28 மே 2019

நீல உத்தமன்

நீல உத்தமனின் இயல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா

(Sri Maharaja Parameswara Tribuwana). 

 

கி.பி.1324-ஆம் ஆண்டில் இருந்து 1372-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய பேரரசின் ஆட்சியின் கீழ் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார். பலேம்பாங் தனி ஓர் அரசாக இயங்கி வந்தது. அதை ஸ்ரீ விஜய அரசு அடித்துப் பிடித்துக் கொண்டது. அதன் பின்னர் பலேம்பாங் அரசர்கள் ஸ்ரீ விஜய அரசிற்கு அடி பணிந்தனர்.

Nila Utama - King of Singapore
Reign - 1299-1347
Successor - Sri Wikrama Wira
Born - 13 Century, Sumatra, Indonesia
Die - Kingdom of Singapore
Burial - 1347 Fort Canning Hill
Religio - Hinduism

Source: Abshire, Jean (2011). The History of Singapore. The Greenwood Histories of the Modern Nations. ABC-CLIO. p. 19. ISBN 978-0-313-37743-3.

நீல உத்தமனுக்கு முன்னர் அவருடைய தந்தையார் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார். அவருடைய பெயர் ஸ்ரீ பிரபு தர்மா சேனா திரிபுவனா (Sri Maharaja Sang Sapurba Paduka Sri Trimurti Tri Buana). இவரின் மற்றொரு பெயர் ஸ்ரீ திருமூர்த்தி திரிபுவனா (Sri Trimurti Tribuwana).

நீல உத்தமனுக்கு மூன்று தம்பிமார்கள். அவர்களின் பெயர்கள்:

1. பிச்சித்திரம் (Bichitram),

2. பலதூதானி (Paladutani),

3. நீலதனம் (Nilatanam).


நீல உத்தமனின் தாயாரின் பெயர் ஸ்ரீ திருமூர்த்தி சுந்தரி (Sri Trimurti Sandari). பெயர்களைப் பாருங்கள். அனைத்துமே சமஸ்கிருதம் கலந்த தமிழ்ச் சொற்கள்.

(F1. 1324 - 1372 Sri Maharaja Sang Utama Parameswara)

நீல உத்தமனுக்கு மேலும் ஒரு பெயர் இருந்தது. ஸ்ரீ நீல பல்லவன் (Sri Nila Pahlawan). நீல உத்தமனின் பரம்பரையினர் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களின் அழைப்புப் பெயரே சான்றாக அமைகின்றன. 




பல்லவன் எனும் சொல்லில் இருந்து தான் பாலவான் (Pahlawan) எனும் மலாய்ச் சொல் உருவானது. பாலவான் என்றால் மாவீரன் என்று பொருள். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

(2. Buyers, Christopher);
(3.  Taylor, Nora A.)

மஜபாகித் அரசினால் பலேம்பாங் அரசு தோற்கடிக்கப் பின்னர் நீல உத்தமனின் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தான் தீவு (Bintan) சுமத்திராவிற்கு வடக்கே சிங்கப்பூருக்கு அருகாமையில் இருக்கிறது.

ஸ்ரீ விஜய அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த மேலும் ஓர் ஆயிரம் பேர் பிந்தான் தீவில் தஞ்சம் அடைந்தனர். இந்தப் பிந்தான் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சி உருவாக்கப் பட்டது. அதற்கு நீல உத்தமன் தலைவர் ஆனார்.

(4.Tsang, Susan; Perera, Audrey)

இதற்கு முன்னர் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 1280-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரைத் தெமாகி (Temagi) எனும் ஒரு சிற்றரசர் ஆட்சி செய்து வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek).

தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக நியமனம் செய்து வைத்து பாதுகாத்து வந்தது. தெமாகிக்கு சயாம் அரசின் பாதுகாப்பு இருந்து வந்தது. இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலுக்குச் சிங்கப்பூரில் இருந்த கடல் கொள்ளையர்கள் நீல உத்தமனுக்கு உதவியாக இருந்தார்கள்.

அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கு உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் அதைப் பற்றி கவலைப் படவில்லை.

சிங்கப்பூரைக் கைப்பற்றியதும் அதற்கு அரசர் ஆனார். தெமாசிக் எனும் பழைய பெயரை சிங்கப்பூர் எனும் புதிய பெயருக்கு மாற்றினார்.




இப்போது இருக்கும் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் தான் முந்தைய சிங்கப்பூர் நகரம் உருவாக்கப் பட்டது. ஆற்று நெடுகிலும் சின்னச் சின்னக் குன்றுகள் இருந்தன. அவற்றில் ஒன்று கெனிங் குன்று.

அந்தக் குன்றை நீல உத்தமன் மேரு மலை (Mount Meru) என்று அழைத்தார். அங்கு இருந்து குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நன்னீர் கிடைத்தன. இப்போது அந்த இடம் கெனிங் கோட்டைக் குன்று (Fort Canning Hill) என அழைக்கப் படுகிறது.

(5. Dr. John Leyden 1821. Malay Annals)

அப்போது சிங்கப்பூர் ஒரு நகரம் அல்ல. ஒரு சின்ன ஊர் தான். சொல்லப் போனால் அது ஒரு சின்ன மீன்பிடி கிராமம். கடற் கொள்ளையர்களின் மறைவிடமாக விளங்கியது. சீனா நாட்டுக் கப்பல்கள் வந்து போய்க் கொண்டு இருந்தன.

மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவரும் நீல உத்தமன் தான். 




சிங்கப்பூரின் ஆட்சியாளர் ஆனதும் நீல உத்தமன் தன்னுடைய பெயரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) என்று மாற்றிக் கொண்டார்.

அப்போது நீல உத்தமனின் வளர்ப்புத் தாயார் ஸ்ரீ பரமேஸ்வரி ராணியார் (Queen Paramisuri) பிந்தான் தீவில் இருந்தார். நீல உத்தமனுக்குத் தேவையான வேலையாட்கள்; அடிமைகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார். தவிர படகுகள்; குதிரைகள்; யானைகள் போன்றவற்றையும் அனுப்பி வைத்தார்.

அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

நீல உத்தமனுக்கு பளிங்குச் சிலை

 நீல உத்தமன்


சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவரும் நீல உத்தமன். அதற்கு நன்றிக் கடனாக, சிங்கப்பூர் அரசாங்கம் நீல உத்தமனுக்கு ஒரு பளிங்குச் சிலையை உருவாக்கி சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு முன்பாக வைத்து பெருமை செய்கிறார்கள். உலகமே வியந்து பார்க்கிறது.



நீல உத்தமனைத் தவிர சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த மேலும் நால்வர்: முன்ஷி அப்துல்லா, நாராயணன் பிள்ளை, ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ், டான் சோக் செங் ஆகியோரின் உருவச் சிலைகளும் கம்பீரமாக நிற்கின்றன.

https://www.bicentennial.sg/tactical/the-arrivals/

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 1

தற்காலத் தமிழர் வரலாற்றில் ஒரு வீரமான உயிர்மை வீர வசனம் பேசுகின்றது. அந்த வீர வரலாற்றில் வல்லமை பார்த்த தமிழர்களும் வருகிறார்கள். தமிழச்சிகளும் வருகிறார்கள். தமிழ் இனத்தின் விடுதலை வீரத்தை வையகமே வியந்து பார்க்கச் செய்தார்கள். அவர்கள் தாம் தமிழீழத் தமிழர்கள். ஈழத்தில் அன்றும் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். 



