15 மே 2019

பலாப்பழத்தைப் பிளக்காமல்

பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளே எத்தனை சுளைகள்

முக்கனிகளில் இரண்டாவதாகக் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழம் ஆகும். அதைப் பிளக்காமல் அதன் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று சொல்ல முடியுமா? தாராளமாகச் சொல்லலாம். ஒரு சூத்திரம் இருக்கிறது.


கணக்கதிகாரம் என்று ஒரு நூல் இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில் கொறுக்கையூர் காரிநாயனார் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். இந்த நூலில் காணப்படும் கணித வழிமுறைகள் சாமான்ய மக்களின் பரிமாணங்களை கணக்கியல் ரீதியாக அணுகுகின்றது.

அதில் பலாப் பழத்தின் சுளைகளுக்கு ஒரு சமன்பாடு இருக்கிறது. அதாவது பார்முலா. அதில் பலாப் பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று சொல்ல முடியும் என்று அந்தச் சமன்பாடு சொல்கிறது. எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாம் சுளை


உரை: ஒரு பலாப் பழத்தை அறுப்பதற்கு முன்னே அதிலுள்ள சுளைகள் இவ்வளவு என்று கண்டிபிடிக்கலாமோ எனின் அதற்குச் சொல்லுமாறு;

காம்பைச் சுற்றிலும் எண்ணிப் பார்க்க, ¥ முள்ளுக் கண்டது. இதை ©-ஆல் பெருக்க, ¥ x © =©¥, இதை ஸ-க்கீய, ¥ x ஸ = ஸ¥, உ· x ஸ = ¥, ஆக ©¥. ஈவு ¥உ· சுளை என்று சொல்வது. தமிழ்க் கணிதம் தெரியாமல் இந்த விளக்கத்தைப் புரிந்து கொள்வது சற்றே சிரமம்.

விளக்கம்: பலாப் பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ண வேண்டும். கொஞ்சம் பெரிய வேலை தான். இருந்தாலும் முயற்சி செய்யலாமே.

அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். கிடைத்த தொகையை ஐந்தால் வகுக்க வேண்டும். முடிவாகக் கிடைக்கும் தொகைதான் அந்தப் பலாப் பழத்தின் உள்ளே இருக்கும் சுளைகளின் எண்ணிக்கை.

எடுத்துக் காட்டாக 30 முட்கள். ஆறால் பெருக்கினால் 180. ஐந்தால் வகுத்தால் 36 வருகிறது. அதுதான் உள்ளே இருக்கும் சுளைகளின் எண்ணிக்கை.

ஒரு தடவை சோதனை செய்து பார்த்தேன். சரியாகவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

கறுப்பு தாஜ்மகால் - 4

ஷா ஜகான் இறக்கும் தருவாயில் தன் மூத்த மனைவியை அழைத்தார். மூத்த மனைவியின் பெயர் கண்டகாரி மகால். ஜகனாராவைப் நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அப்போது ஜகனாராவிற்கு வயது 52.

மும்தாஜ் மகால் இறக்கும் போது ஜகனாராவிற்கு வயது 17. மும்தாஜ் மகால் இறந்த பின்னர் மொகலாயப் பேரரசை ஜகனாரா தான் கவனித்துக் கொண்டார். முதல் பெண்மணி எனும் சிறப்புத் தன்மை இல்லாமல் மொகலாயப் பேரரசை வழி நடத்தியவர். அந்தக் காலக் கட்டத்தில் சக்தி வாய்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தவர் ஜகனாரா.



கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாத ஜகனாரா 1681-ஆம் ஆண்டு தன்னுடைய 67-ஆவது வயதில் இறந்து போனார்.  

ஷா ஜகான் இறந்ததும் அவருடைய உடலுக்கு ராஜ மரியாதை செய்ய வேண்டும் என்று ஜகனாரா விரும்பினார். ஆனால் ஒளரங்கசிப் அதை விரும்பவில்லை. ஆடம்பரமாகவும் மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் எதையும் செய்ய வேண்டாம் என்று தடுத்து விட்டார். இருந்தாலும் சந்தனக் கட்டையால் செய்யப் பட்ட அழகிய பெட்டியில் ஷா ஜகானின் உடல் கிடத்தப் பட்டது.

அப்படியே தாஜ்மகாலுக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அங்கே மும்தாஜ் மகாலின் சமாதிக்குப் பக்கத்தில் ஷா ஜகானுக்கும் ஒரு சமாதி எழுப்பப் பட்டது. அந்தச் சமாதிகள் இன்றும் இருக்கின்றன.

ஷா ஜகான் ஆசை ஆசையாகத் தாஜ்மகாலைக் கட்டினார். ஆனால் கடைசி வரை அவர் உள்ளே போய்ப் பார்க்க முடியாமல் போனதுதான் வேதனையிலும் வேதனையான கதை. ஒரு சாம்ராஜ்யத்து வரலாற்று வேதனைகளில் தாங்கிக் கொள்ள முடியாத வேதனை என்றுகூட சொல்லலாம்.

இருந்தாலும் ஔரங்கசிப் தன்னுடைய கடைசி காலத்தில் நடக்க முடியாமல் ரொம்பவும் கஷ்டப் பட்டு இறந்து போனார் என்பதும் ஒரு கொசுறுச் செய்தி. பதிவு செய்கிறேன்.

ஷா ஜகான் இறப்பதற்கு முன்னால் நடந்த விசயங்கள். சொல்ல மறந்து போனவை. மும்தாஜின் இழப்பை ஷா ஜகானால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மொகலாயப் பேரரசு முழுவதும் ஒரு வருடத்திற்குத் துக்கத்தை அனுசரிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எல்லாக் கேளிக்கைக் கொண்டாட்டங்களும் நிறுத்தப் பட்டன.



மும்தாஜ் மகால் தன் கடைசி மூச்சை விடுவதற்கு முன் சொன்ன கடைசி வார்த்தைகள் ஷா ஜஹானின் காதினுள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தன. 'என் நினைவாக ஏதாவது ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும். அது என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அதுதான் என் கடைசி ஆசை.' அவைதான் மும்தாஜின் கடைசி வார்த்தைகள்.

மும்தாஜூக்கு அழகான ஒரு நினைவு மாளிகையைக் கட்ட வேண்டும் என்று ஷா ஜகான் நினைத்தார். மொகலாயர்கள் இதுவரை கட்டிய மாளிகைகளிலேயே மிகவும் பிரும்மாண்டமான மாளிகையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காகப் பாரசீக நாடுகளில் இருந்து கட்டடக் கலைஞர்கள் அழைக்கப் பட்டார்கள். அவர்களின் மூலமாகக் கட்டடத்தின் வரைபடங்கள் உருவாக்கப் பட்டன. முழுவதும் பளிங்குக் கற்களாலான கட்டிடம்.

தாஜ்மகால் கட்டுவதற்கு யமுனை நதிக்கரை ஓரமாக ஓர் இடம் தேர்வு செய்யப் பட்டது. அந்த இடம் மகாராஜா ஜெய் சிங்கிற்குச் சொந்தமான இடம். அதை அவரிடம் இருந்து ஒரு கணிசமான தொகை கொடுத்து ஷா ஜகான் வாங்கிக் கொண்டார்.

தாஜ்மகாலைச் சுற்றி அமைய இருக்கும் தோட்டத்தின் அளவு; தாஜ் மகாலுக்கு வெளியே அமையவிருக்கும் நீர் ஊற்றுக்கள்; அவற்றுக்கான இடங்கள் எல்லாம் பாரசீக வல்லுநர்களால் முடிவு செய்யப் பட்டன. தாஜ் மகாலில் இருந்து 15 கி.மீ. தூரத்திற்குச் சாரங்கள் அமைக்கப் பட்டன.

நவீன இயந்திரங்கள் இல்லாத காலத்தில் பிரமிடுகள் அல்லது தாஜ்மகால் போன்ற உயரமான கட்டிடங்களைக் கட்டும் போது அந்த இடங்களுக்கு பணியாட்களையும் பொருட்களையும் கொண்டு செல்ல அமைக்கப்படும் தற்காலிகச் சட்டக அமைப்பிற்குப் பெயர்தான் சாரம்.

தஞ்சைக் கோயிலைக் கட்டுவதற்கு 16 கிலோமீட்டர் தூரம் வரையில் சாரங்கள் அமைத்து கற்பாறைகளை உச்சிக்குக் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள். அந்தப் பாறைகளை மனிதர்கள் இழுத்துக் கொண்டு போய் இருக்கிறார்கள். வெளிநாட்டில் சிறை பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளே அந்த மனிதர்கள். மன்னிக்கவும்.

அந்தச் சாரங்களின் வழியாக கட்டுமானப் பொருட்கள் உச்சிக்குக் கொண்டு செல்லப் பட்டன. சிறப்பாக உருவாக்கப்பட்ட தேக்குமர வண்டிகள். ஒவ்வொரு வண்டியையும் இழுத்துச் செல்ல 12 எருமை மாடுகள். நவீன இயந்திரங்கள் இல்லாத காலத்தில் தாஜ்மகால் கட்டப்பட்டது. அதையும் நினைவுகூர்கிறேன்.

