26 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 9

தமிழ் மலர் - 17.06.2019

ஷா ஜகானின் பிள்ளைகளைப் பற்றிய தகவல். இவர்களில் ஆக மூத்தப் பெண் பார்கீஸ். சின்ன வயதிலேயே இறந்து விட்டார்.

1. பார்கீஸ்
2. ஜகனாரா
3. தாரா ஷுகோ
4. ஷா ஷூஜா
5. ரோஷனாரா
6. ஔரங்கசிப்
7. மூராட்
8. கௌகாரா



ஷா ஜகான் தன்னுடைய நான்கு மகன்களுக்கும் மொகலாயப் பேரரசின் நான்கு பகுதிகளில் நான்கு ஆளுநர் பதவிகளைக் கொடுத்து வைத்து இருந்தார். நான்கு பேரும் சிற்றரசர்கள். 



பஞ்சாப் மாநிலத்திற்கு மூத்த மகன் தாரா ஷுகோ; வங்காளம் ஒரிசா மாநிலங்களுக்கு இரண்டாவது மகன் ஷா ஷூஜா; தக்காண பூமிக்கு மூன்றாவது மகன் ஔரங்கசிப்; குஜராத் மாநிலத்திற்கு நான்காவது மகன் மூராட்.

ஒரு கட்டத்தில் ஷா ஜகான் இறந்து விட்டார் எனும் செய்தி நாடு முழுமைக்கும் பரவியது. உண்மையிலேயே அது ஒரு வதந்தி. ஷா ஜகானின் மூத்த மகன் தாரா ஷூகோ தனக்குச் சாதகமாகக் கிளப்பிவிட்ட வதந்தி.

அந்தச் சமயத்தில் ஷா ஜகானின் மூன்றாவது மகன் ஷா ஷூஜா வங்காளத்தில் கவர்னராக இருந்தார். ஷா ஜகான் இறந்து விட்ட செய்தியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வங்காளத்தின் முழு அரசராக அறிவித்துக் கொண்டார்.  



அதோடு வங்காளத்தின் அரசராகவும் முடி சூட்டிக் கொண்டார். அவருடைய பெயரிலேயே புதிய நாணயங்களை வெளியிட்டார். புதிய அரச அறிவிப்புகளையும் செய்தார். ஆக்ராவை விரைவில் கைப்பற்றி மொகலாயத்தின் மாமன்னராகப் போவதாகவும் அறிவிப்புச் செய்தார். 

இருந்தாலும் சில நாட்களில் டில்லியில் இருந்து ஷா ஜகானின் படைகள் வங்காளத்திற்கு இறங்கி வந்தன. ஷா ஜகானின் படைகளுக்குத் தாரா ஷுகோவின் மகன் சுலைமான் ஷுகோவும், ராஜா ஜெய் சிங்கும் தலைமை தாங்கினார்கள்.

1658-ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்த எதிர்த் தாக்குதலில் ஷா ஷூஜாவின் கொட்டம் அடக்கப் பட்டது. ஷா ஷூஜா பீகாருக்குத் தப்பிச் சென்றார். அவரை ஷா ஜகானின் படை விரட்டிச் சென்றது.



ஷா ஜகானின் ஆறாவது மகன் முராட் பட்ச் (வயது 33). இவர் ஒளரங்கசீப்பின் தம்பி. இவரும் சும்மா இல்லை. இவர் பங்கிற்கு இவரும் தன்னைக் குஜராத்தின் அரசராக அறிவித்துக் கொண்டார். யாரையும் கேட்காமல் முடி சூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரில் அவசரம் அவசரமாக நாணயங்களையும் வெளியிட்டார்.

இருந்தாலும் இந்த முராட்டிற்கு எப்போதுமே ஒளரங்கசீப்பின் ஆதரவு இருந்தது. ஒளரங்கசீப்பின் பேச்சை மட்டும் முராட் பட்ச் தட்டுவதே இல்லை. இருந்தாலும் நயவஞ்சகச் சூழ்ச்சியில் சிக்கித் தன் உயிரை அழித்துக் கொண்டார். அது வேறு கதை. சரி.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். குஜராத்தை ஆட்சி செய்த முராட்டும் தக்காணத்தை ஆட்சி செய்த ஔரங்கசிப்பும் இணைந்து தாரா ஷுக்கோவை எதிர்க்க ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஆக இவர்களின் இரு படைகளும் இணைந்துதான் ஷா ஜகானின் படைகளை எதிர்த்தன. வெற்றி பெற்றால் மொகலாய இந்தியாவில் பாதி இந்தியாவை முராட்டிற்குக் கொடுப்பதாக ஔரங்கசிப் வாக்கு கொடுத்து இருந்தார். 




ஒளரங்கசீப் தக்காணத்தில் இருந்து தன் படைகளோடு ஆக்ராவை நோக்கிப் புறப்பட்டார். ஒளரங்கசீப்பின் தம்பி முராட்டும் தன் படைகளை ஒளரங்கசீப்பின் படைகளுடன் இணைத்துக் கொண்டார். வரும் வழியில் மொகலாயர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களின் ஆதரவுகளையும் திரட்டிக் கொண்டார்கள்.

ஷா ஜகானின் படைகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவு ஷா ஷூஜாவை எதிர்த்து வங்காளத்திற்குச் சென்றன. இன்னொரு பிரிவு ஔரங்கசிப்பின் படைகளை எதிர்த்துச் சென்றன. ஆனால் ஔரங்கசிப்பின் படைகள் பலம் வாய்ந்தவை. எதிர்க்க முடியவில்லை.

தர்மாத் எனும் இடத்தில் பயங்கரமான போர். இதற்கு சமுகார் போர் என்று பெயர். ஷா ஜகானின் படை தோற்றுப் போனது. அதற்குக் காரணம் ஷா ஜகானின் பாதி படைகள் வங்காளத்திற்குப் போய் விட்டன. 



அடுத்தக் கட்டம்தான் ஷா ஜகானின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று ஷா ஜகான் கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார். தன் பிள்ளைகளுக்குள் சண்டை வரும். ஆனால் இப்படி மோசமான சண்டை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஷா ஜகானையும் தாராவையும் ஒரு வழி பண்ணி விடுவதே ஒளரங்கசீப்பின் எண்ணம், திட்டம், இலக்கு எல்லாமே. ஒளரங்கசீப்பின் படைகள் ஆக்ராவை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கின்றன.

இந்த நேரத்தில், மூத்த மகன் தாராவைப் பேரரசராகப் பிரகடனம் செய்யப் போவதாக ஷா ஜகான் அறிவித்து விட்டார். அப்போது தாராவுக்கு வயது 43. இது ஒளரங்கசீப்பிற்குப் பெரும் கோபத்தை உண்டு பண்ணியது.