அதே வரலாற்றில் புலம் பெயர்ந்து தடம் பதித்து விண்மீன்களாய் அவதானிப்புச் செய்கின்றார்கள். புதிதாய் முளைத்த ஆலம் விருச்சங்களாய் விழுதுகள் விட்டு வீரம் பேசுகின்றார்கள். கைகூப்புகிறோம்.

தமிழீழத் தமிழர்கள் தமிழ் மொழியின் மீது உறுதியான பக்தி கொண்டவர்கள். தமிழ் இனத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள். தமிழீழத் தமிழர்களின் அந்த வீர வரலாற்றை உலகத் தமிழர்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். 

நூல்களிலும் ஏடுகளிலும் தான் உலகத் தமிழர்களின் வீர வரலாற்றை வாசித்துப் பார்த்து இருக்க முடியும். காவியம் படைத்த அந்தக் கதாமாந்தர்களைக் கற்பனை செய்து பார்க்க இருக்க முடியும். 




ஆனால் தமிழீழத் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டுமே. எண்ணிலடங்கா வேதனைகள். எண்ணிலடங்கா சோதனைகள். அந்த வேதனை விளிம்புகளில் வீணை வாசிப்பவை மனிதக் குருதிப் புலன்கள். அந்த மாதிரியான வேதனை வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தமிழீழத் தமிழர்கள்.

இந்தக் காலத்து உலகில் தமிழன் என்கிற ஓர் இனத்தை உலகம் அறியச் செய்தது அந்தத் தமிழீழ மண் தான். அந்த மண்ணிலே பிரபாகரன் என்கிற ஒரு தமிழர் பிறந்தார். வாழ்ந்தார். வரலாறு பேசினார். தமிழர்களின் வீரத்தை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தார். அந்தத் தமிழரை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். அவரைப்பற்றித் தான் முதலில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையே ஏறக்குறைய 26 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர். 1983-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய அந்தப் போர் 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி வரை நீடித்தது. அங்கே ஓர் இனவழிப்பு பல்லவி பாடியது. அதைப் பார்த்து மனித வரலாறே கண்ணீர் விட்டு அழுதது.

அந்த உள்நாட்டுப் போரில் 80,000 - 100,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிர் இழந்தார்கள். ஒட்டு மொத்தத்தில் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள். நீதிக்குப் புறம்பான செயல்பாடுகள். சத்தியத்திற்கு எதிரான அநியாயங்கள்.


போரின் இறுதிக் கட்டம். அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 32 நாடுகள் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் சேர்த்தன. ஆக அந்த 32 நாடுகளின் எதிர்ப்பைத் தாக்குப் பிடித்துப் பேர் போட்ட ஒரு விடுதலை இயக்கம் இப்போது மௌனம் சாதிக்கின்றது. மறைந்தும் மறையாமல் மௌன ராகம் பாடிக் கொண்டு இருக்கின்றது.

போர் முடிந்து பத்தாண்டுகளாகி விட்டன. இலங்கைத் தமிழர்களுக்கு இன்னமும் சமநீதி கிடைக்கவில்லை. நியாயம் கிடைக்கவில்லை. அனைத்துலகக் குற்றவியல் விசாரணைகள் நடத்த வேண்டும் என்று உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒருமித்தக் குரல்கள். இன்னமும் சன்னமாய் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்வது. உலகப் போலீஸ்காரர் ஐ.நா. அதற்கு அமெரிக்காவிற்கு ஜால்ரா போடவே நேரம் போதவில்லையாம்.

தமிழ் ஈழப் போர்கள் 26 ஆண்டுகள் நீடித்தன. அத்தனை ஆண்டுகளாக நீடித்த போராட்டம் எதையும் நிறைவாகச் சாதிக்க முடியாமல் தோல்வியில் போய் முடிந்ததை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. 