வேலை செய்ய 22 ஆயிரம் ஆட்கள் தேவைப் படும்; ஆயிரம் யானைகள் தேவைப்படும்; இருபது வருடங்கள் பிடிக்கும்; கோடிக் கணக்கில் செலவாகும் என்பதைப் பற்றி எல்லாம் ஷா ஜஹான் கொஞ்சமும் கவலைப் படவில்லை. ஓர் உலக அதிசயத்தைக் கட்டி முடித்தார். இருந்தாலும் அவர் கட்டிய அந்தத் தாஜ் மகாலின் உள்ளே நுழைந்து பார்க்காமலேயே மறைந்தும் போனார். மொகலாய வரலாற்றுக் கொடுமை.



உலக நாடுகளின் அதிபர்கள் இந்தியாவுக்கு அரசியல் சுற்றுப் பயணம் வரும் போது தாஜ் மஹாலைப் பார்க்காமல் போவது இல்லை. இவ்வளவு பெருமை கொண்ட தாஜ்மஹாலினால் இந்தியாவிற்குத் தான் பெருமை. தாஜ் மஹால் ஓர் உலக அதிசயம்.

சரி. இந்திய மொகலாய மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. அதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

இந்திய மண்ணில் ஆயிரக்கணக்கான இந்திய ராஜாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தார்கள். வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள்.

அந்த ராஜாக்களின் ராஜ வாழ்க்கையில் மதுரசங்கள் ஆறாய்ப் பெருகி ஓடும். மாதுரசங்கள் தேனாய் உருகி வழியும். வண்டுகள் வாசல் வரை வந்து வீணைகளை மீட்டிவிட்டுப் போகும். சின்னஞ்சிறு சிட்டுகள் பட்டுக்குள் சிக்காமல் சிறகடித்துப் பறக்கும்.

மன்னரின் ஒரே ஒரு பார்வையில் ஓராயிரம் ராணிகள் ஓடி வருவார்கள். ஓராயிரம் சுகங்களை அள்ளித் தருவார்கள். அந்தர்புரம் ஒரு கந்தர்வ லோகமாகச் சிணுங்கி நிற்கும். மங்கிய வெளிச்சத்தின் சந்தோஷங்களில் சொர்க்கத்தின் தலைவாசல் கடைவாசல் தெரியாமல் தெரியும்.

இப்படித்தான் அந்தக் காலத்து ராஜாக்கள் வாழ்ந்தார்கள் என்று பலர் இன்றுவரை நினைக்கிறார்கள். நினைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அது தப்புங்க. பாவம் ராஜாக்கள்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைத்து வாழ்ந்தவர்கள். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது. இன்றைக்குத் தெரிந்து கொள்வோம்.

அக்பரைப் பற்றி அபுல் பாசல் என்பவர் எழுதிய 'அக்பர்நாமா’; ஔரங்கசிப் பற்றி அப்துல் ஹமீத் லாஹுரி எழுதிய 'பாதுஷாநாமா’;  ஜஹாங்கீர் பற்றிய 'மாஆத்திரி ரஹிமீ’ போன்ற நூல்களைப் படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.



'தாரீக் இ ஷா ஜஹானி’ எனும் ஒரு வரலாற்று நூல். சாதிக் கான் என்பவர் ஷா ஜகானைப் பற்றி எழுதி இருக்கிறார். அதைப் படித்த பிறகுதான் எனக்கும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜ வாழ்க்கை என்பது காளிக் கோயிலில் பலிக்கடாவாக மாறப் போகும் ஓர் ஆட்டுக் கடாவின் வாழ்க்கை போன்றது. மஞ்சள் பூசுவார்கள். பன்னீர் தெளிப்பார்கள். குங்குமம் வைப்பார்கள். சந்தனம் தடவுவார்கள். ரோசாப்பூ மாலை போடுவார்கள். கை எடுத்துக் கும்பிடுவார்கள்.

அடுத்து அம்புட்டுத்தான். கத்தியைக் கழுத்தில் வைப்பார்கள். கொஞ்ச நேரத்தில் கூறு போட்ட ஆடுக்கடா சட்டியில் வேகும். அதைச் சாப்பிட ஒரு படையே திரண்டு வந்து நிற்கும். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

அந்த மாதிரிதான் அந்தக் காலத்து ராஜாவின் வாழ்க்கையும். எந்த நேரத்திலும் கத்தி கழுத்திற்கு வரும் என்று பயந்து பயந்து வாழ வேண்டிய ஒரு வாழ்க்கைதான் அந்தக் காலத்து ராஜாக்களின் வாழ்க்கை.

முக்கால் வாசி இந்திய நாட்டை ஆட்சி செய்த சக்கரவர்த்திகளுக்கும் கடைசி காலத்தில் ஒரு நல்ல அமைதியான சாவு கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

இதற்கு ஜூலியஸ் சீசர், நெப்போலியன், ஜெங்கிஸ்கான், ஷா ஜகான், ஹுமாயூன் போன்றவர்களின் சரித்திரங்களே சான்றாக அமையும்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஓர் உவமானம் நினைவிற்கு வருகிறது. காட்டிலே உயரமாக வளர்ந்துவிட்ட ஒரு மரத்தை நன்றாகப் பாருங்கள். மற்ற தாவரங்களில் இருந்து அது தனிமைப் பட்டுத் தனியாக நிற்கும். அந்த மரத்தைப் பார்ப்பவர்கள் விண்ணைத் தொட்டுப் பார்க்கும் விருச்சகம் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.

ஆனால் உணர்வுப் பூர்வமாகப் பார்த்தால் அது தனிமையில் வாடுவது தான் தெரிய வரும். கீழே இருக்கும் தாவரங்கள் ஒன்றோடு ஒன்று குலவிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த உயரமான மரம் மட்டும் மற்ற தாவரங்களுடன் கொஞ்சிக் குலாவ முடியாத தனிமை நிலை. அதுதான் உண்மை.

உங்களுக்குத் தெரிந்த இந்தக் காலத்து அரசர்களை எடுத்துக் கொள்ளுங்கள். மேலை நாட்டு அரசர்களைத்தான் சொல்கிறேன். அவர்களின் அதீத ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து இன்றைய சாமான்ய மக்கள் நொந்து நூலாகிப் போகிறார்கள். நமக்கு அந்த மாதிரி ஒரு வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று வேதனைப் படுவார்கள். கவலை வேண்டாம். 



ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஓர் இந்திய அரசர் எப்படி வாழ்ந்தார் என்று கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் ஒரு நல்ல காரியம் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். தூங்கி எழுந்ததில் இருந்து இரவில் சிருங்காரப் பாடல்களைக் கேட்பது வரையில் நடந்த எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் எழுதி வைத்துச் சென்று இருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றும் எழுதவில்லை. எழுத அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. யாராவது ஒரு நம்பிக்கையான ஆளைக் கூப்பிட்டு குறிப்பு எடுக்கச் சொல்லி இருக்க வேண்டும். அதுவே நாட்குறிப்பாகிப் பின்னர் புத்தகமாக மாறிப் போய் இருக்கலாம்.

அப்போதைய பெரும்பாலான இந்திய மன்னர்களுக்குப் பயம் ஒன்று தான் சாகும் வரை உற்றத் தோழனாக தொடர்ந்து வந்து இருக்கிறது. ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் வாழ்ந்து மறைந்து போனது தான் வரலாறாகவும் இப்போது பரிணமிக்கிறது.

நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள். எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக் கொள். இந்த இருவர் மீதும் மிக் ககவனமாக இரு. இருவரில் யார் வேண்டுமானாலும் உன்னைக் கொல்லலாம் என்று மன்னர்களுக்கு பட்டி, பீர்பால், இபுன் பாத்துத்தா போன்ற அறிவுரைஞர்கள் ஆலோசனை சொல்வார்களாம். அதுதான் சரித்திரத்திலும் நடந்து இருக்கிறது.

மொகலாய அரசர்களில் ஜகாங்கீர் என்பவர் மிக முக்கியமானவர். இவர்தான் அக்பருக்கு மகன். ஷா ஜகானுக்குத் தந்தையார். அவர் ஒரு நாளைக்கு காலையில் இருந்து இரவு படுக்கும் வரை என்ன என்ன செய்வார் என்பதைப் பார்ப்போம்.

அதிகாலை 4 மணிக்கு கோழி கூவுவதற்கு முன்னாலேயே ஜகாங்கீர் எழுந்து விடுவார். அவரை எழுப்பி விடுவதற்கு என்றே மன்னருக்குப் பிடித்த ஒரு ராணி இருந்தார். மன்னர் எந்த மனைவியோடு எந்த அறையில் தூங்கினாலும் சரி வழக்கமாக அவரை எழுப்பிவிடும் அதே ராணிதான் ஒவ்வொரு நாளும் வந்து எழுப்ப வேண்டும்.

அந்த ராணியின் முகத்தில் விழித்தால்தான் காரியங்கள் நல்லபடியாக நடக்கும் என்பது அவருடைய ஐதீகம். இன்னும் ஒன்று. அந்தக் காலத்து சில இந்திய ராஜாக்களுக்கு எத்தனை மனைவிகள் என்று அவர்களுக்கே தெரியாதாம். பாவம்.

ஒரு கொசுறுச் செய்தி. கி.பி. 993-ஆம் ஆண்டு இலங்கையில் அநுராதபுரம் பேரரசுடன் போர் பொருந்திய ஒரு இராஜாதி ராஜ மன்னர் அங்கே இருந்து இரண்டாயிரம் பெண்களைக் கடத்தி வந்து இருக்கிறார். அதில் பாதி பேரைத் தன் அந்தர்புரத்தில் வைப்பாட்டிகளாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக் கொண்டார்.

