21 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 7

தமிழ் மலர் - 16.05.2019

தாஜ் மகால் கட்டப்படும் போது ஷா ஜகானுக்கு மக்களின் நலன்கள் பெரிதாகத் தெரியவில்லை. மக்களின் சுகதுக்கங்கள் பெரிதாகத் தெரியவில்லை. மக்களின் வறுமை சிறுமைகள் பெரிதாகத் தெரியவில்லை. தாஜ் மகால் மட்டுமே பெரிதாகத் தெரிந்தது. 



அவருடைய ஊன் உறக்கம்; மூச்சு காற்று; நாடி நரம்புகள் எல்லாமே தாஜ் மகால் தான். பல இரவுகள் தூக்கம் இல்லாமல் தாஜ் மகாலைச் சுற்றிச் சுற்றி வந்து இருக்கிறார்.

மக்களைக் கவனிக்காமல் தாஜ் மகால் கட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஷா ஜகானின் போக்கு ஒளரங்கசிப்பிற்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மக்களுக்குச் சுமையைத் தரும் அப்படிப்பட்ட ஒரு நினைவுச் சின்னம் தேவைதானா என்றும் நினைத்தார்.

ஆனால் அந்தச் சின்ன வயதில் தன் தகப்பனாரை எதிர்த்துப் பேச முடியவில்லை. எதிர்த்துப் போகவும் முடியவில்லை. ஆத்திரம் மட்டும் வாய்விட்டுப் பேச முடியாத ஆழ்கடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தது.

1632-ஆம் ஆண்டு ஆரம்பித்த தாஜ்மகால் கட்டுமானப் பணிகள் 1648-ஆம் ஆண்டு ஓரளவிற்கு முடிவு பெறும் நிலையில் இருந்தன. மும்தாஜ் மகாலின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் ஷா ஜகான் கண்ணீர் மல்கி கலங்கி நின்றார்.



ஆனால் பொது மக்கள் அப்படி இல்லையே. வறுமையினால் கண்ணீர் விட்டு அழுதார்கள். அதுதான் உண்மை. தாஜ் மகால் கட்டப் படுவதற்காக பற்பல வரிகள் போடப் பட்டன. ஏழை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத வரிச் சுமைகள். 

தாஜ் மகாலுக்காக அப்போது செலவு செய்யப் பட்ட தொகை 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அது குத்துமதிப்பான செலவு. ஆனால் உண்மையான செலவுத் தொகையைக் கணக்குப் போட்டுச் சொல்ல முடியாது என்று பல வரலாற்று அறிஞர்கள் இன்று வரை சொல்லி வருகிறார்கள். இப்போதைய கணக்குப்படி தாஜ் மகாலுக்கான செலவுத் தொகை 800 கோடி ரிங்கிட்.

எளிமைத் தனத்தை விரும்பிய ஒளரங்கசிப்பிற்குத் தாஜ் மகால் பெரிதாகத் தெரியவில்லை. தன் அம்மாவிற்காகக் கட்டப் பட்டாலும் அவ்வளவு பணம் செலவு செய்து அப்படி ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று ஒளரங்கசிப் நினைத்தார். 



மக்களின் பணம் அநியாயமாக விரயமாக்கப் படுகிறதே என்பதுதான் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது. அதுதான் அவருடைய கவலை. பணச் செலவின் வடிவமே பெரிதாகத் தெரிந்தது. மேலும் ஒரு தகவல் அவரை மேலும் வேதனைப் படுத்தியது.

ஷா ஜகானுக்கும் அவருடைய மூத்த மகன் தாரா சுகோவுக்கும் இடையே நடந்த ஓர் உரையாடல். அதைப் பற்றிக் கேள்விப் பட்டதும் ஒளரங்கசிப் ரொம்பவுமே அதிர்ச்சி அடைந்து போனார்.

ஷா ஜகான் தன் மூத்த மகன் தாரா சுகோவிடம் சொல்கிறார். 'உன் அம்மா ஆசைப்பட்ட மாதிரி தாஜ் மகாலைக் கட்டி விட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரையில் அதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். அது போதும். இனிமேல் இந்த ஆக்ராவை விட்டு நான் வேறு எங்கேயும் போக மாட்டேன். போக விருப்பமும் இல்லை. ஆனால் நான் இறந்த பிறகு என்ன செய்யப் போகிறேன். அதுதான் எனக்கு இப்போது ரொம்பவும் கவலையாக இருக்கிறது' என்றார்.

அதற்கு தாரா சுகோ 'கவலை வேண்டாம் அப்பா. உங்களுடைய ஆசை என்ன என்று என்னிடம் சொல்லுங்கள். நான் நிறைவேற்றிக் காட்டுகிறேன். அது என் கடமை' என்றார்.



'உன் அம்மாவுக்காக இந்த வெள்ளை மாளிகையைக் கட்டினேன். இருந்தாலும் என்னுடைய இறப்பிற்குப் பின்னர் உன் அம்மாவுக்கு அருகிலேயே நானும் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. அதற்காக வெள்ளை மாளிகைக்கு அருகிலேயே ஒரு கறுப்பு மாளிகையை உருவாக்க வேண்டும். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். முடியுமா' என்று கேட்டார் ஷா ஜகான்.

அதற்கு தாரா சுகோ 'கண்டிப்பாகச் செய்வேன் அப்பா. உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பது என் கடமை அப்பா. அதுவே என் இலட்சியம் அப்பா' என்று பதில் சொன்னார்.

ஒரு தாஜ் மகால் கட்டியதற்கே இவ்வளவு செலவுகள். இவ்வளவு இழப்புகள். இவ்வளவு வேதனைகள். இதில் இன்னொரு கறுப்பு தாஜ் மகால் கட்டினால் இந்த நாடு என்னவாகும். ஒளரங்கசிப்பிற்குச் சரியான ஆத்திரம்.

மறுபடியும் சொல்கிறேன். ஷா ஜகானின் மூத்த மகன் தாரா சுகோவிற்கும் மூன்றாவது மகன் ஒளரங்கசிப்பிற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். இருவருக்கும் ஒத்து வராது. எப்போதுமே சடக்கு முடக்குத் தகராறுகள்.



தாரா சுகோ இருக்கிறாரே இவர் அவரின் கொள்ளு தாத்தா அக்பரைப் போல ஒரு மிதவாதி. ஆனால் ஒளரங்கசிப் அப்படி அல்ல. இவர் ஒரு தீவிரமான சமயவாதி.

ஒரு கட்டத்தில் ஒளரங்கசிப் அரண்மனைக்கு வெளியே போய் ஒரு பிச்சைக்காரரைப் போல நடமாடத் தொடங்கினார். அப்படியே தெரு ஓரங்களில் படுத்துத் தூங்கினார். அதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அரண்மனையில் ஒரு பெரிய களேபரமே நடந்தது.

1636-ஆம் ஆண்டு. ஒளரங்கசிப் தக்காணத்தின் கவர்னராக நியமிக்கப் பட்டார். அப்போது அவருக்கு வயது 18.

தக்காணம் என்பது தக்காணப் பீடபூமி. இந்தியாவின் மையப் பகுதியில் உள்ளது. தென்பகுதியில் தமிழ் நாடு வரை நீண்டு போகிறது. அது ஒரு தலைகீழ் முக்கோணம். இந்தத் தக்காணத்திற்குக் கவர்னராக நியமிக்கப் படுவதற்கு முன்னால் ஒளரங்கசிப்பிற்கு லேசான மனநோய் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

தன்னை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று ஒளரங்கசிப் பித்துப் பிடித்து அலைந்ததாகவும் சொல்லப் படுகிறது. அது ஒரு வகையில் உண்மையாகத் தான் தெரிகிறது. ஒரு பிச்சைக்காரரைப் போல நடமாடிக் கொண்டு அப்படியே தெரு ஓரங்களில் படுத்துத் தூங்கியதைத் தான் சொல்ல வருகிறேன்.



