுகளாய் கூடிக் குலவி வாழ்ந்த பச்சைக் காடுகளின் பசுங்காட்டு வெளிகள். பரிசுத்தமான இயற்கையின் எழில்மிகு ஜாலங்கள் பச்சையில் சங்கமிக்கும் பாரிஜாத உச்சங்கள். அனைத்துமே சொற்களில் வடிக்க முடியாத கானகத்துச் கவிக் கோலங்கள்.

இந்தக் களிமந்தான் காடுகள் போர்னியோ தீவில் உள்ளன. இந்தோனேசியாவிற்குச் சொந்தமான நீர்நிலைக் காடுகள். இங்கேதான் ஓர் அதிசயம் நடந்து வருகிறது. உலக இந்துக்கள் பலருக்கும் தெரியாத ஓர் அதிசயம். என்ன தெரியுங்களா? 


இந்தக் காடுகளில் வாழும் டயாக் பூர்வீகக் குடிமக்கள் ஒரு வகையான இந்து மதத்தைப் பின்பற்றி வருகின்றார்கள். அவர்கள் பின்பற்றும் அந்த இந்து மதத்தின் பெயர் காரிங்கான் இந்து மதம். உலகளாவிய இந்து மதத்தின் பின்னணியில் உருவான ஓர் இயற்கை மதம் தான் காரிங்கான் இந்து மதம்.

பாலித் தீவில் பல இலட்சம் இந்தோனேசிய இந்துக்கள் வாழ்கிறார்கள். அவர்களும் தங்களுக்கு என ஒரு தனிப்பட்ட இந்து சமயத்தை உருவாக்கிக் கொண்டு பின்பற்றி வருகின்றார்கள். இன்று வரையிலும் அவர்களின் இந்து மதத்தைப் போற்றியும் புகழ்ந்தும் வருகின்றார்கள்.




அதைப் போலவே களிமந்தான் காடுகளில் வாழும் காஜு எனும் டயாக்

(Dayak Ngaju)

பிரிவினரும் ஒரு தனித்துவமான இந்து சமயத்தை உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள். இந்த விசயம் பலருக்கும் தெரியாது.

இறைவனே உச்சத்தில் உயர்வானவர்; ஒப்புயர்வானவர் எனும் கொள்கையில் காரிங்கான் இந்து மதம் செயல்பட்டு வருகிறது.

போர்னியோவில் பலவகை டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஏறக்குறைய 200 வகையான டயாக் மக்கள். அந்த வகையில் மத்திய களிமந்தான் காடுகளில் காஜு எனும் டயாக் பிரிவினர் உள்ளனட். அவர்கள் பின்பற்றும் இந்து மதமே காரிங்கான் இந்து மதம் ஆகும். இந்தக் காரிங்கான் மதம் இந்து மதத்தின் பின்னனணியில் உருவான மதமாகும். 




டயாக் என்பவர்கள் போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். தெரிந்த விசயம். இந்தப் பழங்குடி மக்களில் 250 துணை இனக் குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றார்கள்.

இவர்கள் ஆஸ்திரோனேசிய மொழியைப் பேசுகின்றார்கள். பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். ஏறக்குறைய 40 இலட்சம் டயாக்குகள், களிமந்தான் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றார்கள்.

(Belford, Audrey (September 25, 2011). "Borneo Tribe Practices Its Own Kind of Hinduism". New York TImes.)

 

காஜு டயாக் மக்கள் பின்பற்றும் மதம் இந்து மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் அதனை இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.

இஸ்லாம்; புரொடெஸ்டனிசம்; கத்தோலிக்கம்; இந்து; புத்தம்; கான்பூசியசம் ஆகிய ஆறு மதங்களை மட்டுமே அதிகாரத்துவ மதங்களாக இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. காரிங்கான் மதம் இன்று வரையில் அங்கீகரிக்கப் படாமல் உள்ளது. இந்தக் காரிங்கான் மதத்தில் இந்து - ஜாவானிய தாக்கங்கள் உள்ளன.

தீவா பண்டிகை என்பது காஜு டயாக் மக்களின் திருவிழாவாகக் கருதப் படுகிறது. இந்த விழா முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. அந்தக் கட்டத்தில் எருமைகள், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றவை உயிர்ப்பலி கொடுக்கப் படுகின்றன. இந்த உயிர்ப்பலிக்கு யாட்னா என்று பெயர்.




(Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.)
காரிங்கான் மதத்த்தின் தலையாய குலதெய்வமாக ரான்யிங் தெய்வம் கருதப் படுகிறது. இவர்களின் வழிபாட்டுப் புனித நூலுக்கு பனாத்தூரான் என்று பெயர். வழிபாட்டுத் தளத்தின் பெயர் பாலாய் பசாரா அல்லது பாலாய் காரிங்கான்.

Balai Basarah - Balai Kaharingan

காரிங்கான் என்பது பழைய டயாக் சொல் ஆகும். காரிங் எனும் சொல்லில் இருந்து உருவானது. காரிங் என்றால் டயாக் மொழியில் உயிர் அல்லது வாழ்வதாரம் என்று பொருள்.




களிமந்தான் டயாக் மக்களிடம் தனிப்பட்ட ஒரு சிறப்பு இயல்பு உள்ளது. மழைக்காட்டு விசுவாசம் என்று சொல்வார்கள். அது அவர்களின் உயிர்த் தன்மை. அதாவது காட்டின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் சிறப்புத் தனமை. மழைக் காடுகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்குள் கண்டிப்பான வரைமுறைகள் உள்ளன.

காட்டில் இருந்து எதை எடுத்து வரலாம்; எதை எடுத்து வரக்கூடாது எனும் எழுதப் படாத சாசனங்கள். அந்த வரைமுறைகளை அவர்கள் தாண்டிச் செல்வது இல்லை. டயாக் சமூகங்கள் காட்டை நம்பியே வாழ்கின்றன. அதனால் அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்து இருக்கிறார்கள்.

காஜு டயாக் மக்கள் பெரும்பாலோர் விவசாய வணிகம்; நெல் பயிரிடுதல்; கிராம்பு பயிர் செய்தல்; மிளகு, காபிச் செடி வளர்த்தல்; கொக்கோ பயிர் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய களிமந்தான் பகுதியில் வாழும் பெரும்பாலான டயாக்குகள் இந்து காரிங்கான் மதத்தைப் பின்பற்றி வருகின்றனர்.