வரலாற்றில் சங்கமித்துப் போன அந்தத் தமிழ் ஈழப் போர்களில் பால் மனம் மாறா பச்சைக் குழந்தைகள் வெட்டி வீசப் பட்டார்கள். பருவம் மாறா பெண்கள் துகில் உரியப் பட்டார்கள். கணவர்கள் கண் முன்னாலேயே மனைவிமார்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள். நலிந்து நின்ற முதியவர்கள் நடுத்தெருவில் நாசம் செய்யப் பட்டார்கள்.

அதே அந்தப் போர் வாசலில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் உருவம் தெரியாமல் அழிக்கப் பட்டார்கள். வேடிக்கை பார்த்தது ஒரு தாய் நாடு. விலைபேசியது ஒரு தமிழர் நாடு. வெட்கித் தலைகுனிந்தது உலகத் தமிழர்க் கூட்டம். வெட்கம் வெட்கம் என்று வையகமே இப்போது வஞ்சகம் இல்லாமல் வாரி உமிழ்கின்றது.

அத்தனை ஆண்டுகளாக நீடித்த போராட்டம் எதையும் நிறைவாகச் சாதிக்க முடியாமல் தோல்வியில் முடிந்ததை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது.

ஈழ மக்களின் இணையற்றத் தலைவராகப் பிராபகரன் அன்றும் வாழ்ந்தார். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகத் தமிழர்களின் ஊனிலும் உயிரிலும் உரிமை உணர்வுகளைக் கொப்பளிக்கச் செய்து மௌனம் சாதிக்கின்றார். அந்த மாமனிதரின் வரலாற்றைப் பார்ப்போம்.

அதற்கு முன் பல இலட்சம் தமிழர்களின் வாழ்வியலுக்குத் தடைக்கல்லாக அமைந்த ராஜபக்சேவை இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்பவில்லை. காலம் அந்த மனிதரை அப்போதும் இப்போதும் எப்போதும் தண்டிக்கும். 




அன்னாரின் பாவச் செயல்கள் அனைத்தும் நம் நெஞ்சங்களைக் கிழித்துப் பார்க்கும் வேதனை விரிசல்கள். வெந்து போன புண்ணில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளை மறுபடியும் பாய்ச்சாமல் இருப்பதே நம் மனதிற்கு ஆறுதல்.

ஒரு வீரத் தலைமுறையின் வரலாற்றைப் படியுங்கள். படித்து விட்டு மனசுக்குள் மௌனமாக அஞ்சலி செய்யுங்கள். அதுவே மறைந்து போன ஆயிரம் ஆயிரம் வீர ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு. அதுவே ஒரு வீர வணக்கம்.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் இறக்கவில்லை. எங்கோ மறைந்து வாழ்கிறார். சரியான நேரத்திற்காகக் காத்து நிற்கிறார் என்று பலர் சொல்கிறார்கள். சொல்லியும் வருகின்றார்கள். அப்படியே அமையட்டும். அதுவாகவே இருக்கட்டும்.

2009-ஆம் ஆண்டு மே மாதம் பதினேழாம் தேதி. முன்னிரவு நேரம். போர்ச் சூழல் மிக உச்சத்தில் தீவிரம் காணும் நேரம். போர் முனையில் சார்லஸ் ஆண்டனி என்பவர் நேரடியாகக் களம் இறங்குகிறார். அருகில் இருந்த ஒரு முனையில் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம். ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்காக அவர்கள் கூடி நிற்கிறார்கள். 




சார்லஸ் ஆண்டனி என்பவர் வேறு யாரும் இல்லை. பிரபாகரனின் மூத்த மகன். அவரைப் பாதுகாப்பாகப் போர் முனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று மற்றத் தலைவர்கள் விரும்புகிறார்கள். சார்லஸ் ஆண்டனியைப் போர் முனைக்கு அனுப்பலாமா வேண்டாமா என்றும் தலைவர்கள் விவாதம் செய்கின்றனர்.