தாரா என்ன செய்தாலும் அவருடைய செயல்களுக்கு ஷா ஜகான் எவ்வித எதிர்ப்பும் தெரிவிப்பது இல்லை. மாறாக முழுமையான ஆதரவு அளித்து வந்தார். அவையே ஒளரங்கசிப்பின் பார்வையில் சமய விரோதச் செயல்களாகத் தெரிந்தன.

இந்த மாதிரி பற்பல விசயங்கள். ஒளரங்கசிப்பிற்கும் ஷா ஜகானுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கி வந்தன. தாராவுக்கும் ஒளரங்கசிப்பிற்கும் இடையே தீராத பகைமையும் உண்டாக்கி வந்தன.

மூத்த மகன் தாராவின் பேச்சைக் கொண்டு ஒளரங்கசிப்பை ஷா ஜகான் ஒதுக்கி வந்தார். அதுவே நாளடைவில் தந்தை மகன் பாசப் பிணைப்பில் பெரிய ஒரு விரிசலை ஏற்படுத்தியது.

ஒளரங்கசிப் ஒரு பிச்சைக்காரரைப் போல நடமாடிக் கொண்டு இருப்பதைக் கேள்விப்பட்ட ஷா ஜகான் இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்று ஒளரங்கசிப்பைத் தக்காணத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது தக்காணம் வளம் பொருந்திய ஒரு பகுதியாக இல்லை. அங்கே பல்வேறு விதமான பிரச்சனைகள். நிர்வாகம் தெரியாதவர்கள் பேர் போட முடியாது. அந்த மாதிரியான இடம்.



தக்காணம் நிறைய போர்களைப் பார்த்த இடம். ஔரங்கசிப் தக்காணத்தின் கவர்னராக ஆன நான்கு ஆண்டுகளில் அதாவது 1637-ஆம் ஆண்டில் நவாப் பாய் பேகம் எனும் ராஜபுத்திர இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது ஔரங்கசிப்பிற்கு வயது 19.

அதற்கு அடுத்து பாரசீக அரச குடும்பத்தைச் சேர்ந்த தில்ராஸ் பானு பேகம் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்தச் சமயத்தில் ஆக்ராவில் ஷா ஜகானுக்கு மிகவும் வேண்டிய பிள்ளையாகத் தாரா தன்னை வளர்த்துக் கொண்டு வந்தார். எந்த விசயத்திலும் தனக்கு மட்டும் முதல் உரிமை கிடைக்கும்படி பக்காவாகப் பார்த்துக் கொண்டார். வேறு எந்தச் சகோதரரையும் நெருங்க விடவில்லை.

ஔரங்கசிப் பொறுப்பு ஏற்றதும் வருமானமே இல்லாமல் இருந்த தக்காணப் பகுதிகளில் வருமானம் வர ஆரம்பித்தது. ஔரங்கசிப் நன்றாகவே நிர்வாகம் செய்தார்.

இருந்தாலும் தக்காணத்தில் அப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். எப்போது வேண்டும் என்றாலும் எவராவது போருக்குக் கிளம்பி வரலாம். ஒரு தர்மசங்கடமான நிலைமை. தக்காணம் அப்படிப்பட்ட ஓர் இடம். ஆக தன் மன அமைதிக்காக ஒளரங்கசிப் ஆன்மீகத்தை தேர்ந்து எடுத்தார். ஐந்து வேளை தவறாமல் தொழுகை மேற்கொண்டார்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் புனித குர்-ஆன் படிப்பது ஒரு வழக்கமானது. சிறு வயதிலேயே அவருக்கு குர்-ஆன் மீது தனிப் பிரியம் இருந்தது. தன் அழகான கையெழுத்தால் குர்-ஆன் முழுவதையும் எழுதுவது அவருக்கு மிகவும் பிடித்தமான விசயமாகவும் இருந்தது.



ஒளரங்கசிப் என்பவர் ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்; சக்தி வாய்ந்த தளபதியாக இருந்தாலும்; ஆடம்பரம் என்பதை மட்டும் கொஞ்சமும் விரும்பவில்லை.

தன் சமய வழக்கப்படி மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்பினார். சில சமயங்களில் பிச்சைக்காரரைப் போல சுற்றித் திரிந்தார். இருந்தாலும் நிர்வாக விசயத்தில் முறையாகச் செயல் பட்டு வந்தார். அதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை.

1644-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. ஆக்ரா மாளிகையில் இளவரசி ஜஹானாரா மெழுகுவர்த்தி ஏந்திச் சென்று கொண்டு இருந்தார். திடீரென்று மெழுகுவர்த்திக் கலயம் தவறி கீழே விழுந்தது. திடீரென்று ஜஹனாராவின் ஆடை தீப்பற்றிக் கொண்டது. நல்லவேளை. அருகில் இருந்த பணியாளர்கள் ஓடி வந்து தீயை அணைத்து விட்டார்கள். உடலில் சில பல இடங்களில் தீக்காயங்கள். ஆறுவதற்குப் பல மாதங்கள் பிடித்தன.

ஒளரங்கசிப்பிற்கு இந்த விசயம் மெதுவாகத் தான் தெரிய வந்தது. கேள்விப் பட்டதும் உடனே ஆக்ராவுக்கு கிளம்பி வந்தார். அக்கா ஜஹனாராவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது தன் தந்தை ஷா ஜகானையும் சந்தித்தார். தக்காணப் பகுதியின் நிலவரங்களை எல்லாம் விரிவாகச் சொன்னார். இருந்தாலும் ஷா ஜகான் முகம் கொடுத்துப் பேசவில்லை.



'அப்பா உங்களுக்கு என்ன ஆனது' என்று ஒளரங்கசிப் கேட்டார். 'என்ன ஆனதா. உன் அக்காவுக்கு இப்படி ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. நடந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் படாமல் சர்வ சாதாரணமாக உன் அக்காவைப் பார்க்க வந்து இருக்கிறாய். நீ எல்லாம் ஒரு தம்பியா’ என்று முறைப்புடன் கேட்டார்.

அதற்கு ஒளரங்கசிப் பதில் எதுவும் சொல்லவில்லை. என்ன சொன்னாலும் எடுபடாது என்பது ஒளரங்கசிப்பிற்குத் தெரிந்த விசயம். மௌனமாக அங்கு இருந்து கிளம்பினார். அந்த நேரத்தில் ஒளரங்கசிப்பின் அண்ணன் தாரா வந்தார். தந்தையார் ஷா ஜகானிடம் பணி தொடர்பாகப் பேச வந்தார்.

'அப்பா நீங்கள் ஒளரங்கசிப்பை நம்பி தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பைக் கொடுத்து இருக்கிறீர்கள். ஆனால் அவனோ அங்கே ஒரு பிச்சைக்காரன் போல அலைந்து திரிகிறானாம். அவனுக்கு கவர்னர் பதவி பிடிக்கவில்லையாம். சமயத் துறவியாக மாறப் போகிறானாம். அவனுடைய நண்பர்கள் என்னிடம் வந்து சொன்னார்கள். அவன் இப்படி பொறுப்பு இல்லாமல் இருந்தால் எப்படிப்பா நம்முடைய நாட்டைக் காப்பாற்ற முடியும். சொல்லுங்கள்' என்று சொல்லி சூடம் கொளுத்தி சாம்பராணி போட்டான்.

அவ்வளவுதான். ஷா ஜகானுக்கு ஆத்திரம் தலைக்கு மேலே தாண்டவம் ஆடியது. உடனே ஒளரங்கசிப்பைக் கவர்னர் பதவியில் இருந்து நீக்கினார். விசயம் அறிந்த ஒளரங்கசிப் மிகவும் வருந்தினார். அவருடைய மனநிலை ரொம்பவும் பாதிக்கப்பட்டது. இன்னும் ஒரு நிகழ்ச்சி. 