தாரா ஒரு நல்ல மனிதர். ஆனால் நல்ல ஓர் அரசியல் நிர்வாகி அல்ல. சதா மது மாது மயக்கத்திலேயே காலத்தைக் கழித்து வந்தவர். அவரிடம் மொகலாய சாம்ராஜ்யத்தைக் கொடுத்தால் நாசமாகி விடும். அப்படித்தான் ஒளரங்கசீப் நினைத்தார். 



தாரா என்பவர் ஒளரங்கசீப்பிற்கு மூத்த அண்ணன் தான். இருந்தாலும் நல்ல ஓர் ஆளுநராக இருக்கவில்லையே. அங்கே தான் இடித்தது.

இன்னும் ஒரு விசயம். அந்தக் காலத்தில் மொகலாய மன்னர்களில் பலர் மதுப் பழக்கம் கொண்டவர்கள். மது மாது என்று மயக்கத்திலேயே இருந்தவர்கள். நான் சொல்லவில்லை. எழுதி வைத்த ஆவணங்கள் சொல்கின்றன. அதனால் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஒளரங்கசீப் மட்டும் அந்தப் பழக்கங்களுக்கு அப்பால் பட்டவர். சுத்த சமயவாதி. மதுப் பழக்கத்தை அடியோடு வெறுத்தவர். தன்னுடைய அந்தர்புரத்தில் மது அருந்தியவர்களைச் சிரச் சேதமும் செய்து இருக்கிறார். இஸ்லாம் சமயத்தவர்கள் மது அருந்தினால் அவர்களுக்குக் கசையடி கொடுக்கும்படி சட்டம் போட்டு வைத்து இருந்தார்.

ஷா ஜகான் ஆட்சி செய்யும் போது அவருடைய நான்கு மகன்களுக்கும் கவர்னர் பொறுப்பு வழங்கி இருந்தார். அவருடைய நான்கு மகன்களில் அவருக்கு மிகவும் பிடித்த மகன் மூத்தவர் தாரா ஷுகோ. இவருக்கு மட்டும் தனிச் சலுகைகள். தாரா எடுக்கும் முடிவுகளுக்குத் தலையாட்டி பொம்மையாக ஷா ஜகான் இருந்தார். அதனால் மற்ற மூன்று மகன்களுக்கும் எப்போதுமே தாராவின் மீது கோபம். ஒரு வகையான பொறாமை.



ஒரு மொகலாய அரசர் இறந்து விட்டால் அவருக்குப் பின் யார் அரசப் பதவிக்கு வருவது என்பது மொகலாயத்தில் வரையறுக்கப் படாத சாசனம். அதனால் தான் அரசரின் மகன்களுக்குள் மோதல்கள். காழ்ப்புக் கசப்புணர்வுகள். தந்தையாரைப் பதவியில் இருந்து வீழ்த்துவது; சகோதரர்களுக்கு இடையே ஆயுதப் போர்; ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வது போன்ற அவலங்கள் நடைபெற்று உள்ளன. சரி.

ஆக்ராவை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்த ஒளரங்கசீப் படைகளை மகாராஜா ஜஸ்வந்த் சிங் மீண்டும் எதிர்த்து நின்றார். ஜஸ்வந்த் சிங் என்பவர் ராஜஸ்தானின் ஜோத்பூர் சிற்றரசின் மன்னராக இருந்தவர். அந்தக் காலக் கட்டத்தில் ஜோத்பூர் சிற்றரசு மொகலாயர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.   

ஜோத்பூர் நகரம் இப்போது ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். ஜோத்பூரைச் சுற்றி பல அரண்மனைகள், பல கோட்டைகள், பல இந்துக் கோயில்கள் இன்னும் இருக்கின்றன. தார் பாலைவனத்தில் வித்தியாசமான இயற்கைக் காட்சி அமைப்புகளைக் கொண்ட நகரம். 



ராஜஸ்தான் என்று சொன்னதுமே, அதன் கவின் கொஞ்சும் அரண்மனைகளும், சிறப்பு மிக்க ஒட்டகச் சவாரிகளும், காதல் கலந்த வீரக் காவியங்களும், வசீகரிக்கும் பாரம்பரியமும், நெஞ்சை விட்டு அகலாத கலாசாரமும் நம் மனங்களில் சத்தம் போடாமல் சாதகம் பேசி விட்டுச் செல்லும்.

ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் போன்றவை இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள். ஜோத்பூர் நகரத்தில் வெப்பம் அதிகம். அதன் காரணமாக அந்த நகரத்திற்குச் சூரிய நகரம் என்று ஓர் அடைமொழி.

ஜோத்பூரில் உஜ்ஜினி என்கிற ஓர் இடம். அதற்கு அருகே தர்மத்பூர். அங்கே ஜஸ்வந்த் சிங் - ஒளரங்கசீப் போர் தொடங்கியது. பல நாட்கள் நீடித்தது. முடிவில் ஒளரங்கசீப் வென்றார். மகாராஜா ஜஸ்வந்த் சிங்கிற்குத் தோல்வி.

ஒளரங்கசீப்பின் படைகள் முன்னேறிக் கொண்டு இருந்தன. சம்பல் பள்ளத் தாக்குகளில் பயணம் செய்து கொண்டு இருந்த போது ஒளரங்கசீப்பின் அக்கா ஜஹானாராவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ஜஹானாரா இப்படி எழுதி இருந்தார்.



'நம்முடைய தந்தை ஷா ஜகான் குணம் அடைந்து விட்டார். மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார். இந்த நிலையில் நீ ஆக்ராவை நோக்கிப் படைகளுடன் வருவது என்பது நல்லது அல்ல. அது ஒரு துரோகச் செயல். தாராவை எதிர்ப்பதும் சரியன்று. ஆகவே நீ தக்காணத்துக்கு மீண்டும் திரும்பிப் போவதே சிறப்பு. அதுவே நீ அப்பாவுக்குக் செய்யும் மரியாதை எனும் கடிதம்.

கடிதத்தைப் படித்த ஒளரங்கசீப் பதில் கடிதம் எழுதி அனுப்பினார். 'தாராவின் செயல்கள் வரம்பு மீறி விட்டன. என் நிர்வாக அதிகாரத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது. அதைவிட என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றேன்.

அண்ணன் தாரா ஆக்ராவில் இருப்பது நல்லது அல்ல. அவரைப் பஞ்சாப்பிற்கு மாற்றி விடுங்கள். நோய்வாய்ப் பட்டு இருக்கும் என்னுடைய தந்தையை ஒரு மகனாகப் பார்க்க வருகிறேன். அவ்வளவுதான். என் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்காகத் தான் ஆக்ராவிற்கு நான் வருகிறேன் என்கிற பதில் கடிதம்.