ஒரு நீண்ட நெடிய மௌனத்துக்குப் பிறகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்படிச் சொல்கிறார். ’விடுதலைக்காகப் போராடும் போது என் பிள்ளைகளுக்கு மட்டும் தனியாகச் சிறப்பு சலுகைகள் எதையும் கொடுக்க விரும்பவில்லை. அவனைக் கடைசியாகப் பார்ப்பதாக இருந்தாலும் கூட நான் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அவன் போர்க் களத்தில் இறந்து போவதை யாரும் தடுக்க வேண்டாம்’ என்கிறார்.

அதுதான் பிரபாகரனின் தன்னலமற்ற மனப்பான்மை. தியாகம், எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய யுகத்தின் அடிப்படைப் பண்புகள். தன் வாழ்நாளின் கடைசி விநாடி வரையில் பிரபாகரன் அந்தக் கொள்கைப் பண்புகளில் இருந்து இம்மியும் நழுவிச் செல்லவில்லை.

தன்னுடைய ஒட்டு மொத்தக் குடும்பத்தையே தமிழ் இனத்திற்காகத் தாரை வார்த்துக் கொடுத்தவர். அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இலங்கையின் வடக்கில் வல்வெட்டிதுறை துறைமுகப் பட்டினம்.  திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழ்ந்த பூமி. அங்கேதான் 1954 நவம்பர் 26-ஆம் தேதி வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார். குடும்பத்தில் கடைசி மகன்.




தகப்பனாரின் பெயர் திருவேங்கடம் வேலுப் பிள்ளை. இலங்கை அரசாங்கத்தின் மாவட்ட நில அதிகாரியாகப் பணி புரிந்தவர். தாயாரின் பெயர் பார்வதியம்மாள். பிரபாகரனுக்கு ஓர் அண்ணன். இரு அக்காள்மார்கள்.  

அரிகரன். இதுதான் பிரபாகரனின் அசல் பெயர். அவருடைய தந்தையார் பிரபாகரனுக்கு முதலில் வைத்த பெயர். வீட்டில் கடைக்குட்டி. அதனால் துரை என்று எல்லாரும் அழைத்தார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் வைக்கப் பட்டது.

ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தார். தந்தையுடன் வெளியூர்களுக்குச் செல்லும் போது எல்லாம் சிங்களக் காவல் துறையினர் அப்பாவி ஈழத் தமிழர்களை அடித்துத் துன்புறுத்துவதைப் பார்த்துப் பார்த்து மனம் கலங்கினார் பிரபாகரன். சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அந்தச் சித்ரவதைகள் அதிர்ச்சிகளையும் அலைகழிப்புகளையும் ஏற்படுத்தின.

1958-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களர்கள் பெரும் அளவில் தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நான்கு வயதுச் சிறுவனான பிரபாகரனின் மனதில் ஆழமான வெறுப்பு வடுக்களை அழுத்தமாகவே பதித்துச் சென்றன.

பாணந்துறையில் இந்துக் குருமார் ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம். கொதிக்கும் தார் அண்டாக்களில் தமிழ்ச் சிறுவர்களைப்  போட்டுக் கொன்ற கோரச் சம்பவங்கள். இந்த இரு நிகழ்ச்சிகளும் பிரபாகரனைப் பெரிதும் பாதித்து விட்டன. 




அப்பாவி ஈழத் தமிழர்கள் கொடூரமானத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்பதை அறிந்த போது பிரபாகரனுக்கு அவர்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் பரிதாபமும் ஏற்பட்டன. சிங்களர்களின் இனவெறியில் இருந்து தமிழ் மக்களை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் ஆயுத வலிமையைப் பயன்படுத்த வேண்டும் என்னும் ஓர் உத்வேகம் அவருக்குள் அப்போதுதான் உருவானது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். அப்போது அந்த இயக்கத்திற்குப் பெயர் எதையும் வைக்கவில்லை.