மிச்சம் பாதி பேரைப் பெரிய கோயிலுக்குத் தேவர்களின் அடியார்களாகத் தானம் செய்தார். இந்தத் தேவரடியார்கள் தான் பின் நாட்களில் தேவதாசிகளாக மாறினார்கள்.

பின்னர் நாட்களில் அந்தத் தேவதாசிகள் தான் கோயில் தர்ம கர்த்தாக்களுக்கும் ஊர்ப் பெரியவர்களுக்கும் வைப்பாட்டிகளாக மாறினார்கள். இது வரலாற்று உண்மை. 


(தொடரும்)

சான்றுகள்

1. "UNESCO Taj Mahal". UNESCO Culture World Heritage Centre, World Heritage List. UNESCO. 2016.

2. Alvi, Sajida S. (1989). "Religion and State during the Reign of Mughal Emperor Jahangir (1605–27).

3. Rajaraja invaded Sri Lanka in 993 CE. The Thiruvalangadu copper-plate inscriptions mention that Rajaraja’s army destroyed Anuradhapura,
https://en.wikipedia.org/wiki/Rajaraja_I#Conquest_of_Sri_Lanka

14 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 3

தமிழ் மலர் - 13.05.2019

ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மகால். இவரின் 14-வது பிரசவத்தில் இறந்து போனார். பிரவசம் ஒரு பெண்பிள்ளை. அந்தப் பிள்ளைக்குக் கவுகார பேகம் என்று பெயர் சூட்டினார்கள். 


மும்தாஜ் இறந்த தேதி: 17.06.1631. அப்போது அவருக்கு வயது 38. மிக இளம் வயது. ஷாஜகான் எங்கே போனாலும் அவர் கூடவே மும்தாஜும் போய் வருவார். போர் முனைக்குப் போனாலும் கூடவே செல்வார்.

வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த போதுகூட கணவனை விட்டுப் பிரிந்தது இல்லை. இருவரும் 19 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு 14 பிள்ளைகள் கரு தரித்தனர். அவர்களில் எழுவர் இறந்து போயினர்.

இந்தியாவின் கீழ் மையப் பகுதியில் ஒரு சமவெளி. அதன் பெயர் தக்காணச் சமவெளி. இதன் ஆங்கிலப் பெயர் Deccan Plateau. அங்கே புர்கான்புர் எனும் இடத்தில் போர் நடந்து கொண்டு இருந்தது. போர் முனையில் கணவர் ஷா ஜகானுடன் மும்தாஜ் இருந்தார். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. சரியான மருத்துவ சிகிச்சை இல்லாமல் இறந்து போனார். 




அவருடைய உடல் அங்கே அதே புர்கான்புரில் நல்லடக்கம் செய்யப் பட்டது. அங்கே தப்தி எனும் ஒரு பெரிய ஆறு. இன்னும் ஓடுகிறது. அந்த ஆற்றின் ஓரத்தில் ஜைனாபாத் எனும் ஒரு பூங்கா மும்தாஜுக்காக உருவாக்கப் பட்டது.

மும்தாஜ் இறந்து ஆறு மாதங்கள் கழித்து அவருடைய உடலை ஜைனாபாத்தில் இருந்து தோண்டி எடுத்தார்கள். தங்கத் தேரில் டில்லிக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். மூன்றாவது மகன் ஷா ஷூஜா என்பவர்தான் தாயாரின் உடலைக் கொண்டு வந்தார்.

யமுனை நதிக்கரை ஓரத்தில் மும்தாஜுக்காக ஒரு சின்ன நினைவுக் கட்டடம் கட்டப் பட்டது. அங்கே மும்தாஜின் உடல் தற்காலிகமாகப் புதைக்கப் பட்டது. அதற்குப் பின்னர் தான் தாஜ் மகால் கட்டப்பட்டது. 




மும்தாஜ் இறந்த மறு ஆண்டு 1632-ஆம் ஆண்டில் தாஜ் மகால் கட்டும் பணிகள் தொடங்கின. கட்டி முடிக்க 1653-ஆம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் பிடித்தன.

கட்டுவதற்கு ஆயிரம் யானைகள் பயன்படுத்தப் பட்டன. 22,000 பேர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களில் ஓவியர்கள், சித்திரத் தையல் கலைஞர்கள், சிற்பிகளும் அடங்குவார்கள்.

ராஜஸ்தானில் இருந்து ஒளி ஊடுருவிச் செல்லும் வெண்பளிங்குக் கற்கள்; பஞ்சாப்பில் இருந்து சூரியக் காந்தக் கற்கள்; சீனாவில் இருந்து மணிப் பளிங்குகள்; திபெத்தில் இருந்து பச்சை நீலக் கற்கள்; ஆப்கானிஸ்தானில் இருந்து நிலப் படிகங்கள் (Lapis lazuli); இலங்கையில் இருந்து நீலக்கற்கள்; அராபியாவில் இருந்து கார்னிலியான் கற்கள் (carnelian) கொண்டு வரப் பட்டன.

 

ஆக 28 வகையான நவரத்தினக் கற்கள் தாஜ் மஹால் முழுவதுமான வெண்பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கற்களைக் கொண்டு வந்து சேர்க்க ஐந்து ஆண்டுகள் பிடித்தன.

பாரசீக மொகலாயக் கட்டிடக்கலை மரபுகளில் தாஜ் மஹால் கட்டப்பட்டு உள்ளது. 42 ஏக்கர் நிலப்பரப்பில் 3 கோடி 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அது 1632-ஆம் ஆண்டு கணக்கு.

அண்மையில் 2015-ஆம் ஆண்டில் அதன் மதிப்பு 827 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 344 கோடி மலேசிய ரிங்கிட். ஒவ்வோர் ஆண்டும் 90 இலட்சம் பேர் போய் பார்க்கிறார்கள்.

அங்கே தான், அந்தத் தாஜ் மஹாலில் தான் மும்தாஜின் பூதவுடல் அமைதி படுத்தப் பட்டது. அது ஒரு காலச் சுவடு.

உலக அதிசயங்களில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தாஜ் மஹால் கட்டுவதற்குத் தலைமை வகித்தவர் உஸ்தாஸ் அகமட் லாகூரி. Ustad Ahmad Lahauri. 




தாஜ் மஹாலைக் கட்டிய சிற்பிகளின் விரல்கள் துண்டிக்கப் பட்டதாக ஒரு தகவல் உள்ளது. அது ஒரு வதந்தி. தாஜ் மஹாலில் இருந்து நவரத்தினக் கற்களைத் திருடியவர்களின் விரல்கள் துண்டிக்கப் பட்டன. அதுதான் உண்மை. சரி. 

தாஜ் மகாலைப் பற்றிய ஒரு நீண்ட வரலாற்று ஆவணம் இந்தக் கட்டுரைக்குப் பின்னர் இடம் பெறும். நிறைய ஆய்வுகள் செய்யப்பட்ட ஓர் ஆவணம்.

மும்தாஜ் இறக்கும் போது அவரிடம் பத்து மில்லியன் ரூபாய்கள் இருந்தன. அது அப்போதைக்கு பெரிய காசு. அந்தப் பணத்தில் பாதிப் பணம் மூத்த மகள் ஜகனாராவிற்குக் கொடுக்கப் பட்டது. மீதிப் பணத்தை மற்ற பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள். சரி.

தாஜ் மஹால் என்றாலும் தாஜ் மகால் என்றாலும் இரண்டும் ஒன்றுதான். குழப்பம் வேண்டாமே. 





ஷா ஜகானைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அவருடைய மகன் ஔரங்கசிப்பின் செய்திகள்தான் அதிகமாகவே தெரிகின்றன. அதற்கு முன்னர் ஆக்ரா கோட்டையில் சிறை வைக்கப்பட்ட போது ஷா ஜகான் தன்னுடைய கடைசி  காலத்தை எப்படிக் கழித்தார். அதை முதலில் பார்ப்போம். அங்கே தான் ஒரு பெரிய வேதனையான செய்தியும் வருகிறது.

ஆக்ரா கோட்டையில் ஓர் உயர்ந்த கோபுரம். அதன் பெயர் ஷா புர்ச். (Shah Burj of Agra Fort). அங்கே இருந்து பார்த்தால் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் இயற்கையின் பரிமாணங்கள். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பொன் வடிக்கும் தாஜ் மகால்.

அழகின் ஓவியமாய்க் கதைகள் பேசும் அழகு ஓவியம். அந்த ஷா புர்ச் கோபுரத்திற்கு கீழேதான் ஷா ஜகானின் சிறை அறை இருந்தது. அந்த அறையில் தான் ஷா ஜகான் தன்னுடைய கடைசி எட்டு ஆண்டுகளைக் கழித்தார். 




அங்கு இருந்து அவர் வெளியே போக முடியாது. அறை எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த அறைக்குள் யாரும் போகக் கூடாது. ஷா ஜகானைப் பார்க்கவும் கூடாது. மகள் ஜகனாரா ஒருவர் மட்டும்தான் உள்ளே போக முடியும்.

ஷா ஜகான் மேலே கோபுரத்திற்குப் போகலாம். தாஜ் மகாலைப் பார்த்துவிட்டு திரும்பவும் சிறை அறைக்கே வந்துவிட வேண்டும். வெளியே போவதற்கும் அவருக்கு வழி இல்லை. ஷா ஜகானை அந்த அறையில் சிறை வைக்கும் போது அவருக்கு வயது 66. அவர் இறக்கும் போது வயது 74. ஆக எட்டு ஆண்டுகளுக்கு அங்கே தனிமைச் சிறைவாசம்.