ஒளரங்கசீப்பின் இந்தக் கடிதம் ஷா ஜகானைக் கொஞ்சம் தடுமாறச் செய்தது. அதற்கு ஷா ஜகான் பதில் அனுப்பினார். 'ஆக்ராவுக்கு வரும் ஒளரங்கசீப்பைச் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறேன்’.

கடிதத்துடன் 'ஆலம்கீர்' என்று பொறிக்கப் பட்ட அழகிய வாள் ஒன்றையும் ஒளரங்கசீப்பிற்குப் பரிசாக உடன் அனுப்பி வைத்தார். ஆலம்கீர் என்றால் உலகை வென்றவர்.

ஷா ஜகானை வீழ்த்துவதற்கு என்ன என்னவோ நடந்து இருக்கிறது. அவரும் எவ்வளவோ சமாளித்து இருக்கிறார். பாருங்கள். கடைசியில் ஒளரங்கசீப்பிடம் மட்டும் சமாளிக்க முடியாமல் போனதுதான் விதி எழுதி வைத்த சதி.

மீண்டும் சொல்கிறேன். சாமுகர் எனும் சமவெளிப் பகுதியில் ஒளரங்கசீப்பின் படைகளுக்கும் அவரின் அண்ணன் தாராவின் படைகளுக்கும் கடுமையான மோதல்கள். சில மாதங்கள் வரை அந்த மோதல்கள் நீடித்தன. ஒளரங்கசீப்பின் படைகள் திடமாய் வன்மையாய் இருந்தன. ஒளரங்கசீப்பின் படைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத தாரா தப்பி ஓடினார். ஒளரங்கசீப் தன் படையுடன் முன்னேறினார். ஆக்ராவைக் கைப்பற்றினார்.



தாரா தோல்வி அடைந்து தலைமறைவாகிப் போய் விட்டார் என்கிற செய்தி ஷா ஜகானை மிகவும் வேதனை அடையச் செய்தது. இருந்தாலும் தாரா எப்படியாவது படைகளைத் திரட்டிக் கொண்டு வருவான். மீண்டும் ஆக்ராவைக் கைப்பற்றுவான் என்று ஷா ஜகான் பெரிதும் எதிர்பார்த்தார். அந்த நனவும் கனவாகிப் போனது.

இந்தக் கட்டத்தில் ஷா ஜகானுக்கு வேறு மாதிரியாக சிந்தனைகள் ஓடின. தன்னுடைய இன்னொரு மகன் முராட்டுக்கு  ஒரு கடிதம் எழுதினார். அதில் 'நீ உன் படை பலத்தால் ஆக்ராவைக் கைப்பற்று. எப்படியாவது ஒளரங்கசீப்பை அழித்துவிடு. ஆட்சிப் பொறுப்பை நீயே எடுத்துக் கொள்' எனும் கடிதம்.

இந்தக் கடிதம் முராட்டிடம் சென்று சேர்ந்தது. இருந்தாலும் அந்தக் கடிதத்தைத் தொலைத்து விட்டார். எப்படியோ தெரியவில்லை. ஒற்றர்கள் மூலமாக அந்தக் கடிதம் ஒளரங்கசீப்பின் கைகளில் சிக்கிக் கொண்டது. அந்தக் காலத்தில் ஒற்றர்களை வைத்தே அரசர்கள் பேர் போட்டு இருக்கிறார்கள். கடிதத்தைப் படித்துப் பார்த்த ஒளரங்கசீப்பின் மண்டையில் மணி அடித்து விட்டது.

ஷா ஜகான் இனிமேல் யாருக்கும் கடிதங்கள் எழுதக் கூடாது என்று உத்தரவு போட்டார். இந்தக் கட்டத்தில் ஒளரங்கசீப் ஆக்ராவைக் கைப்பற்றி விட்டார். நினைவு படுத்துகிறேன். 



அடுத்து ஒளரங்கசீப் இன்னும் ஒரு தடாலடி கட்டளை போட்டார். அரச குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கும் நகைகள் எதையும் வைத்து இருக்கக் கிடையாது. அவை எல்லாமே அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள். பொது மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பொதுச் சொத்துக்கள். பொது மக்களின் சொத்துகள்.

ஆகவே ஷா ஜகான் தன்னுடைய நகை நட்டுகள் எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒரு கட்டளை. ஔரங்கசிப்பின் கட்டளை. யாரும் எதிர்பார்க்காத பயங்கரமான அடி.

ஷா ஜகான் தான் வைத்து இருந்த நகைகளை எல்லாவற்றையும் பெட்டி பெட்டியாக அரசு கஜானாவிடம் ஒப்படைத்தார். தாரா தன் கண்ணாடி மாளிகையில் வைத்து இருந்த நகைகளும் கஜனாவிற்குப் போய்ச் சேர்ந்தன.

மொகலாயப் பரம்பரைச் சொத்து மயிலாசனம் என்கிற சிம்மாசனம் விலை மதிப்பற்ற நவமணிச் சொத்து. அதுவும் ஒளரங்கசீப்பின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இந்தக் கட்டத்தில் முராட் கொல்லப் படுகிறார். எப்படி?

ஒளரங்கசீப்பின் தம்பி முராட். ஆக்ரா படையெடுப்பில் ஒளரங்கசீப்பிற்குப் பக்க பலமாக இருந்து கைகொடுத்தவர் இதே இந்த முராட். இருந்தாலும் ஒளரங்கசீப் மொகலாயப் பேரரசர் ஆவதற்கு முராட் ஒரு தடைக் கல்லாக இருக்கலாம் என்று ஒளரங்கசீப்பிற்கு கொஞ்ச காலமாகச் சந்தேகம். அந்தச் சந்தேகத்தின் பேரில் முராட்டை ஒளரங்கசீப் கொன்று விட்டார் எனும் ஒரு செய்தியும் உண்டு. ஆனால் முராட் கொல்லப் பட்டதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. 



ஆக்ராவைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் முராட் அளவுக்கு மீறி குடித்தார். தொடர்ந்தால் போல மது மயக்கத்தில் இருந்தார். மது அருந்துவது சமயத்திற்கு எதிரானச் செயல். அதனால் ஒளரங்கசீப் அவருக்கு மரண தண்டனை வழங்கினார் என்றும் ஒரு தகவல் உண்டு.

உண்மையில் முராட் அதிகமாக மது அருந்துபவர் தான். உல்லாசப் பிரியர் தான். அவருடைய குஜராத் நிர்வாகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். உண்மைதான். இருந்தாலும் மொகலாய வரலாறு இதையும் தாண்டி வேறு மாதிரியாகப் பயணித்து இருக்கிறது.