அந்த அணியில் பிரபாகரன் மட்டும் மிக மிக இளையவர். அதனால் அவரை எல்லோரும் ‘தம்பி’ என்றே அழைத்தார்கள். பிரபாகரன் எனும் ஒரு சாமான்ய மனிதர் அப்படித்தான் எல்லோருக்கும் தம்பியானார். அவர்களுடன் சேர்ந்து கையெறிக் குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்.

ஒருமுறை எதிர்பாராத விதமாக ஒரு குண்டு வெடித்தது. அவரது காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறிப் போனது. அதனால் ’கரிகாலன்’ என்னும் புனைப்பெயரும் அவருக்கு ஒட்டிக் கொண்டது.



பிரபாகரன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதைக் குடும்பத்தார் அறிந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி வீடு தேடி வந்தது. போலீஸ்காரர்கள் ஒருமுறை அதிகாலை மூன்று மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடன் போலீஸ்காரர்கள் தான் வந்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் ரகசியமாகத் தப்பி விட்டார்.

மறுநாள் பிரபாகரனைத் தேடிச் சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவருடைய தந்தையார். அப்போது அவரிடம் பிரபாகரன் கூறியது, ’என்னால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் வேண்டாம். என் போக்கில் விட்டு விடுங்கள். நான் போய் விடுகிறேன்’ என்று கூறி வீட்டை விட்டு வெளியேறியவர் தான், அதன் பிறகு வீட்டுப் பக்கமே திரும்பவே இல்லை. குடும்பத்தார் தான் அவரைப் போய் பார்த்து வந்தார்கள். 




பதினாறு வயதாக இருக்கும் போதே சிங்களர்கள் ஏறிச் சென்ற பேருந்தை எரித்தவர் பிரபாகரன். அப்படித்தான் தன் போராட்டத்தைத் தொடங்கினார். அதன் விளைவாக சிங்களப் போலீசார் பல மாணவர்களைக் கைது செய்தனர்.  கொழும்புச் சிறையில் போட்டு அடைத்து வைத்துச் சித்திரவதைகள் செய்தனர்.

சிங்களர்களிடம் இருந்து தப்பித்த பிரபாகரன் தமிழகம் வந்து சேர்ந்தார். காந்தியம் சரிபட்டு வராது. ஆயுதம் ஏந்தினால் தான் தமிழீழ இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்தார்.

பின்னர் 1972-ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிய அவர் ’புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடக்கினார்.

1974-ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் ஒரு தமிழ் மாநாடு. அந்த மாநாட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ஒன்பது பேர் பலியானார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பழி தீர்க்கும் வகையில் மற்றும் ஒரு நிகழ்ச்சி அரங்கேற்றம் கண்டது.

(தொடரும்)

சான்றுகள்

1. சி. புஸ்பராஜா. 2003. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
2. Balasingham, Adele: The Will to Freedom – An Inside View of Tamil Resistance. Fairmax Publishing Ltd
3. Rajasinghan, K.T.: Sri Lanka: The Untold Story. 2001–2002.

27 மே 2019

ஜெயதாஸ் சற்குணவேலு

போராளியும் போராட்டவாதியுமான தோழர் ஜெயதாஸ் சற்குணவேலு (53) மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். மலேசிய இந்தியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடியவர். 



பல முறை கைது செய்யப் பட்டவர். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டவர். மலேசிய இந்தியர்கள் இவரை என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.

அவரின் மறைவு அவர் குடும்பத்தினருக்கு மட்டும் இழப்பு இல்லை. மலேசிய இந்திய சமுதாயத்திற்குப் பெரும் இழப்பு. கெஅடிலான் கட்சிக்கு மாபெரும் இழப்பு. கெஅடிலான் கட்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்.

தன் உடல் நிலையைப் பற்றி சற்றும் அக்கறை கொள்ளாமல் அனைத்துப் போரட்டத்திலும் தன்னை இணைத்து அர்ப்பணித்துக் கொண்டவர். அவரின் போராட்டக் குணத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.