ஷா ஜகான் தன் அறையின் ஜன்னல் இரும்புக் கம்பிகளை இறுக்கப் பிடித்துக் கொள்வார். தாஜ்மகால் தெரியும். ஆசை ஆசையாய்க் கட்டிய தாஜ்மகாலைத் தொட்டுப் பார்க்கக் கைகளை நீட்டுவார். முடியாது.

எட்டாத தூரத்தில் அந்த அழகுப் பேழை. இருந்தாலும் தொலை தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே ஷா ஜகான் அழுவாராம். பௌர்ணமித் தூறலில் பவள முத்துகளாய்க் கண்ணீர்த் துளிகள்.

எட்டு ஆண்டுகள் அப்படி அழுது கொண்டே இருந்து இருக்கிறார். இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னால் அவருக்கு மாரடைப்பு. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தாஜ் மகாலையே வெறித்துப் பார்த்து இருக்கிறார். 




உதவிக்கு யாரும் இல்லை. அவரால் சத்தம் போட்டு யாரையும் கூப்பிடவும் முடியாது. அந்த இரவு ஒரு பிரகாசமான ஒளி. தாஜ் மகாலில் இருந்து அவருடைய சிறை அறைக்குள் ஊடுருவி வந்து இருக்கிறது.

என்ன ஏது என்று தெரியவில்லை. அவருக்கும் என்ன என்று தெரியவில்லையாம். கொஞ்ச நேரத்தில் நெஞ்சுவலி போய் விட்டது. அது மும்தாஜின் ஆத்ம ஒளியாக இருக்கலாம். அதைப் பற்றி தன்னுடைய மகள் ஜகனாராவிடம் சொல்லி இருக்கிறார்.

ஷா ஜகானுக்குப் பல மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என்கிற மூன்றாவது மனைவியை மட்டுமே அதிகமாக நேசித்து இருக்கிறார். கடைசியில் தாஜ் மகாலைப் பார்த்துப் பார்த்து அழுது கொண்டே இறந்தும் போனார். அவருடைய வாழ்க்கையில் விதி எப்படி விளையாடி இருக்கிறது பார்த்தீர்களா.

ஷா ஜகானின் மனைவிமார்களின் சரியான விவரங்களைத் தேடித் தேடிப் பார்த்து நேற்றுதான் சரியான தகவல்கள் கிடைத்தன.

பொதுவாகவே மொகலாய அரசப் பெண்களுக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருக்கும். அந்தப் பெண் சாதாரணப் பெண்ணாக அப்பா அம்மாவுடன் இருக்கும் போது ஒரு பெயர். அது பிறப்புப் பெயர். அவர் ஓர் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டதும் இன்னொரு பெயர். 




அதே அந்த இளவரசர் பேரரசராகத் தகுதி உயரும் போது அந்தப் பெண்ணுக்கும் மற்றொரு பெயர். இப்படி சில சமயங்களில் நான்கு ஐந்து பெயர்கள் வருவதும் உண்டு. அதனால் வரலாற்றைப் படிக்கும் போது நமக்கும் கொஞ்சம் குழப்பமாக இருக்கும்.

ஷா ஜகானின் முழுப் பெயர் அல் அசாட் அப்துல் முஷபர் சஹாபுடின் முகமது குராம். (A'la Azad Abul Muzaffar Shahab ud-Din Mohammad Khurram).

1592 ஜனவரி 5-ஆம் தேதி லாகூரில் பிறந்தவர். இந்த நகரம் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. அவர் இறந்தது 1666 அக்டோபர் 1-ஆம் தேதி. ஆக்ரா கோட்டையில் இறக்கும் போது அவருக்கு வயது 74.

ஷா ஜகான் 30 ஆண்டுகள் 193 நாட்களுக்கு மொகலாயப் பேரரசின் மாமன்னராக மகுடம் சூட்டி அழகு பார்த்தவர்.

ஷா ஜகானும் ஒரு மிதமான சமயவாதி. புதிதாக இந்துக் கோயில்களையும், கிறிஸ்துவத் தேவாலயங்களையும் கட்ட அனுமதிக்கவில்லை. சமய வழிபாட்டு இல்லங்களைச் சீரமைப்பு செய்வது என்றால் வழிபாட்டு வரி விதிக்கப் பட்டது.

 

அவருடைய அனுமதி இல்லாமல் புதிதாகக் கட்டப்பட்ட சமயத் தளங்களைத் தகர்த்து எறியுமாறு கட்டளை போட்டவர் அதே அந்த ஷா ஜகான் தான்.

அவரின் ஆட்சி காலத்தில் நிறைய பூங்காக்களை உருவாக்கி இருக்கிறார். காஷ்மீரில் மட்டும் 999 பூங்காக்கள் உருவாக்கப் பட்டன. அவற்றில் இன்னும் சில பூங்காக்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. காஷ்மீருக்கு இன்றும் அழகு கொடுப்பதே அவர் உருவாக்கிய அந்த அழகுப் பூங்காக்கள் தான்.

ஷா ஜகானின் தந்தையார் பெயர் ஜகாங்கீர். தாயாரின் பெயர் தாஜ் பிபி பில்கிஸ் மக்கானி. (Taj Bibi Bilqis Makani). இவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர். ராஜபுத்திர பரம்பரையைச் சேர்ந்தவர்.

ஷா ஜகானுக்குப் பத்து மனைவிகள் என்று சொல்லி இருக்கிறேன். அவருடைய மனைவியின் பெயர்களைத் தயவு செய்து திருத்திக் கொள்ளவும்.
https://openlibrary.org/
எனும் முகவரியில் இருந்து புதிய தகவல்கள் கிடைத்தன. 

1. கந்தகாரி பேகம்.

2. அக்பர்பாடி மகால்.

3. மும்தாஜ் மகால்.

4. ஹசினா பேகம்.

5. முல்தி பேகம்.

6. குட்சியா பேகம்.

7. பாத்தேபுரி மகால்.

8. சார்ஹிந்தி பேகம்.

9. ஸ்ரீமதி மன்பவாவதி.


இதில் ஒரு பெயர் காணவில்லை. கவனித்தீர்களா. நானும் தேடிப் பார்த்தேன்.  எனக்கும் கிடைக்கவில்லை.

1607-ஆம் ஆண்டு ஷா கானுக்கும் மும்தாஸுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப் பட்டது. அப்போது ஷா ஜகானுக்கு வயது 15. மும்தாஸுக்கு வயது 14. மும்தாஸ், பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தவர். நிச்சயதார்த்தம் செய்யப் பட்டாலும் ஐந்து ஆண்டுகள் வரை திருமணம் நடைபெறவில்லை.

ஷா ஜகானுக்கு 20 வயதாகும் போது தான் மும்தாஸுடன் திருமணமே நடந்தது. மும்தாஸைத் திருமணம் செய்யும் போது ஷா ஜகானுக்கு மும்தாஸ் ஒரு கட்டளை போட்டார்.

‘மற்ற மனைவிமார்களிடம் இருந்து குழந்தைகள் எதுவும் பெற்றுக் கொள்ளக் கூடாது’ என்பதுதான் அந்தக் கட்டளை. அந்தக் கட்டளையை ஷா ஜகான் மீறவே இல்லை.

அதனால்தான் மும்தாஸுக்கு 14 பிள்ளைகள். எல்லாப் பிள்ளைகளையும் ஒரே ஒரு மனைவியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அதுதான் உண்மையிலும் உண்மை. மும்தாஸ் போட்ட கட்டளையினால் தான் மற்ற மனைவிகளிடம் இருந்து அவருக்கு குழந்தைகள் கிடைக்கவில்லை.

மும்தாஸிற்கு 40 வயதாகும் போது கடைசிப் பிரசவத்தில் இறந்து போனார். முப்பது மணி நேரப் பிரசவ வேதனை. தாயாரின் பிரசவ வேதனையைப் பார்த்த மூத்த மகள் ஜகனாரா ரொம்பவுமே மனம் நொறுங்கிப் போனார். அப்போது ஜகனாராவுக்கு வயது 17.

தன் தாயாருக்குத் தெய்வத்தின் கருணை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏழை மக்களுக்குப் பொன்னும் மணிகளையும் அன்பளிப்பு செய்தாராம். வரலாறு சொல்கிறது. மும்தாஸின் இழப்பு மொகலாய சாம்ராஜ்யத்திற்கு ஒரு மாபெரும் இழப்பாகும். 

மும்தாஸ் இறந்த பிறகு மேலும் இரு பெண்களை ஷா ஜகான் திருமணம் செய்து கொண்டார். ஒருவர் அக்பர்பாடி மகால். இன்னொருவர் கந்தகாரி மகால். இன்னும் சிலரைத் திருமணம் செய்து கொண்டாலும் அவை அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற திருமணங்கள் ஆகும். மற்றபடி மும்தாஸிற்குப் பிறகு எவரும் ஷா ஜகானின் மனதில் நிலைத்து நிற்கவில்லை.
 
