04 ஏப்ரல் 2019

மரணப் பாதையில் மலாயா தமிழர்கள் - 1

மலாயா வரலாற்றில் மரண இரயில் பாதை மறக்க முடியாத ஓர் இதிகாசம். மலாயா இந்தியர்களின் நெஞ்சங்களைக் கீறிப் பார்க்கும் இரணத்தின் சுவடுகள். மலாயா தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து பார்க்கும் மரணத்தின் சுவடிகள். இரண்டுமே மௌன மொழிகளின் வக்கர ராகங்கள்.


சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்படும் ஒரு வரலாறாக மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் அதைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை.

இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது. அந்த வரலாறு காலா காலத்திற்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.



1940-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் யூதர்களுக்கு நாஜிக்கள் இழைத்தது கொடுமையிலும் கொடுமை. அதே போல இங்கே மலாயாவில் தமிழர்களுக்கு ஜப்பானியர்கள் இழைத்தது மாபெரும் கொடுமை. ஜப்பானியர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் பலிக்கடாக்களான அப்பாவிச் செம்மறியாடுகள்.

வர்றான் வர்றான் சப்பான்காரன் ஆள்பிடிக்க வர்றான்

என்பது அந்தக் காலத்துத் தமிழர்களின் வாய்மொழிச் சொற்கள். அவற்றில் கசிந்து வழிவது எல்லாம் வரலாற்றின் வேதனை விசும்பல்கள். வரலாற்றின் வேதனை வலிகள்.

அந்த வேதனை வலிகளில் சாத்துயர் மரண ஓலங்கள் ஓங்காரமாய் ஒப்பாரி வைப்பதை நன்றாகவே கேட்க முடிகின்றது.

வாராண்டி வாராண்டி
சப்பான் துரை வாராண்டி
வரகரிசி கூழுக்கு
பரதேசியா மாத்துனாண்டி

போனாண்டி போனாண்டி
பரங்கித் துரை போனாண்டி
போகவிட்டுப் பூந்தாண்டி
சப்பான் துரை

சீயாமுக்கு ஏத்திப் போனாண்டி
சீரழிய வைச்சாண்டி
வாழத் தாரு நோட்டு எல்லாம்
வதவளிய வைச்சாண்டி

சுண்ணாம்புச் சோற்றைப் போட்டு
புண்ணாக்கிப் போனாண்டி
மூனே முக்கால வருசத்தில
முக்காடு போட்டாண்டி

 

1945-ஆம் ஆண்டுகளில் மலாயாத் தமிழர்கள் பாடிய பாடல். இப்போதைக்கு கேட்க முடியாது. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற வாய்மொழிக் கதைகளில் இருந்து அந்தப் பாடல் சில சமயங்களில் வந்து விழும். 

அசை போட்டுப் பார்த்தால் நம் நெஞ்சங்களைப் பிழிய வைக்கும் பாடலாக இருக்கும். ஜப்பானியர் காலத்தில் நம் இனத்தவர்கள் எப்பேர்ப்பட்ட வேதனைகளை அனுபவித்து இருப்பார்கள். அந்த வேதனைகளின் விசும்பல்கள் தான் அந்தப் பாடல்.

சயாம் மரண இரயில் பாதைக்குத் தமிழர்கள் வைத்தது மூன்று பெயர்கள்:

1. பர்மா இரயில்பாதை
2. மரண இரயில்பாதை
3. பர்மா - சயாம் இரயில்பாதை

Burma Railway
Death Railway
Burma–Siam Railway

 

சயாம் இரயில் பாதை இரண்டாம் உலகப் போர்க் காலத்தின் போது நிர்மாணிக்கப் பட்டது. இது 415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தொடர் பாதை ஆகும்.
(1. Yoji Akashi and Mako Yoshimura)

தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் இந்தப் புகைவண்டித் தொடர் பாதை ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது.

மனித வரலாற்றில் இது மிகவும் துயரம் தோய்ந்த ஓர் இரயில்பாதை முயற்சியாகும். அந்த முயற்சி கடைசியில் பெரும் அதிர்ச்சியிலும் பெரும் சோகத்திலும் பெரும் தோல்வியிலும் போய் முடிந்தது. வரலாறு பேசுகிறது.