அந்த வரலாறு தான் ஒளரங்கசீப்பின் தம்பி முராட்டின் தலையெழுத்தையே மாற்றியது. கொலைக்குப் பரிசு கொலை. முராட் கொலை செய்யப் படுகிறார். அதற்கு ஔரங்கசிப் உடந்தையாக இருந்தாரா. நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

23 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 8

தமிழ் மலர் - 16.06.2019

ஷா ஜகானின் மூத்த மகன் தாரா. புதிதாக ஒரு மாளிகையை ஆக்ராவில் கட்டி இருந்தார். அதைக் காட்டுவதற்கு தந்தையார் ஷா ஜஹான், அக்கா ஜகனாரா, தம்பி தங்கைகள் அனைவரையும் அழைத்து இருந்தார். வந்தவர்கள் அனைவரும் ஒவ்வோர் அறையாகப் பார்த்து வந்தார்கள். மகிழ்ச்சி அடைந்தார்கள்.



ஓர் அறையில் முழுக்க முழுக்கப் பெரிய நிலைக் கண்ணாடிகள். அந்த அறைக்குள் வரும்படி எல்லோரையும் தாரா அழைத்தார். எல்லோரும் சென்று கண்ணாடி பிம்பங்களைப் பார்த்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒளரங்கசிப் மட்டும் அறையின் வாசலிலேயே உட்கார்ந்து விட்டார். உள்ளே போகவில்லை.

அதைப் பார்த்து ஷா ஜகான் சற்றே கோபம் அடைந்தார். ஒளரங்கசிப்பைப் பார்த்து 'உன் மதிப்பையும் மரியாதையையும் நீயே குறைத்துக் கொள்கிறாய். இப்படி இந்த மாதிரி வெளியே தரையில் உட்கார்ந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள். நீ ஓர் இளவரசன். அதாவது உனக்குத் தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு ஒளரங்கசிப் இப்படிச் சொன்னார். ‘காரணம் இருக்கிறது. இல்லாமல் இல்லை. அதை இப்போது என்னால் சொல்ல முடியாது. நேரம் வரும். அப்போது கண்டிப்பாகச் சொல்வேன். சரி. பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்' என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார்.



உடனே குறுக்கிட்ட தாரா 'பார்த்தீங்களா அப்பா. நீங்க இந்த நாட்டின் மாமன்னர். உங்களையே அவமானப் படுத்தி விட்டுப் போகிறான் ஒளரங்கசிப். அவனுக்கு உங்க மீது கொஞ்சம்கூட மாரியாதை இல்லை' என்று கூறிய தாரா, ஷா ஜகானின் கோபத்தை மேலும் தூண்டி விட்டான்.

ஷா ஜகானுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. ’மரியாதை தெரியாத அவன் இனி என்னுடைய அரசவைக் கூட்டத்திற்கு வரக்கூடாது.  நீங்களே அவனிடம் சொல்லி விடுங்கள்' என்று தடாலடியாக ஒரு கட்டளை போட்டார் ஷா ஜகான்.

விசயத்தைக் கேள்விப் பட்ட ஒளரங்கசிப்பிற்கு மிக்க வருத்தம். தாரா மீது சொல்லவே வேண்டாம். எக்கச்சக்கமான கோபம். அடுத்து வந்த ஏழு மாதங்களுக்கு அரசவைக் கூட்டங்களுக்கு ஒளரங்கசீப் போகவில்லை. போக முடியாத நிலை.

இது இப்படி இருக்க ஒரு நாள் தன் சகோதரி ரோஷனாராவிடம் தான் ஏன் அந்தக் கண்ணாடி அறைக்குள் போகாமல் வெளியே உட்கார்ந்து இருந்தார் எனும் இரகசியத்தைச் சொன்னார்.





'அக்கா... அன்றைக்குத் தாரா நம் எல்லோரையும் அந்த அறைக்குள் அழைத்தான் இல்லையா. அந்தச் சமயத்தில் அவன் மட்டும் அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தான். நீங்கள் யாரும் அதைக் கவனிக்கவில்லை. நான் கவனித்தேன். அந்த அறையில் ஒரே ஒரு வாசல்தான் இருந்தது. அவனுடைய செயல் ஒரு மாதிரியாக ஒரு விநோதமாக இருந்தது. அவனுடைய செயல் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

நம் எல்லோரையும் அந்த அறைக்குள் வரவழைத்து அப்படியே கதவை அடைத்து விடுவது; அந்த அறைக்குள் நம் எல்லோரையும் போட்டு பூட்டி வைத்து அப்படியே சாகடிப்பது. இது அவனுடைய திட்டமாக இருக்கலாம். சொல்ல முடியாது. என் உள்மனம் சொல்லியது. அதுதான் என்னுடைய சந்தேகம்.

அதனால் தான் நான் வெளியே ஒரு காவல்காரனைப் போல உட்கார்ந்து இருந்தேன். அப்பா அதைத் தவறாகப் புரிந்து கொண்டார். என்னை அவமானப் படுத்தியும் விட்டார் என்று ஒளரங்கசிப் மனம் நொந்து போய் சொன்னார்.



ஔரங்கசிப் சொன்னது ரோஷனாரா மூலமாக ஷா ஜகானின் காதுகளுக்கு எட்டியது. அவர் ஒளரங்கசிப்பை நம்பினாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் தாராவின் மீது இருந்த பாசத்தை மட்டும் கொஞ்சம் கூடக் குறைத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒளரங்கசீப்பின் மீது இருந்த கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் குஜராத்தின் கவர்னர் பதவியை ஒளரங்கசீப்பிற்கு கொடுத்தார். இது 1645-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

குஜராத்திலும் ஒளரங்கசிப்பின் திறமையான நிர்வாகம் நன்றாகத் தெரிய வந்தது. அந்த நேரத்தில் பால்க், பாடக்சான் போன்ற பாரசீகப் பகுதிகள் மொகலாயர்களின் பிடியில் இருந்து கைநழுவும் நிலையில் இருந்தன.

அப்போது அந்தப் பகுதிகளின் கவர்னராக ஷா ஜகானின் நான்காவது மகன் முராட் இருந்தார். இவர் ஒளரங்கசிப்பின் தம்பி ஆகும். முராட்டிற்குச் சரியான நிர்வாகத் திறமை இல்லை என்பது தான் அதற்குக் காரணம். அந்தச் சமயத்தில் மொகலாய எதிரிகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் முராட் திணறிக் கொண்டு இருந்தார்.



இதைப் பார்த்த ஷா ஜகான், முராட்டை பதவியில் இருந்து நீக்கினார். ஒளரங்கசிப்பிடம் பாரசீகப் பகுதிகளின் பொறுப்பை ஒப்படைத்தார். ஒளரங்கசிப்பின் மூலமாக அந்தப் பகுதிகள் மீண்டும் மொகலாயர்களின் ஆட்சிக்குள் வந்தன.