ஜகனாரா மட்டும்தான் எட்டு ஆண்டுகள் ஷா ஜகானுடன் ஆக்ரா சிறையில் இருந்து இருக்கிறார். தந்தைக்கு வேண்டிய எல்லாப் பணிவிடைகளையும் செய்து இருக்கிறார். ஷா ஜகானின் மற்ற மனைவிகள்  யாருமே ஷா ஜகானைப் போய் பார்க்கவில்லை. பார்க்கக் கூடாது என்று ஔரங்கசிப் கட்டளை போட்டு இருந்தார்.

அதுதான் பாருங்கள். அத்தனை மனைவிகள் இருந்தும் அவர்களில் ஒருவரின் அரவணைப்பு கூட கிடைக்காமல்… பாவம் ஷா ஜகான், கடைசியில்  ஓர் அனாதையாக இறந்து போனார். இதுவும் ஒரு வரலாற்றுக் கொடுமை.

(தொடரும்)

சான்றுகள்

1. Richards, John F. (1993). The Mughal Empire. The New Cambridge History of India. Volume V. Cambridge University Press. ISBN 978-0-521-56603-2.

2. Findly, Ellison Banks (1993). Nur Jahan: Empress of Mughal India. Oxford University Press. ISBN 978-0-19-536060-8.

3. Syad Muhammad Latif, Agra: Historical and descriptive with an account of Akbar and his court and of the modern city of Agra (2003)

4. Soma Mukherjee, Royal Mughal Ladies and Their Contributions (2001)

13 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 2

தமிழ் மலர் - 12.05.2019

ஷா ஜகான் தன் மனைவி மும்தாஜிற்கு ஒரு தாஜ்மகாலை ஏற்கனவே கட்டி விட்டார். அது பளிங்கு வெள்ளை நிறத்திலான ஓர் உலக அதிசயம். தாஜ்மகால் கட்டி முடிக்கப் பட்டதும் ஷா ஜகானின் மனதில் வேறு மாதிரியான ஒரு புது ஐடியா தோன்றியது.



தனக்கும் ஒரு தாஜ் மகால் கட்ட வேண்டும். அதற்குக் கறுப்பு தாஜ் மகால் என்று பெயர் வைக்க  வேண்டும் எனும் திடீர் ஆசை. திடீர் ஐடியா. அதோடு அவர் நிற்கவில்லை. மள மளவென்று செயல்படவும் ஆரம்பித்தார். கறுப்பு தாஜ் மகால் கட்டுவதற்கான நிர்மாணிப்பு வேலைகளும் தொடங்கி விட்டன.

யமுனை நதியில் ஒரு புறம் தாஜ் மகால். அதற்கு எதிர்ப் புறம் கறுப்பு தாஜ் மகால். இரண்டு தாஜ் மகால்களையும் இணைப்பதற்கு ஒரு பாலம். இதுதான் ஷா ஜகானின் திட்டம். கறுப்பு தாஜ் மகாலுக்கு அஸ்திவாரம் போடப்பட்டு பெரும் குழிகள் தோண்டப்பட்டு விட்டன. 




இந்தக் கட்டத்தில்தான் ஔரங்கசிப் தன் தந்தை ஷா ஜகானின் மீது படை எடுத்தார். ஷா ஜகானின் ஆசைப்படி விட்டால் மொகலாய சாம்ராஜ்யம் திவாலாகி விடும் என்பதை ஔரங்கசிப் நன்றாகவே உணர்ந்து இருந்தார்.

ஏற்கனவே கஜானா காலியாகி விட்டது. ஷா ஜகான் தன் மக்களிடம் வரிப் பணம் வசூலித்து ஓரளவிற்கு அவர்களை இரத்தக் கண்ணீர் வடிக்கவும் செய்து விட்டார்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் இன்னும் ஒரு கறுப்பு தாஜ் மகாலா? அப்படி ஒரு பிருமாண்டமானக் கட்டடம் கட்டப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அடுத்து அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்ற வேண்டும். இதுதான் ஔரங்கசிப்பின் திட்டம்.  




ஷா ஜகான் இருந்த ஆக்ரா கோட்டையில் ஔரங்கசிப்பின் முற்றுகை. கோட்டைக்குள் சென்ற நீர் வசதிகளைத் துண்டித்தார். ஷா ஜகான் சமரசப் பேச்சிற்கு இணங்கினார். மூத்த மகள் ஜகனாராவைத் தூது அனுப்பினார். ஔரங்கசிப்பின் மூத்த அக்கா தான் ஜகனாரா.

இடையில் ஔரங்கசிப்பின் சின்ன அக்கா ரோஷனாரா தலையிட்டு ஔரங்கசிப்பைப் பயமுறுத்தி விட்டார். கோபம் அடைந்த ஔரங்கசிப் தன் தந்தை ஷா ஜகானை ஆக்ரா கோட்டையிலேயே சிறை வைத்தார். 




இந்த இடத்தில் ஷா ஜகானின் மனைவி பிள்ளைகளைப் பற்றி சொல்லி விடுகிறேன். ஷாஜஹானுக்கு மொத்தம் பத்து மனைவி மார்கள். அவர்களில் ஏழு பேர்களின் பெயர்கள்.

1. பானு பேகம்.

2. நவாப் பாய் பேகம்.

3. அர்ஜுமான் பானு பேகம் (மும்தாஜ் மகால்).

4. நிசா பேகம்.

5. உதயபுரி மகால்.

6. ஜைனாபாடி மகால்.

7. டவுலாத்தா பாடி மகால்.

இவர்களில், மூன்றாவது மனைவிதான் மும்தாஜ் மஹால் பேகம். மற்ற மனைவிமார்களைவிட மும்தாஜின் மீது மட்டும் ஷா ஜஹானுக்கு விருப்பம் அதிகம். 



ஷா ஜஹான் - மும்தாஜ் மஹால் இணையருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள்.

1. மகள் ஜகனாரா பேகம்.

2. மகன் தாரா ஷீகோ.

3. மகன் ஷா ஷூஜா.

4. மகள் ரோஷனாரா பேகம்.

5. மகன் ஒளரங்கசிப்.

6. மகன் முராட் பக்ஷ்.

7. மகள் கௌஹாரா பேகம்.

பொதுவாகச் சொன்னால் மொகலாய மன்னர்களுக்கும் அப்போதைய இந்திய மன்னர்களுக்கும் பல மனைவிமார்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அரச மரியாதைகள் கிடைத்தன. 




அதே சமயத்தில் அந்த மன்னர்களுக்கு அந்தர்புரத்தில் நூற்றுக் கணக்கான வைப்பாட்டிகள் இருந்தார்கள். அந்த வைப்பாட்டிகளுக்கும் குழந்தைகள் இருந்தன.

ஆனால் வைப்பாட்டிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அரச மரியாதை கிடைக்காது. மன்னர்களின் அதிகாரப் பூர்வமான மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே அரசு உரிமைகளும்  அரசச் செல்வாக்குகளும் கிடைத்தன.

ஔரங்சிப் - மும்தாஜ் மகாலுக்குப் பிறந்த  பிள்ளைகளில் மூத்தவர் ஜகனாரா. அதாவது ஔரங்சிப்பின் மூத்த அக்கா. அவர் தான் சமரசம் செய்ய முயற்சி செய்தவர். அதில் நெருப்பை அள்ளிக் கொட்டியவர் ஔரங்சிப்பின் சின்ன அக்கா ரோஷனாரா.


ஆக்ரா கோட்டையில் ஷா ஜஹான் காவலில் வைக்கப்பட்டதும் அவர் தன் இறுதி நாட்களில் ஓர் அரண்மனைக் கைதியாகவே வாழ்ந்தார்.  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1666-ஆம் ஆண்டில் இறந்து போனார்.

ஷா ஜஹான் இறக்கும் போது ஒளரங்கசீப் ஆக்ராவில் இல்லை. குஜராத் அல்லது மகாராஷ்டிராவில் இருந்து இருக்கலாம். தன் தந்தையின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்பதை அறிந்ததும் உடனே ஒளரங்கசீப் தன் மகன்களை ஆக்ராவுக்கு அனுப்பி வைத்தார்.

ஷா ஜகானுக்கு முறைப்படி சகல மரியாதைகள் செய்யப் பட்டன. அவரின் உடல் சந்தன மரப் பெட்டியில் வைக்கப் பட்டது. ஒரு படகில் ஏற்றப் பட்டு யமுனை நதி வழியாகக் கொண்டு செல்லப் பட்டது. அப்படியே தாஜ்மஹாலை அடைந்தது. 




மனைவி மும்தாஜின் நினைவிடத்திற்குப் பக்கத்திலேயே ஷா ஜஹானின் உடலும் அடக்கம் செய்யப் பட்டது. தாஜ் மகாலுக்குப் போனால் இருவரின் நினைவிடங்களும் பக்கத்து பக்கத்திலேயே இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

சரி. ஷாஜகானை ஒளரங்கசிப் வெறுத்ததற்கு என்ன காரணம். தன் தந்தையின் மீதே ஒளரங்கசிப் படை எடுத்ததற்கு என்ன காரணம். தன் சகோதரர்களை எல்லாம் கொன்று போடுவிட்டு, தான் மட்டும் ஒரு பேரரசராகப் பதவி ஏற்றதற்கு என்ன காரணம். வாழ்க்கை முழுமைக்கும் மன இறுக்கத்துடன் வாழ்ந்ததற்கு என்ன காரணம். இனிமேல் தான் கதையே சூடு பிடிக்கிறது.