சயாம் மரண இரயில் பாதை கட்டுமானத்திற்கு கொண்டு வரப் பட்டவர்கள் அனைவரும் கட்டாய உழைப்பு வேலைகளுக்குப் பலவந்தம் செய்யப் பட்டவர்கள். கொண்டு வரப் பட்டவர்கள் என்று சொன்னால் தப்பு. இழுத்து வரப்பட்டார்கள் என்று சொன்னால் தான் சரியாக அமையும்.



ஏறக்குறைய 180,000 ஆசியத் தொழிலாளர்கள்; 60,000 போர்க் கைதிகள் வலுக்கட்டாயமாக இரயில் பாதை வேலைகளைச் செய்தார்கள். அந்தத் தொழிலாளர்களில் 90,000 பேர் பர்மியர்கள். 75,000 பேர் மலாயா குடிமக்கள்.

இராணுவம்    போர்க்கைதிகள்    இறப்புகள்

பிரிட்டிஷ்காரர்கள்    30131    6904
டச்சுக்காரர்கள்    17990    2782
ஆஸ்திரேலியர்கள்    13004    2802
அமெரிக்கர்கள்    686    131
மொத்தம்    61811    12619

பொதுமக்கள்    கொத்தடிமைகள்    இறப்புகள்

மலாயா    75000    42000
பர்மா    90000    40000
ஜாவா    7500    2900
சிங்கப்பூர்    5200    500
மொத்தம்    177700    85400

இந்தப் புள்ளிவிவரங்களை இன்றும் இதுவரையிலும் சரியாக உறுதிபடுத்த முடியவில்லை. 



இரயில் பாதை கட்டுமான வேலைகள் முடிவு பெற்றதும் அங்கு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் புள்ளிவிவரங்கள் அனைத்தையும் ஜப்பானியர்கள் முற்றாக அழித்து விட்டார்கள்.

எதிரிகளிடம் தடயங்கள் எதையும் விட்டுச் செல்லக் கூடாது என்பதற்காக முடிந்த வரையில் எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.

அதனால் சயாமுக்குப் போன தமிழர்களின் விவரங்கள் நமக்குச் சரியாக் கிடைக்கவில்லை. அத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்த காலக் கட்டம். அதனால் சயாம் பர்மா எல்லையில் இருந்து ஜப்பானியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற வேண்டிய நிலைமை. 



அதனால் முடிந்த வரையில் எல்லாப் புள்ளிவிவரங்களையும் அழித்து விட்டார்கள். கடைசி வரையில் அந்தப் புள்ளிவிவரங்கள் மீட்கப்பட முடியாமலேயே போனது.

மலாயாவில் வாழ்ந்த பெரும்பான்மைத் தமிழர்கள் ரப்பர்த் தோட்டங்களில் கொத்தடிமைகளைப் போல வேலை செய்தவர்கள். அவர்களில் பலர் ஜப்பானியத் தரகர்களின் பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றப் பட்டவர்கள்.

தெருவில் வருகிறவர் போகிறவர் என பலரும் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போகப் பட்டார்கள். இதில் ஆண்கள் பெண்கள் எனும் வேறுபாடு இல்லை. பெண்களும் ஆண்களுக்கு இணையாக வேலை செய்ய வேண்டிய நிலை. தவிர நிறையவே பாலியல் துன்புறுத்தல்கள்.



ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களில் பல்லாயிரம் பேர் பாதிக்கப் பட்டார்கள். அந்தத் தோட்டங்களில் பணிபுரிந்த கங்காணிகள்; கிராணிமார்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கிப் போய் சயாமிற்குப் போனார்கள்.

இது மறுக்க முடியாத உண்மை. இந்தக் கங்காணிகளையும் கிராணிகளையும் ஆள் கட்டி என்றும் ஆள் காட்டிகள் என்றும் அழைத்தார்கள்.

மலேசிய ஆய்வாளரும் நண்பருமான சீ.அருண் அவர்கள் ஒரு வரலாற்று நூல் எழுதியுள்ளார். அதன் பெயர் ‘சயாம்-பர்மா இரயில் பாதை – மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு’. 



மலேசியாவில் வெளிவந்த தமிழர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு நூல்களில் இதை மிகச் சிறப்பான ஆவணமாகக் கருதலாம். நிறைய புள்ளிவிவரங்களுடன் எழுதி இருக்கிறார்.