இருப்பினும் அண்மைய காலங்களில் இந்தக் களிமந்தான் டயாக் மக்கள் இஸ்லாம், கிறிஸ்த்துவ மதங்களுக்கும் மாறி வருகின்றனர்.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னரே டயாக் மக்கள் தேசிய அளவில் அரசியல் கட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில் இந்தோனேசியாவை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். இந்தோனேசிய மக்கள் டச்சுக்காரர்களின் ஆட்சியை எதிர்த்தாலும் இந்தோனேசிய மக்களுக்கு முன்பாகவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் டயாக் மக்களாகும்.




ஆக 1950-ஆம் ஆண்டுகளில் சுதந்திரம் பெறுவதற்காக டயாக் மக்கள் டச்சுக்காரர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் காஜு டயாக் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு மேஜர் ஜிலிக் ரீவுட் என்பவர் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார். அவரின் தலைமைத்துவத் தாக்கம்; சுதந்திரப் போராட்டத்  தாக்கத்தினால் காஜு மக்களும் காரிங்கான் மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர்கள்.

தலைவர் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே என்று சொல்வார்கள். அந்த மாதிரி தலைவரின் போராட்ட உணர்வுகளினால் கவரப்பட்ட டயாக் மக்கள் தலைவர் பின்பற்றிய காரிங்கான் மதத்தையே தங்களின் வழிபாட்டு மதமாக ஏற்றுக் கொண்டார்கள்.




1945-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. பஞ்சார்மைசின் மாநிலம் தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக காஜு டயாக் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காரிங்கான் இந்துக்கள் வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் செய்தார்கள்.

மேஜர் ஜிலிக் ரீவுட்டின் தலைமையில் ஒரு கொரில்லா படை உருவானது. ஆங்காங்கே எதிர்ப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆக வேறு வழி இல்லாமல் காஜு டயாக் மக்களுக்காக மத்திய களிமந்தான் எனும் தனி மாநிலம் உருவாக்கப் பட்டது. போராட்டத் தலைவராக மேஜர் ஜிலிக் ரீவுட் விளங்கினார்.




அதனால் டயாக் மக்கள் பலரும் மேஜர் ஜிலிக் ரீவுட்டினால் ஈர்க்கப் பட்டார்கள். மேஜர் ஜிலிக் ஓர் இந்து. அதனால் தங்களின் தலைவர் சார்ந்த காரிங்கான் இந்து மதத்தையும் டயாக் மக்களும் பின்பற்றத் தொடங்கினார்கள். இப்படித்தான் இந்த மதம் டயாக் மக்களிடம் பரவலாகிப் போனது.

காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தது. ஆனாலும் நெருக்குதல் காரணமாக 1980-ஆம் ஆண்டு காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அந்த மதம் இந்து மதத்திற்கு கீழ் இயங்கும் மதமாகவே இயங்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது. அந்த வகையில் காரிங்கான் மதம் இன்று அளவிலும் களிமந்தானில் உயிர் பெற்று வருகிறது.

களிமந்தான் காடுகளில் தற்சமயம் 223,349 காரிங்கான் இந்து சமயத்தவர் வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 300 இந்துமதப் பூசாரிகள் உள்ளனர். காரிங்கான் இந்து சமயத்தவர்களுக்கு என்று ஓர் இந்து மாமன்றம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. 




அந்த மன்றத்தின் கீழ் டயாக் இந்துக்கள் செயல்பட்டு வருகின்றனர். டயாக் இந்து மாமன்றம் என்ன என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை மத்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்து வருகின்றனர்.

வாரத்திற்கு ஒரு முறை கிராமப்புறக் கோயில்களில் இந்துக்களின் ஒன்று கூடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இவர்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. ஒருவர் இறந்து விட்டால் அவரை இரு முறை புதைக்கும் பழக்கம். சற்று வித்தியாசமான பழக்கம்.




முதலாவதாக இறந்த ஒருவரின் உடலை முறைப்படி புதைத்து விடுவார்கள். உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது சகல மரியாதைகளுடன் ஊர்வலம் நடைபெறும். இந்து சாமியார்கள் முன் செல்ல உடன்பிறப்புகள் பின் தொடர்வார்கள். மஞ்சள் அரிசி மஞ்சள் பூக்கள் இடுகாட்டிற்குச் செல்லும் வழி நெடுகிலும் தூவப்படும்.

இரண்டாவதாகக் கொஞ்ச காலம் கழித்து புதைக்கப்பட்ட அதே உடல் தோண்டி எடுக்கப்படும். இங்கே கொஞ்ச காலம் என்பது சில மாதங்களாக இருக்கலாம். சில வருடங்களாகவும் இருக்கலாம்.

மீட்டு எடுக்கப்பட்ட அந்த உடலைச் சுத்தம் செய்து தங்களின் இந்து முறைப்படி மறுபடியும் புதைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் இறந்தவரின் ஆத்மா அமைதி பெறும் என்பது காஜு டயாக் மக்களின் இந்து மத நம்பிக்கை.

சபா, சரவாக் மாநிலங்களில் காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றும் 8,000 டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களின் மதத்தை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. காரிங்கான் இந்து மதம் என்பது ஒரு முழுமையான மதம் அல்ல என்று மலேசிய அரசாங்கம் சொல்லி வருகிறது.

காரிங்கான் இந்து மதத்தின் தலைமையகம்

Great Council of Hindu Religion Kaharingan


மத்திய களிமந்தானில் இருக்கும் பாலங்கராயா எனும் இடத்தில் உள்ளது. இங்கே தான் அவர்களின் மதத் தொடர்பான விவகாரங்கள் பரிசீலிக்கப் படுகின்றன.

வரலாற்றின் மூன்று காலக் கட்டங்களில் களிமந்தான் காடுகளில் குடியேற்றம் நடந்து உள்ளது. முதலாவது குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தைய புரோட்டோ மலாய் காலத்தில் நடந்தது. ஜாவா, களிமந்தான் கரையோரப் பகுதிகளில் இருந்து மக்களின் குடியேற்றம் இடம்பெற்றது.