மொகலாயர்களின் முதல் பேரரசர் பாபர். அவர் இறந்த பிறகு அவரின் மகன் ஹூமாயூன் அரியாசனம் ஏறினார். எந்தப் பிரச்சினையும் இல்லை. ஹூமாயூன் ஒரு விபத்தில் இறந்து போனார். என்ன விபத்து என்று கேட்கலாம். மாடிப் படிகளில் இருந்து இடறி விழுந்து இறந்து போனார். தலையில் பலமாக அடிபட்டுப் போனது. 




மூன்று நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்து கடைசியில் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 47. இவருடைய வாழ்க்கையிலும் பெரிய பெரிய சோதனைகள். பெரிய பெரிய திருப்பு முனைகள். ரொம்பவும் கஷ்டப் பட்டவர். இவர்களுக்குப் பிறந்தவர்தான் அக்பர். மிகச் சிறிய வயதிலேயே அக்பர் பதவிக்கு வந்தார்.

அக்பருக்குப் பின் அவருடைய மகன் ஜஹாங்கீர் பதவிக்கு வந்தார். பதவிக்கு வந்த பிறகு ஜஹாங்கீருக்கும் அவருடைய மகன் ஷா ஜகானுக்கும் ஒத்துப் போகவில்லை. தனக்குப் பின் ஷா ஜகானை மொகலாயப் பேரரசராக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் ஜஹாங்கீருக்குக் கொஞ்சமும் இல்லை.

அதற்குக் காரணம் ஷா ஜகான் என்பவர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகன். ஆனால் எதிர்காலத்தில் மொகலாயத்தின் ஷா-இன்-ஷா ஆக வேண்டும் என்கிற ஆசை ஷா ஜகானுக்கு இருந்தது.

எப்படியாவது பேரரசராக ஆகிவிட வேண்டும் என்கிற பொல்லாத ஆசை. ஷா-இன்-ஷா என்றால் மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் என்று பொருள்.




ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் மொகலாயப் படைகளின் தளபதியாக இருந்தவர் ஷா ஜகான். அந்த வகையில் அதுவே அவருக்கு நல்ல ஒரு வாய்ப்பாகவும் அமைந்து போனது. மொகலாய ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

மொகலாயப் பேரரசின் கீழ் இருந்த பகுதிகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு வந்தார். செய்தி அறிந்த தந்தை ஜஹாங்கீருக்கு ஷா ஜகான் மீது கடும் கோபம். ஒரு கட்டத்தில் தன் பிருமாண்டமான படைகளை அனுப்பி ஷா ஜகானை அடக்கி ஒடுக்கி வைத்தார். கூடவே ஒரு தகவலையும் அனுப்பியும் வைத்தார்.

'நான் உன்னை இப்போதே கைது செய்து விடலாம். வேண்டாம். நான் அப்படி செய்ய விரும்பவில்லை. இனியாவது ஒழுங்காக இரு. உனக்குப் பதிலாக உன் மகனை என்னிடம் பணயக் கைதியாக அனுப்பி வை. இல்லை என்றால் உனக்கு பயம் வராது. மீண்டும் மீண்டும் தவறுகள் செய்வாய். உன் பிள்ளை என்னிடம் இருக்கும் வரையில் உனக்கு அதிகார ஆசை வராது. பயம் இருக்கும்’ இப்படி ஒரு கட்டளையை ஷா ஜகானுக்கு ஜஹாங்கீர் அனுப்பி வைத்தார்.

அந்த நிபந்தனையை ஷா ஜகான் ஏற்றுக் கொண்டார். சரி. எந்த மகனை அனுப்பி வைப்பது என்று யோசிக்கத் தொடங்கினார் ஷா ஜகான். பிரச்சினை இங்கேதான் ஆரம்பம் ஆனது.




ஷா ஜகானுக்கு அப்போது மொத்தம் பத்து மனைவிமார்கள். சொல்லி இருக்கிறேன். மும்தாஜ் மஹால் பேகம் அவருடைய மூன்றாவது மனைவி. மற்ற மனைவிகளை விட மும்தாஜின் மீது மட்டும் ஷா ஜகானுக்கு ரொம்பவும் மதிப்பு மரியாதை. மும்தாஜுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு குழந்தைகள்.

மறுபடியும் அவர்களுடைய பெயர்களைச் சொல்கிறேன். மூத்த மகள் ஜகனாரா பேகம். அடுத்து மூத்த மகன் தாரா ஷீகோ. மூன்றாவது மகன் ஷா ஷூஜா. நான்காவது மகள் ரோஷனாரா பேகம். ஐந்தாவது மகன் ஒளரங்கசிப். ஆறாவது மகன் முராட் பக்ஷ். கடைசி மகள் கௌஹாரா பேகம்.

இந்தப் பிள்ளைகளில் மூத்த மகன் தாரா மீது ஷா ஜகானுக்கு அளவு கடந்த பாசம். முதல் ஆண் வாரிசு இல்லையா. அதனால் தனக்குப் பின் தாரா தான் மொகலாய அரசை ஆள வேண்டும் என்கிற எண்ணமும் ஷா ஜகானுக்கு இருந்தது.

அதேபோல மூத்த மகள் ஜகனாரா மீதும் ஷா ஜகானுக்குக் கொள்ளை ஆசை. அதற்குக் காரணம் முகத் தோற்றத்தில் தன் தாயார் மும்தாஜைப் போலவே ஜகனாரா இருந்தார்.

இந்தக் கட்டத்தில் ஷா ஜகானுக்கு வேறு மாதிரியாகச் சிந்தனை ஓடியது. ’பணயக் கைதியாக உன் மகனை அனுப்பி வை’ என்று தானே அப்பா சொல்லி இருக்கிறார். மற்றபடி எந்த மகனை என்று அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே. 





முதல் மகன் தாரா எனக்கு மிகவும் முக்கியமானவன். வேண்டும் என்றால் மூன்றாவது மகன் ஒளரங்கசீப்பை அனுப்பி வைக்கலாம். இப்படித் தான் ஷா ஜகான் முடிவு எடுத்தார். இந்த முடிவுதான் பிறகு காலத்தில் அப்பனுக்கும் மகனுக்கும் பெரிய விரிசலையே உண்டாக்கி விட்டது. இதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.

ஒளரங்கசீப்பை அவசரமாக வரச் சொன்னார். ஒளரங்கசீப் ஓடோடி வந்தார். அவரை அணைத்தவாறு 'மகனே ஒளரங்கசீப், நீ கொஞ்ச காலம் உன் தாத்தாவின் அரண்மனையில் இருந்து விட்டு வா. அங்கேயே நீ படிக்கலாம். சுதந்திரமாகப் போகலாம் வரலாம். உனக்கு எந்தக் குறையும் இருக்காது. போய் வா மகனே போய் வா’ என்று அனுப்பி வைத்தார். ஆனால் எதற்காக அனுப்பி வைக்கிறார் எனும் உண்மையை மட்டும் ஒளரங்கசீப்பிடம் சொல்லவில்லை.

என்னதான் அப்பனுக்கும் மகனுக்கும் சண்டையாக இருந்தாலும் தாத்தாமார்கள் பேரப் பிள்ளைகளை ஒதுக்கி வைக்க மாட்டார்கள். பழி வாங்க மாட்டார்கள். இது உலகம் அறிந்த உண்மை.  எல்லோருக்கும் தெரிந்த உண்மையுங்கூட.

அந்த வகையில் ஜஹாங்கீர் தன் பேரனை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தன் அரண்மனையைச் சுற்றிக் காட்டினார். விளையாடுவதற்குப் பத்து செவிலியர்களை நியமித்தார். மொகலாய சாம்ராஜ்யத்தின் வாரிசு என்றால் சும்மாவா. அப்போது ஒளரங்கசீப்பிற்கு எட்டு வயது.  

இருந்தாலும் ஷா ஜகானுக்கு கூடவே இன்னும் ஒரு செய்தியைத் தந்தையார் ஜஹாங்கீர் அனுப்பி வைத்தார். 'என்னை ஏமாற்ற நினைக்க வேண்டாம். உன்னுடைய மூத்த மகன் தாராவைத் தான் அனுப்பச் சொன்னேன். இவனை அல்ல. பரவாயில்லை. இவனை எனக்குப் பிடித்துப் போய் விட்டது. ஆக அவனையும் உடனடியாக அனுப்பி வை. அப்போதுதான் உன்னை மன்னிக்க முடியும்' என்கிற செய்தி.

ஷாஜகானுக்கு வேறு வழி இல்லை. தன் செல்ல மகன் தாராவை ஜஹாங்கீரிடம் அனுப்பி வைத்தார். இருவரும் தங்கள் தாத்தாவின் அரண்மனையிலேயே வளர்ந்தனர். படித்தனர். 




ஓராண்டு கழித்து 1627-ஆம் ஆண்டில் ஜஹாங்கீர் இறந்து போனார். தாராவும் ஒளரங்கசீப்பும் தங்கள் பெற்றோர்களிடம் திரும்பி வந்து சேர்ந்தார்கள். இந்தச் சமயத்தில் தான் ஒளரங்கசீப் ஒரு முடிவு எடுத்தார்.

'என் தந்தை ஷா ஜகான் என்னிடம் ரொம்பவும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். என்னை விட அவருக்கு அவருடைய மூத்த மகன் தாராதான் முக்கியமானவனாகத் தெரிகின்றான். நான் இனி என் தந்தையின் மீது பாசம் வைக்கப் போவது இல்லை' என்று ஒளரங்கசீப் முடிவு எடுத்தார்.