ஜப்பானியர் காலத்தில் நடந்த கொடுமைகளை மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். உண்மையிலேயே ஜப்பானியர் காலத்தில் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்று ஆவணம்.

அவர் எழுதிய நூலில் ஆள் கட்டி கங்காணிகள்; ஆள் காட்டிக் கிராணிமார்களின் பசப்புத் தன்மைகளைப் பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார். அந்த நூலில் இருந்து ஒரு சில தகவல்களை மேற்கோள் காட்டுகிறேன்.

தொழிலாளர்களைத் திரட்டும் முயற்சியில் ஜப்பானியர்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளனர். உண்மைக்குப் புறம்பான பல்வேறு செய்திகளை மக்களிடையே பரப்பி அவர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளனர்.

சயாம் – பர்மா தொடர்வண்டிப் பாதை கட்டுமானத் தொழிலுக்குப் போனால் அதிகமான சம்பளம் கிடைக்கும் எனும் செய்தி பரப்பப்பட்டது. ஐந்தாறு திங்கள் வேலை செய்து நிறைய சம்பாதித்து வீடு திரும்பி விடலாம் என்று கூறி மக்களின் ஆர்வத்தைத் தூண்டி உள்ளனர்.

இவர்களின் பேச்சைக் கேட்டுத் தோட்டப்புற மக்களில் அதிகமானோர் தாமே முன்வந்து சயாமிற்குச் சென்றனர்.



மலாயாவில் வெளிவந்த நாளிதழ்களிலும் அது தொடர்பான விளம்பரங்கள் வெளிவந்தன. வேலைக்குச் செல்பவர்கள் கீழ்க்காணும் வாய்ப்புகளைப் பெறுவார்ள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

•    மூன்று மாதங்கள் மட்டுமே வேலை
•    காலக்கெடு முடிந்ததும் வீடு திரும்பலாம்
•    சயாமிற்குப் போக இலவச தொடர்வண்டி ஏற்பாடு
•    தங்குமிடம்; உணவு; மருத்துவம் முதலியன இலவசமாக ஏற்பாடு
•    நாள் ஒன்றுக்கு ஒரு டாலர் சம்பளம்


ஜப்பானியர்களின் ஆட்சியின் போது மலாயாவில் பற்பல வேதனைகள்.  பற்பல சோதனைகள். அந்த வேதனைகளையும் சோதனைகளையும் சகிக்க முடியாமல் சயாமிற்குப் போக விரும்பினார்கள். அப்படிப் போனால் தங்களின் இன்னல்கள் ஓரளவுக்கு தீரும் என்று நினைத்தார்கள்.

ஜப்பானியர்களின் விளம்பரப் பேச்சுகளையும் கங்காணி கிராணிமார்களின் தேன் சொட்டும் வார்த்தைகளையும் கேட்ட தோட்ட மக்கள் ஒரு புதுவாழ்க்கையை எதிர்பார்த்துச் சயாமிற்குச் சென்றார்கள். தோட்ட மக்களின் அறியாமைத் தனத்தையும் வெகுளித் தனத்தையும் ஜப்பானியர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள்.

பர்மாவிற்குச் செல்லும் தமிழர்கள் பாதை போடும் வேலை முடிந்ததும் அப்படியே இந்தியாவிற்குப் போய் விடலாம். அங்கே இருந்து இந்தியா அதிகத் தூரத்தில் இல்லை. ஒரே வாரத்தில் நடந்தே போய் விடலாம் எனும் ஆசை வார்த்தைகள். 



அந்த மாதிரி பல நூறு தமிழர்க் குடும்பங்கள் மலாயாவில் இருந்து பர்மாவிற்கு இரயில் பாதை போட போய் இருக்கின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, பிள்ளைகள், மாமன், மச்சான் என்று ஒட்டு மொத்த குடும்பமாகப் போய் இருக்கின்றன.

அவர்களுக்கு எல்லாம் என்ன நடந்து இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டாம். நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். சயாம் மரண இரயில் பாதை கொடுமைகள் நாளையும் தொடர்ந்து போகும்.

(தொடரும்)


சான்றுகள்

1. Yoji Akashi and Mako Yoshimura; New perspectives on the Japanese occupation in Malaya and Singapore, 1941-1945, Singapore:  NUS Press, c2008, ISBN: 9971692996.

2. Hugh V. Clarke; "A Life for Every Sleeper: A Pictorial Record of the Burma-Thailand Railway" (Allen & Unwin, 1986), p.49.