பின்னர் இந்துக்களின் ஆட்சிக் காலத்தில் ஜாவாவில் இருந்து பலர் களிமந்தான் வந்து குடியேறினார்கள். அவர்கள் மூலமாக டயாக் மக்களிடம் இந்து மதம் பரவி இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

கி.பி.350-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.400-ஆம் ஆண்டு வரையில் கூத்தாய் மார்த்தாடிபூரா எனும் இந்தியர் அரசு போர்னியோ களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இது ஓர் இந்து சாம்ராஜ்யம்.

அதைப் போல கி.பி.1300-ஆம் ஆண்டுகளில் கூத்தாய் கார்த்தாநகரா எனும் இந்து சாம்ராஜ்யமும் களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இந்த இரு அரசுகளின் இந்து மதத் தாக்கம் களிமந்தானில் தேங்கி நின்று இருக்கலாம்.

அந்த வகையில் இந்து மதம் டயாக் மக்களிடையே பரவியும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் களிமந்தான் மழைக் காடுகளில் இந்து மதம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இது பலருக்கும் தெரியாத செய்தி. அந்தச் செய்தியைத் தெரியப் படுத்திய வகையில் எனக்கும் மகிழ்ச்சி. மீண்டும் ஒரு புதிய வரலாற்றுச் செய்தியுடன் சந்திக்கிறேன்.

சான்றுகள்:

1. Vogel, J.Ph. 1918 The yupa inscriptions of King Mulavarman from Koetei (East Borneo). Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 74:216–218.

2. Iban Cultural Heritage — The Early Iban Way of Life — by Gregory Nyanggau 26th descendant of Sengalang Burong, the Iban God of War

3. Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.

4. https://web.archive.org/web/20130730184401/

பிரச்சினை - பிரச்சனை எது சரி

பிரச்னை என்ற வடசொல்லில் இருந்து வந்த தமிழ்ச் சொல். அதைத் தமிழில் பிரச்சினை, பிரச்சனை என இரு வகையாக எழுதுகின்றார்கள்.

இரண்டும் சரியே. இருந்தாலும் பிரச்சினை என்பதே எனக்குச் சரியாகப் படுகிரது.

பிரச்சினை என்றால் problem, enquiry; சிக்கல் என்றால் complication, entanglement. இங்கே பிரச்சினைதான் சரியான பொருள் தரும்.

பிரச்சினை என்றால் கேள்வி என்றுதான் பொருள். பிரசன்னம் என்றால் தெலுங்கில் கேள்வி என்று பொருள்.

இங்கு என்ன பிரச்சனை என்று தமிழில் ஒருவர் கேட்டால் அதன் பொருள்

இங்கு என்ன குழப்பம்;

இங்கு என்ன சிக்கல்;

இங்கு என்ன முடை;

இங்கு என்ன இடக்கு;

இங்கு என்ன சண்டை;

இங்கு என்ன தகராறு


என்று இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் படும்.

ஆக *பிரச்சினை* என்பதே சரி.

கண்ணீர் மழையில் காஷ்மீர் - 3

1947 ஜூலை மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளுக்கு அருகே கிளர்ச்சி. அதாவது கிளர்ச்சி நடந்த அந்த எல்லைப் பகுதி காஷ்மீரின் பூஞ்ச் (Poonch) பகுதியில் இருந்தது. அங்கேதான் முதன் முதலான காஷ்மீர் கிளர்ச்சி. சொல்லப் போனால் மன்னர் ஹரி சிங்கிற்கு எதிரான கலகம் என்று தான் சொல்ல வேண்டும். 


அந்தக் கலகத்தை ஒடுக்க மன்னர் ஹரி சிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்தியப் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. இந்தியாவின் ஊடுருவல் ஒரு பெரிய ஆபத்தைக் கொண்டு வரும் என பாகிஸ்தான் கருதியது. இந்தக் கிளர்ச்சி தான் பின்னர் ஒரு பெரிய போருக்கும் வழி வகுத்தது.

இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரம் பெற்று இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் அங்கே ஓர் அரசியல் பூகம்பம். எப்படி வந்தது என்பதைப் பாருங்கள். 



1947 அக்டோபர் 22-ஆம் தேதி காஷ்மீரின் பூஞ்ச் கிளர்ச்சிக்கார்கள் ஆப்கானிஸ்தானில் இருந்த பத்தான்களின் உதவியைப் நாடிச் சென்றார்கள்.

இந்தப் பத்தான்கள் இருக்கிறார்களே இவர்கள் முரட்டுத் தனம் கலந்த வரட்டுச் சுபாவம் கொண்டவர்கள். ஜெங்கிஸ்கான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப் படுவதும் உண்டு.

பாகிஸ்தானுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. அதுதான் சமயம் என்று பாகிஸ்தானின் உளவுத்துறை பத்தான்களுக்கு நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் செய்தது.



பெரும் ஆயுதங்களுடன் பூஞ்ச் பகுதிக்குள் பத்தானியர்கள் நுழைந்தார்கள். பயங்கரமாகப் போரிட்டார்கள். வெகு வேகமாக முன்னேறிய பத்தான்கள் இரண்டே நாள்களில் ஸ்ரீநகர் வரை வந்து விட்டனர்.

இடைப்பட்ட நிலப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர். எந்த நேரத்திலும் பத்தான்கள் ஸ்ரீநகரைக் கைப்பற்றலாம் என்ற நிலையும் ஏற்பட்டது. மன்னர் ஹரி சிங் நடுங்கிப் போனார்.

அவசரம் அவசரமாக மன்னர் ஹரி சிங் இந்தியாவிற்குத் தூது அனுப்பி அவர்களின் உதவியைக் கேட்டார். அப்போது இந்தியாவின் பிரதமராக நேரு இருந்தார். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மவுண்ட்பாட்டன் பிரபு. இருந்தாலும் காஷ்மீருக்குள் இராணுவத்தை அனுப்ப இந்தியா தயக்கம் காட்டியது. 



அதற்கும் காரணங்கள் இருந்தன. அப்போது காஷ்மீர் என்பது ஒரு தனிப்பட்ட நாடு. அதுவும் இந்தியாவுக்கு அண்டை நாடு. ஆக ஓர் அண்டை நாட்டுக்குள் மற்ற நாட்டின் இராணுவம் நுழைந்தால் அது அனைத்துலகச் சர்ச்சையாகி விடுமே என இந்தியா கொஞ்சம் பயந்து நின்றது.