தன் தாத்தாவிடம் இருந்து திரும்பி வந்த பிறகும் ஒளரங்கசீப்பின் கோபம் அடங்கவில்லை. வளர்ந்து கொண்டே போனது. ஷாஜகானுக்குப் பிரியமான மகன் என்பதால் அண்ணன் தாராவின் மீதும் வெறுப்புணர்வுகள் தலைகால் தெரியாமல் தெறித்து ஓடின.

(தொடரும்)

சான்றுகள்

1. Taj Mahal: Legends: Black Taj Mahal Myth - https://www.tajmahal.org.uk/legends/black-taj.html

2. White Taj Mahal and Black Taj Mahal Story - https://travel.thecreatology.com/stories/white-taj-mahal-and-black-taj-mahal-story/

3. Black TajMahal: It's Reality, The Story of a Second Taj - http://www.liveindia.com/tajmahal/details.html

4. Hansen, Waldemar (1986) [1972 (Holt, Rinehart, Winston)]. The Peacock Throne: The Drama of Mogul India (Second ed.). Motilal Banarsidass. ISBN 9788120802254.

12 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 1

தமிழ் மலர் - 10.05.2019

இந்தியாவின் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் சந்திரகுப்தர். அவருக்கு முதலமைச்சராக இருந்தவர் சாணக்கியர். அரசியல் இலக்கியமான அர்த்த சாத்திரத்தைப் அர்த்தத்துடன் எழுதிச் சென்றவர். இந்தியாவின் மாக்கியவெல்லி என்று புகழப் படுகிறவர். இவருக்குச் சரி சமமாக இந்தியாவில் வாழ்ந்தவர்கள் இரண்டு பேரைச் சொல்லலாம். 

 


ஒருவர் அக்பரின் பேரன் ஔரங்கசிப். இன்னொருவர் இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திராகாந்தி. இவர்கள் இருவருமே இந்தியாவின் சரித்திரத்தையே திருப்பிப் போட்டவர்கள்.

இந்தப் பக்கம் பார்த்தால் இப்போது மலேசியாவின் பிரதமராக இருக்கும் டாக்டர் மகாதீர் அண்மைய காலச் சாணக்கியர். இந்த மனிதரால்தான் மலேசிய மண்ணுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.


சரி. இந்தக் கட்டுரைத் தொடரில் மொகலாய மன்னர் ஒளரங்கசீப் பற்றி பார்ப்போம். அவர் நல்லவரா கெட்டவரா வல்லவரா வாய்மையான மனிதரா என்பதை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

வரலாறு என்ன சொல்கிறது என்பதை வரலாற்றுப் பார்வையில் பார்க்கப் போகிறோம். சில நெழிவு சுழிவுகள் இருக்கும். பெரிது படுத்தாமல் வரலாற்றுப் பார்வையில் தெரிந்து கொள்வோம்.

இந்திய வரலாற்று ஆசிரியர்கள் ஒளரங்கசீப் என்பவரை இரு வகைகளில் பார்க்கிறார்கள். 




ஒரு சில ஆசிரியர்கள் இப்படிப் பார்க்கிறார்கள். ஒளரங்கசீப் என்பவர் பொல்லாதவர். கெட்டவர். இரக்கக் குணமே இல்லாதவர். வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைத்தவர். இந்தியாவில் இருந்த இந்துக் கோயில்கள் பலவற்றை இடித்துத் தள்ளியவர். வயதான தன் தந்தையைச் சிறையில் போட்டுக் கொடுமைப் படுத்தியவர் என்று சொல்கிறார்கள். அது மட்டும் அல்ல.

மொகலாய சாம்ராஜ்யம் அவரால் தான் அழிந்து போனது. இது எந்த அளவுக்கு உண்மை. அதை ஆராய்ந்து பார்க்கிறது நம்முடைய இந்தக் கட்டுரைத் தொடர்.

ஒரு தீர்ப்பைச் சொல்வதற்கு முன்னால் இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும். ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் மீது குரோதக் கருத்துகளை வலுக் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது. 




ஒளரங்கசீப் என்பவர் ஒரு தீவிரச் சமயவாதி. இல்லை என்று சொல்லவில்லை. இந்துக்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் அவர் ஏன் அப்படி மாறினார்.  அதையும் பார்க்க வேண்டும் இல்லையா. ஔரங்கசிப் என்பவரைச் சுருக்கமாக இப்படி நான்கே வரிகளில் சொல்லலாம்.

அவர் மிகப் பெரிய ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. மிக எளிமையானவர். தன்னுடைய மதத்தின் மீது தீராதப் பற்று கொண்டவர். பிற மதங்களின் கலாச்சாரங்களை மதிக்கத் தெரிந்தவர். முன்பு காலத்தில் இந்துக்களிடையே உடன்கட்டை ஏறுதல் எனும் ஒரு சமூகக் கொடுமை இருந்தது. அதற்கு எதிராக களம் இறங்கிய முதல் சமூகச் சீர்திருத்தவாதி.

ஔரங்கசிப் என்கிற மனிதர் மட்டும் இல்லை என்றால் வெள்ளைத் தாஜ்மகால், கறுப்புத் தாஜ்மகால் என்று இரண்டு தாஜ்மகால்கள் கிடைத்து இருக்கும். ஆகா ஓகோ என்று இன்றைய வரைக்கும் மார் தட்டிக் பெருமை அடித்துக் கொள்ளலாம். 




ஆனால் அந்தக் காலத்திலேயே இந்தியா நொடித்துப் போய் இருக்கும். இந்திய மக்கள் நொந்து நூல் நூலாகிப் போய் இருப்பார்கள். இது என் கணிப்புகள்.

ஒளரங்கசிப் தன் தந்தை ஷா ஜகானையே சிறை வைத்தவர் என்றுதான் வரலாறு சொல்லி வருகிறது. ஆனால் ஒளரங்கசீப்பின் உண்மையான முகமே வேறு! தனக்கு என்று ஒரு தனிச் சித்தாந்தத்தை வகுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தவர். மனுக்குல அடிப்படையில் அவர் ஒரு நல்ல நேர்மையாளர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இளம் வயதில் தந்தை ஷா ஜகானால் பற்பல காரணங்களினால் புறக்கணிக்கப் பட்டவர். அவையே பின்னாளில் தந்தை மகனுக்கு இடையே பெரிய பெரிய பிளவுகளை ஏற்படுத்தி விட்டன.

தன்னுடைய சொந்தச் சகோதரர்களையே கொன்றவர். வென்றவர். அப்படியே டில்லி அரியணையைக் கைப்பற்றியவர். மாபெரும் சக்ரவர்த்தியான ஒளரங்கசிப்பின் வாழ்க்கையில் மலைக்க வைக்கும் திருப்பங்கள். 




இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு ஒளரங்கசிப் மீது இருக்கும் தப்பான எண்ணங்கள் கண்டிப்பாக மாறிப் போகும். இந்தக் கட்டுரைத் தொடர் பத்து பகுதிகளாக வெளிவருகிறது. நல்ல ஒரு வரலாற்று ஆவணம். படியுங்கள். பத்திரப் படுத்தி வையுங்கள்.

தந்தை ஷா ஜகானுக்கு எதிராக ஔரங்கசிப் படை எடுத்து வந்தார். அதற்கும் காரணம் இருக்கிறது. ஷா ஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜிற்கு ஒரு தாஜ்மகாலைக் கட்டினார். அது வெள்ளை நிறம். தனக்கு என்று இன்னொரு கறுப்பு தாஜ் மகால் கட்ட வேண்டும் என்பது ஷா ஜகானின் திடீர் ஆசை.

ஆக திட்டம் போட்டு செயல்பட ஆரம்பித்தார். கட்டட வேலைகளும் ஆரம்பமாகி விட்டன. ஏற்கனவே கஜானா காலியாகி விட்டது. மக்களிடம் வரிப் பணம் வசூலித்து அவர்களை இரத்தக் கண்ணீர் வடிக்கவும் செய்து விட்டார். 




இதில் இன்னும் ஒரு கறுப்பு தாஜ் மகால் கட்டினால் நாட்டின் நிலைமை என்ன ஆகும். கறுப்பு தாஜ் மகால் கட்டப் படுவதைத் தடுத்து நிறுத்தி அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொள்வதே ஔரங்கசிப்பின் திட்டம் ஆகும். 

ஆக்ரா கோட்டை. மொகலாயர்களின் அசைக்க முடியாத ஓர் அரண். கோட்டைக்கு உள்ளே நிறைய கிணறுகள் இருந்தன. எல்லாம் வற்றாத கிணறுகள். இருந்தாலும் எந்தக் கிணற்று நீரையும் நல்லபடியாகக் குடிக்க முடியாது. சுவை எதுவும் இல்லை. சாதாரண மக்கள் வேண்டுமானால் குடிக்கலாம். ஆனால் மாபெரும் பேரரசரால் முடியுமா? முடியாது.

ஆக்ரா கோட்டைக்கு அருகிலேயே யமுனை நதி ஓடுகிறது. அழகான அற்புதமான நதி. ஆக்ரா கோட்டைக்கு உள்ளேயே யமுனை நீர் செல்லும்படியாக ஷா ஜகான் வசதிகளைச் செய்து கொடுத்து இருந்தார்.

அந்த ஒரு வசதிதான் ஒளரங்கசிப்பிற்கும் நல்ல ஒரு வசதியாகவும் அமைந்து விட்டது. அதுவுமே தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னைகளில் முதல் கட்டம்.