சரி. இதற்கு முன்னர் தக்காணத்தின் கவர்னராக ஒளரங்கசிப் பதவி வகித்தார். தெரிந்த விசயம். சொல்லி இருக்கிறேன். ஆனாலும் கட்டளைகள் எல்லாம் ஷா ஜகானிடம் இருந்துதான் வந்தன. ஷா ஜகானை மிஞ்சி எதையும் செய்ய முடியாத நிலை.

தன்னிடம் முழு அதிகாரம் இருந்தால் மட்டுமே வருமானத்தைப் பெருக்கிக் காட்ட முடியும்; முழுமையாக நிர்வாகம் செய்ய முடியும் என்பது ஒளரங்கசிப்பின் எண்ணம் எதிர்ப்பார்ப்பு.
ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பைக் கண்டு கொள்ளாமல் ஷா ஜகான், ஒளரங்கசிப்பை ஒதுக்கி வைத்தே வந்தார். முழு அதிகாரத்தையும் ஒளரங்கசிப்பிடம் கொடுக்கவில்லை. அது தாராவின் தூண்டுதலாக இருக்கலாம்.

ஷா ஜகானுக்கும் ஒளரங்கசிப்பிற்கும் இடையே நிலவிய பனிப் போர் இப்படித்தான் நீண்டு கொண்டே போனது. ஷா ஜகானின் வெறுப்பு ஒளரங்கசிப்பிடம் மட்டும் இல்லை. அவருடைய பிள்ளைகள் மீதும் இருந்தது. ஆனால் தாராவின் பிள்ளைகள் மீது தன்னுடைய பாசத்தைக் கொட்டித் தீர்த்தார்.

மறுபடியும் ஷா ஜகானின் பிள்ளைகளைப் பற்றி சொல்கிறேன். ஷா ஜகானின் மூத்த மகள் ஜஹனாரா பேகம். அடுத்து மூத்த மகன் தாரா ஷீகோ. மூன்றாவது மகன் ஷா ஷூஜா. நான்காவது மகள் ரோஷனாரா பேகம். ஐந்தாவது மகன் ஒளரங்கசிப். ஆறாவது மகன் முராட் பட்ச். கடைசி மகள் கௌகாரா பேகம். சரி. 



இந்தக் கட்டத்தில் கோல்கொண்டா பிரச்சினைக்கு வருகிறோம். கோல்கொண்டா சுல்தான் ஆண்டு தோறும் மொகலாய அரசுக்கு வரி கட்டி வந்தார். கோல்கொண்டா மொகலாய அரசின் கீழ் இயங்கி வந்தது. திடீரென்று கோல்கொண்டா சுல்தான் வரி கட்டுவதை நிறுத்தி விட்டார். 'ஏன் வரி கட்டவில்லை' என்று ஒளரங்கசிப் கோல்கொண்டா சுல்தானுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்திற்குப் பதில் எதுவும் வரவில்லை. 'கட்ட வேண்டிய வரித் தொகையில் பாதியாவது கட்டவும். கட்ட முடியவில்லை என்றால் அதற்குச் சமமாக யானைகளையாவது அனுப்பி வைக்கவும்' என்று ஒளரங்கசிப் மேலும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கும் பதில் வரவில்லை.

கோல்கொண்டாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு காலத்தில் சாளுக்கிய மன்னர்கள் தென் இந்தியாவின் வட பகுதியை ஆண்டு வந்தார்கள். இது ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.

சோழர்கள் தென் இந்தியாவின் தென் பகுதியை ஆட்சி செய்து வந்தார்கள். இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள். இந்தச் சண்டைகள் பெரிதாகிப் போய் கடைசியில் ஒரு பயங்கரமான போராக வெடித்தது. அதுதான் சாளுக்கிய-சோழப் போர். கி.பி. 992-ஆம் ஆண்டில் நடந்தது. சோழர்களுக்குத் தலைவராகச் இராஜா ராஜ சோழன். சாளுக்கியர்களுக்குத் தலைவராகச் சத்தியாசிரயன் எனும் சாளுக்கிய மன்னன். 



இதில் சாளுக்கியர்கள் தோற்றுப் போனார்கள். இந்தச் சமயத்தில் சாளுக்கியர்களின் பிரதிநிதியாக இரண்டாம் அம்மா என்கிற ஒரு சிற்றரசர் இருந்தார். அவர் தனக்கு என்று காக்காத்தியா எனும் ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொண்டார். அதன் தலைநகரம் வாரங்கல்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத் நகரைச் சுற்றி இருந்த நிலப் பகுதிதான் அந்தக் காக்காத்தியா நாடு. மலேசியாவின் பேராக் மாநில அளவிற்குப் பெரியது.

அதன் அரசர்கள்தான் கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்கள். இந்தக் கோட்டைக்குப் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.

கி.பி.1143-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. ஓர் இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஓர் அழகான சிலையைக் கண்டு எடுத்தான். அந்தச் சிலையைக் கொண்டு போய் மன்னரிடம் கொடுத்தார்கள். அதன் அழகில் மயங்கிப் போன மன்னர், சிலை கண்டு எடுக்கப் பட்ட இடத்திற்கு கோலா கொண்டா என்று பெயரைச் சூட்டினார்.

கோலா கொண்டா என்றால் ஆடு மேய்க்கும் ஓர் இடையனின் குன்று என்று பொருள். அந்த இடத்தின் பழைய பெயர் மங்களவரம். இப்படித்தான் கோலா கொண்டா என்பது கோல்கொண்டா எனும் பெயராக மாறி சரித்திரம் படைத்தது.

ஒரு முக்கிய விசயம். கட்டுரை கொஞ்சம் நீளமாகப் போகிறதே என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். ஷா ஜகானை அவருடைய மகன் ஔரங்கசிப் ஏன் கைது செய்தார். ஆக்ரா கோட்டையில் ஏன் அடைத்து வைத்தார் என்பதே நம்முடைய இலக்கு. அதை நோக்கித் தான் நாம் போய்க் கொண்டு இருக்கிறோம். ஆக அதற்கான காரணங்களைச் சரியாகச் சொல்லியாக வேண்டும் இல்லீங்களா.



சரி. மொகலாய அரசின் கீழ் சந்திரகிரி எனும் ஒரு சமஸ்தானம் ஆந்திராவில் இருந்தது. சமஸ்தானம் என்றால் முடியாட்சி. அந்தச் சமஸ்தானத்தை ரங்க ராயலு என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஒளரங்கசிப்புக்கு ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார்.