1947 அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி. இந்தியப் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம். காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் அவசர வேண்டுகோள் பற்றி விவாதித்தது. இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பதற்கு ஹரி சிங் சம்மதம் தெரிவித்தார் என்றால் இந்தியா தன் இராணுவத்தைக் காஷ்மீருக்குள் அனுப்பி வைக்கும் என்று ஹரி சிங்கிடம் தெரிவிக்கப் பட்டது.

அந்தச் சமயத்தில் தலைநகர் ஸ்ரீநகருக்கு 35 கிலோ மீட்டர் தூரத்திற்குள் பத்தானியர்கள் வந்து விட்டார்கள். அந்த இக்கட்டான நிலையில் காஷ்மீர் மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கும் ஹரி சிங்கிற்கு நேரம் இல்லை. 



இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உண்மையிலேயே ஹரி சிங்கிற்கு ஒரு திரிசங்கு நிலை. தன்னுடைய பதவியும் முக்கியம். அதே சமயத்தில் தன்னுடைய உயிரும் முக்கியம். உடனடியாக முடிவு செய்தாக வேண்டும் என்பதும் முக்கியம். என்ன செய்வது.

வேறு வழி இல்லாமல் காஷ்மீரை இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் 1947 அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கையெழுத்திட்டார்.

அடுத்த நாள் காஷ்மீர், இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கும் அடுத்த நாள் அதாவது 28-ஆம் தேதி இந்திய இராணுவம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தரை இறங்கியது.

காஷ்மீருக்குள் களம் இறங்கிய இந்தியப் படைகள் பத்தான்களை விரட்டி அடித்தன. முரட்டுத் தனமான பத்தானியர்களின் கொடுமைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் காஷ்மீர் மக்கள் முன்பு தவித்துப் போய்க் கிடந்தார்கள். 



இந்தியப் படைகளைப் பார்த்ததும் அவர்களுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் பத்தானியர்களுக்கு எதிராகவே நின்று ஆயுதங்களை ஏந்தினார்கள். அதுவும் இந்திய இராணுவத்திற்கு மிகப் பெரிய ’பிளஸ் பாயிண்ட்’.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சி. காஷ்மீருக்குள் களம் இறங்கிய இந்தியப் படைகளை எதிர்த்துப் பாகிஸ்தான் இராணுவமும் களம் இறங்கியது. அதாவது பத்தானியர்களுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. அதைப் பார்த்த உலகம் அதிர்ச்சியால் உறைந்து போனது. இது தான் இந்தியா – பாகிஸ்தான் உறவுச் சிதைவின் முதல் கட்டம்.

1948-ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முதலாவது போர் தொடங்கியது. அந்தப் போர் எட்டு மாதங்கள் நீடித்தது. அதனால் அந்த இரு நாடுகளுக்கும் பலத்த சேதங்கள்.  ஒரு வழியாக ஐக்கிய நாட்டு சபை தலையிட்டு 1949 ஜனவரி 1-ஆம் தேதி சமாதானம் செய்து வைத்தது.

பின்னர் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப் பட்டது. கில்கிட், பூஞ்ச், பல்சிஸ்தான், முசாபராபாத் ஆகியவை ஆசாத் காஷ்மீர் (பாகிஸ்தான் காஷ்மீர்) என்று பெயர் சூட்டப்பட்டது. ஜம்மு, லடாக் பகுதிகள் இந்தியாவின் காஷ்மீர் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இப்படித்தான் காஷ்மீர் இரண்டாகத் துண்டாடப் பட்டது.



பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஆசாத் காஷ்மீருக்கு முசாபராபாத் தலைநகரம் ஆனது. இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீருக்கு ஸ்ரீநகர் தலைநகரம் ஆனது. ஆக ஒரு நாட்டிற்கு இரண்டு தலைநகரங்கள்.

நிலைமை இப்படிப் போய்க் கொண்டு இருக்கும் போது பாகிஸ்தான், சீனாவின் நண்பரானது. சீனாவில் ஆயுத உதவிகளைப் பெற்றது. அந்த உதவிக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம். அரசருக்கு மட்டும் அல்ல. அனைவரின் வாழ்க்கைக்கும் உதவும் கருத்துக்களைச் சொல்கிறது. ஆக அந்தச் சாணக்கியத்திற்குச் சாங்கியம் செய்வது போல காஷ்மீரின் ஒரு பகுதியை ‘இந்தா எடுத்துக்கோ’ என்று சீனாவுக்கு பாகிஸ்தான் அன்பளிப்பாகக் கொடுத்தது. 



‘தேங்க்ஸ்’ என்று சீனாவும் வந்தனம் சொல்லி வாங்கிக் கொண்டது. அந்த நிலத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? நம் மலேசியாவில் கெடா மாநில அளவுக்குப் பெரியது. அது காதலிக்கு காதலன் கொடுத்த வைர நெக்லஸ் மாதிரி. பாகிஸ்தான் சும்மாதான் சீனாவுக்குக் கொடுத்தது. சீனாவும் ரொக்கமாகக் காசு பணம் எதையும் கேட்கவில்லை.

இருந்தாலும் சீனாவிடம் இருந்து நிறைய பீரங்கிகளையும் விமானங்களையும் பாகிஸ்தான் வாங்கிக் கொண்டது. என்ன செய்வது. தெருவில் சும்மா கிடைத்த தேங்காய் தானே. அதை எங்கே போட்டு உடைத்தால்தான் என்ன? வீட்டிலும் உடைக்கலாம் ரோட்டிலும் உடைக்கலாம். தலையிலும் போட்டு உடைத்துக் கொள்ளலாம். யார் என்ன கேட்பது.

தமிழ்நாட்டுக் கோயில்களில் தலையில் அடித்து தேங்காய் உடைக்கிறார்களே. நினைவுக்கு வருகிறது. இந்து சமய நம்பிக்கைகள் இப்படிப் போய்க் கொண்டு இருக்கின்றனவே. வேதனையாக இருக்கிறது. 



ஒரு காலத்தில் ஒன்றுபட்ட காஷ்மீர் என்று காஷ்மீர் பெருமைபட்டுக் கொண்டது. ஆனால் இப்போது பாருங்கள். இந்தியக் காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், சீனக் காஷ்மீர் என காஷ்மீர் மூன்றாகப் பிரிந்து வெந்து நொந்து நூலாய்ப் போய்க் கிடக்கிறது.

காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? இந்தியாவுக்கா இல்லை பாகிஸ்தானுக்கா? இல்லை சீனாவுக்கா?

A Mission in Kashmir (Andrew Whitehead)

எனும் நூலை ஆண்டிரு வொயிட்ஹெட் என்பவர் எழுதி இருக்கிறார். கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கும் காஷ்மீர் பிரச்னையின் தொடக்க கால நிகழ்ச்சிகளை அவர் விரிவாக எழுதி இருக்கிறார். 



அண்மையில் அந்த நூலை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து படித்தேன். அதில் கிடைத்த தகவல்களைத் தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போதைக்கு மட்டும் ஒட்டு மொத்தமாக

ஐந்து இலட்சம் இராணுவத் துருப்புகள்.

பல ஆயிரம் துணை இராணுவப் படைகள்.

ஆயிரக் கணக்கான பீரங்கிகள்.

ஆயிரக்கணக்கான டாங்கிகள்.

நூற்றுக் கணக்கான ராக்கெட்டுகள்.

கோடிக் கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் 



குவிந்து போய்க் கிடக்கின்றன. இயற்கை அன்னை அள்ளித் தெளித்த காஷ்மீர் ஓவியத்தில் பார்க்கும் இடம் எல்லாம் இராணுவம். இராணுவம்.

கோடை காலம் வருகிறது. காஷ்மீர் சிம்லா போவோம் என்று சொன்ன மக்கள் பலரும் இப்போது வேண்டாம் சாமி என்கிறார்கள். காலம் மாறிப் போச்சு.

’எங்களுக்கு யாருடைய உதவியும் வேண்டாம். எங்களுடைய காஷ்மீரை எங்களிடம் கொடுத்தால் போதும்’ என்று காஷ்மீர் மக்கள் போராட்டம் செய்கின்றனர். 



காஷ்மீர் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965, 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையே மூன்று முறை போர்கள் நடந்து உள்ளன. இதைத் தவிர்த்து ராணுவ மோதல்களும் நிகழ்ந்து உள்ளன. இரு நாடுகளின் சார்பாகவும் பல ஆண்டுகளாக எல்லைப் புறத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். பற்றாக்குறைக்குச் சீனா ஒரு பக்கத்தில் புகை மூட்டம் போட்டு வருகிறது. எப்போதுமே அங்கே ஓர் அமைதியற்ற சூழல்.

காஷ்மீர் பிரச்சினை தொடங்கி இந்த வாரத்துடன் 72 வருடங்கள், 11 மாதங்கள் ஒரு வாரம் ஆகிவிட்டது.

என் மனதில் பட்டதைச் சொகிறேன். இந்தியாவின் கால்கொலுசு கன்னியாகுமரி என்றால் அதன் அரச கிரீடம் காஷ்மீர். அதை யாராலும் மறுக்க முடியாது. அதை மறக்காமல் இருந்தால் சரி.

ஒரே ஓர் இந்தியாவாக இருந்த இந்தியாவிற்கு இப்போது எல்லாப் பக்கங்களிலும் பிரச்சனைகள். எல்லாத் திசைகளிலும் அதன் சிறகுகள் முடக்கப் பட்டு வருகின்றன. 



எந்த இனம் என் அம்மாவைக் கொன்றதோ அந்த இனத்தை அழித்தே தீருவோம் என்று காங்கிரஸ் கட்சிதான் கங்கணம் கட்டியது. காலம் காலமாக சீக்கிய இனத்தின் ஒருவரைப் பிரதமராக்கி அழகு பார்த்தது. காங்கிரஸ் காலத்தில் தானே காஷ்மீர் இரண்டாக உடைக்கப் பட்டது.

ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டார்கள் என்று சொல்லி ஈழத்தில் இருந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களையும் அழித்துப் போட சீனாவுக்குத் துணை போனதும் அதே அந்தக் காங்கிரஸ் கட்சி தானே. அந்த அநியாயத்தை எங்கே போய்ச் சொல்லுவது. சொல்லுங்கள். எங்கே தர்மம். எங்கே நியாயம். 

ரொம்ப வேண்டாம் காவேரியைத் திறந்துவிடச் சொல்லி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மேல் தீர்ப்பு வழங்கிக் கொண்டு இருக்கிறது. கர்நாடகா கொஞ்சமாவது அசைந்து கொடுக்கிறதா. சொல்லுங்கள்.

காவேரி ஆற்றுக்காகச் சிரித்து சிரித்து சிருங்காரம் பேசிய சிதம்பரம் சார் இப்போது நீதிமன்றங்களையே சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் மோகன ராகம் பாடிய மோகன்ஜி இப்போது இங்கிலாந்தில் இடம் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். 



இரண்டு இலட்சம் ஈழத் தமிழர்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஓர் இட்லி சாம்பார் இட்லிக்குச் சட்னி செய்ய இத்தாலிக்குப் போய் இருக்கிறாராம். இந்திய மக்கள் இப்படித் தான் புலம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். சந்தேகம் இருந்தால் நீங்களே போய் கேட்டுப் பாருங்கள்.

சிக்குபுக்கு மோடிக்கு உலகம் சுற்றும் வாலிபர் எனும் புதுப் பட்டம் கொடுத்து இருக்கிறார்கள். நல்ல தலைகள். நல்ல ‘கம்பினேஷன்’ போங்கள்.

காஷ்மீர் என்றால் ஈரத்தை உலர்த்தும் மண் என்று சொல்லுவார்கள். ஆனால், இப்போது என்ன அங்கே ஈரத்தையா உலர்த்துகிறார்கள். அது எல்லாம் இல்லைங்க. முகவரிகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களின் ஈரம் தோய்ந்த மனக் காயங்களுக்கு மருந்து போட்டு ஆற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

இரத்தம் பாய்ந்த காடு மேடுகளில் செத்துப் போன மனித ஜீவன்களைத் தேடிக் கொண்டும் அலைகிறார்கள். நம்பவில்லை என்றால் போய்ப் பாருங்கள். சொர்க்கத்தில் இருந்தும் கடிதங்கள் வரலாம். போனவர்கள் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்களாம்.