3. Robert Hardie; "The Burma-Siam Railway: The Secret Diary of Dr. Robert Hardie, 1942-1945" (Quadrant Books & Imperial War Museum 1983), p.l09.

4. Eric Lomax; "The Railway Man" (W. W. Norton, 1995), p.l05.

5. Indian Communities in Southeast Asia, edited by K.S. Sandhu and A. Mani p.151

02 ஏப்ரல் 2019

வானத்தில் இருந்து வந்த காதலி

காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் என்று உலகையே வெறுத்து வாழ்ந்த ஒரு மனிதர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்தவர். பெண்களைக் கண்டாலே பத்தடிகள் தள்ளிப் போய் நிற்கும் மனிதர்.


இவருடைய பிரமச்சரியத்தைப் பார்த்து ஆண்டவருகே வேதனை போலும். வானத்தில் இருந்து ஒரு பெண்ணைத் தூக்கிப் போட்டு ‘இந்தா எடுத்துக்கோ... இவள் தான் உனக்கு’ என்று அந்த மனிதரின் வாழ்க்கையையே மாற்றிக் காட்டி இருக்கிறார். என்ன சொல்லப் போகிறீர்கள்.

லாரிட்ஸ் பெல்சியோர் என்பவர் அந்தக் காலத்து நாடகங்களில் பாடுபவர். opera singer. நம்ப கர்நாடக சங்கீதம் மாதிரி ஆங்கிலத்தில் கர்நாடகப் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர். ஆனால் இவருக்குப் பெண்கள் என்றால் சுத்தமாக அலெர்ஜி. 


லாரிட்ஸ் பெல்சியோர் 1890 மார்ச் 20-ஆம் தேதி டென்மார்க் நாட்டில் பிறந்தவர். 1930-களில் அமெரிக்காவில் குடியேறினார். ஹாலிவூட் படங்களில் பாடினார். இப்படி இருக்கும் போது ஒரு நாள் அவருடைய வீட்டின் புல் தரையில் பாடல் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்.

அப்போது வானத்தில் இருந்து ஏதோ ஒரு பொருள் பறந்து கீழே வருவது போல தெரிந்தது. என்ன ஏது கண்டு அறிவதற்குள் அந்தப் பொருள் நேராக கீழே வந்து அவர் மீதே சாய்ந்தது. அப்படி சாய்ந்த பொருள் ஓர் அழகிய பெண். அடடடா...

அந்தப் பெண்ணின் பெயர் மரியா ஹெக்கர் Maria Hacker. ஹாலிவூட் படங்களில் ஸ்டண்ட் நடிகை. விமானத்தில் பறந்து வான்குடை (பாராசூட்) பயிற்சி செய்து இருக்கிறார். அப்போது காற்று வேறு பக்கமாக அடித்து லாரிட்ஸ் பெல்சியோர் வீட்டுப் பூங்காவில் மரியாவைத் தள்ளிவிட்டுப் போய் விட்டது.


அதுவும் லாரிட்ஸ் மேலேயே மரியா விழுந்து இருக்கிறார். மரியாவைப் பார்த்ததும் லாரிட்ஸ் பெல்சியோர் மனம் மாறியது. காதல் கதவைத் தட்டியது. அப்புறம் என்ன.

ஒன் மினிட் பிளீஸ். காதல் பலவிதம். கண்டதும் காதல்; கேட்டதும் காதல்; அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்கிற ராமாயணக் காதல்; இப்படி நிறைய காதல் வகைகள். அவற்றில் இந்தப் பாரசூட் காதலும் ஒருவகை.

இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். இரு பிள்ளைகள். லாரிட்ஸ் பெல்சியோர் 1973-ஆம் ஆண்டு தன்னுடைய 83-ஆவது வயதில் காலமானார். மரியா 1963-ஆம் ஆண்டு தன்னுடைய 38-ஆவது வயதில் காலமானார். 

இரு பிள்ளைகள்
இவர்களுடைய வயதைப் பாருங்கள். ஒருவர் இறக்கும் போது அவருக்கு வயது 83. அந்த எண்களைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள். 38. அந்த வயதில் இன்னொருவர் இறந்து போனார். 83-க்கும் 38-க்கும் என்னே ஒற்றுமை. இதுவும் ஒரு விந்தைச் செய்தி தானே. நாளைய தினம் வேறு ஒரு விந்தைச் செய்தி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.
02.04.2019.