சந்திரகிரி என்பது பழைய விஜயநகரப் பேரரசின் ஒரு சிறிய பகுதி. கிருஷ்ணா நதிக்கு அருகில் அமைந்து இருந்தது. கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்கள் இருவரும் ரங்க ராயலுவின் அரசைக் கைப்பற்றத் திட்டமிட்டு வந்தார்கள். அவர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றினால் மொகலாயப் பேரரசுக்கு என்றைக்கும் கடமைப்பட்டு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதி கூறினார்.

ரங்க ராயலுவிற்கு உதவி செய்யலாம் என்று ஒளரங்கசிப் நினைத்துக் காய்களை நகர்த்தினார். அந்தச் சமயத்தில் 'ரங்க ராயலுவின் சந்திரகிரியைக் கைப்பற்று’ என்று ஷா ஜகானின் கட்டளை கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்களுக்குப் போகிறது. ஒளரங்கசீப் நினைத்தது வேறு; நடப்பது வேறு. இப்படி ஷா ஜகான் ஏறுக்கு மாறாகச் செய்து வந்த செயல்களினால் பொறுமை இழந்தார் ஒளரங்கசீப்.

'கவர்னர் என்பது சும்மா பெயர் அளவில் மட்டும்தான் பதவி. மற்றபடி முழுமையான அதிகாரம் எதுவும் ஒளரங்கசிப்பின் கையில் இல்லை. எதையும் அவரால் தன்னிச்சையாக முடிவு எடுத்துச் செய்ய முடியவில்லை. அப்படியே செய்தாலும் ஏகப்பட்ட தடைகள். ஷா ஜகான் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு மேலும் பணிந்து போவது என்பது நல்லது அல்ல என்று ஒளரங்கசிப் முடிவு எடுத்தார்.

அப்படி முடிவு எடுத்த ஒளரங்கசிப் முதலில் கோல்கொண்டாவைக் கைப்பற்ற படைகளோடு கிளம்பினார். இது ஷா ஜகானை மீறிச் செய்யும் செயலாகும். ஷா ஜகானைப் பகைத்துக் கொள்ளும் செயல். இப்படித்தான் அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை வந்தது. 



1657-ஆம் ஆண்டு ஒளரங்கசிப் கோல்கொண்டாவைக் கைப்பற்றினார். அதற்குப் பின் பிஜப்பூர் மீதும் போர் தொடுத்தார். அப்போது ஔரங்கசீப்பிற்கு உதவியாக இருந்தவர் யார் தெரியுமா. அவர்தான் மராட்டிய வீரர் சிவாஜி. பிஜப்பூரைக் கைப்பற்றும் நேரம். டில்லியில் இருந்து ஒரு செய்தி வந்தது.

ஷா ஜகானின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதே அந்தச் செய்தி. வேறு வழி இல்லாமல் ஒளரஙகசிப் தன் படைகளுடன் பிஜப்பூரை விட்டு வெளியேறினார்.

அந்தச் சமயத்தில் ஷா ஜகான் இறந்து விட்டார் என்கிற வதந்தி இந்தியா முழுமையும் காட்டுத் தீயைப் போல பரவியது. இனிமேல்தான் ஷா ஜகானின் தலையெழுத்தே மாறப் போகிறது.

ஷா ஜகான் இறந்து விட்டார் என்கிற செய்தி இந்தியாவையே ஓர் உலுக்கு உகுக்கியது. உண்மையில் அவர் இறக்கவில்லை. அது ஒரு வதந்தி. ஷா ஜகானின் மூத்த மகன் தாராவினால் தெறிக்க விட்ட வதந்தி.

தன் தந்தையார் ஷா ஜகானுக்குப் பிறகு மொகலாயப் பேரரசை எப்படியாவது தன் வசம் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தாரா போட்டத் திட்டம். தாரா கிளப்பி விட்ட வதந்தி.



எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஷா ஜகானின் மூன்றாவது மகன் ஷா ஷூஜா (வயது 41), தன்னை வங்காளத்தின் அரசராக அறிவித்துக் கொண்டார்.

வங்காளம் என்பதை வங்காள தேசம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். வங்காளம் என்பது வேறு. வங்காள தேசம் என்பது வேறு.

முன்பு காலத்தில் இந்தியாவில் இருந்த ஒரு நிலப்பகுதி தான் பஞ்சாப் வங்காளம். தக்காணத்திற்கு மேலே வடக்கே இருக்கிறது. நம் தீபகற்ப மலேசியாவில் பாதிக்கும் பெரியது. இப்போது பாகிஸ்தானின் ஒரு பகுதி.

இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கித் தருகிறோம் என்று சொல்லிப் பாக்ஸ்தானுக்குத் தானம் செய்யப் பட்ட புண்ணிய பூமிதான் இந்த வங்காளம். இந்த மாதிரி இந்தியாவின் மண்ணையும் பொன்னையும் எவ்வளவோ தானம் செய்து விட்டார்கள். இனிமேல் செய்யாமல் இருந்தால் சரி.



சரி. நம்ப கதைக்கு வருவோம். ஷா ஜகானின் மூன்றாவது மகன் ஷா ஷூஜா. தன்னுடைய பார்வையில் இருந்த வங்காளத்திற்குத் தன்னை முழு அரசராக அறிவித்து அதன் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். தன் பெயரிலேயே புதிய நாணயங்களை வெளியிட்டார். ஆக்ராவை விரைவில் கைப்பற்றப் போவதாகவும் அறிவித்தார். 

இது தகப்பனார் ஷா ஜகானைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஷா ஜகானின் மூத்த மகன் தாராவின் படைகளும், டில்லியில் இருந்த ஷா ஜகானின் படைகளும் வங்காளம் நோக்கிச் சென்றன. வங்காளத்தில் நடந்த போரில் ஷா ஷூஜா அடக்கி ஒடுக்கப் பட்டார். இனிமேல்தான் ஔரங்கசிப் தன் சுயரூபத்தைக் காட்டப் போகிறார். தொடர்ந்து படியுங்கள்.

(தொடரும்)

5ஜி தொழில்நுட்ப கைபேசி

மலேசியாவில் பெரும்பாலும் இப்போது 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். மலேசியா 5ஜி தொழில்நுட்பத்திற்கு வந்துவிட்டாலும் இன்னும் முறையாக அமலுக்கு வரவில்லை. இன்னும் சில காலம் பிடிக்கலாம். தொடக்கச் சோதனைகள் எல்லாம் முடிந்து விட்டன.


நீங்கள் பயன்படுத்தும் அண்ட்ரோயிட் திறன்பேசிகள் 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. பெரும்பாலானவை. ஏன் என்றால் வாட்ஸப், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை உங்கள் திறன்பேசி ஏற்றுக் கொண்டால் 5ஜி தொழில்நுட்பத்தையும் உங்கள் திறன்பேசி ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. கவலை வேண்டாம்.