மூத்த மகன் தாரா ஒரு புதிய மாளிகை கட்டிக் கொள்ள ஆசைப் பட்டார். அதற்கு ஷா ஜகான் நிறைய பணம் கொடுத்தார். தாராவும் தன் விருப்பப்படி அழகான மாளிகை ஒன்றைக் கட்டிக் கொண்டார். அதைக் காட்ட தன் தந்தையார், தன் சகோதர சகோதரிகள் எல்லாரையும் அழைத்தார். வந்தவர்கள் ஒவ்வோர் அறையாகப் பார்த்து ரசித்து வந்தார்கள்.

ஓர் அறையில் முழுக்க முழுக்க பெரிய நிலைக் கண்ணாடிகள். அந்த அறைக்குள் எல்லோரையும் தாரா அழைத்தார். எல்லோரும் சென்று கண்ணாடி பிம்பங்களைப் பார்த்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒளரங்கசிப் மட்டும் அறையின் வாசலிலேயே உட்கார்ந்து விட்டார். உள்ளே போகவில்லை.

இது தாராவுக்குக் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. 'ஒளரங்கசிப்பைப் பார்த்தீர்களா. என்னையும் உங்களையும் அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவே வாசலிலேயே உட்கார்ந்து இருக்கிறான் என்று தந்தையிடம் புகார் செய்தான். அதைப் பார்த்த ஷா ஜகானுக்கும் கோபம்தான்.

ஒளரங்கசிப் அந்தக் கண்ணாடி அறைக்குள் நுழையாமல் ஏன் வெளியே உட்கார்ந்து விட்டார் என்பதில் ஒரு பெரிய ‘கிளைமக்ஸ்’ இருக்கிறது. அப்படியே ஒளரங்கசிப் அந்த அறைக்குள் நுழைந்து இருந்தால் மொகலாய வரலாறு வேறு மாதிரியாக எழுதப்பட்டு இருக்கலாம். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

20 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 6

தமிழ் மலர் - 20.05.2019

தாஜ் மகாலைப் பற்றிய சில முக்கிய தகவல்கள். மும்தாஸ் மகால் இறந்த அதே 1631-ஆம் ஆண்டில் தாஜ்மகாலின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. பிரதானக் கட்டடம் 1648-ஆம் ஆண்டில் அதாவது 17 வருடங்களுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது. 



கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்களைத் தங்க வைப்பதற்குத் தாஜ் மகாலுக்கு அருகில் ஒரு நகரம் உருவாக்கப் பட்டது. அதன் பெயர் மும்தாஜபாத். அந்த நகரத்தில் 22 ஆயிரம் வேலையாட்கள் தங்கி இருந்தார்கள். அனைவருமே தாஜ் மகால் கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள்.

பிரதானக் கட்டடத்திற்கு அருகாமையில் இருந்த மற்ற மற்றக் கட்டடங்கள், பூங்காக்கள் போன்றவை 1654-ஆம் ஆண்டு வாக்கில் முடிக்கப் பட்டன.

தாஜ் மகால் கட்டி முடிக்கும் சமயத்தில் அதைப் பார்த்து ஷா ஜகான் இப்படிச் சொன்னாராம். "யார் என்ன குற்றம் செய்து இருந்தாலும் இந்த மாளிகைக்குள் தஞ்சம் அடைந்தால் அவர் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறுவார். அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். சூரியனும் சந்திரனும் கண்ணீர் வடிப்பார்கள். நம்மைப் படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இந்தக் கட்டடம் கட்டப் பட்டு உள்ளது" என்று சொன்னாராம். 



தாஜ் மகால் என்கிற உலக அதிசயம் பாரசீகக் கட்டடக் கலை மரபுகளையும் மொகலாயக் கலை மரபுகளையும் கொண்டது.

ஷா ஜகானுக்கு முன்னால் ஆட்சி செய்த ஜகாங்கீர், அக்பர், ஹுமாயூன், பாபர் போன்ற மாபெரும் மன்னர்கள் கட்டிய கட்டடங்கள் அனைத்துமே பெரும்பாலும் சிவப்பு நிற மணல் கற்களால் கட்டப் பட்டவை.

ஆனால் ஷா ஜகான் மட்டுமே வெண்ணிறப் பளிங்குச் சலவைக் கற்களைப் பயன்படுத்தி தாஜ் மகாலை உருவாக்கி இருக்கிறார்.

தாஜ் மகாலுக்குப் போகிறவர்கள் பிரதானக் கூடத்தில் ஷா ஜகான் சமாதியையும் மும்தாஜ் மகாலின் சமாதியையும் பார்க்கலாம். கை எடுத்துக் கும்பிட்டு விட்டு வரலாம்.

ஆனால் உண்மையில் அவை அவர்களுடைய உண்மையான சமாதிகள் அல்ல. அவை மாற்று அடக்கச் சமாதிகள். அவர்கள் உண்மையாக அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகக் கீழே உள்ள கீழ்த் தளத்தில்தான் இருக்கிறது. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்

 .

அங்கே போவதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டார்கள். கடைசியாகப் போய்ப் பார்த்தவர்கள் நேஷனல் ஜியாகிராபிக் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள். 2013-ஆம் ஆண்டு அவர்கள் பல ஆய்வுகள் செய்து, காணொலிப் படங்கள் எடுத்து உலகத்திற்கே அந்த உண்மையை அறிவித்தார்கள்.

ஆக்ரா நகருக்குத் தெற்கே யமுனா ஆற்று ஓரத்தில் தாஜ்மகாலைக் கட்டுவதற்குத் திட்டம் போட்டார்கள். இப்போது தாஜ்மகால் கட்டப்பட்ட நிலம் இருக்கிறதே அது மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான நிலமாகும்.

ஜெய் சிங்கின் நிலத்தைப் பெறுவதற்காக அவருக்கு ஆக்ரா நகரில் ஒரு பெரிய அரண்மனை வழங்கப் பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அரண்மனை வழங்கப்படவில்லை. நான்கு மாளிகைகள் வழங்கப் பட்டன. மகாராஜா ஜெய் சிங் என்பவர் ராஜா மான் சிங் என்பவரின் பேரன் ஆகும். ஒரு வகையில் ஷா ஜகானுக்குச் சொந்தக்காரர்.



ஜெய் சிங்கிடம் இருந்து புதிதாகக் கிடைத்த நிலம் மூன்று ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டது.

இன்னும் ஒரு சர்ச்சைக்குரிய தகவல். மகாராஜா ஜெய் சிங்கின் நிலத்தில் ஏற்கனவே ஒரு சிவன் கோயில் இருந்தததாக ஒரு சர்ச்சை. அதாவது அந்தச் சிவன் கோயிலை உடைத்துவிட்டுத் தான் தாஜ் மகாலைக் கட்டினார்கள் எனும் சர்ச்சை. இருபது ஆண்டு காலமாக அந்தச் சர்ச்சை நீதிமன்ற வாசல் படிகளை மிதித்து வழக்காடிக் கொண்டு இருந்தது. அதைப் பற்றி ஒரு சின்ன விளக்கம்.

*தெஜோ மகால்* என்று அழைக்கப்பட்ட சிவன் கோவில் தான் தாஜ் மகால் என்றும்; அதன் மீதுதான் ஷா ஜகான் கல்லறை எழுப்பினார் என்றும்; தாஜ்மகாலில் உள்ள அறைகள், சிற்பங்கள் அனைத்தும் இந்து நினைவுச் சின்னங்கள் என்பதை நிரூபிக்கிற வகையில் உள்ளன என்றும்; 2001-ஆம் ஆண்டில் பி.என். ஓக் எனும் வரலாற்று ஆசிரியர் வழக்கு தொடுத்தார்.