(தொடரும்)

சான்றுகள்


1. Gupta, Jyoti Bhusan Das (2012), Jammu and Kashmir, Springer, ISBN 978-94-011-9231-6

2. Jaffrelot, Christophe (1996), The Hindu Nationalist Movement and Indian Politics, C. Hurst & Co. Publishers, ISBN 978-1850653011

3. Puri, Luv (2013), Across the Line of Control: Inside Azad Kashmir, Columbia University Press, ISBN 978-0-231-80084-6

4. https://en.wikipedia.org/wiki/Kashmir_conflict#Early_history

5. http://www.telegraph.co.uk/news/1399992/A-brief-history-of-the-Kashmir-conflict.html

6. The Indian troop which were air lifted in the early hours of 28 October, secured the Srinagar airport.http://news.bbc.co.uk/2/hi/south_asia/7057694.stm

06 மார்ச் 2019

கண்ணீர் மழையில் காஷ்மீர் - 2

வட இந்தியாவில் 1801-ஆம் ஆண்டில் சீக்கியப் பேரரசை உருவாக்கியவர் ரஞ்சித் சிங். பாயும் சிங்கமாக விளங்கியவர். வீறு கொண்ட ராஜாவாக வாழ்ந்து காட்டியவர். பஞ்சாப் சிங்கம் என்று பாரத மக்களால் புகழப்பட்டவர்.

Maharaja Ranjit Singh, the Lion of Punjab

1830-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களுக்கும் ரஞ்சித் சிங்கிற்கும் மோதல். அதுவே ஆங்கிலேய – சீக்கியப் போராக விஸ்வரூபம் எடுத்தது. 

 


ஆங்கிலேயப் பீரங்கிப் படைகளுக்கு முன்னால் சீக்கியர்களின் கத்தி முனைகள் மழுங்கிப் போயின. ரஞ்சித் சிங் தோற்கடிக்கப் பட்டார்.

அவரைத் தோற்கடிக்க குலாப் சிங் என்பவர்தான் ஆங்கிலேயர்களுக்கு இரகசியமாக உதவிகள் செய்தார். அதற்கு நன்றிக் கடனாகக் குலாப் சிங்கிற்குக் காஷ்மீர் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. ஆக இப்படித் தான் ஆங்கிலேயர்களின் பிடிக்குள் காஷ்மீர் சிக்கியது.

1857-ஆம் ஆண்டு காஷ்மீர் மன்மத ராசா குலாப் சிங் மரணம் அடைந்தார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் ரன்பீர் சிங் என்பவர் 1857 முதல் 1885 வரை காஷ்மீரை ஆட்சி செய்தார். அதற்குப் பின்னர் ரன்பீர் சிங்கின் மகன் பிரதாப் சிங் 1925-ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி செய்தார். 




தாத்தா, மகன், பேரனைத் தொடர்ந்து அந்த வரிசையில் குலாப் சிங்கின் கொள்ளுப் பேரன் ஹரி சிங் வருகிறார். 1925-ஆம் ஆண்டில் இருந்து 1948 வரை இவருடைய ஆட்சி நீடித்தது. அது ஒரு சர்வாதிகார ஆட்சி.

ஹரி சிங் ஆட்சி காலத்தில் காஷ்மீரில் 80 விழுக்காட்டு மக்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். எஞ்சிய 20 விழுக்காட்டினர் சீக்கியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் ஆகும். 




அந்தக் காலக் கட்டத்தில் காஷ்மீரை ஆட்சி செய்த சீக்கிய மன்னர்கள் ஒரு வகையில் சர்வாதிகார மன்னர்களாகவே ஆட்சி செய்து வந்து இருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்குப் பாதகமாகப் பல சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார்கள். பெருநாள் காலங்களில் மாடுகளை வெட்டினால் வெட்டியவர்களுக்கு மரண தண்டனை. ஸ்ரீநகரில் இருந்த ஜாமியா பள்ளிவாசலைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை உத்தரவு. காலையில் பள்ளிவாசல்களின் அசான் தொழுகை ஒலிகளுக்கும் தடை. 




இப்படி நிறைய சமூகச் சமய உரிமை மீறல்கள். இவை மக்களிடையே பெரும் கொந்தளிப்புகளை உண்டாக்கின. மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டது.

அதன் எதிரொலியாக 1931-ஆம் ஆண்டு காஷ்மீரில் ஒரு மக்கள் கிளர்ச்சி. அந்தக் கிளர்ச்சியை மன்னர் ஹரி சிங் இராணுவத்தைப் பயன்படுத்திப் பலவந்தமாக அடக்கி ஒடுக்கினார். இருந்தாலும் அந்த அடக்குமுறை தான் பின்நாட்களில் காஷ்மீரில் ஜனநாயகக் காற்று வீசுவதற்கு ஜன்னலைத் திறந்து விட்டது. 




இந்தக் கட்டத்தில் ஜன்னலைத் திற காற்று வரட்டும் என்று உலகப் புகழ்பெற்ற சாமியார் ஒருவர் சொன்னது நினைவிற்கு வருகிறது. மனோ ரஞ்சிதமான வாசகம். ஜன்னலைத் திற என்று சொன்னதும் அந்த நினைப்பு தான் வருகிறது. என்ன செய்வது. அந்தக் காப்பரெட் சாமியாரை நினைத்ததும் வந்துத் தொலைக்கிறதே. சரி விடுங்கள். நாம் காஷ்மீருக்கே போய் விடுவோம். எங்கே விட்டேன். ஆங். ஹரி சிங்.

காஷ்மீரில் சர்வாதிகாரப் பிரச்சினைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன். அந்தச் சமயம் பார்த்து மன்னர் ஹரி சிங்கிற்கு இங்கிலாந்து அரசு ’சர்’ பட்டம் கொடுத்து கௌரவிப்பு செய்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது மாதிரியாகிப் போனது.




மக்களை அடக்கி வரி மீது வரியைச் சுமத்தினால்தான் மன்னர்கள் பேர் போட முடியும். அது காலாகாலத்துச் சித்தாந்தம். அப்போது மட்டும் அல்ல. எப்போதும் நடக்கிற விசயம்தான்.