சமயங்களில் சில வகை திறன்பேசிகள் 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளா. ரொம்பவும் பழைய மாடலாக இருந்தால் அந்தப் பிரச்சினை வரலாம். தூக்கிப் போட்டுவிட்டுப் புதுசா ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். பழைய மாட்டுக் காடியை ஏன் கஷ்டப்பட்டுத் தள்ளிக் கொண்டு போக வேண்டும்?


நாம் நாட்டில் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் மெக்சிஸ், செல்கோம், டிஜி, யூ மொபைல், டியூன் டால்க், ரெட் டோன் மொபைல் போன்றவை. இவை தான் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருகின்றன. 5ஜி தொழில்நுட்பம் வந்ததும் உங்களுடைய திறன்பேசி ‘ஆட்டோமெட்டிக்’காக அந்த 5ஜி-யை ஏற்றுக் கொள்ளும்.

அப்புறம் என்ன. நாலைந்து விநாடிகளில் ஒரு திரைப்படத்தை உங்கள் திறன்பேசிக்குள் பதிவிறக்கம் செய்து விடலாம். பார்க்கத் தான் உங்களுக்கு நேரம் இருக்காது.


இன்னும் ஒரு விசயம். Mobile Data பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.   Wifi பயன்படுத்தினால் கவலையே இல்லை. அதற்காக வேலைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு பார்க்கச் சொல்லவில்லை. புதிய தொழில்நுட்பம் வந்து கொண்டு இருக்கிறது. அதற்காகச் சொல்ல வருகிறேன். (முகிணன்)

5ஜி தொழில்நுட்பம்

விநாடிக்கு 7ஜி.பி. வேகம்

ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாகக் கொண்ட இணையத்தளத் தொழில்நுட்பமே 5ஜி (5G) என்று அழைக்கப் படுகிறது. இதற்கு முன்பு 4ஜி (4G) எனும் நான்காம் தலைமுறை தொழில்நுட்பம் இருந்தது. அதை விட 5ஜி பல நூறு மடங்கு வேகமாகப் பதிவிறக்கம்; பதிவேற்றம் செய்யும் ஆற்றலைக் கொண்டது. ஜி என்றால் ஜெனரேசன் (Generation).




5ஜி திறன்பேசியின் ஆற்றலை ஒரே வார்த்தையில் சொல்கிறேன். யூடியூப்பில் திரைப் படங்கள் மில்லியன் கணக்கில் உள்ளன. இந்தத் திரைப்படங்களை உங்களுடைய திறன்பேசியின் மூலமாகப் பதிவிறக்கம் செய்ய முடியும். அந்த வகையில் ஒரு திரைப் படத்தை 4 விநாடிகளில் பதிவிறக்கம் செய்து விடலாம். அவ்வளவு வேகம்.

அதாவது 50 காணொலிகளை ஒரே விநாடியில் பதிவிறக்கம் செய்யும் வேகம். நினைத்துப் பார்க்க முடியவில்லை. 5ஜி மலேசியாவிற்கு வந்து விட்டது. விரைவில் பரவலாகப் பயன்படுத்தப் படலாம்.




உலகில் புகழ்பெற்ற திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சங் கடந்த 2019 மார்ச் மாதம் தன் 5ஜி திறன்பேசியான சாம்சங் கேலக்சி எஸ்10ஐ வெளியிட்டது. அதேபோன்று, ஹுவாவேய், ஓப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் 5ஜி திறன்பேசிகளை வெளியிட்டுவிட்டன.

22 மே 2019

நஜீப் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று; 
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று. 

மனித மனத்தின் இயல்புகளைச் சொல்லிக் காட்டும் கவியரசரின் அழகிய பாடல்.


வாழ்வோம் என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் இறைவன் வேறு மாதிரியாக எழுதிச் செல்கின்றான். எல்லோரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற உண்மை தானே.

குரங்கு இருக்கிறதே அது மரத்துக்கு மரம் தாவும் போது முதல் மரத்தின் கிளையை விட்டு விட்டுத்தான் அடுத்த மரத்தின் கிளையைப் பற்றிக் கொள்ளும். மனிதன் அப்படி அல்ல. அடுத்த மரத்தின் கிளையைப் பற்றிக் கொண்ட பின்னர் தான் முதல் மரத்தின் கிளையை விடுகின்றான்.

அடுத்த மரத்தின் கிளையைப் பிடித்த பின்னர் முதல் மரத்தின் கிளையை விட்டுவிட வேண்டும். ஆனால் பலரும் அதைச் செய்வது இல்லை. அங்கேதான் மனிதன் வந்து நிற்கிறான். அந்த வகையில் தான் முன்னாள் பிரதமர் சரிந்து போன சரிதமும் வந்து நிற்கிறது.


நமக்கும் நஜீப் சாருக்கும் எந்தவிதமான வருத்தமும் இல்லை. எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

ஆனால் வியர்வை சிந்தி உழைத்த பொது மக்களின் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை; மானவாரியான படாடோபம். ஆர்ப்பாட்டமான வெளிப்பகட்டு. மனித மனங்களை இறுகச் செய்த வீண் பகட்டு.

அதனால் தான் வருத்தம். எனக்கு மட்டும் அல்ல. மலேசியாவில் பலருக்கும் வருத்தம். அவரிடம் கைநீட்டி இலட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் காசு வாங்கியவர்களுக்கு அவர் மீது அனுதாபத்தின் பாச அலைகள் இருக்கலாம். நன்றி மறக்காத நெஞ்சங்கள்.

தென் அமெரிக்காவில் குவாயானா எனும் நாடு. அங்கே ஓர் ஒதுக்குப் புறமான காட்டுப் பகுதி. மக்களின் கோயில் (Peoples Temple) எனும் வழிபாட்டுத் தளம். ஜிம் ஜான்ஸ் (Jim Jones) என்பவர் தலைவராக இருந்தார்.

தவறான சமய போதனைகள் நடந்தன. அதனால் அந்தத் தளத்தை மூடி விடுமாறு குவாயானா அரசாங்கம் கட்டளை போட்டது. அந்தக் கட்டளையை ஏற்றுக் கொள்ள முடியாத தலைவர் ஜிம் ஜான்ஸ், கோயில் வளாகத்தில் இருந்த ஆயிரக் கணக்கான பக்தர்களையும் ஒன்று கூட்டினார்.

அவர்களுக்கு நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். அந்தப் பானத்திற்கு ’கூல் ஏயிட்’ (Kool-Aid) என்று பெயர். குளிர்க் கஞ்சி என்று நாம் அழைப்போமே.