அதைப் பற்றி 1989-ஆம் ஆண்டு தாஜ் மகால்: உண்மைக் கதை (Taj Mahal: The True Story) எனும் ஓர் ஆய்வு நூலையும் பி.என். ஓக் எழுதினார். தாஜ் மகால் இருந்த இடத்தில் ஏற்கனவே ஒரு சிவன் கோயில் இருந்ததாகப் பொது மேடைகளில் வாதிட்டார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இருந்தாலும் பி.என். ஓக் அவர்களின் மனுவை 2000-ஆம் ஆண்டில் இந்திய உச்ச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவருடைய மனுவை தலையணியில் ஒரு தேனீ (a bee in his bonnet) என்று வர்ணித்தது.

1196-ஆம் ஆண்டு டில்லியை ஆட்சி செய்த இந்து மன்னரான பர்மார் டேவ் என்பவர் தான் தாஜ் மகாலைக் கட்டினார் என்று அமார் நாத் மிஸ்ரா எனும் மற்றொரு சமூகவியலாளரும் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2005-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.



தாஜ் மகால் ஓர் இந்து ஆலயம் என 2017-ஆம் ஆண்டு வரை நிறைய வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் தொடரப் பட்டன. அதுவே ஒரு பெரிய பிரச்சினையாக ஓடிக் கொண்டு இருந்தது.

வேறு வழி இல்லாமல் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுக் கழகம் (Archaeological Survey of India (ASI) களம் இறங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டது. பல்வேறான புவியியல் ஆய்வுகள் செய்தது.

கடைசியில் அதே 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த ஆய்வுக் கழகம்  ஒரு முடிவறிக்கையை வெளியிட்டது. தாஜ் மகால் கட்டப்பட்ட இடத்தில் எந்த ஓர் இந்து ஆலயமும் இல்லை என்று ஒரு முடிவான அறிக்கையை வெளியிட்டது.

தாஜ் மகால் கட்டப்பட்ட இடம் மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இடம். யமுனா நதிக் கரையில் இருந்த அந்த இடம் ஷா ஜகானுக்குத் தேவைப் பட்டது. 



அந்த இடத்திற்குப் பதிலாக ஆக்ரா நகரத்தின் மையத்தில் மகாராஜா ஜெய் சிங்கிற்கு நான்கு மாளிகைகளை ஷா ஜகான் வழங்கி இருக்கிறார். நிலத்திற்குப் பதிலாக நான்கு மாளிகைகள். 1632-ஆம் ஆண்டு நடந்த ஓர் உடன்படிக்கை.

அந்த உடன்படிக்கை கையெழுத்தான போது அங்கே ஒரு சிவன் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இது வரையிலும் கிடைக்கவில்லை.

சான்று: https://www.hindustantimes.com/india-news/is-the-taj-mahal-a-mausoleum-or-a-shiva-temple-cic-tells-government-to-clarify/story-bYyd6mFUmFbrIjOJnbP9CI.html

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலுக்கு அடித்தளம் (Foundation) எப்படிப் போட்டு இருக்கிறார்கள். அதுவும் ஒரு பெரிய அதிசயம். தெரிந்து கொள்ளுங்கள். யமுனா ஆற்றுக் கரைப் பகுதிகளில் ஆங்காங்கே பெரிய பெரிய அகழிகள் தோண்டப் பட்டன.

அந்த அகழிகளில் நீர் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் ஆழத்திற்கு தேக்கு, கருங்காலி மரங்களை அடித்து இறக்கி இருக்கிறார்கள். அதன் பின்னர் இரும்புக் கட்டிகள்; கரிசல் கற்களைக் கொட்டி நிரப்பி இருக்கிறார்கள். தேக்கு மரங்கள் அசாம், வங்காள தேசக் காடுகளில் இருந்து கொண்டு வரப் பட்டவை.



ஏன் ஆற்றங்கரையில் அப்படி வலுவான அடித்தளங்களை அமைத்தார்கள்? யமுனா ஆற்றங்கரை மணல் நிறைந்த பகுதி. ஆற்றுப் படுகை பலமாக இருந்தால் தான் அருகில் இருக்கும் பிரதான தாஜ்மகால் கட்டடம் ஆட்டம் காணாமல் நிலைத்து நிற்கும்.

பின்னர் அகழிகளின் மண் நன்றாக இறுக்கம் அடையச் செய்யப் பட்டது. அதன் பின்னர் இருபது அடி உயரத்திற்கு கரிசல் மண் அதன் மீது கொட்டப்பட்டது. அதன் மீது உடனடியாக மரங்கள் நடப்பட்டன.

மரங்கள் இருந்தால் ஆற்றுப் படுகை பலமாக இருக்கும். அருகில் இருக்கும் பிரதான தாஜ் மகால் கட்டடமும் வலுவுடன் இருக்கும். எப்பேர்ப்பட்ட பொறியியல் நுணுக்கம். 

அதன் பின்னர் தாஜ் மகால் பிரதானக் கட்டடத்தின் அடிப் பாகத்தில் 50 மீட்டர் ஆழத்திற்கு கிணறுகள் தோண்டப் பட்டன. (50 மீட்டர்). அந்தக் கிணறுகளில் ஆற்றுக் கற்களையும், சிறு சிறு பாறைகளையும், கருங்கற்களையும், மரத் தைலங்களையும் சேர்த்து நிரப்பி இருக்கிறார்கள். 



அதுதான் தாஜ் மகாலின் அசல் அஸ்திவாரம். அசல் அடித்தளம். சிமெண்டு சுண்ணாம்புக் கலவைகள் சேர்க்காத அஸ்திவாரம். அடித்தளங்கள் அமைக்க மட்டும் ஓர் ஆண்டு காலம் பிடித்து இருக்கிறது.

அதனால் தான் தாஜ் மகால் இன்றைக்கும் ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஆகராவில் இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இருந்தாலும் தாஜ் மகாலுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட பலமான அஸ்திவாரத்தைப் போட்டு இருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இந்தியாவில் கட்டடங்களைக் கட்டுவதற்கு காட்டு மூங்கில்  சாரங்களைப் பயன்படுத்தினார்கள். இந்தக் காட்டு மூங்கில்கள் காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்டன.

ஆனால் தாஜ் மகாலைக் கட்டுவதற்கு மூங்கில் சாரங்களைப் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாகப் செங்கற்களால் ஆன தற்காலிக மேடை அமைப்புக்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

அதாவது தாஜ் மகால் கட்டடத்தைச் சுற்றிலும் செங்கற்களை 150 மீட்டர் உயரத்திற்கு அடுக்கி மேலே கொண்டு போய் இருக்கிறார்கள். அதன் மேல் பக்கவாட்டுச் சாரங்களை அமைத்து அந்தச் சாரங்களின் மேல் ஏறி வேலை செய்து இருக்கிறார்கள்.

தாஜ் மகால் கட்டி முடித்த பிறகு அதற்குப் பயன்படுத்தப் பட்ட செங்கல் சாரங்களை அகற்றுவதில் பிரச்சினை. அந்தச் சாரங்களை எல்லாம் அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும் என்று கட்டிடக் கலைஞர்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள். சரி. அந்தச் சாரங்களை எளிதாக அகற்றுவதற்கு வழி இருக்குமா என்றும் யோசித்துப் பார்த்தார்கள்.

ஓர் ஐடியா கிடைத்தது. கட்டடம் கட்டி முடிந்ததும் யார் வேண்டும் என்றாலும் சாரக் கற்களை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் கற்களை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என தண்டோரா போட்டார்கள். அவ்வளவுதான். ஒரே இரவில் அத்தனைச் செங்கற்களும் மாயமாய் மறைந்து விட்டன. 