அப்போது மன்னர்கள் செய்தார்கள். இப்போது நாட்டுத் தலைவர்கள் பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள். பழைய அரசாங்கம் போய் புதிய அரசாங்கம் வந்தாலும் வரியும் கிஸ்தியும் கையைக் கடிக்கவே செய்கின்றன. அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக மாறாமல் இருந்தால் சரி. என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

காஷ்மீர் மக்களின் கிளர்ச்சியை முன் எடுத்து நடத்துவதற்கு ஒரு தலைமைத்துவம் தேவைப் பட்டது. அப்போது இந்தியாவில் காந்தியடிகளின் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வந்த நேரம். சுதந்திரப் போராட்டத்தின் அனல் அலைகள் வீசிய நேரம். ஆக அந்த அனல் அலைகளின் தாக்கமும் காஷ்மீரிலும் பட்டுத் தெறித்தது. 





அதை இப்படியும் சொல்லலாம். இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி. அதுவே காஷ்மீரில் மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சி. எதிரிகள் வேறு வேறாக இருந்தாலும் பிரச்சனை என்று பார்த்தால் இரண்டும் ஒன்றுதான்.

1932-ஆம் ஆண்டு அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டுக் கட்சி உருவாக்கப்பட்டது.

Kashmir Muslim Conference

காஷ்மீர் சிங்கம் என்று வர்ணிக்கப் பட்ட ஷேக் அப்துல்லா என்பவர்தான் அந்தக் கட்சியை உருவாக்கியவர்.

Sher-e-Kashmir - Lion of Kashmir

பொதுச் செயலாளராகச் சவுத்திரி குலாம் அபாஸ். ஆறு ஆண்டுகளாக அந்த இயக்கம் மக்களின் ஆதரவைத் திரட்டியது. அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடாக 1939-ஆம் ஆண்டில் தேசிய மாநாட்டுக் கட்சி பரிணாமம் அடைந்தது. இன்று வரையிலும் அந்தக் கட்சி தான் காஷ்மீர் அரசியலில் வலுவான ஓர் இடத்தில் நின்று ஒரு நிலைப்பாட்டையும் பேசி வருகிறது.





காஷ்மீர் மக்களின் எழுச்சியைக் கண்டு பதறிப் போன மன்னர் ஹரி சிங் தன்னுடைய சர்வாதிகார நடவடிக்கைகளில் இருந்து கொஞ்சம் கீழே இறங்கி வந்தார். 1934-ஆம் ஆண்டு சற்றே குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு சட்டசபையை அமைத்துக் கொடுத்தார். 1939-ஆம் ஆண்டு காஷ்மீர் நீதித் துறையும் உருவாக்கப்பட்டது.

இருப்பினும் இறுதியான முடிவு எடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கும் படி ஹரி சிங் பக்குவமாகப் பார்த்துக் கொண்டார். அது தான் அவர் ஆகக் கடைசியாக்க காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய குறைந்தபட்ச ஜனநாயகம் ஆகும். அதாவது துருப்புச் சீட்டு எப்போதுமே தன் கையில் இருக்கிற மாதிரி ஹரி சிங் பார்த்துக் கொண்டார்.




இந்தச் சமயத்தில் கீழே டில்லியில் இந்தியாவின் விடுதலைப் போராட்ட உணர்வுகள் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தன. இந்திய அரசியல் வானில் காந்தி, அலி ஜின்னா, நேதாஜி, அம்பேத்கர் என நான்கு நட்சத்திரங்கள் நான்கு மையங்களாக மின்னிக் கொண்டு இருந்தனர். அதே அந்தச் சமயத்தில்தான் இந்தியத் துணைக் கண்டம் பிளவுபட்டுப் போய்க் கொண்டும் இருந்தது.

இந்தியத் துணைக் கண்டம் பிளவுபட்டுப் போனதற்கு மூன்று முக்கியக் காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவது: இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் இறுக்கமான இந்துவாதத் தீவிரப் போக்கு.

இரண்டாவது: இந்திய பாஸிச அமைப்புகளின் முஸ்லிம் விரோதப் போக்கு.

மூன்றாவது: முகமது அலி ஜின்னாவின் அரசியல் பிடிவாதம். 




இந்த மூன்று காரணங்களினாலேயே இந்தியத் துணைக் கண்டம் பிளவுபட்டது என்று நான் இன்றைக்கும் என்றைக்கும் துணிந்து சொல்வேன்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அங்கே இங்கிலாந்திலும் பெரிய பெரிய ஆட்சி மாற்றங்கள்; பெரிய பெரிய தடுமாற்றங்கள். தன்னுடைய ஆக்கிரமிப்பில் இருந்த நாடுகளுக்கு விடுதலை
கொடுத்துவிட்டு கைகழுவிக் கொள்வோம் என்று இங்கிலாந்து திட்டம் போட்டுக் கொண்டு இருந்த நேரம்.


அந்தச் சமயத்தில் இங்கிலாந்திற்கு ரொம்ப ரொம்ப தலைவலி கொடுத்த ஒரு நாடு இருந்தது என்றால் அது இந்தியாவாகத் தான் இருக்க முடியும். அப்பேர்ப்பட்ட தலைவலிக் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தால் பாகிஸ்தான் என்கிற ஒரு புதிய நாடு உருவாவதைத் தவிர்க்க முடியாது என்பதை ஆங்கிலேயர்கள் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டார்கள்.

இந்தியாவில் பாகிஸ்தான் என்கிற ஒரு புதிய நாடு உருவாகிற ஒரு பதட்டமான நிலை. இந்தக் கட்டத்தில் இந்தியா பிளவுபடுவதைக் காந்திஜி விரும்பவில்லை. அதில் அவருக்கு உடன்பாடே இல்லை. இந்தியா பிளவுபடுவதைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தார்.




இருந்தாலும் இந்தியாவின் தலையெழுத்தை யாராலும் தடுக்கவும் முடியவில்லை. நிறுத்தவும் முடியவில்லை. காந்திஜியின் விருப்பத்திற்கு எதிராக இந்தியத் துணைக் கண்டம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது.

1947 ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாகிஸ்தான் என்கிற ஒரு புதிய நாடு உருவானது. மறுநாள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஒன்று சொல்வேன். நன்றாகக் கேளுங்கள். ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா, ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரியார், வல்லபாய் பட்டேல் ஆகிய நான்கு பேரும் இந்திய அரசியல் கூண்டில் சர்க்கஸ் வித்தை காட்டிய பலே கில்லாடிகள். இந்திய வரலாற்றில் இணைபிரியா நான்கு கில்லாடிகள் என்றுகூட சொல்லலாம். 