தலைவர் சாகச் சொன்னாலும் தட்டாமல் கேட்கும் ஜிம் ஜான்ஸ் பக்தர்கள் நஞ்சுக் கஞ்சியைக் குடித்தார்கள். நூற்றுக் கணக்கில் இறந்து போனார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 909. அவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் பால் மனம் மாறாத பச்சைக் குழந்தைகள்.

1978-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி நடந்தது. உலகத்தையே உலுக்கிப் போட்ட நிகழ்ச்சி.


ஒரு குழுவின் தலைவரின் பேச்சை மிஞ்சிப் போக முடியாமல்; அவரின் வாக்கைத் தெய்வ வாக்காக நினைத்து உயிரை விடும் ஒரு முட்டாள் தனத்திற்குப் பெயர் தான் ஜான்ஸ்டவுன் சிண்ட்ரோம்.

தமிழில் ஜான்ஸ்டவுன் இணைப்போக்கு அல்லது ஜான்ஸ்டவுன் ஒத்திசைவு என்று அழைக்கலாம். அது ஒரு பைத்தியக்காரத் தனமான பின்பற்றல்.

ஆக அதே மாதிரியான ஒத்திசைவு தான் மலேசியாவிலும் காலம் காலமாக நடந்து வந்து இருக்கிறது. பாரிசான் தலைவர் என்ன சொல்கிறாரோ அதுவே தெய்வ வாக்கு. தலைவரின் வார்த்தைகளை மீறிப் போகாத பொது மக்கள்.

அப்படித்தான் அண்மையில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் சொல்லி இருக்கிறார். அவர் கொடுத்த பேட்டியின் தகவல்களைச் சான்றாகக் கொண்டுதான் எழுதுகிறேன்.

அப்படிப் பார்த்தால் நஜீப்பின் உண்மையான கலவைப் புனைவு தான் என்ன? கலவைப் புனைவு என்பதை ஆங்கிலத்தில் கொன்கோசன் (concoction) என்று சொல்வார்கள்.

அவருடைய கட்சியான அம்னோவுக்கு உள்ளேயே ஓர் உலகத்தை உருவாக்கி; அதை ஓர் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றி; அதை வழிநடத்திச் செல்வதே அம்னோ தலைவர்களின் தாரக மந்திரம். அதையே தான் நஜீப் அவர்களும் செய்தார்.

தன் இனத்தைச் சார்ந்தவர்களுக்குத் தனி முதன்மை கலந்த மேலாதிக்கம் (Malay supremacy) வழங்குவது; அந்த ஆதிக்கத்தைச் சுற்றிலும் தாழ்த்த முடியாத அரண்களை எழுப்பிப் பாதுகாப்பது. இந்த இரண்டும் தான் மிக மிக முக்கியமானவை.

மற்றவர்கள் என்று சொல்லப்படும் சீனர்களும் இந்தியர்களும் வந்தேறிகள் எனும் பெண்டாத்தான்கள். இந்த மற்றவர்களில் கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த சபா சரவாக் பூர்வீகக் குடிமக்களும் அடங்குவார்கள்.

கெதுவானான் எனும் மேலாதிக்கமே வலியுறுத்தப்பட்டு வந்தது. தீபகற்ப மலேசியாவில் மலாய்க்காரர்கள் நீண்ட காலமாக குடி அமர்ந்து வந்துள்ளனர்.

பெரும்பாலோர் இந்தோனேசியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதை யாராலும் மறுக்க முடியாது. மலேசியாவில் பல மாநிலங்களில் சுல்தானகங்களை உருவாக்கியவர்கள். அதனால் அவர்களுக்குத் தனிச் சலுகைகள் வழங்கப் பட்டன.


தொடர்ந்து வழங்கப் படுகின்றன. அது மலாய்க்காரர்களின் தனி உரிமை; சிறப்புச் சலுகை. சீனர்களும் இந்தியர்களும் தலையிட முடியாது. சம்பந்தப்படவும் இல்லை.

ஆனால் ஆட்சி செய்த பாரிசான் அரசாங்கத்தில் மெரிட்டோகிரசி எனும் தகுதி முறையமைப்பு காலாவதியாகிப் போனது தான் வேதனையான விசயம்.

பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூரைப் பாருங்கள். அங்கே சீனர்கள் தான் பெரும்பான்மையோர். ஆனால் ஒரு மலாய்ப் பெண்மணியை அதிபராக்கி அழகு பார்க்கிறார்களே. என்ன சொல்லப் போகிறீர்கள்.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொல்லி இருக்கிறார். அதாவது இந்த நாட்டில் மலாய்க்காரர் தான் பிரதமராக அல்லது துணைப் பிரதமராக முடியும்; முக்கிய அமைச்சின் அமைச்சராக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இப்போது துன் மகாதீர் அவர்களின் தலைமைத்துவத்தில் லிம் குவான் எங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது ஓர் துணிச்சலான அணுகுமுறை தானே.

பாரிசான் அரசாங்கம் தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோஸ்மா; தேசிய பாதுகாப்பு மன்றம்; பொய்யான செய்திகள் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தது. பலரைப் பிடித்து சிறையில் போட்டது. தெரிந்த விசயம்.

அம்னோ தலைவர்கள் பலர் நஜீப்பை புகழோ புகழோ என்று புகழ்ந்து விட்டார்கள். இறைவனால் நஜீப் அனுப்பப்பட்டு உள்ளார் என்று அம்னோ தலைவர்கள் பலர் புகழாரம் செய்து வந்தார்கள்.

அந்த வகையில் நஜீப்பிற்குத் தவறான செய்திகள் போய்க் கொண்டு இருந்தன. அதன் வழி அதிகாரம் தன் கையில் இருப்பதாக நஜீப் அவர்களும் கடைசி நேரம் வரை நம்பி வந்தார். அவர்களை நம்பி நஜீப் தவறாகக் கணக்குப் போட்டு விட்டார்.

உண்மையைச் சொல்லி; உண்மையான நிலவரத்தைச் சொல்லி நஜீப்பைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அம்னோ தலைவர்கள் தவறி விட்டார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது எனும் தயக்கத்தில் அவரைப் புகழ் பாடியே அவரைக் கெடுத்து விட்டார்கள்.

2015-ஆம் ஆண்டு அம்னோ மாநாட்டில் பாரிசான் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யும் என்று நஜீப் குரல் உயர்த்திச் சொன்னார்.


ஆனால் என்ன நடந்தது பாருங்கள். சொல்லி இரண்டு ஆண்டுகள் முடியவில்லை. அதற்குள் எதிர்பாரத சுனாமி வந்து அனைத்து எதிர்பார்ப்புகளையும் அடித்துச் சென்று விட்டது.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று;
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.