இரண்டே நாட்களில் தாஜ் மகால் தனியாக நின்று புன்னகை செய்தது. பாருங்கள். சாரக் கற்களை அகற்ற வேண்டிய ஒரு வேலை பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால்  ஒரே நாளில் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டார்கள்.

அதற்கு எல்லாம் காரணம் சாதுயர்யமான புத்திகள். சாணக்கியமான ஐடியாக்கள். அந்தச் சாதுயர்யமான புத்திகளில் நல்ல நல்ல திறமைகளும் தேவை. நேரம் காலம் அறிந்த நுண்புலமையும் தேவை.. இந்த மாதிரி எல்லாம் யோசிப்பவர்கள் அப்போதும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.

சரி. தாஜ் மகாலின் உயரம் 171 மீட்டர். அதாவது 561 அடி. கிட்டத்தட்ட கால் கிலோ மீட்டர் உயரம். அந்த உயரத்திற்குப் பளிங்குக் கற்களை எப்படிக் கொண்டு போய் இருப்பார்கள். அதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா. ஒவ்வொரு கல்லும் டன் கணக்கில் எடை கொண்டவை.

அந்தப் பளிங்குக் கற்களைத் தூக்குவதற்குச் சுமை ஓங்கிகளும் இல்லை. சுமை தாங்கிகளும் இல்லை. அந்தக் காலத்தில் சுமைத் தூக்கி இயந்திரங்கள் கண்டிபிடிக்கவில்லை. ஆக என்ன செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.

அதற்காகச் சாய்தளப் பாதையை அமைத்தார்கள். சாய்தளப் பாதை என்றால் சாய்ந்த வாக்கில் பாலம் அமைப்பது. ஆங்கிலத்தில் (Ramp) என்று சொல்வார்கள். உச்சிக்குப் போவதற்கு அந்தப் பாலங்கள் பயன்படுத்தப் பட்டன.

பெரிய பெரிய தேக்கு மரங்களை அசாம், வங்காள தேச காடுகளில் இருந்து வெட்டிக் கொண்டு வந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாய் பாலம் அமைத்து இருக்கிறார்கள்.

தவிர அந்தச் சாய் பாலத்தின் மீது மண்ணையும் ஆற்று மணலையும் சின்னச் சின்னப் பொடிக் கற்களையும் கொண்டு வந்து கொட்டி நிரப்பி இருக்கிறார்கள். தண்ணீரை ஊற்றி நன்றாக இறுகச் செய்த பிறகுதான் அதில் சுமைகளை ஏற்றி இருக்கிறார்கள். ஆகரா நகரத்தின் மேலே அந்தச் சாய் பாலம் சாய்ந்த வாக்கில் போய் இருக்கிறது.

பளிங்குக் கற்களை அவ்வளவு உயரத்திற்கு ஏற்றி மேலே இழுத்துச் செல்ல வேண்டுமே. ஒவ்வொரு பளிங்கு கல்லும் பத்து பதினைந்து டன் எடை கொண்டது ஆயிற்றே. சும்மாவா. அதற்கு என்ன செய்தார்கள் தெரியுமா. எருமை மாடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற இடங்களில் இருந்து கிர் வகை எருமைகளைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். பஞ்சாப்பில் இருந்து சிந்தி, மாஹி எருமைகளைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு எருமையின் சராசரி எடை 600 - 800 கிலோ.

ஒரு பளிங்கு கல்லை இழுத்துச் செல்ல 20 அல்லது 30 எருமை மாடுகள் பயன்படுத்தப் பட்டன. மறுபடியும் சொல்கிறேன். ஒரு பளிங்குக் கல்லின் எடை பத்து பதினைந்து டன்கள்.

ஆக தாஜ் மகாலுக்கு அருகில் ஓர் எருமைப் பண்ணையே வைத்து பராமரித்து இருக்கிறார்கள். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது. அந்தப் பண்ணையில்ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் எருமைகள் வரை இருந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அந்த எருமைகளைக் கவனித்துக் கொள்ள மட்டும் 300 - 400 பேர் வேலை செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

சான்றுகள்

1. Carroll, David (August 1975). Taj Mahal (Hardback). Wonders of Man. Newsweek, US.  ISBN 0-88225-024-8.

2. Balasubramaniam, R (10 July 2009). "New insights on the modular planning of the Taj Mahal" (PDF).

இலங்கை இறுதிப் போரில்

இலங்கை இறுதிப் போரில் பிரபாகரனையும் புலிகளையும் தி.மு.க. காப்பாற்றி இருக்க முடியுமா?

என். ராம் பேட்டி : பி.பி.சி. தமிழ், 10 ஆகஸ்ட் 2018

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் - விடுதலைப் புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?
 
என். ராம்

என். ராம்:  விடுதலைப் புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர். ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் கொலை செய்யப் பட்டதில் இருந்து அவருக்கு விடுதலைப் புலிகள் மீது இருந்த மரியாதை தகர்ந்தது .

ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறி இருந்தார் கருணாநிதி. அவர் முதல்வராக இருந்த போது ஆக்கப் பூர்வமாகவே செயல்பட்டார்.

இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலைப் புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு கருணாநிதி மீதே வசவுகள் விழுந்தன''.
 

இலங்கை விசயத்தைப் பொருத்த வரையில், அவருடன் நான் பலமுறை பேசி இருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப் பூர்வமான அணுகுமுறையைக் கொண்டவர்.

அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவது போல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும்.

தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். வேறு வழி இல்லை என்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலர் பிடிவாதமாவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்தது இல்லை.''

"இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும் போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும் போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அந்த முடிவை எடுக்கவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை".

''ஒருமுறை நான் அவரிடம் பேசும் போது, 'ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது' என ஒருவரின் மேற்கோளைக் காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்துச் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

விடுதலைப் புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம்.

ஒன்று, இந்திய அமைதி காப்புப் படையுடன் விடுதலைப் புலிகள் வெறித் தனமாக போர் நடத்தியது.

இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையைக் கட்டாயமாகப் பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப் பெரிய குற்றம். மேலும் முட்டாள் தனமான தவறு" என்றேன்.

''மூன்றாவதாக, ராஜபக்சவைத் தேர்ந்து எடுத்தது என்றேன்''. எப்படி எனக் கேட்டார்.
ரணில் விக்ரமசிங்க Vs ராஜபக்சே மோதிய அந்த அதிபர் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்து இருக்கும். ஆனால் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலைப் புலிகள். இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப் போனது என்றேன்.''

''அவர்கள் இன்னொரு தவறு செய்தார்கள் அது என்ன தெரியுமா?'' என்று கருணாநிதி என்னிடம் கேட்டார்.

''ஸ்ரீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரி. அவரைக் கைது செய்து கொல்லப் போகிறார்கள் எனக் கேள்விப் பட்டேன். அதைச் செய்யக் கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன்.

ஆனால் சபாரத்தினத்தைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைப் புலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது'' என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப் பட்டார்.

''ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலைப் புலிகள் ஆதரவு நிலை இருந்தது இல்லை. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக் கொள்ளவில்லை.''

''ஈழத் தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்''.

''ஈழத் தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என விடுதலைப் புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.''

''இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்து விட்டார்.''

''அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றி இருக்க முடியாது என்பதே உண்மை. அந்த நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப் பட்டோம். ஆனால் ஆதாரம் இல்லை. இந்த நிலையில், தி.மு.க.வால் மட்டும் காப்பாற்றி இருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது.''