பி.கே.ஆர். கட்சித் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராகிமுடன், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆகியோரும் ஜெயதாசின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்.

1998-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கிய சீர்திருத்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு மிகத் தீவிரமாகப் போராடியவர் ஜெயதாஸ்.

53 வயதான ஜெயதாஸ் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.




பி.கே.ஆர். கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டு இருந்த ஜெயதாஸ் அந்தக் கட்சியில் பல பதவிகளை வகித்து இருக்கிறார். பி.கே.ஆ.ர் கட்சியின் சுபாங் கிளைத் தலைவராகவும், மனித உரிமை மற்றும் சட்ட விவகாரப் பிரிவின் துணைத் தலைவராகவும் இருந்து உள்ளார்.

2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலாக்கா மெர்லிமாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.




ஹிண்ட்ராப் இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு காட்டிய ஜெயதாஸ் அந்த இயக்கத்தின் தகவல் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.  நீண்ட காலமாக மலேசியர்களின் பிரச்சனைகளுக்காகவும், இந்தியர் நலன்களுக்காகவும் போராடியவர்.

Jayathas Sirkunavelu (53). A real reformist that stood bold for many injustices from death in custody to many oppression of justice. Despite his health condition, he never put that as an excuse to stop him to defend for our rights.



He fought for many cases and never expect any return from anyone. For him Lawan Tetap Lawan. Let's pray for Brother Jayathas Sirkunavelu soul to be blessed and placed among good one.

ராகுல் சாங்கிருத்தியாயன்

வால்கா முதல் கங்கை வரை

ராகுல் சாங்கிருத்தியாயன் (ஏப்ரல் 9, 1893 - ஏப்ரல் 14, 1963) தன் வாழ்நாளில் 45 ஆண்டுகள் இந்தியா, நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், சோவியத் ரஷ்யா நாட்டுப் பயணங்களில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர். 



புத்தத் துறவியாகி, அதன் பின்னர் மார்க்சியவாதி ஆனவர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர்.

இருபது வயதில் எழுத ஆரம்பித்த சாங்கிருத்தியாயன் பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் பிரபல: வால்கா முதல் கங்கை வரை எனும் வரலாற்றுப் புனைவு நூலாகும். 



வால்கா முதல் கங்கை வரை வரலாற்றுப் புனைவு நூலாகும். கி.மு. 6000-இல் தொடங்கும் இந்த நூல் கி.பி. 1942-இல் முடிகிறது. இந்த நூல் ஞான முத்தையா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு, மலையாள மொழிபெயர்ப்புகள்:

1. பொதுவுடமைதான் என்ன?
2. வால்காவில் இருந்து கங்கை வரை
3. சிந்து முதல் கங்கை வரை



சாங்கிருத்தியாயன் 1893-ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தவர்.

இவரின் இளம் வயதிலேயே இவரின் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள். அதனால் இவர் தன் பாட்டியால் வளர்க்கப் பட்டார்.

சாங்கிருத்தியாயன் ஆரம்பப்பள்ளி வரை தான் படித்தவர். ஆனால் தன் வாழ் நாளில் பல்வேறு மொழிகளைத் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். 



இவர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்றாகும். அத்துடன் இந்தி, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற இந்திய மொழிகளும்; சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார். புகைப்படக் கலையையும் படித்து இருந்தார்.

1958-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக சாகித்திய அகடெமி விருது அவருக்கு வழங்கப் பட்டது. 1963-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப் பட்டது. சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய த்ததுவவியல் பேராசிரியராய் நியமித்தது. 



*இராகுல் சாங்கிருத்தியாயன் பெயரால் வழங்கப்படும் விருதுகள்*

1. மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது - இந்திப் பயண இலக்கியப் பங்களிப்பு. 



2. மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது - சுற்றுலா ஆராய்ச்சி தொடர்பான இந்திப் புத்தகங்கள்.