01 ஏப்ரல் 2019

சம் தம் மர்ம ஒலி

உலகம் முழுவதும் உள்ள பாலைவனங்களில் விநோதமான ஒலிகள் அடிக்கடி கேட்பது உண்டு.  பகலிலும் கேட்கும். இரவிலும் கேட்கும். அது காற்றின் ஒலி அல்ல. 


கடற்கரைகளிலும் அப்படிப்பட்ட விவரிக்க முடியாத விநோதமான ஒலிகள் கேட்கும். அவை கடல் அலைகளின் ஒலிகள் அல்ல. உயிர் உள்ள பொருட்கள் அழைப்பது போன்ற விசித்திரமான ஒலிகள். சமயங்களில் மயிர் கூசும் ஒலிகள். பயம் வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

மீன்கள் பாடுகின்றன; மணல் பாடுகின்றது என்றும் மீனவர்கள் கதை சொல்வார்கள். கடல் அலைகள் உறுமுகிறது; விசில் அடிக்கிறது என்றும் பயமுறுத்துவார்கள். அந்த மாதிரியான அதிசய ஒலிகள் கேட்பது முற்றிலும் உண்மை.

அதற்கு என்ன காரணம். ஆராய்ச்சி பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனாலும் அந்த அதிசயமான ஒலிகள் மட்டும் நின்ற பாடு இல்லை.


பாலைவனங்களில் கேட்கும் விசில் ஒலி, முனகல் ஒலி, உறுமல் ஒலி போன்றவற்றிற்கு மூல காரணம் மணல்திட்டுகளின் அதிர்வுகள் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மணலின் ஈரப் பதமும் காற்றின் வேகமும் அந்த ஒலிகளுக்குக் காரணம் என்று சொல்லப் படுவதும் உண்டு.

பாலைவனங்களில் வாழும் ஆப்பிரிக்க மக்கள் அந்த மர்ம ஒலிகளைப் பற்றி ஆயிரக் கணக்கான கதைகள் சொல்கிறார்கள்.

எகிப்தில் மெம்னோன் கொலோசி (Memnon colossi) எனும் பிருமாண்டமான சிலைகள் உள்ளன. இவை 3400 ஆண்டுகள் பழைமையானவை. இவற்றில் மூன்றாவது *அமன்ஹோடெப்* (Amenhotep III) எனும் அரசனின் இரு சிலைகள்.

இந்த அரசன் ஒரு சமண அரசன். புகழ்பெற்ற அரசன். இந்த அரசனின் சிலைகள் 36 அடி உயரம் கொண்டவை. ஒவ்வொரு சிலையும் 250 டன் எடை கொண்டவை.

இந்தச் சிலைகளில் இருந்து இரவு நேரங்களில் மர்மமான ஒலிகள் கேட்குமாம். இன்றும் கேட்கின்றன. இந்த மனிதன் (அரசன்) இறந்து 3400 ஆண்டுகள் ஆகியும் அந்த அரசனின் குரல் இன்றும் கேட்பதாகப் பாலைவன மக்கள் சொல்கிறார்கள். என்னே அதிசயம்.

அந்த ஒலியில் சம் தம்... சம் தம்... எனும் குரல் ஒலியும் வருமாம். அப்படித்தான் பாலைவன மக்கள் சொல்கிறார்கள். உண்மையா என்று என்னைக் கேட்க வேண்டாம். அவர்களைத் தான் கேட்க வேண்டும்.

உண்மையில் *சம் தம்* என்பது பாரசீகச் சொற்கள். சமஸ்கிருதத்தில் இருந்து புலம் பெயர்ந்த சொற்கள். சம் என்றால் ஆசையை அறவே ஒழித்தல். தம் என்றால் சுயக் கட்டுப்பாடு.  அதாவது தன்னடக்கம். 


அதனால் அமன்ஹோடெப் அரசனின் ஒரு சிலைக்கு *சம்* என்றும் இன்னொரு சிலைக்கு *தம்* என்றும் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தச் *சம் தம்* சொற்களில் இருந்து உருவானதே *சலாமாத்* எனும் அரபுச் சொல். அதில் இருந்து மருவி இந்தப் பக்கம் வந்தது தான் *Selamat* எனும் மலாய்ச் சொல்.