19 மே 2019

முள்ளிவாய்க்கால்... என்ன நடந்தது

மே 16-18-ஆம் நாள்களில் நடந்த உண்மைச் சம்பவம்
 

நேரில் பார்த்த இ.கவிமகன் சொல்கிறார். இறுதிப் போர்க் கட்டத்தில் வன்னியில் வசித்த பத்திரிகையாளர். அவருடைய பதிவை அப்படியே பதிவு செய்கிறேன்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிகளைக்கூட அமைக்க முடியாத நிலையில் மக்கள் அவதிப் பட்டார்கள். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வீதியின் ஒருபுறம் கடற்கரை மணலும் அதன் மறுபுறம் வறண்ட கழியும் கொண்ட நிலப்பரப்பு.

அதனால் பதுங்கு குழிகளை அமைப்பது சிரமமாக இருந்தது. துணிகளால் அல்லது சேலைகளால் மணல் பைகளை நான்கு பக்கமும் அடுக்கி அதற்குள் தங்கினார்கள். 



சில மக்கள் முடிந்த வரை கிடங்குகளைத் தோண்டி அதற்குள் தம்மைப் பாதுகாக்க முனைந்தார்கள். ஆனாலும் ஒழுங்கான பதுங்கு குழிகள் இல்லை. அதனால் அதிகமான உயிர் இழப்புக்கள் நடந்தன.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் காயம் பட்டவர்களுக்கு மருத்துவ வசதி இல்லாமலே இருந்தது.  மண் போட்டால் மண் விழாத அளவுக்கு காயப் பட்டவர்கள் நிறைந்து வழிந்தனர். ஆனாலும் அதைச் சமாளிக்கும் அளவுக்கு மருத்துவ ஊழியர்களோ, வைத்தியர்களோ, மருந்துகளோ இல்லை.

மருத்துவமனையின் அமைதி காணாமல் போய் இருந்தது; மக்களின் அலறல் ஒலி காதைப் பிய்த்துக் கொண்டு இருந்தது. அந்தச் சோகத் தணல் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. 



நூற்றுக் கணக்கான மக்களின் கண்ணீராலும் ரத்தத்தாலும் மருத்துவமனை இயங்கிய இடம் நனைந்து கொண்டு இருந்தது.

எங்கு பார்த்தாலும் இரத்தம் பெருக்கு எடுத்து ஓட, குடல்கள் சரிந்த நிலையில் பெரும் வயிற்றுக் காயங்களும் முகம் சிதைந்த நிலையில் எரிகாயங்களும் என மக்கள் குவிந்து கிடந்தனர்.

யாரும் யாருக்கும் உதவ முடியாத நிலை. ஏனெனில் எல்லோருக்கும் உயிர் பறிபோகும் நிலை! அதனால் காயப் பட்டால்கூட இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த யாரும் இல்லாமல் பலர் இறந்து போனார்கள்.

விழுகிற ஆட்லறி artillery எறிகணைகள் குடும்பம் குடும்பமாக உயிர் எடுத்துக் கொண்டு இருந்தன. 



நந்திக்கழி பகுதியில் (புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியில் நந்திக் கடல் பக்கமாக இருக்கும் பகுதி) மே 14-ஆம் தேதி இரவு மட்டும் நடந்த எறிகணைத் தாக்குதல்களில் பல குடும்பங்கள் ஒரே இடத்தில் பலியாகின.

மே 15-ஆம் நாளன்று, மருத்துவமனை என இயங்கிய இறுதி இடமும் அரசப் படைகளின் தாக்குதல்களால் மூடப் பட்டது.

முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலைக் கட்டடத்தில் இயங்கி வந்த அந்த மருத்துவமனையே, அரசபடைகளின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது. 



மருத்துவமனையை இராணுவம் கைப்பற்றவிருந்த நிலையில், அங்கிருந்து மக்களுக்கான மனித நேயப் பணியாற்றிய மருத்துவர்கள், விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுப் போராளிகள் போன்றவர்கள் உள்பட அனைவரும் வட்டுவாகல் நோக்கி நகர்கின்றனர்.

அதனால் அங்கே மருத்துவமனையைத் தொடர்ந்து இயக்க முடியாமல் போனது.

RBG வகை உந்துகணை மற்றும் 60 MM எறிகணைகள் ஆட்லறி மற்றும் குறுந் தூரவீச்சு கொண்ட எறிகணைகள், மருத்துவமனை வளாகத்துக்குள் அதிகமாக வீழ்ந்து வெடிக்கின்றன. 



சர்வதேச விதிமுறைகளின்படி மருத்துவமனைக் கட்டடங்களின் கூரைகளில் சிகப்பு நிற (+) அடையாளம் இடப்பட்டு இருந்தும், அரசப் படைகள் கண்மூடித்தனமாக மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

அதில் அங்கே அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் இறையொளி கொல்லப் பட்டார். அதன் பின் அந்த மருத்துவமனையும் கைவிடப்பட வேண்டிய நிலைக்கு ஆளானது.

அங்கே பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் போராளிகள், உதவியாளர்கள் மனிதநேயப் பணியாளர்கள் என அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது.

அதனால் “எம்மைக் கைவிட்டுச் செல்லாதீர்கள்.. எங்களைக் காப்பாற்றுங்கள், ஆமி பிடிச்சா எங்களைச் சுட்டுப் போடுவான்...” என கதறி அழுது கொண்டிருந்த காயப் பட்டவர்களைக் கைவிட்டு  வெளியேறினார்கள். 



காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப் பட்டவர்கள் மருத்துவமனைக்கு உள்ளையே மீண்டும் காயப் பட்டார்கள். அதில் பலர் உயிரிழந்தனர். உயிர் தப்பியவர்கள் அரசப் படைகளால் கைது செய்யப் பட்டனர். அவர்கள் கூறியபடி சுட்டுக் கொல்லப் பட்டார்களா இல்லையா என்பது அறியாத நிலை.

வயிற்றில் காயப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றி அரற்றி மருத்துவமனையில் இருந்து வெளியேற முற்பட்டாள்.

அப்போது மருத்துவ உதவியாளன் ஒருவன், அந்தத் தாயை தூக்கிச் செல்ல ஓடி வந்தான். ஆனால், சிங்கள அரசப் படை ஏவிய எறிகணை அவர்களின் அருகில் விழுந்து இருவருமே அந்த இடத்திலேயே சாகடிக்கப் பட்டனர். இவ்வாறு சாவுகள் சாதாரணமாகி அந்த மருத்துவமனைக் கட்டடம் சிதைந்து போனது. 



முள்ளிவாய்க்கால் பகுதி- உண்டியல் சந்தி முதல் வட்டுவாகல் வரையாக கிட்டத்தட்ட 3 ச.கி.மீ. பரப்புக்குள் முடக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களால் திணறுகிறது.

அங்கே சாதாரணமாக ஒரு கைக்குண்டு வெடித்தாலும் பல நூறு உயிர்கள் பிரியும் நிலையில் மக்கள் இருந்தார்கள். அதற்குள் விடுதலைப் புலிப் போராளிகளும் இருந்தார்கள்.  பெரும்பாலும் மக்கள் வாழ்ந்த இடங்களைத் தவிர்த்து அவர்கள் இருந்தாலும் குறுகிய நிலப் பரப்புக்குள் அது சாத்தியமற்று இரு பகுதியினரும் சேர்ந்து வாழ வேண்டிய சூழல் உருவாகி இருந்தது.

அதனால் அரசப் படைகள் புலிகள் மீதான இறுதித் தாக்குதல் அதிகரிக்கப் பட்டுள்ளது என பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டு மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. 



அதுவரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் காயப் பட்டவர்களை திருகோணமலைக்கு கொண்டு செல்வதற்கென வருகை தந்த கப்பல்கூட நின்று போனது. அதற்கும் அரசாங்கம் தடை விதித்திருந்தது.

அதற்கு முந்தைய நாள்களில் கப்பல் வந்து செல்லும் போதுகூட அரசப் படைகளின் பீரங்கிப் பிரிவு கப்பல் தரித்து நின்ற இடத்தைச் சுற்றி கடலில் எறிகணைகளை ஏவினர்.