அந்த யமுனை நீரை வைத்துக் கொண்டு ஔரங்கசிப், எப்படி தன் தந்தை ஷா ஜகானைச் சிறை வைத்தார். தொடர்ந்து படியுங்கள்.

கோட்டைக்குள் செல்லும் குடிநீர் இணைப்புகள் எல்லாவற்றையும் துண்டித்து விட்டால் ஷா ஜகான் சரண் அடைந்து விடுவார் இல்லையா. வெகு தொலைவில் இருந்து படை எடுத்து வந்து ஆக்ரா கோட்டையைச் சுற்றி வளைத்தாகி விட்டது. ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை.  



பெரிய பெரிய பாதுகாப்பான மதில் சுவர்கள். உள்ளே கோட்டைக்குள் பேரரசர் ஷா ஜகான் இருக்கிறார். வயதான மனிதர். அந்தச் சமயத்தில் அவருடைய உடல்நிலை வேறு சரி இல்லை.

அதனால் என்ன என்று கேட்க வேண்டாம். உள்ளே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். எந்த நேரத்திலும் எதிர்த் தாக்குதல் நடத்த தயாராக இருந்தார்கள்.

ஆக்ரா கோட்டைச் சுவரைக் குண்டுகளால் தாக்கி உள்ளே நுழைவது எல்லாம் நடக்காத காரியம். மாதக் கணக்கில் தாக்கினாலும் கோட்டையைத் தகர்க்க முடியாது. அப்படி பலம் வாய்ந்த கோட்டை. எப்படி இருந்தாலும் ஆக்ரா கோட்டையை ஔரங்கசிப் கைப்பற்றியே ஆக வேண்டும்.

எப்படி என்று யோசித்துப் பார்த்தார். அப்போதுதான் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் எண்ணம் ஒளரங்கசிப்பிற்கு வந்தது.

கடைசியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் பட்டது. மூன்று நாட்கள் ஆயின. கோட்டைக்குள் உள்ளே இருந்த பேரரசர் ஷா ஜகானுக்கு ஒன்றும் முடியவில்லை. ரொம்பவும் கஷ்டமாகிப் போனது.

'பெற்ற அப்பனை இப்படியா கொடுமை செய்வது. தண்ணீர் இல்லாமல் தவிக்க விட்டு இருக்கிறாய். ஒரு மகன் செய்கிற காரியமா.’ வெளியே படைகளுடன் முற்றுகை போட்டு இருக்கும் தன் மகன் ஒளரங்கசிப்பிற்கு இப்படி ஒரு கடிதத்தை ஷா ஜகான் அனுப்பினார்.

'இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை. உங்களுடைய இந்த நிலைக்கு நீங்களே தான் காரணம்' என்று பதில் கடிதத்தை அனுப்பினார் ஒளரங்கசீப்.

இதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த ஷாஜகான் தன் தளபதி பாசில்கானைத் தூது அனுப்பினார்.

பாசில்கான் நல்ல ஒரு தளபதி. நம்பிக்கையானவர். நாணயமானவர். செத்துப் போ என்று ஷா ஜகான் சொன்னால் செத்தே போய் விடுவார். அந்த மாதிரியான மனிதர்.

'பேரரசர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்' என்று ஒளரங்கசிப்பிடம் வந்து பாசில்கான் கூறினார். ஒளரங்கசிப் எதிர்பார்த்த செய்திதான்.

'என் தந்தையின் மேல் நான் வைத்து இருக்கும் அன்பு பாசம் வாஞ்சை என்பதை எல்லாம் வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. நான் அவரைச் சந்திக்க ஆசைப் படுகிறேன்.

ஆனால், அவர் சில விசயங்களை எனக்காகச் செய்தாக வேண்டும். முதலாவதாக எனனுடைய படை வீரர்கள் கோட்டைக்குள் நுழைவதற்கு அனுமதி தர வேண்டும். அதற்குப் பின்னர்தான் நான் அவரைச் சந்திக்கக் கோட்டைக்குள் வருவேன். என்னால் அவருக்கு எந்த ஒரு தீங்கும் வராது. இது உண்மை. இதைப் போய் உங்கள் பேரரசரிடம் சொல்லுங்கள்' என்று ஒளரங்கசிப் பதில் சொன்னார்.

ஒளரங்கசிப்பின் பதிலைக் கேட்ட ஷா ஜகான் திருப்தி அடைந்தார். ஆக்ரா கோட்டையின் கதவுகளைத் திறந்து விட்டார். இது நடந்தது 1658 ஜூன் 8-ஆம் தேதி.

ஒளரங்கசிப்பின் மூத்த மகன் சுல்தான் முகமது. அவர்தான் முதன்முதலாகக் கோட்டைக்குள் நுழைந்தார். தன் தாத்தா ஷா ஜகானிடம் சகல மரியாதையுடன் நடந்து கொண்டார். சரி.

அதுவரையில் எல்லாமே நல்லபடியாகத் தான் நடந்தது. பிரச்சினை எதுவும் இல்லை. அப்பா மகனுக்கும் இடையே இருந்த புகைச்சல் லேசாக அடங்கிப் போனது. இரண்டு நாட்கள் கழித்து ஷா ஜகானின் செல்ல மகள் ஜஹனாராவிடம் இருந்து ஒளரங்கசிப்பிற்கு ஒரு கடிதம் வந்தது.

'மொகலாயப் பேரரசின் பெரும் பகுதியை நீயே எடுத்துக் கொள். நீயே ஆட்சி செய். மொகலாயப் பேரரசின் மன்னராக முடி சூட்டிக் கொள். நம் தந்தைக்கு எந்தவித மறுப்பும் இல்லை.

ஆனால், உன் சகோதரர்களுக்குச் சேர வேண்டிய கொஞ்ச நிலங்களை மட்டும் அவர்களுக்கே கொடுத்துவிடு. இது சம்பந்தமாகத் அப்பா உன்னிடம் நேரடியாகப் பேச விரும்புகிறார். அதுதான் நீ அவருக்குச் செய்யப் போகும் மரியாதை.' இது ஜஹனாராவின் கடிதம்.

ஒளரங்கசிப் தன் சகோதரியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தார். கண்டிப்பாகச் சந்திக்க வருவதாகச் சொல்லி பதிலும் அனுப்பினார்.

ஆக்ரா கோட்டைக்குள் ஒரு பேரணியாகச் சென்று தந்தையாரைச் சந்திக்கலாம் என்று படைகளுடன் கிளம்பினார். அந்த நேரம் பார்த்து ஒளரங்கசிப்பின் இளைய சகோதரி ரோஷனாரா அங்கே வந்தார். ரோஷனாராவின் மீது ஒளரங்கசிப்பிற்குத் தனிப் பிரியம். அவருடைய சொல்லைத் தட்டுவதே இல்லை.

ஜஹனாரா தனக்கு எழுதிய கடிதத்தைக் காண்பித்தார் ஒளரங்கசீப்.

அதற்கு ரோஷனாரா 'எனக்கு எல்லாம் தெரியும். இது சம்பந்தமாக உன்னை எச்சரித்து விட்டுப் போகத்தான் நான் இங்கே வந்தேன். தந்தை உன்னைக் காண பாசத்துடன் காத்து இருக்கிறார் என்று தானே நினைக்கிறாய்? அதுதான் தப்பு.

'நீ தப்புக் கணக்குப் போட்டு விட்டாய். உன்னை கோட்டைக்குள் அழைத்து, பேசுவது போல பேசி நடித்து, அப்படியே உன்னைக் கொலை செய்வதுதான் அவர்களுடைய திட்டம். உனக்கு அந்தக் கடிதத்தை அனுப்பியது ஜஹனரா. உன் மீது கொஞ்சம் கூடப் பாசம் இல்லாதவள். அவளுடைய வார்த்தைகளை நீ எப்படி நம்பினாய்?' ரோஷனாரா தன் பங்கிற்குச் சொல்லி விட்டாள். அப்புறம் என்ன.

ஒளரங்கசீப் மனம் கொதித்துப் போனது. உடனடியாகத் தன் தளபதியை அழைத்தார். ’ஷா ஜகானை இப்போதே கைது செய்யுங்கள். அவர் இனிமேல் யாருடனும் பேசக் கூடாது. என்னுடைய அனுமதி இல்லாமல், யாரும் அவரைப் பார்க்கக் கூடாது.

ஆனால், ஒரு பேரரசருக்கு உரிய மரியாதை எந்தவிதத்திலும் குறையக் கூடாது. அவர் இருக்கின்ற இடத்திலேயே சுதந்திரமாக அப்படியே இருக்கட்டும். வேண்டும் என்றால் அவருடைய முதல் மகள் ஜஹானாராவை தன்னுடன் வைத்துக் கொள்ளட்டும். அதற்கு தடை இல்லை.'

ஒளரங்கசிப்பின் கட்டளை செயல் படுத்தப் பட்டது. மொகலாய சாம்ரஜ்யத்தின் வரலாறும் திருத்தப் பட்டது. ஒளரங்கசீப்பிற்கு, ஷா ஜகான் என்ன என்ன கொடுமைகளைச் செய்தார். ஏன் பெற்ற அப்பனின் மீதே அவ்வளவு கோபம் வந்தது. பெரிய பெரிய அதிர்ச்சியான செய்திகள் வருகின்றன. அவற்றை நாளைய கட்டுரையில் பார்ப்போம். படிக்கத் தவற வேண்டாம்.