1969-ஆம் ஆண்டு நான்கு கில்லாடிகள் எனும் ஒரு திரைப்படம் வெளியானது. அதில் ஜெயசங்கர், மனோகர், தேங்காய் ஸ்ரீநிவாசன், சுருளி ராஜன் ஆகிய நான்கு பேர் நடித்து இருந்தார்கள். நான்கு பேரும் நடிப்பரசு நாயகர்களாக நன்றாக நடித்து இருந்தார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன்னாலேயே; 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வேறு நான்கு கில்லாடிகள் பக்காவாக நடித்து நல்ல ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்து விட்டார்கள். அந்த நாடகத்தின் பெயர் தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை.

அந்த நால்வரின் அரசியல் சுயநலக் காரணங்களுக்கு முன்னால் காந்திஜியின் சத்தியமான சமாதானம் அடிபட்டுப் போனது. மனித நேயம், மனித உரிமைகள், சகோதரத்துவம் என்று சொல்கிற எல்லாமே அந்த நேரத்தில் பலிக்கடாவாகிப் போயின. 




இந்தக் கட்டத்தில் காஷ்மீர் தனிமையில் தடுமாறிக் கொண்டு இருந்த நேரம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர் என்கிற கிளியைப் பிடித்துக் கிளி ஜோசியம் பார்க்கலாம். கொஞ்சம் காசு பணத்தைப் பார்க்கலாம் என்று இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே கட்சி கட்டின. தோள்களை உயர்த்தி நின்றன.

அப்புறம் என்ன. ஒன்றுக்கு ஒன்று தெரிந்தே சதித் திட்டங்களைத் தீட்டின. அப்போது உருவான அந்த அரசியல் சிக்கல்தான் இப்போதைய காஷ்மீரில் இன்று வரையில் முகாரி ராகங்களை இடைவிடாமல் பாடிக் கொண்டு இருக்கிறது. புரியுதுங்களா.

காஷ்மீர் எனும் நிலப்பகுதி மொத்தத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், பூஞ்ச், கில்கிட், பல்கிஸ்தான் என ஆறு பகுதிகளைக் கொண்டது. 1947-ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்து போகும் போது ’நாங்கள் யார் பக்கமும் சேர மாட்டோம். தனித்தே இருப்போம்’ என காஷ்மீர் மன்னர் ஹரி சிங் சொல்லி இருக்கிறார். 




காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அதனால் ஹரி சிங்கிற்குப் பாகிஸ்தான் மீது எப்போதுமே ஒரு பயம். அதே சமயத்தில் இந்தியாவின் மீது இனம் தெரியாத பாசமும் நேசமும் வளர்ந்து கொண்டு வந்தன. ரோசாப்பூ மன்மத ராசா நேருவிற்கும் காஷ்மீரின் காதல் கடிதங்கள் போய்க் கொண்டுதான் இருந்தன.

இந்த விசயம் பாகிஸ்தானுக்கும் தெரியும். ஆனால் ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு புன்னகை செய்தது. அந்தப் புன்னகைதான் மண்ணாசை வடிவத்தின் மறு பிறவி. இதன் தொடர்ச்சியை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.










(தொடரும்)

சான்றுகள்

1. Lafont, Jean-Marie Maharaja Ranjit Singh, Lord of the Five Rivers. Oxford: Oxford University Press, 2002 ISBN 0-19-566111-7

2. Maharaja Ranjit Singh and his times, by J. S. Grewal, Indu Banga. Published by Dept. of History, Guru Nanak Dev University, 1980.

3. Khushwant Singh (2008). Ranjit Singh. Penguin Books. pp. 25–26. ISBN 978-0-14-306543-2.

4. Snedden, Christopher (2013), Kashmir: The Unwritten History. HarperCollins India. ISBN 9350298988.

5. Government of Azad Jammu and Kashmir; http://www.ajk.gov.pk/

டான்ஸ்ரீ நடராஜா கைது

கோலாலம்பூர் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ நடராஜாவும் அவருடைய மகன் கண்ணா என்பவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி) அதிகாரிகளினால் கைதி செய்யப்பட்டு உள்ளனர்.


ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவர்களை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த மூன்று நாட்களும் அவர்களிடம் விசாரணை நடத்தப் படும்.

டான்ஶ்ரீ நடராஜாவின் இல்லத்தில் 04.03.2019 இரவு 7:45 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி) அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை நடத்தினார்கள். 



டான்ஶ்ரீ நடராஜாவின் இல்லம் கோலாலம்பூர் கோத்தா டமான்சாரவில் உள்ளது. அவருடைய இல்லத்தில் எம்.ஏ.சி.சி. சோதனை நடத்திய அதே வேளையில் பத்துமலை கோயில் தலைமை அலுவலகத்திலும் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

பத்துமலையில் இருக்கும் ஶ்ரீசுப்பரமணிய ஆலயக் கமிட்டி உறுப்பினர்கள் சிலரிடமும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.



இந்த இரு இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. கோயில் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட அவருடைய மகன் டத்தோ கண்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப் பட்டார்கள்.

இதனிடையே பத்துமலை கோயில் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் சிலரிடம் எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதில் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.



கோயில் நிர்வாகச் செயலாளர் சேதுபதியையும் எம்.ஏ.சி.சி. வாக்கு மூலப் பதிவுக்காக அழைத்துச் சென்றனர்.

பத்துமலை ஆலயத்திற்குச் சொந்தமான நில விவகாரம் தொடர்பாகப் புகார் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் டான்ஶ்ரீ நடராஜா மற்றும் கோவில் அதிகாரிகளுக்கு எதிராக எம்.ஏ.சி.சி. இந்த அதரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.



இந்தச் செய்தி இப்போது நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியாகும். டான்ஶ்ரீ நடராஜாவும் அவருடைய மகன் டத்தோ கண்ணாவும் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பத்துமலை நிர்வாகத்திற்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்ததில் ஊழல் நடந்து இருக்கலாம் என்று 2014-ஆம் ஆண்டிலேயே பூச்சோங் முரளி என்பவர் போலீசில் புகார் செய்து இருந்தார். ஆனால் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.