அதனால் காயப்பட்ட மக்கள் கப்பலுக்குச் சென்றால் இறந்து விடுவோமோ என அஞ்சி கப்பலுக்குப் போக பயம் கொண்டனர். இது ஒரு புறம் இருக்க இப்போது கப்பலை முற்று முழுவதுமாக தடுத்து வைத்தது இலங்கை அரசு.

அதனால் முள்ளிவாய்க்கால் பகுதி முழுவதும் காயப் படுபவர்கள் செத்துக் கொண்டு இருந்தார்கள்.

செத்தவர்களை அடக்கம் செய்யக்கூட முடியவில்லை. உயிரற்ற உடல்கள் அப்படியே கிடந்தன. மனிதநேயப் பணியாற்றிய போராளிகளின் மருத்துவப்பிரிவு மருத்துவர்கள், நிர்வாக சேவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், காவல்துறை போன்ற பிரிவுகள் தொடர்ந்தும் தம்மிடம் இருந்த பொருட்களைப் பயன்படுத்தி மக்களுக்கு மருத்துவம் பார்த்தனர். 



ஆனாலும் காயங்கள் அதிகமானதால் அவர்களால் எதையும் செய்ய முடியாத கையறு நிலைக்குச் சென்றனர்.

இந்த நிலையில், உண்டியல் சந்தி முதல் கடற்கரைப் பக்கமாக உள்நுழைந்து கொண்டிருந்த அரசப் படைகள் நேரடித் துப்பாக்கித் தாக்குதல்களை தீவிரப் படுத்துகிறார்கள். அதனால் மக்கள் வட்டுவாகல் நோக்கி நகர்கிறார்கள்.

இன்னும் சுருங்கிக் கொண்டருந்த குறுகிய பிரதேசத்துக்குள் மக்களின் சாவுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. வான்படை, கடற்படை என்ற வித்தியாசம் இன்றி வட்டுவாகலை நோக்கி போய்க் கொண்டிருந்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களைச் செய்கிறார்கள்.

இந்த நிலையில், 16-ஆம் தேதி மாலை நேரம் விடுதலைப் புலிகளின் காவல் நிலைகள் என்று எதுவும் இருக்கவில்லை. அவர்கள் சண்டைகளைத் தவிர்த்தார்கள். ஓரிரண்டு இடங்களில் இரு பகுதியும் சண்டையிட்டாலும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பெரும்பாலும் நின்று போயிருந்தன. 



ஆனாலும், அரசப் படைகள் தொடர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவதாக அறிவித்தபடி, மக்களையே தாக்கிக் கொண்டிருந்தது. இனி எதுவும் இல்லை என்ற கையறு நிலை ஏற்பட்டுவிட்டது.

அன்று இரவு முல்லைத் தீவை நோக்கி வட்டுவாகல் பாலத்தின் ஊடாக மக்கள் செல்லத் தொடங்குகின்றனர்.

ஆனாலும், இரவு நேரம் என்பதால் பாலத்தைத் தாண்டி உள்ளே செல்லும் போது, மக்களை விடுதலைப் புலிகளாகக் கருதி ராணுவம் தாக்கலாம் என அஞ்சி அங்கேயே விடியும் வரை நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

ஆனால், காத்திருந்த அந்த இடத்திலேயே பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடிய கொத்துக் குண்டு, இரசாயனக் குண்டுகளைப் போட்டு சிங்கள அரசு தாக்கியது.

அங்கு எந்தப் பாதுகாப்பு அரணும் இல்லாமல் வீதியில் இருந்த மக்கள் பல நூறு பேர் கொல்லப் பட்டும் காயப் பட்டும் போனார்கள். ஆனாலும் போக்கிடம் வேறு ஒன்றும் தெரியாமல் மக்கள் மீண்டும் அங்கேயே காத்திருந்தனர். 



காலை 3 மணி முதல் 4 மணிவரை இருக்கும்... காட்டுக்குள் இருந்து திடீர் என்று வெளிவந்த இராணுவம், வீதியில் அமர்ந்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இருப்பது மக்கள் எனத் தெரிந்தும் துப்பாக்கியால் சுட்டதில் முன்வரிசையில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தார்கள்.

அதன் பின் ஒற்றை வரிசையில் வருமாறு சிங்கள மொழியில் கட்டளையிட, துப்பாக்கி சூட்டினால் சிதறி ஓடிய மக்கள் ஒற்றை வரிசையில் வட்டுவாகல் பாலத்தை நோக்கிக் கொண்டு செல்லப் பட்டனர். 

முன்வரிசையில் இறந்தவர்களின் உடல்களைக் காலால் நகர்த்திவிட்டு இறந்தவர்களின் உறவுகளே முன்னோக்கிச் சென்ற கொடுமை, தமிழின வரலாற்றில் நடக்காத ஒன்று. ஆனாலும் அன்று நடந்தது!

அங்கிருந்து முல்லைத் தீவுக்குள் உள்நுழைய அனுமதிக்கப் படவில்லை. அதனால் வட்டுவாகல் பாலத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். அதிகாலை 5 மணி இருக்கும். முல்லைத்தீவு படை முகாமில் இருந்து ஆட்லறி எறிகணைகள் வீசப்பட்டன.

வழக்கத்தைவிட அதிகமாகத் தாக்குதல் நடத்தப் படுகிறது. அதே நேரம் விடுதலைப் புலிகளும் சண்டையிடுவது தெரிகிறது. நந்திக்கடல் பகுதி மற்றும் முள்ளிவாய்க்கால் - புதுக் குடியிருப்பு வீதி போன்றவற்றில் தான் சண்டை நடப்பதற்கான அறிகுறிகளை மக்கள் உணர்ந்து கொள்ள முடிந்தது. 



ஆனாலும் அதற்குள் என்ன நடக்கிறது என்பதை வட்டுவாகலில் இருந்த மக்களால் உணர முடியவில்லை. அந்த வேளையில் திடீர் என்று வட்டுவாகல் பாலத்தை நோக்கி, முள்ளிவாய்க்கால் பக்கத்தில் இருந்து சிங்களப் படைகள் துப்பாக்கியால் சுடுகிறார்கள்.

அதிலும் பல மக்கள் காயப்பட்டு விழுகிறார்கள். அனைவரும் நிலத்தில் அமர்ந்து இருந்ததால் பெரும்பாலான காயங்கள் கழுத்தில் அல்லது தலையிலே ஏற்பட்டன.

சிலருக்கு பெருங் காயங்கள் ஏற்பட்டபோதும் அவர்களை மருத்துவத்துக்காக முன்னால் கொண்டு செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை.

காயப் பட்டவர்களுக்கு கட்டுவதற்கு எதுவுமற்ற நிலையில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தலையில் பலமாகக் காயப்பட்ட 25 வயது மதிக்கக் கூடிய இளைஞன் தன்  தாயின் முன்னே இறந்து போனான்.

அவனைத் தூக்கிக் கொண்டு இராணுவத்திடம் அவனைக் காப்பாற்றும்படி கெஞ்சினார் அந்தத் தாய். ஆனால் இராணுவமோ அதற்கு அனுமதி தரவில்லை.

காலை 8 மணியளவில் திடீரென அரசப் படைகள் மக்களை ஒற்றை வரிசையில் உள்ளே வருமாறு பணித்தார்கள். உள்ளே நுழைந்த மக்கள், மிக நீண்ட வரிசையில் ஒரு வயல் வெளிக்குள் கொண்டு செல்லப் பட்டனர்.

அங்கே கம்பிகளால் சுற்றி அடைக்கப் பட்டிருந்த பெரு வெளிக்குள் அனைவரும் அடைக்கப் பட்டனர். 