எது எப்படியோ இந்தச் *செலாமாட்* எனும் மலாய்ச் சொல்லில் ஒரு மர்மக் குரல் இருப்பதையும் இன்றைக்குத் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். நாளைய தினம் வேறு ஒரு புதிய தகவல்.

கோத்தா கெலாங்கி கருங்கோட்டை

1955-ஆம் ஆண்டு J. R. R. Tolkien எனும் ஆங்கிலேய எழுத்தாளர் War of the Rings எனும் நாவலை எழுதினார். அந்த நாவலில் வேறு உலகத்து மக்கள் பற்றிய கற்பனைக் கதை. இதுவரை மூன்று லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் வெளிவந்து உள்ளன. 


1. The Fellowship of the Ring (2001),
2. The Two Towers (2002)
3. The Return of the King (2003).

எத்தனை பிரம்மாண்டமானவை, சிக்கலானவை, தேர்ந்த தொழில்நுட்பமும், கலை நேர்த்தியும் கொண்டவை. அந்தப் படங்களின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் உலகை வியக்கவைத்தது.  
 


“லார்ட் ஆப் த ரிங்ஸ்” ஒரு ஹாலிவுட் படமாக இருந்தாலும், அது உண்மையில் முழுக்க முழுக்க நியூஸீலாந்தில் தயாரிக்கப்பட்டது.

ஜே.ஆர்.ஆர்.டால்கின் 1937-ஆம் ஆண்டில் தன்45-ஆவது வயதில் எழுத ஆரம்பித்து சுமார் 12 ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்த நீண்ட புனைக் கதைதான் “லார்ட் ஆப் த ரிங்ஸ்”. இது ஒரு புராண காவியம்.

அதை வைத்து The Black Gate எனும் ஓவியம் தீட்டினார்கள். பின்னர் 1969-ஆம் ஆண்டு திரப்படமாகத் தயாரிக்கப் பட்டது. அந்த ஓவியத்தை கோத்தா கெலாங்கி (மாயிருண்டகம்) எனும் ஸ்ரீ விஜய அரசு கோட்டையுடன் ஒப்பிடுகிறார்கள். 


கோத்தா கெலாங்கி கோட்டை மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கிறது. அதன் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டுமானால் 100 அடி ஆழத்திற்குத் தோண்டிப் பார்க்க வேண்டும். ஒரு கற்பனையான தோற்றத்தில் மட்டுமே நாம் அந்தக் கோட்டையை அனுமானிக்க முடியும்.

The Malaysian Centre of Remote Sensing (MACRES) என்பது மலேசியத் தொலையுணர் தொழில்நுட்ப மையம். இந்த மையத்தின் துணை கொண்டு கோத்தா கெலாங்கியை வானத்தில் இருந்து படம் எடுத்து இருக்கிறார்கள்.

அந்த மையத்தின் இணைய முகவரி:

http://www.remotesensing.gov.my/portal/index.php

Kota Gelanggi is an archaeological site reported in 2005 as potentially the first capital of the ancient Empire of Srivijaya and dating to around 650–900 and one of the oldest Kingdoms on South East Asia's Malay Peninsula. The site's existence was announced as a 'discovery' by the Malaysian press on 3 February 2005.

27 மார்ச் 2019

60 ரிங்கிட்

பேங்க் நெகாராவினால் 21 டிசம்பர் 2017-ஆம் தேதி  வெளியிடப்பட்ட நினைவு பணத்தாள்.



மலாயாவுக்கு சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளின் நினைவாக 60 ரிங்கிட் தாள் வெளியிடப் பட்டது. இந்தத் தாளை வழக்கம் போல பயன்படுத்தலாம். தவிர நினைவுப் பொருளாகப் பார்வைக்காக மட்டுமே வைத்துக் கொள்ளலாம். புழக்கத்தில் மிகவு குறைவு. 


மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் முகமட் (Kebawah Duli Yang Maha Mulia Yang di-Pertuan Agong XV Sultan Muhammad V) அவர்களால் கோலாலம்பூர் பேங்க் நெகாராவில் இருக்கும் கைவினை அருங்காட்சியகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.




60 ரிங்கிட் தாளின் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வோருவரும் மூன்று 60 ரிங்கிட்; 600 ரிங்கிட் தாட்களை வாங்கிக் கொள்ள முடியும்.