கம்பி ஓரங்களில் காவலுக்கு நின்ற இராணுவச் சிப்பாய்கள் வந்து கொண்டிருந்த மக்கள் மீது தடிகளாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் அடித்துத் துன்புறுத்துவது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கம்பிக் கூட்டுக்குள் கொண்டு செல்லப்பட்ட மக்கள் பெரும் துயரத்தை சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

பல நாள்கள் உணவில்லாது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்திருந்த மக்களுக்கு இங்கும் அதே நிலை நீடித்தது. முள்ளிவாய்க்கால் களத்தில் நீரை அருந்தியாவது பசிபோக்கிய மக்கள் இங்கே நீர்கூட இல்லாது தவித்தார்கள்.

உண்மையில் மறக்க முடியாத கொடுமை. நிலத்தில் சிந்திக் கிடந்த கழிவு நீரில் ஒரு புறம் நாய் நீரைக் குடித்துக் கொண்டிருக்க.. சேறாய்க் கிடந்த அந்தத் தண்ணீரைத் துணிபோட்டு வடித்தெடுத்து  எம்மக்கள் அருந்திய கொடுமையும் மே 18-இல் தான் நடந்தது.

குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வாடினார்கள். இராணுவம் உணவுப் பொதிகளை வழங்கினாலும் அதை எல்லோரும் பெறக் கூடியதாகவோ அல்லது தண்ணீரைச் சரியாகக் கொடுக்கவோ இல்லை.

விலங்குகளுக்குத் தூக்கி எறிவதைப் போல அன்று உணவுப் பொதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு அதைப் பிரித்து உண்ணத் தொடங்கிய பலரை, அந்த இடத்திலேயே அடித்துத் துன்புறுத்தி உணவைப் பறித்தெறிந்த கொடுமையும் நடந்தது.

முள்ளிவாய்க்காலில் இருந்து மக்களோடு மக்களாக இராணுவத்திடம் சரண் அடைந்த போராளிகள் பலர், இந்த பிரதேசத்தில் நின்றிருந்தார்கள்.

ஆனாலும் அவர்கள் அந்தப் பிரதேசத்துக்கு உள்ளேயே காணாமல் அடிக்கப் பட்டனர். அவர்கள் இன்று உயிருடன் உள்ளார்களா இல்லையா என்பது தெரியாத நிலையிலும், அவர்களைத் தனித்துவமாக மக்களை விட்டு பிரித்தெடுத்துக் கொண்டு சென்றதை கண்கூடாகக் கண்ட சாட்சிகள் பலர் உள்ளனர்.

பெற்றவர்களால், வாழ்க்கைத் துணைவர்களால் இராணுவத்திடம் கையளித்ததும் இந்த இடத்தில்தான்! ஆனாலும் இதுவரை அவர்களுக்கு என்ன ஆனது என்பது யாரும் அறியாத ஒன்றாகவே இருக்கிறது.

மே 18 -ஆம் முள்ளிவாய்க்காலும் என்று அழியாத இரணமாகி ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் கிடக்கிறது!

18 மே 2019

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2019

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். வீர உணர்வுகளில் வீர காவியமான வீர மறவர்களை நினைத்துப் பார்க்கும் நாள். சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைந்து பார்க்கும் நாள்.

வீர வணக்கத்திற்கு உரிய நாள். தமிழீழத் தமிழர்களின் நினைவு நாள். வீர வணக்கம்.

அந்த நாளில் தமிழ் மக்களுக்காகவும் தமிழீழத் தேசியத்துக்காகவும் பல நூறு தளபதிகளும் பல ஆயிரம் போராளிகளும் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து இருக்கிறார்கள்.  அதற்கும் அப்பால் இனமான அடையாளத்தைக் காப்பாற்ற ஆயிரக் கணக்கான தமிழர்கள் இறுதி வரையில் போராடி இருக்கிறார்கள். 



இருப்பினும் உலகத் தமிழ் மக்களின் வாழ்வியல் கூற்றில் அந்த நாள் கறை படிந்து போனது தான் வேதனையிலும் வேதனை. கொடுமையிலும் கொடுமை.

மே- 18  எனும் அன்றைய பொழுது மட்டும் விடியாதது போல எத்தனையோ தமிழர்கள் இன்றும் சுயநினைவு இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பித்துப் பிடித்து அலைகின்றார்கள்.

ஆகவே அந்த நாளை நினைவுகூர வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமையமாகும்.



தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பாருங்கள். உண்மையில் அந்த நாள் தமிழினத்தின் சாபக்கேடான நாளாக அமைகின்றது. மன்னிக்கவும்.

துடிதுடித்துக் கதறிக் கதறி அழுத அவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறோம். அழுகிறோம். வேறு எதையும் செய்ய முடியவில்லை. கடைசி நேரத்தில் உதவி செய்ய முடியாமல் போனதை நினைத்து நினைத்துக் காலம் பூராவும் கண்ணீர் விடுகிறோம். இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சி காலைவாரி விட்டது ஒரு சாபக் கேடு. அந்தக் கட்சிக்கு தூக்குச் சட்டி தூக்கிய இத்தாலி இட்லி சாம்பாருக்குத் தலைமுறைக் கேடு.

பக்கத்து நாட்டில் வீரவசனம் பேசிய ஒரு கிழட்டு முண்டம் மட்டும் நினைத்து இருந்தால், மனசு வைத்து இருந்தால் தமிழீழத் தமிழர்களைக் காப்பாற்றி இருக்கலாம். 



ஆனால் பல இலட்சம் உயிர்களைப் பணயம் வைத்து தம் மகளின் பதவிக்காக வேட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு பறந்து பறந்து பல்டி அடித்ததையும் இங்கே இப்போது நினைத்துப் பார்க்கிறேன். சாபம் விட வயசு இல்லை. வெட்கம்.

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியக் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட அந்த நாளைத் தானைத் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனை இழந்து தவிக்கின்ற நாள் என்றும் நன்றி உணர்வுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழ் மக்களின் குருதியால் வரலாற்றுப் பக்கங்கள் எழுதப்பட்ட அந்த நாளில் உலகமே கண்ணீர் சிந்தியது. தமிழர்கள் சிந்திய அந்தக் குருதி தமிழீழதில் இரத்த ஆறாய்ப் பெருக்கடுத்து ஓடியது. ஆனால் அதே அந்த நாளை, சிங்களம் வெற்றி நாளாகக் கொண்டாடியது. எஞ்சி இருந்த தமிழர்களின் இரத்தத்தை நக்கித் தீர்த்தது.



முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது உலகம் எங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஆறாத் துயரத்தையும் நீங்காத வடுக்களையும் பதித்து விட்டுச் சென்ற நாள் ஆகும்.

அந்த எழுச்சி நாளில் அந்த வீரத் திலகங்களை நாம் அனைவரும் நெஞ்சில் சுமந்து நினைவுகூர்வோம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் முதல் மரியாதை.

விடுதலை போரில்  வீர மரணம் எய்திய அத்தனைத் தமிழ் மக்களுக்கும் வீர வணக்கங்களை சமர்ப்பிக்கின்றோம்.



*தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்* எனும் விதையை ஒவ்வொரு தமிழனும் தங்களின் உணர்வுகளில் விதைக்க வேண்டும். அந்த உயர்ந்த விடுதலை இலட்சியத்தை உயிர் விதையாக நினைத்துப் பயணிக்க வேண்டும். 

*நாம் வீழ்ந்தது... இதுவே இறுதியாக இருக்கட்டும்!*

*தமிழினம் வாழ்வது. .. இனிமேல் உறுதியாக இருக்கட்டும்!*


வீரத் தமிழ் மக்களுக்குக் கண்ணீர் துளிகளால் வீர வணக்கம் வடிக்கிறேன். *வீர வணக்கம்*

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)